Advertisement

எந்தன் காதல் நீதானே

அத்தியாயம் 20

தோட்டத்தில் நின்ற காரை வர சொல்லி பெண்கள் அதில் ஏறினர். காமாக்ஷி வரவில்லை என்றுவிட, மற்றவர்கள் தோட்டத்திற்குக் கிளம்பினார்கள். ராதிகா அவளும் வரவில்லை என, அன்று யாரும் அவளை வருந்தி அழைக்கும் மனநிலையில் இல்லை. 


அகல்யா வெண்ணிலா யாருமே அவளை அழைக்கவில்லை. வரவில்லையா போ என்பது போல இருந்தனர். 

தன் அம்மாவை எல்லோரின் முன்பும் அவமானப் படுத்தி விட்டதாக ராதிகா நினைத்தாள். அதனால் கோபத்தில்தான் வரவில்லை என்றாள். 

காரில் ஏறும் சமயம் ஜெய் கவனித்து விட்டு, “எங்கே ராதிகா?” எனக் கேட்க, 

“அவ வரலை.” என்றாள் வெண்ணிலா. 
“போ.. போய் அவளை வரசொல்லு.” என, 

இவன் ஓரண்டை இழுத்து வைப்பான். நான் போய்ச் சமாதானம் சொல்லி கூப்பிடணும் என நினைத்தவள், கணவனை முறைத்துப் பார்க்க, 

அவள் நினைப்பது அவனுக்கும் புரிந்தது. “போடி…” என்றான் மீண்டும். 

வெண்ணிலாவுக்கு விருப்பம் இல்லையென்றாலும் கணவன் சொன்னதினால் சென்றாள். அவள் சென்று ராதிகாவை அழைக்க, தோட்டத்தில் அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் எனக் காமாட்சிக்குத் தெரியவேண்டியது இருந்தது. அதனால் மகளைப் போ என வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தார். 

எல்லோரும் காரில் செல்ல, ஜெய்யும் யஸ்வந்தும் தங்கள் பைக்கில் பின் தொடர்ந்தனர். 

“வரவு செலவு எல்லாம் பொதுவுல இருக்கும் போது, எப்படிண்ணே அவங்க மட்டும் தனியா சேர்த்து வைப்பாங்க. எனக்கு நினைச்சாலே கோபமா வருது.” என யஸ்வந்த் சொல்ல, 

“விடு டா சித்தப்பாவுக்குத் தெரிஞ்சிடுச்சு இல்ல, இனி அவர் பார்த்துப்பார்.” என்றான் ஜெய். 

ஜெயராமன் தோட்டத்தில் தான் இருந்தார். “நீ இன்னைக்குத்தான் ஊர்ல இருந்து வந்த, இன்னைக்கே அலையனுமா?” என அவர் மருமகளைக் பார்த்து கேட்க, 

“எனக்கும் வரணும்னு ஆசையா இருந்தது மாமா.” என்றுவிட்டு கணவனின் பின் சென்று மறைந்து கொண்டாள். 

“கொஞ்ச நேரம் இருந்திட்டு கிளம்பிடுறோம்.” என்றான் ஜெய்.
பெரியவர்கள் ஒருபக்கமும் இளையவர்கள் ஒருபக்கமும் நடந்தனர். நன்றாகத் தள்ளி வந்ததும், “பேசிட்டு இருங்க வந்திடுறேன்.” என ஜெய் மட்டும் பெரியவர்கள் பக்கம் சென்றான். 

“ராதிகா சடங்குக்கு அவங்க அண்ணன் வீட்ல ஐந்து பவுன் போட்டாங்க. அப்பவே எனக்குத் தோனுச்சு, அவங்க அந்த அளவுக்கு வசதி இல்லை. காமாக்ஷி தான் இது வாங்கின நகையை அவங்ககிட்ட சொல்லி போட சொல்லி இருக்கணும்.” என ஜெயராமன் சொல்லிக் கொண்டிருக்க, 

“ம்ம்.. இருக்கும். அதுக்குப் பிறகு சேர்த்ததை ராதிகா கல்யாணத்துக்கு அவங்க அண்ணன் செஞ்சதா சொல்லி கணக்கை முடிச்சிருப்பா… ஜெய்க்கு தெரிஞ்சதால வெளி வந்திருக்கு. இல்லைனா எப்படித் தெரியும்.” 

“இனிமே என்ன அண்ணா செய்யப்போறீங்க?” 

