Advertisement

2
செங்கதிருக்கு மதுரை அழகர் நகரில் சொந்தமாய் தையல் கடை ஒன்று உள்ளது. அவன் வீடும் கொஞ்சம் தள்ளி அருகேயே இருப்பதால் மதிய உணவிற்கு அவன் வீட்டிற்கு சென்றிருந்தான்.
அப்போது தான் அவன் கடையில் இருந்து அவனுக்கு போன் வந்தது நாச்சியப்பன் பேசினார்.
“அண்ணே நீங்க நம்ம சிவாவை வெட்டச் சொல்லுங்க. மணி இதெல்லாம் செய்ய மாட்டான். இவ்வளோ நேரம் நான் கரடியா கத்திட்டு இருக்கேன். அவன் முடியலைன்னு சொல்றான்”
“இதுக்கு தான் அவனுக்கு மாச சம்பளமே கொடுக்கலாம்ன்னு சொன்னேன், நீங்க தான் தினமும் பேசிக்கலாம்ன்னு சொல்லி இப்போ அவன் தினமும் குடிக்கறான், கை நடுங்குது, கால் நடுங்குதுன்னு சொல்லிட்டு இருக்கான்”
“கதிரு இந்த முறை அவனை விட்டிருப்பா”
“எங்க விடுறது நானு. நிம்மதியா ஒரு மனுஷன் ஒரு வாய் சோறு சாப்பிட முடியலை. மணி மூணாகுது, இப்போ தான் வந்தேன் வீட்டுக்கு. எல்லா அளவும் வரைஞ்சு வைச்சுட்டு தானே வந்தேன்”
“அதை வெட்டி வைக்க எவ்வளவு நேரம் ஆகும் நீங்களே சொல்லுங்க”
“என்னப்பா நீ எப்பவும் நிதானமா தானே பேசுவே, இப்போ மட்டும் ஏன் இப்படி??”
“எனக்கு குடிக்கறவங்களை கண்டாலே ஆகாதுன்னு உங்களுக்கு தெரியும்ல, நீங்க சொன்னீங்கன்னு தானே அவன் குடும்பத்தை பார்த்து வேலை கொடுத்தேன்…”
“ஆமாப்பா”
“அப்போ அவனை ஒழுங்கா நடந்துக்க சொல்லுங்க. வேலை பார்க்க முடியலைன்னா வேலையை விட்டு நின்னுக்கட்டும்” என்றான் தயவு தாட்சண்யம் இன்றி.
“இது கடைசியா இருக்கட்டும்ப்பா, நான் அவன்கிட்ட பேசறேன்”
“இது தான் கடைசிண்ணே” என்றுவிட்டு அவன் போனை வைக்க அவன் அன்னை அவனை கவலையாய் பார்த்தார்.
அதில் முகத்தை சீராக்கியவன் “ஒண்ணுமில்லைம்மா” என்றான்.
“உனக்கு குடிக்கறவங்களை கண்டா பிடிக்காதுன்னு எனக்கு தெரியும். எல்லாருக்கும் தெரியுமா கதிரு, கொஞ்சம் நிதானமா பேசி இருக்கலாமே. நம்மளை மாதிரி தானேப்பா அவனுக்கும் குடும்பம் குட்டின்னு இருக்கும்…”
“அதனால தான்மா என் கோபமே. நம்மளை அப்பா தவிக்கவிட்ட மாதிரி தான் அவன் அவங்க குடும்பத்தை விடுறான். அதை நினைச்சு தான் எனக்கு டென்ஷன் ஆகுது. அவனுக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு வேற” என்றான் செங்கதிர்.
