Advertisement

அத்தியாயம் – 8

“எங்க போச்சு… இங்க தானே வச்சிட்டு போனேன்..” என்று தீவிரமாய் அவள் படித்து பாதியில் விட்டுப்போன அந்த கதை புத்தகத்தை தேடிக்கொண்டு இருந்தாள் திவ்யபாரதி.அவள் தேடுவதையே கவனித்தும் கவனிக்காமல் பார்த்திருந்தான் ரவி பிரதாப்.

ஊட்டியில் இருந்து வந்து ஒருவாரம் ஆகிவிட்டது. இவளும் தினமும் அப்புத்தகத்தை தேடுகிறாள், ஆனால் கண்ணில் படுவேனா என்று அழிச்சாட்டியம் செய்தது.மனதில் இருந்த குழப்பங்கள் வேறு அவளுக்கு வேறெதிலும் கவனம் செலுத்த விடுவதில்லை.

“திவ்ஸ்..என்ன தேடுற?? நானும் பாக்குறேன். டெய்லி எதையோ தேடுற..” என்றபடி அவளருகில் வந்தான் ரவிபிரதாப்.

“ஏன் சொன்னா நீங்களும் தேட போறீங்களா??” என்று அவனை திரும்பியும் பார்க்காமல் தன் வேலையை செய்தவளை, தன் பக்கம் திருப்பினான்.

“என்ன.. ரவி…??”

“உனக்கு என்ன பிரச்சனை திவ்ஸ்..? என்கிட்டே கோவமாவே பேசிட்டு இருக்க??”

“என் பிரச்சனையே நீங்க தான் ரவி..” என்றாள் பட்டென்று.

“ஹே.!! என்ன டி இப்படி பட்டுன்னு சொல்லிட்ட..” அவனுக்குமே அதிர்ச்சி.

“பின்ன தினமும் அத்தை போன் பண்ணி கேக்குறாங்க, ப்ரியா கல்யாணத்துக்கு வரீங்க தானேன்னு. நீங்க பதிலே சொல்ல மாட்றீங்க..”

“ம்ம்ச் உனக்கு எத்தனை தடவ சொல்றது. எனக்கு அவ முகத்தை பார்க்கவே பிடிக்கலை..” என்றான் எரிச்சலான குரலில்.

திவ்யாவிற்கும் அவனது உணர்வுகள் எல்லாம் நன்றாய் புரிந்தது. ஆனால் என்ன செய்ய?? மாமியார் கேட்கும் போது பதில் சொல்லிதானே ஆகவேண்டும். அதிலும் அவர் சொல்லும் காரணங்களும் சரியாய் இருக்கும் பொழுது. ஆனால் ரவி இதில் பிடிவாதமாய் இருக்கிறான். எப்படி அவனை சம்மதிக்க வைக்கவென்று இவளுக்கும் புரியவில்லை.

“ரவி கொஞ்சம் பொறுமையா கேளுங்களேன். நம்ம கல்யாணம் எப்படி நடந்ததுன்னு தெரியும் தானே. இன்னும் உங்க சைட் ஆளுங்க நிறைய பேருக்கு நான் தான் உங்க வைப்னு தெரியாது. இந்த மேரேஜ்க்கு போனா சொந்தம் எல்லாம் வருவாங்கன்னு அத்தை சொல்றாங்க. அவங்க சொல்றதும் சரிதானே..”

“நீ என் பொண்டாட்டின்னு எனக்கு தெரிஞ்சா போதும், நம்ம பேமிலிக்கு தெரிஞ்சா போதும்..” என்றான் அழுத்தமாய். ஆனால் திவ்யாவிற்கோ கோவம் கோவமாய் வந்தது.

“நீங்க எனக்கு தர மரியாதை இவ்வளோதானா ரவி??”

“ஏய்!!! திவ்ஸ்.. என்ன இப்படி பேசுற???”

