மழை 6(2):

“….” மோகனாவின் முகம் இன்னும் வாடியது. 

 

ஷங்கர் குரலில் உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டு, “ஹேய்… எப்போதும் மாலினி தானே உன்னை திட்டுவா.. நாளைக்கு நீ அவளை திட்டு.. ‘ஏன் என்னை விட்டுட்டு போய்ட?’ னு திட்டு” என்றதும் மோகனாவின் முகம் சிறிது தெளிந்தது.

“ஹ்ம்ம்.. திட்டுறேன்.. நாளைக்கு வரட்டும்” என்று சிறு பிள்ளையை போலே மோகனா கூறினாள். ஷங்கர் அதை ரசித்து மென்னகை புரிந்தான். பிருந்தாவும் நந்தியும் சிரித்தனர். மோகனாவின் செய்கையில் நம்ம அமைதி சாமியார் புழாவே சிரித்துவிட்டார்.

மீண்டும் மோகனாவின் முகம் சிறிது வாடியது. ஷங்கர் ‘என்னவென்று’ கேட்கும் முன் அவளே பேசினாள்.

“ஷங்கர்.. எதுக்கு சேர்மன் கூப்ட்டாங்க? அவரும் மாலுவை திட்டினாரா?”

 

‘என்ன ஒரு குழந்தை மனது இவளுக்கு’ என்று மனதினுள் நினைத்துக் கொண்ட ஷங்கர், “இல்லை டா.. கிளாஸ் எப்படி போயிட்டு இருக்கு னு கேட்க கூப்பிட்டார்..”

 

“ஓ”

ஒருவாறு சமாதானமடைந்து சிரித்த முகத்துடன் மோகனா வீட்டிற்கு கிளம்பினாள்.

ஷங்கரும் மன நிம்மதியுடனும் மாலினி மேல் சிறு பொறாமையுடன் கிளம்பினான்.

மாலினி கோபமும் எரிச்சலுமாக வீட்டு சோபாவில் அமர்ந்தாள். மாலினியின் அன்னை, “என்ன மாலினி?”

              
“எல்லாம் இந்த அருணா செய்த பிழை”

“மாலினி………” என்று அன்னை கண்டிக்கும் குரலில் ஆரம்பிக்கவும்

மாலினி, “ஏற்கனவே நான் எரிச்சலில் இருக்கிறேன் இதுல நீ வேற அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிடாத” என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுதே, “என் லிட்டில் டார்லிங்க்கு என்ன எரிச்சல்?” என்று கேட்டபடியே உள்ளே நுழைந்த மாலினியின் தந்தையை மாலினியும் அவளது அன்னையும் கோபமாக பார்த்தனர்.

மனைவியையும் மகளையும் பார்த்தவர், “ரெண்டு பேருக்கும் என் மேல் என்ன கோபம்? என்னைக்கும் இல்லாம இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டேனே னு கோபமா?”

“…”

“ஒரு காளியவே என்னால் சமாளிக்க முடியாது இதுல ரெண்டு காளியா?” என்று சத்தமாக முணுமுணுத்தவர் மாலினியிடம் சென்று, “நீயாது என் மேல் கருணை காட்ட கூடாதா லிட்டில் டார்லிங்” என்று கெஞ்சவும்,

மாலினி, “நீ ஒன்னும் என்னை கொஞ்ச வேண்டாம்” என்று முகத்தை திருப்பினாள்.

“கொஞ்சலை டா கெஞ்சுறேன்”

“கொஞ்சவும் வேண்டாம் கெஞ்சவும் வேண்டாம்” என்று முகம் திருப்பாமல் கூறவும் அவர் மனைவியை பார்த்து கண்ணால் என்னவென்று கேட்க அன்னை,
“கெஞ்சி கொஞ்சி செல்லம் குடுத்து நீங்க தான் இவளை கெடுக்குறீங்க” என்று கோபமாக பேசவும் செய்வதறியாது மாலினியின் தந்தை முழித்தார்.

“ஒருத்தராது என்ன பிரச்சனை னு சொல்லிட்டு திட்டுங்களேன்” என்று அவர் பரிதாபமாக கூறவும் மாலினி சிறிது மனம் இறங்கி, “அம்மா கோபம் எப்போதும் வர கோபம் தான்.. ‘அப்பா னு மரியாதை இல்லாம அருணா னு பேர் சொல்லி பேசிட்டேனாம்’…………”

“அவ கிடக்கிறா டா.. நீ என்னை உன் இஷ்டம் போல் கூப்பிடு டா.. ஆனா இப்ப அப்பா மேல் என்ன கோபம் னு சொல்லிடு……” என்று சொன்னதும் மாலினியின் முகத்தில் மீண்டும் எரிச்சல் வந்தது.

