Advertisement

                     மாயவனோ !! தூயவனோ !! – 16

 “ ஓ மை காட் !! ஓ மை காட் !!  “ என்று கூறியபடி தன் தலையில் கை வைத்து அமர்ந்து இருந்தாள் மித்ரா.. அவளுக்கு தான் படித்த அத்தனையும் நிஜமா பொய்யா என்று கூட நம்ப முடியவில்லை.. ஏதோ சினிமாவில் பார்ப்பது போல இருந்தது..

ஆனால் இது அத்தனையும் தன் வாழ்வில் தனக்கே தெரியாமல் நடந்த, நடந்து கொண்டு இருக்கின்ற விஷயங்கள் என்று தெரிந்த பின்னும் மித்ராவால் நம்ப முடியவில்லை..

“ ஓ !!! மனு.. நீ என்ன பண்ணி வச்சு இருக்க ?? ச்சே என்னால.. என்னால தானே இது எல்லாம்.. உனக்கு ஏன் டா இவ்வளோ தைரியமும் நெஞ்சழுத்தமும்?? இவ்வளோ பெரிய ஆபத்துல நீயா வழிய வந்து தலை குடுத்து இருக்கையே… “ என்று தன் கணவனை எண்ணி வருந்தினாள்.

மீண்டும் தான் படித்தது எல்லாம் அவள் கண் முன்னே காட்சிகளாய் விரிந்தன.. என்னதான் மித்ரா, சுந்தர் இருவரின் கோப்புகள் தனி தனியாய் இருந்தாலும், காட்சிகளும் காரணங்களும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்தே இருந்தது..

சுந்தர் அமைச்சர் தர்மதுரையின் ஒரே புதல்வன்.. ஆனால் தந்தைக்கு நேர் மாறாக இருப்பவன்.. அவர் வலம் என்றால் இவன் இடம்.. அவர் கிழக்கு என்றால் இவன் மேற்கு. அவர் நேர்மைக்கு பெயர் போனவர் என்றால் இவன் நேர்மை எந்த கடையில் விற்கிறது என்று கேட்பான்..

மகன் மீது அமைச்சருக்கு மிகவும் பாசம்.. ஆனால் பாசம் இருக்கிறது என்பதிற்காக அவனை கண் மூடி தனமாய் நம்பும் ரகம் இல்லை. அவன் வாழ்கைக்கு எது சரியோ அதையே செய்வார்.. அது அவனுக்கு பிடிக்கிறதா இல்லையா என்ற கவலை எல்லாம் இல்லை..

அப்படி எண்ணித்தான் தன் சொந்த தங்கையின் மகளான நளினாவை சுந்தருக்கு திருமணம் செய்து வைத்தார்.. ஆனால் சுந்தருக்கோ பிறந்ததில் இருந்து மேல்மட்ட வாழ்க்கைக்கு பழகி இருந்தவன்.. அவனுக்கு கிராமத்தில் பிறந்து வளர்ந்து நளினாவை சிறிதும் பிடிக்கவில்லை..

தந்தையிடம் கூறவும் பயம்.. எங்கே தன்னை வீட்டை விட்டு வெளியே போக கூறிவிட்டால், பின் இத்தனை பணம் சொத்தையும் யார் அனுபவிப்பது.. ?? ஆனால் அமைச்சரோ திருமணம் செய்துவைத்த கையோடு மகனுக்கு ஒரு  சிறு தொழிலையும் அமைத்து குடுத்து, இனிமேல் உன் சொந்த காலில் தான் நீ நிற்கவேண்டும், எந்த காரணம் கொண்டும் தந்தையின் நிழலில் வசிக்க கூடாது என்று வேறு வீடு பார்த்து குடித்தனம் வைத்துவிட்டார்..

இத்தனை நாள் வீட்டில் ஒற்றை பிள்ளையாக சகலவிதமான சுக போகங்களையும் அனுபவித்தவன் இன்று அனைத்தயும் விட்டு தனிவீட்டில் இருப்பது மிகுந்த கோவத்தை ஏற்படுத்தியது.. அதற்கு காரணம் இந்த நளினா தன் வாழ்கையில் வந்த நேரம் தான் என்று நம்பினான்..

அன்றிலிருந்து ஆரம்பித்தது நளினாவிற்கு ஏழரை.. அடி உதை தான் தினமும்.. ஆனால் தந்தை வரும் நாள் மட்டும் அவளை நன்றாக வைத்து இருப்பது போல சீரட்டுவான்.. அவளும் கணவனை காட்டிக்குடுக்காமல் அமைதி காத்தாள்..

இதையே தனக்கு சாதகமாக பயன்படுத்தினான் சுந்தர், முதல் காரியமாக தன் தந்தையின் முன்னால் நல்ல மனிதன் போல நடமாடினான், அதன் பிறகு அவருக்கு தெரியாமல் அவரின் பெயரை வைத்தே அரசியல், தொழில், அதிகாரம் என்று கொடி கட்டி பறந்த சில பல பெரிய புள்ளிகளை தன் பக்கம் சாய்த்து கொண்டான்.             

தனக்கும் தன் தந்தைக்கும் நெருக்கமான உறவு இருப்பது போலவும், அவனை கேட்டுதான் அமைச்சர் எந்த ஒரு முடிவும் எடுப்பார் என்றும் பிறரை நம்ப வைத்தான்.. இப்படியாக படிபடியாக வாழ்வில் முன்னேறினான் குறுக்கு வழியில்.

தன் தந்தையின் பெயரை கூறிக்கொண்டு பணம் சம்பாதிக்க ஆரம்பித்தான். கட்ட பஞ்சாயத்து, கல்லூரியில் இடம் வாங்கி குடுப்பது, இடம் விற்பவர்களையும் வாங்குபவர்களையும் மிரட்டி பணம் பார்ப்பது, போன்ற விசயங்களில் அவனுக்கு பணம் குவிந்தது.. ஆனாலும் அவனது பேராசை ஒரு அளவுக்கு மேல வளர்ந்து விஸ்வரூபம் எடுத்தது.. இன்னும் இன்னும் என்ற எண்ணம் அவன் மனதில் வேரூன்றிவிட்டது..

