Advertisement

மணியோசை  -28

                பேசிக்கொண்டிருக்கும் பொழுதே கார்த்திக்கின் விழிகளுள் உறக்கம் வந்து அமர்ந்துகொள்ள கண்ணை சோம்பலாய் மூடி மூடி திறக்க அதை பார்த்த நாட்டரசன் கண்மணியிடம் காட்ட,

“மாப்பிள போயி ஒறங்குக…” என சொல்ல கண்மணியை பார்த்தான் கார்த்திக். அவளும் செல்லுமாறு தலையசைக்கவும்,

“இல்லை, பரவாயில்லை. நீங்க சொல்லுங்க…” என கேட்க அதன் பின்னால் பெண் வீட்டினர் பற்றி பேசியவர்கள் பெண்வீட்டினர்  பக்கத்தில் உள்ள இன்னொரு கிராமம் என்றும் சொல்ல மறுநாளே போய் பார்த்துவிட்டு வரலாம் என்னும் முடிவுக்கு வர அதன் பின்னர் அனைவரும்  உறங்க சென்றனர்.

அருள் வழக்கம் போல பாட்டியின் அருகில் படுத்துக்கொள்ள கண்மணியும் கார்த்திக்கும் தங்களறைக்கு வந்தனர்.

கார்த்திக் ஒன்றும் பேசாமல் உடை மாற்றி படுத்துவிட கண்மணி அவனிடம் பேச முயன்றாள்.

“பேசாம தூங்குடி. எனக்கு எதுவும் பேச வேண்டாம்…” என்ற பேச்சுடன் அவன் கண்மூடிவிட்டான்.

அந்த த்வனியில் பேசினால் கண்மணி மறுவார்த்தை பேச மாட்டாள். அவளுக்கு தெரியும் கோபத்தில் இருந்தால் மட்டுமே அப்படி ஒரு பேச்சு வரும் என்று. அமைதியாக அவளும் படுத்துவிட திரும்பி படுத்தவன் அவள் மேல் கை போட்டு தூங்கியும் போனான்.

இதைவிட என்ன வேண்டும் கண்மணிக்கு? கோபமாய் இருக்கிறான் என்கிற சஞ்சலம் கரைந்து முகத்தில் புன்னகை அரும்ப தானும் தூங்கிப்போனாள்.

மறுநாள் பரபரப்பாய் அனைவரும் கிளம்பினார்கள் மதியத்திற்கு பின்னால். வீட்டினர் தானே காரை மட்டும் எடுத்துக்கொள்வோம் என கார்த்திக் நினைத்து வாசலுக்கு வந்தால் அங்கே பெரிய ஆம்னி வேன் ஒன்று நின்றிருந்தது. அதில் சில சொந்தபந்த ஜனங்களும்.

“ஹேய் கிங்கினிமங்கினி என்னடி இது வேன் நிக்குது?…”  என வாயை பிளக்க,

“பொண்ணு பாக்க போறச்ச உறவுசனோ வேணிமில்ல தம்பி. அப்பத்தேன் போற எடத்துல நமக்கி மதிப்பு. அதேன் சுறுக்கா நறுக்கின்னி நாலே பேத்துக்கு சொல்லிட்டம். இல்லினா பஞ்சாயம் வெச்சிப்பிடுவானுக…”

மாரிமுத்து கையை ஆட்டியபடி கதை சொல்லி செல்ல கார்த்திக்கிற்கு சிரிப்பு தாளவில்லை வேனில் அமர்ந்திருந்தவர்களை பார்த்து.

“கிங்கினிமங்கினி நல்ல நறுக்குதான் போ…” என சொல்லி சிரிக்க அவன் சிரித்த காரணம் வேனில் நாலு பேர் என சொல்லப்பட்டவர்கள் முப்பது பேர்களாய் நெருக்கி பிடித்து அமைந்திருந்தனர்.

“ரொம்பத்தேன். ஒம்ம வீட்ட மாதிரி நாலுபேர்னா ரெண்டு பேரா போவீகளே அப்பிடின்னா நெனச்சீக. மனுசக எம்புட்டு இருக்காகளோ அம்புட்டும் சந்தோசம் இருக்கி…”

“இருக்கி தான்…” என மீண்டும் கேலி பேசி சிரிக்க அதற்குள் பேச்சி வந்துவிட்டார்.