அதே எரிச்சலுடன், “எதுக்காக எனக்கு ‘மாலினி’ னு பேர் வச்ச?”

மாலினியின் தந்தை அருணாசலம் ரகசியம் பேசும் குரலில், “அதுவாடா.. என் எக்ஸ்-லவர் பேர் மாலினி.. அதான் அவ ஞாபகமா உனக்கு இந்த பெயரை வச்சுட்டேன்.. இந்த ரகசியத்தை அம்மா கிட்ட சொல்லிடாத டா” என்று ஏற்ற இறக்கத்துடம் கூறவும் மாலினி சிரித்துவிட்டாள்.

அருணாசலம் முகமலர்ச்சியுடம், “குட்.. இப்படி தான் சிரிச்சுட்டே இருக்கணும்.. இப்ப சொல்லு.. என்ன பிரச்சனை? யாரு உன் பெயரை கிண்டல் பண்ணாங்க?”

                                                    
“யாரும் கிண்டல் பண்ணலை..”

“அப்பறம்?”

“நீ பாட்டுக்கு ‘மாலினி’ னு பேர் வச்சுட்ட.. கிருஷ்ணன் னு பேர் இருக்கிற கண்டவன்லாம் தான் ‘வாரணம் ஆயிரம்’ கிருஷ்ணன் என்ற நினைப்பில் என்னிடம் வந்து தத்து பித்து னு உளறுறான்”

“கிருஷ்ணன் னு யாரும் ப்ரோபோஸ் பண்ணானா டா? அதான் இந்த அப்பா மேல் கோபமா?”

அன்னை, “காலேஜ் திறந்து ஒரு மாசம் தானே ஆக போகுது………..”

                
மாலினி, “என்ன அருணா உன் வைஃப் இதுக்கே ஷாக் ஆறா.. அவன் முதல் நாளே ப்ரோபோஸ் பண்ணிட்டான் னு தெரிஞ்சா என்ன ஆகுமோ! இன்னும் சின்ன பிள்ளையாவே இருக்கா.. எப்படி தான் இவளை லவ் பண்ணி கல்யாணம் செஞ்சியோ” என்று தந்தையிடம் முணுமுணுக்க அவர்,  “ஹ்ம்ம்.. கஷ்டம் தான்” என்று போலி பெருமூச்சொன்றை வெளியிட்டார்.

அதை பார்த்து, வந்த சிரிப்பை மாலினி கஷ்டப்பட்டு அடக்க அன்னை,
“என்னை பற்றி என்ன சொல்றார் உன் அப்பா?”

மாலினி பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு, “நீ இன்னும் சின்ன பிள்ளையாவே இருக்கியாம்.. உன்னை எப்படி தான் லவ் பண்ணி கல்யாணமும் பண்ணிகிட்டார் னு அவருக்கே சந்தேகம் வருதாம்” என்றாள்.

அன்னை கணவரை முறைத்துக்கொண்டே பல்லை கடித்துக் கொண்டு, “மகளிடம் பேசும் பேச்சை பாரு” என்று கூற

அருணாசலம், “ஏன் டா அப்பா மேல் இந்த கொலைவெறி.. இன்னைக்கு நைட் சாப்பாடு கட்டு” என்று பாவமாக சொல்லவும்

மாலினி சிரித்துக் கொண்டே, “ஐயோ பாவம் மா.. ஏதோ தெரியாம சொல்லிட்டார்.. விட்டுரு.. இதுக்குன்னு நைட் சாப்பாடுலாம் கட் பண்ணிடாத”

                                                   
அன்னை, “நல்ல யோசனை.. தேங்க்ஸ்.. இன்னைக்கு நைட் சாப்பாடு உங்களுக்கு கட்” என்று கூறி உள்ளே சென்றுவிட்டார்.

மாலினி தந்தையை பார்த்து பலமாக சிரித்தாள். அருணாசலம் சில நொடிகள் அதை ரசித்து பார்த்துவிட்டு, “இப்ப சொல்லு மா.. என்ன பிரச்சனை? அப்பா அந்த பையனிடம் பேசணுமா?”

“ஹலோ.. நான் ஒன்னும் உங்க வைஃப் மாதிரி சின்ன பிள்ளை இல்லை.. LKG பாப்பா மாதிரி ‘மிஸ் மிஸ் இவன் கிண்டல் பண்றான்’ னு கம்ப்ளைன்ட் பண்ணலை.. நாங்களே டீல் பண்ணிக்குவோம்.. இன்னைக்கு ஒரே என்குவேரி மேல் என்குவேரியா வந்து, கோபம் எரிச்சல்.. அதான்….”

