Advertisement

அத்தியாயம் – 3

 

 

“உங்களுக்கு திடீர்ன்னு ஏன் இப்படி தோணுச்சு?? எனக்கு புரியலை??

 

 

“என்னடா உங்க தோழியை விரும்பினானே இப்போ நம்மை கல்யாணம் பண்ணிக்க கேட்குறானே. இவன் ஆளு எப்படின்னு நினைக்கறீங்களா??

 

 

“நீங்க ஆளு எப்படின்னு எல்லாம் நான் யோசிக்கலை. திடீர்ன்னு அதுக்கு என்ன அவசியம் வந்துச்சு. அவளை பழிவாங்க இப்படி எதுவும் யோசிக்கறீங்களா??

 

 

“முட்டாள்த்தனமா யோசிக்கறான்னு நினைக்கறீங்களா?? தெளிவா தான் கேட்குறேன். எதுக்காக அப்படி கேட்டேன்னு சொல்லிடறேன். யோசிச்சு உங்க முடிவை சொல்லுங்க

 

 

“நிச்சயம் இதுல என்னோட சுயநலம் தான் அதிகம் இருக்கு. உங்க மேல லவ் அதனால தான் இப்படி கேட்டேன்னு எல்லாம் பொய் சொல்ல மாட்டேன். ஆனா ஒரு உறுதியை என்னால உங்களுக்கு தரமுடியும். இப்போ உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டு அப்புறம் விட்டுடுவேன்னு எல்லாம் நீங்க யோசிக்க வேண்டாம்

 

 

“நான் அப்படி பாதியில எல்லாம் விட்டிற மாட்டேன். சரி இப்போ விஷயத்து வர்றேன்

 

 

“எங்க வீட்டில நான், அம்மா, தங்கை ஒருத்தி, அவளுக்கும் சின்னவன் தம்பி. இது தான் எங்க குடும்பம், நீங்க நினைக்கிறது சரி தான் எங்க அப்பா தவறிட்டார்

 

 

“நான் காலேஜ் படிச்சுட்டு இருக்கும் போதே ஒரு ஆக்சிடென்ட்ல அவர் எங்களை விட்டு போய்ட்டார். அம்மா தான் எப்படியோ கஷ்டப்பட்டு என்னோட காலேஜ் படிப்பு முடிக்க வைச்சாங்க

 

 

“நான் காலேஜ் முடிக்கறவரை தம்பியும் தங்கையும் ஸ்கூல்க்கு அனுப்பலை. அவங்களுக்கு வேற தனியா காசு செலவழிக்க முடியாதுன்னு அம்மா சொல்லிட்டாங்க

 

 

“நான் காலேஜ் முடிச்சதும் உடனே வேலை கிடைக்கலை. அப்புறம் தான் இந்த டிரைவர் வேலைக்கு வந்தேன். என்னோட தம்பி தங்கை ரெண்டு பேரையும் ஸ்கூல் சேர்ந்தேன்

 

 

“அப்பா இருந்தவரை வீட்டில பெரிசா கஷ்டம் தெரிஞ்சதில்லை. ஆனா சேமிப்புன்னும் எதுவும் கிடையாது, கொஞ்சம் நார்மலான குடும்பம் தான் எங்களோடது

 

 

“அப்பாக்கு நான் கலெக்டர் ஆகணும்ன்னு ஆசை. நான் அப்போ அதை பெரிசா எடுத்துக்கிட்டது இல்லை, அவர் இல்லாதப்போ தான் எனக்குள்ளயும் அப்படி ஒரு ஆசை வந்துச்சு

 

 

“அப்பாவோட ஆசையை எப்படியாச்சும் நெறைவேத்தணும்ன்னு நினைச்சேன். ஆனா அதுக்கு எங்களுக்கு வசதி பத்தலை, எப்படியோ கஷ்டப்பட்டு இப்போ நான் பிரிலிமினரி எழுதி பாஸ் பண்ணிட்டேன்

 

 

“இனி மெயின் எக்ஸாம் எழுதணும், அதுக்கு நான் நெறைய பயிற்சி எடுக்கணும், டெல்லி போகணும் என்றுவிட்டு நிறுத்தினான்.

