Advertisement

அத்தியாயம் –1

 

 

மாங்கல்யம் தந்துனானே
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்!!

 

 

என்று அய்யர் மந்திரம் ஓத மணமகன் மணமகளின் கழுத்தில் மங்கலநாண் பூட்டினான். அய்யர் மந்திரம் ஓதுவதோடு நில்லாமல் அதற்கு அர்த்தமும் சொல்லிக் கொண்டிருந்தார்.

 

 

“மங்கலமானபெண்ணேஉன்னோடுஇன்றுநான்துவங்கும்இல்லறவாழ்வுநல்லமுறையில்இருக்கவேண்டும்என்றுஉறுதியளித்து, இந்ததிருமாங்கல்யத்தைஉன்கழுத்தில்அணிவிக்கிறேன். என்இல்லத்துணைவியாக, என்சுகதுக்கங்களில்பங்கேற்று, நிறைந்தயோகத்துடன்நீநூறாண்டுகாலம்வாழ்வாயாக”

 

 

கல்யாணும் வைபவும் அதை லயித்துக் கேட்டுக் கொண்டிருந்தனர். இருவருக்குமே கல்யாண ராசியில்லை என்பதாலோ என்னவோ அவர் என்ன தான் சொல்கிறார் என்று உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தனர். அதன்பின் மணமக்களுக்குநலங்கு எடுக்க அதற்கு ஒரு பாட்டை படித்து சுற்றினர்.

 

சீதா கல்யாண வைபோகமே
ஸ்ரீ ராம கல்யாண வைபோகமே
சீதா கல்யாண வைபோகமே
ஸ்ரீ ராம கல்யாண வைபோகமே

காணக் காண அழகாகுமே
இன்னும் ஆயிரம் கண் வேண்டுமே
காணக் காண அழகாகுமே
இன்னும் ஆயிரம் கண் வேண்டுமே
சீதா கல்யாண வைபோகமே
ஸ்ரீ ராம கல்யாண வைபோகமே…

 

கல்யாணும் வைபவும் நடப்பதை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தனர், கல்யாணமே ராசியில்லாத அவர்களுக்கு கல்யாணமே ராசியாகி போனது… என்ன ரொம்பவும் குழப்பமா இருக்கா… கல்யாணம் ஏன் ராசியில்லை என்பதை பிறகு தெரிந்து கொள்வோம்…

அது எப்படி ராசியானது என்று இப்போது பார்போம். கல்யாணும் வைபவும் சேர்ந்து கல்யாண வைபவம் என்னும் வரன் பார்க்கும் மையம் வைத்து நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

 

 

முதலில் வரன் பார்ப்பது மட்டும் செய்துக் கொண்டிருந்தவர்கள், நாளடைவில் கல்யாணத்திற்கு சமையல், கச்சேரி, பூ, தோரணம், மாலை என்று எல்லாமும் செய்ய இவர்களுக்கு என்று ஒரு நல்ல பெயர் இருந்தது. வரன் பார்ப்பதோடு அல்லாமல் நன்றாக விசாரித்து மட்டுமே அவர்கள் பதிவு செய்ய அவர்களிடம் வருபவர்கள் நம்பிக்கையுடேனே வந்தனர்.

 

 

அவர்கள் முன் நிழலாட முதலில் சுதாரித்தவன் வைபவ் தான் “சார் சொல்லுங்க கவனிக்கலை. கல்யாணம் திருப்தியா முடிஞ்சுது சார் ரொம்ப சந்தோசமா இருக்கு ரெண்டு பேரும் ரொம்பவே பொருத்தமான ஜோடி சார். என் கண்ணே பட்டுடும் போல சுத்தி போடச் சொல்லுங்க என்றான் அவன்.

 

 

கல்யாணும் எழுந்து நின்றான் “எப்படி சார் உங்களுக்கு எல்லாம் பிடிச்சுதா, எதனாச்சும் குறை இருந்தா சொல்லுங்க சார் என்றான் அவன் பெண்ணின் தகப்பனிடம்.

 

 

“எந்த குறையும் இல்லை தம்பி எங்களுக்கு ரொம்பவே திருப்தியாவும் சந்தோசமாவும் இருந்துச்சு தம்பி. இந்தாங்க உங்களுக்கு தரவேண்டிய மீதி பணம் என்று கையோடு கொண்டு வந்திருந்த பணத்தை கொடுத்தவர் அவர்களை கண்டிப்பாக சாப்பிட்டுவிட்டு தான் செல்ல வேண்டும் என்று சொல்லி அவரே அழைத்துச் சென்று அவர்களை பந்தி நடக்கும் இடத்திற்கு சென்று அமர்த்தினார்.