“என்னடி மசமசன்னி நிக்கித? போயி காருல ஏறு. எம்பிட்டு நேரந்தேன் அவுக நிப்பாக?…” என கார்த்திக்கை கட்டி கேட்க,

“இந்தாம்மா. போறேன்…” என்றவள் கார்த்திக்கை காரை எடுக்கசொல்லி ஏறிக்கொண்டாள். அவளுடன் மாரிமுத்து கிருஷ்ணன் இருவரும் சேர்ந்துகொள்ள,

“உன் பெரியம்மா, இல்லைன்னா அம்மாவை வர சொல்லு கண்மணி. இடம் இருக்குல…” கார்த்திக் சொல்ல,

“அவுக வரமாட்டாக, நீரு கெளம்பும்…” என அவளும் சொல்லவும் வேனை பின்தொடர்ந்து கார்த்திக் காரை ஓட்டினான். பத்து நிமிடம் கடந்திருக்கும்,

“கண்மணி, வேன் ட்ரைவர் எவ்வளோ ஸ்பீடா போறான் பாரேன். என்ன ட்ரைவரை புடிச்சீங்களோ?. வேன் நிறைய எத்தனை குடும்பம் போகுது. பொறுப்பு வேண்டாம்…” என்று முன்னால் சென்றுகொண்டிருந்த வேனை பார்த்து நக்கலாக சொல்ல கண்மணி அவனை முறைத்து பேசும் முன்னால்,

“நா நெனச்சே மாப்பிள தம்பி, அவே ஒரு காட்டாந்தேன். இருக போன போட்டு மெதுவா போவ சொல்லுதேன்…” என்று வெள்ளந்தியாக மாரிமுத்து சொல்லவும் அடக்கமாட்டாமல் கார்த்திக் சிரித்துவிட நாட்டரசனுக்கு அழைத்துவிட்டார் மாரிமுத்து.

“என்னாலே…” என்று நாட்டரசன் கேட்பது கார்த்திக்கின் காதுக்கே கேட்க இன்னும் அவன் வெடித்து சிரிக்க,

“அய்ய மாமா போன வையும். மொத போன வையும்…” என்று கண்மணி கத்த,

“அட இருத்தா, வெவரத்த சொன்னாத்தான சூதானமா போவியான் அவே…” என சொல்ல கிருஷ்ணன் மொபைலை வாங்கி,

“ஒண்ணுமில்ல நீக வெய்யுங்க…” என சொல்ல,

“ஏலே என்ன வெளாடுதியலா வெச்சிக்கிறே…” என உறுமிவிட்டு வைத்துவிட பரிதாபமாய் பார்த்தனர் மாரிமுத்துவும், கிருஷ்ணனும்.

“அவுக கிண்டலுக்கி பேசுதாக, நீகளும் தாளந்தட்டுதீக?…” என்று கண்மணி திட்ட கார்த்திக்கின் சிரிப்பு இன்னும் அதிகமாகியது.

“எனக்கா பல்ப் குடுத்த. இன்னைக்கு பாருடி…” என மெதுவாய் அவளிடம் சொல்ல,

“போற எடத்துல எடக்கிமடக்கா என்னத்தியாச்சும் செஞ்சிப்பிடாதீக…” கெஞ்சலாய் சொல்லாமல் மிரட்டலாய் கண்மணி சொல்ல,

“அடங்கமாட்டடி நீ. பாரு, என்னவோ கல்யாண ஊர்வலம் மாதிரி வண்டியை உருட்டிட்டு போறதை. இவங்களோட நானும் எறும்பா ஊறனுமா?…”

“ஊறினா என்னா? டயரா தேஞ்சிடும்?…” என அவளும் பதிலுக்கு சொல்ல,

“யத்தா மணி மாப்பிளட்ட இப்பிடித்தேன் அங்கனவும் துடுக்கா நிப்பியோ? செரியில்லத்தா. சண்ட புடிக்காத…” மாரிமுத்து அவர்கள் உண்மையில் சண்டை போடுவதாக நினைத்து பதற கிருஷ்ணன் கண்மணியை முறைத்தான்.

“கூறு இருக்கா மணி ஒனக்கி? கம்முன்னு வா…” என்றான் கிருஷ்ணன். அவனுக்கு அவன் கவலை. பெண் பார்க்க செல்லுமிடத்தில் தங்கை கணவர் கோவித்துக்கொண்டு வராமல் சென்றுவிட்டால் திருமணமே நின்றுவிடக்கூடிய அபாயம் இருப்பதால் பதட்டம் கொண்டான்.

இவர்கள் கண்மணிக்கு அறிவுரை சொல்லும் நேரம் கார்த்திக் நொடியில் வேகமெடுத்து வேனை முந்திக்கொண்டு அவனின் காரை செலுத்தினான்.

“ஐயோ கோவிச்சுக்காதீக மாப்பிள…” என மாரிமுத்து சொல்ல வேனில் வந்துகொண்டிருந்த நாட்டரசன் வேன் ட்ரைவரிடம்,

“டேய் தீவட்டி எம்மாப்பிள காரு முன்னாடி போகுதுவே. அவருக்கி பாதவளவு தெரியாதி. வேகம்போடா….” என அதட்டி கிருஷ்ணனுக்கு அழைக்க கண்மணிக்கு கண்ணீரே வந்துவிட்டது.

“போதும்யா…” என்று அழுகை வந்துவிடும் குரலில் சொல்லவும் ஓரமாய் காரை நிறுத்தியவன்,

“ஹே கண்மணி விளையாட்டுக்குத்தான் பண்ணினேன். இதுக்கு போய் கண்ணு கலங்கிட்ட?…” என அவளை சமாதானம் செய்ய,

“நல்ல நேரம்பாத்தீரு வெளையாட. நல்லகாரியத்துக்கி போறச்சே எவனாச்சு கூறுகெட்ட தனமா வெளாடுவானா?…” என்று கேட்டுவிட்டு நாக்கை கடித்துகொண்டாள்.

