Advertisement
அத்தியாயம் –7
பழனியில் இருந்து கிளம்பியவர்கள் கொடைக்கானல் நோக்கி திண்டுக்கல் வழியாக சென்றுக் கொண்டிருந்தனர். இடையில் மதிய உணவுக்கு பிரணவ் வண்டியை நிறுத்தச் சொல்ல மனோ பிடிவாதமாக வேண்டாமென்று மறுத்துவிட்டாள்.
“ஏன் ரதிம்மா சாப்பாடு வேண்டாங்கற?? எனக்கு பசிக்குதுடா அட்லீஸ்ட் நீ எனக்கு கம்பெனியாச்சும் கொடும்மா” என்றான் பிரணவ்.
“இல்லை ரித்திக் எனக்கு இப்போ சாப்பிட்டா மலையேறும் போது வாமிட் வந்திடும். தலை சுத்தும் அதான் வேண்டாம்ன்னு சொல்றேன் ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க”
“சரி நீ சாப்பிட வேண்டாம் ஒரு ஜூஸ் மட்டும் குடி” என்றவன் மனைவியுடன் அந்த ஹோட்டலுக்குள் நுழைந்தான். டிரைவரையும் சாப்பிட அழைக்க அவர் உணவு கொண்டு வந்திருப்பதாக கூறி அவர்களை சாப்பிட செல்லச் சொன்னார்.
பிரணவ் உணவருந்த மனோ குழந்தையை மடியில் வைத்துக்கொண்டிருந்தாள். அவன் சாப்பிட்டு முடிக்கும் தருவாயில் இருவருக்குமாய் ஜூஸ் சொன்னவன் எழுந்து கைகழுவ சென்றான்.
ஜூஸ் குடித்து முடித்தபின் அங்கிருந்து அவர்களின் பயணம் மீண்டும் தொடங்கியது. கொடைக்கானல் மலையேற தொடங்கி கொண்டை ஊசி வளைவுகளை கடக்க ஆரம்பிக்கும் போதே குடித்திருந்த ஜூஸ் அவளுக்கு தொண்டை குழிக்குள் வந்துவிட்டது.
மனைவியின் முகம் பார்த்து ஏதோ கண்டவனாய் “சார் கொஞ்சம் வண்டியை ஓரமா நிறுத்துங்களேன்” என்று ஓட்டுனரிடம் கூறினான். அவர் வண்டியை ஓரமாய் நிறுத்தவும் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை தோளில் போட்டுக்கொண்டவன் “ரதிம்மா இறங்கு” என்றான்.
வண்டியில் இருந்து இறங்கியது தான் தாமதம் ரோட்டின் ஓரத்திற்கு சென்று வாந்தி எடுத்தாள். குடலே வெளியில் வந்து விடும் போல் ஓங்கரித்து வந்தது அவளுக்கு.
கண்கள் கோவை பழம் போல் சிவந்துவிட்டது. குடித்திருந்த ஜூஸ் மொத்தமும் வெளியேறி இப்போது வெறும் வயிறாகி இருக்க அவளின் தலைசுற்றல் சற்றே மட்டுப்பட்டிருந்தது.
“ரதி முடியலன்னா இப்படியே ஊருக்கு கிளம்பிருவோமா!!” என்றான் பிரணவ் அவளின் நிலை பார்த்து.
“வேணாங்க நாம போகலாம். இப்போ தான் வயிறு காலியாகிருச்சுல இனி வாமிட் வராது. இதுக்கு தான் சாப்பிட மாட்டேன்னு சொன்னேன் நீங்க சொன்னீங்களேன்னு தான் ஜூஸ் குடிச்சேன்” என்றாள்.
“சாரிம்மா நீ எதுவும் சாப்பிடாம இருக்கறியேன்னு தான் ஜூஸ் குடிக்க வைச்சேன். இப்போ ஓகேவா…” என்றவன் அருகே வந்து அவளை தோளோடு அணைத்துக் கொண்டான்.
“ஹ்ம்ம் இப்போ ஓகே… வண்டியில ஏறி தூங்கிட்டேன்னா எதுவும் தெரியாது” என்றாள்.
“சரி வா…” என்றவன் அவளோடு காரில் ஏறினான். குழந்தையை அவன் மடி மீது போட்டுக்கொள்ள மனோ அப்படியே அவன் தோளில் சாய்ந்து உறங்கியிருந்தாள்.