“என்னை மாதிரி தானேம்மா அந்த பையனுக்கும் தோணும். நம்ம அப்பா தெருமுனையில விழுந்து கிடக்குறாருன்னு பார்த்திட்டு வந்தவங்க சொன்னப்போ, நீங்க போய் கூட்டிட்டு வரேன்னு போனீங்க…”
“உங்களை விட்டு நான் போய் கூட்டிட்டு வந்தேனே, அதை இப்போ நினைச்சாலும் என்னமோ மாதிரி இருக்குமா. எவ்வளவு அசிங்கமா இருந்துச்சு தெரியுமா, அதெல்லாம் நினைச்சா அவ்வளவு கோபம் வருது எனக்கு”
“விடு செங்கதிர் உங்கப்பாவும் போய் சேர்ந்தாச்சு இனி எதுக்கு அந்த பேச்சு…”
“அவரை நான் எதுவும் சொல்லலைம்மா. வீட்டில குடிக்கறவன் ஒருத்தன் இருந்து அவனால குடும்பத்துல இருக்கவங்க மன உளைச்சலுக்கு ஆளாகற கொடுமை எல்லாம் யாருக்கும் வரவேண்டாம்”
“என்னைக்கு அரசாங்கமே சாராயக்கடையை எடுத்து நடத்த ஆரம்பிச்சுதோ அன்னைக்கே வீடும் கெட்டு நாடும் கெட்டு போச்சு. நாம இதுல சொல்ல என்ன இருக்கு” என்றார் அவன் தாய் ராஜாத்தி.
“ஏன் இல்லாமம்மா நாம எல்லாம் சேர்ந்து தட்டிக்கேட்கணும்??”
“அதுக்கு எல்லாரும் ஒழுங்கா இருக்கணும். ஊர் கூடினாத்தானேப்பா தேர் இழுக்க முடியும். நாம இன்னைக்கு போய் போராட்டம்ன்னு உட்காருவோம், நம்ம கூட ஒரு பத்து பேரு கூட வரமாட்டான்… என்னன்னு நாம செய்யறது சொல்லு??”
“அம்மா பத்து பேரு வரணும்ன்னு நாம ஏன்மா எதிர்பார்க்கணும். எல்லாமே உடனே நடக்கணும்ன்னு எதிர்பார்த்தா எதுவுமே நடக்காதும்மா…”
“நம்ம நாட்டுக்காக எவ்வளவு பேரு எவ்வளவு விதமா போராட்டம் செஞ்சு தங்களோட உயிரை தியாகம் செஞ்சிருக்காங்க… இரண்டு மூன்று நூற்றாண்டுகளாவே போராட்டம் நடந்திட்டு தானேம்மா இருந்துச்சு”
“அடி மேல அடி அடிச்சாத்தானேம்மா அம்மியும் நகரும்ன்னு சொல்வீங்க. அது போல தான்ம்மா நம்மாளானதை நாம செய்வோம். அதுக்கான பலனை நம்ம சந்ததியர் அனுபவிக்கட்டும்” என்றான்.
ராஜாத்தி தன் மகனை பெருமிதமாய் பார்த்தார். அவன் சிறு வயதிலேயே பொறுப்பானவனாக ஆகிவிட்டான் என்று சொல்வதைவிட ஆக்கப்பட்டுவிட்டான்.
அவன் தந்தை செல்வம் ஒரு லாரி கம்பெனியில் லோடு மேனாக வேலை பார்த்தார். தினக்கூலி தான் அவருக்கு, ஆரம்பத்தில் அவருக்கு எந்த கெட்டப் பழக்கமும் இல்லை தான்.
பின் லோடு மேனாக இருந்தவருக்கு யாரோ லாரி வாங்கி விடுவது தானே என்று அட்வைஸ் செய்ய அவருக்கு முதலாளி ஆகவேண்டும் என்ற எண்ணம் வந்தது.
மனைவியின் தாலி செயின் முதல் கொண்டு அனைத்து நகைகளையும் விற்று அது பற்றாமல் மேற்கொண்டு லோன் போட்டு லாரியை வாங்கிவிட்டார். லாரி வைத்திருப்பதும் யானையை கட்டி மேய்ப்பதும் ஒன்று தானே.
