Advertisement

மாயவனோ !! தூயவனோ !! – 12

மித்ராவிற்கு இன்னும் தான் கேட்டது எல்லாம் நிஜம் தானா என்றே நம்ப முடியவில்லை.. “ நாம தான் ஒருவேளை தப்பா நினைச்சிட்டோமோ ??” என்று மீண்டும் மீண்டும் யோசனை செய்து பார்த்தாள்.. என்ன யோசித்து பார்த்தாலும் அவளுக்கு முழு விசயமும் புரிவதாய் இல்லை..

“ ஆஆ !!! என்ன மித்ரா நீ ?? உனக்கு அறிவே இல்லை. கேட்டதுதான் கேட்ட முழுசா கேட்டு இருக்க கூடாதா ??” என்று நினைத்தவள் முதலில் இருந்து ஒவ்வொன்றாய் கோர்வையாய் நினைத்து பார்த்தாள்.

அதாவது தனக்கு திருமணம் என்று முதல் நாள் இரவு அவள் அன்னை கூறியதில் இருந்து இப்பொழுது மனோவும் திவாவும் பேசியதுவரை  அனைத்தையும் யோசித்து பார்த்தாள்..

ஆனால் அவளுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை.. அது அந்த சுந்தர் யார் என்றே தெரியவில்லை.. “ இவன் யாரு புதுசா ?? மனு ஏதோ மினிஸ்டர்னு வேற சொன்னானே..??” என்றெல்லாம் சிந்தனை செய்தவளுக்கு தலை வலிப்பது போல இருந்தது..

பின்னே தலை வலிக்காதா இரண்டு நாட்கள்களுக்கு முன் மனோவும் திவாவும் பேசியதை கேட்டு முதலில் கலங்கி நின்றாலும், அதன் பிறகு மித்ரா தெளிந்து தன் மூளைக்கு வேலை குடுக்க ஆரம்பித்தாள்.. ஆனாலும் அவள் சிந்தித்து சிந்தித்து பார்த்தது தான் மிச்சம். எந்த பதிலும் அவளுக்கு கிடைக்கவில்லை..

எப்பொழுதும் ஏதாவது யோசனையோடு சுற்றி கொண்டு இருப்பவளை மனோ வித்தியாசமாக பார்த்தான்.. “ என்ன மித்து என்ன யோசனை ?? இல்லாத மூளைக்கு வேலை குடுத்து என்ன பண்ணுற ??” என்று அவளை வம்பிளுத்தவனை முறைத்துவிட்டு “ ஹ்ம்ம் ஆமா இத்தனை நாள் என் மூளைக்கு வேலை குடுக்காம தான் இருந்துட்டேன்.. ஆனா அது எவ்வளோ பெரிய தப்புன்னு இப்பதான் புரியுது “ என்று பட படவென்று பொரிந்துவிட்டு போனவளை என்ன சொல்வது என்று தெரியாமல் அழுத்தமாக பார்த்தபடி நின்றான்..

முன்னே இரண்டு எட்டு நடந்து சென்றவள் மனோகரன் அப்படியே நிற்பதை கண்டு “ என்ன உனக்கு அந்த இடத்துல சிலை வைக்க போறாங்களா ?? அப்படியே நிக்கிற ?? வேலை இல்லையா “ என்றாள் நக்கலாக..

“ நல்லாத்தான் இருக்காளோ ?? நம்ம தான் தப்பா புரிஞ்சுக்கிட்டோமோ??” என்று  தன்னையே சந்தேகித்தபடி “ ம்ம் ஆமா வேணும்னா நீயும் வந்து நில்லேன்.. ஜோடியா நிக்கலாம் “ என்றான் நக்கலாக..

முகத்தை சுருக்கி.. “ ஆமா நின்னுட்டாலும் “ என்று தன் முகத்தை கழுத்தில் இடித்து கொண்டு அறைக்கு சென்று விட்டாள்..

 “ பாத்து பாத்து கழுத்து சுளுக்க போகுது “ என்று அவனும் தன் பங்கிற்கு கடுப்பேத்திவிட்டு அலுவலகம் சென்றுவிட்டான்..

அவன் செல்லவும் “ யப்பா!!! இவனை சமாளிச்சு அனுப்புறதுக்குள்ள போதும் போதும்னு ஆகுது.. ஒவ்வொரு பார்வைக்கும் அர்த்தம் கண்டு பிடிக்கிறான்.. களவாணி பைய.. எல்லாம் இவனால வந்தது.. எதையும் என்கிட்டே சொல்லாம அவனா எல்லாம் பண்ணுறான்.  பெரிய ஹீரோன்னு நினைப்பு.. புண்ணாக்கு.. என்கிட்டே சொன்னா நான் அவனை புரிஞ்சுக்க மாட்டேனா  ?? “ என்று தன் கணவனை திட்டியவள் மீண்டும் தன் சிந்தனையில் மூழ்கியவளுக்கு தான் தலை வலிக்க ஆரம்பித்தது..