 

 

இருவரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்க யதேச்சையாக தலை நிமிர்ந்த கல்யாண் எதிரில் எதைக் கண்டானோ அருகில் நன்றாக மொக்கிக் கொண்டிருந்த நண்பன் வைபவை அழைத்தான். “என்னடா சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது என்னை உசுப்பினால் எனக்கு பிடிக்காதுன்னு தெரியும்ல, அப்புறம் எதுக்கு கூப்பிடுற என்றான் வைபவ்.

 

 

“டேய் அங்க பாரு எதிர்க்க யாருன்னு இவ எதுக்குடா இங்க வந்தா என்றான் கல்யாண். அப்போது தான் நிமிர்ந்தவன் எதிரில் இருந்தவளை பார்த்தான். “எதுக்கு வந்திருப்பா அவளுக்கு தெரிஞ்ச வீட்டு கல்யாணமா இருக்கும், அதான் வந்திருப்பா என்றான் அவன்.

 

 

“இவளுக்கு தான் நம்மை கண்டாலே ஆகாதே என்றான் கல்யாண். “அவ மட்டும் நம்மளை பார்த்திருந்தா இந்நேரம் அவ முகம் பாவக்காய் சாப்பிட்ட மாதிரி கோணி போகியிருக்கும் என்றான் வைபவ்.

 

 

“நாம கிளம்பலாம்டா இல்லைன்னா இவ நம்மளை பார்த்து நெறைய பேசுவா என்று கல்யாண் சொல்லிவிட்டு எழ பின்னோடு வைபவும் எழுந்தான். “கல்யாண் நான் போய் அவகிட்ட பேசப் போறேன் என்றான் அவன்.

 

 

“எதுக்குடா உனக்கு இந்த வெட்டி வேலை, வேலியில போற ஓணான் எடுத்து வேட்டிக்குள்ள விட்ட கதையா ஆகிப் போகும். நான் அவ்வளவு தான் சொல்லுவேன் அப்புறம் உன்னிஷ்டம் என்றான் கல்யாண்.

 

 

“இப்படியே விட்டா இவ ரொம்ப துள்ளுவாடா அதான் போய் கொஞ்சம் பேசி அவளை குழப்பிட்டு வர்றேன் என்றான் வைபவ்.

 

 

“நீ குழப்பப் போறியோ இல்லை அவ உன்னை குழப்பப் போறாளோ என்னமோ பண்ணிக்கோங்க, எனக்கு வேலை இருக்கு நான் கிளம்புறேன். நான் எல்லாரையும் இன்னைக்கு நம்ம ஆபீஸ்க்கு வர சொல்லி இருக்கேன். கொஞ்ச பேருக்கு இன்னைக்கே எல்லா பணமும் பட்டுவாடா பண்ணணும். நீ வளசரவாக்கம் ஆபீஸ்க்கு போயிட்டு வா என்று சொல்லிவிட்டு அவன் கிளம்பிவிட்டான்.

 

 

அவள் கை கழுவிவிட்டு வெளியே வரும் வரை காத்திருந்தான், அவள் உணவு கூடத்தில் இருந்து வெளியில் வரும் வாயிலில் நின்றிருந்தான். “என்ன கார்த்தி நல்லா இருக்கியா” என்றான் வைபவ்.

 

 

“நீ எதுக்கு இங்க வந்த என்ன வேணும் உனக்கு உன்னை யாராச்சும் கேட்டாங்களா என்னை நலம் விசாரிக்க சொல்லி வந்துட்டார் பெரிசா விசாரிக்க” என்று கோபமானாள் அவள்.

 

 

“இப்போ நான் என்ன கேட்டேன்னு இப்படி கொதிக்குற, எப்படி இருக்கன்னு கேட்டது தப்பா, நீ இன்னும் மாறவே இல்லை கார்த்தி” என்றான் அவன்.

 

 

“நீ அப்படி கேட்டது தப்பு தான், நான் அப்படியே தான் இருக்கேன் நீங்க தான் ரொம்ப மாறிட்டீங்க” என்றாள் அவள். “நாங்க மாறிட்டோமா, என்ன மாறிட்டோம், அதே மாதிரி தான் இருக்கோம். இன்னும் எந்த மாற்றமும் இல்லை. ஆனா நீ தான் மாறிட்ட உனக்கு தான் யாரும் வேணாம்னு முடிவு பண்ணிட்ட” என்றான் அவன் ஒரு மாதிரி குரலில்.

