தீண்டல் – 12 (2)

“ஹ்ம்ம் அம்மாவை கண்டுபிடிச்சாச்சு…” என தலையாட்ட,

“இத்தனை மெனக்கெடனுமான்னு அப்பா கேட்கார் வசீ…” தன் வாட்டதிற்கான காரணத்தை சொல்ல,

“அப்பாவும் வந்தாரா?…”

“ஹ்ம்ம், உன்கிட்ட நம்ம ப்ரெஸ் பத்தி பேசனும்னு வந்தார். நீ போன்ல புகழ் கூட பேசிட்டு இருக்கறதை பார்த்து கேட்டுட்டு என்கிட்டே இதை சொல்லிட்டு போய்ட்டார்…”

“என்கிட்டயும் தான் இதை கேட்டார். நான் ஒன்னும் பேசலை. ஓகே அப்போ பார்த்துக்கலாம்னு போய்ட்டார்…”

“நீ ஏதாவது சொல்லவேண்டியது தானே? முன்ன மாதிரி கலகலப்பா அப்பா பேசறதில்லை. நிதி விஷயம் அவரை அவளோட அப்பாவை வச்சு யோசிக்கவைக்குது…” என்றவர்,

“உங்கப்பாவுக்கு நம்ம குடும்பத்தோட உன் மாமனார் செட் ஆவாரான்ற கவலை. எனக்கு உன் மாமனாரோட நீ செட் ஆவயான்ற கவலை. உனக்கு?…”

“ம்மா, போதும், நிறுத்துங்க. எப்படிம்மா இப்படி யோசிக்கறீங்க? பேசாம அப்பா கூட நீங்களும் ப்ரெஸ்க்கு போங்க. இல்லையா நம்ம கடைக்கு போங்க. இந்த மாதிரி யோசிக்கிறதை எல்லாம் அப்போதான் நிறுத்துவீங்க…”

“நான் என்ன மாட்டேன்னா சொல்றேன். நான் வரேன்னு சொன்னாலே உங்கப்பாவுக்கு காய்ச்சல் கண்டுடுது. இதுல நான் எங்க போக?…” என்று அங்கலாய்க்க வசீகரனுக்கு அவர் சொல்லியவிதத்தில் அடக்கமாட்டாமல் சிரிப்பு தீ பற்ற வெடித்து சிரித்தான்.

அவனுக்கு தெரியாதா தாய் தந்தையரை பற்றி. அம்பிகா குகனுடன் சென்றால் அன்று வேலை நடந்த பாடுதான் என்பதாலேயே அங்கு அவரை விடுவதே இல்லை குகன்.

“ஹ்ம்ம் சொல்லு, என்ன செய்ய போற? எப்போதான் உன் கல்யாணம் பிக்ஸ் ஆகும்? எங்க நிலைமையை பார்த்தியா? பெத்தவங்க தான் பிள்ளைங்களுக்கு கல்யாண தேதி குறிப்பாங்க. இங்க உன்கிட்ட கேட்க வேண்டியதா இருக்குது…”

அவரின் குரலில் சலிப்பு இருந்தாலும் உண்மையில் அவனை கேலி செய்கிறார் என்று புரிந்தவன்,

“நீங்க தான் என் கல்யாணத்துக்கு நாள் நட்சத்திரம் பார்க்க போறீங்க. இதுல எந்த டவுட்டும் வேண்டாம். அவரே நம்மை தேடி வருவார். நீங்க இதை விடுங்க. முதல்ல தியா மேரேஜ் முடியட்டும்…”

வசீகரன் நம்பிக்கையாக சொல்ல மகனை நம்புவதை தவிர வேறு வழி இருக்கவில்லை அம்பிகாவிற்கு.