 

 

‘இதுக்கும் என்னை கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னதுக்கும் என்ன சம்மந்தம் என்று யோசித்தாள்.

 

 

“இதுக்கும் அதுக்கும் என்ன சம்மந்தம் இருக்கும்ன்னு யோசிக்கறீங்க தானே என்று அவள் அகத்தை முகத்தின் வழியே கண்டு கேள்வி கேட்டவனை ஆம் என்பது போல் தலையசைத்து பார்த்தாள்.

 

 

“நான் படிக்கணும்ன்னா என்னால கொஞ்ச நாளைக்கு வேலை பார்க்க முடியாது. எனக்கு வேலை இல்லைன்னா என்னோட குடும்பம் ஓடுறது கஷ்டமா போய்டும்

 

 

அவளுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது, ஆனால் அதற்காக தான் ஏன் இதற்கு சம்மதிக்க வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு எழாமலில்லை.

 

 

“அதனால தான் நான் கல்யாணம் பண்ணிக்கறதுன்னு முடிவெடுத்தேன். வேலைக்கு போற பொண்ணா இருந்தா நல்லதுன்னு தோணிச்சு

 

 

“இப்படி எல்லாம் யோசிக்கறதுக்கு உங்க பிரண்டையே கல்யாணம் பண்ணியிருக்கலாம்ன்னு உங்களுக்கு தோணும். அவங்க பேசினது ரொம்ப தப்புங்க உங்ககிட்ட எல்லாம் சொன்னாங்களான்னு எனக்கு தெரியலை என்றவன் அவர்களுக்கிடையில் நடந்த உரையாடலை கூறி முடித்தான்.

 

 

“அவங்க மொத்தமா என் குடும்பத்தையே நான் விட்டுட்டு வரணும்ன்னு எதிர்பார்க்குறாங்க. அது எந்த விதத்துல நியாயம்ன்னு சொல்லுங்க?? அதுவும் இல்லாம அவங்க ரொம்பவும் கவுரவம் பார்ப்பாங்க போல, எனக்கு அதெல்லாம் சரியா வரும்ன்னு தோணலை. அதான் எதுவும் வேணாம்ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்

 

 

“திடீர்ன்னு உங்ககிட்ட இப்படி கேட்பேன்னு நானே உங்களை பார்க்கறதுக்கு முன்னாடி நிமிஷம் வரைக்கும் நினைக்கலை. யார்கிட்ட சொல்லி எப்படி பொண்ணு பார்த்து எப்படி கல்யாணம் பண்ணுறதுன்னு இப்படி தான் என் யோசனை எல்லாம் இருந்துச்சு

 

 

“என்னமோ உங்களை பார்த்ததும் கேட்கணும்ன்னு தோணிடுச்சு. உங்களுக்கு என்னை தெரியும்ன்னு நினைக்கிறேன். உங்க பிரண்டுகிட்ட நீங்க எனக்காக பலமுறை பரிஞ்சு பேசி கேட்டிருக்கேன்

 

 

“நீங்க எல்லார்கிட்டயும் சகஜமாவும் தன்மையாவும் பேசறதை பார்த்திருக்கேன். அந்த தைரியத்துல தான் உங்ககிட்ட இப்படி கேட்டுட்டேன். நான் இப்படி கேட்டுட்டேன்னு நீங்க தப்பா நினைக்க வேண்டாம்

 

 

“அதுவுமில்லாம யாரோ ஒருத்தரை போய் பொண்ணு பார்த்து பிடிச்சு அவங்க என்னோட கோரிக்கையை ஏத்துக்கிட்டு எங்க குடும்பத்தை அனுசரிச்சு இப்படி எல்லாம் யோசிச்சா யோசனை நீண்டுட்டே தான் போகுதுங்க