 

“உனக்கு இப்போ என்ன வேணும் இப்படி வழியை மறிச்சு நின்னா பார்க்குறவங்க என்ன நினைப்பாங்க” என்றான் அவள் சிடுசிடுவென்று.

 

 

“அதான் நானும் சொல்றேன் குடும்ப பொண்ணா லட்சணமா நீ வீட்டுக்கு வந்து குடும்பத்தை நடத்து. உனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு அதை நினை. இல்லைனா இப்படி தான் வழி மறிச்சு பேசுவேன்” என்றான் அவனும் பதிலுக்கு.

 

 

“என்ன ரொம்ப பேசுறீங்க உங்க மூஞ்சிலேயே முழிக்க கூடாதுன்னு தானே நான் தனியா வந்திருக்கேன். இனிமே உங்களை பார்த்தேன் அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்றாள் அவள் படபடப்புடன்.

 

 

“உன்கிட்ட பேச வேண்டாம் நீ மாறி இருக்க மாட்டன்னு அவன் சொன்னான், நான் தான் அவன் பேச்சை கேட்கவே இல்லை. உன்கிட்ட வந்து பேசி அசிங்கப்படுறதே எனக்கு வேலையா போச்சு. அதுக்காக நான் அப்படியே விட்டுட்டு போய்டுவேன்னு நினைக்காதே

 

 

“கண்டிப்பா உன்னை திரும்ப எங்கயாச்சும் பார்த்தா வந்து பேசுவேன், நான் இப்போ கிளம்பறேன்” என்று விட்டு அவன் கிளம்ப அவளுக்கு அப்போது தான் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது.

 

 

‘நாம ரொம்பவே தப்பு பண்றமோ, ஆனா அவனும் தான் ரொம்பவே பேசிட்டான்’ என்று அவள் நடந்ததை நினைத்துப் பார்க்க கண்ணில் நீர் அரும்பியது. ச்சே இவனை பார்த்ததினால் தான் எல்லாம் வந்தது இனி இவனை எங்கு பார்த்தாலும் நில்லாமல் சென்று விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

 

 

‘இவகிட்ட பேசி நேரத்தை வீணடிச்சுட்டோம்’ என்று நினைத்தவனாக மண்டபத்தில் இருந்து வெளியில் வந்தவன் அவன் பைக்கில் ஏறி, உதைத்து கிளப்பினான். வண்டியில் செல்லும் போது அவன் கவனம் கார்த்திகா பேசியதை மறந்து அடுத்து என்ன வேலை செய்யலாம் என்று செல்ல, யோசித்து அவன் வேலைகளை வரிசைப்படுத்தினான்.

 

 

வளைவில் அவன் திரும்ப முயலும் போது குறுக்கே ஒரு பெண் வர “ஹேய் தள்ளிப் போ, எங்க பார்த்துட்டு வர்ற” என்று அவன் சொல்ல அதை காதில் வாங்காதவள் நடந்துக் கொண்டே இருக்க அவன் பைக்கை பிரேக் போட்டு நிறுத்தினான். அவனுக்கு பின்னால் வந்த வண்டி திடிரென்று வந்த வேகத்தில் அவளை லேசாக இடித்துவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

 

இடித்ததில் கீழே விழுந்தவளின் அருகே சென்றவன், “என்னாச்சு நான் தான் கத்திட்டே இருந்தனே உனக்கு காது கேட்கலையா எங்க யோசனையில வருவ, உனக்கு ஒண்ணும் அடிபடலையே” என்று அவன் பார்க்க அப்போது தான் அவளும் பார்க்க அவள் கீழே விழுந்ததில் அவள் முழங்கையில் லேசாக சதை கிழிந்து ரத்தம் கொட்ட அதுவரை ஒன்றுமில்லை என்பது போல் இருந்தவள் அதை பார்த்ததும் மயங்கிவிட்டாள்.

 

 

‘அய்யோ ராமா இவ வேற மயங்கி விழுந்துட்டா, இவளுக்கு ரத்தத்தை பார்த்தால் மயக்கம் வரும் போலிருக்கே. என்ன செய்யறது நாமே இவளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டியது தான்’ என்று நினைத்துக் கொண்டு வழியில் சென்ற ஆட்டோவை கைக்காட்டி நிறுத்தினான்.