கோபத்தில் மாமனையும், அண்ணனையும் மறந்துவிட்டாள். கார்த்திக் மட்டுமே கண்ணுக்கு தெரிய பரபரப்பில் வார்த்தையை விட மாரிமுத்துவும், கிருஷ்ணனும் அதிர்ந்துபோயினர்.

“இல்ல மாமா…” என ஆரம்பிக்க,

“வாயமூடுத்தா…” என கோபம் கனன்ற விழிகளுடன் அவர் முகம் திருப்ப விளையாட்டு விபரீதமாகிவிட்டதை எண்ணி கார்த்திக்கிற்கு சங்கடமாக போனது.

“சித்தப்பா. அவ வாய் தவறி சொல்லிட்டா. நீங்க ஏன்?…”

“மன்னிச்சிக்கிங்க மாப்பிள…” கிருஷ்ணன் சொல்ல,

“ஏய் என்ன இது? அப்படி கேட்கலாமா கிருஷ்ணன்? இதை ஏன் பெரியவிஷயமா பார்க்கறீங்க?…”

“இவள இப்பிடியா வளத்தம்?. அக்காக்கி தெரிஞ்சிச்சி வகிந்திரும்…” மாரிமுத்து  சொல்ல அதற்குள் நாட்டரசன் இவர்களை தொடர்ந்து வந்து வேனிலிருந்து இறங்கி வந்துவிட்டார்.

“என்னாச்சி, என்னாச்சி…” என பதட்டத்துடன் கார் கண்ணாடியை தட்ட,

“அவர்க்கிட்டயோ வீட்ல வேற யார்க்கிட்டயும் இதை சொல்லக்கூடாது. புரியுதா? சொன்னா நிஜமாவே எனக்கு கோபம் வந்திரும்…” என்று சொல்லிவிட்டு கதவை திறந்து இறங்கி வந்த கார்த்திக்,

“ஒண்ணுமில்லை மாமா, சும்மா தான். பையனுக்கு கொஞ்சம் பாஸ்டா போனா பிடிக்கும். அதான் ஸ்பீடா வந்தேன்…” என்று சமாளிக்க காருக்குள் இருந்து கிருஷ்ணனும் மாரிமுத்துவும் ஆமாம் என்றனர்.

“கொலநடுங்கிப்பிட்டன்…” என்று நெஞ்சை நீவிக்கொண்டவர்,

“மெதுவா போவலாமிங்க மாப்பிள. தெரியாத பாத…” கார்த்திக்கிடம் சொல்ல,

“இல்லை மாமா, தெரிஞ்ச பாதை தான். இங்க வந்திருக்கேன். அதுவும் மாரிமுத்து சித்தப்பா வழி காட்ட இருக்காங்க. நீங்க போய் வேன்ல ஏறுங்க. நேரமாகுதுல. நல்ல நேரத்துல போகனும்…” என்று சிரிக்க நிம்மதியோடு நாட்டரசன் வேனை நோக்கி சென்றார்.

மீண்டும் காரை எடுத்தவன் மற்றவர்கள் அமைதியாக இருக்க ஏன்தான் இப்படி செய்தோமோ? என்றானது அவனுக்கு. மாரிமுத்துவும் கிருஷ்ணனும் கண்மணியை முறைப்பாய் பார்த்துக்கொண்டிருக்க,

“இங்க பாருங்க சித்தப்பா, கிருஷ்ணன். சின்ன விஷயத்துக்கெல்லாம் கோச்சுக்கனும்னு இல்லை. கண்மணி இப்படி இருக்கறது தான் எனக்கு பிடிக்கும். அவ பேச்சுக்கும் வளர்ப்புக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு புரியலை. பொண்ணுங்க பேசகூடவா கூடாது?…”

“பொண்ணுங்களுக்கு பேச்சுரிமையை முதல்ல வீட்டுகள்ல குடுங்க. எதை பேசனுமோ அதை பேசித்தான் ஆகனும். இதுல ஆண் என்ன பெண் என்ன? எனக்கு சரிக்கு சமம் என் கண்மணி. எந்த விதத்துல அவளை நீங்க பேசகூடாதுன்னு சொல்றீங்க?…”

“இல்லிங்க மாப்பிள, நீக வண்டி ஓட்டறப்ப மண்டகிறுக்கி புடிக்க வெக்கிது. அதேன்…” கிருஷ்ணன் சொல்ல,

“தப்பு என் மேல தான் கிருஷ்ணன். நான் தான் அவளை டென்ஷன் பண்ணினேன். அவ சொன்னதுல ஒரு தப்பும் இல்லை. விளையாட்டு நேரம் காலம் பார்த்து விளையாடனும். சூழ்நிலை பார்த்து நடந்துக்கனும். அதத்தான் அவளும் சொன்னா. பாருங்க நான் சும்மா விளையாட்டுக்கு பண்ணினதுக்கு உங்கப்பா என்னவோன்னு பதறி வராங்க. இப்படி நடக்கும்னு யோசிச்சுதான் அவ சொன்னா…”

“நாமளா அவங்களை மட்டம் தட்டக்கூடாது. நான் தப்பு பண்ணினா அவ கேட்கனும். அவ தப்பு பண்ணினா, இல்லை அவ தப்பு பண்ணமாட்டா. அப்படி ஒரு சூழ்நிலை வந்தா நான் கேட்பேன். புரியுதா? இதை பெருசு பண்ணாம விடுங்க. அவகிட்ட பேசுங்க. அதை விட்டுட்டு கண்மணி முகம் வாடுற மாதிரி முகம் திருப்பாதீங்க….”