நளினா எத்தனையோ எடுத்து சொல்லியும் அவன் கேட்பதாய் இல்லை.. இதற்கு நடுவில் அவளுக்கு பெண் குழந்தை பிறந்தது.. குழந்தையின் முகத்தை பார்த்தாவது கணவன் மாறுவான் என்று எண்ணியவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் அதன் பிறகு தான் சுந்தரின் அட்டகாசங்கள் எல்லாம் அதிகமாகின..

ஒவ்வொன்றையும் குழந்தைக்காக, குழந்தைக்காக என்று பொறுத்து போக ஆரம்பித்தாள் நளினா..  இப்படி ஒரு பக்கம் இருக்க அவனுக்கு ஜோசியம், ஜாதகம், மாய மந்திரம் இதில் எல்லாம் நம்பிக்கை அதிகம்.. ஒவ்வொரு விசயத்தையும் தன் ஜாதகம் பார்த்தே செய்வான்.

அப்படி ஒரு கூறுகெட்ட ஜோசியன் கூறியதின் பலன் தன் எட்டு வயதே நிரம்பிய மகளை விடுதிக்கு அனுப்பினான்.. நளினாவோ அழுது புலம்பினான்.. சுந்தரோ அவளை அடித்து துவைத்தான்..

“ என்னைய எவ்வளோ வேணாலும் அடிங்க கொள்ளுங்க.. நான் எதுவும் சொல்லல.. ஆனா இந்த சின்ன பொண்ணு என்ன பண்ணுனா ?? இங்க இல்லாத பள்ளிகூடமா ?? ஏங்க இப்படி பண்ணுரிங்க ?? நமக்கு என்ன இங்க ஒன்னும் இல்லையா ??? வேணாம்ங்க காவேரி சின்ன பொண்ணு எட்டு வயசுதான் ஆகுது.. அவளுக்கு என்ன தெரியும்ன்னு ஹாஸ்டல் அனுப்ப போறீங்க?? ” என்று அடம் பிடித்தவளின் கன்னத்தில் அவனது விரல்களின் தடம் தான் படிந்தது..

தன் தந்தை கேட்டதற்கும் “ இங்க இருந்தா அதிகமா செல்லம் கொடுக்கிறோம் பா.. அவளுக்கு இது நல்லது இல்லை. அதுவும் இல்லாம நமக்கு அரசியல் எதிரிகள் நிறைய.. இவளோ நமக்கு ஒரே பொண்ணு.. எந்த காரணம் கொண்டும் என் மக இதுல பாதிக்க கூடாது
” என்று நல்லவன் போல பேசி மழுப்பிவிட்டான்.

தான் நினைத்ததை நடத்துவதற்காக சுந்தர் என்னவேண்டுமானாலும் செய்வான் என்பதை ஒவ்வொரு செயலிலும் நிரூபித்தான்.. நளினா வாயே திறப்பதில்லை என்று முடிவெடுத்து விட்டாள்.. இப்படி அளவுக்கு அதிகமாக பணம் புழங்கவும் அணைத்து கெட்ட பழக்கங்களும் அவனது வசம் கொண்டன.

மது, மாது, போதை மருந்து என அனைத்தையும் விட்டு வைக்கவில்லை.. சில நேரம் பெண்களை வீட்டிற்க்கே வரவழைப்பான்.. அப்பொழுது எல்லாம் நளினா துடிப்பாள்..

என்னங்க நம்ம ஒரு பொன்னை பெத்து வச்சு இருக்கோம்.. நீங்க இப்படி வீட்டுக்கே கூட்டி வந்து கூத்தடுச்சா எப்படிங்க ??” என்று கதறினாள்.

“ என்ன.. என்ன டி?? எப்ப பாரு பொன்னை சொல்லியே என்னைய அடக்க பாக்குறியா ?? அதுக்கு எல்லாம் பயபடுறவன் நான் இல்லை “ என்று அவன் எகிறினான்.

ஒருநாள் விடுமுறைக்கு என்று இரண்டு ஆண்டுகள் கழித்து காவேரி வந்து இருந்த போதும் இதே போன்றொதொரு சம்பவம் நிகழ்ந்தது.. ஆனால் காவிரிக்கு தான் தன் தந்தை தங்கள் வீட்டில் வேறு ஒரு பெண்ணுடன் இருப்பதை கண்டு குழம்பினாள்..

ஆனால் நளினாவோ ஏதேதோ காரணம் கூறி மகளை சமாதனம் செய்துவிட்டாள்.. அதன் பின் சுந்தரிடம் “ இங்க பாருங்க இனிமே இப்படியெல்லாம் வீட்டுக்கு யாரையும் கூட்டி வறாதிங்க.. மானம் போகுது. இன்னைக்கு உங்கள பொண்ணு பார்த்திட்டா “ என்று மனதில் உள்ள வேதனையை மறைத்து சற்றே திடமான குரலில் கூறினாள்..

ஆனால் அவனோ “ என்ன டி?? பொண்ணு இருகாங்கிற திமிரா ?? நான் சந்தோசமா இருந்தா ஆத்தாளுக்கும் மகளுக்கும் ஆகாதே.. இங்க பாரு இது என் வீடு, நான் என் இஷ்டத்திற்கு தான் இருப்பேன்.. உனக்கு இஷ்டம்னா இரு இல்ல நடைய கட்டு “ என்று எகிறினான்..

