Advertisement

அத்தியாயம் பதிமூன்று :

வாணிக்கு இன்னும் இரண்டு நாட்களில் திருமணம்! நாளை நிச்சயதார்த்தம்! பாட்டி “நாம ஏதாவது செய்யணும் கண்ணு” என நச்சரித்து இருந்ததினால், அவள் கண்ணனைக் கேட்க “ஏதாவது செய்யணும்னா நீ வீட்டுக்குத் தான் வரணும், அப்போ தான் வாங்கிப்போம்!” என தெளிவாக சொல்லியிருந்ததினால், இதோ காலையில் மகனை அழைத்துக் கொண்டு வாணியை கடைக்கு அழைத்துப் போக கண்ணனின் வீட்டிற்கு வந்திருந்தாள்.

சுந்தரியும் மகனும் வீட்டிற்குள் நுழைவதை பார்த்தவனுக்கு, இதனை செய்து முடிக்க எத்தனை சிரமங்கள் எனத் தோன்றியது. கனகா தான் முதலில் அவளைப் பார்த்தவர் “வா சுந்தரி, வா, வா” என, குரல் கேட்டு விமலாவும் வந்தவர், “வா சுந்தரி” என அருகில் வந்து பேரனைத் தூக்க,

அங்கேயே அமர்ந்திருந்த கண்ணன் ஒரு புன்னகை மட்டுமே செய்தான், வா என எல்லாம் சொல்லவில்லை. சுந்தரி அருகில் வரவும் கைவேலையாய் இருந்தவன் “உட்காரு” என சொல்லி அதனை அவளிற்கும் பகிர முயல,

சுந்தரி எதிர்பாராத போது, தயங்கி நின்றவளின் கை பிடித்து இழுத்து விட, அவன் அருகில் தொப்பென்று அமர்ந்தாள். அவள் முறைக்கவும் “என்ன முதலாளியம்மா முறைப்பு! என் மேலேயே இழுத்து விட்டிருப்பேன், இப்ப தான் வீட்டுக்கு வந்திருக்க, பயப்படுத்த வேண்டாம்ன்னு விட்டுட்டேன்!” என,

“இவரு மேல இழுத்து விட்டுக்கிட்டா நான் பயப்படுவேனா, ஹய்யோ! வெறும் வாய் தான்” என மனதினில் நினைத்துக் கொண்டாலும் வெளியில் சொல்லவில்லை!   

“ஓஹ், வீட்டுக்கு வந்துட்டேன்னு அப்படியே வான்னு கூப்பிட்டிங்களாக்கும்” என்றவளிடம், “உன் வீட்டுக்கு வர உன்னை அழைப்பாங்களா, வேலையை பாருடி” என அதட்டி வேலையில் கவனமானான். இப்போது இருவருக்குள்ளும் சகஜமான பேச்சுக்கள் இருந்தது.

ஆம்! கண்ணன் சுந்தரியிடம் வேலைக்கு சேர்ந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. அவளது வேலையை எல்லாம் தனதாக்கி கொண்டான். அவளும் வேலை செய்தால், ஆனால் முன்பு போல செய்தே ஆகவேண்டும் என்ற கட்டாயமில்லை.

கண்ணிடம் ஒரு சாவி இருந்தது, காலையில் நான்கு மணிக்கு அவர்களின் தோப்பு வழியாக சென்று சுந்தரியின் வீடு செல்லும் கேட் திறந்து உள் சென்றான் என்றால், அவனின் வேலை ஆரம்பமாகிவிடும். அவன் மோட்டார் போட்டு தண்ணீர் எடுத்து விட்டு இருக்கும் போதே ஆட்க்கள் பூப்பறிக்க வந்து விடுவர், அதன் பின்னே தான் சுந்தரி வருவாள். அவனுடன் தனிமையில் இருக்கும் சந்தர்பங்களை தவிர்த்து விடுவாள்.

பின்னே மாயக் கண்ணனாய் மயக்கி தான் இருந்தானே! அதனைக் காட்டி கொள்ளவும் மாட்டாள், ஒத்துக் கொள்ளவும் மாட்டாள். ஆம்! அவளின் கால் புண் ஆறும்வரை ஒரு சிரமும் இல்லாமல் அவளை கவனித்துக் கொண்டான். அவள் சொல்ல சொல்ல வேலைகள் செய்தான். அதனால் இன்னும் விரைவாக எல்லாம் பிடிபட்டு போயிற்று.

