Advertisement

அத்தியாயம் –6

 

 

“என்னடா வைபவ் தனியா சிரிச்சுட்டு இருக்க, என்ன விஷயம்ன்னு சொன்னா நானும் சேர்ந்து சிரிப்பேன்ல என்றான் கல்யாண். வைபவ் சிரித்துக் கொண்டே குறிப்பேடை அவன் பக்கம் நகர்த்தினான்.

 

 

“என்னடா பில்கேட்ஸ் கருத்து சொல்லப் போறியான்னு கேட்டு இருக்கு, நீ யாரு என்னை கேள்வி கேட்க, வந்துட்டார் நாட்டமை என்னடா இதெல்லாம், அப்படி என்ன தான் சொல்லி வைச்ச அவங்ககிட்ட என்றான் கல்யாண்.

 

 

“அது ஒண்ணுமில்லை நான் அவகிட்ட கேட்ட கேள்விக்கு எல்லாம் அவ இடக்கு மடக்கா பதில் எழுதி வைச்சு இருக்கா, அது தான் இதெல்லாம். “சரி பேசிட்டியா என்ன சொன்னாங்க என்றான் கல்யாண்.

 

 

“அவங்க அம்மாகிட்ட மட்டும் விஷயத்தை சொல்லிட்டேன்… என்றவன் நடந்ததை அவனிடம் சுருங்கக் கூறினான். “நீ சொல்றது பார்த்தா, அவங்களுக்கு சம்மதம்ன்னு தான் தோணுது என்றான் அவன்.

 

 

“நீ வேறடா அபி என்ன சொல்லப் போறாளோன்னு நான் யோசிச்சுட்டு இருக்கேன். கல்யாணத்துக்கு அவளை சம்மதிக்க வைக்க பேசினதுக்கே அவ எப்படி எழுதி இருக்கா பாரு, இதுல அவ என்னை கல்யாணம் பண்ணிக்க எப்படி சம்மதிக்க வைக்க போறேன்னு தெரியலை, பார்ப்போம் என்றான் வைபவ்.

 

 

கல்யாண் அவனிடம் பேசிவிட்டு ஏதோ வேலையிருப்பதாக கூறிவிட்டு வெளியில் கிளம்பிச் சென்றான். அவன் சென்றதும் அவள் அவனிடம் எழுதிக் கொடுத்த காகிதத்தை அவன் சட்டையில் இருந்து வெளியில் எடுத்தான்.

 

 

“அதை நான் உங்ககிட்ட சொல்லணும்ன்னு அவசியம் இல்லை, நீங்க யாரு எனக்கு அறிவுரை சொல்றதுக்கு. நீங்க கல்யாண வைபவம் நடத்துறீங்களா, இல்லை நாட்டாமை பண்ற வேலை பார்க்குறீங்களா. நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க என்று அவள் எழுதியிருந்ததை மீண்டும் மீண்டும் படித்தான்.

 

 

‘உனக்கு ரொம்பவும் கொழுப்பு தான், நான் யாரா, உங்க வீட்டில சம்மத்திச்சா நான் தான் உனக்கு புருஷன் என்று அவளுக்கு பதிலை தன் மனதிற்குள் சொல்லிக் கொண்டான். ‘உன்னோட இந்த பதிலுக்கு நான் கண்டிப்பாக தகுந்த பதிலடியை திருப்பிக் கொடுக்கிறேன் அபி என்று நினைத்துக் கொண்டான்.

 

 

‘நீ இந்த காகிதத்துல பேசும் போதே சரவெடியா இருக்கு, நீ மட்டும் வாயை திறந்து பேசினா சிவகாசியே இங்க வந்தா மாதிரி இருக்குமோ என்று நினைத்தவன் ‘ச்சே எனக்கு ஏன் இப்படி எல்லாம் தோணுது அவளால தான் பேசவே முடியாதே என்று எண்ணினான்.

 

 

‘நல்லவேளை அவங்க அம்மாவோட போன் நம்பர் வாங்கி வைச்சோம், அப்புறமா அவங்க அம்மாகிட்ட பேசி அவ கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டாளான்னு தெரிஞ்சிக்கணும் என்று தனக்குள் பேசிக் கொண்டான்.

 

____________________

 

 

கல்யாண் வெளிவேலையாக கடற்கரை சாலை வழி சென்றுவிட்டு திரும்பி வந்துக் கொண்டிருந்தான். மழை வருவதற்கு அறிகுறியாக மண்வாசனை நாசியை துளைத்தது. காரின் ஜன்னல் கதவுகளை இறக்கிவிட்டிருந்ததில் காற்றில் மிதந்து வந்த மண்வாசனையை மூச்சை பிடித்து உள்ளிழுத்தான்.