“இவ்வளோ பேசறீங்க, மருமகள் எப்படி இருக்கான்னு ஒரு வார்த்தை கேட்டீங்களா?…” என அவரிடம் பேச்சை மாற்ற,

“கை கால் எப்படி இருக்குன்னு தெரியும். தெரிஞ்சுட்டே எப்படி இருக்கான்னு கேட்க சொல்ற? தெரியாதா எப்படி இருப்பாங்கன்னு. எல்லாம் நாலஞ்சு மாசத்தில சரியாகிடும். என்ன வலிக்கும், அவ தான் சமாளிக்கனும். வலியை பொறுத்துக்கனும்…” என சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட அவர் சென்றது தெரிந்தும்,

“ஹ்ம்ம் வலிக்கும் தான். ஆனா இதெல்லாம் அவளுக்கு ஒரு வலியா இருக்காதும்மா. அவ இத்தனை வருஷம் அனுபவிச்ச வலிக்கு இந்த வலி சும்மா எறும்பு கடிச்ச மாதிரி தான். அவ இதையுமே தாண்டி வந்திடுவா…” அவன் அவனுக்கே சொல்லிக்கொண்டிருக்க வசீகரன் சொன்னதை தான் நிதியும் நிரூபித்துகொண்டிருந்தாள்.

அப்போதுதான் நிதியை வீட்டிற்கு வந்து டாக்டர் பார்த்துவிட்டு விரல்களுக்கு சிறு சிறு அசைவுகளை கொடுக்கும் படி சொல்லிவிட்டு சென்றிருந்தார்.

லேசான அசைவுகள் கொடுத்த வேதனையின் சுவடுகள் அவள் முகத்தில் வந்து போக அவள் காட்டிகொள்ளாவிட்டாலும் பெற்ற மனம் தவித்தது.

பார்கவியும் சந்தியாவும் அவளையே பார்த்து கண்ணீருடன் தலையை வருடியபடி இருக்க நிதிக்கு உண்மையில் கோபம் தான் வந்தது.

“ப்ச், இப்ப எதுக்கு கண்ணீரும் கவலையும்? இதெல்லாம் ஒரு வலியா? இதுக்கு ஏன் என்னை பார்த்து பார்த்து அழறீங்க?…” என கேட்க,

“உனக்கு வலிக்குதே நிதி. எங்களுக்கு அதுதான் கஷ்டமா இருக்கு. உனக்கு எப்போ சரியாகும்னு இருக்கு…”

“அட போ தியா, உண்மையை சொல்லனும்னா எனக்கு வலிக்கவே இல்லை. ஆக்ஸிடென்ட் அப்போ என் கால் உடையும் போதே உயிர் போற வலி. அடுத்து ஒரு மாதிரி மயக்கம். ஹப்பா இதோ செத்துட்டோம்ன்ற பீல் தான் தோணுச்சு எனக்கு தெரியுமா? ஆனா பிழைச்சு வந்து திரும்பவும் அப்பாக்கிட்ட மாட்டிக்கிட்ட வலி தான் கொஞ்சம் இருந்தது…” என்றவள்,

“இப்பவும், உன்னையும் அம்மாவையும் விட்டுட்டு போய்ட்டா உங்களை யார் பார்த்துக்க அப்டின்னு மனசை தேத்திப்பேன். இதுல இது ஒரு வலியாம். இனி இன்னொரு சான்ஸ் கிடைக்காதுல எஸ்கேப் ஆக. இதுக்கு பேர் தான் செத்து செத்து விளையாடறது…” என சிரிக்க பார்கவி உடைந்துபோனார்.

“என்ன பேச்சு இது நிதி?…” என ராதா கண்டிக்க அப்போது தான் வந்த புகழ் இவள் பேசியதை கேட்டு அடித்தேவிட்டான். அனைவருமே ஒருநிமிடம் ஸ்தம்பித்து போக மிக நிதானமாக அண்ணனை பார்த்தவள்,

“அடிடா, எத்தனை அடி வேணும்னாலும் அடி. அண்ணன்னு பாசமா, அக்கறையோட உரிமையோட நீ அடி. எனக்கு அது எத்தனை சந்தோசம் தரும்னு எனக்கு மட்டும் தான தெரியும். வலிச்சாலும் வாங்கிப்பேன்…”