“பின்ன.. இவதான் எங்க வீட்டு மருமகள்ன்னு உங்க வீட்டில என்னைய எல்லாருக்கும் அறிமுக படுத்த நினைக்கிறாங்க.. உங்களுக்கு இது முக்கியமோ இல்லையோ, அவங்களுக்கும் சரி எனக்கும் சரி,நம்ம இந்த மேரேஜ்க்கு போறது ரொம்பவே முக்கியம்…”  இது மட்டும் தான் தன் முடிவு என்பது போல் கூறிவிட்டு அவள் செல்ல, ரவிக்கு அத்தனை எரிச்சல், கோவம் எல்லாம்.

ப்ரியா மீதான ரவிப்ரதாப்பின் இத்தனை வெறுப்பிற்கும் காரணம் இருந்தது. ரவியும் திவ்யாவும், அவர்களுக்குள் இருப்பது நட்பு மட்டுமேயில்லை என்று உணர துவங்கிய காலமது. காதல் தான் என்று உறுதியாய் கூறிடவும் முடியாமல், நட்பு தான் என்று முடித்திடவும் முடியாமல் இருவரும் அவர்களது உறவில் அடுத்தது என்ன என்று தங்களுக்குளே ஒரு தேடலில் லயித்திருந்தனர்.

அவ்வப்போது கண்கள் நான்கும் நேருக்கு நேர் நோக்கிக்கொள்ளும், கரங்கள் கோர்த்து நடந்து செல்ல, விரல்கள் பத்தும் ஏக்கம் கொள்ள தொடங்கியது. அவனுக்கு பிடித்த நிறத்தில் அவள் உடை அணிவதும், அவளுக்கு பிடித்த பாடல்களை அவன் முனுமுனுப்பதும். காதலென்று உணர்ந்த பின்னே அதை கூறும் வரையிலான காலம் கூட சுகமாய் தான் இருந்தது இருவருக்கும்.

“என்ன திவி, ரவி மாமா உன்கிட்ட அடிக்கடி வந்து பேசுறார்??” என்று ஆராய்ச்சியாய் ப்ரியா கேட்டாள்.

திவ்யாவை ரவி முன்னமே எச்சரித்திருந்தான். ப்ரியாவிடம் அளவோடு இரு என்று. ஆனால் திவ்யாவால் அப்படி பட்டென்று விலகிட முடியவில்லை. ப்ரியா விலக தயாராகவும் இல்லை.

“நம்ம எல்லாம் ஒரே டீம்ல இருக்கோம். பேசாம இருக்க முடியுமா ப்ரியா??” என்று அவளும் நல்லவிதமாகவே பேசி வைத்தாள். அறைக்கு வந்தாலும் ப்ரியாவின் பேச்சிலும், பார்வையிலும் திவ்யா மீதான ஆராய்ச்சி மட்டும் குறையவேயில்லை.

இதெல்லாம் இப்படியிருக்க, ரவியின் நண்பர்களுக்கு ரவி மற்றும் திவ்யாவின் உறவில் மாற்றங்கள் தெரிய, இருவருமே அவர்களது கேலிக்கும், கிண்டலுக்கும் மகிழ்வாய் சிரித்தார்களே தவிர ஆம் என்றும் கூறவில்லை, இல்லையென்றும் மறுக்கவில்லை. இப்படியே நாளொரு பொழுதாய் ரவி திவ்யாவின் உறவு முன்னேற, அவர்களது குழுவிற்கான வீக்கென்ட் ட்ரிப் ஏற்பாடானது.

“மச்சி இன்னிக்காவது திவ்யாகிட்ட பிரான்க்கா பேசுடா..” என்று நண்பர்கள் ஏற்றிவிட, ரவியும் அதற்கு தயாராகவே தான் வந்தான். ஏசி கோச்சில் ரவி திவ்யாவை விட்டு நகரவே இல்லை. உரிமையாய் சென்று அருகமர்ந்து கொண்டான்.