 

 

“அண்ணே ஒரு உதவி இந்த பொண்ணு நடந்து வந்திட்டு இருக்கும் போது ஒருத்தன் இடிச்சுட்டு நிற்காம போய்ட்டான், கைல வேற அடிபட்டு இருக்கு. நான் இவங்களை ஆட்டோவில ஏத்திட்டு வண்டியில வர்றேன். கொஞ்சம் பார்த்து கூட்டுட்டு போறீங்களா அண்ணா” என்றான் அவன்.

 

 

“சரிப்பா நீ அந்த பொண்ணை ஏத்து” என்று அவர் சொல்ல அவளை இருகைகளால் தூக்கி வந்து ஆட்டோவில் கிடத்தினான். கைகளில் நிற்காமல் ரத்தம் வழிந்தோட தன் கைக்குட்டை கொண்டு அதில் கட்டி ரத்தப் போக்கை கட்டுப்படுத்த முயன்றான். விரைந்து சென்று அவன் பைக்கை எடுத்துக் கொண்டு வந்து அவன் முன்னே செல்ல ஆட்டோ அவனை பின் தொடர்ந்தது.

 

 

வழியில் ஒரு சிறிய மருத்துவமனை தென்பட அங்கே நிறுத்தினான். ஆட்டோவிற்கு அவன் பணம் கொடுக்க அவரோ “என்னபா ரோட்டில போற யாரோ நீ, அந்த பொண்ணு யாரு என்னன்னு கூட பார்க்காம உதவி பண்ற, என்னால முடிஞ்ச உதவியா இதுக்கு நான் காசு வாங்கலைப்பா” என்றவரை வியந்து பார்த்தான் அவன்.

 

 

“அண்ணே பரவாயில்லை உங்களுக்கும் குழந்தை குட்டி இருக்கும் வாங்கிகோங்கண்ணே” என்று அவன் சொல்ல அவர் பிடிவாதமாக மறுத்துவிட்டார்.

 

 

இதற்கு மேலும் பேசிக் கொண்டிருக்க நேரமில்லை என்பதை உணர்ந்தவன் “அண்ணே நான் இவங்களை சேர்த்துட்டு வர்றேன்” என்று சொல்லி அவளை கைகளில் தூக்கிக் கொண்டு உள்ளே சென்றான்.

 

 

“என்னாச்சு இவங்களுக்கு எதுக்கு நீங்க தூக்கிட்டு வர்றீங்க” என்று எதிரில் டாக்டர் கோட் அணிந்தவர் கேட்க “நீங்க டாக்டர் தானே” என்றான் அவன்.

“ஏன்பா என்னை பார்த்தா உனக்கு டாக்டர் மாதிரி தெரியலையா” என்றார் அவர். “சாரி டாக்டர்” என்றான் அவன். “இது ஆக்சிடென்ட் கேஸ் மாதிரி இருக்கு, போலீஸ்க்கு ஒரு தகவல் சொல்லிடுங்க” என்றார் மருத்துவர்.

 

 

“இல்லை டாக்டர் இவங்க மேல தான் தப்பு நானே இவங்களை தள்ளிப் போங்கன்னு சொல்லிட்டு இருந்தேன், இவங்க காதுல அது விழவே இல்லை, அப்புறம் நான் வண்டியை பிரேக் போட்டு நிறுத்திட்டேன். ஆனா எதிர்பார்க்காம பின்னாடி இருந்து வந்த வண்டி இவங்களை லேசா தட்டிட்டு போய்டுச்சு”

 

 

“முதல்ல கீழே விழுந்தவங்க நல்லா தான் எழுந்து உட்கார்ந்து பார்த்தாங்க, எங்கயாச்சும் அடிபட்டு இருக்கா பாருங்கன்னு சொன்னேன், அவங்க கைல ரத்தத்தை பார்த்ததும் தான் மயங்கிட்டாங்க டாக்டர்” என்று அவன் நடந்ததை கூற அவளை உள்ளே அழைத்துச் சென்று படுக்க வைக்க அவர் சொல்ல அவளை கைகளில் தூக்கிக் கொண்டே சென்றான் அவன்.

 

 

அவரும் அவளுக்கு முதலுதவி அளித்து அவள் கையில் லேசாக கிழிந்திருந்த இடத்தில் ஊசியிட்டு அந்த இடத்தை மரத்து போகச் செய்து தையலிட்டு முடித்தார். அவளை அறைக்கு மாற்றச்சொல்லி விட்டு அவனிடம் வந்தார்.