“ இது நான் வாழ வந்த வீடு.. நான் ஏன் போகணும்.. பொண்டாட்டின்னா நல்லது கேட்டது எடுத்து சொல்லணும்.. நீங்க என்னவோ பண்ணுங்க எனக்கு அதை பத்தி எல்லாம் கவலை இல்லை. என் பொண்ணு வீட்டுக்கு வர நேரம் இங்க நிம்மதி இருக்கனும். ஒழுக்கம் இருக்கனும். “ என்று குரலை உயர்த்தவும்

“ என்ன டி விட்டா பேசிகிட்டே போற “ என்று அவளது குரலை பிடித்து நெறித்தான்.. ஆனால் அவன் தன்னை கொன்றே போட்டாலும் இந்த விசயத்தில் இருந்து பின் வாங்குவதாய் இல்லை நளினா.. பின்னே தன் பெண்ணின் வாழ்வே கேட்டு விடுமே..

வளரும் தளிர் எதை பார்க்கிறதோ, எதை கேட்கிறதோ அதை தானே பற்றுகோளாக கொண்டு வளரும்.. ஒருவேளை தந்தையை கொண்டு மகள் மனம் மாறிவிட்டாள் ??? என்ன செய்ய முடியும். இந்த ஒரு காரணத்திற்காகவே நளினா சுந்தரிடம் மன்றாடினாள்..

பொறுத்து பொறுத்து பார்த்தவள் ஒரு நிலையில் “ இங்க பாருங்க, நீங்க என்ன வேணும்னாலும் பண்ணுங்க, நான் எதுவும் சொல்லல.. ஆனா எதுவும் இந்த வீட்டுல நடக்க கூடாது. குடிங்க கூத்தாடிங்க எப்படியோ போங்க. ஆனா என் கண் முன்னாடி எதுவும் இருக்க கூடாது. அப்படி நீங்க மீறி பண்ணுனா நான் மாமா கிட்ட எல்லாத்தையும் ஒன்னு விடாம சொல்லிடுவேன் “ என்றாள் திடமாக.

“ என்ன டி மிரட்டுறையா ?? “ என்று அதற்கும் அடித்து துவைத்தான்.. ஆனால் அதற்கு பிறகு அவன் வீட்டில் எதுவும் வைத்துகொள்வது இல்லை. அனைத்துமே அந்த கடற்கரை வீட்டில் தான்.. பின் நளினா என்ன நினைத்தாளோ மகளை விடுமுறைக்கு கூட வீட்டிற்கு அழைப்பது இல்லை..

இப்படியாக நாட்கள் சென்று கொண்டு இருக்கும் பொழுது தான் சுந்தரின் தொழில் மேலும் மேலும் விருத்தி அடைந்தது.. எத்தனை பணம் வந்ததோ அத்தனைக்கு அத்தனை அவன் மனதில் கொடுரமான எண்ணங்களும் தோன்றின.

பணம் பணம் பணம் அது ஒன்று மட்டுமே அவன் மனதில் ரத்தத்தில் உயிரில் ஊறிய விசயமாக இருந்தது.. இப்படி அவனுடைய பணத்தின் மீது இருந்த மோகம் கள்ள கடத்தல், தன்னிடம் வேலை வாங்கி தருமாறு கேட்டு வருபவர்களில் வயது பெண்கள் இருந்தாள், வெளிநாட்டில் விற்பது போன்ற கொடிய செயல்களை செய்ய வைத்தது..

ஒருநாள் அப்படிதான் சுந்தரை தேடி பாய் வந்தான்.. “ என்ன பாய் இவ்வளோ தூரம் ??” என்றான் சுந்தர்..

“ ஒன்னும் இல்லண்ணே.. ஒரு விசயம் பேசணும் அதான் நேராவே வந்தேன் “ என்று தலையை சொரிந்தான்.

“ நீ நேராவே வந்து இருக்கன்னா அது கண்டிப்பா ஏதாவது பெரிய விஷயமா தான் இருக்கும் “

“ ஹ்ம்ம் நமக்கு ஒரு வெளிநாட்டு பார்ட்டி தெரியுன்னே.. பார்ட்டி பாரின்ல பெரிய மருந்து கம்பனி வச்சு இருக்காப்ல.. பெரிய புள்ளி வேற.. “ என்று பீடிகை போட்டான்.

“ ஹ்ம்ம் மேல சொல்லு “

“ இல்ல அவர் மருந்து தயாரிக்கிற இடத்துல முதல்ல எலி, கோழி இதுக்கு தான் மருந்து குடுத்து டெஸ்ட் பண்ணுவாங்களாம்.. ஆனா இப்ப ”

“ ஆனா இப்ப ??”

“ இப்ப ஆளுங்களுக்கும் குடுத்து டெஸ்ட் பண்ண போறங்களாம்.. ஆனா அந்த ஊருகாரனை இதுல பிடிக்க முடியாது. அதான் நம்ம கிட்ட ஆளு சப்பளை செய்ய முடியுமான்னு கேட்டாப்ல. “ என்று ஒரு வழியாய் கூறி முடித்தான்.

“ ஓ !! சரி என்ன மருந்து தயாரிப்பு ??”

“ அது வந்து அண்ணே.. வெளிய தெரியுற மாதிரி தயாரிக்கிறது எல்லாம் நல்ல மருந்துங்க தான்.. ஆனா உள்ள யாருக்கும் தெரியாம போதை மருந்து தயாரிச்சு எல்லா நாடுகளுக்கும் அனுப்புறாங்க.. அதுக்கு தான் ஆள் வேணுமாம்.. பணம் எவ்வளோ வேணாலும் தரேன் அப்படின்னு சொல்லுறன்”

இதை கேட்டதும் சுந்தரின் மூளை வேகமாக வேலை செய்தது.. ஆனால் யோசித்து செயல் படவேண்டிய விஷயம் என்பதால் “ சரி பாய் என்கிட்டே சொல்லிடேல.. நான் யோசனை பண்ணிட்டு நாளைக்கு உனக்கு என்னானு சொல்லுறேன்” என்று கூறி பாயை அனுப்பிவிட்டான்.

