Advertisement

மணியோசை – 27 (2)

சங்கரி மாட்டுதொழுவத்தை சுத்தம் செய்துகொண்டிருக்க அதை காண்பித்துகொண்டே அருளை குளிப்பாட்டினார் பேச்சி. அவனும் குதூகலத்துடன் குளித்து முடிக்க கண்மணி குழந்தைக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு வந்தாள்.

“குளிச்சிட்டா தலைய தொவட்ட ஒத்தாளு வந்து சொல்லனுமோ?…” என அதற்கும் திட்ட,

“அட என்னத்திக்கி பொடுபொடுன்னு இருக்கறவ? கம்மின்னே கெடக்கமாட்ட. அவ அங்க இருக்கப்ப மவ என்ன செய்யுதாளோ? பேரே என்ன செய்யுதானோன்னு போலபவேண்டியாதி. இங்கன வந்தா ஏசிக்கிட்டே கெடக்கவேண்டியதி…” என சங்கரி பேச்சியை திட்டி,

“இந்தாடி காப்பி. இத ஒம்புருசனுக்கு குடுத்திட்டி வந்து நீ எடுத்துக்க…” என அவள் கையில் தம்ப்ளரை திணித்துவிட்டு இன்னொரு கையில் அடுப்பு கங்கை எடுத்துக்கொண்டு வந்து பேச்சியின் அருகே வைத்தார்.

“நானே பதமா பொடிய தூவறே. நீ அவனுக்கி காட்டு…” என சாம்பராணி துகள்களை தூவ கைகால்களை ஆட்டிக்கொண்டு அங்குமிங்கும் துள்ளிய அருளின் கண்கள் கலங்க துவங்க கைக்கொண்டு கசக்க ஆரம்பித்தான்.

“போது பேச்சி…” என சொல்லி சங்கரி வாங்கிக்கொள்ள கண்மணி காபியுடன் வந்து அமர்ந்தாள் அவர்கள் அருகில்.

“இந்தா மணி, இங்கன ஒக்காரு…” என்று தனக்கு கீழே ஒரு படியில் அமர சொல்லிய பேச்சி மகளின் கூந்தலுக்கும் வாசனை காட்ட சுகமாய் அமர்ந்திருந்தாள் கண்மணி.

கார்த்திக்கும் வந்துவிட அடுத்து பரபரப்பாய் கோவிலுக்கு கிளம்பினார்கள். ஊருக்கு தள்ளி காட்டுப்புறம் ஆரம்பிக்கும் இடத்தில் கோவில் அமைந்திருந்தது. அங்கே ஏற்கனவே பூசாரிக்கு சொல்லியிருந்தபடியால் இவர்கள் வரும் முன்னே பூஜைக்கு அனைத்தும் தயாராய் இருந்தது.

முத்துக்கருப்பி என்னும் பெண் தெய்வம் சிலையாய் உயரமாய் ஒய்யாரமாய் வீற்றிருந்தது. எப்போதுமே கார்த்திக்கிற்கு அதை பார்க்கும் பொழுது அடிமனதில் சிறிது பயம் தான்.

அய்யனார் சிலையை ஒத்த உயரத்துடன் கையில் நீளமான வாள் கொண்டு நாக்கை நீட்டியபடி சிவப்புநிற கண்களில் ஜொலிக்கும் அக்கினியில் படபடப்பாகிவிடும் அவனுக்கு.

கண்மணி கோவிலுக்கு போனதும் விளக்கேற்றி மனமுருகி வேண்டியவள் அனைவரையும் நன்றாய் நிம்மதியோடும், சந்தோஷத்தோடும் வைத்துக்கொள்ள வேண்டிவிட்டு வெளியில் வந்து கார்த்திக்குடன் அமர்ந்தாள்.

“என்னவா ஒங்க மூஞ்சி தூக்கலா இருக்கி?…” கூடையில் இருந்த வாழைப்பழத்தை எடுத்து உரித்து மகனுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் ஊட்டியபடி அவனிடம் கேட்டாள்.

“உன்னை கூட்டிட்டு இன்னைக்கு எங்கல்லாம் போகலாம்னு நினைச்சேன் தெரியுமா?…”

அவளுக்கு சொல்லியவன் காலையில் தான் போட்ட திட்டத்தையும் காருக்கு பதிலாக பைக்கில் செல்லலாம் என நினைத்து கதவை திறந்ததும் உறவினர்களின் கூட்டத்தை பார்த்து மிரண்டதையும் தூரத்தில் நிறுத்தியிருந்த தங்களின் காரை பார்த்துக்கொண்டே சொல்ல கண்மணி அடக்கமாட்டாமல் சிரித்தாள்.