 

 

“இப்போ அவங்களை வேற அறைக்கு மாத்தியாச்சு, நீங்க போய் பணம் கட்டிட்டு வந்திடுங்க. இந்த மருந்து எல்லாம் வாங்கிட்டு வந்து என்னை பாருங்க எப்பப்போ கொடுக்கணும்ன்னு நான் சொல்றேன்” என்றார் அவன்.

 

 

“டாக்டர் அவங்க இன்னும் கண்ணு முழிக்கலையா” என்றான் வைபவ். “இல்லை அவங்களுக்கு மயக்கம் இன்னும் தெளியலை, இப்போ ஊசி வேற போட்டு இருக்கோம். அவங்க எப்படியும் எழுந்துக்க ஒரு நாலு ஐந்து மணி நேரம் ஆகும்

 

 

“இப்போ அவங்களுக்கு குளுக்கோஸ் ஏத்திட்டு இருக்கோம், எல்லாம் முடிய இன்னைக்கு மாலை ஆகிடும் அப்புறம் நீங்க அவங்களை அழைச்சு போகலாம்” என்றார் அவர்.

 

 

“டாக்டர் எனக்கு கொஞ்சம் அவசர வேலை இருக்கு நான் வளரசவாக்கம் வரைக்கும் போயிட்டு மத்தியானம் வந்துடுறேன். கவுன்ட்டர்ல பணத்தை கட்டிட்டு இந்த மருந்தையும் வாங்கிட்டு வந்துடுறேன். நீங்க இப்போதைக்கு நர்ஸ் யாராச்சும் சொல்லி பார்த்துக்க சொல்ல முடியுமா. ரொம்ப முக்கிய வேலை அதான் நான் கிளம்ப வேண்டி இருக்கு” என்றான் அவன்.

“சரி நீங்க மருந்து எல்லாம் வாங்கிட்டு வந்து நர்ஸ்கிட்ட கொடுத்துடுங்க நான் அவங்ககிட்ட பேசிக்கறேன். அப்புறம் நான் கேட்க மறந்துட்டேன் இவங்க பெயர் என்ன” என்றார் மருத்துவர்.

 

 

“டாக்டர் நான் தான் சொன்னேனே எனக்கு இவங்க யாரு என்னன்னு எல்லாம் தெரியாது. இருங்க அவங்க ஒரு தோள் பை வைச்சு இருந்தாங்க அதுல எதாச்சும் விபரம் இருக்கா பார்க்குறேன்” என்று அதை தேடினான்.

 

 

அது ஆட்டோவில் வைத்த ஞாபகம் வர அவன் வெளியில் வந்தான் ‘அய்யோ ஆட்டோ கிளம்பி இருப்பாரு’ என்று எண்ணிக் கொண்டே அவன் வெளியில் வர ஆட்டோ டிரைவர் உள்ளே வந்துக் கொண்டிருந்தார்.

 

 

“தம்பி இது அந்தம்மாவோட பைன்னு நினைக்கிறேன்” என்று அவனிடம் கொடுத்தார். மேலும் தொடர்ந்தவர் “அவங்க இப்படி எப்படி இருக்காங்க தம்பி” என்றார் அவர்.

 

 

“ரொம்ப தேங்க்ஸ் அண்ணா, அவங்க இப்போ நல்லா இருக்காங்க. ஒண்ணும் பிரச்சனை இல்லை. வாங்க அண்ணா ஒரு காபி சாப்பிட்டு போகலாம்” என்று சொல்ல அவரோ மறுத்துவிட்டு கிளம்பிவிட்டார்.

 

 

அவளுடைய பையை எடுத்துக் கொண்டு அவன் மருத்துவமனைக்குள் நுழைந்தான். “டாக்டர் இதுல ஒரு டைரி இருக்கு அதுல அபிநயான்னு போட்டு இருக்கு. அதை தவிர இவங்க பையில வேற எதுவும் இல்லை, ஒரு செல்போன் கூட இதுல இல்லை” என்றான் சற்றே வியப்புடன்.

 

 

மருத்துவரும் அவளுடைய பெயரை அபிநயா என்று குறித்துக் கொண்டு கிளம்பிவிட்டார். அவனும் அவன் வேலையை பார்க்க கிளம்பிவிட்டான். அவன் வளசரவாக்கம் அலுவலகம் வந்து அடையும் போது மணி பதினொன்றை நெருங்கியிருந்தது.