ஆனால் அவன் சென்ற பிறகும் சுந்தரின் மனம் வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் மீதே பாய்ந்தது.. தனக்கு தெரிந்த ஆட்களிடம் இதுபற்றி வெளியில் தெரியாதவாறு விசாரித்தான்.. அவர்களும் இப்படி எல்லாம் வெளிநாட்டில் நடப்பது நிஜம் தான். இதற்கு நல்ல பணம் கிடைக்கும் என்று கூறவும் சலனமே இல்லாமல் முடிவு எடுத்துவிட்டான்..

அன்றிலிருந்து அந்த மருந்து கம்பனிக்கு இவன் தான் ஆட்கள் சப்பளை செய்வது எல்லாம். தன்னிடம் வேலை கேட்டு, இல்லை வேலை வாங்கி தருமாறு கேட்டு வருபவர்களை எல்லாம் வெளிநாட்டு வேலை என்று கூறி ஏமாற்றி அனுப்பிக்கொண்டு இருந்தான். பாய்க்கு ஒவ்வொரு முறையும் கமிசன் கொடுத்துவிடுவான்.                       

அங்கே அவர்களிடம் நிறைய காகிதங்களில் கையெழுத்து வாங்கி கொண்டு கொத்தடிமைகள் போல நடத்த ஆரம்பித்தனர். ஆயுள் முழுவதும் அங்கேயே தான் இருந்தாக வேண்டும். வேறு வழியில்லை. 

வீட்டினருக்கும் மொத்தமாக இவ்வளோ பணம் வருடத்திற்கு என்று கூறி குடுத்துவிட்டு இவன் கையெழுத்து வாங்கி விடுவான். அமைச்சர் தர்ம துறையின் மகன் தர்மத்திற்கு புறம்பாய் நடந்துகொள்ள மாட்டான் என்ற நம்பிக்கையில் இவனிடம் வந்த ஏமாந்தோர் பல பேர்.             

இப்படியாக அவன் அணைத்து மோசமான தொழிலையும் செய்து கொண்டு இருக்க சுமார் மூன்று மாதங்கள முன்பு தான் ஆஸ்தான ஜோசியரை காண சென்று இருந்தான்.

அதே நேரம் மித்ராவின் வீட்டில் “ ஏய் மித்ரா எழுந்திரி டி.. இன்னும் அசையாம எருமை மாதிரி தூங்கு.. வேலைக்கு போகவேணாமா ??” என்று காலை எட்டு மணிக்கு தன் அருமை மகள் மித்ராவை எழுப்பி கொண்டு இருந்தார்..

“ ம்ம்ச் என்ன மா??? ப்ளீஸ் .. இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம் “ என்று தூக்கத்தில் கண்களை கூட திறவாமல் கூறினாள் மித்ரா

“ என்ன இன்னும் அஞ்சு நிமிசமா ??? அரைமணி நேரமா அதை தானே சொல்லுற ?? ”

“ம்ம்ம்”

“ அடி கழுதை எந்திரி.. “ என்று முதுகில் ஒரு அடி வைத்தார்..

“ சரி சரி போங்க நான் சாமி கும்பிட்டு எந்திரிக்கிறேன் “

“ அட உன்னைய நான் பெத்தவ டி.. சாமி கும்பிடுறேன்னு கண்ணை மூடி அதுக்கும் ஒரு பத்து நிமிஷம் தூங்குவ.. எந்திரிக்கிரியா இல்லையா ??” என்று கூறவும்

ரவிச்சந்திரன் “ அட என்னமா??? தினமும் உங்க ரெண்டு பேருக்கும் இதே வேலை தானா ??”

“ என்னைய என்ன பண்ண சொல்றிங்க ?? இவ ஒரு நாள் ஆவது சீக்கிரம் முழிச்சு பாத்து இருக்கீங்களா ?? இதுல மேடம் வேலைக்கு வேற போறா “ என்று தன் கணவனிடம் கூறிவிட்டு

“ மித்ரா சமையல் எல்லாம் முடிச்சு வச்சுட்டேன்/ நீ சீக்கிரம் கிளம்பி சாப்பிட்டிட்டு வேலைக்கு போ.. நானும் அப்பாவும் வெளிய ஒரு முக்கிய வேலையா போறோம் “ என்று கூறவும் அடித்து பிடித்து எழுந்தாள் மித்ரா..

“ எங்க போறிங்கன்னு கேட்றாத டி.. நானே சொல்றேன்.. உனக்கு ஜாதகம் பாக்க போறோம்.. ஒழுங்கா சாப்பிட்டிட்டு கிளம்பு.. சாவிய பூட்டி நீ கொண்டு போ.. நாங்க இன்னொரு சாவி எடுத்துகிட்டு போறோம்.. பத்திரம் மித்ரா “ என்று கூறிவிட்டு தன் கணவனை அழைத்தபடி கிளம்பி விட்டார்.     

            

 “ தாமரை இப்ப என்ன அவசரம்னு நீ இன்னைக்கே ஜாதகம் பார்க்க கூட்டி வந்து இருக்க ??” என்று கடிந்தபடி அமர்ந்து இருந்தார் ரவிச்சந்திரன்.

“ என்னங்க நீங்க இப்படி சொல்றிங்க ?? மித்ரா க்கு இருபத்து ஐஞ்சு வயசு ஆகா போகுது. அவளுக்கு காலாகாலத்துல கல்யாணம் செஞ்சா தானே இன்னும் மூத்தவனுக்கு செய்ய முடியும் “ என்று சலித்தார் தாமரை.

“ அதுக்கு இவ்வளோ தூரம் இங்க வந்து தான் ஜாதகம் பாக்கணுமா ?? வீட்டு பக்கத்துல இருக்குற சோசியர்கிட்ட பாக்க கூடாதா ??”

