Advertisement

அத்தியாயம் – 9

அகிலனுக்கு தான் என்ன தவரிழைத்தோம் என்று தெரியவில்லை. எதனால் புவனா அப்படி எழுந்து போனாள் என்று இன்னமும் கூட விளங்கவில்லை.

அழகாய் நகர்ந்து கொண்டிருந்த பொழுது, அனைவரும் மகிழ்வாய் பேசிக்கொண்டிருக்க, திடீரென்று புவனாவின் முகம் புன்னகையை தொலைத்து யோசனைக்கு தாவ, மேலும் சிறிது நேரம் தாக்கு பிடித்திருப்பாள், அவ்வளவு தான்.

கோமதியை அழைத்து என்ன சொன்னாளோ, அவரும் யோசனையோடு அவளை பார்த்துவிட்டு, தனசேகரிடம் பேச, அவரும் அதே யோசனையை வாங்கிக்கொண்டு அம்பிகாவிடம் பேச, அனைவரது பார்வையிலும் கேள்வி மட்டுமே.

ஆனால் அம்பிகாவோ சிரித்த முகமாய், “அதுக்கென்ன தம்பி… தாராளமா கிளம்புங்க… புவனாக்கு டயர்ட்டா இருக்குமா இல்லையா..” என்று மற்ற சொந்தங்களின் முன் தான் எத்தனை பெருந்தன்மையானவர் என்று கட்ட, புவனாவிடம் வேறு வந்து,

“தலை வலிக்கிதுன்னா சொல்ல வேண்டாமா புவனா… நாங்க என்ன நினைக்க போறோம்…” என்று தோள் தொட்டு பேச, அகிலனுக்கே கூட ஆச்சரியம் தான். தன் அம்மாவா இப்படி சிரித்த முகமாய் பேசுகிறார் என்று.

ஏனெனில் அளந்து சிரிப்பது தான் கௌரவம் என்று நினைப்பவர் இப்படி அனைவரின் முன்னும் எழுந்து வந்து பேசியதே ஆச்சரியம் தான்.

ஆனால் அவர் சொன்ன செய்தி அவனுக்கு புதிது.

தலைவலியா??? நன்றாய் தானே இருந்தாள் என்று அவள் முகம் காண, அவளோ இவன் பார்வையை தவிர்த்தாள்.

என்னானது?? எதுவென்றாலும் அருகிலிருக்கும் என்னிடம் கூறியிருக்கலாமே. என்னிடம் தானே கூறவேண்டும் என்று எண்ணியபடி மீண்டும் அவள் கரங்களை பிடிக்க, அவனை ஒரு வெற்று பார்வை மட்டும் பார்த்துவிட்டு, எழுந்துவிட்டாள்.

அகிலன் தவித்து போனான்.. அவள் பார்வையின் பொருள் என்ன??

நிரம்பவும் முடியவில்லையோ என்று யோசனையோடு இருக்கும் பொழுதே புவனா குடும்பம் கிளம்பியிருந்தது.

தன்னை பார்ப்பாளா?? தன்னிடம் பேசுவாளா?? என்றெல்லாம் அவன் பார்த்திருக்க., அவளோ இவன் பக்கமே திரும்பவில்லை. அவ்வளவு ஏன் கிளம்பும் போது சொல்லிக்கொள்ள வேண்டும் என்று கூட அவளுக்கு தோன்றவில்லை.

புவனாவின் மனதில் இருந்ததெல்லாம் இப்பொழுது அவ்விடம் விட்டு நகர வேண்டும். அவ்வளவே..

அகிலனுக்கு யோசனை மட்டும் தான். ஏன் இப்படி செய்கிறாள் என்று. துளியும் கூட புவனா தன்மீது கோவமாய் இருக்கிறாள் என்று புரியவில்லை. அவள் பேசாவிட்டால் என்ன தான் பேசுவோம் என்று அவளிடம் நெருங்க, அதை உணர்ந்த புவனாவோ வேகமாய் காரினுள் ஏறியிருந்தாள்.

முகத்தில் அடித்த உணர்வு அகிலனுக்கு. ஆனால் அதை வெளிக்காட்டாமல்,

“டேக் கேர் புவன்…. நல்லா தூங்கு… வீட்டுக்கு போனதும் ஒன்ஸ் இன்பார்ம் பண்ணு..” காரின் ஜன்னல் அருகே குனிந்து பேச,

அவளுக்கோ ஐயோ என்று இருந்தது..

இதில் ஏது நிஜம்??? இந்த கனிவும் காதலுமான அகிலன் நிஜமா?? இல்லை திட்டமிட்டு தன்னிடம் நெருங்கிய அகிலன் நிஜமா??

வராத தலைவலி இப்பொழுது வந்தது.