 

 

“உங்களை நான் ரொம்ப நாளா பார்த்திட்டு தான் இருக்கேன், எனக்கு எந்த குறையும் உங்ககிட்ட தோணலை, அதுவும் உங்ககிட்ட நான் கேட்க ஒரு காரணமா இருக்கலாம்

 

 

“நான் கேட்டதை நீங்க உங்களை பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளை கேட்டதா நினைச்சு யோசிச்சு பாருங்க. உடனே பதில் சொல்லணும்ன்னு அவசியமில்லை. ஒரு இரண்டு நாள்ல உங்க பதிலை சொன்னா போதும் என்றவனின் எண்ணம் இவள் சரியென்று சொல்ல வேண்டும் என்ற பிரார்த்தனை இருந்தது.

 

 

‘உடனே சொல்ல வேணாம், ஆனா ரெண்டு நாள்ல சொல்லணுமா?? என்றவள் அதிகம் யோசிக்கவில்லை அவனுக்கு பதில் சொல்ல. அவன் பில்லுக்கு பணம் செலுத்திவிட்டு ஆட்டோவை எடுக்கும் வரை மட்டுமே அவள் நேரம் எடுத்துக் கொண்டிருந்தாள்.

 

 

ஆட்டோவில் ஏறும் முன் “எனக்கு முழு சம்மதம் என்றாள். ஆட்டோவில் ஏறி இருந்தவன் சட்டென்று எழுந்து வந்து அவள் இருகைகளையும் பிடித்துக் கொண்டான்.

 

 

“நிஜமாவா சொல்றீங்க?? உங்க உங்க வீட்டில எல்லாம் பேச வேண்டாமா?? அவங்க சம்மதிப்பாங்களா?? என்றான்.

 

 

“எங்க வீட்டு சம்மதத்தை நான் வாங்குறேன், அதுக்கு அப்புறம் நீங்க முறையா எங்க வீட்டுக்கு வந்து பேசணும் என்றாள்.

 

 

“கண்டிப்பா வந்து பேசுவோம். நானும் அம்மாவும் வருவோம் நீங்க என்னை நம்பலாம்

 

 

“எனக்கு ஒரே ஒரு கண்டிஷன் இருக்கு. அதை கண்டிஷன்னு சொல்ல வேண்டாம். கல்யாணத்துக்கு அப்புறம் நீ… நீங்க அவ… அவளோட… என்று சொல்ல முடியாமல் நிறுத்தினாள்.

 

“நான் சொன்னா சொன்னது தாங்க. உங்களை கல்யாணம் பண்ணிட்டு அப்புறம் அவங்களை நினைச்சுட்டு இருக்க மாட்டேன். கடைசிவரைக்கும் நீங்க மட்டும் தான் எனக்கு என்றவனின் குரலில் பொய்யில்லை என்பதை அவள் உணர்ந்தாள்.

 

 

அவன் ஏதோ கேட்க வருவதும் தயங்குவதும் போலவும் தோன்ற “என்கிட்டே எதுவும் கேட்கணுமா??

 

 

“உங்க… உங்க பேரு என்ன?? என்று அவன் கேட்டதும் நிச்சயம் தலையில் அடித்துக் கொள்ளத்தான் தோன்றியது அவளுக்கு. ‘இப்படியும் ஒருவன் இருப்பானா…

 

 

‘கல்யாணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டுவிட்டு எல்லாம் பேசிவிட்டு கல்யாணம் செய்து கொள்ளப் போகிறவளின் பெயரே தெரியாமல் உலகத்தில் ஒருவன் இருப்பான் என்றால் அது இவனாக மட்டும் தான் இருப்பான் என்று எண்ணிக் கொண்டாள்.

 

 

வெகு நேரமாக அவன் இவளின் பதிலிற்காய் காத்திருப்பது புரிய “மித்ரா… சங்கமித்ரா… என்றாள்.