“நாம என்ன செய்ய முடியும் சண்டையா போட முடியும்.” என்றவர், ஜெய் இனி இதைப் பற்றி நீ எதுவும் பேசக் கூடாது.” என, அவனும் சரி என்றான். 

“நாமதான் கடைசியில மக்கா இருந்திருக்கோம். ஒரு பத்து ரூபாய் எடுத்து வைக்க எனக்குத் தெரிஞ்சிருக்கா?” என அமுதா சலிக்க, 

“அம்மா, அவங்க அப்படி இருந்தா நாமும் அப்படி இருக்கனும்னு இல்லை. உங்களுக்கு அதெல்லாம் வரவும் வராது.” என்றான் ஜெய். 

“ஆமாம் அண்ணி உங்க மனசுக்கு உங்க பிள்ளைங்க எல்லாம் நல்ல இடத்தில கல்யாணம் ஆகி நல்லா இருப்பாங்க பாருங்க.” என்றார் மகேஸ்வரி. அதன் பிறகு அமுதாவும் சற்றுத் தெளிந்தார். 

ராதிகாவுக்கு அவர்கள் எதோ இதைப் பற்றிதான் பேசிகிறார்கள் எனப் புரிந்தது. ஆனால் என்னவென்று தெரியவில்லை. அவள் அங்கிருந்து செல்லலாம் என்றால், யாரும் அங்கிருந்து நகரும் வழியைக் காணோம். 

சிறிது நேரத்தில் ஜெய் வர எல்லோரும் அங்கிருந்து கிளம்பி விட்டனர். மகள் வந்ததும் காமாக்ஷி என்ன நடந்தது எனக் கேட்க, பெரியப்பா, அத்தைங்க, அண்ணன் எல்லாம் தனியா போய்ப் பேசினாங்க. உங்களைப் பத்திதான் பேசினாங்க நினைக்கிறேன்.” என்றாள் ராதிகா. 

மதிய உணவே நிறைய மீதம் இருக்க, அதோடு ஆட்களும் அதிகமென்பதால், டிபன் செய்யாமல் இன்னும் கொஞ்சம் சாதமே வைத்து, இரவு உணவை முடித்துக் கொண்டனர். 

இரவு அவர்கள் பகுதிக்கு வந்ததும், “அப்படி என்ன வீட்டுக்கு தெரியாம நகை வாங்க வேண்டியது இருக்கு.” எனச் சந்திரன் மனைவியிடம் கோபப்பட… 

“எல்லாத்துக்கும் நான் உங்களையே எதிர்பார்த்திட்டு இருக்க முடியுமா? எதோ இருக்கக் காசை சேர்த்து வச்சு நகை வாங்கினேன். இது ஒரு குத்தமா?” என்றார் காமாக்ஷி சாதாரணமாக. 

“பின்ன இல்லையா? இதையே அண்ணி பண்ணியிருந்தா நீ சும்மா இருப்பியா. பொதுவில் இருந்து காசு எடுத்து, அவங்க அகல்யாவுக்கு நகை சேர்த்திருந்தா நீ சும்மா விடுவியா?” 

“நான் ராதிகா கல்யாணத்தோட சொல்லித்தான் இருப்பேன். கொஞ்ச கொஞ்சமா சேர்த்து வச்சா, உங்களுக்குச் சிரமமா இருக்காதுன்னு பார்த்தேன்.” 

“தோட்டத்தில அறுவடை முடிஞ்சு மொத்தமா காசு வரும் போது, ஒரு தடவை அகல்யாவுக்கு வாங்கினா, ஒரு தடவை ராதிகாவுக்கும் நகை வாங்கத்தான் செய்றோம். அப்படியிருக்க இந்தத் தனியா சேர்க்கிற புத்தி உனக்கு ஏன் வந்தது?” 

“அப்படியே வாங்கி இருந்தாலும், அதைச் சொல்லிட்டு தானே செஞ்சிருக்கணும்.” 

“சொன்னா நீங்க காசு கொடுப்பீங்களா என்ன?” 

“கொடுக்கிறோம் கொடுக்கலை. ஆனா நீ பண்ணது ரொம்பத் தப்பு. செலவுன்னு சொல்லி நீ கேட்கும் போது எல்லாம் காசு கொடுத்தேனே. என்னையும் தானே தப்பா நினைப்பாங்க. வாங்கின நகை எல்லாம் நாளைக்கு வரணும். இல்லை நானே உங்க வீட்ல கேட்பேன்.” 