அன்று ஒரு நாள் இரவு மட்டுமே தங்கினான். அடுத்த நாள் பாட்டி வந்து விட, “ப்ளீஸ், உங்க வீட்டுக்கு போங்க” என்று அவள் கெஞ்ச, போய்விட்டான். சண்டையிட்டால் முறைத்து நிற்கலாம், கெஞ்சும் பெண்ணிடம் என்ன செய்வது. ஆனால் காலை முதல் இரவு வரை வேலை இருக்கும் போதேல்லாம் வந்து விடுவான். பின்பு மகனையும் பார்த்துக் கொள்ள வேண்டுமே!

ஒரு மாதத்தில் சுந்தரிக்கு நன்றாகி விட, அவள் வந்து விட்ட பிறகும் அவன் அசையவில்லை. அவளின் கழுத்தில் இருந்த தாலி அவனின் சரிவருமா என்ற கேள்விகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளி, இன்னும் அவள் உன் மனைவி தாண்டா என சொல்லிக் கொடுக்க, அதன் பிறகு அவன் வேறு யோசிக்கவேயில்லை. தானாகவே இணைத்துக் கொண்டான்.   

கூட இருப்பதினால் அவளுக்கு வரும் பணத்தின் அளவு தெரிய, அதை என்ன செய்கிறாள் என்று பார்க்க, ஒன்றும் செய்யவில்லை! பணத்தை எல்லாம் ஆங்காங்கு போட்டு வைத்திருக்க, கொஞ்சம் பணம் மட்டுமே பேங்கில் இருக்க, “இவ்வளவு பணத்தை வீட்ல போட்டு வைப்பாங்களா?” என முறைத்து அவளின் பேரிலும் பாட்டியின் பேரிலும் போட்டு வைத்தான். பின்னே லட்சகணக்கில் பணம் வீட்டினில் இருந்தது.

“கரையான் அரிக்க விட்டுருப்ப போலயே” என சலித்துக் கொள்ள,

“தினமும் பேங்க போக முடியாது! எனக்கு அந்த ஏ டி எம் கார்டு உபயோகிக்க தெரியலை! யாரையாவது கேட்க வேண்டியிருக்க! சரி பேங்க் போய் எடுக்கலாம்னா, அதை எழுதும் போது சின்ன தப்பு இருந்தாக்கூட அங்க இருக்குறவன், கத்துறான், அதனால எனக்கு பேங்க் போகப் பிடிக்காது!” என,

“எவ்வளவு பணம் தெரியுமா?” என அவளையே அழைத்துப் போய் அவளுடன் இருந்து டிபாசிட் செய்ய வைத்தான். அப்போதுதான் அவளின் அப்பா பேரில் இருந்த பாஸ் புக் கொடுக்க, அதிலும் இரண்டு லட்சத்திற்கு மேல் இருக்க, “இதை ஏன் இன்னும் அப்படியே விட்டு வெச்சிருக்க” என,

“எதோ சர்டிஃபிகேட் எல்லாம் கேட்டாங்க! அப்போ எனக்கு ஒன்னும் புரியலை, விட்டுட்டேன்” என, அதில் நாமினி இல்லை! அவளின் அப்பாவின் இறப்பு சான்றிதல் வாரிசு சான்றிதல் கொடுத்து மாற்றினான். இப்படிப் பல வேலைகள் வரிசை கட்டி நின்றன. அவனின் வீட்டினில் எல்லாம் எதுவும் அவன் செய்யவில்லை. அப்பாவும் சித்தப்பாவும் இருக்க அவனுக்கு செய்ய எதுவும் இல்லை.                       

நர்சரியை இன்னும் விஸ்தரித்து இருந்தனர். தெரிந்ததை வைத்து சுந்தரி செய்து கொண்டிருக்க, அதற்கென இருக்கும் ஆட்களை கூட்டி வந்து ஆலோசனை கேட்டு இன்னும் சிறப்பாக செய்ய வைத்தான். தென்னத் தோப்பு, மாந்தோப்பு என எல்லாம் இப்போது அவனின் பராமரிப்பே!

என்ன அவன் நுழையாத இடம்? மண் புழு உரம் தயாரிக்கும் இடம்! மாட்டுக் கொட்டகை! இரண்டும்! அதில் பார்வையிடுவான், ஆனால் இறங்கி வேலை செய்ய மாட்டான். வேலையை விட்டு வந்து விட்டாலும் சில ஆன்லைன் வேலைகள் பார்க்க, அதில் வருமானமும் வந்தது.  

