Advertisement

அத்தியாயம் 6
தந்தை வரதராஜனின் உயிலை கேட்டபின்,அவரது மக்கள் நால்வரும் அவரவர் மனநிலையில் இருக்க, வக்கீல் தொண்டையை செருமி அவர்களை நடப்புக்கு கொண்டு வந்தார். 
“இந்த வில்-ல்ல உங்களுக்கு டவுட் ஏதாவது இருக்கா? இருந்தா கேளுங்க”, என்று பொதுவாக சொன்னார்.
“எனக்குன்னு அப்பா குடுத்த ப்ராப்பர்டியை நா விக்கலாமில்லையா?”, பூர்ணா.
“கண்டிப்பா அதுக்கு உங்களுக்கு பரிபூரண உரிமை இருக்கு.ஆனா என்ன? நீங்க உங்க குடும்பத்துக்குள்ள தான் விக்கணும். அதாவது உங்க சொத்துக்களை வாங்கறவங்க, உங்க தம்பிங்க, தங்கச்சி, அல்லது உங்க வீட்டுக்காரர், உங்க மகள், மகன் அப்படின்னு உங்களுக்கு நெருங்கின உறவா இருக்கனும்.”
“அது ஏன் அப்படி எழுதினார்ன்னு உங்களுக்கு தெரியுமா வக்கீல் சார்?”
“உங்கப்பாக்கு அந்த சொத்துக்களை நீங்க அனுபவிக்கணும்ங்கிற எண்ணமா இருக்கலாம், அல்லது உங்க சொந்தம் விட்டுப்போகாம இருக்கணும்னு அவர் நினைச்சிருக்கலாம்”
“அதெப்பிடி சொல்லறீங்க?”, பூர்ணா.
“இப்போ உங்க வீட்டை நீங்க மிஸ்டர் ரங்கராஜனுக்கு விக்கறீங்கன்னு வைச்சுக்கோங்க, அது உங்க தம்பி வீடாகுது. சோ, நீங்க உரிமையா வந்து போகலாம். அடுத்து, பணம் குடுத்து வீட்டை வாங்கியிருந்தாலும்.. உங்க தம்பியை பொறுத்தவரை, அக்காக்கு அப்பா கொடுத்த வீடு இதுன்னு எண்ணம் இருந்துட்டே இருக்கும், அது இன்னும் உங்க உறவை பலப்படுத்தும்னு உங்கப்பா நினைச்சிருக்கலாம்”
“இது எல்லாம்  லாம் ..லாம்தானே? அப்பா என்ன நினைச்சு இப்படி எழுதினார்னு யாருக்கும் தெரியாதில்லையா?”, சுந்தர்ராஜன்.
“ஆமா,நீங்க சொல்றது கரெக்ட்தான், இது எல்லாமே என்னோட யூகம்தான், ஜஸ்ட் அனுபவ அறிவை வச்சு சொல்றது..”, என்றார் வக்கீல்.
“சரீ.. இதை அடமானமா யாருக்காவது கொடுக்கலாமா? அதாவது மூணாவது மனுஷங்களுக்கு விக்கத்தானே கூடாது.. ப்ளட்ஜ் பண்ணினா..?”, என்று சுந்தராஜன் கேட்டான். 
“இல்ல மிஸ்டர் சுந்தர்ராஜன், நீங்க அடமானம் வைக்கறதா இருந்தாலும் அதை வீட்டு ஆளுங்களுத்தான் குடுக்கணும்”, “வெளியாளுன்னா அதுக்கு உங்க குடும்ப உறுப்பினர் எல்லாரோட ஒப்புதலும் வேணும்”, என அவனது குறுக்கு புத்திக்கு தெளிவு படுத்தினார் வரதராஜனின் வழக்கறிஞர்.
முகம் சுழித்து, ”ஹ்ம்ம்.”, சுந்தர் தனது பிடித்தமின்மையை பகிரங்கமாக தெரிவித்தான். 
