Advertisement

மணியோசை – 6

    வீட்டில் சாமி கும்பிடுவதற்கான அனைத்து ஆயத்தங்களையும் செய்துவிட்டார் பேச்சி. முதல் நாளில் இருந்தே தன் கணவர் முத்தரசன் படத்தின் முன்பு கண்ணீருடன் அமர்ந்திருந்தார்.

மாரிமுத்து குடும்பமும் வந்துவிட அனைவரின் இதயத்திலும் துக்கம் நிறைந்து கிடந்தது. சங்கரி மாரிமுத்துவின் உடன் பிறப்பு. பேச்சி சங்கரிக்கு சின்னம்மா மகள் என்பதால் இரு பெண்களையும் ஒரே குடும்பத்தில் கட்டி குடுத்தனர்.

திருமணம் ஆன பத்து வருடத்தில் உடல்நலகுறைவால் முத்தரசன் இறந்துவிட சங்கரியின் வாழ்க்கை மொத்தமும் கிருஷ்ணன், கண்மணி என்றானது. எந்த இடத்திலும் சங்கரிக்கான மரியாதை ஒரு படி அதிகமாகவே இருக்கும் படி பார்த்துக்கொள்வார் பேச்சி.

அந்தவிதத்தில் நாட்டரசன் மிகவும் கொடுத்துவைத்தவர். பேச்சி துடுக்கும், திமிரும் கலந்தவராக இருந்தாலும் அவசரம் என்று காசு கேட்டு வரும் யாருக்கும் இல்லை என்று சொல்லமாட்டார். கேட்காமலேயே சூழ்நிலை அறிந்து உதவும் பாங்கும் அதிகம் அவரிடம்.

திதி கொடுத்துவிட்டு வீட்டில் அனைவரும் சாப்பிட அமர அவர்களுடன் அமர போன கண்மணியை முறைத்த பேச்சி,

“இங்கன வந்து பரிமாறு. ஆளுக்கு மொத போவ…” என கண்டிக்க எரிச்சலுடன் எழுந்து பரிமாறினாள் கண்மணி. அன்று மட்டும் சங்கரியை எந்த வேலைக்கும் அனுமதிக்க மாட்டார் பேச்சி.

இல்லையென்றால் பேச்சிக்கு எந்த வேலையும் வைக்கமாட்டார் சங்கரி. அவர்களிடமிருந்த புரிதல் அவர்களின் வாழ்க்கையை தெளிந்த நீரோடை போல் நகர்த்தியது.

அனைத்தும் முடிந்து முற்றத்தில் மற்றவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க கண்மணி யாருக்கு வந்த விருந்தோ என்று கேட்டுக்கொண்டே உறங்கி வழிந்தாள்.

“யத்தா பேச்சி, மணியை உள்ள போய் தூங்க சொல்லுத்தா. தூணுல முட்டிக்க போவுது…” என மாரிமுத்து சொல்ல,

“வயிறு நிறைஞ்சா உறக்கம், உறக்கம் கலைஞ்சா பசி. இத தவற ஒன்னும் தெரியாது…” என பேச்சி கண்மணியை திட்ட பாதி தூக்கத்தில் இருந்தவள்,

“ம்மா…” என சிணுங்க,

“போ போய் உள்ளார படு…” என விரட்டவும் விட்டால் போதுமென எழுந்து ஓடிவிட்டாள்.

“இவள என்னன்னு பொறுப்பா மாத்த போறேன்னு தெரியலைண்ணே. சமைக்க தெரியுது, வீட்டு வேல தெரியுது.  ஆனா ஒரு ஒத்தாச பண்ணமாட்டிக்கா. நானும் எத்தனையோ சொல்லி பாத்துட்டேன். அந்த நேரம் கம்முன்னு அமுக்குணி மாதிரி இருக்கறது. அதுக்கு பொறவு கழுத கெட்டா குட்டி சுவரு…”