வெயிலில் நிற்கும் நேரங்கள் குறைந்து நிழலில் இருந்ததால் சற்று நிறமும் திரும்பியிருந்தது சுந்தரிக்கு. இன்று அதனை யோசித்து தான் சுந்தரியை பார்த்து இருந்தான். புடவையும் அவளுக்கு எது பொருத்தமோ அதனையே அணிய வைத்தான். மேலே தூக்கி கட்டினால் “மண் ஆனா ஆயிட்டு போகுது, கீழே இறக்கி கட்டலை நானே இறக்கி விடுவேன்!” என அதட்டி மிரட்டி அவளின் உடையின் பாங்கை மாற்றி இருந்தான்.

தோற்றத்தில் ஒரு தெளிவு வர, அது இன்னுமே ஒரு நிமிர்வைக் கொடுத்தது சுந்தரியிடம்.   

வாணி அதற்குள் வந்து “போகலாமா அண்ணி” என்றாள்.

“ம்ம்” என சுந்தரி எழ, அப்போதும் அசையாமல் கண்ணன் அமர்ந்திருக்க, “நீங்க வரலையாண்ணா?” என வாணி கேட்க, “உங்க அண்ணி கூப்பிடவேயில்லையே” என கண்ணன் சொல்ல,

“அப்போ, அப்போ, உங்க அண்ணன் துரைன்னு அவரோட பேரை நிருபிப்பாரு”  என சுந்தரி முறைக்க, “அண்ணா, வாண்ணா!” என வாணி சிணுங்க, “சரி, சரி” என எழுந்தான். வாணி உள்ளே செல்ல, “முதல்லாளியம்மான்னு சும்மா கூப்பிட்டு நக்கல் செய்ய வேண்டியது, ஆனா ஒரு பேச்சும் கேட்கறது இல்லை!” என நொடிக்க,

“நீ என்னோட ஒரே ஒரு பேச்சைக் கேளு, நான் உன்னோட எல்லா பேச்சையும் கேட்கறேன்!” என டீல் பேச,  

“நீங்களும் கேட்க வேண்டாம்! நானும் கேட்க வேண்டாம்!” என பேச்சை முடித்து விட, அவளை முறைத்து கொண்டே எழுந்து தயாராக சென்றான். ஆம், ஒரு வாரம் முன்பு தான் பேசினான், நாம சேர்ந்து வாழலாம்” என,

“எனக்கு அதுல இஷ்டமில்லை” என்றாள் உடனே, அவள் சொன்ன விதமே, கண்ணன் கேட்டால் அப்படி ஒரு பதிலைச் சொல்ல வேண்டும் என யோசித்து வைத்திருப்பாள் என புரிந்தது.

“நீ எங்க வீட்டுக்கு வரவேண்டாம், உனக்கு அங்கே மனசு ஒப்பாது தான்! நீ இங்கேயே இரு! நான் இங்கேயே வந்துடறேன்! எதுவானாலும் கொஞ்சம் வருஷம் கழிச்சு பேசலாம்!” என எவ்வளவோ பேச, “இந்தப் பேச்சே வேண்டாம்! நீங்க இங்க எந்த வேலையும் செய்ய வேண்டாம்! உங்க வீட்டு வேலையைப் பாருங்க!” என்று கிளப்பிவிட,

“போடி! உன்னை மாதிரி போன்னு சொன்னா போயிடுவேனா அதெல்லாம் உன்னால போக வைக்கவே முடியாது!” என்று திமிர் பேசிச் சென்றான்.  

கண்ணன் ரெடியாக ரூமிற்கு செல்ல, பின்னோடு சென்ற மகனிடம், “உங்கம்மாவை இழுத்து வா” என சொல்லிக் கொடுக்க, அதற்குள் சுந்தரிக்கும் கண்ணனிற்கும் காஃபியோடு வந்த விமலா “எங்கே அவன்?” எனக் கேட்க.. “அப்பா அங்க” என்று அபி காட்ட, “அவனுக்கு இதைக் கொண்டு போய் கொடு சுந்தரி” என விமலா கொடுக்க,

“நானா!” எனக் கேட்டு அப்படியே நின்றாள். “போ! சுந்தரி” என விமலா வற்புறுத்தி சொல்லி அபியைக் கூட்டிக் கொண்டு நகர்ந்து விட,  தயங்கித் தயங்கி அவனின் அறைக்குள் நுழைந்தாள்.