அதுவரை அமைதியாக வக்கீல் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்த  ரங்கராஜன், “இது எப்ப எழுதினார்ன்னு சொல்ல முடியுமா..?”, கேட்டான்.
“ஒரு அம்பது அம்பத்தஞ்சு நாள் முன்னாடி இருக்கும்,இருங்க தேதி பாக்கறேன். யா பாருங்க ஃபார்ட்டி எயிட் டேஸ் ஆகுது”, என்ற வழக்கறிஞர், சில நொடி யோசித்து, “அவர்க்கு ரெண்டு மாசம் முன்னாடி மைல்ட் அட்டாக் வந்ததுன்னு உங்க யாருக்காவது தெரியுமா?”
அதிர்வோடு, “அட்டாக்கா?”, என்று பூர்ணா, நம்பமுடியாத பாவனையில், ‘ம்..ஹும்”, மறுதலிப்பாக தலையசைத்து சொன்னது சுந்தர்ராஜன், 
தந்தையோடு ஒரே வீட்டில் இருந்தும் கூட இதைக்கூட  தெரிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறோமே என்ற குற்ற உணர்வோடு, “நோ”,சொன்ன ரங்கா, ‘எல்லாத்தையும் என்கிட்ட ஷேர் பண்ற அப்பா இத பத்தி சொல்லவேயில்லை?’, “….”, என்ற கோபத்தில் பேச்சிழந்து நின்றது மஹதி.  
அவர்களது பிரதிபலிப்பை கண்ணுற்ற வழக்குரைஞர், “யெஸ்.  அதுக்கப்பறம்தான் வரதராஜன் வில் எழுதனும்னு சொன்னார். கிட்டத்தட்ட ஒரு வாரம் கழிச்சு என்னை கூப்பிட்டார். அண்ட் வில் பத்திரத்தை என்கிட்டே தரும்போது ‘ரொம்ப யோசிச்சு தெளிவா முடிவெடுத்ததா’ சொன்னார்.”
“ஓகே, இதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்ல, வீடு நா மஹதிக்கு குடுத்துடலாம்னு இருக்கேன். அதுக்கு தேவையான ப்ரொசீஜர் பண்ணிடுங்க ஸார்”, என்றான் ரங்கராஜன்.
“டே அண்ணா, சும்மா இரு, நானே குழப்பத்துல இருக்கேன்.. நீ வேற..?”,என்று மஹதி அண்ணனைக் கடிந்தாள்.      
“சுந்தர்,ரங்கா..”, என்று அழைத்த பூர்ணா, மஹிக்கும் சேர்த்து சொல்வது போல அவளையும் ஒரு பார்வை பார்த்து, “இந்த வீடு, ஆபீஸ்  பிரச்சனையெல்லாம் நீங்க மூணு பேரும் பாத்துக்கங்க, உங்களுக்கே தெரியும் உங்க மாமாதான் XXX  கம்பெனியோட கண்ட்ரி ஹெட்ன்னு. அவர்க்கு  லீவ் கிடைக்கறது குதிரைக்கொம்பு. இப்போவே மூணு நாள்ல போயாகணும்னு குதிக்கிறார். ஆனாலும் பாரு வந்ததுலேர்ந்து போனும் கையுமா தான் சுத்திட்டு இருக்கார்”,என்று வியாபார வித்தககனான தனது கணவனின் சிறப்புகளை பாடத் துவங்கினாள்.
அக்கா என்ன சொல்ல வருகிறாள் என்று மற்ற மூவரும் கவனித்தனர். “சோ நா கிளம்பி போறதுக்குள்ள என்னோட ஷேர்ஸ் யாராவது எடுத்துக்கறதா இருந்தா சொல்லுங்க, குடுத்துடறேன். என்னால இதை எல்லாத்தையும் கவனிக்க முடியாது, அதனால லிக்விடிபை பண்ணிடறேன்”, என்றாள் பூர்ணா.