“ அட என்ன நீங்க ?? இவர் கிட்ட தான் பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் வந்து பாக்குறாங்கன்னு நம்ம பக்கத்து வீடு அக்கா சொன்னாங்க. அப்பாய்ன்மென்ட் வாங்கவே இருபது நாள் ஆச்சு “ என்று பெருமையாக கூறும் தன் மனைவியை ஒரு கடுப்புடன் பார்த்தபடி அமைதியாக இருந்துவிட்டார் ரவிச்சந்திரன்.

திடீரென அங்கே ஒரே சலசலப்பு என்னவென்று விசாரித்தால் அமைச்சரின் மகன் வருவதாக கூறினார்.. ஆனால் சுந்தரோ எந்த வித பந்தாவும் இல்லாமல் மிகவும் பக்தியுடன் வந்து அமர்ந்தான்.

“ என்னங்க நான் சொல்லும் போது முறைச்சிங்க. இப்ப பாருங்க..” என்று கை காட்டினார் தாமரை..

“ அதெல்லாம் சரி மித்ராவோட போட்டோ எதுக்கு எடுத்து வந்து இருக்க ??”

“ ஹா.. ஜாதகம் பார்த்துட்டு அப்படியே இவர்கிட்ட மித்ரா போட்டோ காட்டி ஆசீர்வாதம் வாங்கிட்டு நாளைக்கு தரகரை பார்த்து இந்த போட்டவே குடுக்கலாம்னு தான் “ என்று தான் செய்த அதிபயங்கர செயலை பெருமையாய் கூறினார் தாமரை.

“ ஹ்ம்ம் என்னவோ செய் “ என்று என்றபடி தங்கள் முறை வருவதற்காக அமர்ந்து இருந்தனர். அங்கு வேளைக்கு இருந்தவர்கள் சுந்தரை தான் முதலில் உள்ளே போக சொன்னது, ஆனால் அவனோ வரிசைப்படி உள்ளே அனுப்புங்கள் என்றுவிட்டு அமர்ந்துவிட்டான்..

இப்படிதான் வெளியே மக்களின் முன் நடித்து நல்ல பெயர் எடுப்பது. ரவிச்சந்திரனும் தாமரையும் உள்ளே சென்று ஜோசியரிடம் மித்ராவின் ஜாதகத்தை காட்டினர்..

அந்த ஜோசியரோ “ இன்னைக்கு மாலை நான் ஒரு பூஜை செய்ய போறேன்.. அப்போ அம்பாள் முன்னாடி உங்க பொன்னு ஜாதகத்தையும் போட்டோவையும் வைச்சு ஆசி வாங்கி தரேன். குடுத்துட்டு போங்கோ “ என்று கூறவும் தாமரை முதல் ஆளாக தன் மகளின் வாழ்க்கை சிறப்பாக இருக்கவேண்டும் என்று வேண்டியபடி அவர் கேட்டதை கொடுத்துவிட்டார்.

அடுத்து சுந்தரின் முறை வரவும்  ஜோசியரின் தோற்றமே மாறிவிட்டது..

“ வாங்கோ வாங்கோ சுந்தர்… எப்படி இருக்கீங்க ??? ஒருவார்த்தை சொல்லி விட்டா நானே வீட்டுக்கு வருவேனே “ என்று மிகவும் பவ்வியம் காட்டினார்..

“ இல்லை சாமி… நான் வந்து உங்களை பாக்குறது தான் முறை. உங்க கிட்ட என் ஜாதகம் பார்த்து ரெண்டு மாசம் ஆச்சு அதான் இப்ப பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்..” என்று தன் ஜாதகத்தை எடுத்து நீட்டவும் , அவர் கையில் இருந்த மித்ராவின் ஜாதகமும், புகைப்படமும் சுந்தரின் முன் விழுந்தது..

மித்ராவின் புகைப்படத்தை பார்த்த சுந்தரின் மனம் ஒரே ஒரு நொடி தடுமாறியது.. “ யப்பா என்ன அழகு… ஹ்ம்ம் யாருக்கு குடுத்து வச்சு இருக்கோ.. குட்டி செமையா இருக்கா “ என்று எண்ணியவன் உடனே தன் மனதை வெளிக்காட்டாமல் ஜோசியரிடம் திருப்பி கொடுத்துவிட்டான்..

ஆனால் இவனின் உண்மையான ரூபம்  முழுவதும் அறியாத அந்த ஜோசியர்   “ என்ன சுந்தர், பொண்ணு நல்ல பொண்ணா இருக்கால??? அதே மாதிரி தான் தங்கமான குணமும் கூட.. இவ ஜாதகத்துல ஒரு விசேசம் இருக்கு “ என்று கூறி அவன் முகம் பார்த்தார். சுந்தரோ என்னவென்பது போல பார்த்தான்.

“ இந்த பொன்னை கல்யாணம் செய்றவனுக்கு ஆயுள் வரைக்கும் குபேர யோகம் கிடைக்கும்.. நீண்ட ஆயுளும், நினைச்சது எல்லாம் நடக்கும் சூழ்நிலைகளும் உருவாகும்.. இவ தொட்டது எல்லாம் துலங்கும்” என்று தன் வாய்க்கு வந்ததை கூறவும் சுந்தரின் மனம் முற்றிலும் தன் வசத்தை இழந்துவிட்டது..

ஆனாலும் அதை எல்லாம் வெளி காட்டாமல் “ சரிங்க சாமி.. ரொம்ப சந்தோசம்.. என் ஜாதகத்துக்கு என்ன பலன்னு சொல்லுங்க.. அடுத்து எங்க அப்பா எனக்கு பதவி வாங்கி குடுப்பாரா ??”

ஜோசியர் என்னவோ தீவிரமாக கணக்கு போட்டு பஞ்சாங்கத்தை ஆராய்ந்து, அவன் ஜாதகத்தையும் சுந்தரின் முகத்தையும் மாற்றி மாற்றி ஒரு நான்கு முறை பார்த்து, பின் சற்று யோசித்தபடி தன் நாடியை தடவினார்.