 

 

“சாரி கல்யாணம் பண்ணிக்கறீங்களான்னு கேட்டுட்டு இப்போ வந்து பேர் கேட்கறானேன்னு நினைக்காதீங்க… உங்க பேரு மித்ரான்னு கேப் பிக்கப் லிஸ்ட்ல பார்த்திருக்கேன். அது முழு பேரா இருக்காதுன்னு தோணிச்சு அதான் கேட்டேன்என்றான். “என் பேரு… என்று அவன் ஆரம்பிக்கவும் “தெரியும் என்று முடித்திருந்தாள் அவள்.

 

 

இது போல் அவன் தயக்கமாய் யாரிடமும் பேசியிருக்க மாட்டான் போல் தோன்றியது. இதுவரை பேசியதை கூட அவள் முகம் பார்க்காமல் வேக வேகமாகவே சொல்லி முடித்திருந்தான்.

 

 

அவள் முகம் பார்க்கும் சந்தர்ப்பங்களில் அவன் முகத்தில் லேசாய் குற்றவுணர்வு எழுந்ததை உணர்ந்தாள். “நான் எதுவும் நினைக்கலை, விட்டுடுங்க என்றாள்.

 

 

“கடைசியா ஒண்ணு கேட்கணும்

“என்ன??

 

 

“உங்க பிரண்டு அஸ்வினி எப்படி இருக்காங்க?? என்னை பத்தி எப்பவாச்சும் பேசியிருக்காங்களா?? என்றாள்.

 

 

உள்ளே ஏதோ ஒரு வலி பரவிய போதும் “எப்படி இருக்கான்னு தெரியாது. அவ சோழிங்கநல்லூர் பிரான்ச்க்கு மாற்றல் வாங்கிட்டு போய்ட்டா

 

 

“அப்போ என்னை பத்தி அவங்க பேசினதே இல்லையா?? என்றவனின் குரலில் சிறிது ஏமாற்றம் தொனித்தது போல இருந்தது.

 

 

“நீங்க சம்மதம்ன்னு சொன்னதுல எனக்கு ரொம்பவே சந்தோசம் தான். ஆனா நான் கேட்டதும் நீங்க எதுவும் யோசிக்காமலே சம்மதம் சொல்லிட்டீங்களா இல்லை வேற எதுவும் காரணமிருக்கா?? என்று தன் சந்தேகத்தை தயங்காமல் கேட்டுக் கொண்டான் அவன்.

 

 

‘ஆஹா கரெக்ட்டா பாயிண்ட்டுக்கு வந்துட்டான் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் மித்ரா. “என் பிரண்டு ஏமாத்திட்டா நானும் உங்களை ஏமாத்த இஷ்டமில்லைன்னு வேணா வைச்சுக்கோங்களேன்

 

 

“இது பதிலில்லை சரி தானே

 

 

“அப்போ எது என் பதிலா இருக்கும்ன்னு நினைக்கறீங்க??

“அதை தான் நானும் உங்ககிட்ட கேட்டுகிட்டு இருக்கேன். ஏதோ என் மேல பரிதாப்பட்டு நீங்க சரின்னு சொல்றீங்களோ!! என்னவோ!!

 

 

“அப்படி இருக்காதுன்னு உங்களுக்கே நல்லா தெரியும், தெரிஞ்சும் அதை ஏன் கேட்கறீங்க

 

 

“ஹ்ம்ம் தெரியும் அப்படி சொன்னா ஒரு வேளை உண்மையா நீங்க என்ன நினைச்சீங்கன்னு தெரிஞ்சுக்கலாம்ன்னு தான் கேட்டேன்

 

 

“அதான் சொன்னீங்களே வீட்டில பார்த்த மாப்பிள்ளையா நினைக்க சொல்லி. அப்படி யோசிச்சு பார்த்தேன், வீட்டில பார்த்திருந்தா கூட ஒரு பத்து நிமிஷம் இல்லை அதிகபட்சம் அரைமணி நேரம் பார்க்கற ஒருத்தரை பிடிச்சிருக்கு பிடிக்கலைன்னு முடிவு பண்ணுறோம்

