Advertisement

தீண்டல் – 3(2)

“கண்ணை என்ன பின்னாடியா வச்சிருக்க? ஆளு வளர்ந்த அளவுக்கு அறிவிருக்கா? உன்னை யாரு இங்க வர சொன்னது?…” என்று புகழ் டைனிங் ஹாலின் கடைசி பகுதியில் வைத்து கத்திக்கொண்டிருந்தான்.

அது மண்டபத்தின் சமையலறையின் நுழைவு இடமாகவும் கை கழுவும் இடமாகவும் சாப்பாட்டு அறையின் கடைசியிலும் இருந்தது. பெரும்பாலானோர் உண்டு முடித்துவிட்டபடியால் அந்தளவுக்கு கூட்டம் இல்லாமல் இருந்தது.

இவர்கள் இருவரையும் பார்ப்பவர்களுக்கு என்னவோ சாதாரணமாய் பேசுவதை போலத்தான் தோன்றும்.

“அப்பாவுக்கு ஹாட் வாட்டர் வாங்கத்தான் வந்தேன். வாட்ச் கழன்றுச்சு. அதை மாட்டிட்டு வந்ததால இவங்களை கவனிக்கலை. நீ ஏன் கேட்கற?…” கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றாலும் முகத்தை விரைப்புடன் வைத்துக்கொண்டே அவள் சொல்ல,

“ஸார் அதான் அவங்க கவனிக்கலைன்னு சொல்றாங்கல்ல. நீங்க ஏன் ஸார் தேவையில்லாம பிரச்சனை பன்றீங்க?…”

சந்நிதி புகழிடம் விருப்பமில்லாமல் பேசுவதை போல பேச மூன்றாமவனுக்கு அது வசதியாய் போனது.

“கை வலிக்குது விடு…” என்று புகழிடம் இருந்து கையை உருவ,

“பிளாஸ்க்கை என்கிட்டே குடுத்துட்டு நீ போ. நான் யார்க்கிட்டையாவது குடுத்தனுப்பறேன். எல்லாரோட சாப்பிட வரப்ப இங்க வந்தா மட்டும் போதும். தனியா வந்த…” என்றவன் அவளின் கையில் இருந்த பிளாஸ்க்கை பிடுங்கிக்கொண்டு கையை விட்டான்.

சந்நிதி வேகமாய் சென்றதும் இன்னொருவனும் கிளம்ப பார்க்க அவனை நழுவ விடாமல் சட்டை காலரை கொத்தாய் பற்றி இன்னும் ஓரமாய் இழுத்துவந்து கன்னத்தில் இரண்டு அறை அறைந்தான்.

“ஹலோ…” என எகிறியவனிடம்,

“தொலைச்சிடுவேன் ராஸ்கல். என்ன பெரிய ரோமியோன்னு நினைப்போ? அவ தான் கவனிக்கலை. உன் கண்ணை எங்கடா வச்சிருந்த?…”

“நானும் தான் கவனிக்கலை. நீங்க யார் இதை எல்லாம் கேட்க?…” என்று மீண்டும் சொல்லி முகத்தில் ஒரு குத்தை பெற்றுகொண்டான்.

“அவ என் தங்கச்சிடா, நான் கேட்காம வேற எவன் கேட்பான்? நீ வந்ததுல இருந்து உன் பார்வையே சரியில்லை. நானும் உன்னை கவனிச்சுட்டு தான இருந்தேன்…”

“நான் மாப்பிள்ளைக்கு ப்ரென்ட்…”

“இருந்துக்கோ. அதுக்கு என் தங்கச்சியை பார்ப்பியா?…” புகழின் கோபம் எல்லை மீறியது.