அவள் திருமணமாகி வந்த அறை, அந்தக் கட்டிலும் மெத்தையும் அவளின் அப்பா வாங்கிக் கொடுத்தது, அந்த டிரெஸ்ஸிங் டேபிள், அந்த பீரோ என எல்லாம் பார்த்து நின்றாள். அதனை திரும்ப அவளின் வீட்டிற்கு அனுப்பிவிடும் தைரியம் யாருக்கும் இல்லை. அதனால் அங்கேயே இருந்தது. குளியறையில் முகம் கழுவி வெளியே வந்தவன், “வாங்க, வாங்க பொண்டாட்டி!” என்றான்.  

பின்னே எத்தனை முறை அழைத்தும் வீட்டிற்கே வந்ததில்லை. எப்படியோ இன்று வந்து விட்டாள். “பொண்டாட்டி” எனக் கூப்பிட்டதும், அவனை கடுப்பாக்க, “நான் உங்க முதலாளியம்மா” என,

“அதெல்லாம் இந்த ரூம்க்கு வெளியே” என்றவன் கையினில் இருந்த காஃபியை வாங்கி வாயினில் அதனைப் பருக, கண்களில் சுந்தரியைப் பருகினான். அவளதும் கையினில் இருப்பதை பார்த்து “குடி” என, இவன் செய்யும் அட்டகாசங்களில், தலை வேதனை கொடுக்க, காஃபியும் தேவையாய் இருக்கக் குடித்தாள். அவள் குடிக்கும் வரை பொறுமை காத்தவன், “என்னை விட கலராகிட்ட நீ, எப்படி ஆன?” என அவளை சீண்ட,

“என்ன உளறல்?” என, “வா, வா, கண்ணாடில காட்டுறேன்” என அவளை அழைத்துப் போய் முன் நிறுத்தி, சற்று குனிந்து அவளின் முகத்தின் பக்கம் முகம் வைத்து “பாரு” என,

இந்தச் செயலை எதிர்பார்க்கவேயில்லை. காலில் சுடுதண்ணீர் பட்டு வெந்து விட்ட போது சில முறை உதவுவதற்காக தொட்டிருக்கிறான். அதன் பின் எல்லாம் இல்லவே இல்லை. இன்று இப்படி செய்வான் என எதிர்பார்க்கவில்லை! “என்ன பண்றீங்க? விடுங்க, விடுங்க” என அவள் விலக முயல, ஆசையாய் விடாமல் இடையோடு இறுக்கிக் கொண்டான், “செமையா ஷேப் ஆகிட்ட நீ” என,

திமிரி அவள் விடு பட முயல, இன்னும் இறுக்கி கொண்டான், அசையவே முடியவில்லை, “இன்னொரு குழநதையை கொடுத்து திரும்ப எல்லோரும் என்னை கேள்வி கேட்க வைக்கப் போறீங்களா” என,

அப்படியே அவனின் அசைவு நின்றது, உடனேயே திரும்பி அவளைப் பார்த்து நின்றவன் “நீ அதை மறக்கவே மாட்டியா” என,

“எப்படி முடியும், முடியலை!” என கண்கள் கலங்க,

“தெரியாம நடந்துட்ட விஷயம் அது, விட்டுடு! ஆனா பையன் வந்தது தெரியாம நடந்த விஷயமில்லை, தெரிஞ்சு நடந்த விஷயம்!” என சொல்லி அவளின் முகம் பார்க்க,

அவனின் பார்வையை சந்திக்காமல் வேறெங்கோ பார்த்தாள். “என்னை பாரு சுந்தரி” என அதட்டி அவளின் முகத்தை அவனை நோக்கித் திருப்பவும், முகம் திரும்பினாலும் உன்னை பார்க்க மாட்டேன் என கண்களை மூடிக் கொள்ள,

மூடிய கண்களில் மேல் அழுத்தமாக முத்தமிட்டு விலகினான். கண்களைத் திறந்து அவனை வெறித்துப் பார்க்க “சாரி, ராங் ப்ளேஸ்ன்னு கோபமா” என அவளை இன்னும் சீண்டிக் கொண்டே இதழை நெருங்க “மா” என மகனின் சத்தம் கேட்க அவசரமாக விலகினான்.

“என்னடா அபி இப்படிப் பண்ணிட்டே?” என அப்பா முகம் சுருக்கிக் கேட்கவும்,

புரியாத போதும் “ன்னப்பா?” எனபது போல ஏதோ ஒரு வார்த்தையை அவன் உதிர்க்க.. “போடா” என்றவன், “சரி நான் உனக்குக் கொடுக்கறேன், நீ அம்மாக்கு குடுத்துடு” என மகனின் கன்னத்தில் முத்தமிட, மகன் அம்மாவின் கன்னத்தில் முத்தம் பதித்தான். எப்போதும் நடக்கும் விளையாட்டு தான் இது.

