Advertisement

தென்றல் – 18

                “நல்லா தூங்கறா…” என பிரசாத் அஷ்மியை பார்க்க அதிபன் வாயில் விரலை வைத்து வேண்டாம் என்பதை போல தலையசைத்தான்.

“இல்லை எழுப்பலை. தூங்கட்டும்…” என சொல்ல தன்னுடைய மொபைலை எடுத்த அதிரூபன் பிரசாத் எண்ணிற்கு மெசேஜ் ஒன்றை வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பினான்.

அதையும் எடுத்து பார்க்குமாறு சைகையில் சொல்ல எடுத்து பார்த்தவன் இதழ்களில் புன்னகை விரிந்தது. அதிரூபன் வந்ததும் மெதுவாய் தன் காதுகளில் கிசுகிசுப்பாய் பேசியது ஏன் என புரிந்தது. மெசேஜில் அதிரூபன் அனுப்பியிருந்த செய்தியானது,

“என் குரல் கேட்டால் எத்தனை அயந்த தூக்கமாக இருந்தாலும் எழுந்துவிடுவாள். அதனால் பேசவில்லை. தவறாக நினைக்க வேண்டாம்” என இருக்க அதிரூபனை பார்த்த பிரசாத் புரிந்துகொண்டதாக தலையசைத்தவன் மெதுவாய் தலை சாய்த்து கண் மூட உறக்கம் பிடித்துக்கொண்டது அவனுக்கும்.

ஏனோ அதிரூபனை பார்த்த நிமிடம் அவனின் மனநிலை லேசாவதை போல தோன்ற தானாகவே உறக்கத்திற்கு சென்றான். இதை பார்த்துக்கொண்டே இருந்த அதிரூபன் மெதுவாய் எழுந்து ராஜாங்கத்தை பார்க்க சென்றான்.

அவரருகில் இருந்த சேரில் அமர்ந்தவன் அவரின் கையை பற்றிக்கொண்டு அவரையே பார்த்தவண்ணம் அப்படியே இருந்தான். கண்கள் கசிந்தது தான். கண்ணீர் வரவில்லை. ஆனால் தைரியத்தை கைவிடவில்லை. அழுத்தமாய் பற்றிக்கொண்டே அமர்ந்திருந்தான்.

எத்தனை நேரம் அப்படியே இருந்தானோ பிரசாத் வந்து தோளை தொடவும் தான் சுயவுணர்வு வந்து திரும்பிபார்த்தான்.

“அஷ்மி எழுந்தாச்சு…” என்ற பிரசாத்திடம் புன்னகைத்தவன் அங்கிருந்து எழுந்து அஷ்மியை நோக்கி சென்றான். அமர்ந்திருந்தவள் அதிரூபன் அருகில் சென்று நின்றது தான் தாமதம் அவனின் வயிற்றோடு கட்டிக்கொண்டாள்.

இருவருமே ஒரு வார்த்தையும் பேசவில்லை. வெறும் மௌனம் மட்டுமே. அஷ்மியின் தலையை ஆதரவாக அதிரூபன் வருடிக்கொண்டிருக்க அவனை பிடித்த பிடியை அஷ்மி விடவே இல்லை.  பார்த்திருந்த பிரசாத்தின் மனநிலை ஒருவித இதம் தரும் விதமாய் இருந்தது. என்ன அன்பு இவர்களிடத்தில் என சிலாகிக்க விழைந்தான்.

“அஷ்மி அவரை விடேன். நேரா ஹாஸ்பிட்டல் வந்திருப்பார் போல…” பிரசாத் சொல்ல அதிரூபனின் வயிற்றில் ஒரு கையால் அத்தனை அடி அடித்தாள்.

அவளின் அடி ஒவ்வொன்றையும் தடுக்காமல் வாங்கிக்கொண்டான் அதிரூபன். முகத்தில் வலித்ததற்கான சிறு சுணக்கம் கூட இல்லை. அவனின் விரல்கள் அவளை வருடுவதை நிறுத்தவும் இல்லை.

“அஷ்மி…” என பிரசாத் தான் அதட்டினான். அதை இருவருமே கேட்டுக்கொண்டதாக இல்லை.

“மிஸ் யூ அதி…” என வாயை திறக்க,

“ஐ டூ மிஸ் யூ டா அஷ்மி. ஸாரி…” என்று மன்னிப்பையும் கேட்டான்.

“நான் உன்னை எவ்வளவு தேடினேன் தெரியுமா?…” அஷ்மியின் குரல் விசும்பலை எட்ட நின்றிருந்த அதிபன் சட்டென அவளருகே அமர்ந்து தோளில் சாய்த்துக்கொண்டான்.