“என்ன ரவி இது…!!!” என்று திவ்யா திகைத்ததற்கும், “இதிலென்ன இருக்கு..” என்று அவளது தோள் மேல் கை போட்டு, அவளது கரங்களை பற்றிக்கொள்ள, “ரவி…!!!” என்று அவள் குரலே எழும்பாமல் கடிந்தும் அவன் அசைவதாய் இல்லை.

அவ்வளவு தான் பின்னால் விசில் சத்தமும், கை தட்டும் ஒலியும் காதை பிளந்தது.“ஹே…!!!! ரவி கங்கிராட்ஸ்… திவ்யா கங்கிராட்ஸ்…” என்று ஒருவர் மாற்றி ஒருவர் வந்து கை கொடுக்க, திவ்யா தவித்து தான் போனாள்.

என்ன சொல்வது?? ஆம் என்பதா, இல்லையென்பதா?? காதலிக்கிறேன் என்றும் சொல்லவில்லை, காதலிக்கிறாயா என்றும் கேட்கவில்லை, ஆனாலும் அவள் மனதில் இருப்பதும், அவன் மனதில் இருப்பதும் இருவருக்குமே நன்றாய் தெரிந்திருந்தது.

திவ்யாவால் ரவியை நேருக்கு நேர் காண முடியவில்லை. திடீரென்று அனைவரின் முன்னும் அவன் இப்படி செய்ததும் அவளுக்கு சற்று கூச்சமாய் போனது. இதழ்கள் துடிக்க புன்னைகை புரிந்தவள் மெல்ல தலை குனிந்து கொண்டாள். பார்வை அலைபாய்ந்தது. ஆனால் அவள் மனமோ ரவியிடம் முழுதாய் சரண்புகுந்து விட்டது.

பெயருக்கு கூட மறுக்கவேண்டும் என்று அவளுக்கு தோன்றவேயில்லை. அவளது பெற்றோரை பற்றி அவளுக்கு பயமில்லை, காதலுக்கு அவர்கள் எதிரியல்ல, ஆனால் ரவி அவனது குடும்பம், பின்புலம், ரவியே அவர்களை பற்றியெல்லாம் கூறியிருக்கிறான் தான்.

வேண்டாம் அதெல்லாம் நினைக்காதே, எதுவாக இருந்தாலும் சேர்ந்து சந்திப்போம் என்று சொல்லாமல் சொல்வது போல் ரவி அவளது தோளை ஆதரவாய் இறுக பற்றிக்கொண்டான். அவளும் அவன் தோள் மீது சாய்ந்துக்கொண்டாள்.

அவர்களே அறியாத காதல், அவர்களே கூறிக்கொள்ளாத காதல், சிறு சிறு செயல்களிலும், பார்வையிலும், ஸ்பரிசங்களிலும் நான் இருக்கிறேன் இருக்கிறேன் என்று காதல் தன்னை தானே வெளிப்படுத்திக்கொள்ள, அந்த பயணமும் அவர்களுக்கு இனிமையாய் கழிந்தது. ரவி புகைப்படமாய் எடுத்து தள்ளினான்.

அவனுக்கே ஆச்சரியம் தான், ஒருத்தி மீது இத்தனை பித்தனாவோமா என்று. காதல் மேல் நம்பிக்கையில்லாமல் இல்லை, அந்த காதலுக்கு  இருக்கும் கோட்பாடுகளில் தான் பொருந்தி போவோமா என்ற எண்ணம் மட்டுமே. ஆனால் அந்த காதல் அவனை ஸ்பரிசித்த பிறகோ, அவன் மனமெல்லாம் திவ்யா திவ்யா திவ்யா மட்டுமே.

திவ்யா திவியாகி, திவி திவ்ஸாகி இருந்தாள். 