கொடைக்கானல் மலை மீது வந்த பின்னே தான் அவளை எழுப்பினான் அவள் கணவன். “ரதிம்மா எழுந்திருடா நாம இப்போ மலை மேல வந்தாச்சு…” என்று எழுப்பவும் அவன் மேல் சாய்ந்தவாறே கண்ணை மலர்த்தி பார்த்தாள்.
“மேடம் கை வலிக்குதுங்க மேடம் கொஞ்சம் எழுந்திருக்களேன்” என்று அவள் தலையில் மெல்ல தட்டி சொல்லவும் கூச்சத்துடன் நிமிர்ந்தவள் “சாரிங்க…” என்றாள்.
“சாரி எல்லாம் சொல்லணுமா??” என்றான்.
“இப்படியேவா உட்கார்ந்து இருந்தீங்க?? என்னை அப்பவே எழுப்பியிருக்கலாம்ல…” என்றவள் அவன் மடி மீது இன்னமும் உறங்கிக் கொண்டிருந்த அபராஜித்தை தூக்கினாள்.
பின்னர் திரும்பி அவள் கணவனை பார்க்க அவன் ஏதோ யோசனையில் இருப்பது போல தோன்றியது. “என்னாச்சுங்க??” என்றாள்.
அவள் கேள்விக்கு பதில் சொல்லாது இன்னமும் யோசனையில் இருந்தான் பிரணவ். யாரோ தெரிந்தவர்கள் அவனை பின் தொடருவது போல ஒரு எண்ணம் அவனுக்கு.
சட்டென்று ஒரு முடிவெடுத்தவன் “சார் கொஞ்சம் வண்டி ஓரமா நிறுத்துங்களேன்” என்றான்.
“என்னங்க??” என்று பார்த்த மனைவியிடம் “ஒரு பத்து நிமிஷம் இதோ வந்திர்றேன்” என்று வண்டியில் இருந்து இறங்கினான்.
“என்னை தனியா விட்டு எங்க போறீங்க?? நானும் வர்றேன்” என்று அவனுடனே இறங்கினாள் மனோ.
“எங்க போனாலும் என் கூடவே வரணும்ன்னு சொன்னா எப்படி? புரிஞ்சுக்கோ” என்று நகரப் போனவனை கையால் தடுத்தாள்.
“சொல்லிட்டு போங்க இல்லை என்னை கூட்டிட்டு போங்க. தெரியாத ஊரா இருக்கு… எனக்கு பயமா இருக்கு” என்று அவனை கலவரமாய் பார்த்தாள்.
அவள் கண்கள் பார்த்து ஒரு நிமிடம் தயங்கியவன் “ரதி நீ ஒண்ணும் சின்ன குழந்தையில்லை பயப்படுறதுக்கு. இது ஒண்ணும் மொழி தெரியாத ஊருமில்லை. இங்கவே நில்லு நான் வந்திர்றேன்” என்றவன் குரல் உயர்ந்து கொஞ்சம் கோபம் கலந்து சொல்லிவிட்டு நகர்ந்தான்.
அவனின் கோபம் அவளுக்கு கண்களில் மளுக்கென்று கண்ணீரை உற்பத்தி செய்தது. திருமணமாகி இத்தனை வருடத்தில் எப்போதாவது தான் அவனுக்கு கோபம் வந்திருக்கிறது.
அதுவும் காரணமாக தான் வரும் என்பதால் அவளால் அதை புரிந்து கொள்ள முடியும். இப்போது எந்த காரணமும் இல்லாமல் அவளை கடிந்துவிட்டு செல்லும் அவன் சற்று புதிதாய் தெரிந்தான்.
இப்படி அவன் காட்டும் கோபம் எல்லாம் திருமணத்திற்கு முன் அவள் அனுபவித்தது தான். அப்போதெல்லாம் நீ என்ன என்னை சொல்வது என்ற ரீதியில் அவளும் அவனை கண்டும் காணாமல் சென்றுவிடுவாள்.
இப்படியாக தன் எண்ணத்தில் உழன்றவாறே நின்றிருந்தவளை யாரோ உற்று நோக்குவது போல் ஒரு உணர்வு எழுந்தது. சுற்று முற்றும் பார்த்தால் யாருமில்லை. அவர்கள் வந்த வண்டியின் டிரைவர் டீ குடிக்க செல்வதாக சொல்லி கையில் சிகரெட்டுடன் சற்று தள்ளிச் சென்றார்.
அது நடைபாதை கடைகள் உள்ள இடம் அவள் நின்றிருந்த இடத்திற்கு எதிரில் டீ கடைகளும் பஜ்ஜி வியாபாரமும் நடந்து கொண்டிருந்தது. அங்குமிங்கும் சுற்றி பார்த்தவள் அப்போது தான் விழித்து அவளை பார்த்து “ம்மா..” என்ற அஜியிடம் தன் கவனத்தை பதித்தாள்.