‘ஹே அக்கா?  என்ன ஆளாளுக்கு இப்படி அவசரப்படறீங்க? அப்பா செத்ததுல உங்களுக்கெல்லாம் கொஞ்சமாச்சும் வருத்தம் இருக்கா? இல்லியா?”, என்று மஹதி கோபமாக வினவ..
“இப்ப எதுக்கு நீ இவ்ளோ ஆவேசப்படற?  உனக்குத்தான் அப்பா மேல பாசம்னு காமிக்கறதுக்காகவா? அதனாலதான் உன்மேல அவரோட ஷேர்ஸ் எல்லாம் மாத்தினாருன்னு நாங்கெல்லாம் நம்பணும்னா?”, அதிரடியாக சுந்தர்ராஜன் கேட்டதும் மஹதி வாயடைத்துப் போனாள்.
அவள் மட்டுமல்ல, மஹதியின் உடன்பிறப்புகள் இருவர்(பேசிய சுந்தரைத் தவிர), மற்றும் உயிலைப் வாசித்த வழக்கறிஞர், அவரது ஜுனியர்கள் இருவர் என்று அங்கிருந்த அனைவருமே அமைதியானார்கள்.
சுற்றியிருந்தோர் ஒருவித அசூயையோடு அண்ணன் சுந்தர்ராஜனைப்  பார்ப்பதை மஹதியால் உணரமுடிந்தது. ‘ஷ்.. அவசரப்பட்டுடீங்களே அண்ணா’ மனதுக்குள் நினைத்து, அண்ணன் மூன்றாம் மனிதர்கள் வாயில் பேசு பொருளாவது பிடிக்காமல், “வக்கீல் ஸார், அண்ணா ஏதோ டிஸ்டர்ப்ட்-டா இருக்காங்க. நீங்க வந்த வேலை முடிஞ்சதில்லையா? மத்த 
பார்மாலிட்டில்லாம் அப்பறம் பாக்கலாமில்ல?”, என்றாள். 
அவள் அப்படி கேட்ட பின்னும் அங்கே நிற்க அவரென்ன குறிப்பறியா நன்மரமா? “ம்ம். நாங்க  கிளம்பறோம். பின்னால பாக்கலாம்”, என்று சொல்லி விட்டு புறப்பட்டனர். அவரது ஜூனியர்களில் ஒருவன், சுந்தரை பார்த்து தலையசைத்து செல்வதை வைத்து அவன்தான் அண்ணனின் பால்ய நண்பன் என்பதை மஹதி புரிந்து கொண்டாள்.    
பூர்ணா, “யூ சீ, எனக்கு அப்பா கல்யாணத்தபோ கொடுத்ததே தாராளமா இருக்கு. அது தவிர மாசாமாசம் வருமானம் வேற வந்துட்டு இருக்கு. நானும் அங்க சும்மா இருந்தா பரவால்ல, ரெண்டு பசங்கள கட்டி மேய்க்கறேன். உங்க அத்தானோட பைனான்ஸ் நான்தான் பாத்துக்கறேன். எனக்கு எல்லாமும் பணமா கிடைச்சா அதை சரியான முதலீடா நா மாத்திப்பேன். தவிர, ஒவ்வொரு கம்பெனி மீட்டிங்குக்கும் நா வந்து போயிட்டு இருக்க முடியாதில்லையா?”
“இதுக்கு முன்னாடி நீ வந்து போயிட்டுத்தான் இருந்தியா பூரி?”, சுந்தர்ராஜன் கேட்டான்.
“அது வேற சுந்தர், அப்பா இருந்தாரு எதுவா இருந்தாலும் அவர் பாத்துப்பாருன்னு நம்பிக்கை இருந்தது. இப்போவும் அடுத்து யார் அவரோட இடத்துக்கு வந்தாலும் சரியாதான் பண்ணுவீங்க. ஆனா, எனக்கு நீங்க சரியாதான் பன்றீங்களான்னு அப்பப்போ பாக்கத் தோணும். ஓரொரு தடவையும் மீட்டிங் வந்து போயி, நா உங்க முடிவுகள்ல தலையிட்டுன்னு.. அது ஒரு தலைவலி. உங்களுக்கு சொன்னா  புரியாது. அதை விட, எனக்கு செட்டில் பண்ணிடுங்க. நா உங்களை சுதந்திரமா விடறேன்னு சொல்ல வர்றேன்.புரியுதா?”,என்று கேட்டாள் தமக்கை.