அதிசயத்தின் உச்சமாய் ப்ரியா கூட இயல்பாய் தான் பேசினாள். ஆனால் இவர்களது இந்த புதிய மாற்றத்தை பற்றி எதுவும் கேட்கவில்லை. சொல்லபோனால் ரவியும் திவ்யாவும் இப்போது காதலிக்கிறார்கள் என்று தெரியவே தெரியாது என்பது போலவே இருந்தாள்.ட்ரிப் முடிந்து வந்த பிறகும் கூட அப்படிதான் இருந்தாள். வேறு எதுவும் கேட்கவில்லை. எப்பொழுதும் போலவே பேசினாள். சொல்ல போனாள் இப்பொழுது தான் முன்னை விட அதிக நெருக்கம் காட்டினாள்.

திவ்யா கூட “நம்ம தான ப்ரியாவ தப்பா புரிஞ்சுகிட்டோம் போல ரவி..” என்று கூறும் அளவுக்கு ப்ரியாவின் நடிப்பு தத்ரூபமாய் இருந்தது.

ஆனால் என்றாவது ஒருநாள் சாயம் வெளுத்து தானே ஆகவேண்டும். திடீரென்று ஒருநாள் உடம்பு சரியில்லை அது இதென்று கூறி ஊருக்கு கிளம்பினாள். திவ்யா என்னவென்று விசாரித்ததற்கு முன்னுக்கு பின் முரணாய் பதில் சொல்லி, எப்படியோ கிளம்பியும் சென்றுவிட்டாள். உடன் வருகிறேன் என்று சொல்லியதற்கும் அவள் வேண்டாம் என்று கூற, ரவிக்கு அழைத்தாள் திவ்யா.

அவனோ, “பெர்சனல் லீவ்னு மெயில் பண்ணிருக்கா..” என்க, அப்படி என்ன திடீரென்று ஊருக்கு செல்லும்படி ஆனது என்று இருவருக்குமே புரியவில்லை.

ரவிக்கு ப்ரியாவை பற்றி சிந்திக்க கூட நேரமில்லை. அவனது எண்ணமெல்லாம் அடுத்த முறை ஊருக்கு செல்லும் போது, திவ்யா பற்றி வீட்டில் பேசவேண்டும் அதற்கு முன்னே திவ்யாவின் பெற்றோரிடம் பேசவேண்டும் என்பது தான். இதை அவளிடமும் கூறினான்.

“எங்க வீட்ல ஒன்னும் சொல்ல மாட்டாங்க ரவி..”

“ஹ்ம்ம் அப்போ.. என் பக்கம் தான் கொஞ்சம் ஹெவியா வேலை செய்யணும் போல..” என்று அவன் கூறிய பாவனையில் அவளுக்கு சிரிப்பே வந்துவிட்டது.

“என்ன சிரிக்கிற..??”

“இல்லை ஒண்ணுமில்ல..”

“ஹ்ம்ம்..!!! ஹேய் நீ உங்க வீட்டுக்கு கிளீன் பண்ண போய் கிட்டத்தட்ட பைவ் மன்த்ஸ் ஆகபோது..” என்றான் திடீரென்று.

“அதுக்கென்ன இப்போ.. நெக்ஸ்ட் மன்த் அம்மா வருவாங்க போல, சோ அதுக்கு முன்னாடி போய் ஒன்ஸ் பண்ணனும்..”

“ஹே.. திவ்ஸ்.. நம்ம ஒன்ஸ் உங்க வீட்டுக்கு போவோமா..” 

“ஆளே இல்லாத வீட்டுக்கு போய் என்ன செய்ய ரவி…??”

“அதுக்கு தானே டி போகலாம் சொல்றேன்…” என்று கூறி நன்றாய் அவளிடம் மொத்து வாங்கினான். ஆனாலும் அந்த வார இறுதியில், ரவியை அழைத்துக்கொண்டுஅவளின் வீட்டுக்கு சென்றாள் தான் திவ்யா. அத்தனை அழகான பொழுதாய் அமைந்தது இருவருக்கும்.