 

 

“உங்களை நான் ஒன்றரை வருஷமா பார்க்கறேன். அதிகம் பேசலைன்னா கூட உங்களை என்னால கணிக்க முடிஞ்சுது. சிகரெட் பிடிப்பீங்க, தண்ணி அடிப்பீங்களான்னு தெரியலை. பெண்கள்கிட்ட அனாவசியமா வழிஞ்சது இல்லை

 

 

“அப்புறம் வேற எதுவும் உங்ககிட்ட எனக்கு தப்பா தெரியலை. அதனால தான் சரின்னு சம்மதம் சொல்லிட்டேன்

 

 

“ஹ்ம்ம்

 

 

“இப்பவும் நீங்க நம்பலையா??

 

 

“நிச்சயம் இந்த பதில் எனக்கு திருப்தியா இல்லை தான் என்று ஒத்துக்கொண்டான் அவன்.

 

 

“அப்போ வேற எப்படி சொன்னா ஒத்துக்குவீங்க

 

 

“ஒரு வேளை உங்களுக்கு என்னை பிடிச்சிருந்திருக்கலாம்

 

 

மித்ராவிற்கு லேசாய் வியர்வை அரும்பியது. சட்டென்று தன்னை சுதாரித்துக்கொண்டு “இருக்கலாம், அதுக்காக… என்று அவள் இழுக்கவும் “இப்போதைக்கு இந்த பதில் எனக்கு திருப்தி தான் மித்ரா என்றான் அவன்.

 

____________________

 

 

தொடர்ந்து தன் கதையை சொல்லிக்கொண்டிருந்த மித்ராவை இந்த இடத்தில் சுஜி இடைமறித்தாள். “ஹேய் உண்மையை சொல்லு. நீ மேல அவர்கிட்ட என்ன சொல்ல வந்த என்றாள் அவள்.

 

“அதுக்காக நான் உங்களை விரும்பறேன்னு அர்த்தமில்லை பிடிக்கும் அதனால கூட சரின்னு சொல்லியிருக்க்கலாம்ன்னு சொல்லியிருப்பேன் அவ்வளவு தான் என்றாள் மித்ரா.

 

 

“இந்த பதிலை அவர்கிட்ட சொல்லி ஏமாத்தியிருக்கலாம். உண்மையை சொல்லு உன் மனசுல என்ன இருந்துச்சு எதனால நீ கொஞ்சம் கூட யோசிக்காம சரின்னு சொன்னே என்றாள் சுஜி.

 

 

“அது தான் உனக்கு தெரியுமே தெரிஞ்சும் ஏன்டி சும்மா சும்மா அதையே கேட்குற??

 

 

“எனக்கு தெரிஞ்சது எல்லாருக்கும் தெரிய வைக்க தான் இல்லைன்னா படிக்கிறவங்க சரி சரி கேட்குறவங்களுக்கு புரியணும்ல அதான் மறுபடியும் எனக்காக ஒரு முறை சொல்லு

 

 

“அவரை நான் விரும்பினேன் அது, அது மட்டும் தான் நான் சரின்னு சொல்லுறதுக்கான ஒரே காரணம்

 

 

“அந்த லவ் தான் உனக்கு எப்படி வந்துச்சு??அதை சொல்லும்மா??

 

 

“லவ் எப்போ வந்துச்சு எப்படி வந்துச்சுன்னு எல்லாம் எனக்கு தெரியாது. முதல்ல ஆளு ஸ்மார்ட்டா இருக்கார்ன்னு அவரை பத்தி பேச ஆரம்பிச்சோம்

 

 

“அஸ்வினி தான் எப்பவும் அவரை கொஞ்சம் இறக்கமா பேசிக்கிட்டு இருப்பா, அவ அப்படி பேசும் போதெல்லாம் எனக்கு ரொம்ப கோவம் வரும். அதை மறுத்து நான் பலமுறை அவகிட்ட பேசியிருக்கேன். அப்போ கூட நான் அவரை விரும்புறேன்னு நினைக்கவே இல்லை