காமாக்ஷி முனங்கிக் கொண்டே படுக்கத் தயாராக, “என்ன பதிலைக் காணோம்?” எனச் சந்திரன் முறைக்க, 

“அதுதான் சொல்லிடீங்க இல்லை. காது கேட்குது.” என்றுவிட்டு காமாக்ஷி படுத்துக்கொண்டார். 

மகேஸ்வரி அதிகாலையே கிளம்புவதால்… படுக்கச் செல்லும் முன் வெண்ணிலாவிடம் சொல்லிக் கொண்டார். 

“நான் காலையில சீக்கிரம் கிளம்பிடுவேன். நீ மெதுவா எழுந்துக்கோ. முடியுற வேலையைச் செய். உடம்பு எதுவும் முடியலைனா வாயைத் திறந்து முடியலைன்னு சொல்லு. “ 

“சரி மா…” 

“நான் நடுவுல வந்து பார்த்திட்டு போறேன்.” 

மகேஸ்வரி செல்லும் போது விமலாவும் கிளம்புவதால்… அவரும் சொல்லிக் கொண்டார். 

இரண்டாயிரம் ரூபாய் தாளை எடுத்து ஜெய் மகேஸ்வரியிடம் கொடுக்க, எதற்கு என்பது போல எல்லோரும் பார்க்க, 

“டிரைவருக்குக் கொடுக்க வச்சுக்கங்க அத்தை. என்னால தானே ஒருநாள் தாமதம்.” என்றான். மகேஸ்வரி மறுக்க ஜெய் கேட்கவில்லை. அவன் பிடிவாதம் தெரிந்து அவரும் வாங்கிக் கொண்டார்.  

வெண்ணிலா அவள் அம்மா ஊருக்கு செல்வதால்… அவருடன்பேசிக்கொண்டு இருந்தவள், வெகு நேரம் கழித்தே அறைக்கு வந்தாள். 

அவள் உடைமாற்றிவிட்டு வந்து படுக்கத் தயாரானவள், கணவனைப் பார்க்க, அவன் அகல்யா திருமணத்திற்கு இன்னும் வேறு என்ன செலவு இருக்கும் என யோசித்து எழுதிக்கொண்டிருந்தான். 

“நாளையில இருந்து வீட்டுக்கு வருவீங்களா? இல்லை உங்க தங்கை கல்யாணம் முடியுற வரை… அதுவும் வரமாட்டீங்களா?” என வெண்ணிலா தான் ஆரம்பித்தாள். 

“என்ன பேச்செல்லாம் ஒரு மாதிரி இருக்கு.” 

“இல்லை சும்மா கேட்டேன்.” 

“இப்ப எல்லாம் உன் பேச்சு ஒருமாதிரி தான் இருக்கு. ஆமாம் அன்னைக்கு என்ன சொன்ன, குழந்தை உண்டானதும் நீ தேவையில்லையா? அதனாலதான் நான் உன்னைக் கூப்பிட வரலை சொன்ன இல்ல…” 

“ஐயையோ இவன் இன்னும் மறக்கலையா… தேவையில்லாம நான் வேற வாயைக் கொடுத்தேனே… விட்டா ஒரு வழி ஆக்கிடுவானே.” என நினைத்தவள்,
இவனைப் பேச விட்டால் ஆபத்து என்பதை உணர்ந்து, வெண்ணிலா சுதரித்துக் கொண்டாள். 

“இன்னைக்கு வந்ததுல இருந்து பஞ்சாயத்துதான். முதல்ல மாமாவோட அடுத்து சின்ன அத்தையோட, இப்ப என்னோடவா?” 

“இப்ப என்ன என்னைத் திட்டனுமா? நல்லா திட்டுங்க.” 

“காலையில வந்ததுல இருந்து டென்ஷன்தான். குழந்தை வயித்துக்குள்ள இருக்கும்போது மனசை அமைதியா வச்சுக்கணும் சொல்வாங்க. இந்த வீட்ல அதெல்லாம் முடியாது. அதுவும் அவங்க அப்பா மாதிரி வெளிய வந்து எல்லார் கூடவும் சண்டை போடட்டும். எனக்கு என்ன?” என வெண்ணிலா ஜெய் பேச இடமே கொடுக்காமல் பொரித்துத் தள்ள… 

எட்டி ஒரு அறை வைப்போமா என்றுதான் ஜெய் நினைத்தான். ஆனால் அவள் குழந்தையை நினைவூட்டவும், வாயிற்றுக்குள் குழந்தை இருக்கும் போது நல்ல விஷயங்களைக் கேட்பது, செய்வது எல்லாமே குழந்தையின் மன ஆரோக்யத்திற்கு நல்லது என்பதை அவனும் அறிவான். அதனால் மேற்கொண்டு சண்டையிடாமல் மனைவி படுக்க இடம் விட்டு நகர்ந்து படுத்துக்கொண்டான். 