“என்ன செல்லம் எழுந்துட்டீங்களா!! பாப்பு குட்டி என்ன சாப்பிடுறீங்கடா!!” என்று குழந்தையுடன் செல்லம் கொஞ்சிக் கொண்டு குழந்தையின் மூக்கோடு மூக்கு உரசி விளையாடினாள்.
“வாவ்… என்ன ஒரு அழகு?? எதிர்பார்க்கவேயில்லை…” என்று வெகு அருகில் ஒரு பரிச்சய குரல் கேட்கவும் திடுக்கிட்டு திரும்பினாள் மனோ.
அவள் மீண்டும் சுற்று முற்றும் பார்க்க அவள் பின்னால் அவளை இடித்தவாறே வந்து நின்றவனை திரும்பி பார்த்தவள் துள்ளிக்குதித்து விலகி நின்றாள்.
“ரிலாக்ஸ் ரிலாக்ஸ் எதுக்கு இந்த பதட்டம். இன்னமும் என்னை பார்த்தா உனக்கு பதட்டமாகுதா!! நைஸ்!!” என்றவனை எரிக்கும் பார்வை பார்த்தாள் மனோ.
‘இவன் எங்கே இங்கே’ என்று நினைக்கவும் தவறவில்லை அவள். அடிவயிற்றில் ஒரு பய உணர்வு எழுவதையும் அவளால் தடுக்க முடியவில்லை.
“அப்புறம் எப்படியிருக்க?? உன்னோட குழந்தையா!! அழகாயிருக்கான் துருதுருன்னு!! வருவானா என்கிட்ட” என்று கையை நீட்ட அஜி அவனிடம் செல்லவேயில்லை.
அவன் அன்னைக்கு பிடிக்காதவன் என்ற அதிர்வலை அவளின் மூலமாக குழந்தை உணர்ந்தானோ என்னவோ லேசாக சிணுங்க ஆரம்பித்தான் அவன் பிடித்தமின்மையை காட்ட!!!
“என்ன வேணும் உங்களுக்கு?? எதுக்கு என்கிட்ட வந்து பேசிட்டு இருக்கீங்க??” என்று முறைத்தாள் மனோ.
“நீ இப்படி முறைக்கும் போது கூட அழகா தான் இருக்கே?? என்ன கேட்டே எனக்கு என்ன வேணும்ன்னா!! எனக்கு வேண்டியதெல்லாம் கிடைக்குமா!!” என்றவனின் பார்வை அவளை மேலிருந்து கீழாக அளவெடுத்தது.
அவன் பார்வையை உணர்ந்தவள் “அறிவில்லை உனக்கு சீய்!!” என்று முகத்தை அருவெருப்பாய் வைத்தவள் அங்கிருந்து நகர்ந்து சென்று காரின் அருகே செல்லப் போனாள்.
“என் கேள்விக்கு பதில் சொல்லிட்டு போ” என்றான் அவன்.
என்னவென்பது போல் அவனை திரும்பி பார்த்தாள். “அன்னைக்கு கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு சொல்லிட்டு கடைசியில வராமலே போய்ட்ட” என்றான்.
“சீய்!! உனக்கெல்லாம் எப்படி இப்படி கூசாம கேட்க முடியுது. ஏற்கனவே ஒரு பொண்ணோட நிச்சயம் முடிஞ்சு அதுக்கு அப்புறம் என்னைய வேற கல்யாணம் பண்ணணும் நினைச்சியே உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா!!” என்றாள்.
“ஹேய் என்ன செம காமெடி பண்ணுற!! என்னமோ நான் தான் உன்னை வலுக்கட்டாயமா கல்யாணம் பண்ணியே தீருவேன்னு சொன்ன மாதிரி சொல்ற!!”
“வாங்க நாம கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு முதல்ல கேட்டது யாரு நானா!! இல்லை நீயா!!” என்றுவிட்டு நிதானமாய் அவளை பார்த்தான்.
மனோ அந்த வார்த்தையில் கூனிக்குறுகி நின்றாள். அந்த வார்த்தையை ஏன் சொன்னோம் என்று அவள் வருந்தாத நாளே இல்லை.
‘இன்று அதற்கு காரணமானவனே தன்னை நிற்க வைத்து கேள்வி கேட்கிறான், எல்லாம் என் முட்டாள்த்தனம் தானே’ என்று எண்ணியவளுக்கு கண்கள் கலங்க ஆரம்பித்தது.