 

 

“அப்புறம் எப்போ எப்படின்னு தெரியலை அவரை ஒரு ஆறு மாசமா பார்க்காதப்போ ரொம்பவே மிஸ் பண்ண ஒரு பீலிங் இருந்துச்சு அப்போ தான் என் மனசு எனக்கே புரிஞ்சுது

 

 

“புரிஞ்சு என்ன பண்ணியிருக்க முடியும், அவர் தான் இன்னொரு பொண்ணை விரும்பினாரேன்னு பேசாம இருந்துட்டேன். திடீர்ன்னு ஒரு நாள் நான் அவரை நேர்ல பார்ப்பேன்னோ அவர் என்னை கல்யாணம் பண்ணிக்க கேட்பார்ன்னோ நானே எதிர்பார்க்கலை

 

 

“அதான் அதெல்லாம் நடந்திருச்சே, அப்புறம் மேல சொல்லு. திரும்பவும் விட்ட இடத்துல இருந்து சொல்லு என்றாள் சுஜி.

 

____________________

 

 

‘ஹப்பாடா இதுக்கு மேல எதுவும் கேட்கலை அதுவரை சந்தோசம் தான் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் அவள்.

 

 

“உங்க வீட்டுல என்ன சொல்லப் போறீங்க?? என்று அடுத்த கேள்வி கேட்டான்.

 

 

‘இன்னும் இது முடியலையா என்று எண்ணிக்கொண்டாலும் அவன் கவலை அவனுக்கு என்பதை உணர்ந்தே இருந்தாள் அவள்.

 

 

“இந்த வாரம் பொங்கலுக்கு நான் ஊருக்கு போறேன். அப்போவே வீட்டில விஷயத்தை சொல்லிடுவேன். அவங்ககிட்ட சம்மதம் வாங்கினதும் உங்களுக்கு போன் பண்றேன் என்றாள்.

 

 

“சம்மதம் வாங்குறது இருக்கட்டும், நான் கேட்டது உங்க வீட்டில என்னன்னு சொல்லி சம்மதம் கேட்பீங்கன்னு தான்

 

 

“நா… நாம விரும்பறோம்ன்னு சொ… சொல்லி தான்...” என்று திக்கினாள்.

 

 

“ஹ்ம்ம் அது தான் சரி அப்படி சொன்னா தான் வீட்டில பேச முடியும். ஆனாலும் மித்ரா நான் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்தறேனா நிஜமாவே எனக்கு ரொம்ப கில்டியா இருக்கு உங்களுக்கு நெருக்கடி கொடுக்கறனோன்னு

 

 

“இங்க பாருங்க எல்லாம் பேசி முடிச்சாச்சுன்னு நான் நினைச்சேன். நீங்க மறுபடியும் ஆரம்பிச்ச இடத்துக்கு வர்றீங்க. உங்களுக்கு இஷ்டமில்லைன்னா விட்டுடுங்க எதுக்கு போட்டு மனசை குழப்பிட்டு

 

 

“நீங்க உங்க வேலையை பாருங்க நானும் என் வேலையை பார்த்திட்டு போறேன் என்று பின்சீட்டில் அமர்ந்திருந்தவள் எழப் போனாள்.

 

 

“ப்ளீஸ் மித்ரா உட்காருங்க, நான் ஏதோ.. சரி அதை விடுங்க… நீங்க வீட்டில பேசிட்டு சொல்லுங்க… உங்க போன் நம்பர் சொல்லுங்க நான் சேவ் பண்ணிட்டு உங்களுக்கு மிஸ்டு கால் தர்றேன் அப்புறம் நீங்க என்னோட நம்பர் சேவ் பண்ணிக்கோங்க என்றான்.

 

 

இருவருமாக தங்கள் எண்ணை பகிர்ந்து கொண்டு அங்கு பிரிய அவள் ஊருக்கு செல்லும் நாளன்று அவளை ரயிலேற்றி விட எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தான் சைதன்யன்.