அவள் சொல்வதில் நியாயம் இருப்பதுபோல அனைவர்க்கும் தோன்ற அமைதி காத்தனர்.
“ஹ்ம்ம் அடுத்து யார் வரணும்னுதான் தெளிவா சொல்லியிருக்காரே? ஆனா இனிமே எல்லாம் சரியா நடக்குமான்னு நீ கேட்டது கரெக்ட்தான்.அதான் எனக்கும் தெரில..”, என்று மஹதியை குறிப்பிட்டு சொன்னான் சுந்தர்.
“அண்ணா,  உங்களுக்கே தெரியும் இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லன்னு. ஆனாலும் குதர்க்கமா பேசறீங்க. நெக்ஸ்ட் என்ன பண்றதுன்னு  நீங்க சொன்னாத்தானே எங்களுக்கு ஒரு க்ளாரிட்டி கிடைக்கும்? அடுத்து ஃபர்தரா ஒரு டெஸிஷனுக்கு வர முடியும்?”
“சொன்னா மட்டும்.. கேட்டுடுவியா?”, கோபத்தின் முகம் கடுகடுக்க நின்றான் அண்ணன். 
முன்பு எப்போதோ தந்தையிடம் தனக்கு டுகாட்டி பைக் வேண்டும் என்று கேட்டபோது சுந்தர்ராஜன் இப்படித்தான் முறுக்கிக் கொண்டு நின்றான். ‘லைசென்ஸ் எடு வாங்கித் தர்றேன்’, என்று அப்பா கடிந்து சொன்னதும், அதற்குப்பிறகு மூன்று நாட்களுக்கும் மேலாக அப்பாவிடம் சுந்தர் முகம் திருப்பி நின்றதும் மஹதியின் மனதில் நிழலாடியது. அப்போது அண்ணனுக்கு ஒரு பதினாறு பதினேழு வயதிருக்குமா? 
‘அண்ணா நீ இன்னும் வளரவேயில்ல’ , என்று மனதுள் நினைத்த மஹதி,  
“கண்டிப்பா கேக்கறேன், நீங்க சொல்றது என்னை கன்வின்ஸ் பண்ணினா நிச்சயமா கேக்கறேன். ஆனா, இப்போ பூரிக்கா விஷயத்தைப் பாக்கலாமா?. அவ இன்னும் ரெண்டு நாள்ல கிளம்பனும்னு சொல்றா இல்லியா?”, என்றாள். 
இதைக் கேட்ட பூர்ணா, ‘ஷப்பா..இவதான் என் சங்கடம் புரிஞ்சி தெளிவா பேசறா’, என்று நினைத்தாள். 
“அண்ணா நீங்க பூரிக்கா ஷேர்ஸ் வாங்கிக்கறீங்களா?”, என மஹதி சுந்தரைப் பார்த்துக் கேட்க..
“இல்ல  எங்கிட்ட ஃபன்ட்ஸ் இல்ல”, என்று எரிந்து விழுந்தான் சுந்தர். 
அடுத்ததாக ரங்காவை சகோதரிகள் இருவரும் பார்க்க, “என்கிட்டயும் அவ்ளோ இருக்காது..”, என்று முனகினான் ரங்கராஜன். தகாத நட்பு, அவர்களோடு பார்ட்டி கூத்து என்று எல்லோருக்குமாக சேர்த்து ரங்கா செலவு செய்வது வீடறிந்த விஷயம். 