அவரின் பாவங்கள் எல்லாம் சுந்தரின் மனதை குழப்பத்தில் ஆழ்த்தின.. “ என்ன சாமி இப்படி யோசிக்கிறிங்க ??” என்றான் தயக்கமாக..

“ ஹ்ம்ம் இல்லை சுந்தர்.. நான் இப்படி கொஞ்சம் கூட எதிர் பார்க்கலை. அதான் உங்க கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல “

“ எதுவா இருந்தாலும் சரிங்க சாமி.. சொல்லுங்க”

“ அது இப்போ உங்களுக்கு கொஞ்சம் நேரம் சரியில்ல.. இப்ப இருக்கிற செல்வாக்கு, தொழில், மரியாதை எல்லாம் குறைய வாய்ப்பிருக்கு “

“ அய்யோ !! என்ன சாமி… இப்படி சொல்றிங்க ??”

“ ஆமா சுந்தர்.. அதாவது உங்க மனைவி ஜாதகமும் உங்க பொன்னு ஜாதகமும் உங்களுக்கு சாதகமா இல்லை. அதான் இப்போ பிரச்சனையே.. “

“ சாமி நீங்க சொன்னிங்கன்னு தான் காவேரிய ஹாஸ்டல்ல விட்டு இருக்கேன். என் பொண்டாட்டி முகத்தை கூட நான் பாக்குறது இல்லை. ஆனா எனக்கு ஏன் சாமி இப்படி நடக்கணும்??? “ என்றான் மிகவும் பயந்த குரலில்.

“ ஹ்ம்ம் எல்லாம் நேரம் தான்..”

“ இல்ல சாமி இதுக்கு எதுவும் பரிகாரம் எதுவும் இல்லையா ??” வேகமாக கேட்டான் சுந்தர்.

“ இருக்கு..  ஆனா ??”

“ என்ன சாமி ஆனா?? எதுவா இருந்தாலும் சொல்லுங்க “ என்று அவரை ஊக்கினான்.

“ ஹ்ம்ம் ஒரு சின்ன வயசு பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணுங்க.. ஆனா அவளோட ஜாதகம் உங்களுக்கு சாதகமா இருக்கனும். அவளோட யோகம் உங்களுக்கு அடிக்கணும்.. அப்படி ஒரு பொன்னை பார்த்து தாலி கட்டுங்க “ இது தான் ஒரே பரிகாரம்..

இதை கேட்டதும் ஆடித்தான் போய் விட்டான் சுந்தர்.. அவனுக்கு நன்றாய் தெரியும் தன் தந்தைக்கு இந்த விஷயம் தெரிந்தால் அவ்வளோதான் அவனை உண்டு இல்லையென்று ஆக்கி விடுவர்.. அதற்கா அவன் இத்தனை உழைக்கிறான்..

ஒன்றையுமே அனுபவிக்க முடியாமல் போய் விடுமே.. அதிலும் நளினா அவ்வளோதான் மறுநிமிடமே தன் அப்பாவிடம் கூறிவிடுவாள் என்று எண்ணினான்.

அவனது யோசனையை பார்த்து “ என்ன சுந்தர் இவ்வளோ யோசனை ??”

“ இல்ல சாமி.. வேற எதுவும் செய்ய முடியாதா ??” என்றான்

“ ஹ்ம்ம் இல்ல.. இது ஒன்னு தான் உங்களுக்கு ஒத்து வரும்.. ஆனா இதையும் இன்னும் ரெண்டு மாசத்துக்குள்ள செய்யணும்.. அப்போதான் உங்களுக்கு யோகம் இல்ல உங்க உயிருக்கே ஆபத்து..” என்று ஜோசியர் கூறவும் சுந்தர் ஆடியே போய்விட்டான்..

“ உயிரே போகுமா ??? கடவுளே.. ஜோசியர் சொல்லுறதை பண்ணாலும் உயிர் போகும்.. பண்ணலைனாலும் உயிர் போகும்..” என்று எண்ணியவனுக்கு மனதில் திடீரென்று ஒரு எண்ணம் தோன்றியது.

“ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டா எல்லாமே நமக்கு சாதகமா மாறிடுமே.. நளினாவ ஒரு வழி பண்ணிட்டா அப்புறம் அப்பா வாய் திறக்க முடியாது.. எல்லாமே நான் நினைச்சது போல நடக்கும் “ என்று நொடியில் முடிவெடுத்து சம்மதம் தெரிவித்தான்..

“ அப்பாடி இதை வச்சே இவன் கிட்ட லட்ச லட்சமா பணம் வாங்கலாம் “ என்று எண்ணிய ஜோசியர்

“ ரொம்ப நல்லது சுந்தர்.. உங்களை எத்தனை வருசமா பார்த்துகிட்டு இருக்கேன்.. உங்க நல்லது தான் எனக்கு முக்கியம். நல்ல முடிவு..” என்று ஆமோதித்தான்.

“ ஹ்ம்ம் அப்புறம் சாமி இந்த விஷயம் வெளிய தெரியாம “ என்று இழுக்கவும்

“ நீங்க கவலையே படவேண்டாம் சுந்தர்.. நானே நல்ல பொண்ணா பாக்குறேன்.. நீங்க நிம்மதியா போங்க..” என்று கூறவும் சுந்தரின் பார்வை தன்னையும் அறியாமல் மித்ராவின் புகைப்படத்தில் பதிந்தது. அதை கவனித்துகொண்ட ஜோசியர் மெல்ல மனதில் நகைத்துகொண்டான்.

“ என்னமா சாமி வரம் குடுத்துடுச்சா??” என்று கேட்டபடி வீட்டிற்குள் நுழைந்தாள் மித்ரா..

“ என்ன டி உள்ளே நுழையும் போதே உளறிக்கிட்டு வர??” என்றார் தாமரை.

“ அதான் மா காலையில வேலை இல்லாத வேலையா ஜோசியர பாக்க போனிங்களே, அவர் நிறைய குடுத்து அனுபிச்சாரா ??” என்றாள் நக்கலாய்..

