Advertisement

தீண்டல் – 1 (1)

               டீப்பாயின் மேல் வைக்கப்பட்டிருந்த பத்திரிக்கைகளை எடுத்து பார்த்துக்கொண்டிருந்தனர் சந்தியாவும் சந்நிதியும்.

“சித்தப்பா இன்விடேஷன் டிஸைன் ரொம்ப நல்லா இருக்கு. யார் செலெக்ட் பண்ணினது? ரேவதியா? இல்லை அத்தானா?…” சந்நிதி கேட்க,

“அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் செலெக்ட் பண்ணினாங்கம்மா. உங்க ரெண்டு பேருக்கும் உங்க அத்தான் ஸ்பெஷல் இன்விடேஷனும் குடுத்து விட்டிருக்கார். உங்கப்பா வரவும் முறையா இதை குடுத்துட்டு அதை தனியா தரேன்…” ராதா சொல்ல,

“சித்தி இதை அப்பாக்கிட்ட சொல்லிடவேண்டாம். கோச்சுப்பாங்க…” சந்தியா எச்சரிகையாய் சொன்னாலும் அதையும் மீறிய பயம் அவளின் முகத்தில் அப்பட்டமாய்.

“எனக்கு தெரியாதாடா குட்டி. நான் பார்த்துக்கறேன்…” மெல்லிய புன்னகையோடு ராதா சொல்ல,

“கோமதி அக்கா எப்படி இருக்காங்க ராதா? வீட்ல எல்லாரும் சௌவுக்கியமா?…” பார்கவி கேட்க,

“அக்கா பாசம் விடுதா பாரேன்…” சந்தியா தங்கையிடம் சொல்லி சிரிக்க,

“அப்பா வந்துட்டாங்க…” சந்நிதி சொல்ல சட்டென துளிர்த்துவிட்ட வியர்வையை துடைக்க கூட தோன்றாமல் வேகமாய் வாசலுக்கு சென்று நின்றார் பார்கவி.

“அறிவில்லயாடி உனக்கு. பாவம் அம்மா…” சந்தியா அதட்ட,

“எனக்கு அது நிறையவே இருக்கு. அம்மா அலார்ட்டா இருக்காங்களான்னு செக் பண்ணினேன். பரவாயில்லை சுறுசுறுப்பு தான்…”

“உன்னை…” என சந்தியா அவளின் தலையில் கொட்டும் முன்,

“பொய் சொன்னியாடி நீ?…” என்றபடி பதட்டம் தணிந்தவராக வந்து சந்நிதியின் காதை திருகினார் தாய்.

“பின்ன என்னம்மா அப்பா வந்தா கார் சத்தம் கேட்காதா? சொல்லவும் இந்த ஓட்டம் ஓடறீங்க? இத்தனை பயம் வச்சுக்கிட்டு நீங்க அந்த வீட்டை பத்தி பேசறீங்களே?…” சற்று காரமும், கிண்டலும் கலந்த குரலில் சந்நிதி சொல்ல,

“ப்ச், நிதி கூடப்பிறந்தவளை பார்க்கத்தான் முடியலை. கேட்கவுமா கூடாது. உன் அப்பா அராஜகம் உனக்கும் ஒத்திருக்கு போல…” ராதா கண்டிக்க,

“தப்பு அவங்களும் செஞ்சிருக்காங்களே சித்தி…” விட்டுகொடுக்காமல் சந்தியாவும் சொல்ல,

“உன் அம்மா என்ன தப்பு செஞ்சாங்க? இல்ல உன் பெரியம்மா தான் என்ன தப்பு செஞ்சாங்க. எவனோ ஊர் பேர் தெரியாத ஒருத்தனுக்காக இவங்க அடிச்சுக்கிட்டு குடும்பத்தை உடைச்சு இன்னைக்கு ஆதரவுக்கு ஒண்ணாக முடியுதா? ஏதோ ஜென்ம பகை மாதிரி கொண்டுவந்தாச்சு இன்னைக்கு…”

“ராதா, விடு. முடிஞ்சதை பேசி என்ன செய்ய?…” அவரின் கணவர் கம்பன் சொல்ல,

“இப்படியே விட்டு விட்டு தான் இன்னைக்கு வரைக்கும் ஒண்ணாக்க முடியலை. ஒவ்வொரு விசேஷத்துக்கும் ரெண்டு பேரையும் சேர்த்து இழுத்துக்கட்டி வரவைக்க முன்ன தாவு தீர்ந்து போகுது. இன்னைக்கு என்ன சொல்ல போறாரோ?…”

“பார்த்துக்கலாம்…” கணவர் சொல்ல,

“அப்ப நீங்களே பார்த்திருக்கனும். பேச என்னை வர சொல்லியிருக்க கூடாது. இந்த குடும்பத்துல பொதுவான உறவுக்காரங்க விசேஷத்துக்கு எல்லாம் பஞ்சாயத்து பண்ணி இவங்களை கூட்டிட்டு வரதுக்கு நான் தான் கிடைச்சேன்…” ராதா குரலை உயர்த்த கம்பன் கப்சிப். பார்த்த மற்றவர்களுக்கு புன்னகை தான்.