இருவரும் சேர்ந்து ஒன்றாய் பேசியபடி ஒருவரை ஒருவர் கிண்டல் கேலி செய்தபடி, அவ்வபோது கட்டியணைத்தபடி என்று வீட்டு வேலை செய்ததில் நேரம் போனதே தெரியவில்லை.

காதல் இப்படித்தான் இருக்குமா என்று அவளும், இதற்குமேல வேறெதுவும் வேண்டுமா என்று அவனும் ஒருவரில் ஒருவர்  மூழ்கியிருக்க, திவ்யா வீட்டு அழைப்பு மணி அலறியது. ஆம் அப்போது அவர்களுக்கு அது அலறலாகவே பட்டது.

அந்த சத்தம் இப்பொழுதும் கூட தன் காதுகளில் ரீங்காரமிடுவது போல் இருக்க, ரவி தன்னை தானே உலுக்கிகொண்டான். அவனையே பார்த்திருந்த திவ்யா,

“ரவி.. வாட் ஹேப்பன்??” என்று அவள் தோள் தொட, ஒன்றுமில்லை என்பது போல லேசாய் கண் சிமிட்டி, தோளை குலுக்கியவன், தன் பேகில் இருந்து அவள் தேடிக்கொண்டு இருந்த கதை புத்தகத்தை எடுத்து கொடுத்தான்.

“இந்தா இதை தானே தேடிட்டு இருக்க??”

“ஏய்பிராடு.. லாஸ்ட்ல நீங்க தான் திருட்டு பூனையா?” என்று செல்லமாய் அடித்தாள்.

“சரி சரி இன்னிக்கே முடிச்சிடு.. நாளைக்கு இதை உன் கைல பார்க்க கூடாது..” என்று அவளை அணைத்து மெல்ல முத்தமிட்டு அலுவலகம் கிளம்பினான். அவன் கிளம்பிய பிறகு வேக வேகமாய் வேலைகள் அனைத்தையும் முடித்தவள், அந்த புத்தகத்துடன் மெத்தையில் விழுந்தவள் பக்கங்களை புரட்ட தொடங்கினாள்.

திவ்யாவிடம் ரவி மனதில் இருப்பது என்னவென்று ஒன்றுவிடாமல் ப்ரியா சொல்லிவிட, திவ்யாவிற்கு நம்பவே முடியவில்லை. அவள் கூறியதை மனம் ஏற்றுக்கொள்ள தயாராய் இல்லை. அதே நேரம் ரவியை வெறுத்து ஒதுக்கிடவும் முடியவில்லை. 

அன்று ப்ரியாவிடம் அப்படியெல்லாம் எதுவுமே இல்லை என்று அடித்து பேசினாள் திவ்யா. ஆனால் ப்ரியாவோ, வேகமாய் ரவியின் அழைபேசியை வாங்கி, அவர்கள் எடுத்த புகைப்படத்தை கட்டினாள்.

“பாரு.. நல்லா பாரு.. ரவி கண்ணுல என்ன தெரியுது??நல்லா பாரு திவ்யா.. உன் மேல இருக்க மயக்கம் ஆசையெல்லாம் தெரியுதா???” என்றவள் ஆங்காரமாய் பின்னே அவனோடு அவள் எடுத்துக்கொண்ட புகை படத்தை காட்டினாள்,.

“இதையும் பாரு.. இந்த போட்டோ நீதானே எடுத்த.. ரவி கண்ல கொஞ்சம் கூட ஒரு காதல் இல்ல.. இதுவே புரியலை உனக்கு..” என்று ப்ரியா கத்த, திவ்யா திகைத்து நின்றாள்.