“ ம்ம்ச் இந்த தலைவேற சும்மா இருக்கம வலிக்க ஆரம்பிச்சிடும் “ என்று தன் தலையையே ஒரு முறை திட்டிவிட்டு

“ சரி இதையே நினைச்சா தலை என்ன அடுத்து நெஞ்சு கூட வலிக்க ஆரம்பிக்கும்.. ரூம் கிளீன் பண்ணி மூணு நாள் ஆகுது அந்த வேலைய பாத்தாலாவது மனசு கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கும்” என்று தனக்கு தானே பேசி கொண்டு அறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்..

அப்பொழுது தான் திடீரென மித்ராவிற்கு நினைவு வந்தது “ எப்ப பாரு மனு இந்த செல்ப்ப  தானே குடைஞ்சுக்கிட்டு இருப்பான்..” என்று யோசித்தவள் அந்த ஷெல்பின் முன்னே குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள் எதையோ மிக தீவிரமாக யோசித்தபடி ..

“ ச்சி… மித்ரா இப்படி நடந்தா எல்லாம் வேலைக்கு ஆகாது.. அதை திறந்து உள்ள என்ன இருக்குன்னு பாத்துட வேண்டியதுதான்..  ஒருவேளை நமக்கு தேவையான விஷயம் இருந்தாலும் இருக்கும் “ என்று எண்ணி திறக்க முடிவு செய்தவள் சாவி இல்லாமல் எப்படி திறப்பது என்பதை மறந்து போனாள்..

“ அட கடவுளே இந்த செல்ப்போட சாவி வேணுமே “ என்று தலையில் தானே குட்டியவள் “ ஹ்ம்ம் முதல்ல அந்த சாவிய எடுக்கணும்.. அது எங்க வச்சு இருப்பானோ.. எங்க இருந்தாலும் சரி மித்ரா அந்த சாவிய எவ்வளோ சீக்கிரம் முடியுமோ அவ்வளோ சீக்கிரம் தேடி எடுத்து உள்ள என்ன இருக்குன்னு பாத்துடனும் “ என்று முடிவு செய்து கொண்டாள்.

அதன் பிறகு அந்த அறையை சுத்தம் செய்துவிட்டு அமர்ந்தவளுக்கு வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.. “ இப்பதான மனு ஆபீஸ் போனான் “ என்று எண்ணியபடி வெளியே பார்த்தவள் ரீனாவும் அவள் தாயும் வருவதை கண்டு

“ அடுத்த தலைவலியா ?? கடவுளே எனக்கு மட்டும் ஏன் இப்படி சோதனை மேல சோதனை குடுக்கிற ?? இவங்க பேசுறதை நம்புற மாதிரியே நடிக்கணுமே “ என்று தனக்குள் புலம்பியபடி

“ வாங்க ஆன்ட்டி,,, வாங்க ரீனா “ என்று சிரித்த முகமாக அவர்களை வரவேற்றாள்.. இருவருக்குமே உள்ளே புகைந்தது ஆனால் வெளியே காட்ட முடியாதே.

 “ என்ன மா நல்லா இருக்கியா ?? மனோ உன்னைய நல்ல பார்துக்கிறானா??” என்று கேட்டபடி வந்து அமர்ந்தார் நிர்மலா..

“ ம்ம் நல்லா இருக்கேன் ஆன்ட்டி..” என்று மட்டும் கூறிவிட்டு ரீனாவின் முகம் பார்த்தாள்..

“ அது  ஒண்ணுமில்ல மித்ரா.. அன்னிக்கு நான் மட்டும் தானே வந்தேன்.. அம்மா உன்னைய பார்க்கணும்னு சொன்னாங்க அதான்.. “ என்று ராகம் போட்டாள் ரீனா..

நிர்மலா “ இந்த மனோ செஞ்ச வேலையில முதல் நாள் உன்கிட்ட சரியா பேச முடியல மித்ரா அதான்.. அதுவும் இல்லாம வீட்டுக்கு போன அப்புறமும் எனக்கு உன் நியாபகமாவே இருந்தது.. என்ன பண்ணுறது நீயும் எனக்கு பொண்ணு மாதிரி தானே “ என்று கூசாமல் அள்ளி விட்டார்..

மித்ரா மனதிற்குள் அதிசயித்து போனாள்.. “ முதல் நாள் வந்து வெறுப்பா பாத்தது என்ன ?? இப்ப இப்படி உருகுறது என்ன ?? நடிங்க நடிங்க.. நானும் கொஞ்சம் கத்துக்கிறேன் ” என்று நினைத்தபடி “ ம்ம் “ என்று கூறி புன்னகைத்தாள்..

“ என்ன மித்ரா இப்படி அமைதியாவே இருந்தா என்ன அர்த்தம் ?? நல்லா  மனசு விட்டு பேசு.. நானும் ரீனாவும் எப்பையும் உனக்கு தான் சப்போர்ட் பண்ணுவோம் “ என்று கூறவும் மித்ராவிற்கு தலையே சுற்றுவது போல இருந்தது.

“ ஆமா மித்ரா அம்மா ரொம்ப பாசமா இருப்பாங்க எல்லாருகிட்டயும்.. என்ன எல்லாரையும் ஈஸியா நம்பி ஏமாந்திடுவாங்க” என்று தாங்கள் வந்த வேலையை செய்ய ஆரம்பித்தாள்..