“ஹப்பா இந்தமுறை குழந்தையால தப்பிச்சோம். இனி பார்த்து பேசணும்.” என நினைத்தபடி வெண்ணிலாவும் படுத்துக்கொண்டாள். 

தன்னை அவள் பேச விடாமல் செய்யவே குழந்தையைக் காரணம் காட்டினாள் என ஜெய்க்குப் புரியாமல் இல்லை. ஆனால் கோபத்திற்குப் பதில் சிரிப்பே வந்தது.
வெண்ணிலா அவனுக்கு முதுகுக் காட்டி படுத்திருக்க, ஜெய் அவளைப் பின்னால் இருந்து மெதுவாக அணைத்தவன், அவள் கன்னத்தில் முத்தம் வைத்தாலும், கை என்னாவோ அவள் வயிற்றைத் தான் ஆராய்ந்தது. 

அவன் கையை நகர விடாமல் பிடித்த வெண்ணிலா, “என்ன பண்றீங்க?” எனக் கேட்க, 

“என் பிள்ளை எவ்வளவு வளர்ந்திருக்குன்னு பார்த்தேன்.” 

“அவ்வளவு அக்கறை இருந்தா ஸ்கேன் பார்க்கும்போது வந்திருக்கணும்.” 

“ஒ… உனக்கு அதுதான் கோபமா?” ஜெய் கேட்க, வெண்ணிலா அவன் பக்கம் திரும்பிப் படுத்தவள், “ஸ்கேன் பார்க்க வந்த பெண்கள் எல்லாம் அவங்க புருஷனோட தான் வந்திருந்தாங்க. குழந்தை எப்படி இருக்குன்னு அப்பாவையும் உள்ள அழைச்சு காட்டினாங்க. ஆனா நீங்கதான் வரலை. எனக்கும் உங்களோட சேர்ந்து குழந்தையைப் பார்க்கனும்னு ஆசை இருக்கும் தான.” 

“சாரி நிலா, அடுத்தத் தடவை நாம இங்க பொள்ளச்சியில தான் பார்ப்போம். அப்ப கண்டிப்பா வரேன்.” 

“அடுத்தத் தடவை வருவீங்க சரி. ஆனா இந்தத் தடவை ஏன் வரலை முதல்ல சொல்லுங்க.” 

“வேலை இருந்துச்சு விடேன் டி. அதுதான் அடுத்தத் தடவை வரேன்னு சொல்லிட்டேன் இல்லை…” 

“இப்ப வேணா மேலோட்டமா பார்த்துகிறேன்.” என அவன் அவள் நைட்டியில் கைவைக்க, அவன் நோக்கம் புரிந்து வெண்ணிலா தடுக்க முயல…. ஜெயித்தது என்னவோ ஜெய்தான். 

லேசாக மேடிட்டு இருந்து வயிற்றைத் தடவி ஆசையாகக் குழந்தையை கொஞ்சியவன், பிறகு அப்படியே மனைவியை அனைத்து முத்தமிட்ட, வெண்ணிலாவும் மயக்கத்தில் விழிகளை மெல்ல மூட… 

“சண்டை போட்டா மட்டும் குழந்தைக்குத் தெரியும் சொன்ன, இது தெரியாதா?” என அவன் வில்லங்கமாகக் கேட்டு வைக்க, 

பட்டென்று கண் திறந்தவள், தனது பெரிய விழிகளை முழுதாக விழுத்து கணவனை முறைக்க, 

“சும்மா….” என்றவன், மனைவியை மீண்டும் அணைத்துக்கொள்ள, அன்று இருவருக்கும் சண்டையில் முடியாமல், சரசமாக முடிந்தது.

மறுநாள் காலை வெண்ணிலா இறங்கி வரும் போது வீடு வழக்கத்திற்குத் திரும்பி இருந்தது. குழந்தை உண்டாகி இருப்பதால்… மேலே கீழே என அல்லாடாமல் ஒரு இடத்தில் இருக்கும்படி பெரியவர்கள் சொல்லி இருக்க, காலையில் எழுந்து முடிக்க வேண்டிய வேலைகளை எல்லாம் மொத்தமாக முடித்து விட்டு ஜெய் அலுவலகம் செல்லும் போது, அவனுடனே கீழே வந்து விட்டாள். 