“ஸார் இந்த மாதிரி பங்க்ஷன்ஸ்ல இதெல்லாம் சகஜம் ஸார்…” அத்தனை திமிராய் அவன் பேச அவனின் சட்டையின் மேல் இருந்த கையை எடுத்தவன்,

“ஓஓஹோ, அப்போ உங்க வீட்டு லேடீஸை வர சொல்லேன். நானும் பார்க்கறேன். இடிக்கறேன். ஏன்னா நானுமே எலிஜிபில் பேச்சிலர் தான்…”

“ஸார்…” என்று விரல் நீட்டியவனின் கையை பிடித்து முறுக்கி,

“உனக்குன்னதும் எரியுதோ? ஒரு டேஷும் புடுங்க முடியாது போடா…” என்று இன்னும் ரெண்டு தட்டு தட்டி அனுப்பிவிட்டான். பின் தன் கையை தேய்த்துக்கொண்டே திரும்ப அங்கே சந்நிதி முறைப்புடன் நின்றாள்.

“ஏய் நீ இன்னும் போகலையா? சொன்னா கேட்கமாட்டியா?…” என்று அவளிடமும் சண்டையிட,

“நீ இப்படி முறைச்சுட்டே இருக்கறதால தான் நான் காலையில கூட சாப்பிட வந்துட்டு சாப்பிடாம போய்ட்டேன். உன்னால தான். போ போன்னா அங்க ப்ளாஸ்க் எங்கன்னு கேட்பாங்களே? நீ வாங்கி வச்சன்னு நடந்ததை சொன்னா என்னாகும்னு தெரியும்ல…”

“ப்ச், உன்னோட இம்சை. வா என்கூட…” என்றவன் முன்னே நடக்க அவனுடன் முணுமுணுத்துக்கொண்டே பின்னே நடந்தாள். அவளை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு உள்ளே சென்று வெந்நீர் நிரப்பி கொண்டுவந்தவன்,

“போ. இனி இங்க வராத. உன் அப்பா கூடவே இரு. அதுதான் உனக்கு நல்லது…” என்று வேறு அறிவுரை சொல்ல,

“உன் வேலையை பாரு, போடா…” என்று சொல்லிவிட்டு குடுகுடுவென ஓடியேவிட்டாள்.

“ஏய் பார்த்து நிதி…” என்றவன் முகத்தில் கீற்றாய் புன்னகை. இதை அனைத்தையும் நீதிமாணிக்கமும் பார்த்துக்கொண்டு தான் இருந்தார். ஒருவித நிறைவு அவருள்.

தங்கள் காலத்தின் பின்னர் தன் பிள்ளைகள் தம்பி பிள்ளைகளுக்கு பாதுகாப்பாய் இருப்பார்கள் என்ற நம்பிக்கை கொடுத்த நிறைவு.

இதையெல்லாம் எங்கே புகழ் கண்டான். உன்னால தான் காலையில சாப்பிடலை என்ற வார்த்தை அவனுள் சுழல இனியாவது சந்நிதியை பார்த்தால் முறைக்ககூடாது என நினைத்துகொண்டான்.

புகழுக்கும் சந்நிதிக்கும் அப்படி ஒரு உருவ ஒற்றுமை. சந்நிதியை விட சற்றே வளர்த்தியும் நீதிமாணிக்கத்தின் மாநிறமும். மற்றபடி புகழ் பெண்ணாய் பிறந்திருந்தாலோ ஆணாய் நிதி பிறந்திருந்தாலோ இரட்டையர் போலவே இருப்பார்கள்.

“ஒரு சுடுதண்ணி வாங்க இம்புட்டு நேரமா உனக்கு? அங்க என்ன யார்கூட பேசிட்டு வாய் பார்த்திட்டு நின்ன? உன் அம்மாவுக்குத்தான் அறிவில்லாம உன்னை அனுப்பினா நீயும் இதுதான் சாக்குன்னு போய்டுவியோ?…” என்று ஏசினார்.

முனீஸ்வரன் தன் அவதாரத்தை எடுத்திருக்க ஏற்கனவே புகழ் திட்டியது வேறு சந்நிதியை வலிக்க செய்திருக்க கண்ணீர் கரகரவென இறங்கிவிட்டது கன்னத்தில்.