நிர்மலாவும் “ ஹ்ம்ம் அப்புறம் மித்ரா மனோ என்ன சொல்லுறான் ??”

மித்ரா “ஆமாமா உங்க கிட்ட மனசுவிட்டு பேசிட்டாலும் “ என்று எண்ணியபடி  “ அவருக்கு என்ன ஆன்ட்டி ஆபிஸ்.. ஆபிஸ்.. ஆபிஸ் தான்.. வீட்டுல இருக்க நேரமே இல்லை அவருக்கு “ என்று சிரித்தபடி பதில் கூறினாள்..

“ எப்படி கேள்வி கேட்டாலும் கழுவுற மீனுல நழுவுற மீனு போல தான் பேசுவா “ என்று ரீனா மனதினுள் கருவிக்கொண்டாள்..

அவளின் பார்வையிலேயே மகளின் எண்ணத்தை உணர்ந்த நிர்மலா பார்வையிலேயே அவளை அடக்கிவிட்டு “ வீட்டுல இத்தனை பசங்க கூட இருக்கிறது உனக்கு கஷ்டமா இல்லையா மித்ரா ??” என்றார் மிக அக்கறையாக..

“ இதுல கஷ்டம் என்ன இருக்கு ஆன்ட்டி.. எல்லாம் காலையில போனா சாயங்காலம் தான் வராங்க.. நான் மட்டும் தான் இருக்கேன்.. சொல்ல போனா தனியா இருக்கிறதுதான் கஷ்டமா இருக்கு..”

“ஓ!!! அதுவும் சரிதான்.. வீட்டுக்கு வந்த மருமக இப்படிதான் பொறுப்பா இருக்கனும்.. ஆமா மித்ரா உங்க அப்பா அம்மா எல்லாம் எங்க இருக்காங்க“ என்று நிர்மலா கேட்கவும் படக்கென்று அவரை நிமிர்ந்து பார்த்தாள் மித்ரா..

“ என்ன மித்ரா உங்க அப்பா அம்மா பத்தி தானே கேக்குறாங்க.. ஏன் இப்படி திகைச்சு போயி பாக்குறா.. அம்மா பாருங்க மா.. அவளை “ என்று ரீனா கூறவும் மித்ரா மனதில் “ இப்ப ஏன் இவங்க ரெண்டு பேரும் வந்தாங்க ??” என்று எண்ணிக்கொண்டு

“ அவங்க ரெண்டு பேரும் என் அண்ணன் கூட இருகாங்க.. “

“அட இவளுக்கு அண்ணன் வேற இருக்கானா ??” என்று நினைத்த நிர்மலா “ அப்படியா மித்ரா உனக்கு அண்ணன் வேற இருக்கானா ?? அப்படி இருந்துமா உன் கல்யாணம் இப்படி யாருக்கும் சொல்லாம நடந்தது….” என்று உலகத்தில் இல்லாத அதிசயம் நடந்தது போல தன் நாடியில் கை வைத்து கொண்டார்.

“ இப்ப இவங்களுக்கு என்னதான் பிரச்சனை “ என்று சலித்தபடி “ அண்ணன்க்கு எங்க கல்யாணம் நடந்த சமயம் லீவ் கிடைக்கல ஆன்ட்டி.. அதான் வரல.. அதுவும் இல்லாம் அவனுக்கு அப்ப கொஞ்சம் உடம்பு வேற சரியில்ல.. அதுனால தான் அப்பாவும் அம்மாவும் அவசரமா அங்க போனாங்க..” என்று தன் வாய்க்கு வந்ததை எல்லாம் கூறி மழுப்பினாள்..

“ போனாங்க போனாங்கன்னு சொல்லுறா. எங்க போனாங்கன்னு சொல்லமாட்டுறா.. அழுத்தம் பிடிச்சவளா இருப்பாளோ.. என்ன அழுத்தமா இருந்தாலும் அதெல்லாம் இந்த நிர்மலா கிட்ட பழிக்காது” என்று எண்ணினார் நிர்மலா..

அதன் பிறகு என்ன நினைத்தாரோ அமைதியாக ” சரி மித்ரா நானும் ரீனாவும் உன்னையும் மனோவையும் விருந்துக்கு கூப்பிட தான் வந்தோம்.. கண்டிப்பா நீங்க ரெண்டு பேரும் வரணும் “ எனவும்

“ மனு வரவும் அவர்கிட்ட கேட்டிட்டு சொல்றேன் ஆன்ட்டி ” என்றாள் மித்ரா ஏதோ அனைத்தையும் மனோகரனிடம் கேட்டே செய்பவள் போல..

“ ஓ !! சரி மா.. நான் அவன்கிட்டே சொல்லனும்னு நினைச்சேன்.. அப்புறம் உன்கிட்ட சொல்லுறதும் அவன்கிட்ட சொல்லுறதும் ஒன்னு தானே அதான் இங்கயே வந்துட்டேன்.. அவன் வரவும் சொல்லு.. ஆனா கண்டிப்பா எங்க வீட்டுக்கு நீங்க வரணும்.. சரியா “ என்று விடபிடியாய் கேட்பவரிடம் என்ன கூறுவாள் மித்ரா..