அதற்குள் தேறி இருந்த சுந்தரி வெளியேறப் போக, “இரு, இரு” என்றவன், “நானும் குடுத்தே ஆகனும்” என மகனின் முகத்தை அந்தப் புறம் திருப்பி உதட்டில் மின்னலென முத்தமிட்டு தான் விலகினான்.

“எனக்கு இதெல்லாம் பிடிக்கலை” என சுந்தரி பேச, “அப்போ எனக்கு சான்ஸ் குடு, உனக்கு எது பிடிக்குதுன்னு டெஸ்ட் பண்ணலாம்” என,

“உன்னையே எனக்கு பிடிக்கலை, உன் முத்தமும் எனக்கு பிடிக்காது” என பிடிவாதமாய் சொல்ல, “போடி, போடி முத்தம் பிடிக்கலைன்னா வேற என்ன பிடிக்கும்னு பார்க்கலாம்” என,

“இப்படி எல்லாம் என்கிட்டே பேசாதீங்க, எனக்கு பிடிக்கலை” என சலித்து அவள் செல்ல, சற்று கவலையாகித் தான் போயிற்று, உண்மையிலுமே இவளுக்கு என்னை பிடிக்கலவில்லையா என,

ஆனால் கஜினி முகமதாய் விடாமல் படை எடுக்க கங்கணம் கொண்டு, எல்லாம் துடைத்து விட்டு மனைவி மகன் தங்கைகளோடு கிளம்பினான். மூன்று பேருமே கிளம்பி இருந்தனர்.

கண்ணன் புதிதாக அவர்களின் வீட்டினில் வாங்கியிருந்த ஸ்கார்பியோவை எடுத்தான். வாங்கிய போது அவளிடம் சென்று காட்டியவன், சில முறை வாயேன் கொஞ்சம் தூரம் போகலாம் என எவ்வளவோ அழைத்தும் வரவில்லை. பேங்க் போகும் போதும் டூ வீலரில் ஏற மாட்டாள், பஸ்ஸில் தான் வருவாள். அவள் பஸ்ஸில் வருவதால் இவனும் பஸ்ஸில் செல்ல வேண்டியிருக்கும்.

சில விஷயங்களை மாற்றவே முடியவில்லை. ஊருக்கே இவன் அவர்கள் வீட்டில் தான் இருக்கிறான் எனத் தெரியும். ஆனாலும் தள்ளி தான் நிற்பாள். பல சமையங்களில் அப்படி ஒரு கோபத்தைக் கொடுக்கும், ஆனாலும் உடனே இல்லாவிட்டாலும் மாறுவாள் என்ற நம்பிக்கை இருந்தது.  

தங்கைகள் மூவரும் பின் ஏறிக்கொள்ள, “நீங்க முன்ன போங்க” என சாருவிடம் சொல்ல, “அண்ணா அப்புறம் வண்டியே எடுக்க மாட்டான், நீங்க உட்காருங்க அண்ணி” என சாரு பேச “முடியாது” என அவள் நிற்க, முன் சீட்டினில் ஏறியிருந்த மகன் அவனின் பக்கத்தில் தட்டி “உட்காரு” எனக் காட்டினான்.

“ஏறு” என்று கண்ணன் சொல்லவேயில்லை, ஆனால் ஏறாவிட்டால் வண்டி நகராது என்பது போல நிற்க, “அண்ணி ஏறுங்க ப்ளீஸ்” என சாரு கேட்க, அரை மனதாய் ஏறினாள்.

“ஓவரா சீன போடாதடி” என்பது போல ஒரு லுக் விட்டு அவன் பார்க்க, அந்த வீட்டின் கேட்டையே புதிதாய் பார்ப்பவள் போல அதனையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் மகனை மடியில் அமர்த்தி முன் புறம் அமர்ந்து, கணவன் வண்டியினை ஓட்ட, மனதிற்கு என்னவோ அவ்வளவு இதமாய் இருந்தது. ஒரு புது மயக்கம் மனதினில். அதனை முகத்தில் காட்டாது இருக்க மிகவும் பிரயர்த்தனப்பட்டாள்.