“இப்ப என்னத்துக்கு அடிச்சதாட்டம் அழுவற? கண்ணை துடை…” என்று அதட்ட துடைக்க துடைக்க கண்ணீர் பெருகியது. யாரும் பார்த்துவிடாவண்ணம் தலையை குனிந்துகொண்டாள்.

“சொல்ற பேச்சை கேட்கவா மாட்டேன்ற. வீட்டுக்கு போய் பேசிக்கறேன். இவளை கூட்டிட்டு ரூம்க்கு போங்க. ட்ரெஸ் எல்லாம் பேக் பண்ணிட்டு கிளம்புவோம்…”

“ராதா இன்னைக்கு இருங்கன்னு சொல்லிருக்கா…” பார்கவி சொல்ல,

“சொல்றவங்க ஆயிரம் சொல்லத்தான் செய்வாங்க. எல்லாத்தையும் உடனே கேட்டு நிறைவேத்திடனுமா? கிளம்புன்னு சொல்லியும் எதிர்த்து பேசின…” என்று நறநறவென பல்லை கடிக்க வாயை மூடிக்கொண்டார் பார்கவி.

“சந்தியா கம்பனை கூப்பிடு. அங்க நிக்கிறான் பாரு…” என்றதும் எழுந்து சென்றாள் சந்தியா ஆயிரம் வேண்டுதலுடன்.

“சித்தப்பா அப்பா கூப்பிடறாங்க. ஊருக்கு கிளம்ப சொல்றாங்க…” என்று தான் சொல்லவந்ததையும் சேர்த்து சொல்ல அதிர்ச்சியாய் பார்த்தார் கம்பன்.

“என்னடா ஆச்சு?…” என்றவர் ராதாவையும் அழைக்க மேடையில் இருந்து இறங்கி வந்தார் ராதா.

“அண்ணன் கூப்பிடறார். கிளம்பனும்னு சொல்றாங்களாம்..”

“அதான பார்த்தேன். என்னடா இன்னும் வில்லங்கத்தை ஆரம்பிக்கலையேன்னு…” ராதா சொல்லவும் சந்தியாவின் மனது வலித்தது.

“சித்தி…” பாவமாய் அழைக்க,

“போடா, சலிச்சு போச்சு. உங்கப்பாவை இழுத்து பிடிச்சு இழுத்து பிடிச்சு. ப்ச். வா போவோம். இல்லைனா இதுக்கும் உன்னை தான் திட்டுவாரு…” என்று முனீஸ்வரனை நோக்கி சென்றார்.

அதற்குள் சந்நிதிக்கு ஏகப்பட்ட அர்ச்சனைகள் நடந்தேறிவிட்டன. குனிந்த தலை நிமிராமல் அனைத்தையும் கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

“நிதி, உடம்பெதுவும் சரியிலையாடா?…” என்று கேட்டும் அவள் நிமிரவே இல்லை.

“நாங்க கிளம்பறோம். ரிசப்ஷன்க்கு பார்க்கலாம்…” என சொல்ல,

“என்ன இது? கிளம்பறோம்னு நிக்கறீங்க? இது உங்க பொண்ணோட கல்யாணம். இப்படி மூணாவது மனுஷங்க மாதிரி கல்யாணம் முடியவும் கிளம்பறேன்னா?…” ராதாவிற்கு கோபமாகியது. பொறுத்துக்கொண்டு பேசினார்.

“இங்க பாரு ராதா…” முனீஸ்வரனை பேசவிடாமல் தடுத்தவர்,

“என்ன தான் நினைச்சுட்டு இருக்கீங்க அத்தான்? மண்டபத்துல எல்லாரும் ஒண்ணா தங்குவோம்னு ரூம் ஏற்பாடு செஞ்சிருந்தா நீங்க தனியா வெளில ரூம் போட்டுக்கிட்டீங்க. சரி உங்க விருப்பம்னு விட்டா கல்யாணத்துக்கு வந்தும் ஒட்டாம யாரோ போல தூரமாவே இருக்கீங்க?  பிள்ளைங்களையும் பிடிச்சு வச்சுக்கிட்டா என்ன அர்த்தம்? வயசு பிள்ளைங்க. சந்தோஷமா இருக்க கூடாதா?…”

கோபமும் ஆதங்கமுமாய் ராதா பேச கம்பனுக்குமே பேசட்டும் என்னும் எண்ணம் தான். அண்ணன் பிள்ளைகளை பார்க்க அத்தனை பரிதாபமாய் இருந்தது.