கார்த்திக் மனைவியை எந்த விதத்திலும் விட்டுகொடுக்காமல் பேச அதில் மனம் மகிழ்ந்துபோயினர் கிருஷ்ணனும் மாரிமுத்துவும்.

“சியர் அப் கிங்கினிமங்கினி…” என்று அவளின் தலையை பிடித்து ஆட்ட சட்டென கண்மணி பின்னால் அமர்ந்திருந்த மாரிமுத்து அவன் எதிர்பார்க்காத நொடியில் கார்த்திக்கின் கையை பிடித்து இழுத்து,

“நாக குடுத்திவெச்சிருக்கனு மாப்பிள. என்கவல எல்லா காணா போச்சி…” என்று கண் கலங்கி சொல்ல அவரின் செய்கையில் கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழவிருந்த ஆபத்திலிருந்து சுதாரித்துகொண்டான் கார்த்திக்.

ஆம் நொடிக்கும் குறைவாக இப்படி நிகழ்ந்துவிட்டதில் பாதையின் மேல் கவனமாயிருந்த கார்த்திக் அவனின் கட்டுப்பாட்டிலிருந்து வெளிவந்து உள் சென்றான்.

“ஆத்தீ இந்த போச்சியால எல்லாமே போயிருக்கும். அப்புறம் போச்சி போச்சிதான்…” என அரண்டவனுக்கு மாரிமுத்துவின் செய்கையில் பதட்டம் போய் சிரிப்பு வந்தது.

“சித்தப்பா எதுவானாலும் வாய்ல சொல்லுங்க. கைய பிடிச்சு இழுத்து காரை தோப்புக்குள்ள இறக்கிடாதீங்க….” என சிரிப்புடன் சொல்ல,

“ஆத்தா முத்துக்கருப்பி கிறுக்குத்தன பண்ணிப்பிட்டேனா மாப்பிள?…” என பதறி கேட்க கார்த்திக்கின் புன்னகை இன்னும் விரிந்தது. அவர்களின் அறியாமையில் வாய்விட்டு அட்டகாசமாய் சிரித்தவனை பார்த்து கண்மணியின் முகத்தில் பொலிவு மீண்டது.

சிலபல பேச்சுக்களுடன் விரைவில் பெண் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். தங்களுடன் வந்த கூட்டத்திற்கே அத்தனை கேலி பேசினான் கார்த்திக். ஆனால் பெண்ணின் வீட்டில் அதையும் விட கூட்டத்தினர் அதிகமாய் இருந்தனர். அவர்கள் வரும் பொழுது கண்மணிக்கும், கார்த்திக்கிற்கும் தடபுடலான வரவேற்பு வேறு.

“ஏபுள்ள, அவுகதேன் ஓ நாத்தியும், அவ புருசனும். அவுக சம்மதிச்சாத்தேன் இந்த கலியாணமுனு சொல்லுதாக. பாத்துக்கத்த…” என கார்த்திக்கின் காதுபட ஒரு பெண்மணி இன்னொரு அம்மாவின் காதில் சொல்ல அந்த அம்மாவானவர் உறவு பெண்கள் மூலம் அவர்களை கவனிப்பில் திக்குமுக்காட செய்தனர்.

“ஏன் கிருஷ்ணா வரதுக்கு ரூமரை கிளப்பி விட்ருக்காங்களே? யார் அந்த நல்ல மனம் கொண்டவர்?…” என கிருஷ்ணனின் காதில் கேட்க,

“இந்த மாதிரி வேலையெல்லா மாரிமாமாதேன் செய்யிவாக…” என சொல்ல கார்த்திக் மாரிமுத்துவை பார்க்க,

“நம்ம வவுசை சொன்னாத்தேன் மாப்பிள வார பொண்ணுக்கி நம்ம வீட்டு பொண்ணுக்கி இருக்கற மருவாதி தெரியு. புரிஞ்சி நடக்கனு…” என்று சொல்ல அந்த சூழலும் அவர்களின் பார்வையும் புதிதாய் தெரிந்தது.  அது பிடித்தும் இருந்தது.

“ஏய் கிங்கினிமங்கினி பொண்ணு வீடு உங்க வீட்டு கவனிப்புக்கு டஃப் குடுப்பாங்க போல? நல்லா கவனிக்கறாங்க…” என கிசுகிசுக்க,

“நாக என்ன கொறச்சா கவனிச்சம். வாரும் வீட்டுக்கி…” என கண்மணியின் குரலில் போர் பறையடிக்க அவளின் விழிகள் சவாலாய் பார்த்தது கணவனை.