“ஆனா பிறந்ததுல இருந்து இன்னை வரை கோவத்துல கூட அப்பாவோட சுண்டுவிரல் எங்க மேல பட்டதில்லை. அதுக்கு பதிலா அதிகார அடி நித்தம் நித்தம் எங்களை துடிக்க வச்சது. அவர் சொல்றதை மட்டுமே செய்யற தலையாட்டி பொம்மையா இருக்கற வலி உங்களுக்கு எங்கே தெரிய போகுது?…”

“நிதி…” புகழ் அழைக்க,

“ப்ச், இதுவரை எங்களுக்குன்னு யாருமே இல்லை. உரிமையா இப்படி செய்யறார் அப்பான்னு சொல்ல ஆறுதல் தேட யாருமே இல்லை…” என்ற கேவலுடன் அவனை பார்க்க வயிற்றோடு தங்கையை அணைத்துக்கொண்டான் புகழ்.

“சரியாகிடுச்சுடா. இனி எல்லாமே சரியாகிடும்…” அவளை தேற்ற,

“ம்ஹூம், எனக்கு பயமா இருக்குண்ணா. அப்பா இப்ப மாறின மாதிரி தெரிஞ்சாலும் பயமா இருக்கு…” அத்தனை நாள் அடக்கிவைத்திருந்த கண்ணீர் பெருக அவளை ஆறுதல்படுத்த முடியாது அனைவருமே வேதனையில் துவண்டனர்.

“புகழ் உன் சித்தப்பா வரார்…” ராதா சொல்லவும் வேகமாய் தன் சட்டையில் தங்கையின் கண்ணீரை துடைக்க அவனை விட்டு தள்ளி அமர்ந்த சந்நிதி கண்களை மூடி கட்டிலில் சாய்ந்தமர்ந்தாள்.

“ரெண்டு பேரும் எங்கடா போய்ருந்தீங்க?…” ராதா கேட்க,

“சித்தப்பாவே சொல்லுவார் சித்தி. வெய்ட் பண்ணுங்க. போன் வந்ததேன்னு வாசல்ல நின்னார். அதுக்குள்ளே பேசிட்டாரா?…” என,

“எதிர்பக்கத்துல இருக்கறவன் சுருக்க சொல்லி முடிச்சிருப்பான் இந்த மனுஷன்கிட்ட என்னத்த பேசன்னு…” ராதா அதற்கும் கேலி பேச பார்கவியை தவிர மற்றவர்கள் புன்னகைத்தனர்.

முனீஸ்வரன் அறைக்குள் நுழையும் முன்னால் அத்தனை நிசப்தம். அத்தனை நேரம் பொங்கிய உணர்வுகள் அனைத்தும் முகத்தில் துணிகொண்டு துடைத்ததை போல வெறுமையாய் இருந்தது சந்நிதிக்கு.

“என்ன சொன்னார் டாக்டர்?…” என உள்ளே நுழையவும் கேட்டார் முனீஸ்வரன்.

“கை, கால் விரல்களை அப்பப்ப அசைஞ்சு குடுக்க சொன்னார். அசைவு இருந்துட்டே இருக்கனும்னு…” பார்கவி மெதுவாய் சொல்ல,

“நாள் முழுக்க சும்மா தான படுத்தே கெடக்கா. இத சொல்ல ஆள் வரனுமாக்கும். அசைக்க சொல்லு. அப்பப்ப பார்த்துக்க அவ அசைக்கிறாளா இல்லையான்னு…” என சொல்லியவர் மகளை பார்க்க அவள் கண்களை திறந்தால் இல்லை.