பைக்கில் கோவிலுக்கு கிளம்பியவனை கண்ட பேச்சியும் சங்கரியும் குழந்தையை வைத்துக்கொண்டு பைக் வேண்டாம் என்று சொல்லி காரில் செல்லவில்லை என்றாலும் ஆட்டோ அழைத்துவந்துவிடுவதாக சொல்ல பெரிய கும்பிட்டு போட்டு தன் காரிலேயே வந்துவிட்டான்.

அதையும் வேறு நினைத்து நினைத்து கண்மணி சிரிக்க அவளை அப்படி ஒரு உஷ்ணப்பார்வை பார்த்தான் கார்த்திக்.

“ஏன்டி கிங்கினிமங்கினி சிரிக்கமாட்ட. என் பொழப்பு சிரிப்பா சிரிக்குது போ. எனக்கு மட்டும் எல்லாம் உல்டாவா நடக்குது…” என குறைபட,

“ஒமக்கு எதாச்சும் இருக்கா? நாலுநா லீவு போட்டா பொண்டாட்டியோட எங்க போவனும்? வேற எடமா இல்ல? இதுல தனியா போவமுடிலன்னி சடவு வேற. ஒம்ம யாரு இங்கன கூட்டிட்டு வரசொன்னா?…”

“ஏய் கிங்கினிமங்கினி…” என கண்கள் மின்ன அவளை பார்க்க,

“டாக்டருக்கு படிச்சா மட்டு போதாதி. டக்கரா யோசிக்கவு தெரியனும். போம்…” என அவள் முறுக்கிக்கொள்ள,

“நிஜமா தான் சொல்றியா கிங்கினிமங்கினி. இங்க பாருடி…” அவன் பரபரப்பாய் கேட்ட விதம் அருளே கெக்கைபோட்டு சிரித்துவிட,

“கிண்டல் பன்றியாடா மகனே?…” என அவனின் கன்னம் கிள்ளிவிட்டு,

“உனக்கு புடிக்குமேன்னு வந்தேன். அதுவும் இல்லாம அவங்க நம்ம வீட்ல இருந்து கிளம்பின விதம் என்னால இன்னும் மறக்க முடியலைடி. நேர்ல பார்த்து அவங்களோட பேசி அவங்க முகத்துல ஒரு சிரிப்பை பார்க்கனும்னு தோணுச்சு. அதான் இத்தனை நாள் பேசாம இருந்தேன். ஒரு கில்ட்டி பீல். அதனால உன்னையும் கூட்டிட்டு அவங்களுக்கும் உனக்கும் சப்ரைஸ் குடுத்தேன்…”

“எந்த காலத்துக்கு அவுக ஒம்ம கோச்சிக்கிட்டாக? நாலு நா இருக்கனுமின்னு இல்ல. ஒரு வேல நீக இங்கன கைய நனச்சாலே போதும் அவுகளுக்கு. வேற ஒண்ணுத்தயு எதிர்பாக்க மாட்டாக…” தன் குடும்பத்தை அறிந்தவளாக அவள் சொல்ல அதை ஆமோதித்தவன்,

“இப்ப சொல்லு. நைட் கிளம்பிடுவோமா? நேரா ஊட்டி இல்லை மூணார் போகலாம். இல்லைனா வேற எங்கையாவது ஹில்ஸ் ஸ்டேஷன் போகலாம். சொல்லுடி கிங்கினிமங்கினி…” அவன் கேட்ட விதமே வெட்கமாகிவிட்டது.

“இத்த கோவில்ல வெச்சா பேசுவாக? மொத வீடு போயி சாப்பிட்டு பொறவு பேசுவம்…” என கண்மணி சொல்லவும்,

“ஊஹூ…” என்ற சத்தத்துடன் கார் சாவியை தூக்கிப்போட்டு பிடித்தவன் அமர்ந்திருந்த திண்டிலிருந்து குதித்து இறங்க வெளியில் வந்த கோவில் பூசாரி,

“தம்பி ரெம்ப கொண்டாட்டமா இருக்காப்புல…” என கேட்க அவரை பார்த்து சமாளிப்பாய் கண்மணி சிரிக்க,

“சந்தோசமா இருந்தா சந்தோசந்தேன். இருட்டமின்ன போக மக்கா…” என சொல்லவும் அவரிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தனர்.