“என்ன லுக்குடி இது கிங்கினிமங்கினி?…”

“சொல்லும், என்ன கொற கண்டீரு கவனிப்பில?…” அவள் விடுவதை போல தெரியவில்லை.

“சொல்லிடவா?…”

“சொல்லும்…”

“நீங்க பயங்கரமா கவனிப்பீங்க. இவங்க கவனிப்பு பயங்கரமா இருக்கு. சொல்லிட்டேன்…” என்றவன் மொபைளுடன் எழுந்து வேண்டுமென்றே வெளியில் சென்று நிற்க அவனின் பின்னோடே வந்தார் மாரிமுத்து.

“மாப்பிள, பொண்ண கூட்டியாற போறாக. உள்ள வாக. இல்லினா நாக்கிமேல பல்லபோட்டி பேசுவாக…” என்று வர,

“ஐயோ சித்தப்பா நான் சும்மா தான் வந்து நின்னேன். சரி வாங்க….” என அவருடன் வந்து அமர்ந்தான்.

பெண்ணை அழைக்க கண்மணியும் உள்ளே சென்றுவிட நாட்டரசன் அருகில் அமர்ந்தான் கார்த்தி.

நல்ல உயரத்துடன் மாநிறமுமாக, லட்சணமாக முகவடிவத்துடன் வந்து நின்ற பெண்ணை நிமிர்ந்து பார்க்கவே அத்தனை கூச்சப்பட்டான் கிருஷ்ணன்.

“நிமிர்ந்து பாருங்க கிருஷ்ணா. இப்ப பார்க்காம எப்ப பார்ப்பீங்க?…” என கார்த்திக் சொல்ல,

“இருக்கட்டும்ங்க, ஒங்களுக்கி எல்லாருக்கு புடிச்சா போது…” என்றவன் ஓரப்பார்வையால் லேசாக மட்டும் பார்த்துவிட்டு தலை குனிந்துகொண்டான்.

“யத்தா முத்துக்கருப்பி அல்லாருக்கு உழுந்து கும்பிடுத்தா…” என ஒருவர் சொல்ல,

“முத்துக்கருப்பியா?…” என கண்மணியை பார்த்தான் கார்த்திக். அவனின் எண்ணம் புரிந்தவளாக கண்களை உருட்டி வாயை மூடுமாறு சைகை காண்பிக்க நினைத்துப்பார்த்தான் அருளுக்கு பேர் வைக்க பேசிய வாக்குவாதத்தை.

இப்போது நினைக்க நினைக்க சிரிப்பு தான் வந்தது. கவனத்தை இங்கே திசைதிருப்ப,

“பொண்ண பிடிச்சிக்கிட்டா பூ பரிசத்த போட்டிருத்தா பேச்சி. பொண்ணு கெடச்சாலு புதே கெடக்காதி. இன்னிக்கி புதே. பொண்ணு கெடச்சாச்சி. பொறவு என்ன?…” என பெண்ணின் தாய்மாமன் மனைவி கேட்க நாட்டரசன் கார்த்திக்கிடம் கேட்டார்.

“நீக என்ன சொல்லுதீய மாப்பிள?. ஒங்களுக்கி சம்மதங்களா?…” என கேட்க,

“மாமா, கல்யாணம் கிருஷ்ணனுக்கு. அவனுக்கு சம்மதமான்னு கேட்கலையே…” இதை அவரின் காதுக்குள் மற்றவர்கள் கேட்காதவாறு கார்த்திக் சொல்ல அவனுக்கு விருப்பமில்லையோ என்று பெண்ணின் வீட்டினர் பயந்து அவனின் பின்னாலும் பக்கத்திலும் வந்து நின்று கையை பிசைந்தபடி பார்த்தனர்.

“அவே என்ன சொல்லுவா? சின்னக்கழுத? வெவர பத்தாதி பாருக…” என சொல்ல,

“விவரமில்லாதவனுக்கு எதுக்குங்க கல்யாணம்” என வாய்வரை வந்துவிட்ட வார்ட்ட்தையை விழுங்கிவிட்டு சம்மதம் என்று சொல்லி திரும்பினால் அவனின் முகத்தையே உற்று பார்த்தபடி சிலர்.

“எதுக்கு இப்படி சுத்தி வளைச்சிருக்கானுங்க?” என குழப்பமாய் பார்க்க நாட்டரசன் பேச்சியிடம் பரிசம் போட்டுவிடலாம் என்று சொல்லவும் ஸ்விட்ச் போட்டதை போல இவனை நோக்கிகொண்டிருந்தவர்கள் பட்டென சிரித்தனர்.

“நல்லாத்தான்யா இருக்கீங்க. ஒரு நிமிஷம் பக்குன்னு ஆகிடுச்சு. ரெஸ்ட் எடுக்க விடமாட்டிக்கானுங்களே?” என புலம்பியபடி நடப்பதை பார்க்க ஆரம்பித்தான்.