“அதான் நான் வந்துட்டேன்ல. நத்திங்டா. அஷ்மிக்கு அழ தெரியுமா என்ன?…”

“நீ இருந்திருந்தா அப்பாவுக்கு இப்படி ஆகியிருக்காதுடா…”

“இனி எங்கயும் போகமாட்டேன். ப்ராமிஸ்…” அவளின் கையை பிடித்துக்கொள்ள,

“பசிக்குது அதி…”

பிரசாத்தே இதை எதிர்பார்க்கவில்லை.  முதல்நாள் தன்னோடு அவள் சேர்ந்து உண்ணும் பொழுதும் கவனித்தான். பசிக்காகவோ ருசிக்காகவோ கூட உண்ணவில்லை. ஏதோ கொஞ்சமே மட்டும் சாப்பிட்டாள்.

இன்னொரு தோசை வாங்கிக்கொள்ள சொல்லும் பொழுது கூட போதும் என்றவள் தன்னைத்தான் கவனித்தாளே தவிர அவளை பார்த்துக்கொள்ளவில்லை. அப்பா இப்படி இருப்பதனால் என்று நினைத்து வற்புறுத்தாமல் விட்டுவிட்டான்.

ஆனால் இப்பொழுது அதிபனிடம் அவள் கேட்ட விதம் பசியில் தாயிடம் ஏதாவது கொடேன் என்று குழந்தை கேட்பதை போல இருக்க பிரசாத்திற்கு வலித்தது.

அதிபன் மேல் பொறாமை இல்லை என்றாலும் கொஞ்சமே கொஞ்சம் எட்டிபார்க்கத்தான் செய்தது அந்த ஆமையும்.

“சாப்பிடலாம். பர்ஸ்ட் ப்ரெஷ் பண்ணிட்டு ப்ரெஷா வா. நீயும் பிரசாத்தும் ரூம்க்கு போய்ட்டு ப்ரெஷ் ஆகிட்டு வாங்க…” என அவர்களை அனுப்ப,

“நீயும் வா. நீ கூட தான் ப்ரெஷ் பண்ணலை…” என அஷ்மி அழைக்க,

“இப்ப அங்கிள் எழுந்திருவாங்க. நான் இங்கயே வெய்ட் பன்றேன். நீங்க போய்ட்டு சீக்கிரம் வாங்க…” என்று அனுப்பிவிட்டு துவாரகாவிற்கு அழைத்தான்.

“துவாடா…” என்று அழைக்கும் பொழுதே மறுபுறம் அழுதுவிட்டாள் அவள்.

“டேய், எதுக்கு அழற?…”

“போங்க மாமா, என்னால முடியலை. இங்க இங்க நீங்க இல்லாம. முடியலை மாமா…” என்றவளை நினைத்து புன்னகைத்தவன்,

“இனிமே ஊருக்கு போகனும்னா கூட போகமாட்டேன். என்னோட குட்டி பேபியை கூட சமாளிச்சிடுவேன். ரெண்டு பெரிய பேபீஸ தான் சமாளிக்கவே முடியலை. இப்பத்தான் அவளை சமாளிச்சு அனுப்பினேன். இப்ப நீ. என் பொண்ணை பார்த்து கத்துக்கோங்க ரெண்டு பேரும்…” என கேலி பேச,

“மாமா…” என பல்லை கடித்தாள்.

“சங்கம் அமைதியருள்க அமைதியருள்க…”

“இருங்க நான் அங்க வந்து டாக்டர்ட்ட வத்திவைக்கிறேன் உங்களை…” என சண்டைக்கு தயாராக,

“என்னனு சொல்லுவீங்க முயல்க்குட்டி?…” அவளை சீண்ட,

“என்னையும் டாக்டரையும் பெரிய பேபீஸ்னு சொன்னீங்கள்ள. அதை சொல்லுவேன்…”

“உன்னை பேபி சொன்னதுக்கு மேடம் அப்பீல் இல்லைன்னு சொல்லுவாங்க. அவளை பேபி சொன்னதை தான் பிடிச்சுக்கிட்டு ஆடிடுவா…” என சொல்லி சிரிக்க அவனின் பக்கவாட்டில் பிரசாத்தின் சிரிப்பு சத்தம் கேட்க திரும்பி பார்த்தான் அதிரூபன்.

“அஷ்மிட்ட கண்டிப்பா நான் சொல்லமாட்டேன் அதி…” என இரு கைகளையும்  தூக்க அதிபனின் புன்னகை அதிகமானது.