 

 

வண்டி உத்தண்டியை நெருங்கிய வேளை தூரத்தில் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவளை அவன் கண்கள் நோக்கியது. வண்டியை பேருந்து நிறுத்தம் தாண்டி நிறுத்தியவன் இறங்கி சென்றான்.

 

 

அவன் கண்கள் பொய்யுரைக்கவில்லை அது அவளே தான், இங்கு எதற்கு நிற்கிறாள் என்று யோசித்தவன், யோசிப்பதை விட அவளிடமே கேட்பது மேல் என்ற முடிவுக்கு வந்தான். அவளை நோக்கி நடையை எட்டிப் போட்டான். அவள் அருகில் நிழலாடுவது கண்டதும் அவளுக்கு மூச்சடைத்தது.

 

 

‘கடவுளே அவன் வந்துவிட்டானோ என்று கண்களை இறுக மூடி திறந்தவளின் எதிரே நின்றவனை பார்த்ததும் அவளுக்குள் ஒரு நிம்மதி பரவியது. ‘இவர் தானா நான் யாரோ என்று நினைத்து பயந்துவிட்டேன் என்று நினைத்துக் கொண்டாள் கார்த்திகா.

 

 

“என்னாச்சு இங்க எதுக்கு நிக்குற அதுவும் இந்த நேரத்துல, மழை வேற வர்ற மாதிரி இருக்கு என்றான் அவன். அவன் பேசியதில் அவள் வீம்பாக “எங்க அப்பாவுக்கு போன் பண்ணா இப்போ கார் அனுப்பிடுவார் என்றாள் அவள் பதிலுக்கு.

 

 

“ரித்தி போதும் எப்போ பார்த்தாலும் அப்பா ஆட்டுக்குட்டின்னுட்டு இங்க எதுக்கு நிக்குறன்னு தானே கேட்டேன் என்றான் கல்யாண். அவள் பதட்டமாக “ஒண்ணுமில்லை ஒரு வேலையா வந்தேன், கொஞ்சம் தாமதமாகிப் போச்சு என்றாள் அவள்.

 

 

“சரி உங்க அப்பாவுக்கு போன் பண்ணிட்டியா இப்போ வந்திடுவாரா என்றான் அவன். “இல்லை இன்னும் பண்ணலை என்னோட கைப்பையும் போனும் எங்கயோ தொலைச்சுட்டேன் என்றாள் தேய்ந்த குரலில்.

 

 

‘என்னாச்சு இவளுக்கு என்று நினைத்தவன் “சரி வா நானே உன்னை வீட்டில கொண்டு போய் விட்டுடறேன் என்றான் அவன். “நீங்க தான் எங்க வீட்டுக்கு வரமாட்டேன்னு சொன்னீங்களே என்றாள் அவள்.

 

 

“நான் ஒண்ணும் அங்க தங்க வரலை, உன்னை கொண்டு விட தான் வர்றேன் என்றான் அவன். “நான் வரலை என்றாள் அவள். “உங்க அப்பா வீட்டு கார் மாதிரி இது இருக்காது தான், ஏதோ ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டையாய் நான் உழைச்சு சேர்த்த காசுல முதல் முதலா கார் வாங்கி இருக்கேன்

 

 

“என்னோட வர்றது உனக்கு அவ்வளவு கஷ்டமா என்றான் அவன். வானம் கருமை பூசி நட்சத்திரங்களை மறைத்திருந்தது. லேசான ஊதல் காற்று மோத ஓரிரு மழை துளி ஆங்காங்கே அவள் மேனியில் பட இதற்கு மேல் இங்கு தனித்து இருப்பது அவளுக்கு சரியாகப்படவில்லை.

 

 

“என்ன வர்றியா இல்லை உங்க அப்பாவுக்கு போன் பண்ணிட்டு அவர் கார் அனுப்பற வரைக்கும் காத்திருக்கப் போறியா என்றான் அவன். “இல்லை வாங்க போகலாம் என்றவளுக்கு கதவை திறந்துவிட்டான். அவனும் முன் பக்கம் சென்று ஏறி அமர்ந்து காரை கிளப்பவும் மழை வலுக்கக் தொடங்கவும் சரியாக இருந்தது.