இவன் முன்னே போய் கண்ணை கசக்குவதா என்று எண்ணியவள் அவனிடம் எதுவும் பேசவில்லை திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.
“சொல்லிட்டு போ” என்றவன் அருகே வந்து அவள் கையை பிடித்திருந்தான்.
“கையை எடு” என்று அவள் சொல்ல அவன் இன்னமும் அழுத்தி பிடித்தான்.
“மரியாதையா சொல்றேன் கையை எடுடா??” என்று குரலை உயர்த்தினாள். அவளின் குரலில் குழந்தை மிரண்டு அழ ஆரம்பித்தான். அவர்கள் காரின் டிரைவரோ சற்று தள்ளி சென்று புகைப்பிடிக்க சென்றுவிட்டிருந்தார்.
“எடுக்கலைன்னா என்ன செய்வே?? அடிப்பியா!! நீ அடிக்கறவரை பார்த்திட்டு இருப்பேன்னு நினைச்சியா!! அப்போ உன்னை மிஸ் பண்ண மாதிரி இப்பவும் மிஸ் பண்ண மாட்டேன்”
“உனக்கு சிக்குன அடிமை எவன்டி?? அவன்கிட்ட இருந்து உன்னை பிரிச்சு என் காலடியில உன்னை விழ வைக்குறேன் பாரு” என்று கருவினான் அவன்.
அவன் கையை உதறி தள்ளியவள் சற்று தள்ளியிருந்த May I Help you என்று எழுதியிருந்த போலீஸ் உதவி மையத்தில் நின்றிருந்த காவலரை நோக்கிச் சென்றாள்.
என்ன சொன்னாளோ ஏது சொன்னாளோ அவளுடனே வந்தார் காவலர். தூரத்தே நின்றிருந்தவனை சுட்டிக்காட்டினாள் அவள். அவர் அவனருகே வந்தார்.
“என்ன சார் தனியா இருக்க லேடிஸ்கிட்ட வம்பு பண்ணுறீங்களாம். என்ன நினைச்சுட்டு இருக்கீங்க!! பார்க்க ஆளு நாகரீகமா இருக்கீங்க இப்படி அநாகரீகமா நடந்துக்கறீங்க” என்று அதிகாரத் தோரணையில் கேட்டார்.
“சார் இவங்க எனக்கு தெரிஞ்சவங்க தான். என்னோட க்ளோஸ் ரிலேஷன் எங்களுக்குள்ள சின்ன பிரச்சனை அதை வந்து உங்ககிட்ட சொல்லிட்டாங்க போல நாங்க பேசி தீர்த்துக்கறோம். நீங்க போங்க சார்” என்றான் அவன்.
அவளை திரும்பி அர்த்தத்துடன் பார்த்தவர் “நீங்க போங்க மேடம் நான் பார்த்துக்கறேன்” என்றவர் “என்னோட வாங்க” என்று அவனை அழைத்துச் சென்றார். அவருடன் செல்லும் முன் ஒரு கணம் நின்று திரும்பி பார்த்தவனின் விழிகளில் இரையை தவறவிட்ட சிங்கத்தின் சினத்தை பார்த்தாள்.
அவனின் அந்த பார்வையில் உள்ளூர குளிர் பரவியது அவளுக்கு. அதை அவனிடம் காட்டி தன் பலவீனத்தை உணர்த்த கூடாதென்று எண்ணியவள் வெகு அலட்சியமாய் அவனை பார்த்தாள்.
அவர்கள் நகர்ந்து சென்ற அடுத்த பத்து நிமிடத்தில் பிரணவ் அவளை நோக்கி வந்து சேர்ந்தான். அதற்குள் மனோவின் உடல் நடுங்க ஆரம்பித்திருந்தது. குழந்தை அழுகையை நிறுத்தியிருந்தான்.
“ரதி… ரதிம்மா… என்னாச்சு ஏன் இப்படி பிரீஸ் ஆகி நிக்கற” என்றான். அருகில் கேட்ட பிரணவின் குரலில் சுயநினைவு வந்தவள் சட்டென்று அவன் மீது சாய்ந்து கொண்டாள்.
அவன் மீது ஈரம் பரவுவதை உணர்ந்தவன் “என்னாச்சு ரதிம்மா நான் கேட்டுட்டே இருக்கேன். நீ பேசாம இருக்கே” என்று சொல்லவும் அவள் நிமிர்ந்தாள்.
“அவன்… அவனை பார்த்தேன்” என்றாள் விசும்பலாக.
“யாரைடா சொல்ற??”