சந்தியாவுக்கும், சந்நிதிக்கும் தன் குடும்ப சூழலுடன் ராதா, கம்பன் அனுசரணையை ஒப்பிட்டுப்பார்த்து நிதர்சனம் ஏக்கம் பிறப்பித்தது.

என்றுமே தங்கள் குடும்பத்தில் இப்படி ஒரு அந்நியோனிய பேச்சுவார்த்தை தன் தாய்க்கும் தந்தைக்கும் இடையில் வரப்போவதே இல்லை என நினைக்கும் பொழுது அத்தனை வேதனை ததும்பியது.

சந்நிதி கண்கள் கலங்க சந்தியா தான் அவளின் கையை அழுத்தி சமாதானம் செய்தாள். வாசலில் நின்ற உறவினர் அழகர் வேகமாய் உள்ளே வந்தார்.

“மச்சான் வந்துட்டாரு…” என்று சூழ்நிலையை பரபரப்பாக்க வழக்கமான இடத்தில் சென்று பார்கவி நின்றார். பார்த்த மகள்களுக்கு வெறுத்துப்போனது. தூரமாய் சென்று நின்றுகொண்டனர் இருவரும்.

விடுவிடுவென உள்ளே வந்தவர் கதவருகே நின்ற பார்கவியை தீயாய் உறுத்து விழித்துவிட்டு ஹாலில் அமர்ந்திருந்தவர்களை கண்டு கோபமாக அழகரிடம் திரும்பினார்.

“இப்ப எதுக்கு இவங்கள இங்க கூட்டிட்டு வந்த அழகரு?…” கோபமாய் முனீஸ்வரன் கேட்க,

“இங்க பாருங்கத்தான். எங்களுக்கு நீங்களும் முக்கியம். பெரியத்தானும் முக்கியம் ஒருத்தர தள்ளி இன்னொருத்தர விசேஷத்துக்கு கூப்பிட்டா நல்லாவா இருக்கும்? நீங்களே சொல்லுங்க. ரெண்டு பேருமே நம்ம குடும்பத்துக்கு பெரியமனுஷங்க. முன்ன நின்னு நடத்திக்குடுக்கவேண்டிய பொறுப்புல இருந்துட்டு சின்னபிள்ளைங்க மாதிரி…”

“ராதா பேசாம இரு,  நான் அண்ணன்கிட்ட பேசிக்கறேன். வார்த்தைகளை விடாத…” கம்பன் தன் மனைவியை எச்சரிக்க,

“வார்த்தைகளை விடலைங்க. சின்னத்தானுக்கு புரியிற மாதிரி எடுத்து சொல்றேன். அவருக்கு தெரியாதா என்ன?…” என ராதா முனீஸ்வரனை பார்க்க,

“என்ன ராதா என்னையே மடக்க பார்க்கறியா?…” ராதாவின் எண்ணத்தை கண்டுகொண்டவராக கேட்க ராதாவும் அவரை பார்த்து சிரித்தார்.

“உங்களை மடக்க முடியுமா? எல்லாம் தெரிஞ்சவருக்கு சொந்த தம்பி மக கல்யாணத்துக்கு வராம இருந்தா இந்த ஊர் என்ன பேசும்னு தெரியாதா என்ன?…”

சொந்த தம்பி மகள் இல்லை. முனீஸ்வரனின் சித்தப்பா மகன் கம்பனின் மகள். ஆனாலும் சொந்த மகளை போலத்தான் அன்பும்,பாசமும் அப்பெண்ணிடத்தில்.

முனீஸ்வரன் என்ன சொல்லுவார் என்று முகம் பார்த்து அவர்கள் அமர்ந்திருக்க பார்கவி கெஞ்சலாய் கணவனை பார்த்தார்.

முனீஸ்வரனும் மனைவியை பார்க்க பார்கவியின் முகத்தில் இருந்த வாக்குறுதியின் செய்தியில் கொஞ்சம் மலையிறங்கினார்.

“சரி பார்க்கலாம். அங்க வந்த பின்னால அது இதுன்னு என்னை கட்டாயப்படுத்த கூடாது…” என்றவர்,

“சாப்பிட்டாச்சா?…” என கூர்மையாக பார்த்து கேட்க ராதாவை முந்திக்கொண்டு கம்பன்,

“இல்லை அண்ணே, இனிமே தான்…” என பதறி சொல்ல தன் கையில் இருந்த கைக்கடிகாரத்தை பார்த்தார். அது நேரம் நான்கை காட்டியது.