ரவியோ ஏது நடக்க கூடாது என்று நினைத்தானோ அவன் கண் முன்னே அதுவே நடந்துகொண்டு இருந்தது. தலைக்கு மேலே வெள்ளம் போன பிறகு அடுத்து என்ன செய்ய. நடப்பது நடக்கட்டும் என்று இருந்தான்.

ஆனால் திவ்யா, “ரவி… ரவி இங்க பாரு…” என்று அவன் முகம் திருப்ப, அவனோ தலை குனிந்து அமர்ந்திருந்தான்.

“ரவி…..”

“என்ன திவ்ஸ்….”

“ப்ரியா சொல்றதெல்லாம் நிஜமா??”

அவனிடம் பதிலே இல்லை. என்ன சொல்வான், எப்படி சொல்வான். என் மயக்கம், காதல், மோகம், சலனம் சபலம் என அனைத்தும் உன் மீது என்று அவனால் அவள் முகம் பார்த்து கூறிட முடியுமா என்ன?? 

ப்ரியா நக்கலாய் இருவரையும் பார்த்துகொண்டு இருந்தாள். அவளுக்கு சிரிப்பு தான் வந்தது. மனதில் தோன்றுவதை தைரியமாய் சொல்ல முடியாதவனை இத்தனை நாள் காதலித்ததை எண்ணி நொந்துகொண்டாள் என்றே சொல்லவேண்டும்.

அவளுக்கு தோன்றியது எல்லாம் இது தான், திவ்யாவின் திருமணம் நின்றிராவிட்டால் கூட ரவி அவர்களது வீட்டில் தங்கள் காதலுக்காய் பேசியிருக்க மாட்டான் என்று. அவனிடம் ஆரம்பத்தில் இருந்தே அதீத காதலை உணராததாலோ என்னவோ விலகிட நினைக்கும் பொழுது அத்தனை இழப்பாய் தெரியவில்லை. எதிலிருந்தோ தப்பித்த உணர்வு தான்.

ஆனாலும் அத்தனை எளிதாய் விலகுவதா?? இவனை விடுவதா?? என்று தோன்றியது.

“என்ன ரவி சார்.. அமைதியா இருக்கீங்க?? கேக்குறால்ல உங்க ஆருயிர் தோழி பதில் சொல்லுங்க..”

“ப்ரியா…!!!!” திவ்யா தான் அதட்டினாள். அவள் முகத்தையே ஆழ்ந்து நோக்கிய பிரியாவிற்கு என்ன தோன்றியதோ பின்,

“திவி.. இனி எனக்கு இங்க பேசவோ இருக்கவோ எதுவுமே இல்லை. நம்ம  பழகுற எல்லாருமே கடைசி வரை கூட வர போறதில்ல. அதுபோல தான் நம்ம உறவும்னு நினைச்சுக்கோ. நம்ம பிரண்ட்ஸா இருக்க கூடாதான்னு நீ கேட்கலாம். ஆனா சில நேரங்கள்ல நம்ம லைப்புக்கு விலகி இருக்கிறது தான் நல்லது. இப்போ புரியலைனாலும் பின்னால புரியும் உனக்கு.

எனக்கு ரொம்ப நாளாவே மனசில, ரவிக்கும் எனக்கும்  செட் ஆகாதுன்னு ஒரு எண்ணம். அது இன்னிக்கு சரின்னு ஆகிடுச்சு.. என் வாழ்க்கை இப்படியே முடிஞ்சிடும்னு நீ நினைக்காத, கண்டிப்பா நான் லைப்ல முன்னேறி போவேன். எனக்குனு ஒரு வாழ்கைய அமைச்சுப்பேன்.. குட் லக்..” என்றவள்

“இவகிட்டயாவது மனசில இருக்கிறத பேசி உருப்படியா வாழ பாரு..” என்று ரவியை கடிந்துவிட்டே சென்றாள்.