லோடு மேனாக இருந்த செல்வத்திற்கு வண்டி ஓட்டத் தெரியாது. தெரிந்திருந்தால் அவனே முதலாளியையும் தொழிலாளியாயும் இருந்து ஒரளவிற்கு சமாளித்திருப்பார்.
அடுத்தவன் பேச்சைக் கேட்டு லாரியை வாங்கிவிட்டு அதற்கு வருடம் இரு முறை ரோட் டாக்ஸ், இன்சூரன்ஸ், எப்சி என்று செலவு ஒரு பக்கம் இருக்க, முக்கிய செலவாய் டிரைவருக்கு சம்பளம், தினசரி பேட்டா, என்று அவன் வரவிற்கு மீறிய செலவாக இருந்தது அது.
ஒரு கட்டத்தில் லாரி அடிக்கடி பழுதாகிப் போக, டயர் மாற்ற, காற்றடிக்க என்று மாற்றி மாற்றி செலவுகள். தன்னால் முடியாத பட்சத்தில் என்ன செய்வதென்பது அறியாமல் அதை கடன் வாங்கியவரிடமே கொடுத்துவிட்டார்.
பின்னர் எந்த வேலை வெட்டிக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தவரை மீண்டும் லோடுமேன் வேலைக்கு செல்லச் சொல்லி ராஜாத்தி சொல்ல முதலாளியாய் இருந்த என்னை அந்த வேலை பார்க்கச் சொல்கிறாயா என்று கவுரவம் பார்த்தார் அவர்.
அப்படியே வெளியே சென்று சகவாச தோஷத்தில் குடிப்பழக்கத்தை கற்று வந்திருந்தார். கிடைத்த வேலையை செய்வார், முதலாளி எதிர்த்து ஒரு கேள்வி கேட்டால், நீ எப்படிடா என்னை கேள்வி கேட்பே என்று அவரை முறைத்து வேலையைவிட்டு வந்துவிடுவார்.
ராஜாத்தி தான் தனித்து நின்றார். அதிகம் படித்திருக்கவில்லை அவர், ஆனால் அவருக்கு நன்றாகவே எழுதப்படிக்க தெரியும். ஆங்கிலமும் நன்றாகவே படிப்பார்.
அதைக்கொண்டு அவரை போன்று இருந்த அடுத்த வீட்டு பெண்மணி ஒருவரின் உதவியுடன் ஒரு மார்க்கெட்டிங் சர்வே கம்பெனியில் சேர்ந்தார். தெருத்தெருவாக சுற்றும் வேலை அவருக்கு.
ஒரு வீட்டில் அவர்களை பாவம் என்று பார்த்து அனுமதிப்பார். ஒரு வீட்டில் அவர்களை தீண்டத்தகாதவர்கள் போல் விரட்டிவிடுவார்.
கம்பெனி தரும் சாம்பிளை கொண்டு செல்லும் போது மட்டும் சிலர் ஈயென்று இளித்துக்கொண்டு வாங்கிக்கொள்வர்.
அதெல்லாம் அவர் ஒரு போதும் பொருட்படுத்தியதில்லை. செல்வம் ராஜாத்திக்கு செங்கதிரை தவிர ஒரு பெண்ணும் இருக்கிறாள் பூங்கோதை என்று.
பூங்கோதை தான் பெரியவள் கதிர் அவளுக்கு இளையவன். இருவருக்கும் இரண்டு வயது வித்தியாசம் மட்டுமே. இருவரும் பள்ளிப்படிப்பின் முக்கிய கட்டத்தில் இருக்கும் போது தான் வீட்டில் பிரச்சனைகள் வெடித்து தங்கள் படிப்பே முடிந்துவிடுமோ என்று பிள்ளைகள் இருவரும் நினைக்க ஆரம்பித்திருந்தனர் அப்போது.
அந்த சூழ்நிலையில் தான் ராஜாத்தி நிலைமையை கையில் எடுத்துக்கொண்டு அவர் உழைக்க ஆரம்பித்தார்.