“சாப்பிட்டாளா?…” சின்ன மகளை பார்த்துக்கொண்டே மனையிடம் கேட்க,

“கொஞ்சமா சூப் மட்டும் குடிச்சா. இன்னும் சாப்பிடலை…”

“மணி என்னாவுது? நேரத்துக்கு சாப்பாடு குடுக்காம நீ என்ன வெட்டி முறிச்ச? சின்னது பசி பொறுக்குமா? மாத்திர வேற போடனும். வயித்துக்கு சாப்பிட்டா தானே மாத்திர வேலை செய்யும் . சீக்கிரம் கால், கை சரியாகும். பொட்டபுள்ளைய வீட்டுக்குள்ளயே இப்படியே போடனும்னு நெனப்பா?…”

“இதோ குடுக்கறேங்க…” பார்கவி எழுந்து ஓட பார்க்க,

“அக்கா உங்களுக்கும் தான் உடம்புக்கு முடியலை. நீங்களும் தான் மாத்திரை போடனும். ஞாபகம் இருக்கட்டும். நீங்க இருங்க எல்லாருக்கும் டேபிள்ள எடுத்து வச்சுட்டு வந்து நிதியையும் சேர்த்தே கூட்டிட்டு போவோம்…” ராதா வெடுக்கென்று பேசி செல்ல முனீஸ்வரன் முகம் விழுந்துவிட்டது.

மனைவியை பார்க்க அவர் பயத்துடன் முனீஸ்வரனை பார்த்தார். ஒரு பெருமூச்சுடன் எழுந்த முனீஸ்வரன்,

“புகழ் அப்பா எப்ப வரார்? சொல்லிட்டியா பேசனும்னு சொன்னதை…”

“பேசிட்டேன் சித்தப்பா, நைட் கரெக்டான நேரத்துல வந்திருவார்…”

“சாப்பாட்டுக்கு வர சொன்னேன்னு சொன்னியா?…”

“சொல்லிட்டேன் சித்தப்பா…” என்றவன் நிதியை எழுப்ப மெதுவாய் கண்விழித்து பார்த்தவள்,

“இங்கயே சாப்பிட்டுக்கறேன் அண்ணா…” என்றால் மெல்லிய குரலில். முனீஸ்வரனுக்கு கேட்கவே இல்லை. என்ன சொல்கிறாள் என்று அவளின் முகத்தையே பார்த்திருக்க,

“ரூம்க்குள்ளையே இருக்காத. வா டைனிங் டேபிள் போவோம்…”என்றவன் அவளின் வீல்சேரை அருகில் கொண்டுவந்து அவளை பிடித்து அதில் அமரவைக்க தூக்க காலில் அழுத்தம் கூடி சந்நிதி,

“அம்மா…” என்று வலியில் அலறிவிட்டாள்.

“டேய், டேய் பார்த்துடா சின்னதுக்கு வலிக்குது பாரு…” முனீஸ்வரன் அவரறியாது மகளுக்கு மேல் பதறி அலற அதிசயமாய் பார்த்தனர் அண்ணனும், தங்கையும்.

ஏனோ மகளை தூக்க நினைத்து கையை நீட்டிவிட்டவரால் இயல்பாக அதை செய்யமுடியவில்லை.

“பார்த்து கூட்டிட்டு வா…” என சொல்லிவிட்டு விடுவிடுவென்று வேகமாய் வெளியேறிவிட்டார்.

அவர் சென்றதும் சந்நிதியை தூக்கி வீல்சேரில் அமர்த்தியவன் மெதுவாய் அதை உருட்டிக்கொண்டே,

“இப்ப வலி இருக்காடா…” என கேட்க,

“ம்ஹூம் ஆச்சர்யமா இருக்கு…” என்று சொல்ல இருவருக்கும் புன்னகை முனீஸ்வரனை நினைத்து.

டைனிங்ஹாலில் முனீஸ்வரனை தவிர மற்றவர்கள் இருக்க அவர்களிடம் நடந்ததை சொல்ல,

“என்ன தான் இருந்தாலும் அன்பில்லாமலா போகும். மகள் பாசம் அவரை இப்படி நடந்துக்க வைக்குது. தான் ஆடாவிட்டாலும் தன்…” பார்கவி முடிக்கும் முன்னால்,

“ஆடிட்டாலும். நல்லா வருது வாயில. அக்காவா போய்ட்டீங்க. இன்னுமா அவரை நம்பிட்டு இருக்கீங்க?…” என ராதா சத்தம் போட்டதில் பாவமாய் பார்த்தார் பார்கவி.