“ஹ்ம்ம்.. தட்ஸ் குட்.. போல்ட் ஆ இருக்கணும் தான் பட் ஓவர் கான்பிடேன்ஸ் இருந்திரக் கூடாது”

“ஓகே பா.. நான் பார்த்துக்கிறேன்.. இருந்தாலும் உன் வைஃப் இவளோ அழகா இருக்க கூடாது”

 

அருணாசலம் ஒன்றும் புரியாமல் முழிக்கவும், மாலினி சிறு புன்னகையுடன்,
“என்னடா சீரியஸ்ஸா பேசிட்டு இருக்கும் போது சம்பந்தமே இல்லாம இப்படி சொல்றேனே னு குழப்பமா? உன் வைஃப் இவளோ அழகா இருக்குறதால தானே நானும் அழகா பொறந்து தொலச்சேன்”

இப்போது பலமாக சிரிப்பது அருணாச்சலத்தின் முறையாயிற்று.

மாலினி, “ஹலோ.. நான் கடுப்பல சொல்லிட்டு இருக்கிறேன் உனக்கு என்ன சிரிப்பு?”

              
“அழகா இருக்கிறதை கடுப்புடன் சொல்ற ஒரே ஆள் என் லிட்டில் டார்லிங் மட்டும் தான்”

“ஆமா இதனால நான் படுற கஷ்டம் எனக்கு தானே தெரியும்”

அருணாசலம் சிரிப்பதை நிரித்துவிட்டு, “என்னடா?” என்று மாலினியின் தலையை வருடினார்.

மாலினி, “பிரச்சனை னு பெருசா ஒன்னுமில்லை பா.. பசங்க வழிறது, ப்ரோபோஸ் பண்றதைலாம் பார்த்து பார்த்து எரிச்சல் தான் வருது.. இருந்தாலும் மாலினி னு பெயர் வச்சிருக்க வேணாம்”

“ஏன்டா அந்த கிருஷ்ணன் அப்படி என்ன பண்ணான்?”

மாலினி கிருஷ்ணன், ஸ்ரீராமன் பற்றியும் செல்வராஜ் பிரச்சனை பற்றியும் சொல்லி முடித்தாள். 

அருணாசலம், “நல்லா சமாளிச்சிருக்க டா.. அப்பா கிட்ட ஏதும் ஒபினியன் கேட்கணுமா?”

மாலினி மென்னகையுடன், “என்னை சுற்றி நடக்கிறதை தெரிஞ்சுக்கணும் னு நினைத்தேன்.. ஷேர் பண்ணேன்.. தட்ஸ் ஆல்.. ஹெல்ப் வேணும்னா நானே கேட்பேன்”
[மாலினி சிறு வயதில் இருந்தே பெற்றோர்களிடம் அனைத்தையும் கூறுவாள். அதுவும் தந்தையிடம் சின்ன சின்ன விஷயாமாக இருந்தாலும் கூறுவாள்.]

அருணாசலம், “ஹ்ம்ம்.. அடுத்து என் பிரச்னைக்கு வா”

அவள் ‘என்ன’ என்பது போல் பார்க்கவும் அவர், “அப்பா பசி தாங்க மாட்டேன் மா”

 

“உங்கள் பசியை உங்கள் தர்ம பத்தினியும் தாங்க மாட்டாங்க” என்று புன்னகைத்தாள்.          
[மாலினி சாதாரணமாக தந்தையை பன்மையில் தான் பேசுவாள், கோபமோ சந்தோசமோ வந்தால் பன்மை ஒருமையாக மாறிவிடும்]

அப்பொழுது கால்லிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்கவும் இருவரும் முன்னறைக்கு சென்றனர். மாலினி கதவை திறந்ததும், “ஹாய் மாலினி” என்ற குதுகலத்துடன் மோகனா மாலினியை கட்டி அணைத்துக் கொண்டாள்.

அருணாசலம் மென்னகையுடன் மோகனாவின் தலையை வருடியபடியே மோகனாவின் தந்தையிடம், “உள்ள வா மோகன்” என்றார்.

உள்ளே சென்று சோபாவில் அமர்ந்ததும் மோகனா மாலினியிடம், “உன் பேச்சு கா.. என் கூட பேசாத” என்று முகத்தை திருப்பினாள்.

மாலினிக்கு அதை பார்த்து சிரிப்பு தான் வந்தது, ஆனால் மோகனாவின் திடீர் வரவும், சந்தோசமாக கட்டிக்கொண்டவள் இப்போது கோபம் கொள்வதும், இந்த கோபத்திற்கான காரணமும் புரியாமல், “என்ன மோனி?” என்றாள்.

“நீ பேசாத.. உன் மேல் கோபத்துல இருக்கிறேன்” என்று மாலினியின் முகத்தை பார்க்காமல் கூறினாள்.