 

 

இரண்டு நாட்களுக்கு முன் புதிதாக வாங்கியிருந்த காரில் தன் அன்னை மற்றும் தம்பியை மனம் குளிர ஏற்றிக் கொண்டு கோவிலுக்கு அழைத்து சென்றவனுக்குள் தன் மனைவியை ஏற்றிச் செல்ல முடியவில்லையே என்று மனதின் ஓரம் சிறு வருத்தம் இழையோடியது தற்போது தீர்ந்தார் போலிருந்தது.

 

 

ஜன்னல் கதவை ஏற்றிவிட்டவன் ஏசியை ஆன் செய்தான், ஊதல் காற்று ஏற்கனவே அவள் உடலை சில்லிட்டு போக வைத்திருக்க ஏசியின் குளிரும் சேர்ந்து அவள் உடல் நடுங்க ஆரம்பித்தது.

 

 

சாலையை பார்த்து காரை செலுத்தினாலும் அவன் கண்கள் அவ்வபோது தன்னவளை ஆராய்ந்ததில் அவள் நடுங்குவது தெரிய அவள் வலது கையை தன் இடது கையில் அடக்கினான்.

 

 

“விடுங்க விடுங்க இதுக்கு தான் நான் உங்க வண்டியில் வரமாட்டேன்னு சொன்னேன், கையை விடுங்க என்றாள் அவள். “நீ என்ன லூசா நான் கையை தானே பிடிச்சேன், எதுக்கு இப்படி கத்துற, நான் உன் புருஷன் அந்த நினைப்பு உனக்கு இருக்கா என்றான் அவன்.

 

 

“அதுவும் இல்லாம உன் கையை பிடிச்சது உன்னை கொஞ்சுறதுக்காக இல்லை, உன் உடம்பு நடுங்குதே, என்னுடைய உடல் சூட்டில் உன் நடுக்கம் நிற்கும் நினைச்சு தான் உன் கையை பிடிச்சேன்.

 

 

“வேறு எந்த தப்பான எண்ணமும் இல்லை, போதுமா, கொஞ்சம் பேசாம இருக்கியா என்று அவன் சொன்னதும் வாயை மூடிக் கொண்டாள். “சரி நீ எப்போ வீட்டுக்கு வர்ற என்றான் அவன்.

 

 

“நீ எப்போ உன்னோட புரோக்கர் தொழிலை விடுறியோ சொல்லு, அப்போ வர்றேன் என்றாள் அவள் திமிராக. “குத்துபடுவோம் என்று தெரிந்தே வாயை கொடுத்தால் இப்படி தான் புண்ணாகும், தப்பு தான் நான் உன்கிட்ட இப்படி கேட்டது தப்பு தான்

 

 

“ஒருவேளை நீ மாறியிருப்பியோன்னு நினைச்சு தான் அப்படி கேட்டேன், நீ என்னைக்கு தான் திருந்துவியோன்னு தெரியலை என்றான் அவன் சலித்தவனாக. “நீ முதல்ல திருந்து அந்த வைபவ் கூட சேர்ந்து புரோக்கர் தொழில் பார்க்கறதை நிறுத்து, எல்லாம் தன்னால சரியாகும் என்றாள் அவள் பதிலுக்கு.

 

 

பேசிக் கொண்டிருந்ததில் அவன் பெசன்ட் நகரில் இருக்கும் அவள் வீடு இருக்கும் தெருவிற்கு வந்துவிட அவளும் பேச்சை நிறுத்தினாள். அவள் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்த அவள் காவலாளியை கதவை திறக்கச் சொன்னாள்.

 

 

“தாத்தா கதவை அடைக்காதீங்க, இவர் போனதும் சாத்திக்கலாம் என்றுவிட்டு தலையை உள்ளுக்கிழுத்தாள். “நான் உள்ள வர்றேன்னு யார் சொன்னது என்றான் அவன்.

 

 

“நானும் நீங்க உள்ள வருவீங்கன்னு சொல்லவே இல்லையே, எனக்கு தெரியும் எப்படியும் நீங்க கிளம்பிடுவீங்கன்னு. ஏன் என்னை தெருவிலேயே இறக்கி விட்டுட்டு போகலாம்ன்னு நினைச்சீங்களா என்றாள் அவள்.

 

 

‘இவளிடம் பேசவே முடியாது என்று நினைத்தவன் காரை அவள் வீட்டின் பக்க வாயிலில் நிறுத்தினான். கதவை திறந்து இறங்கி உள்ளே செல்ல விரைந்தவளை “ஒரு நிமிஷம் என்று நிறுத்தினான் அவன்.

 

 

என்ன என்பது போல் திரும்பி அவள் அவனை பார்க்க இறங்கி வந்தவன் அவளை அருகில் இருந்த பூவரசமரத்தின் அருகே இழுத்தான். அவள் என்ன ஏது என்று யோசிக்கும் முன்பே அவளை அணைத்தவன் அவள் இதழையும் சிறை செய்தான்.

 

 

நீண்டதொரு முத்தமிட்டவன் நின்றிருந்த மழை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அறிகுறியாக தூறலாக விழுந்ததில் அவளை விடுவித்தவனுக்கு தவறு செய்துவிட்டோம் என்ற குற்ற உணர்ச்சி எழ இடக்கையால் அவள் கன்னம் தாங்கி சாரி என்றுவிட்டு வேகமாக காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

 

 

கார் வரும் சத்தம் கேட்டு முதலிலேயே வெளியே வந்துவிட்டிருந்த அவள் அன்னை இந்திரா அவர்கள் இருந்த நிலை கண்டு நிம்மதியுடன் உள்ளே சென்று விட்டார்.

 

 

கார் கிளம்பு ஓசை கேட்டு அவர் மீண்டும் வெளியில் வந்தார். “என்னம்மா கார்த்தி நீ மட்டும் வர்ற, கார் வந்த சத்தம் கேட்டுச்சே என்றார் எதுவும் தெரியாதது போல். அவள் கண்களோ வாயிலிலேயே இருந்தது.

 

 

“என்னமா நான் கேட்டுட்டே இருக்கேன், நீ வாசலையே பார்த்திட்டு இருக்க என்றார் அவர். “அவர் வந்திருந்தாரும்மா என்றாள் அவள். “யாரும்மா என்றார் அவர். “உன்னோட மாப்பிள்ளை என்றாள் அவள்.

 

 

“அப்படியா அவரை உள்ள கூப்பிடாம வாசலோடவே அனுப்பிட்டியா, என்ன பொண்ணும்மா நீ. அப்புறம் நீ அவரை என்னோட மாப்பிள்ளைன்னு சொல்றதுக்கு பதிலா உன்னோட கணவர்ன்னு சொல்லி இருக்கலாமே

 

 

“உனக்கு கணவரானதுனால தானே எங்களுக்கு அவர் மாப்பிள்ளை ஆனார் என்றார் தொடர்ந்தவாறே. “அம்மா போதும் நீ வேற ஆரம்பிக்காத, வா உள்ள போகலாம்.

 

 

“என்னாச்சு கார்த்திமா, நீ கொண்டு போன உன்னோட கைப்பை, கைபேசி எல்லாம் எங்க என்ற அன்னையிடம் “அம்மா அண்ணா எங்க எல்லாம் அவனால தான் வந்திச்சி என்று பேசிக்கொண்டே உள்ளே நுழைய அவள் அண்ணன் மாடியில் இருந்து இறங்கி வந்துக் கொண்டிருந்தான்.

 

 

“கார்த்தி என்னாச்சு உனக்கு கிஷோர் இப்போ தான் போன் பண்ணான், நீ பாட்டுக்கு பாதியில கிளம்பி வந்திருக்க, அவன்கிட்ட எதுவும் சொல்லவே இல்லையாமே, லூசா நீ என்றான் அவள் அண்ணன் முத்துக்குமார்.

 

 

“அவனை எல்லாம் உன் நண்பன்னு சொல்லாத, சீய் அவன் எவ்வளோ மோசமானவன் தெரியுமா, உன் நண்பனாச்சேன்னு தான் நான் அவன் கூட பேசினேன். அதுக்குன்னு அவன் என்ன வேணா பண்ணுவானா. அவன் என்னை தொட்டு தொட்டு பேசுறான் தெரியுமா

 

 

“நானும் முதல்ல தெரியாம பண்ணிட்டான்னு நினைச்சா, இதெல்லாம் தப்பில்லை. நீ சம்மதிச்சா நாம ரெண்டு பேரும் ஒரு நாள் ஒண்ணா இருக்கலாம் வர்றியான்னு கேட்குறான், எனக்கு வந்த ஆத்திரத்துக்கு அவனை ஒரு அறை விட்டுட்டு நான் பாட்டுக்கு கிளம்பி வந்திட்டேன் என்றாள் அவள்.

 

 

“என்ன சொல்ற கார்த்திம்மா அந்த கிஷோர் உன்கிட்ட தப்பா நடந்துகிட்டானா என்றார் இந்திரா. அவள் ஆமாம் என்பது போல் தலையை ஆட்டி அதன் பின் அவள் கல்யாணை சந்தித்ததையும் அவனுடன் வீடு வந்து சேர்ந்ததையும் சொன்னாள்.

 

 

“முத்து என்னடா இதெல்லாம் நீ எல்லாம் ஒரு அண்ணானாடா, இப்படி தான் கூட பிறந்த தங்கச்சிக்கு செய்வியா, இதெல்லாம் உனக்கு தப்பாவே தெரியலையா. என்னடா நினைச்சுட்டு இருக்க உன் மனசுல என்றார் அவர் ஆத்திரமாக. “அம்மா நான் என்ன தப்பா நடந்துகிட்டேன், கிஷோருக்கு இவளை ரொம்ப பிடிச்சிருக்கு இவளை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறான்.

 

 

“அதான் அவங்க பேசி பழகட்டும்ன்னு அனுப்பி வைச்சேன் என்றவனை அருகில் வந்து பளார் பளாரென அறைந்தார் இந்திரா. “நாளைக்கு உனக்கு ஒரு கல்யாணம் ஆகி உன் பொண்டாட்டி வருவா, உன் நண்பனுக்கு அவளை பிடிச்சா இப்படி தான் பழகட்டும்ன்னு அனுப்பி வைப்பியா என்றார் அவர்.

 

 

“அம்மா…….. என்றான் அவன் சத்தமாக, “இப்போ எப்படி இருக்கு உனக்கு, கொதிக்குதுல உன் பொண்டாட்டினா மட்டும் கொதிக்கும் அடுத்தவன் பொண்டாட்டியை அனுப்பணும்ன்னா மட்டும் இனிக்குமா என்றார் அவர் தொடர்ந்தவாறே.

 

 

“அம்மா கார்த்தி என்னோட தங்கச்சி அந்த பரதேசி பயலை கட்டிட்டு கஷ்டப்படுறா, அதுனால தானே வசதியான என்னோட நண்பனுக்கு கட்டி வைக்கணும்ன்னு நினைச்சேன் என்றான் அவன்.

 

 

“அவ உன் தங்கச்சியா இருக்கலாம், ஆனா அவ அடுத்தவன் பொண்டாட்டி அதை முதல்ல மனசுல வை. இந்த விஷயம் மட்டும் அவ புருஷனுக்கு தெரிஞ்சா என்னாகும்ன்னு யோசிச்சியா என்றார் அவர்.

 

 

“அவன் சொன்னதுல என்ன தப்பு என் பொண்ணு அந்த புரோக்கர் பயலை கட்டிட்டு கஷ்டப்பட்டதெல்லாம் போதும் என்றவாறே வந்தார் அவள் தந்தை ராஜசேகர்.

 

 

“அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை நான் அமைச்சு கொடுக்கணும்ன்னு நினைக்கிறேன். கார்த்திம்மா அண்ணா சொன்ன கிஷோர் உனக்கு பிடிக்கலேன்னா, அப்பா உனக்காக வேற ஒருத்தரை பார்க்குறேன்டா செல்லம். நீ எதுக்கு கஷ்டப்படணும் என்று மகளின் தலையில் ஆறுதலாக கை வைத்தார் அவர்.

 

 

இந்திராவுக்கோ கணவனின் பேச்சு ஆத்திரத்தை கொடுத்தது, மகனை அடித்தது போல் கணவரை செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் அவருக்குள் எழுந்தது.

 

 

‘இவரிடம் நாம் என்ன பேசுவது இவர் பேசுவது தான் சரி என்பது போல் பேசி எல்லோருடைய வாயையும் தான் அடைத்து விடுவாரே என்று நினைத்தவர் அதன் பின் வாயே திறக்கவில்லை. எதிர்த்து பேச வேண்டிய மகளும் அமைதியாக இருந்ததில் இதற்கு மேல் பேசி எந்த பிரயோஜனமும் இல்லை என்பதால் அவர் சமையலறைக்கு விரைந்தார்.

 

 

கார்த்திகா தந்தை சொல்வதில் ஒரளவு உண்மை இருந்ததில் அவளும் எதுவும் பேசாமல் இருந்தாள். ஏனெனில் அவளும் கல்யாணிடம் அதே தானே சொல்லிவிட்டு வந்திருந்தாள். அவன் புரோக்கர் தொழிலை விட்டு வந்தால் தான் அவனுடன் வாழ வருவதாக கூறியிருந்தாளே.

 

 

அவள் அறைக்கு சென்று விட்டாள். அவள் வீட்டில் மொத்தம் ஐந்து பேர், தந்தை ராஜசேகர், தாய் இந்திரா, அண்ணன் முத்துக்குமார், அடுத்து அவள், அவளுக்கு அடுத்து ஒரு தம்பி நிர்மல் குமார்.

 

 

ராஜசேகர் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் தான் என்று வாதிடும் அளவுக்கு அவர் நினைத்ததை சாதிக்கும் ரகம், இந்திரா அமைதியானவர் அவருக்கு இதெல்லாம் பிடிக்காது இருந்தும் கணவரை எதிர்த்து அவர் பேசியதில்லை, அவர் பேசவிட்டதும் இல்லை.

 

 

முத்துக்குமார் தந்தையின் மறுபிம்பம், கார்த்திகாவை எதில் சேர்ப்பது என்றே சொல்ல முடியாது. அவள் பாதி தந்தையும் மீதி பாதி தாயையும் கொண்டிருந்தாள்.

 

 

நிர்மல் அப்படியே அவன் தாயை கொண்டிருந்தான், ஆனால் ஒரு விஷயத்தில் அவன் வேறுபட்டவன், அவனுக்கு தவறென்று பட்டால் அதை முகத்துக்கு நேரே சொல்லும் வழக்கம் உடையவன் அவன்.

 

 

அவரவர் வேலையை பார்க்க சென்று விட, வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு வந்தான் நிர்மல், ‘என்னடா இது வீடு ரொம்ப அமைதியா இருக்கு, இது புயலுக்கு முந்திய அமைதியா இல்லை பிந்திய அமைதியா என்று நினைத்துக் கொண்டே சமையலறைக்கு சென்றான்.

 

 

ஏனெனில் அங்கு தானே அவன் அன்னை இருப்பார், அவரை கண்டால் தான் அவனுக்கு அன்றைய பொழுது விடியும், அவர் இருக்குமிடத்தில் தான் அவன் பெரும்பாலும் இருப்பான்.

 

 

“அம்மா அம்மா என்றவாறே நுழைந்தவனை ஏறிட்டார் அவர். “வாப்பா நிர்மல் வந்துட்டியா, போன வேலை எல்லாம் முடிஞ்சுதா, ஏதோ ப்ராஜெக்ட் பண்ணணும்ன்னு சொன்னியே என்றார் அவர்.

 

 

“முடிஞ்சுதும்மா என்றவன் அவன் வீட்டிற்குள் நுழையும் போது மனதில் நினைத்ததை அப்படியே கேட்க இந்திரா அது புயலுக்கு பின் வந்த அமைதி என்றார். என்னாச்சு என்றவனிடம் நடந்த விவரத்தை கூறினார் அவர், அந்த வீட்டில் அவருக்கு இருக்கும் ஒரே ஆறுதல் சின்ன மகன் நிர்மல் மட்டுமே. அவர் சொல்வதை கேட்டு அவருக்கு தன்னால் கொடுக்க முடிந்த ஆறுதலை கொடுப்பவனும் அவனே, அவர் மனதில் நினைப்பதை எல்லாம் அவனிடம் மட்டுமே கொட்டுவார்.

 

 

“உங்க மாமா இன்னைக்கு வீட்டுக்கு வந்ததை பார்த்ததும் நான் எவ்வளவு சந்தோசப்பட்டேன் தெரியுமா நிர்மல். ஒரு நிமிஷம் உங்க அக்கா மனசு மாறிட்டான்னு நினைச்சேன். வாசல் வரைக்கும் வந்தவர் வாசலோடவே போய்ட்டார் என்றார் அவர் வருத்தத்துடன்.

 

 

“ஆனா ஒண்ணு உங்க அக்காவுக்கு இன்னும் அவரோட நினைப்பிருக்கு, மாப்பிள்ளையும் உங்க அக்காவோட நினைப்புல தான் இருக்கார். எப்படியாச்சும் அவங்களை ஒண்ணு சேர்த்தே ஆகணும் என்றார் அவர் மனத்தாங்கலுடன்.

 

 

“என்னம்மா பண்ணலாம், அக்கா நாம சொல்றதை கேட்கணுமே என்றான் அவன். “உங்க அக்கா கேட்டாலும் உங்க அண்ணனும் உங்க அப்பாவும் அவளை கேட்க விடணுமே என்றார் அவர்.

 

 

“நம்மால முடிஞ்சதை நாம செய்வோம் தம்பி, சரி நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன். நீ சாப்பிடுறியா என்றார் அவர். கார்த்திகாவின் அறைக்கு சென்றவர் அவளை சாப்பிட அழைக்க, வேண்டாம் என மறுத்துவிட்டாள் அவள்.

 

 

பெற்ற மனம் கேட்கவில்லை சூடாக பாலை ஆற்றிக் கொண்டு வந்தவர் அவளிடம் ஒரு வாழைப்பழத்தையும் பாலையும் கொடுத்து சாப்பிட்டு படுக்கச் சொன்னார். மகளின் மனநிலையை அவரால் ஓரளவு கணிக்க முடிந்தது.

 

அவர் வெளியே செல்லும் முன் அவளிடம் “கார்த்திம்மா நீ உங்க அப்பா சொல்றதும் அண்ணா சொல்றதும் விடு. எனக்கென்னமோ உன் மனசுல இன்னும் மாப்பிள்ளை தான் இருக்கார்ன்னு நினைக்கிறேன். அதுனால தான் உன்னை கிஷோர் தொட்டப்போ உனக்கு கோபம் வந்திருக்கு

 

 

“யோசி குட்டிம்மா, உன் வாழ்க்கையை நீ தான் முடிவெடுக்கணும். நீ நல்ல பிள்ளையை தான் மாப்பிள்ளையா தேர்ந்து எடுத்திருக்க, நீ தப்பு பண்ணிட்டதா யோசிக்காதே, மேலும் தொடர்ந்தவர் “உன் வாழ்க்கையை முடிவெடுக்கற உரிமையை உங்க அப்பாகிட்டயும், உன் அண்ணாகிட்டயும் விடாதே என்றுவிட்டு அவர் சென்று விட்டார்.

 

 

அவள் எண்ணங்கள் அவள் தாய் பேசியதிலும் கல்யாணின் அணைப்பிலும் முத்தத்திலும் பின்னோக்கிச் சென்றது….

 

____________________

 

 

வீடு வந்த கல்யாணும் அவள் நினைப்பிலேயே இருக்க அவன் அறைக்கு சென்று குளியலறையில் ஷவரை திறந்து வெகு நேரம் அதனடி நின்றவனின் சூடு அந்த குளிர் நீரில் குறைந்தது போல் தோன்றினாலும் அவன் மனம் இன்னும் உளைக்கலமாகவே கொதித்திருந்தது.

 

 

உணவை மறுத்தவன் அவன் அறைக்கு வந்து படுக்க அவன் அன்னை மாதவி அவனுக்கு பாதம் பால் கலந்து கொடுத்து அவனை குடிக்கச் செய்த பின்னரே அவ்வறையை விட்டு வெளியேறினார்.

 

 

அவன் சாப்பிடாத போது அவர் எப்போதும் இது போல் செய்வது வழமையே. விடிவிளக்கை போட்டுவிட்டு படுத்தவனும் பின்னோக்கி தன் நினைவுகளை செலுத்த ஆரம்பித்தான்….

 

_____________________

 

 

முதல் நாள் பள்ளியோ கல்லூரியோ செல்லும் மாணவனோ, மாணவியோ முதன் முதலில் தன்னருகில் உட்காருபவரையே தோழமை என நினைத்து தன் நட்பு வட்டத்தை தொடங்கும்.

 

 

வைபவுக்கும் அப்படியே அவன் கல்லூரியில் அடியெடுத்து வைத்த முதல் நாள் அவன் சந்தித்தது கல்யாணை இருவரும் ஒன்றாகவே கல்லூரிக்குள் நுழைந்தனர்.

 

 

கல்யாணை பார்த்து சிநேகமாக வைபவ் புன்னகை சிந்த கல்யாண் முதலில் அவனை மேலிருந்து கீழாக அளவெடுத்தான், ‘ச்சே நான் ஏன் இப்படி அவன் உடையை ஆராய்கிறேன், இது தப்பில்லையா என்று நினைத்தவன் லேசான முறுவல் பூத்தான் பதிலுக்கு.

 

 

வைபவ் ஏழ்மையில் வளர்ந்தவன் தான் ஆனால் என்றுமே அவன் அதற்காக வருந்தியதே இல்லை. கல்யாண் அவனை ஆராயும் பார்வை பார்த்த போது அவன் மனம் சங்கடத்திற்கு உள்ளானது. இருந்தும் அவனுக்கு கல்யாணை ஏனோ பிடித்து போனது.

 

 

இருவரும் ஒரே வகுப்புக்கு செல்வதை பார்த்ததும் மீண்டும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர். கல்யாண் உள்ளே சென்று அவனுக்கு ஏற்கனவே அறிமுகம் ஆனா அவன் பள்ளித் தோழன் இஸ்மாயிலின் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.

 

 

வைபவ் எங்கு அமர்வது என விழித்துக் கொண்டிருக்கும் போதே அவர்கள் வகுப்பிற்குள் விரிவுரையாளர் உள்ளே நுழைந்தார். எல்லோரும் பொதுவாக எழுந்து அவருக்கு மரியாதை செலுத்த பதிலுக்கு தலையசைத்தவர் “இங்கு வைபவ் என்பது யார் என்றார்.

 

 

“சார் என்றவாறே நின்றிருந்தவனை அருகே அழைத்தார் அவர். “உன்னை பத்தி உன்னோட பள்ளி ஆசிரியர் எனக்கு சொல்லி இருக்கார்ப்பா, நீ தான் இந்த மாநிலத்திலேயே முதல் மாணவனா வந்திருக்க வேண்டியவன் வேறு மொழி மாற்றி எடுத்ததில் நீ அந்த வாய்ப்பை தவறவிட்டு விட்டதாக கூறினார்

 

 

“உன்னால உங்க பள்ளி பெருமை பெற்ற மாதிரி உன்னால இந்த கல்லூரியும் பெருமை அடையணும்ப்பா அதுக்கு என்னோட வாழ்த்துக்கள் என்று அவனை வாழ்த்தினார். நன்றி கூறி திரும்பி சென்றவன் மீண்டும் எங்கு அமர்வது என்று திணறிக் கொண்டிருக்க முதல் வரிசையில் அமர்ந்திருந்த பெண்ணொருத்தி அவள் பையை எடுத்துவிட்டு அவனுக்கு வழி கொடுத்தாள்.

 

 

“நன்றி என்றுவிட்டு அவளருகே அமர்ந்தான் அவன். “ஹாய் என்றாள் அவள் சிநேகமாக, “ஆமா நீங்க நெஜமாவே ரொம்ப நல்லா படிப்பீங்களா, எனக்கும் அப்படியே சொல்லித்தாங்களேன் என்றாள் அவள். “கண்டிப்பா சொல்லி தர்றேன் என்றான் அவன்.

 

 

“ஆமா நீங்க ஏன் வேற மொழி எடுத்து படிச்சீங்க, தமிழ் எடுத்து படிச்சிருக்கலாமே. அப்படி மட்டும் நீங்க படிச்சிருந்தா நீங்க தான் இந்த மாநிலத்திலேயே முதல் மாணவனா வந்திருப்பீங்க என்றாள் அவள் ஆதங்கத்துடன்.

 

 

“இல்லை எங்க அப்பா முதல்ல டெல்லில வேலை பார்த்தாங்க, அங்க எங்களுக்கு இந்தி தான் மொழியாக இருந்தது. கடைசியா அப்பாவோட இந்த ஊருக்கு வேலை மாற்றலாகி வந்தோம், வந்த ஒரு வருஷத்துல அப்பா ஒரு விபத்துல இறந்துட்டாங்க.

 

 

“இந்த ஊருக்கு வந்த பிறகு நான் அதே மொழியையே எடுத்து படித்தேன், ஆனாலும் தமிழ் எனக்கு மிகவும் பிடித்த மொழி அதுனால பேச்சு போட்டி, கவிதை போட்டின்னு தமிழ்ல நடக்குற எல்லா போட்டியிலையும் நான் பங்கெடுத்துக்குவேன்.

 

 

“போதுமா இல்லை இன்னும் என்னை பத்தி வேற விவரம் எதுவும் தெரியணுமா என்றான் சிரிப்புடன். “ஹி ஹி ஹி  போதும் என்றாள் அவள். “ஆமா இப்படி லொட லொடன்னு பேசிட்டே இருக்கியே, உன் பேரு என்ன என்றான் வைபவ்.

 

 

“என்னை பத்தி எங்க ஊருல வந்து கேட்டுப்பாருங்க, என் பேரை கேட்டாலே சும்மா அதிரும் தெரியுமா என்றாள் அவள். “ரொம்ப பில்டப்பா இருக்கே, உன் பேரும் ஊரும் தான் என்ன என்றான் அவன். “என் பேரு…….

 

 

முதல் நாள் பள்ளி

அருகமர்ந்தவன்

நண்பன் என்றேன்…

முதல் நாள் கல்லூரி

காலெடுத்து வைத்தேன்…

அருகில் மற்றுமொரு

கால் தடம் நிமிர்ந்தேன்…

உன்னை கண்டேன்

கண்டதும் நட்பு கொண்டேன்…

சிநேகமுடன் சிரித்தேன்

பதிலுக்கு சிரித்தவன்

சிரிப்பில் தள்ளி நின்றான்…

என் நட்பு புரிந்து

என்னை சிநேகிப்பான்

என்று சிநேகமுடன்…

காத்திருக்கிறேன்

அன்புடன் நட்புடன்

என்றும் வைபவ்…

 

Advertisement