கணவன் அலுவலகம் சென்றதும், மதிய சமையலுக்கு உதவி விட்டு, பழங்களை உண்டபடி டிவி பார்த்தவள், மதியம் உணடுவிட்டு கீழே இருந்து அறையிலேயே படுத்து உறங்கினாள். 

அன்று மாலை ஜெய்யும் அலுவலகம் முடிந்ததும் நேரமே வீட்டிற்கு வந்துவிட்டான். காலையே தனது அம்மா வீட்டிற்குச் சென்றிருந்த காமாக்ஷி மாலைதான் திரும்பி இருந்தார். 

இரவு உணவு முடிந்ததும், எல்லோரும் படுக்கக் கிளம்ப, அப்போது வந்த சந்திரன், ஒரு நகைப் பெட்டியை திறக்க, உள்ளே காதில் அணியும் தோடு, வளையல், மோதிரம் எனச் சில நகைகள் இருக்க, 

“பதினொரு பவுன் இருக்கு அண்ணா. இதையும் பொதுவுல வைங்க.” எனக் கொடுத்தார். 

அந்த நகை எப்படி வந்தது என எல்லோருக்கும் புரியாமல் இல்லை. 

ஜெயராமன் பேச எல்லோரும் காத்திருக்க, சிறிது நேரம் யோசித்தவர், “இந்த நகை ராதிகாவுக்கே இருக்கட்டும். நாம வெண்ணிலாவுக்குப் பதினொரு பவுன் போட்டோம். அதே போல எல்லா மருமகளுக்கும் போடுவோம்.” 

“எனக்கு ரெண்டு மகன்கள். ஆனா உனக்கு ஒண்ணுதான். அதனால இதை உன் பங்குக்கு வச்சுக்கோ.” 

“இருக்கட்டும் அண்ணா, அதுக்கு இப்ப என்ன அவசரம்? அகல்யா கல்யாணம் முதல்ல முடியட்டும்.” எனச் சந்திரன் சொல்ல, 

“அதுதான் ரெண்டு அண்ணனும் பண்றேன்னு சொல்றாங்களே. அவங்க பார்த்துப்பாங்க. ராதிகாவுக்குன்னு சேர்த்தது. அது அவளுக்கே இருக்கட்டும்.”எனச் சொல்லிவிட்டு ஜெயராமன் சென்று விட, பிரச்சனை முடிந்தது என மற்றவர்களும் களைந்து சென்றனர். 

அறைக்கு வந்த சந்திரன், “பார்த்தியா அண்ணன் எப்படி இருக்காருன்னு. கூட்டு குடும்பத்துக்குன்னு ஒரு தர்மம் இருக்கு. அதை எல்லோருமே காப்பாத்தணும்.” 

“அவங்கவங்க இஷ்டப்படி இருக்க, கூட்டு குடும்பமே தேவையில்லையே.” 

“அண்ணன் வீடு கட்டும் போதே கேட்டார். சேர்ந்து இருப்போமா, தனியா போவோமான்னு. நான் உன்னைக் கேட்டு தான் சேர்ந்து இருக்கச் சம்பந்தம் சொன்னேன். சேர்ந்து இருக்கச் சம்மதம் சொல்லிட்டு, நாம மட்டும் தனியா ஒதுக்கினா, அது நியாயமே இல்லை.” என ரொம்பவும் மனம் வருந்தி பேச…. 

ஜெயராமனும் நகையை இவர்களுக்குக் கொடுத்து விட்டதில், காமக்ஷியுமே குளிர்ந்து போய் இருந்தார். 

அதோடு அவர்கள் கணக்கு வழக்கில் சரியாக இருக்கும்போது, நாமும் சரியாகத்தானே இருக்க வேண்டும் எனப் புரிந்தது. 

“இனிமே இப்படிப் பண்ணலைங்க.” என்றார். 

கோபத்தில் இருந்த ராதிகா அகல்யாவுடன் படுக்காமல் மேலே வந்திருந்தாள்… அதனால் அவளும் தான் கேட்டுக் கொண்டிருந்தாள். 

அம்மா சேர்த்து தானே வைத்தார். அதை இவ்வளவு பெரிதுபடுத்த வேண்டுமா என்ற எண்ணம் இப்போதும் அவளுக்கு இருந்தது. 

சரியான பாதையில் யோசித்தால், எல்லாம் நல்லதாகத் தெரியும். தப்பும் தவறுமாக யோசித்தால், எதுவுமே தவறாகத் தான் தெரியும்.

Advertisement