“இப்பவே எதுக்கு அத போட்டு வசக்கனும்னு பாக்குத? இருக்கட்டுமே, இங்க இருக்கற வர அது இஷ்டத்துக்கு இருக்கட்டும். போற எடத்துல தானா பொறுப்பு வந்திட்டு போகுது…” மாரிமுத்து சொல்ல,

“யாரு இவளா? அங்கயும் அரட்டி குடியிருக்கத்தேன் பாப்பா பாருங்க. அதுதான் எனக்கு தொண்டக்குழி கெதக்கு கெதக்குன்னு இருக்கு…” பேச்சி சொல்ல,

“அந்த முத்துகருப்பி ஆசையில எவனாவது மவராசனா இவ மனச புரிஞ்சுக்க புள்ளையா பதவிசா கிடச்சா போதும்…” சங்கரி அப்போதுதான் மெதுவாய் வாயை திறந்தார்.

“என்னது? நல்ல கதையா இருக்குக்கா நீ பேசுதது. கெடைக்கிற மவராசன் பதவிசா இருக்கனுமாக்கும்? உம்பொண்ணு உணக்கையா உக்காந்து சட்டம் பேச. நீ ஒருத்தி போதும் அவளுக்கு கொம்பு சீவ…” என பேச்சி நெற்றிகண்ணை திறக்க,

“அப்படி கெடச்சா வேண்டான்னுவியா நீ?…”

“ஆமாம்மா வரிசையில நிக்கிறானுங்க. நீ வேற இவ அழிச்சாட்டியத்துக்கு மாமியாரு, நாத்தனார்ன்னு ஒரு பெரும் கூட்டத்துக்குள்ள சிக்கிட்டு வசங்க போறா பாரு…” பேச்சி சொல்ல சங்கரிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

“கொஞ்சமாச்சும் பெத்தவளாட்டம் பேசுதியா? அவளை அச்சாணியமா பேசாத பேசாதன்னு சொல்லிட்டு இப்ப நீ என்னத்த பேசுத? அவளை வசக்கினா உனக்கு சந்தோஷமா போயிருமாக்கும்? கண்ணு குளிர பாப்ப இல்ல?…” என எகிறு எகிறுவென எகிறிவிட பேச்சிக்கும் திக்கென்று ஆனது.

“ஆத்தி, என்ன வார்த்த சொல்லிப்போட்டேன். ஏதோ பேச்சுக்கு ஆரம்பிச்சு இப்படி சொல்லி போட்டேனே? ஆத்தா முத்துகருப்பி…” என வானத்தை நோக்கி கை எடுத்து கும்பிட பேச்சிக்கு தெரியவில்லை மகாதேவி நூறு மாமியார்களுக்கு சமம் என்று.

ஆனால் மகாதேவியின் அகம்பாவங்கள், அலட்டல்கள் கண்மணியிடம் செல்லுபடியாகாது என்பதுதான் இங்கே விதி செய்த சதி.

“ஆமா கும்பிடுதா, பேசுறத பேசிப்போட்டு…” என சங்கரி நொடிக்க,

“அடடடடா போதும்த்தா உங்க சண்டை எல்லாம். நாளைக்கு ஒரு முக்கியமான விஷயம் பேசனும். காலையில வரேன்…” என மாரிமுத்து சொல்லவும் பெண்கள் இருவரின் முகமும் மலர்ந்துவிட்டது.

கண்களாலேயே அவர்கள் கேட்க அவரும் அப்படித்தான் என்பதை போல தலையசைத்து சென்றார்.

ஆம், அது கண்மணியின் திருமணம் பற்றிய விஷயம். அன்று வீட்டில் தவறியவர்கான திதி என்பதால் நல்லகாரியத்தை என்று பேசவேண்டாம் என நினைத்து மறுநாள் வருவதாக சொல்லி சென்றார்.