“இன்னைக்கு ஒரு நாள் இங்க இருந்தா ரேவதியை கூட்டிட்டு போய் அவ மாமியார் வீட்டில விட்டுட்டு எல்லாரும் ஒன்னாவே கிளம்பலாம்ல. அவளுக்கும் சந்தோஷமா இருக்கும். இந்த கல்யாணத்துல உங்களை தான் ஆவலா எதிர்பார்த்துட்டு இருந்தா. நீங்க என்னன்னா?…” என்று சொல்ல முனீஸ்வரன் எதற்கும் அசைந்துகொடுக்கவில்லை.

“இங்க பார் ராதா, ரிசப்ஷனுக்கு வரும் போது கூட ரெண்டு நாள் கூட உன் வீட்டில் பிள்ளைங்களை உன்கூட வச்சுக்கோ. எனக்கொண்ணும் இல்லை. இப்ப நாங்க கிளம்பறது கிளம்பறது தான். இப்படியே கிளம்பினா ரிசப்ஷனுக்கு குடும்பமா வருவேன்…”

அழுத்தமாய் அவர் சொல்ல கோபம் கரையை கடந்தது ராதாவிற்கு. ஆனால் என்ன செய்ய முடியும்? இதற்கு மேல் பேசினால் சண்டை தான் வலுக்கும் என நினைக்க,

“ஆமா சித்தி, நாங்க ரிசப்ஷனுக்கு வந்து உங்களோட இருக்கோம். அப்பாவே சொல்லிட்டாங்கள்ள…” சந்தியா சந்தோஷமாய் சொல்ல,

“அண்ணன் சொன்னா செய்வார். இங்க கொஞ்சம் நேரம் இருக்கறதுக்கு அங்க கூட ரெண்டு நாள் நம்மோட இருப்பாங்க. விடு ராதா. நாளை மறுநாள் ரிஷப்ஷன். நாளைக்கே எல்லாரும் வீட்டுக்கு வந்திடனும்…”

கம்பன் மனையிடமும், அண்ணன் குடும்பத்திடமும் சொல்ல முனீஸ்வரனும் ஆமோதித்தபடி மணமக்களிடமும் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டனர். மண்டபத்திற்கு அருகிலேயே உள்ள ஹோட்டலில் தான் ரூம் போட்டிருந்தனர். அதனால் அங்கே சென்று உடைமைகளை எடுத்துகொண்டு காஞ்சிபுரம் நோக்கி சென்றனர்.

———————————————–

சென்னையில் ரிசப்ஷன் அன்று வெகு சிரத்தையாய் கிளம்பி வேகமாய் தாய் தந்தையரை அழைத்துக்கொண்டு வசீகரன் வந்துவிட்டான்.

நேரம் செல்ல முனீஸ்வரன் தன் மனைவியுடன் வந்திருந்தாரே தவிர பிள்ளைகளுடன் வரவில்லை. அவளை பார்க்க முடியாத ஏமாற்றம் மனதில் துளிர்க்க அதை உடனடியாக அகற்றியவன் தன் வழக்கமான பேச்சோடு கலகலப்பாய் இருந்தான். சிறிது நேரத்திலேயே கிளம்புவதாக சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான் வசீகரன்.

நீதிமாணிக்கத்தின் குடும்பத்தில் அவரும் கோமதியும், புகழும் மட்டுமே வந்திருந்தனர். அதை பார்த்ததிலிருந்தே பார்கவியின் பார்வை செல்லும் திக்கெல்லாம் முனீஸ்வரன் தன பார்வையால் தொடர்ந்துகொண்டிருந்தார்.