“ஆனா என் சிஸ்டர் சொன்னா நான் ஆமாம்னு தான் சொல்லுவேன்…” என்றும் சொல்லி,

“நீங்க கண்டினியூ பண்ணுங்க. மொபைலை வச்சுட்டேன்…” என்று எடுத்துக்கொண்டு சென்றான் பிரசாத்.

“யாரு பிரசாத் அண்ணாவா?…” போனில் துவா கேட்க,

“ஹ்ம்ம் ஆமாம். எவ்வளவு அருமையா பார்த்துக்கறார் தெரியுமா? அஷ்மி லக்கி…” என நிறைவாய் சொல்ல,

“நானும் லக்கி தான் மாமா. டபுள் லக்கி…” என்று துவா சொல்ல,

“என்ன பன்ற துவா?…” குரலை தழைத்துக்கொண்டு குழைவாய் கேட்க அதில் புரிந்துகொண்டவள்,

“நானும் அம்மாவோட ஹாஸ்பிட்டல் வரேன் மாமா. டிபன் எடுத்துட்டு வரோம்…”

“அப்படியே எனக்கொரு ட்ரெஸ்…”

“எடுத்து வச்சுட்டேன் மாமா. நீங்க அங்க போவீங்கன்னு தெரியும்…” அவனை அறிந்தவளாக சொல்ல இவனிதழ்களில் மென்முறுவல்.

“நிலாவிழி…”

“பாப்பாவை பார்க்கனும்னா நீங்க வீட்டுக்கு தான் வரனும்…”

“ஓகே ஓகே, பேசிட்டே இருக்காம சீக்கிரம் வாடா. உன்னை பார்க்கனும்…” அவனின் குரலில் காதல் அப்படி கொட்டிக்கிடந்தது. அதன் வாசம் அத்தனை தூரங்களை கடந்து அவளின் சுவாசத்தில் சென்று கலந்தது.

“இதோ புறப்பட்டுட்டோம்…” என அழைப்பை துண்டிக்க இதழ்களில் உறைந்துவிட்ட புன்னகையோடு மீண்டும் ராஜாங்கத்திடம் சென்று அமர்ந்தான்.

அஷ்மியும் பிரசாத்தும் வந்துவிட தனக்கு தெரிந்த வார்ட்பாயிடம் சொல்லி மூவருக்கும் டீயை வரவழைத்தான் அதிரூபன்.

அதை குடித்துக்கொண்டே ராஜாங்கத்தின் உடல்நிலை பற்றிய விபரங்களை அஷ்மியிடமும் சீப் டாக்டரிடமும் கேட்டு தெரிந்துகொண்டான்.  

சிறிது நேரத்தில் அகிலாவுடன் துவாரகா வந்துவிட இருவரையும் பார்த்த பிரசாத்திற்கு மகிழ்ச்சியாகவும் அதே நேரம் விஷால் செய்த செயலும் ஞாபகம் வந்து தலையில் சம்மட்டியால் அடிக்க முகம் சுருங்கி பின் தன்னை மீட்டு நின்றான்.

“பிரசாத் இதுக்கு போய் இப்படி இருக்கலாமா? வீரன்டா நீ. உன்னை நீ பார்த்துப்ப. பார்த்துக்கனும்” என தனக்கே சொல்லி துவாரகாவை பார்த்தான்.

துவாரகா இவர்களிடம் பேசினாலும் அதிரூபனுக்கான தேடல் அவளின் விழிகளில் அப்பட்டமாய் தெரிந்தது. ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நதியை போல அவர்களின் காதல் பிரசாத்தின் மனதில் நிறைவை தந்தது.

பிறந்ததிலிருந்து கஷ்டங்களை மட்டுமே அனுபவித்த இந்த பெண்ணிற்கு காலத்திற்கும் சகோதரனாக நிற்பேன் என அன்பு பொங்க பார்த்தான் பிரசாத்.

அஷ்மியோ துவாரகா வந்ததும் அது இதுவென பேசிக்கொண்டே இருக்க அகிலா ஓரமாய் அமர்ந்துகொண்டார். பத்து நிமிடங்கள் கடந்தும் அஷ்மி பேச்சை நிறுத்துவதே தெரியவில்லை.

துவாரகா வேறு நொடிக்கொரு முறை அதிபனிடம் பார்வையை எய்து திரும்பினாள். அதிரூபன் பிரசாத்தின் புறம் கையை நீட்ட புரியாமல் அவன் பார்க்க அறையின் சாமி என்பதை சைகையால் காண்பிக்க சிரிப்புடன் எடுத்து கொடுத்தான் அவன்.

துவாரகாவின் வாயை பொத்திய அதிரூபன் அஷ்மியை முறைக்க அவளோ கெத்தாய் பார்த்தாள்.