மறுநாள் காலை பரபரப்பாக இருந்தது பேச்சியின் வீட்டில். காலையிலேயே வீட்டை நீர் விட்டு அலம்பி மீண்டும் பூஜை பொருட்கள் அனைத்தையும் துலக்கி என அத்தனை வேலையையும் விரைவிலேயே முடித்தவர்கள் மாரிமுத்துவின் வரவை எதிர்பார்த்து காத்துக்கிடந்தனர்.

நாட்டரசனும் கிருஷ்ணனும் கூட காலை உணவிற்கு வீட்டிற்கே வந்துவிட சாப்பிடும் நேரத்தில் மாரிமுத்துவும் வந்து சேர்ந்தார்.

“வாப்பா மாரி, சாப்பிட வா…” என நாட்டரசன் அழைக்க,

“வேண்டாம் மச்சான். வீட்டுல ஆக்கிட்டாக. சாப்புட்டுட்டுத்தேன் வந்தேன். நீங்க முடிச்சுட்டு வாங்க…” என சொல்ல,

“அட இவன் எவன்டா கிறுக்குப்பய. வா அயிரமீனு கொழம்பு வச்சிருக்கேன். ரெண்டு வாய் திங்க கூடவா வயித்துல இடமில்ல. வந்து உக்காருலே…” என அவருக்கும் ஒரு தட்டை எடுத்துவந்து சங்கரி வைக்க அதற்கு மேல் மறுத்தால் சாமியாடிவிடுவார் என நினைத்து கை கழுவிவிட்டு வந்து அமர்ந்துகொண்டார்.

“என்னக்கா நம்ம வீட்டுப்பக்கம் மீனு வரலையே. இங்க மட்டும் வந்துருக்கு…”

சுடசுட இருந்த வெள்ளை சாதத்தில் மீன் குழம்பை ஊற்ற அதை பிசைந்து சாப்பிட்டவரின் வயிற்றில் இன்னமும் இடம் ஒதுக்க சொல்லியது அந்த குழம்பின் ருசி.

“நம்ம மண்டையன் தான் வாய்க்கால்ல மீன்சாறு போட்டிருக்கான். நம்ம மணிக்கு புடிக்கும்னு விழுந்த மொத சாறுல நம்ம வீட்டுக்கு குடுத்துட்டு அவன் வீட்டுக்கு கொஞ்சம் எடுத்துட்டு போய்ட்டான். மணிக்கு மீன் கொழம்புனா சோறுதேன் கேப்பா. அதான் காலையிலேயே சோறு வடிச்சுட்டேன்…”

அனைவருக்கும் பரிமாறிக்கொண்டே சங்கரி சொல்ல கண்மணியை பார்த்தார் மாரியப்பன். வீட்டிற்குள் நுழைந்ததும் வாங்க மாமா என்றதோடு சரி. அதன் பின் சாப்பிடுவதை தவிர வேறு எதற்கும் வாயே திறக்கவில்லை. அதை நினைத்து சிரித்துக்கொண்டவர்,

“இன்னும் கொஞ்சம் சோறு வைக்கா…” என கேட்டு வாங்கிக்கொள்ள,

“ம்க்கும், இவ இதுக்கு இதத்தேன் சாப்புடுவா. அதுக்கு அப்புடித்தேன் சாப்புடுவான்னு நாக்கை நாலு கிலோமீட்டருக்கு வளத்துவிட்டுட்ட. போற எடத்துல எனத்த ஆக்கி தட்ட போறாளோ போ…” பேச்சி நொடிக்க,

“பெரிம்மா, வெறும் குழம்பு மீனா இருக்கு. மதியத்துக்கு அண்ணனை நம்ம கிணத்துல பெரிய மீன் புடிச்சுட்டு வர சொல்லி வறுத்து வை…” என்று சொல்லி சாப்பிட்ட தட்டை தூக்கி கொண்டு எழும்ப,

“அடிக்கழுத உள்ளது போதாதுன்னு நொள்ளது வேணுமாக்கும். உன் நாக்கை இழுத்து வச்சு…” என சொல்லிக்கொண்டே சங்கரியை பார்க்க அவர் முறைத்த முறைப்பில்,

“ம்க்கும் ஒன்னுத்துக்கும் நல்லதில்ல. எப்ப பார்த்தாலும் வாய தொறக்கவிடறதில்ல…” என நொடித்துக்கொள்ள,

“தொறந்த வரைக்கும் போதும்…” என்ற சங்கரி சாப்பிட்டு முடித்த பாத்திரங்கள் அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு தனக்கும் பேச்சிக்கும் போட்டுக்கொண்டு வந்தார்.