ஒன்றும் சொல்லாமல் கண்களை இறுக மூடி சீட்டில் சாய்ந்துகொண்டாள்.

அவளது இந்த மௌனம், இந்த ஒதுக்கம், பாராமுகம் எல்லாம் போட்டு அகிலனை குழப்ப, சரி வீட்டிற்கு செல்லட்டும் அலைபேசியில் பேசுவோம் என்று காத்திருந்தான்.

காத்திருப்பு மட்டுமே மிச்சமானது..

நேரம் கடந்துகொண்டே இருக்க, அவள் அழைப்பது போல் தெரியவில்லை. இவனுக்கு அலுப்பாகவும் இருந்தது. பொறுத்து பொறுத்து பார்த்தவன் தானே அழைத்தான். பதிலே இல்லை.

மீண்டும் மீண்டும் முயற்சித்தான்.. பலனே இல்லை..

இந்நேரத்திற்கு மேல் தனசேகரை அழைத்தால் நன்றாய் இராது என்றெண்ணி, பொறுமையை இழுத்து பிடித்து உறங்கியவனுக்கு மனம் அன்றைய நாளின் மகிழ்வை தொலைத்திருந்தது..

என்னானது இவளுக்கு?? என்ற கேள்வி மட்டுமே தொக்கி நிற்க, எப்படி உறங்கினான் என்று அவனுக்கே தெரியவில்லை.

மறுநாள் அனைத்து செய்தித்தாளிலும் அகிலன் புவனாவின் நிச்சய செய்தி வந்திருக்க, அதை கண்டதுமே புரிந்தது இது அம்பிகா செய்த வேலை என்று.

“ஏம்மா இதெல்லாம் தேவையா..???” என்று கேட்ட மகனை,

“முதல்ல நடந்த எந்த தப்பும் இப்போ நடந்திட கூடாது அகில்… இப்போ எல்லாருக்கும் தெரியும்… யாரும் இதிலிருந்து பின்வாங்க முடியாது..” என்றார்  தான் நினைத்ததை சாதித்த உணர்வில்.

அவருக்கு பதில் சொல்லும் முன்னே, அவனது அலைபேசி அலற, எடுத்து பார்த்தால் புவனா தான்.அத்தனை நேரம் இருந்த எரிச்சல் மாறி, வேகமாய் மாடியேறி தன்னறைக்கு சென்றவன்,

“புவன்….” என்றான் காதலை தேக்கி..

“இப்போ உங்களுக்கு நிம்மதி தானே.. சந்தோசம் தானே… இதை தான எதிர்பார்த்தீங்க… கடைசியில உங்க பெருமை கௌரவம் ஸ்டேட்டஸ் எல்லாம்  நிலைநாட்டியாச்சு…” என்று பொறிந்தாள் புவனா.

தலையும் இல்லாமல் காலும் இல்லாமல் அவனுக்கு சுத்தமாய் புரியவில்லை..

“என்.. என்ன புவன்?? என்னடா…” என்று அவன் கேட்கும் பொழுதே அழைப்பு துண்டித்திருந்தது..

திரும்ப அழைத்தான், அவள் எடுத்தால் தானே…

சில நொடிகள் அலைபேசியையே பார்த்திருந்தவன் பொறுமை காற்றில் பறந்திருந்தது. என்ன நினைத்துகொண்டு இருக்கிறாள் என்ற எண்ணம் தோன்ற, வேகமாய் காரை எடுத்துக்கொண்டு விரைந்தான்.

“வாட்ஸ் யூவர் ப்ராப்ளம் புவன்….” என்று ஆவேசமாய் வீட்டினுள் நுழைந்தவனை திடுக்கிட்டு பார்த்தாள் புவனா.

யாருமில்லை வீட்டில் அவளை தவிர, தனசேகர் கோமதி கோவிலுக்கு சென்றிருக்க, பூர்வியும் அவர்களோடு தொற்றியிருந்தாள். புவனாவையும் அழைத்தார்கள் தான் ஆனால் அவள் இருந்த நிலையில் எங்கும் செல்ல விருப்பமில்லை.

சரியென்று அவர்களும் சென்றுவிட, அப்பொழுது தான் செய்தி தாளை பார்த்தாள். அகிலனும் புவனாவும் சிரித்த முகமாய் நின்றிருக்க, கொட்டை எழுத்தில் இவர்களது திருமண நிச்சய செய்தி வந்திருந்தது.

ஏற்கனவே நொந்திருந்த அவள் மனதை அது இன்னும் கூறுபோட்டு அறுத்தது. இதை தான் அகிலன் குடும்பம் எதிர்பார்த்தது. அவர்களது கௌரவம்… பெருமை… வசதி.. அதிலும் அம்பிகா எதிர்பார்க்கும் ஸ்டேட்டஸ்… அனைத்தும் இன்று ஒருபடி மேலே அல்லவா சென்றிருக்கிறது..