(நண்பனின் பிறந்தநாள் விழா கொண்டாடத்திற்காக 25 வருட பழைய வைன் (மது) தருவிப்பதற்காக, ஹெலிகாப்டர் ஒன்றை பதிவு செய்து அது கிடைக்குமிடமான ஹிமாச்சல் சென்று செலவழித்த வரலாற்றுக்கு சொந்தக்காரன் ரங்கராஜன்)
‘இவனை என்னதான் பண்றது?’, என்று எண்ணியவள்,  “அக்கா, உன் ஷேர்ஸ் வாங்கற அளவுக்கு என்கிட்டே ஃபண்ட்ஸ் இருக்கான்னு பாக்கறேன் அப்படி இல்லனா அப்பா டிவிடென்ட்ஸ் எல்லாம் இருக்குமில்ல? அதைவச்சு எப்படி செட்டில் பண்றதுன்னு நம்ம ஆடிட்டர்கிட்ட கேட்டு முடிவெடுக்கலாம். ஓகேவா?”, கேட்டாள்.
“ம்ம். ஆனா அந்த வீடு..?”
“அது இருக்கட்டும்க்கா, இப்போ.. உனக்கு தேவைப்படலைன்னாலும் பின்னால பசங்களுக்கு தேவைப்படலாம். அவங்களுக்கு அப்பா கொடுத்த கிப்ட்ன்னு நினைச்சிக்க. அன்ட் அந்த வீட்டோட மெயின்டெனன்ஸ் நாங்க யாராவது பாத்துக்கறோம். போதுமா?”
தனது கைபிடித்து ஆதூரமாகப் பேசும் மஹதியை கண்கொட்டாமல் பார்த்த பூர்ணா, “அப்படியே அப்பா மாதிரியே பேசற மஹி. அவர் அப்படித்தான் எப்பவும் சுத்தி இருக்கறவங்களைப் பத்தி யோசிச்சு முடிவெடுப்பார். யூ ஹவ் ஹிஸ் க்வாலிட்டீஸ்”, என்று சிலாகித்தாள் தமக்கை. 
அதைக் கேட்ட சகோதரர்கள் இருவரும் தங்கையை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்தனர், ரங்கா ஆமோதிப்பாக அமைதி காக்க, உண்மையை ஜீரணம் செய்ய இயலாதவனாக சுந்தர் முகம் சுழித்தான். 
அப்போது இவர்களிருந்த அறையின் கதவு மெலிதாக தட்டப்பட்டது கூடவே, “பூர்ணா.”,என்று மிருதுவான குரலின் அழைப்பும் வந்தது. அழைத்து சுரேஷ் பூர்ணாவின் கணவன். 
சட்டென தனது இருக்கையிலிருந்து எழுந்து கொண்ட பூர்ணா, “இதோ வர்றேன் சுரேஷ்”, என பதிலளித்தவள், உடன் பிறந்தோர்களைப் பார்த்து, “அவருக்கு என்ன வேணும்-ன்னு பாத்துட்டு வர்றேன்”, என்று வெளியேறிய பூர்ணா அங்கிருந்தவர்களுக்கு அப்படியே அவளது அம்மாவின் பிரதியாக தெரிந்தாள். 
அந்நேரத்தில் சுந்தர்ராஜனின் அலைபேசி இசைக்க, யாரென்று எடுத்து பார்த்தவன், “ஆங். ஆமாமா, இன்னும் இருக்கு”, என்றான். அடுத்து மறுமுனையில் இருப்பவன் பேசுவதை கேட்டபின்,  “தாராளமா வா ஆஷு. இனிமேதான் புறப்படனும் . இன்னும் டைம் ஆகும்”,என்றான். அழைப்பை துண்டித்துவிட்டு, அனைவர்க்கும் பொதுவாக, “ஆஷு வர்றான்”, என்று சொன்னவன், ”இப்போ என் பிரச்சனைக்கு வரலாம்னு நினைக்கறேன் மஹி”, என்றான்.
‘ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில் கண்’, என்பது சுந்தர் அண்ணாவுக்குப்  பொருந்தும்’ என்று நினைத்த மஹதி, “ஹ்ம். அதுக்கு முதல்ல நீங்க உங்க ப்ராப்ளம் என்னன்னு என்கிட்டே சொல்லணுமே அண்ணா?”, என்றாள்.
அமர்ந்திருந்த இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்ட சுந்தர், “நா ஒரு ப்ரொடக்ஷன் கம்பெனி ஆரம்பிச்சிருக்கேன் மஹி”, என்று ஆரம்பித்தான்.
புருவம் சுருக்கியவள், “ஓ! ஆனா நம்மளோடதே ப்ரொடக்ஷன் யூனிட் தான அண்ணா?”, புரியாமல் கேட்டாள் மஹி.
“ம்ச். நா சொல்ற ப்ரொடக்ஷன் பிலிம் இண்டஸ்ட்ரி. படம் தயாரிக்கிறது மஹி”,என்று சுந்தர் விளக்கமாக சொல்லவும், இன்னமும் திணறலாக விழித்தாள் மஹி. ரங்காவுக்கு இது ஏற்கனவே அரசால் புரசலாக தெரியுமாதலால் அவனுக்கு அதிர்ச்சி என்று பெரிதாக இல்லை.
“ஆனா, அண்ணா ஏன்?”, ‘அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்மந்தம்? என்பது போல, சுரங்கத்திற்கான இயந்திரங்கள் தயாரிப்பவனுக்கும் சினிமாவுக்கும் என்ன சம்பந்தம்? அதை விட இதை ஆரம்பிக்க என்ன தேவை வந்தது இவனுக்கு?’
“என்னது ஏன்?”
“அது நம்ம ஃபீல்ட்-டே கிடையாது. நமக்கு என்ன எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு அதுல?”, என்று அவளையும் சேர்த்து சொன்னாள் தங்கை.
“மஹி, அனுபவமிருக்கிற ஆள் ஒருத்தனை பாட்னரா சேர்த்திருக்கேன், சோ அது பத்தி கவலையில்லை”, தீர்மானமாக சுந்தர் சொன்னான்.
“சரி, தரோவா யோசிச்சு தான் ஆரம்பிச்சிருக்கீங்க?”
“முன்ன பின்ன யோசிக்காம செய்வேனா?”, என்று கேட்ட சுந்தர், எங்கோ பார்த்தபடி, “ஆனா இந்த நம்பிக்கை அப்பாக்கு இல்லாம போச்சு..”
“ஆஹான்..?”, ‘அப்பாக்கு நம்பிக்கை வர்ற அளவு நீ நடக்கலைன்னு சொன்ன சரியா இருக்கும்னு தோணுது’ 
இவர்களது உரையாடலில் குறுக்கிடுவது போல, கதவு தட்டப்பட, வந்திருப்பது யாரென்பதை தெரிந்து கொள்ள “எஸ்..?”, என்று கொஞ்சம் சத்தமாகக் கேட்டான் சுந்தர்.
வெளியே இருந்து, “இட்ஸ் ஆஷுதோஷ்”, என்றான். ஆஷு.
“ப்ளீஸ் கம் இன்”, என்று ரங்கா சொல்ல.. 
ஆஷுதோஷ் “ஹலோ எவிரிபடி …”, என்றபடி உள்ளே வந்தான். 
இரு தலைகள் வரவேற்பதுபோல ஆமோதிப்பாக ஆடியது.
“கூப்பிட்டிருந்தீங்க..?”
“யா. ப்ளீஸ்.. உக்காரு”, சுந்தர்ராஜன்.
அங்கிருந்த மற்றவர்களின் முகங்களை வைத்து எந்த ஒரு யூகத்துக்கும் ஆஷுவால் வர இயலவில்லை. ‘சரி இந்த சுந்தர் என்ன சொல்ல வர்றார்னு கேப்போம். ஒருவேளை என் மெஷினோட ப்ரொடக்ஷன் பத்தியா இருக்குமோ?’, யோசனையோடு அமர்ந்தான். அவனது மனம் பரபரப்பாக நிகழ்தகவு நடத்திக் கொண்டிருந்தது. 
 “ஒண்ணுமில்ல, அப்பா அவரோட உயில்ல ரேவா-வோட ப்ரொடக்ஷன் யூனிட்டை நீ பாத்துக்கணும்னு சொல்லியிருக்கார். அதை சொல்லத்தான் கூப்பிட்டேன்.”
“ஓஹ்..?”, இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து சுரங்க இயந்திரங்களும் இனி ஆஷுதோஷின் மேற்பார்வையில் தயாரிக்கப்படும். இதற்கு முன்னும் ஆஷு இதைத்தான் செய்து கொண்டிருந்தான். ஆனால் அது வரதராஜனின் கீழ் வேலை செய்பவன் என்ற முறையில்.
ஆனால் இப்போதோ முற்று முதலாக அனைத்தும் அவனது கட்டுப்பாட்டில் வரப்போகிறது என்பதை அறிந்தவனின் மனம் வேகமாக அடித்துக்கொண்டது. “பட்..?”
“இரு இரு பட்.. ல்லாம் வேண்டாம். உன்னை அப்பாவோட இடத்துக்கு அதாவது ப்ரொடக்ஷன் ஹெட் ஆ ப்ரமோட் பண்றோம்.”
“…”
“தென் நீ தயாரிக்கிற மெஷினுக்கு உண்டான பேடண்ட் ரைட்ஸ் உன்னோடதுன்னு அப்பா சொல்லியிருக்கார்”, ரங்கராஜன்.
“இதை.. அவரோட உயில்ல சொல்லியிருக்காரா?”, கேட்ட ஆஷுவின் குரலில் நம்பமுடியாத பாவனை.
“எஸ்.. அது மட்டுமில்ல, ‘எனது நண்பன்’னு உங்களை மென்ஷன் பண்ணியிருக்கார்”, என்று சொன்னது மஹதி.
மிக மெல்லிய பெருமிதமான முறுவலொன்று ஆஷுவின் முகத்தில் வந்தமர்ந்தது. “ரியலி?”
“எஸ், இதோ பாரு”, என்ற ரங்கராஜன் ஆஷுதோஷ்க்கு உயிலின் நகலைக் காண்பித்தான். 
சில நொடிகள் அமைதியாக அதை பார்வையிட்ட ஆஷுதோஷ், “உங்களுக்கு ஆட்சேபனை இல்லன்னா, இதை ஒரு போட்டோ எடுத்துக்கட்டா?”, ஆஷு.
இதனால் பின்னால் விளையப்போகும் அனர்தங்களை உணராமல், “ம்ம்”, என்று தலையசைத்து ஆமோதித்தான் சுந்தர்ராஜன்.
சிறிது நேரத்தில் ஆண்கள் மூவரும் வரதராஜனின் அஸ்தியை கரைப்பதற்காக வெளியே செல்ல ஆயத்தமாக, மஹதி அடுத்து என்ன செய்வது என்ற யோசனையோடு அவளது அறைக்குச் சென்றாள்.
தனது அலைபேசிக்கு வந்திருந்த தவறிய அழைப்புகளை பார்த்த மஹதி, அடுத்து புலன  குறுஞ்செய்திகளை மேய்ந்து பின் தனது மின்னஞ்சல்களை பார்வையிட்டாள். அதில் முதன்மையாக இருந்தது, வரதராஜனிடமிருந்து வந்திருந்த காணொளியொடு கூடிய மின்னஞ்சல்.
‘அப்பாட்டேர்ந்து மெயிலா?’,என்று சிலநொடிகள் அதை ஆச்சர்யத்தோடு பார்த்தவள், பின் ஒருவர் இறந்தபின்னும் இப்படி தனது அன்பானவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பும்  வசதி இருப்பது நினைவுக்கு வர, “அப்பா.. எனக்கு அப்படி என்ன தகவல் அனுப்பியிருக்கீங்க?”, என்று வாய்விட்டு கேட்டபடி தனது மேக் புக் மடிக்கணினியை திறந்தாள் மஹதி.
)))))))))))))))

Advertisement