“ உனக்கும் உங்க அப்பாக்கும் என்னைய கண்டா அவளோ இளப்பமா போயிடுச்சு.. ச்சே என் மகன் இருந்த வரைக்கும் என்னைய எப்படி பாத்துகிட்டான். “ என்று நோடித்தார்.

“ அட அட அட!!! அப்புறம் ஏன் உங்க மகனை வெளிநாடுக்கு அனுப்பனும்.. இங்கயே வச்சு செல்லம் தங்கம்னு கொஞ்ச வேண்டியது தானே “ என்று பதிலுக்கு நொடித்தாள் மகள்.

“ சரி சரி வந்ததும் வாய் அடிக்காம போ, போய் முகம் கழுவிட்டு வா. சூடா காபி குடுக்கிறேன் “

“ இல்லாம ஒரு குளியல் போட்டு வரேன்.. ரொம்ப கசகசன்னு இருக்கு “ என்றபடி உள்ளே சென்று விட்டாள் மித்ரா.. அவளுக்கு நாளைக்கு ஒருமுறையாவது தன் தாயோடு வம்பிழுக்காவிட்டால் தூக்கமே வராது.

அவரது அன்னைக்குமே மகள் வீட்டில கலகலப்பாக பேசி கொண்டு வாயடித்து கொண்டு இருந்தால் தான் பிடிக்கும்.. மித்ரா அமைதியாக இருந்தால் “ என்ன டா ?? எதுவும் பிரச்சனையா ??” என்று கேட்க ஆரம்பித்து விடுவார்..

சிலநேரம் மித்ரா தன் தாயை வம்பிளுக்கவே அமைதியாய் இருப்பது போல் நடிப்பாள். மித்ராவின் அண்ணன் வருண் இங்கு இருந்தவரை தாயும் மகனுக் ஒரு கட்சி, தந்தையும் மகளுக் ஒரு கட்சி.

வீட்டில் கலகலப்பிற்கும் மகிழ்ச்சிக்கும் பஞ்சம் இல்லை. இப்பொழுது அவன் வெளிநாட்டில் வேலை கிடைத்து போய்விட இருப்பது இவள் மட்டும்தானே. ஆதலால் பெற்றோர்கள் இருவருக்கும் மகளின் மீது ஒரு தனி பாசமே வந்தது.

“ இன்னும் கொஞ்ச நாள் தான் மித்ரா இங்க நம்ம கூட இருப்பா..அப்புறம் கல்யாணம் ஆகிட்டா அவ புருஷன் வீட்டுக்கு போயிடுவா.. என்னங்க “ என்று இரவு தூங்கும் பொழுது தன் கணவரிடம் ஒரு முறையாவது கேட்டு விடுவார் தாமரை.

“ அதுக்கு என்ன மா செய்றது?? பொண்ணா பிறந்தா இதை எல்லாம் தாண்டி தானே ஆகணும்.. இப்போ நீ வந்து என் கூட வாழலையா ??? ” என்று மனைவிக்கு சமாதானம் கூறுவார் ரவிச்சந்திரன்..

“ ஹ்ம்ம் என்னவோங்க.. இங்க இருக்குறது வரைக்கும் அவ சந்தோசத்தை மட்டும் தான் பாத்து இருக்கா.. அதே மாதிரி அவ வாழ்கையும் சந்தோசமா அமைஞ்சிடனும் “ என்று கூறியவாறே இருவரும் மகளின் வாழ்வை பற்றி பேசியபடி உறங்குவர்..

இப்படி இவர்கள ஒரு பக்கம் மித்ராவை எண்ணி பேசியபடி உறங்க, இன்னொருவனோ அவளையே எண்ணி தன் உறக்கத்தை துலைத்து இருந்தான்.. அது வேறு யாருமில்லை மனோகரன் தான்..

பஞ்சு மெத்தையில், குளிரூட்டப்பட்ட அறையில் என்ன புரண்டு படுத்தும் அவனுக்கு உறக்கம் இல்லை.. கண்களை மூடினாலும் திறந்தாலும் தெரிவது எல்லாம் அவள் முகம் மட்டுமே..

அவனுது மனம் மித்ராவை முதல் முதலாய் சந்தித்த தினத்தை நினைத்து பார்த்தது.அவன் மனமோ சுமார் மூன்று மாதங்கள் பின்னோக்கி சென்றன.

“ டேய் அண்ணா… நில்லு டா… எத்தன தடவ சொல்லறேன்.. எருமை அண்ணா “ என்ற குரல் கேட்டு அந்த அண்ணன் திரும்பி பார்த்தானோ இல்லையோ மனோகரன் தனக்கு சொந்தமான அந்த பெரிய ஷாப்பிங் மாலில் நடந்து செல்லும் பொழுது திரும்பி பார்த்தான் ..

ஆலிவ் பச்சை வண்ணத்தில் சிறு சிறு சிகப்பு பூ போட்ட சுடிதார் அணிந்து, யாரையும் கண்டு கொள்ளாது தான் தான் இவ்வுலகின் மகாராணி என்ற மிடுக்கோடு நடந்து வந்தாள் ஒரு இளம்பெண்..

அவளை கண்ட அந்த நொடியே மனோகரனின் மனோரதம் ஓட ஆரம்பித்தது.. “தேவதை மாதிரி இருக்கா “ என்று என்னும் பொழுதே அவள் அண்ணன் என்று அழைத்த ஒருவன் “ என்ன மித்ரா ??? ஏன் என் மானத்தை வாங்குற ??” என்று பல்லை கடித்தான்

“பின்ன நான் நில்லுன்னு சொல்றேன்ல நிக்காம போனா என்ன அர்த்தம்??? சரி அதெல்லாம் விடு எனக்கு ஒரு சந்தேகம் ?? ” என்று கேட்டாள் ஏதோ மிக முக்கியமான கேள்வி கேப்பவள் போல முகம் வைத்து..       