மகளை எப்படியோ பள்ளிப்படிப்பும் முடித்து கல்லூரியிலும் சேர்த்துவிட்டார். ஆனால் மகனை பன்னிரண்டாவது வரை தான் அவரால் படிக்க வைக்க முடிந்தது.
செல்வம் தினமும் குடித்துவிட்டு வந்து கலாட்டா செய்வதும் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துச் சென்று விற்று குடிப்பதும் என்று வீடு வீடாகவே இல்லை அப்போது.
மகனையும் மகளையும் வேலைக்கு செல்லச் சொல்லி அத்தாயே வாய்விட்டு சொல்லியிருக்க இருவரும் வேலை பார்க்க ஆரம்பித்தனர்.
பூங்கோதை டேட்டா என்ட்ரி செய்துக் கொடுக்கும் வேலைக்கு சென்றாள். அரைநாள் வேலை அரைநாள் கல்லூரி என்று சென்றுவந்தாள் அவள். இறுதியாண்டில் அவள் இருந்தாள்.
செங்கதிரோ ஒரு தையல் கடைக்கு வேலைக்குச் சென்றான். முதலில் காஜா தைப்பதில் ஆரம்பித்த அவன் வேலை பின்பு படிப்படியாய் உயர்ந்து தையல் செய்வது, அதில் டிசைன் செய்வது என்று உயர்ந்தது. வீட்டில் மற்ற மூவரும் உழைக்க ஆரம்பித்ததில் குடும்பம் சற்று சீராய் ஓட ஆரம்பித்தது.
அவ்வப்போது செல்வத்தினால் தொந்திரவு இருந்தாலும் அதையெல்லாம் வீட்டினர் கடக்கப் பழகியிருந்தனர். பூங்கோதை படிப்பை முடித்ததும் வேறு நல்ல வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள்.
அவளுக்கு நகைகள் சேர்த்து அவளின் இருபத்தியாறாவது வயதில் தான் அவளுக்கு திருமணமே முடிக்க முடிந்தது அவர்களால்.
அதற்குள் கதிரும் சற்று நல்ல நிலைமைக்கு வந்திருந்தான் தான். ஆனாலும் அக்காவின் திருமணக்கடன் சுமை கொஞ்சம் அவன் மீது தான் விழுந்தது.
கடனோடு கடனாக அவன் முயன்று ஒரு கடையையும் வைத்துவிட ஒரு வருடத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் கடனை அடைக்க ஆரம்பித்தான்.
ஒரு மனிதன் கஷ்டப்பட்டு மேலேறி வந்தால் அவனுக்கு இன்னும் சோதனைகள் கொடுத்து சாதனையாளன் ஆக்குவதில் சிறந்தவரான கடவுள் பூங்கோதைக்கு சீர், வளைக்காப்பு, பிள்ளைப்பேறு, குழந்தைக்கு மொட்டையடித்து காது குத்துதல் என்று வரிசையாய் செலவை வைத்து நீ இப்படியே இரு என்று அவனை வைத்திருந்தார்.
அதெல்லாம் முடிந்து அவன் மீண்டும் தன் கடனை அடைக்க ஆரம்பித்த வேளை அவன் தந்தையின் உடல்நிலை சீர்கெட ஆரம்பிக்க அவரை கவனிப்பதும் வீட்டை கவனிப்பதுமாய் அவன் பொழுது சென்றது.
பூங்கோதைக்கு திருமணம் நிச்சயம் ஆனதுமே அன்னையை வேலையை விடச்சொல்லிவிட்டான் மகன்.
அதனால் வீட்டின் வருமானமே அவனை நம்பித்தான் இருந்தது. செல்வம் போய் சேர்ந்துவிட இதோ இப்போது அவனும் அவன் அன்னையும் மட்டுமே.
கடை ஒரளவிற்கு நன்றாகவே தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் இன்னமும் கடன் தான் அவனைவிட்ட பாடில்லை. அடைத்துக் கொண்டு தான் வருகிறான்.