கார்த்திக் கிருஷ்ணனுடன் பேச்சில் அமர்ந்துவிட உள்ளே அடுப்படி பக்கத்தில் பேச்சி காலை நீட்டி நீவிக்கொண்டு அமர்ந்திருந்தார். அனைவருக்கும் பிரசாதத்தை கொடுத்துவிட்டு,

“என்னாச்சிம்மா?…” என கண்மணி அருளை கீழே இறக்கி விளையாடவிட்டுவிட்டு வந்து கேட்க,

“ரெம்ப நேரமா ஒரே எடத்துல ஒக்காந்தே இருந்தேன்.  அதேன் காலு கொறக்கவலிக்கிதி. கொஞ்ச நேரத்துல செரியாயிடும்…” என்றவர் சங்கரியிடம் சத்தம் கொடுக்க வரும் போதே சூடான பருத்திப்பாலுடன் வந்துவிட்டார் அவர்.

“யே பெரிம்மா போறப்பவே சொல்லிருந்தா நா பருத்திய ஆட்டிருப்பேன்ல. நா போனப்பொறவு ஆட்டுனீகளாக்கும்?…” என கோபமாய் பார்க்க,

“வளவளக்காம போயி இத அவருக்கு குடுத்திட்டு நீயு குடித்தா…” என கொடுத்துவிட்டு பேச்சியின் அருகில் அமர்ந்தார் சங்கரி.

அவருக்கும் குடுத்து தானும் எடுத்துக்கொள்ள கண்மணியும் அவர்களுடன் வந்து அமர்ந்துகொண்டாள். கார்த்திக் வீட்டில் பேசுமாறு சொல்ல இரவு உணவிற்கு பின்னால் பேசிக்கொள்ளலாம் என சொல்லி வந்துவிட்டாள்.

“ராவுக்கு என்ன செய்ய பெரிம்மா?…” பருத்திப்பாலை பொறுக்கும் சூட்டில் ஊதி ஊதி குடித்துக்கொண்டே அவள் கேட்க,

“ஒன்னும் வேணாத்தா. மதிய செஞ்ச கறிக்கொழம்பு, வறுத்த கோழின்னு எல்லா கொஞ்ச இருக்கி. இட்டிலி மட்டு ஊத்திப்போம்…” என்றதும் மற்ற கதைகளை பேசிக்கொண்டே நேரம் சென்றது.

சங்கரி ஒரு கிண்ணத்தில் பருத்திப்பாலை ஊற்றிவைத்து ஒற்றை விரல் கொண்டு தொட்டுத்தொட்டு அருளின் வாயில் தடவிக்கொண்டிருந்தார். சுவை பிடித்த குழந்தை கை தட்டியபடி பாட்டியின் அருகே அமர்ந்து ஆவென வாயை திறந்து அழகாய் சாப்புக்கொட்டி சுவைக்க,

“மணி ஒம்மவே பாரு சொட்டான்போட்டுக்கிட்டி வாய தெறக்கரத?…” என்று பேச்சி காண்பிக்க கண்மணி புன்னகைத்தாள்.

இரவு விரைவிலேயே ஆண்கள் மூவரும் அனைவரும் சேர்ந்தே உண்டு எழ பேச்சியும் சங்கரியும் கண்மணியுடன் சேர்ந்து சாப்பிட்டனர்.

குழந்தைக்கு ஏற்கனவே பருத்திப்பால் ஊட்டியிருந்ததால் கொஞ்சம் மெதுவாய் நேரம் கழித்து இட்லி கொடுக்கலாம் என சங்கரி சொல்லிவிட அனைவரும் அமர்ந்து முற்றத்தில் பேசிக்கொண்டிருந்தனர்.

சங்கரியின் தம்பி மாரிமுத்து அந்நேரம் வந்துவிட அவரின் முகத்தில் இருந்த சந்தோஷத்தை பார்த்து,

“என்ன மாரி? மூஞ்சியே பொங்கிக்கெடக்கி? ஏதும் சங்கதியா?…” சங்கரி கேட்க,

“எல்லா நல்ல சமாச்சாரந்தேன் அக்கா…” என்றவருக்கு கண்மணி பருத்திப்பலை கொண்டுவந்து தர,

“ஏத்தா சுடவெச்சியா? அவே ஆறிட்டா குடிக்கமாட்டா. தொண்டையில எறங்காது…” நாட்டரசன் கிண்டலாய் சொல்ல,

“தொண அடுப்பு கங்க தள்ளி மாத்திபோட்டிருந்தாக பெரிம்மா. சூடாத்தேன் இருக்கிப்பா…” என்றவளை பார்வையால் கார்த்திக் பேசுமாறு சொல்ல அவளும் பொறுமையாக இருக்குமாறு பார்வையிலேயே சொன்னால்.