“ ம்ம் சரி ஆன்ட்டி.. கண்டிப்பா “ என்றாள் புன்னகை மாறாமல்.  

“ சரி மா நாங்க கிளம்பறோம்.. ரீனா வா போகலாம்..” என்று கூறி தன் மகளையும் அழைத்துக்கொண்டு கிளம்பி சென்றுவிட்டார்..

அவர்கள் செல்லவும் சாய்வு இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்தவள் “ இப்ப ரொம்ப முக்கியமா இந்த விருந்து எல்லாம்.. ம்ம்ச்.. எல்லாம் அவனால வந்தது.. இவன் பண்ணுற எல்லாத்துக்கும் நான் எல்லார் கிட்டையும் சாக்கு போக்கு சொல்லி சமாளிக்க வேண்டியதா இருக்கே.. “ என்று ஒரு பாட்டு பாடி தீர்த்தாள் மனோவை..

அவள் எண்ணத்தின் நாயகனோ அங்கே அலுவலகத்தில் மித்ராவின் தந்தையிடம் அலைபேசியில் பேசி கொண்டு இருந்தான்..

“ ஹலோ மாமா.. நீங்க கவலையே படாம அடுத்த மாசம் இங்க வரதுக்கு இப்பயே டிக்கெட் புக் பண்ணுங்க “

….

“ அட ஆமா மாமா.. எல்லாம் நல்லதா தான் நடக்கும்.. “

….

“ இல்ல மாமா.. என் பிரன்ட் குமாருன்னு.. பெரிய பத்திரிக்கை காரன்.. அவன் தான் பாத்துக்கிறான்.. சில இடத்துல நான் நேரா விசாரிக்க முடியல அதான் “

….

“ ம்ம் இல்ல மாமா மித்ராக்கு ஏதும் தெரியாது. ஆனா அவதான் ரொம்ப பாவம் மாமா மனசுக்குள்ள போட்டு குழம்பி தவிக்கிறா..”

….

“ என்ன பண்ணுறது மாமா.. எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்கு தானே.. ஆனா எல்லா விசயமும் தெரிஞ்சா அவ என்ன சொல்லுவாளோன்னு தான் கொஞ்சம் டென்ஷனா இருக்கு.”

…..

“ ஹ்ம்ம் பார்க்கலாம் மாமா.. சரி அத்தை சரண் எல்லாம் எப்படி இருக்காங்க???”

….

“ சரிங்க மாமா.. அத்தைகிட்டயும் சொல்லிடுங்க.. மறக்காம டிக்கெட் பூக் பண்ணிடுங்க.. மித்ராக்கு இது நல்ல சர்ப்ரைஸ்.. “

“ சரி மாமா.. நேருல பார்க்கலாம்.. நான் தான் தினமும் கூப்பிடுறேனே.. சரி நைட் கால் பண்ணி தரேன் மித்ரா கிட்ட பேசுங்க” என்று கூறி அலைபேசியை அனைத்தான்..

அதன் பிறகு சிறிது நேரம் தன் அலுவலக பணியை பார்த்தவன்,  அவன் உதவியாளர் வந்து குமார் வந்து இருப்பதாக கூறவும்

“ என்ன சொல்லாம கூட வந்து இருக்கான் “ என்று யோசித்தபடி “வர சொல்லுங்க “ என்று கூறிவிட்டு குமாரின் வரவுக்காக காத்திருந்தான்..

வரவேற்பறையில் இருந்து மனோவின் அறைக்கு குமார் வர ஆகும் நேரம் மொத்தமே இரண்டு அல்ல மூன்று நிமிடங்கள் தான் இருக்கும்.. ஆனால் இந்த சில நிமிடங்களில் மனோகரனின் உள்ளம் எதை எதையோ நினைத்து குழம்பியது..

“ ஏன் திடீர்ன்னு வந்து இருக்கான்??”

“ அவனுக்கு இருக்க வேலையில நேராவே வரணும்னா எதோ பிரச்சனை இருக்குமோ ??”

“ ஒருவேளை அந்த சுந்தர் ஏதா ஸ்மெல் பண்ணிட்டானா..??” என்று தன் போக்கில் சிந்தித்து கொண்டு இருந்தவன் தன் எதிரே வந்து அமர்ந்து இருக்கும் தன் நண்பன் குமாரை கவனிக்க தவறினான்..

“ என்னடா மனோகரா.. ஆபிஸ்ல கூட ட்ரீம்ஸ்ஸா?? ஒழுங்கா வேலை செய்யுறையா இல்லையா ?? நான் வந்தது கூட சார் கண்ணுல படல “ என்று கிண்டல் செய்த தன் நண்பனின் குரல் மனோவின் மூளைக்கு எட்ட மேலும் சில வினாடிகள் ஆனது..

“ டேய் “ என்று அவன் முன் குமார் சுடக்கு போடவும் தான் மனோ சுய நினைவிற்கு வந்தான்..

“ நல்லா இருக்கு டா.. நீ பிசினஸ் பண்ணுற லட்சணம்.. இப்படி தான் கனவுலே இருப்பியா ??” என்று கலாய்க்கும் நண்பனை முறைத்தான் மனோ..