திருமணத்தின் போது நீதிமாநிக்கமும் கோமதியிடம் சொல்லியிருந்தார். பார்கவி இருக்கும் பக்கமே சென்றுவிட கூடாதென. இவர் எதேர்ச்சையாக பார்த்துவிட்டாலும் பார்க்கவியிடம் தான் தன் கோபத்தை கொட்டுவார் தன தம்பி என்பது தெரியுமென்பதால் கல்யாண வீட்டில் கோமதி பிரயத்தனப்பட்டு பார்கவியை கண்டுகொள்ளாதது போல இருந்துகொண்டார் உள்ளம் கொதிக்க கொதிக்க.

இங்கு ரிசப்ஷனிலும் அப்படியே. திருமணத்தன்று அவர்கள் கிளம்பியதை பற்றி ராதா புலம்பியிருக்க சந்தியா சந்நிதிக்காக ராதாவின் வீட்டிற்கு செல்லாமல் இந்த முறை தாங்கள் வெளியில் தங்கிக்கொண்டனர். ரிசப்ஷன் முடியவும் இங்கிருந்தே கிளம்பிவிடுவோம் என்றும் சொல்லியிருக்க கம்பனுக்கும், ராதாவிற்கும் அத்தனை வேதனை.

இவை அனைத்தும் முனீஸ்வரனுக்காக அல்ல. அவரின் பிள்ளைகளுக்காக. அவர்களின் தற்காலிக சந்தோஷத்திற்காக.

அங்கு ரிசப்ஷனில் வைத்தே அம்பிகா பிரபுவின் தாயிடம் சொல்லி பிரபு ரேவதியிடம் பேசி ரேவதி ராதாவிடம் பேச கேட்டவருக்கு அத்தனை சந்தோஷம். பின்னே குகனின் குடும்பம் என்றால் அவர்களின் சொந்தத்தில் அத்தனை அருமை வாய்ந்தவர்கள் அல்லவா.

பிரபுவின் தாய் ராதாவிடம் வசீகரனின் அருமை பெருமைகளை வாய் ஓயாமல் சொல்லி தீர்த்தார். ராதாவிற்குமே தெரியுமே குகனின் குடும்பத்தை பற்றி அவர்களின் தொழிலை பற்றி.

ரேவதி பிரபுவின் திருமணத்திற்கு கூட அங்கே தானே பத்திரிக்கைகளுக்கு ஆடர் குடுத்தனர். அதன்கொண்டு தன் மகள் வாழப்போகும் குடும்பத்தின் சொந்தத்திலேயே தன் மகள் போன்ற இன்னொரு பெண்ணும் வாழவிருக்கிறாள் என்பதிலேயே மகிழ்ந்து போனார் ராதா.

இத்திருமணத்தை நடத்திவைக்க நானாச்சு என்னும் விதமாய் கிட்டத்தட்ட வாக்கே குடுத்துவிட்டதை போல தான் பேசினார். எப்படியும் இவர்களை மறுக்க எக்காரணமும் முனீஸ்வரனுக்கு இருக்க போவதில்லை என்று ராதா முழுமையாய் நம்பினார்.

அதிலும் வசீகரனின் தோற்றம் ஒருவித பூரிப்பையும் நிறைவையும் உண்டு பண்ணியது.

ரிசப்ஷன் முடியவும் முனீஸ்வரனிடம் பேசிவிட்டு சொல்வதாய் தங்களுடைய தொலைபேசி எண்களை பரிமாறிக்கொண்டனர். அத்தோடு நில்லாமல் அவர்களின் குடும்பத்தை முனீஸ்வரனிடம் அறிமுகப்படுத்தி வேறு வைத்தனர்.  

தங்களின் தொழிலை பற்றி பேசினார்கள். மற்றபடி அளவான பொதுவான பேச்சுக்கள் தான் இரு குடும்பத்தினிடையே.

Advertisement