அதாவாது முன்பு நடந்த எதுவும் வெளிவராது இப்பொழுது தான் அகிலனுக்கு நிச்சயம் நடந்தது போல் செய்தி வந்திருக்க, இதற்காக தானே அம்பிகா இங்கே உறவை புதுபித்தார் என்று எண்ணும் பொழுதே, அவர் மகன் அதை நிறைவேற்றினான், அதாவது அவனது வழியில் என்று எண்ணம் ஓடவும், வேகமாய் அகிலனுக்கு அழைத்து திட்டிவிட்டு வைத்துவிட்டாள்.

அவள் மனம் என்ன எதிர்பார்கிறது என்று அவளுக்கே தெரியவில்லை. அப்படி அமர்ந்திருந்த வேளையில் தான் அகிலன் வர, அவன் வருவான் என்று தெரியும் ஆனால் இத்தனை சீக்கிரம் என்று தெரியாது.

அதிர்ந்து எழுந்தவள், திகைத்து முழிக்க, அப்பொழுது தான் உணர்ந்தாள் தனித்து சிக்கிக்கொண்டோம் என்று.

அகிலன் பொறுமையானவன், அன்பானவன், அதிர்ந்து பேசாதவன், என்று நினைத்திருக்க, அவனிடம் சிறிதும் அதற்கான சாயல் இல்லை. ஆனாலும் இவன் செய்தது எல்லாம் சரியா என்ற எண்ணம் பிறக்க, தன் தைரியத்தை மீட்டெடுத்தாள்..

“என்ன?? பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்போ என்ன ரீசன் சொல்ல வந்திருக்கீங்க?? அதான் நீங்க நினைச்சதெல்லாம் நடந்திடுச்சே.. அப்புறம் என்ன…??” என்று அவளும் காட்டமாகவே கேட்க, அகிலனுக்கு நிஜமாகவே இன்னும் புரியவில்லை புவனா மனதில் என்ன இருக்கிறது என்று..

“ம்ம்ச் என்ன புவன் இது.. நேத்து வரைக்கும் நல்லாதான இருந்த இப்போ என்ன??   எதுவும் சொன்னாதானே தெரியும்…” என்று தணிந்தே கேட்டான்.

நடிகன் அல்லவா அழகாய் தன் உணர்வுகளை மறைத்து எப்படி பேச்சை திருப்புகிறான், இப்படி பேசி பேசித்தானே தன்னை மயக்கினான் என்று தோன்றியது அவளுக்கு. ஆனால் அகிலனின் ஒவ்வொரு செயலிலும் தானகவே மயங்கியது புத்தியில் எட்டவில்லை.

“ஏன் நீங்க பண்ண எதுவுமே உங்களுக்கு தெரியாதா???” என்று அடிக்குரலில் கேட்க,

“நான் என்ன பண்ணேன் என்ன பண்ணலைங்கிறது இல்லை பிரச்சனை. உன் மனசில என்ன ஓடுது இப்போ அதை சொல்லு…” என்றான் அவளருகே மிக நெருங்கி..

அவன் நெருக்கமும், பார்வையும் அந்த நேரத்தில் கூட புவனாவை அவன் பக்கம் சிந்திக்க வைக்க, தான் இவனிடம் எத்தனை பலவீனமாய் இருக்கிறோம் என்பதே அவளுக்கு கசந்தது.

“தள்ளி நில்லுங்க முதல்ல…”

“ஏன்??? ஏன் தள்ளி நிக்கணும்?? இதுக்கு முன்ன நான் இப்படி நின்னது இல்லையா…??” என்று அகிலன் மேலும் நெருங்க,

“அதான் நீங்க நினைச்சது எல்லாம் நடந்திடுச்சே..” என்றாள் செய்தித்தாளை காட்டி.

“இது நம்ம நினைச்சது புவன்… நம்ம ஆசைப்பட்ட வாழ்க்கை…” என்றவனின் குரலில் அப்பொழுதும் காதல் வழிந்தது.

“எஸ் ஆசைப்பட்ட வாழ்க்கை.. ஆனா என்னை ஆசைப்பட வச்சது நீங்க.. அதாவது இப்படியெல்லாம் நடக்கனும்னு பிளான் பண்ணது நீங்க..”

“வாட் ரப்பிஷ்…..” என்றவனுக்கு மனதில் இருந்தது எல்லாம் ஆத்திரம் ஆத்திரம் ஆத்திரம் மட்டுமே. இவள்தன்னை புரிந்தது இவ்வளவு தானா என்றிருந்தது.