“ என்னடா.. வந்தவன வான்னு தான் கேட்கல.. அதை கூட விடு.. ஏதோ எதிரிய பாக்குறது மாதிரி முறைக்கிற”

“ பின்ன என்ன டா.. நீ எதுக்கு வந்து இருக்கியோ என்ன பிரச்சனையோன்னு நான் யோசிச்சுக்கிட்டு இருந்தா நீ என்னையவே கிண்டல் பண்ணுற ??” என்று அங்கலாய்த்தான் மனோ..

“ ஹா ஹா ஹா.. காதல் வீரனை கோழையாக்கும்னு கேள்வி பட்டு இருக்கேன் ஆனா இப்பதான் நேருல பாக்குறேன் “ என்றான் குமார்..

“ என்னடா சொல்லுற??” என்று பற்களை கடித்தான் மனோ..

“ பின்ன என்னடா.. உன்னைய எனக்கு கிட்டத்தட்ட பத்து வருசமா தெரியும்.. ஒருநாள் கூட நீ இப்படி இருந்து நான் பார்த்தது இல்லை.. அதான் அப்படி சொன்னேன்.. “

“ என்னைய என்னடா பண்ண சொல்லுற.. எல்லாம் அந்த சுந்தர்னால வந்தது.. எனக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன ?? மித்ராவ கல்யாணம் பண்ணிக்கிட்டு நிம்மதியா வாழணும்னு தான்டா ஆசை படுறேன்.. ஆனா எங்க “ என்று தன் மன குமுறலை தன் நண்பனிடம் கொட்ட ஆரம்பித்தான்..

“ ம்ம் மினிஸ்டர் தர்மதுரை கிட்ட அப்பாய்ன்மென்ட் கேட்டு இருந்தல.. அதுக்கு ஏற்பாடு பண்ணிட்டேன்டா.. பட் நம்ம அவரை போய் பார்க்கும் போது நம்ம கிட்ட இருக்க எல்லா ஆதாரமும் பக்காவா இருக்கனும்டா “ என்று தான் வந்த வேலையை கூற ஆரம்பித்தான் குமார்..

“ ம்ம் சரி டா.. நானும் அதுக்கு ஏற்பாடு பண்ணிட்டேன்.. எனக்கு தெரிஞ்ச ரிட்டையர்ட் சிபிஐ ஆபிசர் ஒருத்தர் இருக்கார்.. அவர் தான் இப்ப அந்த சுந்தர கண்கானிச்சுகிட்டு இருக்காரு டா.. நாளைக்கு உன் ஆபிஸ்க்கு அவர கூட்டிட்டு வரேன் “ என்றான் மனோ..

“ சரி மனோ.. வீட்டுல இப்ப எப்படி டா இருக்கு நிலைமை ?? மித்ரா ஏதும் கேட்கலையா??”

“ அத ஏன் டா கேட்கிற ?? மித்ராவ சமாளிக்கிறது தான் டா பெரிய விஷயமா இருக்கு.. சில நேரம் நல்லா இருக்கா.. சில நேரம் சின்ன பிள்ளைய விட மோசமா நடந்துக்கிறா.. அவளும் வேற என்னதான் டா குமார் செய்வா ??” என்று மீண்டும் புலம்ப ஆரம்பித்தான் மனோ..

ஆனாலும் தன் மனைவியை பற்றி பேசும் பொழுது அவன் கண்களும் முகமும் ஒரு சிறு புன்னகையை பூசி கொண்டன..

“ சரி சரி விடு மனோ.. எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்கு தான டா.. அப்புறம் எல்லாம் சரி ஆகிடும்.. அப்புறம் உன்கிட்ட வேற ஒரு விஷயம் பேசணும்டா மனோ “ என்று அவன் கூற என்ன என்பது போல தன் நண்பனின் முகம் பார்த்தான் மனோ..

குமார் கூறுவதை கேட்க கேட்க மனோவிற்கு ஒரு பக்கம் நம்பவும் முடியவில்லை அதே நேரம் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.. “ என்னடா சொல்லுற நிஜமாவா ??” என்று அதிர்ந்து கேட்டான் மனோகரன்.

“ ஆமா டா.. இந்த விஷயம் எனக்கு நம்பிக்கையான சோர்ஸ்கிட்ட இருந்து வந்தது.. இதை சொல்லிட்டு போகத்தான் நான் இங்க வந்தேன் ”

“ம்ம் இப்போ என்னடா பண்ணுறது ?? நமக்கு அதுக்குள்ள எல்லாம் சரியா நடக்கணுமே ?? இந்த சுந்தர் என்ன கிறுக்கனா ?? ச்சே “ என்று டேபிளில் ஓங்கி குத்தினான்..