பழைய நிகழ்வுகள் எல்லாம் நினைவில் வந்து போக ராஜாத்திக்கு கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டது.
“அம்மா எதுக்கு இப்போ அழறீங்க??”
“அழலைப்பா நீங்கலாம் எவ்வளவு கஷ்டப்பட்டீங்கன்னு நினைச்சேன். கஷ்டப்படாம பிள்ளைங்களை வளர்த்து ஆளாக்கிவிடணும்ன்னு ஆசைப்பட்டேன். அந்த கடவுள் என் வாயாலேயே உங்களை வேலைக்கு போங்கன்னு சொல்ல வைச்சுட்டார்” என்று சொல்லும் போது அவரின் வேதனையை அவனால் உணர முடிந்தது.
“முடிஞ்சதை நினைச்சு எதுக்கு வருத்தப்பட்டுட்டு இருக்கீங்க?? பேசாம இருங்க” என்றுவிட்டு “ஏன்மா சித்திரை திருவிழா வரப்போகுதே, பூவை கூப்பிட்டீங்களாம்மா”
“கூப்பிட்டேன்ப்பா”
“பூ எப்போ வர்றேன்னு சொல்லுச்சாம்மா??”
“அவளுக்கு வரணும்ன்னு தான் ஆசை, மருமவன் மனசு வைச்சு அனுப்பணுமே. எதுக்கும் நீ ஒரு தரம் அவர்கிட்ட பேசேன்” என்றார் அவர்.
“ஹ்ம்ம் பேசறேன்ம்மா” என்றுவிட்டு கை கழுவ எழுந்துச் சென்றான் அவன்.
அவன் திரும்பி வந்தப்போது ராஜாத்தி அந்த இடத்தை சுத்தம் செய்திருக்க இவன் கொடியில் இருந்த துண்டில் கையை துடைத்துவிட்டு “அம்மா நான் கடைக்கு கிளம்பறேன்” என்றான்.
“எய்யா ஒரு நிமிசம்”
“சொல்லுங்கம்மா…”
“ஏய்யா உனக்கு இந்த வருஷம் கல்யாணத்தை முடிச்சிடலாம்ன்னு மனசுக்குப் படுதுய்யா” என்றார் அவர்.
“அம்மா என் கல்யாணத்துக்கு இப்போ என்ன அவசரம். இருக்கற கடனே அடையலை, இதுல புதுசா ஒரு கடனா நம்மால தாங்காது சாமி” என்று அவன் கையெடுத்து கும்பிட்டான்.
“செங்கதிரு அம்மா சொல்றதை கேளுய்யா. உனக்கும் வயசு இருப்பத்தியெட்டு முடியப் போகுது. இப்போ பார்க்க ஆரம்பிச்சா தானே”
“வேணாம்மா இந்த பேச்சை இத்தோட விடுங்க” என்றுவிட்டு அவன் கடைக்கு கிளம்பிவிட்டான்.
ஏழு மணிவாக்கில் அவன் டீ குடித்துக் கொண்டு சாவகாசமாய் கடையில் அமர்ந்திருக்க “ஹாய் செங்கதிர்” என்றவாறே வந்தாள் நயனா.
அவளைக் கண்டதும் அவன் முகத்தை திருப்ப அவளோ அதெல்லாம் கண்டுக்கொள்ளாது அவன் முன் வந்து நின்றாள்.
“என்னய்யா என்னை பார்த்தும் பார்க்காத மாதிரி நிக்கறே. கவலைப்படாதேய்யா நீ குடிக்கிற டீயில எல்லாம் நான் பங்கு கேட்க மாட்டேன்” என்று சொன்னவள் இன்னமும் அருகே வந்து அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் “உன் வாழ்க்கையில மட்டும் தான் பங்கு கேட்பேன்” என்றாள்.
“உனக்கு வேற வேலை இல்லையா” என்றான் முகத்தில் சலனமில்லாதவனாய்.
“இல்லை” என்றாள் அவள் கூலாய்.