“போய் முற்றத்துல காத்தாட உக்காருங்க. சாப்புட்டு வாரோம்…” என சொல்லி ஆண்களை அனுப்பிவிட்டு பெண்கள் இருவரும் பேசிக்கொண்டே உண்டுமுடித்தனர்.

சிறிது நேரத்தில் பொதுவான பேச்சுவார்த்தை முடிந்து கண்மணியின் திருமண பேச்சில் வந்து நின்றது.

“யத்தா மணி, இந்த கொழம்ப போய் உன் அத்தைட்ட குடுத்துட்டு வா. பொறவு உன் மாமனை மட்டும் கவனிச்சாகன்னு வெடச்சிக்கிட்டு திரியுவா…” என சங்கரி சின்ன தூக்கு பாத்திரத்தில் ஊற்றி கொண்டு வந்து கொடுத்து அவளை அனுப்பிவிட்டு வந்து அமர்ந்தார் சங்கரி.

“இப்ப சொல்லுண்ணே, நல்ல விஷயம்தானே?…” என பேச்சி ஆர்வமாக,

“ஆமாத்தா. நீ நினச்ச மாதிரியே நல்ல எடம். படிச்ச மாப்பிள்ள. நாத்தனார் பிடுங்கல் இல்லாத வீடு. மாமியார் மாமனார் பார்த்தா சுவாயமான ஆளுங்களா தெரியறாங்க. மாப்பிள்ளைக்கும் எந்த கெட்டபழக்கமும் இல்லை. நல்ல எடம். நம்பி குடுக்கலாம். என்ன செய்முறை கொஞ்சம் அதிகமாகும்…” என சொல்லி மாப்பிள்ளையின் போட்டோவை காண்பிக்க பார்த்ததும் பிடித்தது அனைவருக்கும்.

“மாமா, நல்லா விசாரிச்சுட்டேங்களா? பின்னால ஒன்னும் பிரச்சனை வராதே?…” என கிருஷ்ணன் கேட்க,

“ஆச்சுடா. வேணும்னா உனக்கு தெரிஞ்சவங்கட்ட சொல்லி நீயும் விசாரியேன். நாம பொண்ண குடுக்கறவங்க. ஒன்னுக்கு நாலா விசாரிக்கிறதுல தப்பில்ல…” என முகவரியை கொடுக்க,

“பையன் நல்ல கண்ணுக்கு திருத்தமாத்தேன் இருக்கான். என்னைக்கு பாக்க வரேன்னு சொல்லியிருக்காக?…” சங்கரி கேட்க,

“நம்ம சரின்னு சொன்னா நாளைக்கே கூட வர தயார் தான் அவுங்க. ஜாதக பொருத்தம் கூட பாத்துட்டாங்க போல. நானும் நம்ம ஜோசியருட்ட பார்த்தேன். பத்துக்கு ஆறு பொருந்தி வருது. போதும்ல…”

“போதும்ண்ணே…” என நிறைவாய் பார்த்தவர் நாட்டரசனை பார்க்க அனைத்தையும் அமைதியாய் பார்த்தபடி இருந்தார் அவர்.

“என்ன நீரு ஒன்னும் பேசவே இல்ல?. என்ன நினைக்குதீக?…” என கேட்க,

“என்னை எங்க பேசவிட்ட? அதான் எல்லாம் நீங்களே பேசி முடிவு பண்ணிட்டீங்களே?…” என அவர் சொல்லியதும் பதறிய பேச்சியும், மாரிமுத்துவும்.