“ இல்ல மனோ இதுல நம்ம நேரா இறங்கவும் முடியாது.. அவன் அப்பா கிட்ட பேசிட்டு தான் நம்ம எதுவும் செய்யவும் முடியும்.. ஆனா அதுக்குள்ள அந்த சுந்தர் எந்த வேலையும் செய்யாமே இருக்கனும் “

தன் நண்பன் கூறுவதை கேட்ட மனோகரன் சிறிது யோசித்து “ அதை நான் பாத்துக்கிறேன் குமார்.. எப்படியாவது அடுத்த வாரம் நம்ம மினிஸ்டர் கிட்ட பேசிடனும்.. அதுவரைக்கும் அந்த சுந்தரை முடக்கி வைக்க வேண்டியது என் பொறுப்பு“ என்று கூறிக்கொண்டு இருக்கும் பொழுதே              மனோகரனின் அலைபேசி அவனை அழைத்தது..

தன்னுடைய வீட்டில் இருந்து அழைப்பு என்று தெரியவும் நெற்றியை சுருக்கியபடி அலைபேசியை உயிர்ப்பித்தான் “ ஹலோ மித்து…”

“ ம்ம் கிளம்பி உடனே வீட்டுக்கு வா “ என்று தலையும் இல்லாமல் காலும் இல்லாமல் மித்ரா கூறினாள்..

“ இப்பதானே அங்க இருந்து வந்தேன்.. ஏன் மா ஏதும் பிரச்சனையா ??” என்றான் சற்றே குழம்பிய குரலில்..

“ம்ம்ச் ஏன் பிரச்சனை இருந்தா தான் வீட்டுக்கு வருவியா ?? வான்னு சொன்னா வந்து சேறு “ என்று பதிலுக்கு அவள் எகிறினாள்.. மித்ராவிற்கு நிர்மலாவும் ரீனாவும் வந்து போன எரிச்சல்.. மனோவிற்கு இருக்கும் பிரச்சனைய எப்படி சமாளிப்பது என்று யோசிக்கும் பொழுதே இவள் இப்படி பேசுவது மேலும் அவனை கடுப்பேற்றியது..

ஆனாலும் தன் நண்பனின் முன்னே எதையும் காட்டாமல் “ ம்ம் வரேன் “ என்று அவன்  கூறி கூட முடிக்கவில்லை அந்த பக்கம் தொடர்பு துண்டிக்கப்பட்டு இருந்தது..

“ என்னடா வீட்டுல இருந்து அழைப்பா.. ?? சரி சரி நானும் கிளம்புறேன்.. நாளைக்கு பார்க்கலாம் “ என்று கூறி கிளம்பினான் குமார்..

அவன் சென்ற பின்னரும் சிறிது நேரம் அப்படியே யோசனையில் இருந்தான் மனோகரன்.. தான் அடுத்து என்னென்ன செய்ய வேண்டும், யார் யாரை சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்துகொண்டான்.. ஆனாலும் இந்த மித்ரா ஏன் இத்தனை அவசரமாக அழைத்தாள் என்று தெரியவில்ல அவனுக்கு..

“ ம்ம் அங்க என்ன பிரச்சனை காத்துகிடக்கோ.. டேய் மனோ ஏன் டா உனக்கே எல்லாம் தேடி வருது “என்று தன் நிலைமையை நொந்தபடி வீட்டிற்கு சென்றால் அங்கே மித்ராவை காணவில்லை..

“ இவ வேற. நேரம் காலம் இல்லாம மாடியில இருப்பா..” என்று வீட்டு முழுவதும் தேடி பார்த்தான் ஆனால் அவள் மட்டும் எங்கேயும்  இல்லை..  

“ எங்க போனா இவ ?? வரசொல்லிட்டு எங்க இருக்கா ??” என்று பதறி அடித்து மீண்டும் மித்து மித்து என்று அழைத்தபடி வீடு முழுவதும் தேடினான்..

அவன் மனமோ எதை எதையோ நினைத்தது.. “ கடவுளே என் மித்துக்கு என்ன ஆச்சோ ?? “ என்று சில நொடிகள் எதையும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாமல் அப்படியே நின்றுவிட்டான்..

மனோகரன் வந்தது, வீட்டிற்குள் சென்றது எல்லாம் தோட்டத்தில் அமர்ந்து இருந்த மித்ராவின் கண்களில் பட்டது தான்.. ஆனாலும் இறுகி போய் அப்படியே அமர்ந்து இருந்தாள்..

ஒருவழியாக மனோகரன் மித்ரா இருக்கும் இடம் அறிந்து அங்கே வந்தான்.. அவனுக்கோ ஏற்கனவே குமார் கூறிய விசயத்தினால் சிறிது டென்ஷன்..

இது போதாது என்று மித்ரா உடனே கிளம்பி வா என்று கூறவும் அடித்து பிடித்து வந்து பார்த்தால், அவளோ நன்றாக வீட்டினுள்ளே அவனை சுற்ற வைத்த கோவம் ஒரு புறம் எல்லாம் சேர்ந்து அவனை அவளிடம் கோவமாகவே பேச வைத்தது

“ ஏய்!! இப்ப எதுக்கு இங்க வந்து உட்காந்து இருக்க ?? உனக்கு வேற இடமே இல்லையா ?? ஒன்னு மொட்ட மாடி இல்ல இப்படி கொளுத்துற வெயில்னு கூட பாக்காம இங்க வந்து உக்காந்திடு “ என்று பொரிந்தான்..