“ஆனா எனக்கு நெறைய வேலை இருக்கு, நீ கிளம்பு”
“உனக்கு வேலை கொடுக்கலாம்ன்னு தான் நான் இப்போ இங்கே வந்தேன்” என்று அவள் சொல்ல அவன் அதெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாதவனாய் ஒரு துணியை எடுத்து கழுத்தில் மாட்டியிருந்த டேப்பை கொண்டு அதன் அளவுகளை குறித்து வரைந்தான்.
“நீ கேட்கலைன்னா நான் சொல்லாம போய்டுவேனா என்ன, இது என்னோட சுடிதார் செட், மொத்தம் நாலு இருக்கு. அப்புறம் இது என்னோட பிளவுஸ் பிட்ஸ் அது ஒரு அரை டஜன் இருக்கு…”
“எல்லாத்தோட அளவும் உள்ளவே இருக்கு. எப்போ தைச்சு கொடுப்பீங்கன்னு மட்டும் சொல்லுங்க நான் அப்போ வந்து வாங்கிக்கறேன்” என்றாள் அவள்.
“இங்க லேடிஸ்க்கு எல்லாம் தைக்கறது இல்லை”
“அப்படியா?? ஹ்ம்ம்” என்று அவள் யோசித்துக் கொண்டே அவன் நின்றிருந்த இடத்திற்கு பின்னே இருந்த பெஞ்ச்சை பார்க்க அங்கு சுடிதார் நான்கு தைக்கப்பட்டும், சில பிளவுஸ் மற்றும் புடவை ஓரம் என்று அடிக்கப்பட்டு அடுக்கி வைத்திருக்க இவனை பார்த்து முறைத்தாள்.
“என்ன அதெல்லாம்”
அவள் எதை சொல்கிறாள் என்று அவன் முதலில் கவனிக்கவில்லை. பின்பு கவனித்தவன் தன் தலையில் தட்டிக்கொண்டான்.
அவர்கள் கடையில் பெரும்பாலும் ஆண்களுக்கு மட்டுமே தான் தைத்துக் கொடுப்பர். வீட்டு பெண்களுக்கு தைப்பான். பின்பு அவன் சொந்தத்தில் இருக்கும் பெண்கள் என்று சிலருக்கு தைத்துக் கொடுப்பான். 
இவன் திறமை பார்த்து சிலர் தானாய் முன் வந்து துணிகளை தைக்க கொடுத்து தான் வருகின்றனர். அவனால் முடிந்தால் தைத்து தருவான் இல்லையென்றால் நயமாய் மறுத்துவிடுவான்.
பெண்களுக்கு என்று தனியாய் ஒரு கடை ஆரம்பிக்க அவனுக்கும் ஆசை தான். மேலும் கடனை இழுத்துக்கொள்ள அவனால் முடியாதே!! அதனால் பேசாமல் இருக்கிறான்.
“அதெல்லாம் வேற??”
“ஓ அவங்க எல்லாம் புடவை கட்டுற ஆண்கள் போல” என்று இவள் நக்கலாய் சொன்னாள்.
“உனக்கு என்ன வேணும் இப்போ, பேசாம கிளம்பு” என்றான் அவன்.
அவளும் விடாமல் “எனக்கு தைச்சு தர்றேன்னு சொல்லுங்க போறேன்” என்றாள்.
“முடியாது” என்று இவன் மறுத்துக் கொண்டிருக்கும் போதே உள்ளிருந்து வந்தார் நாச்சியப்பன். அவன் கடையில் வேலை செய்பவர்.
“என்னம்மா வேணும்??” என்றார் இவளைப் பார்த்து.
“துணி தைக்க கொடுக்க வந்தேன் அண்ணே. நீங்க கொஞ்சம் தைச்சுக் கொடுக்கறீங்களா, நீங் லேடிஸ்க்கும் தைப்பீங்க தானே” என்று 
“ஏன் தைக்காம, அதெல்லாம் தைப்போம்மா. நீ கொடுத்திட்டு போ” என்றவர் பில் நோட்டை தன் பக்கம் இழுக்க “அண்ணே” என்றான் செங்கதிர்.