“பிபி மாத்திரை போடறவன் இவ்வளவு நேரமா சாப்பிடாம இருப்ப?…” சந்தேகமாய் கேட்க,

“பெரியத்தான் வீட்ல சாப்பிட்டு தான் வந்தோம் அத்தான். இங்க வந்து ஈவ்னிங் டிபனும், நைட் டின்னரும் பார்த்துக்கலாம்னு. அவர் ஈவ்னிங் டிபனை சாப்பிடலைன்னு சொல்றார்…” கணவனுக்கும் சேர்த்து ராதா சொல்ல லேசாய் சிரித்தார் முனீஸ்வரன்.

ராதா எப்பொழுதும் ஒளித்து மறைத்து பேசும் ஆள் கிடையாது. குடும்பத்தில் ஒருவரையும் விட்டுவைக்காமல் அனைவரிடமும் ஒரேமாதிரி பழகும் பெண். அவரின் பெண் ரேவதியும் ராதாவை கொண்டே. அதன்னாலே மொத்த குடும்பத்திலும் ராதா என்றால் தனி ப்ரியம். அவரின் பேச்சிற்கு அத்தனை மதிப்பு.

“இத சொல்ல அவன் ஏன் பயப்படனும்?…” முனீஸ்வரனும் விடாமல் கேட்க,

“உங்க பேர்லயே முனீஸ்வரன் இருக்கே. பயப்படாம என்ன செய்வாரு?…” பதிலுக்கு பேச,

“ராதா, வா போய் சாப்பிடலாம்…” என ராதாவை கிளப்பிக்கொண்டு உள்ளே செல்ல பார்க்க,

“ப்ச், பத்திரிக்கை வைக்க வேண்டாமா?…” என கணவனை கடிந்தவர் கொண்டுவந்த பேக்கில் இருந்து வெள்ளி தாம்பாள தட்டில் பழங்கள், பூ, மஞ்சள், குங்குமம் என்று அனைத்தையும் வைத்து அதன் மேல் திருமண அழைப்பிதழை வைத்து பார்கவியை அழைக்க முனீஸ்வரன் திரும்பி மனைவியை பார்த்த பின் தான் அவர் அருகிலேயே வந்தார்.

தம்பதி சகிதமாக இருவரும் கொடுக்க அதை முனீஸ்வரன் பார்கவி சேர்ந்து வாங்கிக்கொள்ள,

“அக்கா எல்லாருக்குமே ட்ரெஸ் எடுத்தாச்சு. இதைதான் கல்யாணம் அன்னைக்கு நீங்க கட்டனும்…” என இன்னொரு பையை பார்கவியின் கையில் கொடுக்க மீண்டும் அவர் முனீஸ்வரனின் தலையசைப்பிற்கு காத்திருக்க அவரும் சரி என்ற பின்னர் தான் வாங்கிகொண்டார்.

ராதாவிற்கு ஆயாசமாக இருந்தது. ஒவ்வொன்றிற்கும் முனீஸ்வரனின் முகம் பார்த்து நிற்கும் பார்கவியின் நிலை கவலை தந்தது. இப்படியே இவரின் வாழ்க்கை முடிந்துவிடுமோ என வருந்த செய்தது.

“நீ இதை வச்சுட்டு டீ எடுத்துட்டு வா. கம்பனுக்கு சுக்கு டீ கொண்டு வா. அவன் பால் டீ விரும்ப மாட்டான்…” முனீஸ்வரன் கட்டளை போல சொல்ல அதை கண்டு ராதாவிற்கு சந்தோஷத்திற்கு பதில் கோபம் தான் வந்தது.

“பொண்டாட்டிட்ட சொல்ற மாதிரியா சொல்றார். ஹோட்டல்ல வந்து பேரர்க்கு ஆடர் பன்ற மாதிரி. இவர் பன்ற ரவுசு தாங்கலை…” என முணுமுணுக்க,

“வாங்க சித்தி உள்ள போகலாம்…” என சந்தியா மெல்லிய குரலில் அழைக்க,

“பெரியவங்க பேசிட்டு டீ குடிச்சுட்டு வர வரைக்கும் பொறுமை இல்லையா? என்ன அவசரம்?…” திரும்பி பார்க்காமல் குரலை உயர்த்தி அதட்ட வாயை பொத்திக்கொண்டு இன்னும் பின்னால் சென்று நின்றாள் சந்தியா.