அவனை ஒரு பார்வை பார்த்தவள், எதுவும் பேசாமல் அமர்ந்து கொண்டாள்.. “ ஏய் உன்ன தான் டி.. மித்ரா.. இப்ப எதுக்கு வர சொன்ன ?? இப்படி நீ முகத்தை தூக்கி வச்சுக்கிட்டு இருக்கிறதா பாக்க தான் வர சொன்னயா ?? பதில் பேசு “ என்று மீண்டும் கத்தினான்..

இங்கு வந்து இத்தனை நாட்களில் முதல் முறையாக இப்படி நடந்துகொள்கிறான்.. இது மித்ராவும் உணர்ந்தே இருந்தாள்.. ஆனால் எதையும் கூறாமல் இப்படி அமர்ந்து இருப்பவளிடம் தவித்து துடித்து வந்தவன் வேறு எப்படித்தான் நடந்துகொள்ள முடியும்..

அவனிடம் இருந்த சிறு பொறுமையும் காற்றில் கரைந்த சூடம் போல காணமல் போனது.. “ நான் பேசிகிட்டே இருக்கேன் என்ன டி.. திமிரா ??” என்று அவளை திட்டியபடி அவளது கைகளை இறுக பற்றி திருப்பினான்..

அப்பொழுது தான் கவனித்தான் அவள் முகம் அழுது அழுது சிவந்து போய் இருந்தது.. கண்கள் எல்லாம் வீங்கி போய் இருந்தது… அவன் முகம் பார்க்காமல் தலையை குனிந்து கொண்டாள் மித்ரா..

அவளது இந்த நிலைமையை பார்த்ததும் மனோகரனின் கோவம் மறைந்து “ என்ன மித்து ?? என்ன டா ?? ஏன் அழுத ?? என்ன பிரச்சனை ??” என்றான் அன்பாக..

ஆனால் அவளோ பதில் பேசாமல் அவன் மார்பில் சாய்ந்து இன்னும் அதிகமாக அழ ஆரம்பித்தாள்.. மனோகரனுக்கு எதுவும் புரியவில்லை.. ஏன் இப்படி அழுகிறாள் என்ற காரணம் தெரிந்தால் அவளை சமாதானம் செய்யலாம். ஆனால் இன்னதென்று தெரியாமல் திகைத்து நின்றான்..

இங்கே இப்படி தோட்டத்தில் நின்று கொண்டு இவள் இப்படி அழுதால் நன்றாக இருக்காது என்று எண்ணி தங்கள் அறைக்கு அழைத்து சென்றான்.. மித்ராவும் இதையே உணர்ந்து இருப்பாள் போல அமைதியாக அவனோடு சென்றாள்..

“ சொல்லு மித்து ?? என்னாச்சு ?? என்ன பிரச்சனை ??” என்றான் மனோ மித்ராவின் கைகளை தன் கைகளுக்குள் வைத்து..

“ம்ம் என்னால தான மனோ நீ தேவையில்லாம எல்லா பிரச்சனையும் இழுத்து போட்டுகிட்ட ??” என்று கேட்டேவிட்டாள் மித்ரா அவனது விழிகளை நேராக பார்த்து..

முதலில் தான் கேட்டது எல்லாம் சரிதான என்று அவனால் சிறிதும் நம்ப முடியவில்லை.. “ என்.. என்ன.. மித்து.. சொல்லுற ??” என்றான் புரியாத பாவனையில்..

அவனது மனம் புரிந்தாலும் மித்ரா முகத்தில் சற்றே கடினத்தை வரவழைத்து “ எனக்கு எல்லாம் தெரியும் மனு “ என்றாள் பார்வையை வேறு எங்கோ பதித்து..

இதற்கு அவன் என்ன பதில் கூறுவான்?? இத்தனை நாள் யாருக்கு எதுவும் தெரிய கூடாது என்று அனைத்து விசயங்களையும் தனதாக்கி கொண்டு எல்லா பிரச்சனைகளையும் தன் தலையில் போட்டு கொண்டு அலைந்தானோ, இன்று அவளே அனைத்தும் தெரிந்துவிட்டது என்று கூறவும் இதற்கு மேல் அவனால் எப்படி மறைக்க முடியும்..

மனோகரன் நிச்சயமாக இப்படி ஒன்றை எதிர்பார்த்து வீட்டிற்கு வரவில்லை.. அவ்வளோ ஏன் இப்படி ஒரு நிகழ்வு நடக்கும் என்றே அவன் நினைத்து பார்த்தது இல்லை.. அத்தனை உறுதியாக இருந்தான்..

ஆனால் எப்படி எப்படி மித்ராவிற்கு அனைத்தும் தெரிய வரும் என்று அவனால் இன்னும் கூட யூகம் செய்ய முடியவில்லை.. மனதில் தோன்றும் கேள்விகளை தாளமாட்டாமல் அவளிடமே கேட்டு விட்டான்..

“ எப்.. எப்ப…. எப்படி மித்ரா…..??” என்றான் திகைத்து, இமைக்க மறந்து, அவளையே பார்த்து….