“என்ன தம்பி??”
“அவங்க துணி எல்லாம் தைக்க வேண்டாம். இப்போ முடியாது, ஏற்கனவே திருவிழாக்குன்னு ஏகப்பட்ட துணி கிடக்கு தைக்க, இதெல்லாம் இழுத்து வைச்சுக்க முடியாது” என்றான் அவன் கறாராய்.
“விடுங்க தம்பி நம்ம கடையை நம்பி வந்திருக்கு அந்த புள்ளை. அதை எதுக்கு ஏமாத்தணும், நான் தைச்சு தர்றேன்ப்பா” என்று அவர் சொல்லிவிட வயதில் மூத்தவர் அவர் என்று அவன் அமைதி காத்தான்.
அவர் பில் போட்டு அதில் தேதியும் குறித்து கொடுக்க “ரொம்ப தேங்க்ஸ் அண்ணே” என்றாள் அவரிடம்.
“இருக்கட்டும்மா” என்றவர் டீ குடிக்க வெளியே சென்றார்.
“நான் கிளம்பறேன் செங்கதிர்”
அவன் இவளை திரும்பிக் கூட பார்க்கவில்லை. “டிரஸ் தைச்சதும் போன் பண்ணுங்க நான் வந்து வாங்கிக்கறேன்” என்றுவிட்டு அவள் தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பவும் தான் அவன் இழுத்து வைத்த மூச்சை வெளியிட்டான்.
‘எதுக்கு தான் என் பின்னாடி சுத்துறாளோ இவ’ என்று சலித்தாலும் மனதில் ஒரு இதம் தோன்றத்தான் செய்தது அவனுக்கு.
வீட்டிற்கு வந்த நயனா கை கால் முகம் கழுவி வர விலோசனா அடிப்படியில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருந்தாள். “என்ன விலோ இங்க என்ன பண்ணுறே??” என்றவாறே வந்தாள் நயனா.
“ரெடி பண்ணிட்டு இருக்கேன் நயன்”
“எதை??”
“மறந்திட்டியா?? இன்னைக்கு என்னை பொண்ணு பார்க்க வர்றாங்க” என்று சொல்ல அப்போது தான் நயனாவுக்கு அந்நினைவே வந்தது.
“அச்சோ சாரி சாரி விலோ நான் கொஞ்சம் சீக்கிரமே வந்திருக்கணும். வேலையில மறந்திட்டேன்” என்றவளுக்கு குற்றவுனர்வாகி போனது.
“அதெல்லாம் எதுக்கு விடு” என்றாள் விலோசனா.
“நீ போய் ரூம்ல ரெடி ஆகு நான் இதெல்லாம் பார்த்துக்கறேன். ஆமா அப்பா எங்கே??”
“அப்பா பூ வாங்க கடைக்கு போனார் இப்போ வந்திடுவார்”
“சரி நீ போ” என்று தன் தமக்கையை விரட்டிவிட்டு அவள் தயார் செய்தாள். பின்பு அறைக்கு வந்து தன் தமக்கைக்கும் உதவி செய்தாள்.
விலோசனாவோ ஏதோவொரு நினைவில் முழ்கியவளாய் அமர்ந்திருக்க “என்ன விலோ??”
“பயமாயிருக்கு நயன்”
“எதுக்கு??”
“இந்த மாப்பிள்ளை என்னை பிடிக்கலைன்னு சொல்லிட மாட்டான்ல…”
“விலோ…” என்று சொன்ன நயனுக்கே கவலையாக இருந்தது தன் தமக்கையை பார்த்து.
அவளின் ஒட்டுமொத்த கோபமும் ஆத்திரமும் இப்போது தன் குடும்பத்தினர் மற்றும் தோழன் செங்கதிருடன் வந்து பெண் பார்த்து சென்ற ஆதித்யனின் மீது திரும்பியது…

Advertisement