தன் திருமணத்தின் போது தன் குடும்பத்தினருக்கும், கண்மணியின் குடும்பத்தினருக்கும் இடையில் உடையில் இருந்து பேச்சுவழக்கு வரை அத்தனை வித்யாசங்கள். ஆனால் இங்கே ஒரே மாதிரி மக்கள். இது அனைத்துமே அவனுக்கு சுவாரஸியமாக இருந்தது.

பேச்சுவார்த்தை முடிந்து பெண்ணிற்கு பூ வைத்து நிச்சயம் செய்துவிட்டு திருமண உறவை உறுதிபண்ணி விட்டு கைநனைத்துவிட்டு மனநிறைவுடன் அங்கிருந்து கிளம்பினார்கள் நாட்டரசன் குடும்பத்தினர்.

வீட்டிற்கு வந்ததும் கிருஷ்ணனுக்கு திருஷ்டி கழித்த சங்கரி கார்த்திக்கையும் கண்மணியையும் சேர்த்து குழந்தையுடன் நிறுத்தி திருஷ்டி கழித்தார்.

“அவளுக கண்ணுல கொள்ளிக்கட்டைய வெக்க. என்னம்மா பாக்குதாளுக…” என திட்டிக்கொண்டே சங்கரி எடுத்த திருஷ்டியை அடுப்பில் போட்டுவிட்டு வந்து அமர கண்மணி அனைவருக்கும் பால் காய்ச்சி கொண்டுவந்தாள்.

இன்னும் இரண்டு மாதத்தில் திருமணம், முதல்நாள் நிச்சயதார்த்தம் என முடிவுடன் இருக்க அதற்கு என்னென்ன வேலைகள் செய்யவேண்டும் என்று அப்பொழுதே பொதுவாய் பேசிக்கொண்டனர்.

கார்த்திக் அவர்களிடம் சொல்லிக்கொண்டு மாடிக்கு சென்றுவிட சிறிது நேரம் கழித்து தண்ணீர் குவளையுடன் உள்ளே வந்தாள் கண்மணி. இன்னொரு கையில் அருள்.

“கிங்கினிமங்கினிஎன்ன இவனை தூக்கிட்டு வந்துட்ட?…” என கேட்டுகொண்டே மகனை வாங்க,

“உடமாட்டேன்னு சேலைய புடிச்சிக்கிட்டு அடம். அதேன் அம்மா அனுப்பிச்சி…” என்று சொல்லி மெத்துகதவை பூட்டிவிட்டு வந்து அமர கார்த்திக்கின் நெஞ்சில் படுத்தபடி தூக்கத்திற்கு சென்றுகொண்டிருந்தான் குழந்தை.

“கலியாணத்திக்கி ஒரு பத்தி பதினஞ்சி நா முன்னாடியே வந்திப்பிடனும். இப்பவே சொல்லிட்டன்…” கண்மணி ஆரம்பிக்க,

“அதான் இன்னும் டூ மந்த்ஸ் இருக்குல…” கார்த்திக் சொல்ல,

“இந்த பகுமானந்தேன் வேணாங்கறேன்…” சண்டைக்கு தயாரானாள்.

“சரி அதை விடு. பொண்ணு என்ன படிச்சிருக்கு? நீ பேசினயா? உன்கூட எப்படி பழகறாங்க?…” என கேட்க,

“ஒம்பதாப்பு பெயிலு…” என மிக சாதாரணமாக சொல்ல கார்த்திக் தான் கேட்டது உண்மையா என்பதை போல பார்வையில் அதிர்ச்சியை வெளிப்படுத்த கண்மணியின் முகம் மாறியது.

“என்ன ஒம்பதாப்பு பெயிலுன்னா ஒங்க மூஞ்சி போற போக்கே செரியில்ல?…” குரலில் ஏதோ ஒரு மாற்றம் கண்மணியிடம். அதை கவனிக்கும் நிலையில் கார்த்திக் இல்லை.

“உன் அண்ணன் எப்படி சம்மதிச்சான்? அட்லீஸ்ட் ப்ளஸ்டூ முடிச்சிருக்கற பொண்ணா பார்க்கலாமே?…” என கேட்க,

“என்னதி?…” என கேட்டவள் அவனின் மார்பில் துயில்கொண்டிருந்த அருளை தூக்கி கட்டிலில் படுக்கவைத்தவள் அவனுக்கு தள்ளி அமர்ந்து,

“அப்ப நா படிக்காதது ஓமக்கி இன்னும் உறுத்திட்டிருக்கா?…” என நெற்றிபொட்டில் அறிவதை போல கேட்க பதரிவிட்டான் கார்த்திக்.

“ஹேய் கிங்கினிமங்கினி நான் என்ன பேசறேன், நீ என்ன சொல்ற?…” என அவளின் கை பிடிக்க வர,

“எல்லா நல்லாத்தேன் பேசறேன்…” சண்டைக்கு நிற்பவளை போல சிலிர்த்துக்கொண்டு அவள் நிற்க தலையில் கைவைத்துக்கொண்டான் கார்த்திக்.