காதலில் எதுவும் சரியே என்ற கோட்பாடு அவனுக்கு.

“எஸ்.. நேத்து உங்கம்மா சொன்னாங்களே.. என் மகன் முடிவுன்னு.. சோ முதல் நாளே நீங்க இதெல்லாம் முடிவு பண்ணிட்டீங்க.. அதாவது ஸ்கிரிப்ட் படிச்சிட்டு நடிக்கிறது போல…” என்று அவளும் வார்த்தைகளை வீச,

அவள் சொன்ன ‘நடிக்கிறது…’ வெகுவாய் தாக்கியது அகிலனை. கடைசியில் என்ன சொல்லிவிட்டாள் இவள். ஒருபெண்ணை முதல் முறை பார்த்தபொழுதே பிடிப்பது தவறா??

அவளோடே தன் வாழ்வை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு அவள் மனம் மாறும்வரை காத்திருந்து கைபிடிக்க நாளும் குறித்தால் அது தவறா??

இத்தனை நேரம் புவனாவின் தோள்களை பிடித்திருந்த தன் கரங்களை விலக்கிக்கொண்டான்.

“சோ….!!!!” என்று அவன் புருவம் உயர்த்த, புவனாவிற்கு அடுத்து என்ன சொல்ல என்றெல்லாம் தெரியவில்லை.

அவனிடம் சண்டையிடும் நோக்கம் மட்டுமே தலைத்தூக்க,

“நிஜம் தானே.. முதல் நாளே நீங்க டிசைட் பண்ணிடீங்க தானே…??” என்று கேள்வியாய் நோக்க, அவள் மனமோ இல்லையென்று கூறிவிடேன் என்று கதறியது.

ஆனால் அகிலனோ தீர்க்கமாய் அவளை பார்த்து “ஆம்” என்க, அத்தனை நேரம் அடக்கிவைத்திருந்த கண்ணீர் எல்லாம் உடைப்பெடுத்தது.

காதல் ஆம் என்றாலும் அழ வைக்கும், இல்லையென்றாலும் அழ வைக்கும்.

இத்தனை நேரம் கோவமாய் பதிலுக்கு பதில் பேசியவள் திடீரென்று அழுகவும் அவனுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. ஆனால் அவனுக்கு தான் சொன்னதில் எவ்வித தவறும் இருப்பதாய் தெரியவில்லை. உண்மையும் அது தானே. முதல் நாள் யாரென்றே தெரியாத சந்திப்பு, தெரிந்தபின்னோ இவள் தான்  வேண்டுமென்ற மனதின் பெருங்கூவல்.

தான் கொண்ட நேசம் போலவே தன் மீது அவளும் நேசம் வளர்க்க, இதிலென்ன தவறு என்று அகிலனுக்கு நிச்சயமாய் தெரியவில்லை.

“ஷ்… புவன்.. என்ன டா…??” என்றான் தணிந்து.. கண்ணீர் திரையிட்டு இருக்க, அவன் கரிசனம் மேலும் கண்ணை கரிக்க,

“அப்போ அதுக்காகத்தான் பூர்விய ஷூட்டிங்கு கேட்டிங்களா???” என்றாள் குற்றம் சாட்டும் குரலில்.

இப்படி ஒரு கேள்வி வரும் என்று அகிலன் நினைக்கவில்லை. தன்னை முற்றிலும் சுயநலவாதியாய் நினைக்கிறாள் என்று மட்டும் புரிந்தது. திட்டம் போட்டு இவளை தன் வாசப்படுத்தியதாய் நினைத்திருக்கிறாள்.

தன்னை புரியவைக்க தவறினோமா?? இல்லை புவனாவை புரிந்துகொள்ள தவறினோமா??  என்ற எண்ணம் ஏழ, அவனுக்கு என்ன பதில் சொல்லவென்று தெரியவில்லை.

ஆனால் அவன் எவ்விதத்திலும் பூர்வி நடிப்பதை கட்டாயப்படுத்தவில்லையே. எடுத்துச் சொன்னான் அவ்வளவு தான். புவனாவின் சம்மதம் கிடைத்த பிறகுதானே அகிலன் அதற்கான முயற்சியில் முழு மூச்சாய் இறங்கியது. புவனா சம்மதம் சொல்லவில்லை என்றாலும் அவன் வேறு வகையில் புவனாவை நெருங்கியிருப்பான் தானே.

எப்படி சொல்லி புரியவைப்பேன் என்று இருந்தது அகிலனுக்கு.

பக்கம் பக்கமாய் வாசனம் பேசி நடிப்பவனுக்கு, அவன் பேசிய வசனங்கள் எதுவும் அவன் வாழ்வில் உதவிக்கரம் நீட்டவில்லை.          

 

 

 

 

Advertisement