இவர்களுக்கு பக்கவாட்டில் நின்று இருந்த மனோவும் உன்னிப்பாய் கவனித்தான் “ என்ன கேட்கபோறா ??” என்று யோசித்தவாறே

“ அது ஒண்ணுமில்ல டா அண்ணா.. இந்த கடையில உன் மானத்தை நிஜமாவே விக்கிறாங்களா ??” என்றாள் ஒன்றும் தெரியாமல் முகம் வைத்து.. இதை கேட்ட அவள் தமையன் வருணோ கொலை வெறியில் முறைத்தான்..

“ என்ன பாக்குற நீ தான் சொன்ன.. ஏன் என் மானத்தை வாங்குறன்னு, சரி சொல்லு எவ்வளோ வாங்கலாம் “ என்று கேட்கவும் மனோவால் சிரிப்பை அடக்க முடியவில்லை..

“ அப்பா !! சரியான வாயாடியா இருப்பா போல.. ஆமா இவ பேரு ஏதோ அவன் சொன்னானே “ என்று யோசித்தவனுக்கு மறந்தும் கூட பெயர் நியாபகம் வரவில்லை..

தன் வேலைகளை எல்லாம் விட்டு அன்று நாள் முழுவதும் அவள் பெயர் என்ன என்றே சிந்தித்து கொண்டு இருந்தான்..

 “ ச்சே என்ன இது… நானா இப்படி இருக்கேன்??? மனோ நீ ரொம்ப மோசம்.. இப்படி ஒரு நாள் ஒரு அஞ்சு நிமிஷம் பார்த்த பொன்னை பத்தி இப்படி யோசனை பண்ணிட்டு இருக்க??” என்று அவன் மனம் கேள்வி எழுப்ப இன்றுவரை அந்த கேள்விக்கு அவனுக்கு விடை தெரியவில்லை.

இரவு படுக்கையில் படுத்த பின் தினமும் இப்படிதான் மனோகரன் மித்ராவை முதலில் சந்தித்த தினத்தில் இருந்து சிந்திக்க தொடங்குவான்.. இப்படியாக இவர்களின் இரண்டாம் சந்திப்பு நினைவு வந்தது…

அதிகாலை நேரம், சூரியன் தன் கரங்களை கொண்டு பூமி பெண்ணை தழுவிக்கொண்டு இருந்தான்..  மனோகரன் தன் குடும்பத்தினருக்கு திதி குடுக்கவென்று கடற்கரைக்கு சென்று இருந்தான்.. அவனோடு அவன் தம்பிகளும் இருந்தனர்..

குடும்பத்திற்கு மூத்தவனாக அணைத்து சாஸ்திர சம்பிரதாயங்களையும் முடித்து கடலில் பிண்டத்தை கரைத்து மூன்று முறை மூழ்கி எழுந்தான் மனோ.. மனதில் தன் குடும்பத்தில் இருந்த அனைவரையும் வேண்டி கொண்டான்.. மூன்றாவது முறை மூழ்கி எழும் போது தான் அந்த குரல் கேட்டது..

“வாவ்வ்வ் !!!! இந்த காலை நேரத்துல இப்படி வந்து கடல்ல நின்னு சூரியனை சைட் அடிக்கிறதே செமையா இருக்குல “ என்ற குரல் கேட்டு விழிகள் திறந்தான்.. அப்படியே திகைத்து நின்றான்..

யாரை அவன் காண மாட்டோமா என்று ஏங்கி கொண்டு இருந்தானோ அவளே அவன் கண் முன்னால் நின்று இருந்தாள்.. “ ஹேய் மித்ரா வா பா.. அந்த பக்கம் போய் கிளீன் செய்யணுமாம் “ என்று யாரோ அழைக்கவும்

“ ஒரு நிமிஷம் வந்துடுறேன் “ என்று கூறிவிட்டு மீண்டும் ஒரு நொடி கண்கள் மூடி நின்று இருந்தாள் மித்ரா தன் கால்களை அலைகள் வருடட்டும் என்று..

அவள் வேலை பார்க்கும் அலுவலகத்தில் இருந்து வந்து இருந்தார்கள் போல. நிறைய ஆட்கள் இருந்தனர். அனைவரும் குழுவாக பிரிந்து கரையை சுத்தம் செய்து கொண்டு இருந்தனர்..

ஆனால் மனோகரனுக்கு வேறு எதுவுமே மனதில் பதியவில்லை அவளின் பெயரை தவிர .. “மித்ரா.. மை மித்ரா “ என்று கூறி கொண்டான்..

அவனை அறியாமல் ஒரு புன்னகை வந்து ஒட்டிகொண்டது அவன் முகத்தில் . எப்பொழுதும் இந்த நாளில் அண்ணனும் முகம் இறுகி போய் வேதனையை மறைத்து இருக்கும்.. ஆனால் இன்றோ புன்னகையுடன் காணவும் ஆச்சரியமாக பார்த்தனர் தம்பிகள் மூவரும்..

அவர்களின் பார்வையை கண்டுகொண்ட மனோவோ இமைக்கும் பொழுதில் தன் முகத்தை மாற்றிவிட்டான்.. ஆனால் திவா கண்டுவிட்டான்.. என்னவோ இருக்கிறது என்று.

இதை எல்லாம் இப்பொழுது நினைத்து பார்த்தால் மனோவிற்கு சிரிப்பு தாங்க வில்லை.. புன்னகையோடு தன்னவளை எண்ணியபடி படுத்து இருந்தான்..

 

உன் நிழலாய் நான்

இருப்பேன் – என் நிஜமாய்

நீ இருப்பாய் என்று..

உனக்கெனவே உள்ளம்..

படைத்தேன்- உள்ளமதில்

உன்னை வைத்தேன்..

உனக்கே தெரியாமல்

உன் பெயரும் அறியாமல்.                                             

                     

                                 மாயம் – தொடரும்

Advertisement