“அப்ப ஒமக்கும் நெனப்பிருக்கி…”

“ஐயோ நான் உன்னை விரும்பி கட்டிக்கிட்டேண்டி. அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு உன்னை பிடிச்சது. வேற யாரையும் பிடிக்காதுன்னு தோனுச்சு. என்னோட வொய்பா நீ மட்டும் தான் இருக்க முடியும்னு நினைச்சேன். மேரேஜ் பண்ணிக்கிட்டேன். ஆனா நீ பேசறது…”

“ஒமக்கு மட்டும்னா புடித்தோ. மத்தவக என்னவா?…”

“நான் கேட்டதே வேறடி. நீ தப்பா புரிஞ்சிக்கிட்ட. நான் அப்படியா?…” கார்த்திக்கிற்கு என்னவோ போல் ஆனது. அவனின் முகம் வாட கண்மணிக்கு பொறுக்கவில்லை.

“அட போயா, நான் கூறுகெட்டதனமா. நீரு அது படிக்கலன்னி சொன்னதி எனக்கி என்னிய நீக சொல்லுத போல வந்துச்சி. அதேன்…” என்றவள்,

“நீரு சொல்லுத மாதிரி படிப்பு அவசியந்தே. ஆனா அது ஒரு அடையாளதேன். நீறு டாக்டருக்கி படிச்சீரு. ஒம்ம பேருக்கி பின்னால பட்டத்த போட்டீரு. ஆனா பேரு அப்பிடியே தான இருக்கி. படிச்சோமின்னு பட்டத்தியே பேராக்கிட்டீரா? இல்லில. அதா வேணு. என்னிய படிக்கலன்னி ஓமக்கி பிடிக்காட்டியா போச்சி. கிறுக்கா சுத்தத்தேன் செய்யுதீரு. ஏன்?…”

“நீ பேசி பேசியே என்னை கிறுக்கா தான் சுத்த வைக்கிறடி கிங்கினிமங்கினி…” சிரிப்புடன் அவள் கன்னம் கிள்ள,

“முத்துக்கருப்பி படிக்காட்டிலு நல்ல கொணோ. ஒருத்தக பாக்குத பார்வ, மத்தவகளுக்கு குடுக்கற மரியாத, குடும்பத்தை அனுசரிச்சு போகற பாங்கு இத எல்லாத்தையு படிப்பு மட்டு குடுத்திருமா என்ன?…”

“நான் இனி பேசுவேனா என்ன?…” கார்த்திக் சரணடைவதை போல கையை தூக்க,

“அட கேலி பேசாதீறு. படிப்பு வேணாமினும சொல்லல. படிப்பு மட்டு  எல்லாமினும் சொல்லல. சொல்லமாட்டே…”

“இனி நானும் வாய திறக்கமாட்டேன்…” என முழுவதுமாய் சரணடைய சின்ன சின்ன முரண்பாடுகளும் அவ்வப்போதே தீர்க்கப்பட கணவனும் மனைவியும் சுமூகமாய் குடும்பத்தை வழிநடத்தினார்கள்.

மறுநாள் கண்மணி வீட்டில் இருந்துவிட்டு அன்றைய இரவு கார்த்திக்கின் வீட்டிற்கு சென்றுவிட்டு திருப்பூர் திரும்பிவிட்டனர் கார்த்திக், கண்மணி தம்பதியினர்.

இரண்டு மாதத்தில் கிருஷ்ணின் திருமணமும் சிலபல கலாட்டாக்களுடன் நன்றாக நடந்துமுடிய கண்மணியின் ஆசைப்படி அவள் பதினைந்து நாள் முன்னமே வந்துவிட கார்த்திக் திருமணத்திற்கு மூன்று நாள் முன்பு வந்துவிட்டு ஒரு வாரம் இருந்து செல்லும் போது கையோடு அவனின் கிங்கினிமங்கினியையும் அழைத்துசென்றுவிட்டான்.

விட்டால் இவள் வரமாட்டாள் என்று நினைத்தானோ என்னவோ இன்னும் ஒரு நான்கு நாள் கழித்து வருகிறேன் என்றவளை வம்படியாய் பேச்சி சங்கரி கூட்டணியின் உதவியோடு தன்னோடு கிளப்பிவந்துவிட்டான்.

திருப்பூர் வந்து மூன்றுமாதங்கள் சென்றுவிட்டன. இதற்குள் தவம் சந்திராவை தன்னுடன் அழைத்துகொண்டான். மணிகண்டன் வேலையை விட்டுவிட்டு மனைவியிடம் வந்துவிட்டார்.

மகளும் இல்லை என்றால் மனைவி தனிமையாகி விடுவார் என்கிற தவிப்பில் மகாதேவிக்காக வந்துவிட்டார்.

அதையும் புரியாமல் ஏன் வேலையை விட்டீர்கள்? என மகாதேவி கேட்க என் இஷ்டம், நான் பார்த்த வேலை, இப்போது எனக்கு முடியவில்லை என்ற வார்த்தையில் மகாதேவி வாயடைத்துபோனார்.