கடைக்கு சென்று நிறுத்தி தங்கைகள் இறங்கவும், “இரு ஒரு நிமிஷம்” என நிறுத்தி மனதில் நினைத்ததை அப்படியே சொன்னான், “ஓவரா சீன போடக்கூடாது, புரிஞ்சதா, எல்லோரும் நம்மையே கவனிக்கற மாதிரி!” என்றவன் அவள் பதில் பேசும் முன்னயே “என்ன வாங்கப் போற” என,

“தெரியலை” என்றவள், “இதுக்கு எது வருதோ வாங்குங்க” என அவளின் கையினில் இருந்த மஞ்சள் பையினில் இருந்த ஒரு பேக் எடுத்து அதைக் காட்ட, பணம் தான் எடுத்து வந்திருக்கிறாள் என நினைத்து வாங்க, அதில் இருந்தது குட்டி குட்டி தங்க பிஸ்கட்கள், நூறு கிராம் எனப் போட்டு ஐந்து இருக்க,

“ஏது இது?” என்றான் அச்சர்யமாக,

“அப்பா எனக்கு நகையெல்லாம் வாங்கலை, இந்த மாதிரி தான் வாங்கி வெச்சிருந்தாங்க. அப்புறம் நீ உங்க வீட்டுக்குப் போய் உனக்கும் அவங்களுக்கும் பிடிச்ச மாதிரி வாங்கிக்கோ சொன்னாங்க, ஆனா சந்தர்ப்பமே வரலை” என்றாள்.

“அப்போ உன்கிட்ட எதுவுமே இல்லையா?” என்றவனிடம், “இருக்கு! செயின், வளையல், ஒரு நெக்லஸ் இருக்கு. அது போதும் எனக்கு! நான் எங்கே போறேன், எனக்குத் தேவையில்லை!” என,

சுறு சுறு என ஒரு கோபம் ஏற, “நிஜமாவே உனக்கு என்னோட சேர்ந்து வாழற எண்ணம் கொஞ்சம் கூட இல்லையா” என,

“சில சமயம் ஆசையா இருக்கு, ஆனா நிஜம்மா விருப்பமில்லை, பயமா இருக்கு! திரும்ப என்னை பிடிக்காம விட்டுட்டுப் போயிட்டீங்கன்னா” என

மேலே எதுவுமே பேசவில்லை, அவளின் கையினில் இருந்த கட்டிகளை வாங்கியவன், அவனின் பேன்ட் பேக்கட்டில் போட்டுக்கொண்டான்.

எதுவும் பேசுவானோ என்று அவனின் முகம் முகம் பார்க்க, “நீ இறங்கு, நான் கார் பார்க் பண்ணிட்டு வர்றேன்” என முடித்துக் கொள்ள வேறு வழியில்லாமல் இறங்கினாள்.

வாணிக்கு ஐந்து பவுனில் ஒரு நெக்லஸ் அவளுக்குப் பிடித்த மாதிரி எடுத்தார்கள், பின்பு கூட இரு தங்கைகள் இருந்ததால், அவர்களுக்கு ஆளுக்கு ஒரு தோடு எடுத்தார்கள். பின்பு மூவரிடமும் “உன் டிரஸ் வாங்கணும் சொன்னியே வாணி, நீங்க ஒரு ஆட்டோ பிடிச்சு போயிட்டு வந்துடுங்க, இங்க எங்களுக்கு கொஞ்சம் வேலை இருக்கு. அபியையும் கூட்டிக்கிட்டு போங்க” என்று பணத்தை அவர்களிடம் கொடுக்க,

அவர்கள் செல்லவும், “இன்னும் வாங்கியிருக்கலாமே” என்றவளிடம், “அதுக்கு மேலே எல்லாம் நீ செய்யக்கூடாது! அதுவே அதிகம்! இது உங்கப்பா உனக்குக் குடுத்தது!” என கறாராக பேச, அதற்கு மேல் சுந்தரி பேசவில்லை.

“உங்கப்பா உனக்கு குடுத்தது, நீ முதல்ல அதை நகையா மாத்து” என வர்புறுத்தியவன், “நாளைக்கு நமக்கு பொண்ணு பிறக்கும் போது வேற சேர்த்துக்கலாம்” என,

சுந்தரி அவனையேப் பார்த்திருக்க, கண்களோடு கண்கள் கலக்க விட்டவன், எவ்வளவு அடிச்சாலும் இவன் தாங்குவாண்டா என்பது போல “இந்த ஜென்மத்துல இனி உன்னை விடறதா எனக்கு ஐடியா இல்லை” என சொல்லி தோளைக் குலுக்கினான்.

 

Advertisement