 

 

அவனின் ஆட்டோவிலேயே அவளை ஏற்றி வந்திருந்தவன் அவள் உடைமைகளை எடுத்துக்கொண்டு இருவருமாக ரயிலை நோக்கிச் சென்றனர்.

 

 

அவளின் சீட் பெர்த் பார்த்து உடைமைகளை வைத்துவிட்டு அவளெதிரில் அமர்ந்தான் அவன். “ஆமா நைட் என்ன சாப்பிடுவீங்க?? என்றான்.

 

 

“ட்ரைன்ல டிபன் விப்பாங்க அதை வாங்கி சாப்பிட்டுக்குவேன் என்றாள்.

 

 

“ஒரு ஐஞ்சு நிமிசத்துல வர்றேன் என்று சொல்லிவிட்டு வெளியில் சென்றவன் ஐந்து நிமிடத்திற்கும் மேல் பத்து நிமிடம் கடந்த பின்னே தான் வந்து சேர்ந்தான்.

 

 

அவர்களை ரயிலுக்கு அரைமணி நேரத்திற்கு முன்பாகவே வந்திருந்ததால் நேரம் இருந்தது. “இந்தாங்க என்று அவளிடம் சாப்பாட்டு பொட்டலத்தை கொடுத்தான்.

 

“உங்களுக்கு என்ன பிடிக்கும்ன்னு கேட்காமேலே வாங்கிட்டு வந்துட்டேன். நாலு இட்லியும் இரண்டு சப்பாத்தியும் இருக்கு, போதுமா இல்லை வேற எதுவும் வாங்கிட்டு வரட்டுமா என்றான்.

 

 

முதல் முறையாக அவளுக்காக அவன் வாங்கி வந்திருக்கிறான் பிடிக்காது என்று சொல்லிவிடுவாளா என்ன. “இல்லை இதுவே அதிகம் போதும் வேற ஒண்ணும் வேண்டாம்

 

 

“அச்சோ… என்று மறுபடியும் எழுந்தவனை “என்னாச்சு?? என்றாள்.

 

 

“எல்லாம் வாங்கிட்டு வந்தேன், தண்ணியை மறந்திட்டேனே?? என்றான்.

 

 

“தண்ணி கூடவா நான் எடுத்திட்டு வந்திருக்க மாட்டேன். அதெல்லாம் என்கிட்ட இருக்கு நீங்க உட்காருங்க என்றாள்.

 

 

“ஊர்ல உங்க வீட்டுல எதுவும் திட்டுவாங்களா??

 

 

‘பின்னே கொஞ்சுவாங்களா என்று மனதிற்குள் கவுன்ட்டர் கொடுத்துக் கொண்டு “அதை பத்தி நீங்க ஏன் யோசிக்கறீங்க?? ஒண்ணும் பிரச்சனை வராது. எங்கப்பா நம்ம கல்யாணத்துக்கு சம்மதிப்பார். அதை நான் பார்த்துக்கறேன் என்றவள் இதற்கு மேல் மேலே கேட்காதே என்பது போல் முடித்துவிட்டாள்.

 

 

அவனும் மேலும் அதை பற்றி கேட்காமல் விடுத்தவன் இப்போது வேறு கேட்டான். அவளுக்கு தான் அய்யோவென்றிருந்தது.

 

“என்னை பத்தி சொன்னேன், உங்களை பத்தி எதுவுமே கேட்கவேயில்லையே. நீங்களும் எதுவும் சொல்லவேயில்லையே?? என்றான்.

 

 

‘நீ எதை தான்டா சரியா செஞ்சிருக்க?? திடீர்னு வந்தே கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்ட, அதுவே எனக்கு பெரிய ஷாக் அதுக்கு மேல போய் நான் சம்மதம் சொன்னதும் தான் என் பேரே கேட்டே

 

 

‘அது எந்த கணக்குல சேர்க்குறது, இப்போ தான் என் குடும்பத்தை பத்தி விசாரிக்கணும்ன்னு உனக்கா தோணியிருக்கு என்று எண்ணிக் கொண்டாள்.