“வேணும்னே பன்றல நீ?…” என்று அவளின் தலையில் கொட்ட,

“பொண்டாட்டியை கூட்டிட்டு போகனும்னா போ. அதை விட்டுட்டு நாங்க லேடீஸ் பேசறதை வாய் பார்த்துட்டு நின்னா நாள் முழுக்க நிக்க வேண்டியது தான். கட்டிக்க வேணும்னா நாங்க ஹெல்ப் பண்ண முடியும். இதுக்கெல்லாம் நீயே தான் யோசிக்கனும். தம்பி. உன் சமத்து தான்…” என்று அவனை வார,

“அஷ்மி வேணும்னா பண்ணின?…” பிரசாத் கேட்க,

“ஹ்ம்ம் வேணும்னே தான் பண்ணுவா…” என அதியும் சிரிக்க,

“அவ இதுக்கு மேலையும் பன்றதை நிப்பாட்டவாச்சும் போய் ப்ரெஷ் ஆகிட்டு வாங்க…” என்று அவர்களை அனுப்பியவன்,

“உனக்கு கொழுப்புடி….” என்று அவளின் காதை திருக,

“உங்களுக்கும் வேணுமா?…”

“என்ன?…”

“அதான்ப்பா கொலஸ்ட்ரால். உங்க பாஷைல கொழுப்பு…” என்றவளை தலைசாய்த்து பார்த்தவன்,

“எனக்கு வேணும்னா நானே எடுத்துப்பேன். உன்னோட பர்மிஷன் எதுக்கு?…” என்றவனை பார்த்து புருவம் உயர்த்தியவள்,

“பர்மிஷன் கேட்டுத்தான் எடுக்கனும்னு நானும் சொல்லலை. ஆனா ஹஸ், இத்தனை நாள் யாரோட பர்மிஷனுக்காக வெய்ட் பண்ணிட்டு இருந்தீங்க பாஸ்…”

அஷ்மி குறும்பாய் கேட்கவும் இரு கைகளையும் பாக்கெட்டில் நுழைத்துவிட்டு அவளை நெருங்கி நின்றான்.  என்ன சொல்லப்போகிறான் என ஆவலாய் அவள் பார்த்து நிற்க,

“இப்பவே தெரிஞ்சுக்கனும்னா நம்ம வீட்டுக்கு தான் போகனும். அதை எப்ப சொல்லனுமோ அப்ப சொல்லுவேன்…”

ஹஸ்கி வாய்ஸில் அவன் கூறவுமே அஷ்மியின் வதனத்தில் ஒரு குறுகுறுப்பு மூண்டது. உள்ளங்கை வியர்த்து ஒரு கதகதப்பு சூழ இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் தாங்கி நின்றது. தொட்டுக்கொள்ளும் இடைவெளி இருந்தும் பட்டும் படாமல் நின்றனர்.

“ஹஸ்…”

“ஹ்ம்ம்…”

“டாக்டர் வந்தாச்சு…”

“டாக்டர் தான் எப்பவோ வந்தாச்சே என் லைப்ல…”

“ட்யூட்டி டாக்டரை சொன்னேன் ஹஸ்…” என்றவள் அவனை நெஞ்சில் கைவைத்து நகர்த்தி அங்கிருந்து புன்னகையோடு சென்றாள்.

அவள் சென்றதை பார்த்தவன் சிரிப்புடன் அமர்ந்தான். மனதினுள் போராட்டம் பந்தைய குதிரையில் வேகத்தில் சென்றாலும் அஷ்மியிடம் அவன் காண்பித்துக்கொள்ள விரும்பவில்லை. இணக்கமான நிலையை இன்னும் அதிகமாக்க முயன்றான்.

இங்கே அறைக்குள் நுழைந்ததுமே துவாரகாவை அணைத்த அவளின் நெற்றியில் இதழ் பதித்து,

“ரொம்ப மிஸ் பண்ணிட்டியாடா துவா?…” என காதலாய் கரைந்துவிட,

“மாமா…”என்னும் வார்த்தையை தவிர வேறெதுவும் அவளிடத்தில் வரவில்லை.  ஐந்து நிமிடம் அவளை அணைத்துக்கொண்டு நின்றவன் மெதுவாய் விலகி,

“நான் போய் குளிச்சுட்டு வந்திடறேன்…” என அவளின் கன்னம் தட்டி சொல்லி சென்றான்.

அவன் வருவதற்குள் கொண்டுவந்த டிபனை எடுத்து மேஜையில் வைத்தவள் அகிலாவிற்கு அழைத்து அஷ்மியையும் பிரசாத்தையும் அனுப்பிவிடுமாறு சொல்ல அவர்கள் வருவதற்குள் அதிரூபனும் குளித்து கிளம்பி வந்துவிட்டான்.

நால்வருமாக பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்து ராஜாங்கத்தை பார்க்க செல்ல அதன் பின்னே அகிலவேணி வந்து உண்டுவிட்டு அனைத்தையும் எடுத்துக்கொண்டு சென்றார்.

“நான் வீட்டுக்கு கிளம்பறேன் அஷ்மி. மதியம் டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்னு டாக்டர் சொல்லிட்டாங்க. லஞ்ச் ரெடி பன்றேன்…” என்றவர்,

“துவா வரையா?…” என கேட்க,

“இல்லைம்மா, நீங்க கிளம்புங்க. நான் ராஜாங்கம் அப்பாவை கூட்டிட்டு தான் வருவேன்….” என்றதும்,

“நீங்க போங்க அத்தை. நானும் அப்பா வீட்டுக்கு போய்ட்டு வரேன். வரப்போ அங்கிளையும் கூட்டிட்டு எல்லாரும் சேர்ந்தே வந்திருவோம்…” என்ற அதிபனை அகிலா பார்த்த பார்வையில் இருந்த ஒன்றை சரியாய் படித்தான் அவன்.

“என் பொண்ணு என்னை புரிஞ்சுப்பா. அப்பா எது செஞ்சாலும் கரெக்ட்னு புரிஞ்சுக்கற பொண்டாட்டியும் பொண்ணும் கிடைச்சது என்னோட வரம் அத்தை. நான் அவளை பார்க்கறப்போ எந்தவித அழுத்தமும் இல்லாம இருக்கனும். அதுக்கு இந்த வேலையை நான் முதல்ல முடிக்கனும்…”

குழந்தையை பார்க்க வரவில்லையே என்கிற மனவருத்தம் கொஞ்சம் இருந்தது தான் அகிலாவிற்கு. துவா அதை பெரிதாய் நினைக்கவில்லை. ஆனால் அதிபனாகவே வந்திருக்க வேண்டும் அல்லவா என்று அகிலா நினைத்தார். அதை சரியாக கணித்து அவன் சொல்லவும் அவருக்கும் புரிந்தது.

மெல்லிய புன்னகையுடன் தலையசைத்துவிட்டு அங்கிருந்து அவர் கிளம்பிவிட அஷ்மி முறைத்தாள்.

“சத்தியமா என் ப்ரெண்டை போல யாரு மச்சான்னு உன்னை தலைல தூக்கிவச்சு ஆடமாட்டேன். ஆளை பாரு. ஆன்ட்டி நினைக்கிறதுல என்னடா தப்பு? நீயும் உன் நினைப்பு. பொண்ணு புரிஞ்சுப்பாளாம். நாலு சாத்து சாத்த ட்ரெய்னிங் குடுக்கறேன் பாரு. நல்லா வாங்கினா தான் தெரியும் உனக்கு…”

அஷ்மி பொரிய அவளின் தலையில் கொட்டியவன்,

“நான் போய்ட்டு வந்து உன்கிட்ட பேசிக்கறேன்…” என சொல்லி துவாரகாவை பார்த்து தலையசைக்க அவளும் புன்னகையோடு தலையசைத்தாள்.

“ஸ்யப்பா இந்த லவ்ஸ்ங்க தொல்லை தாங்க முடியலை. ச்சூ ச்சூ…” என கொசுவை விரட்டுவதை போல காற்றில் கையை ஆட்ட இன்னுமொரு கொட்டை அழுத்தமாக அவளின் தலையில் இறக்கிவிட்டு நடக்க ஆரம்பித்தான் அதிரூபன். அவனோடு பிரசாத்தும் வர,

“பார்த்தியா முயல்க்குட்டி, உன் புருஷன் உன்கிட்ட கண்ணாலையே பர்மிஷன் கேட்கறான். என் ஹஸ் பாரு என் கண்ணை கூட பார்க்கம பிச்சுக்கோன்னு ஓட்டம் பிடிக்கிறதை?…”

“அச்சோ டாக்டர் அண்ணா உங்களுக்கு ஏதாவது வாங்க போருப்பாங்க…” துவாரகா சொல்ல,

“ஹாஸ்பிட்டலை சுத்தி எக்கச்சக்கமா வளர்ந்திருக்கு மரம் செடி கொடின்னு. நீயும் உன் பங்குக்கு ஓவரா பாசப்பயிராய் வளர்க்காதே? அதுபாட்டுக்கு எக்கச்சக்கமா வளர்ந்து மனுசமக்களை இங்க வரவிடாம ஆக்கிட போகுது. வீட்ல போய் மிச்சத்தை வளர்க்கலாம்மா…” என கலாய்க்க,

“டாக்டர்….” என துவாரகாவின் சிணுங்க அஷ்மியும் அதே போல சொல்லி சிரித்தாள்.

“என்ன பிரசாத் ஏதாவது வேணுமா?…” தன்னோடு வந்தவனிடம் கேட்க,

“அஷ்மிக்கும் சிஸ்டர்க்கும் குடிக்க ஏதாவது வாங்கலாமேன்னு வந்தேன் அதி…”

“நீங்க அவளை துவான்னே கூப்பிடலாம்…” என புன்னகைத்தவன் கார் அருகில் வந்ததும் பிரசாத்தின் கையை பிடித்துக்கொண்டான்.

“ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் பிரசாத். ஸ்வேதாவுக்கு ஒண்ணுன்னதும் நீங்க போய் நின்னது. உங்களை அண்ணனா சொன்னது. எல்லாத்துக்குமே தேங்க்ஸ்…”

“இதுக்கு எதுக்கு தேங்க்ஸ்? விடுங்க…”

“ம்ஹூம், இதை அஷ்மி செய்யறான்னா அவ எங்களோட வளர்ந்தவ. ஆனா நீங்க. நமக்கெதுக்குன்னு ஒதுங்காம, அஷ்மியையும் வேண்டாம்னு சொல்லாம போய் நின்னீங்க. லைப் லாங் மறக்கமாட்டேன்…”

“ப்ச், இது ஒரு விஷயமே இல்லை அதி. உங்களுக்கும் அஷ்மிக்குமான பாண்டிங். நான் எப்பவும் குறுக்க வரமாட்டேன். இன்பேக்ட் எனக்கு இப்படி ஒரு ப்ரென்ட் இல்லையேன்னு பீல் கூட பண்ணியிருக்கேன் உங்க ரெண்டுபேரையும் பார்த்து…” மனதார பிரசாத் சொல்ல,

“அஷ்மி உங்களுக்கு கிடைச்ச கிப்ட்ன்னு சொன்னேன். வாபஸ். நீங்க தான் எங்களுக்கு கிடைச்ச கிப்ட்….” என்றவன் பிரசாத்தை அணைத்துக்கொள்ள பிரசாத்தின் மனம் அடித்துக்கொண்டது.

“எத்தனை நல்ல மனிதன் இவன்?” என எண்ணியவனின் மனம் குற்றவுணர்வில் குறுகுறுக்க அதி விலகினான்.

“ஓகே நான் போய்ட்டு வரேன். நீங்க டிஸ்சார்ஜ் பார்மாலிட்டீஸ் பாருங்க. அதுக்குள்ளே வந்திடுவேன்…” என்றவன் கிளம்பிய வேகத்தில் விரைவாகவே ரத்தினசாமி இல்லத்தினுள் புயல்போல நுழைந்தான்.

பத்மினி ஏற்கனவே அனைவரிடமும் அதி வருகிறான் என சொல்லியிருக்க பூரணி மட்டும் வெளியில் வராமல் அவரறையில் அமர்ந்திருந்தார்.

அதிரூபன் உள்ளே நுழைந்ததும் அவனை பார்த்த ரத்தினசாமி வேகமாய் மகனை நெருங்கி அணைத்துக்கொண்டார்.

“அதிபா…” என்ற அழைப்புடன் அவனின் தோள் சேர்ந்தவர் நான்கு நாளில் தளர்ந்து சேவ் செய்யப்படாமல் தலை கலைந்து இருக்க பார்த்தவனால் தாளவே முடியவில்லை.

“என்னப்பா இது இப்படி இருக்கீங்க?…” என கேட்கும் பொழுதே தொண்டை அடைத்துப்போனது.

எத்தனை திமிர், ஆணவம், கம்பீரம், நிமிர்வு என்று இருந்த மனிதர். இப்படி ஒரே ஒரு விஷயத்தில் உருக்குலைந்து போவாரா? போய்விட்டாரே? மனதுனுள் வருந்தியவன் கோபம் மேலோங்க அங்கிருந்தவர்களை பார்த்தான்.

பத்மினி, சங்கரன், அர்னவ், விஷால், என இருக்க பூரணியை காணவில்லை.  சந்தோஷ் ஓரமாய் ஒரு இடத்தில் தலையை குனிந்தபடி அமர்ந்திருந்தான். அவனின் விழிகள் கண்ணீரை உகுத்துக்கொண்டிருக்க மனம் கனத்துப்போனது.

விஷாலை பார்த்து முறைத்தான் அதிரூபன். அர்னவ்விடம் பார்வையில் சந்தோஷை பார்த்துக்கொள்ளுமாறு காட்ட அர்னவ் சந்தோஷின் அருகில் அமர்ந்துகொண்டு அவனை ஆறுதலாய் அணைத்தான்.

“அம்மா, போய் அவங்களை வரசொல்லுங்க…” என சொல்லி ரத்தினசாமியை அழைத்து சோபாவில் அமர்த்தியவன்,

“எத்தனை பிரச்சனை இருந்தாலும் இப்படியா இருப்பீங்க அப்பா? இது ஒரு சின்ன பிரச்சனை, இதை ஹேண்டில் பண்ண முடியாதா உங்களுக்கு? இப்படி ஆகிட்டீங்க?…” என்றவன்,

“முதல்ல போய் க்ளீன் சேவ் பண்ணிட்டு குளிச்சுட்டு வாங்க. ராஜாங்கம் அங்கிளை டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுவோம். அங்க வாங்க…”

“என்ன அதி? அதுக்குள்ளையா டிஸ்சார்ஜ்?…” என கேட்க,

“ஹ்ம்ம் ஆமாம் சித்தப்பா. வீட்ல வச்சு பார்த்துக்கலாம்னு தான். ஹாஸ்பிட்டல் அட்மாஸ்பியர் அங்கிளை இன்னும் டல் ஆக்கிடும். சோ வீட்டுக்குன்னா ரிலாக்ஸா இருப்பார்ல…”

“சரிதான்ப்பா…” என சங்கரன் சொல்லும் பொழுதே பூரணியோடு வந்துவிட்டார் பத்மினி.

பூரணி முகத்தில் அத்தனை கடினம் இருந்தது. அவரை பார்த்ததுமே நரம்புகள் புடைக்க ஆத்திரம் கிளர்ந்தது அதிரூபனுக்கு. ஆனாலும் அடக்கிகொண்டான். எழுந்து அவருக்கு முன்னால் வந்தவன் தன் பாக்கெட்டில் இருந்து ஒரு விஸ்டிங் கார்டை எடுத்து அவருக்கு முன்னாள் இருந்த டீப்பாயில் போட்டவன்,

“இது கேரளால இருக்கற ஒரு ஆசிரமம் அத்தை. இனி நீங்க அங்க தான் இருக்க போறீங்க. இந்த கார்ட்ல அதோட வெப்ஸைட் இருக்கு. ஆன்லைன்ல செர்ச் பண்ணி பாருங்க. இன்னும் ரெண்டு நாள்ல நீங்க கிளம்பனும். என்ன வேணுமோ எல்லாமே பேக் பண்ணிக்கோங்க…”

அவன் சொல்ல சொல்ல அனைவரும் வாயடைத்து நின்றனர். பூரணியே அதிர்வுடன் அவனை பார்த்தார்.

“நான்… நான்.. நான் ஏன் போகனும்?…” என எதிர்த்து கேட்க,

“உங்க கணவர் அதான் மிஸ்டர் வைத்தியநாதன் அவர் தான் என் கனவுல வந்து உங்களை அங்க அனுப்ப சொல்லி சொன்னார்…” அவன் சொல்லவும் அதிர்ச்சியாய் பார்த்தார் பூரணி.  அதை பார்த்து பல்லை கடித்த அதிரூபன்,

“நீங்க ஏன் இங்க இருக்கனும்? அதை சொல்லுங்க…”

“இது என்னோட வீடு…”

“தப்பு இது என் அப்பாவோட வீடு. உங்களுக்குன்னு சொத்தை பிரிச்சு குடுத்தாச்சு உங்க மேரேஜ் முடியவுமே. அதோட வீடு இங்க இல்லை. எங்கப்பா தான் தங்கச்சி மேல இருக்கற பாசத்தில உங்களை இங்க கூடவே வச்சுக்கிட்டார். வருஷக்கணக்கா இங்க இருந்தா உங்க வீடாகிடுமா?…”

“சந்தோஷ் கிளம்பு. ஸ்வேதாவை கூட்டிட்டு போவோம்…” என பூரணி சொல்ல,

“அவன் வரமாட்டான். ஸ்வேதாவுமே. நீங்க மட்டும் தான் போகனும்…”

“என் மகனை வரமாட்டான்னு சொல்ல நீ யார்?…”

“அவங்களை உங்க பிள்ளைங்கன்னு சொல்ற தகுதியை நீங்க எப்பவோ இழந்துட்டீங்க. இனி அவங்க எங்களோட பிள்ளைங்க…”

“நீ பிரச்சனை பன்ற. நான் கோர்ட்டுக்கு போவேன் அதி….” பூரணி பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் ரத்தினசாமி தான் செத்துக்கொண்டிருந்தார். தன் தங்கையா இப்படி என்று.

“தாராளமா. எனக்கும் அதுதான் வேணும். மெண்டலி நீங்க ஸ்டெடி இல்லைன்னு ஈஸியா கேஸை முடிச்சு சந்தோஷ், ஸ்வேதாவை எங்க கஸ்டடில எடுத்துப்பேன். அவங்களுக்கு ஒரு நல்ல ப்யூச்சரை நாங்க உருவாக்கி குடுப்போம்…”

அசராமல் அதிரூபனும் திருப்பி திருப்பி பேச எந்த வகையிலும் பேசமுடியாமல் ரத்தினசாமியை பார்த்தார். அவரிடமிருந்து தனக்கு ஒரு உதவியும் கிடைக்காது என்ற உண்மை சுட கண்ணீர் தான் வந்தது அவருக்கு.

வேறு எப்படி பேசினாலும் மிரட்டினளும் விளைவு விபரீதம். எதுவும் அதிரூபனிடம் நடக்காது என்பது புரிய அழுகையோடு நின்றார்.

“இங்க பாருங்க, பேசாம சைலன்ட்டா இருக்கறதுன்னா எங்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் பிள்ளைங்க நிம்மதியை கெடுக்கனும்னு முடிவு பண்ணினா நான் சும்மா இருக்க மாட்டேன். எனக்கு உங்களை விட என் அப்பாவை விட வாழவேண்டிய பிள்ளைங்க தான் முக்கியம். வாழ்ந்து முடிச்ச உங்களை பத்தி நான் கவலைப்பட மாட்டேன். புரியுதா?…” என்ற மிரட்டலில் முகத்தை மூடிக்கொண்டு மாடிக்கு சென்றுவிட்டார் பூரணி.

ஒரு பெருமூச்சுடன் சோபாவில் அமர்ந்தவன் அனைவரையும் பார்த்தான். பத்மினி அவனுக்கு குடிக்க தண்ணீர் கொண்டுவந்து தர வாங்கி பருகியவன்,

“நான் கிளம்பறேன், ஹாஸ்பிட்டல்ல இருந்து கிளம்பும் போது போன் பன்றேன். வீட்டுக்கு வாங்க…” என்றவன் ரத்தினசாமியை பார்த்து,

“அப்பா சொன்னது ஞாபகம் இருக்கட்டும்…” என்று சொல்லி கிளம்பிவிட்டான்.

——————————————————

ஒருவாரம் கடந்துவிட்டது அஷ்மி பிரசாத் குறிஞ்சியூர் வந்து. அன்று விசேஷம் முடிந்து இரவு தான் பிரசாத் வீட்டிற்கு வந்தான். தனம் ஏற்கனவே உறங்கியிருக்க அஷ்மி மட்டும் விழித்திருந்தாள் இவன் வருகைக்காக.

உள்ளே நுழைந்தவன் இவளை பார்த்ததும் மலர்ச்சியுடன் சிரித்தவன்,

“வெள்ளெலி இன்னும் தூங்கலையா? தூங்கியிருப்பன்னு நினைச்சேன். வெய்ட், போய் குளிச்சுட்டு வரேன். வேலை முடிச்சதுல செம டயர்ட்…” என சொல்லிவிட்டு டவலை எடுத்துக்கொண்டு மாற்றுடையுடன் பாத்ரூமிற்குள் நுழைந்தான்.

மீண்டும் வெளியே வந்திருக்க கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தவள் எழுந்து அவனின் முன்னே கையை கட்டிக்கொண்டு வந்து நின்றாள்.

“என்னடி பார்வை எல்லாம் பலமா இருக்கு?…” என அவளின் கையை பிடிக்க போக இரண்டு அடி பின்னால் வைத்தவள்,

“எனக்கு தெரிஞ்சுக்கனும்…” என்றாள்.

“என்ன? என்ன தெரிஞ்சுக்கனும்?…” தலையை துவட்டிக்கொண்டே கேட்க,

“அருவியூர் பத்தி. அங்க நடந்தததை பத்தி. நந்தினியை என்ன பண்ணுனீங்கன்னு தெரியனும். பேசலாமா?…”

அலுங்காமல் குலுங்காமல் அசராமல் அவனின் தலையில் இடியை இறக்கினாள் அஷ்மிதா.

பிரசாத்?????

Advertisement