“கடைசி வரைக்கும் கல்யாணத்தை இங்க வைக்க ஒத்துக்க மாட்டேன்னுட்டாங்க போல. பொண்ணை குடுக்கமுன்ன இத்தன கெடுபிடியா இருக்கே கம்பா?…” முனீஸ்வரன் யோசனையான முகத்தோடு பார்க்க கம்பனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

“எங்க நடந்தா என்னண்ணே? ஒரே பையன் அவுங்க சொந்த ஊர்ல வைக்கனும்னு சொல்றாங்க. இப்ப என்ன சென்னையில நாம ரிசப்ஷன் வச்சுக்கலாம்னு முடிவு செஞ்சுட்டோம்ல…” சமாதானமாய் சொல்வதை போல சொல்ல,

“இதுவும் தப்பில்லையா கம்பா? சொந்த ஊர் காஞ்சிபுரம். இங்க விட்டுட்டு நீ சென்னையில வைக்கனும்னு சொன்னா என்ன அர்த்தம்?. பிழைக்க போன ஊர் என்னைக்கும் பிறந்த ஊரா ஆகிடாது. நமக்கு உறுத்து இருக்கனும்ல…” என கேட்க என்ன பதில் சொல்வதென்று புரியாமல் கம்பன் விழிக்க ராதா எதையும் கண்டுகொள்ளாததை போல முகத்தை வைத்துக்கொண்டார்.

தன்னுடைய இரண்டு பைகளில் இருந்தவற்றை ஒரே பையில் வைக்க அனைத்தையும் வெளியில் வைத்து அடுக்க கீழே உருவி விழுந்தது அழகான வெள்ளி நிறத்தாலான உயர்ரக இன்விடேஷன் கார்ட். அதை சரியாக கவனித்து எடுத்துவிட்டார் முனீஸ்வரன்.

“இது என்ன கார்ட் ராதா?…” என தம்பி மனைவியின் கையில் கொடுக்க போனவர் அதில் இருந்த பெயர்களை பார்த்ததும் அதை கொடுக்காமல் பிரித்து பார்த்தார். ராதாவிற்கே கொஞ்சம் உதறல் தான். என்ன மடத்தனம் செய்துவிட்டேன் என திகைத்து விழிக்க அவரின் பதட்டமான முகத்திலிருந்து அதை கண்டுகொண்டனர் பெண்கள் இருவரும்.

“என்ன இது ராதா? ரெண்டு கார்ட் அடிச்சியா?…” என்று அதை காண்பித்து கேட்க,

“ஐயோ இல்லை சின்னத்தான். இது நம்ம வீட்ல அடிச்சது இல்லை. மாப்பிள்ளை அவரோட ப்ரெண்ட்ஸ்க்கு குடுக்க அடிச்சது. ரேவதிக்கும் அவ ப்ரெண்ட்ஸ்க்கு குடுக்க குடுத்திருந்தார்…” அத்தோடு அவர் நிறுத்திவிட,

“அதான் நம்ம சந்தியாவுக்கும், சந்நிதிக்கும் குடுக்கலாம்னு மாப்பிள்ளை அவர் சார்பா…” கம்பன் உளறிவிட,

“அவ என்ன ப்ரெண்ட்ஸா? தனியா கார்ட் குடுக்க? என்ன புது பழக்கமா இருக்கு? இதெல்லாம் சரியில்ல கம்பா. நம்ம குடும்பத்துக்கு சரிப்பட்டு வராது. தங்கச்சி தங்கச்சியா அதான் இருக்கனும். அதும் இன்னும் கல்யாணமே முடியாத நேரத்துல மச்சினிச்சிக்கு தனி பத்திரிக்கையா?…” என நெற்றிக்கண்ணை திறந்துவிட,

“ஐயோ இருங்க அத்தான். இது அவர் குடுக்க சொன்ன கார்ட் இல்லை. நம்ம ரேவதி தான் இதை அவ சார்பா குடுக்க சொல்லி குடுத்துவிட்டா. சும்மா மாடல் காண்பிக்கலாமேன்னும்…” ராதா சமாளிக்க,

“ரேவதி அவர் சார்பா குடுக்கற அளவுக்கு பெரிய மனுஷி ஆகிட்டாளா ராதா? எத்தனை வயசானாலும் பெத்தவங்களுக்கு பிள்ளைங்க பிள்ளைங்களா தான் இருக்கனும். இதெல்லாம் எனக்கு பிடித்தம் இல்லை. இதையெல்லாம் கண்டிக்க மாட்டியா கம்பா?…” ராதாவிடம் ஆரம்பித்து தம்பியிடம் வந்து நிற்க பார்கவி வந்துவிட்டார் பலகாரங்களும், டீ கப்புகளுடனும்.

Advertisement