“ஐயோ மச்சான், என்ன வார்த்த சொல்லிப்புட்டீரும்?…” என கலங்கி போய் பார்க்க,

“அட இருய்யா நான் என்ன கோவத்துல சொன்னமாதிரி பதறுரீக? எனக்கு சந்தோசம் தான். இந்தா பேச்சி, உன் பேச்சை என்னைக்குத்தா மீறியிருக்கேன்?…”

நாட்டரசன் மிக இலகுவாய் அதை சொல்லவும் தான் அனைவருக்கும் நிம்மதியானது.

அதன் பின் அங்கிருந்தே மாப்பிள்ளை வீட்டினருக்கு அழைத்து விவரம் சொல்ல அவர்களும் மறுநாள் நாள் நன்றாக இருப்பதாக சொல்லி வருவதாக சொல்லிவிட மீண்டும் பரபரப்பானது கண்மணியின் இல்லம்.

மாரிமுத்து வீட்டிற்கு சென்று வந்தவளுக்கு சங்கரி மூலம் விவரம் சொல்லப்பட தலையாட்டலுடன் நகர்ந்துவிட்டாள் கண்மணி.

ஆம், விவரம் மட்டுமே சொல்லப்பட்டது. போட்டோவை கூட காண்பிக்கவில்லை. உனக்கு விருப்பமா என்றும் கேட்கவில்லை. கேட்க மாட்டார்கள் என்று கண்மணிக்கும் தெரியும். அதனால் பெரிதாக அவள் எதிர்பார்க்கவில்லை.

மறுநாள் மாலை அவர்கள் வருவதாய் சொல்லியிருக்க அதற்குள் அக்கம் பக்கத்தினர் அரசல்புரசலாக விவரத்தை தெரிந்து ஊரெல்லாம் தண்டோரா போட்டுவிட்டனர்.

பிற்பகல் கடக்கும் முன்னரே அக்கம்பக்கத்தினர் என்று வீடு முழுக்க சொல்லியவர் சொல்லாதவர்கள் என ஆட்கள் நிறைய ஆரம்பித்துவிட்டது. அவர்களுக்கும் சேர்த்து இரவு உணவிற்கான ஏற்பாட்டையும் பேச்சி செய்ய சொல்லிவிட்டார்.

மாப்பிள்ளை வீட்டினர் நான்கே பேர் மட்டுமே வந்திருக்க அங்கிருந்த கூட்டத்தை பார்த்து ஒரு கணம் திகைத்து நின்றனர். பின் அவர்களின் முகத்தில் அந்த கூட்டத்தினை விரும்பாத ஒரு பாவனை அப்பட்டமாய் தெரிந்தது.

மாப்பிள்ளையிடம் பேச விரும்பி கேட்பவர்களுக்கு கூட சரியாக பதில் சொல்லாமல் மாப்பிள்ளை மிடுக்கை அங்கேயே காண்பித்தான் அவன். அதை கண்ட மாரியப்பனின் மனம் துணுக்குற்றது.

அதன் பின் பேச்சுவார்த்தைகள் வழக்கமாகவே நடந்தேறியது.

வழக்கம் போல மறுநாள் காலையில் கண்மணி சங்கரியின் பேச்சை மீறி நாட்டரசனுக்கு சாப்பாடு எடுத்து செல்ல எப்போதும் கார்த்திக்கின் காரை கடக்கும் இடத்தில் இன்று காரை நிறுத்தி வெளியில் நின்றிருந்தான்.

அவனை கண்டதும் வேகமாய் கடந்துவிடுவாள் பிடித்து நிறுத்தவேண்டும் என்று இவன் அட்டென்ஷனில் நிற்க கண்மணி என்றைக்கும் போலவே சீரான வேகத்தில் தான் சென்றாள்.

‘இவ இருக்கா பாரு’ என கடுகடுத்தவன் அவளின் சைக்கிளை மறித்து நிற்க அவனை என்னவென்பதை போல பார்த்தாள்.