சென்றேவிட்டாள்..!! திவ்யா திகைத்து அமர்ந்திருந்தாள். வாழ்வு முழுவதும் விட்டே குடுக்க கூடாது என்ற இரு தோழமையில், ஒன்று செல்கிறது, மற்றொன்று அருகினில் முகத்தை தொங்கவிட்டு அமர்ந்திருக்கிறது.

அதுவும் எப்படி பட்ட சூழலில். நினைத்தே பார்த்திடாத ஒன்று. ஆனாலும் இதை கடந்து தான் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம். ரவியிடம் என்ன கேட்பது என்று கூட அவளுக்கு தெரியவில்லை.

இவன் மனதில் இப்படி ஒரு சலனம் ஏற்படும் வகையில் நான் என்ன அப்படி நடந்துகொண்டேன் என்றே அவள் புத்தி யோசித்தது.இனி அடுத்து என்ன ?? என்று யோசித்தால் மண்டை வெடிப்பது போல் இருந்தது.

ஆனால் பொறுமையாக கையாள வேண்டிய தருணமல்லவா இது.

“ரவி….” என்ற அழைப்புக்கு அவனிடம் விழி நிமிர்த்தல் மட்டுமே பதில்.

“நாளைக்கு ஊருக்கு போவோம்…” இவ்வளவு தான் திவ்யா கூறியது.

வந்ததே இன்று தான். ஆனால் இங்கே கழிந்த இத்தனை நேரமும், எதோ வருட கணக்காய் வேதனை சுமந்த வலியை கொடுப்பது போல் இருந்தது. இங்கே இருந்தால் இதை சமாளிக்க முடியாது என்றே தோன்றியது.

“ம்ம் சரி…” என்றவன் அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை.

இதோ பொள்ளாச்சிக்கு வந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது. வீட்டினரின் கேள்விகள் அனைத்திற்கும் இருவருக்குமே பதில் சொல்லவில்லை. ஆனால் ஊருக்கு செல்லுமுன் ரவி திவ்யாவிடம் ஒன்று மட்டுமே கூறினான்.

“திவ்ஸ்.. என் லைப்ல நீ எவ்வளோ முக்கியம்னு உனக்கு தெரியாது.. ஆனா எனக்கு சொல்ல தெரியல.. பட் நீ எனக்கு.. என்கூட.. ம்ம்ச்.. என் லைப் முழுக்க நீ எனக்கு வேணும் திவ்ஸ்… எனக்கு இதுக்கு மேல சொல்ல தெரியலை.. ப்ரியா.. அவளுக்கு நான் செஞ்சது தப்புதான்.. ஆனா அதை தொடர விரும்பல.. நீ என்னை தப்பாவே நினைச்சாலும் பரவாயில்ல திவ்ஸ்… பட் என் மனசில இருக்கிறது நீ தான்… இது தான் நான்.. ” என்று கூறி முடிதவனை விழிகள் அகலாது பார்த்தாள்.

அவன் பேசியது இப்பொழுதும் கூட காதுகளில் ரீங்காரமிட்டது. கண்ணீர் வழிய செய்தது..

“அட பரவாயில்லையே ப்ரியா டீசன்ட்டா விலகிட்டா. இந்த  ப்ரியா செஞ்சது போல எல்லாம் பிரச்சனை செய்யல..” என்று திவ்யபாரதியால் தங்கள் வாழ்வை கதையோடு ஒப்பிட்டு எண்ணாமல் இருக்க முடியவில்லை.

என்ன முயன்றும் அவள் வாழ்வில் ப்ரியா செய்த பிரச்சனைகளை மறக்க முடியவில்லை. எப்படியான ஒரு பெயரை ரவிக்கு அவள் வாங்கி கொடுத்தாள். சிறிதும் சிந்திக்காமல், என்னென்ன செய்துவிட்டாள்.. நினைக்கும் பொழுதே “ச்சே” என்றானது.    

கடந்து போனவை தான் ஆனாலும் கல்வெட்டாய் மனதில்…

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement