Advertisement

அத்தியாயம் 2
சுந்தர் அண்ணா எங்கே?  என்று கேட்டதற்கு பதிலேதும் கூறாமல் திகைத்து நிற்கும் ஆஷுதோஷைப் பார்த்து புருவம் சுருக்கிய மஹதி, “அண்ணா எங்க? என்ன விஷயம்?”, என்று மீண்டும் அழுத்தமாகக் கேட்டாள். 
“நிஜமா சுந்தர் சார் எங்கன்னு தெரில மேம், ஆனா எதனால இங்க இருந்து போனார்னு தெரியும்..”
சின்ன புருவ சுழிப்புப்போடு, “ம்ம்?”, என மஹதி நிறுத்த..
“அது.. உங்க எல்டர் ப்ரதருக்கும் சாருக்கும் ஒரு க்ளாஷ் போய்ட்டு இருந்தது வரைக்கும் தெரியும். லாஸ்ட் மந்த் இங்க வந்து பெரிசா ரகளை பண்ணிட்டு போனார். ஆனா முழுசா என்ன பிரச்சனைன்னு தெரில, மே பி உங்க ரெண்டாவது அண்ணாக்கு தெரிஞ்சிருக்கலாம்”
“ம்ம்.”, “சரி, ரங்கண்ணா எங்கன்னு தெரிஞ்சதா?”,என்று தனது இரண்டாவது அண்ணனைப் பற்றி விசாரித்தாள் மஹதி.
“யா, கோவளம் ரிசார்ட்-ல இருந்தார்,அவரை கூட்டிட்டு வர சொல்லி ஆளுங்க கிட்ட சொல்லி இருக்கேன். மேக்ஸிமம் இன்னும் அரை மணி நேரத்துல வந்துடுவார்”
“குட். பட் இங்க அப்பா பக்கத்துல வரும்போது ரங்கா சுத்தமா தெளிவா வரணும். என்ஸ்யூர் இட்”, என்று மஹதி கட்டளை போல சொல்லவும்..
ஆஷுதோஷ் முகம் சுருக்கினான். “கூட்டிட்டி வரத்தான் முடியும் மேம். தெளியறது அவர் கைல தான் இருக்கு”, என்றான் வெடுக்கென.
அவனது சுழித்த முகம் பார்த்தவள், ‘நா சொன்னதுல இவனுக்கு என்னவோ பிடிக்கல.ஹ்ம்ம்’ ,என்று யோசித்த மஹதி, “இல்ல அடுத்தவங்க முன்னால அண்ணா மரியாதை குறைச்சலா இருக்கக் கூடாதில்ல?, அதும் அப்பா இப்படி இருக்கும்போது…  அதுக்காகத்தான் சொன்னேன்”, என்று கூறி, முன்பு கட்டளையாகக் கூறியதை இப்போது வேறு வகையாக மாற்றி சொன்னாள்.  
’எது  எப்படியிருந்தாலும் காரியத்தை சாதிக்கற அப்பாவோட புத்தி அப்படியே இருக்கு’ என்று மனதில் நினைத்த ஆஷுதோஷ் நீண்டதொரு பெருமூச்சோடு, “யெஸ் மேம்”, என்றான்.
அவனது அந்த நீள் பெருமூச்சு மஹதியின் கவனத்தைக் கவர, ஆஷுதோஷை முழுவதுமாக கவனித்தாள், ‘வயது முப்பதுகளின் துவக்கத்தில் இருக்கும், குறிப்பிட்டுச் சொல்லும்படி அதிக  உயரமில்லை, தொப்பையோ கூனோ இல்லாத உருவம் என்பதால் உயரமாகத் தெரிந்தான். உதடுகளில் கருமை வரவா வேண்டாமா என்று இருந்தது. கொஞ்சமாக புகைப்பான் போலும். கூர்மையான கண்கள்.. சிவந்திருந்தன, இரவு முழுவதும் விழித்திருந்த சோர்வோ?  ம்ம் இல்லை. அதில் கூடுதலாக எதையோ இழந்த சோகம் இழையோடுகிறதே?. ம்ம். காரணம் அப்பாவாக இருக்குமோ?’, என்று யோசித்தவளுக்கு திடீரென ஒரு சந்தேகம் தோன்ற,  “சுந்தரண்ணா இங்க வந்து ரகளை பண்ணினது உங்களுக்கு எப்படி தெரியும்?”, எனக் கேட்டாள். 
“நா சார் கூடதான் எப்போதும் இருப்பேன்”, என்று ஆஷுதோஷ் சொல்ல..
இடது கைநீட்டி ஆஷுதோஷை ஆள்காட்டி விரலால் சுட்டி, “யூ மீன்.. நீங்க இங்க வீட்ல..?”, என்று இடது புறம் தலை சாய்த்து கேட்கும் போது அவளது முகத்தில் நம்ப மறுக்கும் பாவனை தொக்கி நின்றது. 
அவளது செய்கையில் ‘ஏன் இந்த பேலஸ்-ல இருக்க எனக்கெல்லாம் தகுதி கிடையாதா என்ன?’ என்று ரோஷமுற்ற ஆஷுதோஷ் தாடை இறுக, “ஆமா, நா இங்கதான் தங்கியிருக்கேன், அதுவும் ராஜ் ரொம்ப கம்பெல் பண்ணி சொன்னதால..”, என்று அழுத்தமாகச் சொன்னான். 
இந்தக் கேட்டதும் மஹதியின் கண்கள் விரிந்தது. யாரை ராஜ் என்று சொல்கிறான் இவன்?  என் அப்பாவையா?, “ராஜ்..?”, என்று  சந்தேகமாக மஹதி கேட்டாள்.
“யா. ஐ மீன் மை பாஸ்”, என்றவன் உடனடியாக குரல் பேதமுற, “நோ.. மை எக்ஸ் பாஸ்”, என்று சொல்லும் போது வரதராஜன் நினைவில் அவனுக்கு முகம் கசங்கியது.  
இதைக் கேட்ட மஹதிக்குத் திகைப்பாக இருந்தது. “எங்கப்பாவை பேர் சொல்லி கூப்புடுவீங்களா?”, யூ கால் மை டாட் பை நேம்? என்று ஆங்கிலத்தில் கேட்டாள்.  
தனது தொண்டையை அடைத்த துக்கத்தை விழுங்கியவாறே,  “ம்ம், நாங்க தனியா இருக்கும்போது ..”, என்று சொன்ன ஆஷுவின் நெற்றி சுருங்கி கண்கள் கலங்கியது.  
‘ஹே நா உன் பிரென்ட்தான? அப்ப பேர் சொல்லி கூப்பிடு மேன்’, என்று சொல்லி என் வயிற்றில் குத்தி “ஐ வன்ன ஸ்டே எங் ஃபார்வ்ர்*”, என மைக் பெர்ரி யின் பாடலை உற்சாகத்தோடு பாடிய மஹதியின் தந்தை, என் மரியாதைக்குரிய நண்பன் ராஜ் இப்போது உயிரோடில்லை. 
‘இந்த பொண்ணு என்னமோ உலக அதிசயம் போல எங்கப்பாவை பேர் சொல்லி கூப்பிடுவியான்னு கேக்குது, ப்ச்சை.. என்ன வாழ்க்கைடா இது? நிம்மதியா உக்காந்து அழக்கூட முடியாம?’
‘முதல்ல இந்தாள அனுப்பி வச்சிட்டு இங்க இருந்து வெளிய போகணும். நமக்கு இவ்ளோ அட்டாச்மெண்ட்-ல்லாம் ஆகாது’, என்று ஆஷுதோஷ் நினைத்தான். 
அவன் கண்கள் கலங்கியது வெளியே தெரியாமல் இருக்க இருமுறை இமை சிமிட்டி சரி செய்து கொண்டான் ஆஷு. ஆனால் அதற்குள்ளாகவே அவனது கலக்கத்தை புரிந்து கொண்டு, “டூ யூ மிஸ் ஹிம்?”, என்று கேட்ட மஹதிக்கு ஆஷுதோஷின் மீது அவளையறியாமலேயே மரியாதை வந்திருந்தது.
கண்ணை இறுக மூடிக்கொண்டு, “யா. ரொம்ப.. “. என்று தலையசைத்தான். பின்  நீளமாக மூச்சை உள்ளிழுத்து மஹதியைப் பார்த்து , “But.. I have promises to keep*”, என்று ஆஷு உள்ளார்ந்து சொன்னபோது எதிரே இருந்த மஹதி இன்னும் ஆச்சர்யமானாள். 
அவன் சொன்ன இந்த ஒரு வரியிலேயே மஹதிக்கு ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது. இவனுக்கு என் அப்பாவை நன்றாகத் தெரியும் மிக நன்றாக.
‘எப்போதெல்லாம் தாங்க இயலாத துக்கம் வருகிறதோ அப்போதெல்லாம் இந்த வரிகளை அப்பா நினைவு கூர்ந்து, வாழ்வின் பிடித்தங்களுக்கும் இலக்குகளுக்கும் உண்டான வித்தியாசத்தை புரிந்து மனிதன் அவனது கடமையை செய்து, வலிகளை கடந்துகொண்டே இருக்கவேண்டும் என்று கூறுவார். 
‘என் தந்தை இவன் நண்பனா? அவ்வாறெனில் ஆஷுதோஷிடமும் இதை கண்டிப்பாக பகிர்ந்திருப்பார் இல்லையென்றால் அவருக்குப் பிடித்த ராபர்ட் ஃப்ராஸ்ட்-ன் கவிதை வரிகளான, 
 “அடர்ந்து இருள் படர்ந்து மிக
 அழகாய் இருக்குது காடு
 நான் கொடுத்த வாக்குறுதிகள் உண்டு 
                      காப்பதற்கு 
கடந்து போக வேண்டும் இன்னும் 
     பல காதம் – உறங்கும் முன் 
 இன்னும் பல காதம் கடந்து 
      போகவேண்டும் –  நான் உறங்கும் முன்”, 
இவை இந்த நேரத்தில் இவனிடமிருந்து வருமா? 
‘உனக்கு என் தந்தையை அவ்வளவு தெரியுமா?’ தன்னையறியாது அவனருகே வந்து “And miles to go before I sleep”, என்று அடுத்த அடியை மஹதி கண்ணில் நீர் திரையிட சொல்ல.. 
‘ஓஹ்! இவளுக்கும் ராஜ்-ஜின் ரசனை தெரியுமோ?’ என்று தன் அப்பாவின் பிரிவை முதன் முறையாக பிரதிபலிக்கும் வலி மிகுந்திருந்த மஹதியின் முகத்தைப் பார்த்த ஆஷுதோஷும், கவிதையின் கடைசி  வரியை அவளோடு சேர்ந்து மொழிந்தான். “And miles to go before I sleep”, என்று முடிக்கும்போது இருவருமே கலங்கி இருந்தனர்.
 சில நொடிகள் ஆஷு மஹதி  இருவரும் அவரவர் மனதுக்கு நெருக்கமான இறந்தவரின் நினைவில் இருக்க அங்கே கனமான மௌனம் குடிகொண்டது. 
சற்று நேரத்திற்கெல்லாம் ஆஷுதோஷின் அலைபேசி ஒலியெழுப்பியதில், “ஹூ..ஃப்”, என்ற சப்தத்தோடு தனது வருத்தத்தை புறம்தள்ள நினைத்த ஆஷு, அருகே சிலையென நின்ற மஹதியின் முதுகை இருமுறை தட்டி, “மைல்ஸ் டு கோ”, என்று அர்த்தத்தோடு ஆறுதல் சொன்னான். 
கண்ணில் கடலளவு சோகம் சுமந்த மஹதி, தோளைத்தட்டிய ஆஷுவின் கையை இருகைகளால் அழுந்தப் பற்றி, “யா. மைல்ஸ் டு கோ”, என்று தன் கீழ் உதட்டை பல்லால் கடித்து தன் அழுகையை விழுங்கினாள். 
மெல்ல மஹதியிடமிருந்து தனது கையை விடுவித்துக்கொண்ட ஆஷுதோஷ், அலைபேசியை பார்த்தவாறே, “நா போயி உங்க அண்ணா வந்துட்டாரா பாக்கறேன். ஏதாவது சாப்ட்றீங்களா?”, அறையின் வாசலை நோக்கி நடந்தபடி கேட்டான்.
“எஸ். பசிக்கிது, ஆனா.. வீட்ல சமைக்க கூடாது-ன்னு சொல்வாங்களே?”
“ஹோட்டல்-ல சொல்லியிருக்கேன். குக் நம்ம அவுட் ஹவுஸ்-ல காஃபி, டீ மட்டும் ரெடி பண்றாங்க.”
“நீங்க ஏதாச்சும் சாப்டீங்களா?”
“ல்ல. எனக்கும் சேர்த்து இங்க அனுப்ப சொல்றேன். சாப்பிடலாம்”, என்று அறையை விட்டு வெளியேறிய ஆஷுதோஷ், சட்டென நின்று, “வெயிட் பண்ணாதீங்க. வெளிய சார் பக்கத்துல நீங்க இருக்கனும், சோ நீங்க ஃப்ர்ஸ்ட் சாப்டுடுங்க”, என்று விட்டு சென்றான்.
மஹதிக்கு என்னமோ ஒரு அமைதி, மனதின் துக்கம் கொஞ்சம் வடிந்தாற்போல் இருந்தது. அந்த அறையில் இருந்த கவுச்சில் கால் நீட்டி அமர்ந்து கொண்டாள். பின் எந்த சிந்தனையும் இன்றி, பின்னால் முதுகை சாய்த்து கண்களை மூடிக்கொண்டாள்.
அடுத்த பத்து நிமிடத்தில், ‘டக் டக்’ என கதவு மெலிதாக தட்டப்படும் ஓசை கேட்க, திரும்பி யாரெனப் பார்த்தாள். உணவு அடங்கிய ஃபுட் ட்ராலியோடு ஒருவன் நிற்க, தலையசைத்து அவனை உள்ளே அனுமதித்தாள்.
“சர்வ் பண்ணட்டுமா மேம்?”, என்று அந்த வேலையாள் கேட்க..
“நா பாத்துக்கறேன்”, என்று சொல்லிவிட்டு அவனை வெளியே அனுப்பினாள்.
பின் ஒரு பீங்கான் தட்டத்தை எடுத்து, இரண்டு இட்லியை போட்டு வயிற்றுக்குள் தள்ளி, அடுத்து ஒரு சப்பாத்தியை மஹதி முடிக்கும் தருவாயில் ஆஷுதோஷ் வந்தான்.
“உங்க ரெண்டாவது அண்ணா வந்துட்டார், இன்னும் கொஞ்ச நேரத்துல ப்ரெஷப் ஆகி வருவார். அப்பறம், பூர்ணா மேம் ஏர்போர்ட் வந்துட்டாங்க. பிக் அப் பண்ணியாச்சு. ஆன் தி வே-ல இருக்காங்க. தென் பார்கவி அண்ணி, உங்க அப்பா பக்கத்துல இருக்காங்க. உங்களை கேட்டாங்க, இப்போ வந்துடுவீங்கன்னு சொல்லிட்டு வந்திருக்கேன். அவங்க தம்பி முரளியும் கூட வந்துருக்கார்”, என்று  மளமளவென ஒப்பித்தவன், நின்றபடியே தட்டம் எடுத்து நான்கு இட்லிகளை பரத்தி மேலே சாம்பார் ஊற்றிகொண்டான்.
ஆஷுதோஷின் துரிதமான செயலில் அவனது பசியின் அளவு தெரிந்தது.
“ம்ம்”, என்று சொன்ன மஹதி, “உக்காரலாமே?”, என்றாள்.
“ப்ச். அதுக்கெல்லாம் டைமில்ல, இன்னும் அரைமணி நேரத்துல சாருக்கு அஞ்சலி செலுத்த தொழிற்துறை அமைச்சர் வர்றார், செக்யூரிட்டிக்கு போலீஸ் வருது, நீங்களும் சீக்கிரம் தயாராகி வாங்க”, எனும்போது இட்லி காலியாகி இருந்தது.
“அண்ணியோட பசங்க வரலையா?”, என்று மஹதி கேட்க..
முள் கரண்டியையும், ஸ்பூனையும் தட்டிலேயே வைத்து விட்டு டிஷ்யூ எடுத்து கையை துடைத்துக் கொண்ட ஆஷுதோஷ், “நா பாக்கல, அங்க ரஷ் அதிகமா ஆயிடுச்சு, யார் யாரோ வர்றாங்க. எனக்கு தெரிஞ்சவங்களை நா பேசி சமாளிக்கறேன். உங்க சின்னண்ணாட்ட சீக்கிரம் பேசிட்டு, சுந்தர் எங்கன்னு தெரிஞ்சிக்கங்க அண்ட், உடனே அவரை வெளிய சார்கிட்ட அனுப்புங்க”, மடக் மடக் என்று தண்ணீரைக் குடித்து விட்டு, அறையை விட்டு வெளியேறுவதற்குள்ளாகவே மூன்று அலைபேசி அழைப்புகள்.
“சுந்தர் சார் சென்னையை விட்டு வெளிய எங்கயும் போகல, எல்லா ரூட்-ஸ் ம் செக் பண்ணிட்டேன். ரங்கா கிட்ட கேட்டு அவரை வரவழைங்க”, என்று ஆஷுதோஷ் சொல்லும்போது அது கட்டளையாக வந்தது.
ஆஷுதோஷ் பேசியதை கேட்டதும், அவனது பரபரப்பு மஹதியையும் தொற்றிக் கொண்டது. செய்யவேண்டிய வேலை தலைக்குமேல் இருக்கும்போது எங்கேயிருந்து இந்த த்வனியையெல்லாம் கவனிப்பது? அதிலும் எல்லாவற்றையும் முன் நின்று நிர்வகிப்பவனிடம்? மஹதிக்கு அவ சொல்வது சரியென்றே பட, நிமிடத்தில் தனது முகம் திருத்தி, தன்னை ஹூடியில் இருந்து குர்திக்கு நுழைத்துக் கொண்டாள். கையில் தோதாக ஒரு ஸ்டோல் கிடைக்க அதையும் கழுத்தை சுற்றி அணிந்து கொண்டவள், நேரே தனது சின்ன அண்ணனிடம் பெரியண்ணனைப் பற்றிய விபரம் கேட்கப்போனாள்.
)))))))))))))))))))
*https://www.youtube.com/watch?v=er4eQSIC4J0 மைக் பெர்ரி ன்னு ஒரு சிங்கர் பாடின பாட்டு, ஆக்சுவலா காதலர்களுக்குண்டானது. நட்புகளுக்குள்ளயும் படலாம் வரிகள் நல்லாயிருக்கும்.
*பிரபல கவிஞர் ராபர்ட் ஃப்ராஸ்ட்-டோட ‘ரோட்ஸ் நாட் டேக்கன்’, ‘ஸ்டாப்பிங் பை உட்ஸ்’ ல்லாம் அவரோட பிரபலமான கவிதைகள். குறிப்பா இந்த கவிதை படிக்கறவங்க மனநிலையை பொறுத்து ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அர்த்தம் குடுக்கும்.
Stopping by Woods on a Snowy Evening
Whose woods these are I think I know.
His house is in the village though;
He will not see me stopping here
To watch his woods fill up with snow.
My little horse must think it queer
To stop without a farmhouse near
Between the woods and frozen lake
The darkest evening of the year.
He gives his harness bells a shake
To ask if there is some mistake.
The only other sound’s the sweep
Of easy wind and downy flake.
The woods are lovely, dark and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.
(+2 நான்-டீட்டைல்-ல கூட வந்திருக்குன்னு பொண்ணு சொன்னா)
இதெல்லாம் எதுக்கும்மா ன்னு கேட்டீங்கன்னா, சரின்னு விட்டுடறேன். கருத்துக்களை பதிவு பண்ணிட்டு போங்க friends..

Advertisement