 

 

“என்னாச்சு என்கிட்ட சொல்லக் கூடாத ரகசியமா?? என்று அவன் கேட்டதும் தான் நிகழ்காலம் திரும்பினாள் அவள்.

 

 

“இல்லை ஏதோ யோசிச்சுட்டு இருந்தேன் சாரி. அப்பா, அம்மா, அக்கா, நானு இது தான் எங்க குடும்பம்

 

 

“அக்காக்கு கல்யாணம் ஆகிருச்சு எங்க மாமனை தான் கட்டியிருக்கா. அவளுக்கு இரண்டு பிள்ளைங்க. அப்பா ஊர்ல பாத்திரக்கடை வைச்சிருக்காங்க, அதை தவிர்த்து தோப்பு துரவுன்னு இருக்கு. அம்மா வீட்டரசி அவ்வளவு தான் எங்க குடும்பம்

 

 

“ஹ்ம்ம் என்றவன் மேலே எதுவும் கேட்கவில்லை ஏதோ யோசனையும் குழப்பமுமாகவே இருந்தான்.

 

 

“நீங்க ரொம்ப குழப்பிக்க வேண்டாம். எப்படி மேலே படிக்கலாம் எங்க போய் படிக்கலாம் எந்த சென்டர் இப்படி மட்டும் யோசனை பண்ணுங்க

 

 

“நான் ஊருக்கு போனதும் நல்ல சேதியோட உங்களுக்கு போன் பண்ணுறேன். ட்ரைன் கிளம்பப் போகுது நீங்க கிளம்புங்க நான் பார்த்துக்கறேன் என்றாள்.

 

 

அவள் சொன்னதும் தெளிந்தது போல் இருந்தாலும் கீழே இறங்கி சன்னலருகே நின்றவன் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

 

‘இதென்ன இப்படி பார்த்து வைக்குறான். நான் என்ன இவன் லவ் பண்ண பொண்ணா என்ன என்று மனதிற்குள் நினைத்தாலும் அவன் பார்வை தனக்குள் ஏதோ செய்வதை உணர்ந்தாள்.

 

 

நிமிர்ந்து பார்க்க வெட்கம் தடுக்க அவன் குரல் கேட்டு தான் அவளை நிமிர்ந்து பார்த்தான். “மித்ரா ட்ரைன் கிளம்புது பார்த்து போயிட்டு வாங்க, ஊருக்கு போனதும் போன் பண்ணுங்க என்றான்.

 

 

அப்போது தான் அவளுக்கு ஒன்று உரைத்தது. கல்யாணம் செய்துக் கொள்ள கேட்டுவிட்டு இன்னமும் வாங்க போங்க என்று ‘ங்க போட்டுக் கொண்டிருக்கிறானே என்று.

 

 

ரயில் நகர ஆரம்பிக்கவும் “கண்டிப்பா போனதும் போன் பண்றேங்க. நீங்க என்னை நீ வா போன்னே கூப்பிடுங்க அப்போ தான் வித்தியாசம் தெரியாது என்றவளுக்கு பதிலாய் லேசாய் தலையசைத்தான்.

 

 

அவள் எப்போது ஊருக்கு செல்லும் போதும் அவளாகவே தனியாக கிளம்பி தனியாகவே தான் செல்லுவாள். முதல் முறையாக அவளை வழியனுப்ப மனதிற்கு பிடித்தவனே வந்ததில் மனம் சற்று பூரிக்கத் தான் செய்தது.

 

 

மனம் மகிழ்ச்சி கொண்ட அதே சமயம் வீட்டில் எப்படி சம்மதம் வாங்கப் போகிறோம் என்ற பயமும் கவலையும் ஒருங்கே எழுந்தது அவளுக்கு….

Advertisement