 

 

அதற்குள் அவனுக்கு கல்யாணிடம் இருந்து ஏகப்பட்ட அழைப்புகள் வந்திருந்தது. ‘அய்யோ இந்த எப்படி மறந்தோம்’ என்று நினைத்தவன் உடனே நண்பனுக்கு தொடர்பு கொண்டான்.

 

 

“ஹேய் என்னடா எங்க போய்ட்ட எவ்வளவு நேரமா உனக்கு போன் பண்ணிட்டு இருக்கேன்” என்று ஆரம்பித்தவனை நிறுத்தி வைபவ் வழியில் நடந்ததை கூறினான்.

“சரிடா இப்போ அந்த பொண்ணுக்கு ஒண்ணுமில்லையே, வேற எதுவும் பிரச்சனை இல்லை தானே, நான் வேணா அங்க வரவா” என்றான் கல்யாண்.

 

 

“அதெல்லாம் வேணாம் நான் இப்போ தான் நம்ம ஆபீஸ்க்கு வந்தேன், வேலை முடிஞ்சதும் நான் ஆஸ்பிட்டல் போயிட்டு அப்புறம் அங்க வர்றேன்” என்று நண்பனிடம் சொல்லிவிட்டு வைத்தான்.

 

 

என்றும் இல்லாத அதிசயமாக அன்று அவர்களுக்கு நிறைய திருமணம் ஒப்பந்தம் வந்தது. அதில் ஐந்து பேருக்கு அவர்கள் மையத்திலேயே பெண்ணும் மாப்பிள்ளையும் அமைந்திருக்க அடுத்த மூன்று மாதத்திற்கு அவர்களுக்கு நிறைய வேலை இருந்தது.

 

 

நேரம் போவது தெரியாமல் அவன் அமர்ந்திருக்க அப்போது தான் மணி பார்த்தவன் மணி இரண்டு என்று காட்ட அங்கிருந்த பணியாளிடம் சொல்லிவிட்டு கிளம்பினான்.

 

 

“ஹலோ கல்யாண் ஒரு சந்தோசமான விஷயம் இன்னைக்கு நமக்கு பத்து கல்யாணம் பதிவாகி இருக்கு. இன்னும் மூணு மாசத்துக்கு நமக்கு கவலையில்லை” என்று வைபவ் சொல்ல, கல்யாணும் அவன் இருந்த கிளையிலும் அன்று ஆறு திருமணம் பதிவாகியுள்ளது என்றான்.

 

 

“இன்னைக்கு யார் முகத்தில முழிச்சனோ தெரியலை, எல்லாம் நல்லா நடக்குது” என்றான் வைபவ். இருவரும் ஆழ்ந்த யோசனைக்கு சென்றுவிட்டனர். அழைப்பு துண்டிக்கப்படாமலே இருக்க கல்யாண் நண்பனிடம் பேசிவிட்டு கைபேசியை அணைத்தான்.

 

 

அவனுக்குள் பழைய நினைவுகள் வட்டமிட ஆரம்பித்தது. வைபவுக்கும் அப்படியே, அவன் தன் நினைவுகளை ஒதுக்கி மருத்துவமனை சென்றடையும் போது மணி மூன்றை தொட்டிருந்தது. நேரே சென்றவன் நர்சிடம் விசாரிக்க அவளுக்கு இன்னும் விழிப்பு தட்டவில்லை என்று தெரிந்தது.

 

 

‘ஒரு வேளை நேற்று இரவு தூங்கியிருக்க மாட்டாளோ, அதான் இப்படி தூங்கிட்டே இருக்கா போல. எப்படி தூங்குறா பாரு, சரியான கும்பகர்ணி’ என்று அவன் அவளை அர்ச்சித்துக் கொண்டிருக்கும் போது மருத்துவர் உள்ளே வர அவளுக்கும் நினைவு திரும்ப ஆரம்பித்தது.

 

 

மருத்துவர் அவளை நோக்க, திகைத்து விழித்தவள் சுற்று முற்றும் பார்த்தாள். ‘இவ சினிமால வர்ற மாதிரி நான் எங்க இருக்கேன்’ அப்படின்னு கேட்பாளோ என்று அவன் நினைக்க அவளிடம் இருந்து எந்த கேள்வியும் இல்லை. “உனக்கு என்னை அடையாளம் தெரியுதா, காலையில நல்லா வேடிக்கை பார்த்துட்டே வந்தியே, தள்ளிப்போன்னு நான் சொன்னது கூட கேட்காம அடிபட்டு இப்போ மருத்துவமனையில இருக்க” என்றான் அவன்.

 

 

அவள் மீண்டும் அவனை நிமிர்ந்து பார்த்தாள், இப்போதும் அவள் பேசவில்லை. “நீ என்ன செவிடா நான் இவ்வளோ பேசிட்டு இருக்கேன். வாயை திறந்து பேசினா என்ன முத்தா உதிர்ந்து போகும். இல்லை உன் சொத்து எதாச்சும் குறைந்து போகுமா” என்றான் அவன் வெடுகென்று.

 

 

அவன் பேசுவதையே கவனித்துக் கொண்டிருந்தவள் சிரித்துவிட அவனுக்கு அது அவமானமாக இருந்தது. ‘நான் இவளை கேள்வி கேட்டுட்டு இருக்கேன், பதில் சொல்லாம சிரிச்சு என்னை அசிங்கப் படுத்துறா’ என்று நினைத்தவன், “ஹேய் நீ லூசாடி நான் கேள்வி கேட்டுட்டு இருக்கேன், நீ பாட்டுக்கு கெக்கேபிக்கேன்னு சிரிச்சுட்டு இருக்க” என்றான் அவன்.

 

 

“மிஸ்டர்…” என்று மருத்துவர் இழுக்க “உங்க பேரு” என்று அவனை நோக்க, ‘சரியா போச்சு இவரும் நம் பேரை இப்போ தான் கேக்குறாரு. நம்மளை பார்த்தா எல்லாருக்கும் எப்படி இருக்கு’ என்று நினைத்தவன் “வைபவ்” என்று அவருக்கு பதிலளித்தான்.

 

 

“வைபவ் அவங்களை பேசவிடாம நீங்களே பேசிட்டு இருக்கீங்க, கொஞ்சம் நீங்க பேசாம இருங்க. அவங்களே இப்போ தான் மயக்கத்துல இருந்து எழுந்திருக்காங்க, கொஞ்சம் பொறுமையா தானே விசாரிக்கணும்” என்றவர் அவளருகில் சென்று அவளிடம் “உன் பெயர் என்னம்மா” என்றார் அவளோ பேசாமல் இருந்தவள் ஏதோ சைகை காட்ட வைபவ் கொதித்தான்.

 

 

“ஹேய் என்ன கேள்வி கேட்டா சைகை காட்டுற, உன் மௌனவிரதத்தை எல்லாம் நாளைக்கு பார்த்துக்கலாம், அவர் கேட்குறதுக்கு முதல்ல பதில் சொல்லு” என்றான் மிரட்டலாக.

 

 

அப்போது அவள் காதிலும் வாயிலும் கையை வைத்து பின் இல்லை என்பது போல் அசைக்க அவனுக்குள் எதுவோ அசைந்தது.

 

 

அவளுக்கு வாய் பேச முடியாதென்பதும் காது கேட்காது என்பதும் அப்போது தான் புரிய ‘பார்க்க நன்றாகத் தானே இருக்கிறாள், ஆண்டவன் இவளுக்கு ஏன் இந்த குறையை வைத்தார்’ என்று மனதிற்குள் இறைவனிடம் பேசிக் கொண்டிருந்தான்.

 

‘ஆமா இந்த பொண்ணுக்கு தான் காதும் கேட்காது, வாயும் பேச முடியாது, அப்புறம் எதுக்கு தனியா வரணும், கூட யாரையாச்சும் கூட்டி வந்திருக்கலாம் தானே’ என்று மனதில் தோன்றியதும் அதை அப்படியே வெளிப்படுத்தினான்.

 

 

“ஆமா உனக்கு தான் காதும் கேட்காது, வாயும் பேச வாராதே அப்புறம் எதுக்கு நீ தனியா வந்த, துணைக்கு உங்க வீட்டில யாரையாச்சும் கூட்டி வந்திருக்க வேண்டியது தானே” என்றான் கோபக்குரலில்.

 

 

“உனக்கு மட்டும் எதாச்சும் ஆகி இருந்தா அவங்க எல்லாம் எப்படி துடிச்சு போயிருப்பாங்க” என்று மேலும் குத்தினான் அவன். மருத்துவர் “அபிநயா தானே உங்க பேரு” என்று கேட்க அவள் ஆமாம் என்பது போல் தலையசைத்தாள்.

 

 

“உங்களுக்கு நான் பேசுறது புரியுமா” என்பது போல் அவர் சைகையில் கேட்க அவள் புரியும் என்பதாய் சைகையில் மறுமொழி செய்தாள். “இவர் தான் வைபவ் காலையிலே உங்களை காப்பாத்தி இங்க கொண்டு வந்து சேர்த்தார்

 

 

“ரொம்ப நல்ல மனுஷன், உங்களுக்கு இப்படி ஆகிபோச்சேன்னு கொஞ்சம் படபடப்பா பேசுறார். தப்பா எடுத்துக்காதீங்க, இவர் தான் உங்க வைத்திய செலவு எல்லாம் பார்த்துகிட்டார்” என்று அவனை பற்றிய முன்னுரை கொடுத்தார்.

 

 

அவளும் இன்முகத்துடன் கேட்டுக் கொண்டிருக்க ‘இவளுக்கு ரொம்பவும் கொழுப்பு, நான் ஒருத்தன் இங்க காட்டு கத்தல் கத்தினேன் இவளுக்கு புரியலை. இப்போ டாக்டர் பேசுறது மட்டும் நல்லா புரியுது’ என்று அவளை வைதான். “ஏங்க நான் உங்ககிட்ட பேசுறது உங்களுக்கு புரியலையா” என்றான் அவன்.

 

 

அவனிடம் போதும் என்பது போல் ஒரு கையை உயர்த்தி காண்பித்தவள் தோள்பை அருகிருக்க அதை எடுத்தவள் அதில் இருந்த குறிப்பேடை எடுத்து பேனாவையும் எடுத்து எதையோ எழுதி அதை மருத்துவரிடம் காண்பித்தாள். அதை பார்த்தவர் சற்று அதிர்ந்து அதை அவனிடம் கொடுத்தார், அதில் இப்படி தான் எழுதியிருந்தது.

 

 

“அவரை இப்போதே இங்கிருந்து கிளம்பச் சொல்லுங்கள், அவர் செய்த உதவிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் சொல்லிவிடுங்க. மருத்துவமனைக்கு அவர் எவ்வளவு பணம் செலுத்தியிருக்கிறாரோ அதை நான் இப்போதே அவருக்கு கொடுத்துவிடுகிறேன். தேவையில்லாமல் என்னை பற்றி எதுவும் பேசவேண்டாம்” என்று அதில் எழுதியிருந்தது அவனுக்கு பயங்கர கோபமாக வந்தது.

 

 

‘ச்சே என்று விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றான். மருத்துவரும் அவன் பின்னோடு வர, அவன் யாரிடமும் பேசும் மனநிலையில் இல்லாமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டான்.

 

 

‘திமிர் திமிர் அவ்வளோ திமிர் இவளுக்கு, இதை தான் ஊமை குசும்புன்னு சொல்றாங்களோ’ என்று நினைத்தவன், ச்சே நாம இப்படி நினைக்கிறது ரொம்ப தப்பு என்று அவன் தலையில் அவனே கொட்டிக் கொண்டான். அப்போது தான் மருத்துவர் அவன் பின்னோடு வந்ததை கவனித்தான். அவரிடம் திரும்பி ஏதோ பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

 ‘ஆனாலும் இந்த பொண்ணுக்கு கொஞ்சம் ஆணவமும் செருக்கும் அதிகம் தான், நான் என்ன சொல்லிட்டேன் ஒரு அக்கறையா வீட்டில யாரையாச்சும் கூட்டிட்டு வந்திருக்கலாம்ன்னு சொன்னேன், அது பெரிய குத்தமா’ என்று நினைத்தவன் அப்படியே புலம்பிக் கொண்டே அவன் பைக்கை உதைத்தான்.

ஒருவனுக்கு கல்யாண வைபவம் அமைந்தும் மனைவியை பிரிந்து இருக்கிறான். மற்றொருவனுக்கு காதலும் கூடவில்லை, திருமணமும் அமையவில்லை. இருவருமே ஒருவகையில் அந்த பந்தத்தில் வெறுப்புற்று இருந்தனர்…

 

வாயிருந்தும் வார்த்தை

இல்லை அவளுக்கு…

செவி இருந்தும்

செவி சாய்க்க

முடியவில்லை அவளுக்கு…

 அவள் விழியே

செவிமடுத்தும்

மொழியை கண்களில்

பிரதிபலித்தும்…

அவள் எண்ணத்தை

மொழிபெயர்ப்பு செய்கிறது…

 உனக்காய் என் மனம்

துடிக்கிறது…

கடவுளை என் மனம்

நிந்திக்கிறது…

Advertisement