மாரிமுத்து வந்த விஷயத்தை பேசி முடித்ததும் இதை சொல்லலாம் என கண்மணி நினைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

“இருண்ணே இட்டிலி மோந்து வச்சிட்டி வரேன். ஒருவா உண்குவ…” பேச்சி எழ,

“அட இருத்தா, சாப்புட்டிதேன் வந்தேன். கொழம்பு கூட்டுகறின்னு இங்கருந்தி கொண்டு போனதி கொள்ளையா கெடக்கி. ராவுக்கு சோறு வடிச்சு எல்லாருமே உண்கியாச்சு. பேசாம கெட…”

“பகுமானமாகிடுச்சுலே ஒமக்கு…” என சங்கரி முறைக்க,

“போறப்ப பருத்திப்பால வேணா தூக்குல ஊத்தி குடு. வேணாமின்னா சொல்லப்போறே?…” என மாரிமுத்து சிரிக்க,

“அத்தச்சொல்லு…” என நாட்டரசனும் சிரிக்க,

“வந்த சமாச்சாரத்தே சொல்லு…” சங்கரி கால்நீட்டி அமர,

“அட இருக்கா…” என சொல்லிய மாரிமுத்து கார்த்திக்கிடம் திரும்பி,

“மாப்பிள தம்பி எம்புட்டு நாளைக்கி லீவு?…” என கேட்க அவன் சொல்வதற்கு முன்,

“நாலு நா மாமா…” என கண்மணி பேச்சை ஆரம்பிக்க,

“சொல்லுடி செல்லக்குட்டி” என பார்த்தான் கார்த்திக்.

“செரித்தேன். அப்ப நல்லாதா போச்சி…” என மாரிமுத்து அட்டகாசமாய் சிரிக்க,

“என்னது நல்லாதா போச்சியா? போச்சி போச்சி தான் போலையே?” அவனின் பார்வை கண்மணியை பார்க்க அவளோ என்னவோ சொல்லபோகிறார் என மாமனின் முகத்தையே ஆவலாய் பார்த்திருந்தாள்.

“இவ திரும்ப மாட்டா. ஹில்ஸ் ஸ்டேஷனுக்கு தனியா அனுப்பிருவாளோ?” அவனின் விழிகளுக்குள் கருமணிகள் தவிப்பில் இங்குமங்கும் நர்த்தனமாட அசராமல் அடுத்த பந்தை போட்டார் மாரிமுத்து.

“நம்ம கிருஷ்ணனுக்கு ஒரு எடம் தகைஞ்சிருக்கு. அதேன் பேசலாமின்னு…” என ஆரம்பித்ததும்,

“கிருஷ்ணா நீ போயி மாமே வீட்டுல பருத்திப்பால குடுத்திட்டு வாய்யா. எத்தா பேச்சி சூடா இருக்கறப்பே குடுக்க வேணாமா? தூக்குப்போணில ஊத்தி அனுப்பு…” என்றதும் கிருஷ்ணன் மறுபேச்சின்றி எழுந்து சட்டையை போட்டுக்கொண்டு வந்து நிற்க பேச்சியும் கொண்டுவந்து குடுக்கவும் வாங்கிக்கொண்டு சென்றான்.

தெருவில் இறங்கி நடந்துகொண்டிருந்தவனின் மனம் படபடவென அடித்துக்கொண்டது. தன்னுடைய திருமணப்பேச்சு வீட்டில் நடக்கிறது என்றதுமே ஒருவித பரபரப்பு தொற்றிக்கொள்ள ஒருமாதிரி சுகமாய் உணர்ந்தான். எப்படி வந்தான் என்றே தெரியாமல் மாமன் வீட்டையும் சேர்ந்தான்.

“அவனே வச்சிக்கிட்டா பேசுவ மாரி?…” என மச்சினனை கண்டித்த நாட்டரசன்,

“இப்ப சொல்லு…” என சொல்ல,

“நல்லா செய்றீங்கய்யா. செய்ங்க. என்னவ பச்சபுள்ளைக்கு கல்யாணம் பன்ற மாதிரி. பெரிய்ய ஸீன் தான்…” என நடப்பவற்றை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

கண்மணியின் முகத்தில் அத்தனை சந்தோஷம். அண்ணனுக்கு திருமணம் கொண்டாடப்படவேண்டிய விஷயமல்லவா? எத்தனை எதிர்பார்ப்பு இருந்தாலும் சபையில் அதை காட்ட முடியாதே?

கார்த்திக்கிற்கு புரிந்துபோனது. இனி இவளை சாமானியமாக இங்கிருந்து நகர்த்த முடியாதென.

“என்னவோ பெருசா சப்ரைஸ் குடுக்கேன்னு வந்த. குடும்பமே இப்ப பெரிய சப்ரைஸ் குடுத்துச்சா. அனுபவி. போச்சி போச்சி…” என மனசாட்சி எக்காளமிட்ட நெஞ்சை நீவியபடி கடனே என அமர்ந்திருந்தான்.

Advertisement