அருணாச்சலத்திற்கு சற்று முன் மகள் இதே இடத்தில் இதே போல் தன்னிடம் நடந்து கொண்டது நினைவிற்கு வரவும் சிரித்தார். அதை உணர்ந்த மாலினி அவரை முறைத்துவிட்டு மோகனாவிடம், “என்ன மோனி.. உன் மாலு பாவம் இல்லையா.. பேசு…………….” என்று கெஞ்ச ஆரம்பிக்கவும் மோகனா புன்னகையுடன் மாலினி பக்கம் திரும்பி, “ஐயோ பீல் பண்ணாத மாலு.. கோபம்லாம் இல்ல.. ஷங்கர் சொன்னானேன்னு சும்மா கோபமா பேசி பார்த்தேன்”

                        
மாலினி சிறு எரிச்சலுடன், “ஷங்கர் என்ன சொன்னான்?”     

“அதுவா.. நீ கேன்டீன் வரேன் சொல்லிட்டு வரலையா.. பிருந்தா வேற செல்வராஜ் அது இது னு ஏதேதோ சொன்னாளா! நீ வராததும் அந்த செல்வராஜ் லூசு தான் உன்னை ஏதோ செஞ்சுட்டான் னு நான் அழுதுட்டே இருந்தேனா.. 
அப்போ அங்க வந்த ஷங்கர் ‘செல்வராஜ் ஒன்னும் பண்ணலை.. நீ நல்லா இருக்க.. நீ வீட்டுக்கு தான் போயிருப்ப’ னு சொன்னான்.. நான் நம்பலை.. 
அப்பறம் ‘சேர்மன் சார் மாலினியை கூப்பிட்டார்.. நானும் புழாவும் கூட போனோம்.. மாலினி வெளிய போனதை பார்த்தேன்.. ஏதோ ஞாபகத்துல போயிருப்பா’ னு சொன்னதும் நீ நல்ல இருக்கணு சந்தோசமா இருந்துது ஆனா என்ன விட்டுட்டு போயிட்டியே னு வருத்தமா இருந்துது, 
அப்போ ஷங்கர் ‘ஹேய்… எப்போதும் மாலினி தானே உன்ன திட்டுவா.. நாளைக்கு நீ அவளை திட்டு.. ‘ஏன் என்னை விட்டுட்டு போய்ட?’ னு திட்டு’ னு சொன்னான்.” என்று மூச்சு விடாமல் கூறி முடித்தாள்.

மாலினிக்கு இப்போது ஷங்கர் மேல் இருந்த எரிச்சல் போய் மதிப்பு வந்தது. ‘IT கிளாஸ்க்கு தனியா போனதுக்கு அப்பறம் பொறுமையா இவளை பார்த்துக்க ஒரு ஆள் இருக்கிறது’ என்ற நம்பிக்கை வந்தது.

                               
மாலினி பொய் கோபத்துடன், “அவன் சொன்னான் னு திட்ட வந்தியாக்கும்!”

                                            
மோகனா அவசரமாக, “இல்ல மாலு.. அவன் சொன்னதும் நிமதியா தான் வீட்டுக்கு கிளம்பினேன்.. பட் அதுக்கு அப்பறம் ‘என்னை சமாளிக்க சும்மா சொல்லிருப்பானோ.. உனக்கு ஏதும் ஆகிருக்குமோ’ னு கவலையா இருந்துதா……..” 

மாலினி மோகனாவை கட்டி அணைத்துக் கொண்டாள்.

மாலினி மோகனாவின் தந்தையிடம், “போன் பண்ணி பேசினா போதாதா அங்கிள்?”

“உனக்கு போன் பண்ணா மா.. நீ எடுக்கவே இல்லை.. லண்ட்-லைனும் எடுக்கலை.. அருணாசலம் போன் switched-off னு வந்துது அதான் இவ ரொம்ப பயந்துட்டா..” 

“காலேஜில் இருக்கும் போது சைலென்ட் மோடில் போட்டதை மாத்தவே இல்லை.. அதான் நீங்க போன் பண்ணது தெரியலை.. லண்ட்-லைன் வொர்க் ஆகலை அங்கிள்..”

“ஓ.. இவ உன்னை பார்த்தா தான் நிம்மதியா இருப்பா.. நானும் அருணாச்சலத்தை பார்த்து நாளாச்சே னு உடனே கிளம்பி வந்தேன்”

மோகனாவும் அவள் தந்தையும் இரவு உணவை மாலினி வீட்டுலேயே முடித்துக் கொண்டு கிளம்பி சென்றனர். [மோகனா மாலினியின் நட்பால் இரு குடும்பமும் நெருங்கிய சொந்தம் போலவே பழகினார்கள்]

மழை தொடரும்….