“ ஹா ஹா ஹா… மனு.. மனு… அய்யோ!! கடவுளே.. முடியல.. எப்படி மனு நான் என்ன சொன்னாலும் நம்புற ?? ஆண்டவா.. ஹா ஹா ஹா… இல்ல இப்படி உன்னைய வரச்சொல்லி நான் இப்படி எல்லாம் சொன்னா உன் ரியாக்சன் எப்படி இருக்கும்னு பார்த்தேன் அவ்வளோதான் “ என்று அவள் சிரித்தபடி கூறி முடிக்கவில்லை, பளார் என்று ஓங்கி அறைந்தான் அவன்..

இம்முறை கன்னத்தில் கை வைத்து திகைத்து விழிப்பது மித்ரா.. “ என்ன டி.. விளையாடுறையா ?? என்னைய என்னனு நினைச்ச ?? “ என்று அவளது தோள்கள்  இரண்டும் விண்டு விழுந்துவிடும் வண்ணம் இறுக பிடித்து உலுக்கினான்..

இப்படி தாக்குதலை மித்ரா சற்றும் எதிர்பார்கவில்லை.. அடி வாங்கியதும் இல்லாமல் இப்படி உலுக்கவும் அவள் சற்று பயந்து தான் போனாள்..

“ என்ன பதில் பேசு… என்னவோ ஏதோன்னு வந்தா.. உனக்கு நான் தான் கிடைச்சேனா டி?? சொல்லு “ என்று மேலும் உலுக்கினான்..

“ அய்யோ !! முதல்ல கைய விடு.. வலிக்கிது “ என்று அவனை பிடித்து விளக்கி தள்ளினால்..

“ ஏன் டி விடனும்?? ஏன் விடனும் ?? உன்னைய கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்த அன்னைக்கு இருந்து உன்னைய உன் இஷ்டத்துக்கு விடாம குடும்பம் நடத்தி இருந்தேன்னா அன்னைக்கு தெரிஞ்சு இருக்கும் என்னைய பத்தி “ என்று கர்ஜித்தான்..

“ என்ன டி பதில் பேசாம நிக்கிற ?? இவ்வளோ நேரம் என்னமா நடிச்ச ?? நீ வான்னு சொல்லவும் எப்படி துடிச்சு போய் வந்தேன்னு உனக்கு என்ன டி தெரியும் ?? ” என்று பற்களை கடித்தான்..

“ சும்மா நிறுத்து !! போதும்.. துடிச்சேன் துடிச்சேன்னு சொல்லுற.. நானும் தான் தினம் தினம் துடுச்சுகிட்டு இருக்கேன்.. என்னைய சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியாம இங்க இருக்கேன் பாரு.. அப்போ எனக்கு எப்படி இருக்கும்..?? என்று பதிலுக்கு எகிறினாள் மித்ரா..

“ என்ன டி ?? திமிரா பேசுற? உனக்கு என்ன குறை இங்க ?? நல்லா தான இருக்க ?? இல்ல நான் எதுவும் உன் மனசு கஷ்டபடுற படி நடந்தேனா ?? “

“ அட அட அட… என்ன மனு??? நீ பேசுறது உனக்கே சரியா படுதா என்ன ?? கொஞ்சம் யோசிச்சு பாரு.. ஏன் தினம் தினம் நீ என்னைய எப்படி படுத்துன?? இப்ப நான் கொஞ்சம் உன்கிட்ட நூல் விட்டு பார்த்தேன் அதுக்கு ஏன் இப்படி தைய தக்கான்னு குதிக்கிற ??”

ஏற்கனவே அவனது கோவம் எல்லையை கடந்து கொண்டு இருந்தது இதில் மித்ராவும் இப்படி பதிலுக்கு பதில் பேசவும் இன்னும் கட்டுக்கடங்காமல் இருந்தது..

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் அவனது காதல் கொண்ட மனமோ இத்தனை நாட்களில் தன்னுடைய காதலை இவள் புரிந்து கொள்ளவில்லையே என்று தவித்தது..

மித்ரா தன் காதலை உணர்ந்து விட்டாள் தன்னை புரிந்துகொள்ளவாள் என்று நினைத்து இருந்தான்.. ஆனால் மித்ரா இன்று இப்படி நடந்து கொள்ளவுமே அவன் மனம் மிகவும் நொந்து போனது..

“ ஏன் மித்ரா என்னைய நீ புரிஞ்சுக்கவே இல்லையா ?? “ என்றான் ஒரு மாதிரி குரலில்..

“ என்ன புரிஞ்சுக்கணும் ??” என்றால் அவளோ கடுப்பாக..

அவளை வேகமாக இழுத்து தன் புறம் சாய்த்தவன் “ என்னைய, என் காதல… எதையுமே நீ புரிஞ்சுக்கலையா ?? “ என்றான். அவனது இந்த குரலும் இந்த செய்கையும் மித்ராவை ஏதோ செய்தது..

 

 

உனக்கும் எனக்குமான

உறவுக்கு பெயரென்ன ??

உன்னோடு நான் வாழும்

வாழ்க்கைக்கு அர்த்தமென்ன ??

நீ வேறோ நான் வேறோ

இல்லை- நாம்

என்றும்  கூற முடியவில்லை. 

                                  

                     மாயம் – தொடரும்.                                                        

Advertisement