அன்று நல்ல மழையிரவு. கார்த்திக் அவசர கேஸ் ஒன்றிற்காக ஹாஸ்பிட்டல் வந்துவிட்டு நடுஜாமத்தில் வீடு திரும்பினான். வீட்டிற்கு நுழையும் பொழுதே கண்மணி திட்ட ஆரம்பித்துவிட்டாள்.

“காருலதேன் கொட கெடக்கில? அத்த விரிச்சிட்டி வாரதுக்கென்ன? ஒம்ம கெட்டிக்கிட்டி ஒன்னோன்னொத்துக்கி சொல்லிட்டே இருக்கனு…” என திட்டிக்கொண்டே அவனை அமரவைத்து தலையை துவட்டுகிறேன் பேர்வழி என உலுக்கிகொண்டிருந்தாள்.

“இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே ஆட்டுடி கிங்கினிமங்கினி. என் தலை உன் கையோட வந்திடும்…” என கிண்டல் பேச,

“வாயப்பாரு. வெளங்காத வார்த்ததேன் முட்டிக்கிட்டு வரு. செத்த கம்மின்னு இரும்…” என்று சொல்லியவள் வேகமாய் கேஸ்ஸ்டவ்வை பற்றவைத்து மூன்று கரித்துண்டுகளை பற்றவைத்தாள்.

என்ன செய்கிறாள் என்று வந்து எட்டிப்பார்த்தவன் தலையில் அடித்துகொண்டான் அவள் என்ன செய்யபோகிறாள் என்பதை அறிந்தவனாக.

“நான் என்ன குழந்தையாடி? சாம்பிராணி போட கங்கு ரெடி பன்ற? ஓவரா பன்ற நீ கிங்கினிமங்கினி…” என்று திட்ட,

“ஓமக்கென்ன? பொழுது போச்சின்னி நோவுல இழுத்து போத்திக்கிவீரு. கெடந்து கருமாயப்படறதி நாந்தேன். கம்மின்னு இரும்…” என்றவள் சாம்பிராணி கரண்டியை தூபம் போட்டு எடுத்துவந்து கார்த்திக்கிற்கு காட்டினாள்.

“ஊரு முன்னமாதிரியா கெடக்கி. எங்கிட்டு பாத்தாலு தடுவோ பிடிச்சி கனங்கனன்னில தொத்திக்கிதி…” என அவன் தும்ம தும்ம தூபம் போட்டாள்.

“பாரும் எம்பிட்டு சளி ஏறிருக்கின்னி…”

“அநியாயம்டி கிங்கினிமங்கினி. மூக்குக்கு நேர காமிச்சா தும்மல் வராம என்ன பண்ணும்?…” என சொல்ல சொல்ல விடாமல் அவளின் மனம் போதும் என நினைக்கும் வரை போட்டுவிட்டே உள்ளே சென்றாள்.  

“இம்பிட்டு பேச்சிக்கி நீரு கொடையில நனையாம வந்தா நா யே பொக போடறே? இத வேணா, அத வேணாமின்னி சொன்னா உடவா சொல்லுதீக…” என்ற பேச்சு சத்தம் வேறு கேட்க தனக்கு பால் காய்ச்சுகிறாள் என்ற நினைப்புடன் புன்னகையோடு அவளின் பின்னே வந்து கட்டிக்கொண்டான் கார்த்திக்.

“நீ தூங்கியிருப்பன்னு நினச்சேன் கிங்கினிமங்கினி…” என சொல்ல,

“ம்க்கும், ஒம்ம சோலிக்கி அனிப்பிட்டு அது இந்த சாமத்துல மழையில அனுப்பிட்டு போட்டு ஒறக்கம் வருமா எனக்கி?…” என்று சொல்ல கார்த்திக்கின் அணைப்பின் இறுக்கம் இன்னும் கூடியது.

வெளியே கார்த்திக்கின் மொபைல் சத்தம் கேட்க இருவருமாய் திரும்பினார்கள். இந்த நேரத்தில் யார் என்கிற குழப்பத்துடன் கார்த்திக் கண்மணியை விடுவிக்க,

“நீக பாருக. நா பால ஆத்தி கொண்டாறேன்…” என அனுப்பினாள்.

வந்தவன் போன் நம்பரை பார்த்ததும் யோசனையுடன் அதை அட்டென் செய்து காதில் வைத்தவனின் இதயம் மறுபுறம் சொல்லிய செய்தியில் பதறிவிட்டது.

பாலை ஆற்றிக்கொண்டே அவன்த கண்மணியிடம் திரும்பியவன்,

“இப்பவே உடனே நாம ஊருக்கு கிளம்பனும் கண்மணி. ட்ரெஸ் எல்லாம் பேக் பண்ணு…” தொண்டை அடைக்க அவன் சொல்லிய விதமே கண்மணிக்குள் பயப்பந்தை சுழற்றியது.

யாருக்கு என்னவோ என பயத்துடன் கணவனின் முகம் பார்த்தாள் கண்மணி.

Advertisement