“ஹேய் கிங்கிணி மங்கினி…” என்கிற விளிப்பில் கண்மணிக்கு எரிச்சலை தாண்டிய கோபம் தான் மிதமிஞ்சி இருந்தது.

“இப்ப என்ன இன்னொரு பிரச்சனையா? உன்னால இன்னும் என்னவெல்லாம் நான் அனுபவிக்கனுமோ?…” என எரிந்துவிழ அதை கண்டுகொள்ளாதவன்,

“உன்னை நேத்து பொண்ணு பாக்க வந்தாங்களாமே? நீ அன்னைக்கு கூட்டிட்டு வந்தியே அந்த பொண்ணும் குழந்தையும். அவங்க சொன்னாங்க…”

அவள் கேட்காததற்கும் சேர்த்து இவன் பதில் சொல்ல,

“உனக்கு எப்டி தெரியும்னு நா கேட்கவே இல்லியே. ஊருக்கே தெரிஞ்சது உனக்கு தெரியாதா என்ன?. வழியை விடு…”

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லு, பொண்ணு பாக்கவா வந்தாங்க?…” என மீண்டும் கேட்க எரிச்சலானவள்,

“யோவ் வயசு பொண்ணுன்னு ஒன்னு ஒரு வீட்ல இருந்தா பொண்ணு பாக்க வராம பொட்டலம் போடவா வருவாங்க?. போயா வேலையை பார்த்துட்டு…” என்றவள் நகர,

“ப்ச், நில்லுன்றேன்ல. என்ன சொன்னாங்க அவன் வீட்ல…” இதை கேட்கும்  பொழுதே கார்த்திக்கிற்கு கடுகடுவென்று இருந்தது.

காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் தூக்கிட்டு போவானா? இல்ல நான் தான் விட்டுடுவேனா? என்றவனுக்கு தான் இன்னும் தன் விருப்பத்தை கண்மணியிடம் கூட சொல்லியிருக்கவில்லை என்பது ஞாபகத்திலேயே இல்லை.

அவனுக்கு அவள் மீது இப்படி ஒரு உரிமை உணர்வு மிதமிஞ்சி இருப்பதையே முதல் நாள் குருவம்மா இந்த செய்தியை பற்றி சொல்லிய பின்பு தான் உணர்ந்தான். இத்தனை விரும்புகிறேனா அவளை என அவனுக்கே ஆச்சர்யம். அதன் பின்னும் தள்ளிபோட விரும்பவில்லை

“உனக்கு என்னய்யா பிரச்சனை? வந்தவன் பிடிக்கலைன்னு சொல்லிட்டு போய்ட்டான். போதுமா. வயிறு குளுந்துருச்சா?…”

“என்ன? உன்ன பிடிக்கலையா? ஏன், ஏன், ஏன்?…” என உஷ்ணப்பட,

“நீ என்ன லூஸா? எதுக்கு இத்தன ஏன்? உனக்கென்ன அதுக்கு, உன் வேலையை பார்த்துட்டு போவியா…”

“கேட்டா பதில் சொல்லு முதல்ல. இப்படி வெடுக்கு வெடுக்குன்னு பேசறதை நிறுத்து…” என அவன் படபடக்க அவனை புதிதாய் பார்ப்பதை போல பார்த்தாள் கண்மணி.

“சொன்னா கேளுய்யா. என் அண்ணன் வேற டவுனுக்கு பூச்சி மருந்து வாங்க போயிருக்கு. வர நேரம் தான். பார்த்துச்சு உன் முகரைய பேத்துடும். போய்டு…”

“என்ன உன் அண்ணன் பெரிய இவனா? எங்க வர சொல்லு. இப்ப இந்த  இடத்துலயே நிக்கேன். வர சொல்லு…” என்று கையை முறுக்கி காண்பிக்க இன்னமும் வித்தியாசமாய் அவனிடம் ஏதோ உணர்ந்தாள் கண்மணி.

Advertisement