அவள் பதில் சொல்லாமல் தூரத்தே கையை நீட்டி காட்டினாள். “ரதி என்னன்னு சொல்லு யாரு இருக்கா அங்க” என்றான் சற்றே அதட்டலாக.
“அவன் தான் அதோ அங்க போலீஸ்கிட்ட” என்றவள் சற்று முன்பு வந்தவனை பற்றி கணவனிடம் சொல்ல ஆரம்பித்தாள்.
பிரணவின் முகம் இறுக்கத்திற்கு சென்றது. பின் யோசனையுடன் அவனை பார்ப்பதும் மனைவியை பார்ப்பதும் என்று நின்றிருந்தான். ஏதோ முடிவு கொண்டவன் போல் “நீ வண்டியில உட்காரு நான் போய் பார்த்திட்டு வந்திடறேன்” என்றான்.
“வேண்டாம் நீங்க அங்க போகாதீங்க” என்று தடுத்தவளை “நான் பார்த்துக்கறேன் ரதிம்மா அவனால திரும்ப பிரச்சனை வராம இருக்கணும்ல” என்று தன்மையாய் சொல்லிவிட்டு அந்த போலீஸ் பூத்தை நாடிச் சென்றான்.
பதினைந்து நிமிடத்திற்கு பின் திரும்பி வந்தவனின் முகத்தில் தோன்றிய உணர்வினை அவன் மனைவியால் புரிந்து கொள்ள முடியவில்லை.
“என்னாச்சுங்க??” என்றாள் பிரணவை பார்த்து.
“ஒண்ணுமில்லைம்மா” என்றவன் “கிளம்பலாம் வண்டி எடுங்க” என்று சொல்லிவிட்டு இருக்கையில் பின்னால் சாய்ந்து கண்ணை மூடிக் கொண்டான்.
‘என்னாச்சு இவருக்கு எனக்கு மேல கவலையா இருக்காரு’ என்று கணவனை குறித்து வருந்த ஆரம்பித்தாள் அவன் மனைவி. அவர்கள் தங்க போகும் இடத்திற்கு வந்து செக்கின் செய்து அவர்கள் அறைக்குள் நுழைந்த பின்னும் கூட அவன் யோசனையாகவே இருந்தான்.
மனோ அவனை விடுத்து குழந்தையை கவனிக்க ஆரம்பித்தாள். அவள் எண்ணமும் இன்னமும் சிந்தனையிலேயே இருந்தது. அவர்கள் அங்கு வந்து சேர இரவாகியிருந்தது. ரூம் சர்வீஸை அழைத்து சூடாக பால் கொண்டு வரச்செய்தாள்.
அதற்குள் தன்னுணர்வுக்கு வந்திருந்த பிரணவ் பெட்டியை திறந்து அவனுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் சென்றான்.
மனோ குழந்தைக்கு உணவூட்டி தோளில் தட்டி ஒருவாறு உறங்க செய்து படுக்க வைத்தாள். அப்போது தான் அவன் குளியலறையில் இருந்து வெளியில் வந்தான். சூடான வெந்நீரில் அவன் குளித்திருப்பது அருகில் வந்து நின்றதினால் உணர முடிந்தது அவளால்.
அதிக குளிர் என்பதால் குழந்தைக்கு ரஜாய் போர்வை என்று ஒன்றன் மேல் ஒன்றாய் போட்டு அணைவாய் கையை போட்டவள் இன்னமும் சில மணி நேரங்களுக்கு முன் நடந்த நிகழ்வில் இருந்து வெளியில் வரவில்லை.
கணவன் அழைப்பது எங்கோ கனவில் கேட்பது உணர்ந்தவள் ஒருவாறு அந்த குரல் அவளை எட்டி அவனை திரும்பி பார்த்தாள். “என்னடா என்ன யோசனை??” என்றான் அவள் கையை எடுத்து தன் மீது வைத்துக்கொண்டு.
“ஒண்ணுமில்லை” என்றாள்.
“அதெல்லாம் மறந்திடுடா” என்றவன் ரூம் சர்வீஸ்க்கு அழைத்து இருவருக்குமாய் இரவு உணவை ஆர்டர் செய்தான்.
“எனக்கு பசிக்கலை எதுவும் வேண்டாம்” என்று படுக்க போனவளின் கையை பிடித்து இழுக்க அவன் மேலேயே வந்து விழுந்தாள் அவள். சற்று முன்பு நடந்த நிகழ்வு கொடுத்த எரிச்சலை கணவன் மீது காட்டினாள்.
“ஏன் இப்படி செய்யறீங்க”எரிச்சலாய்.
“நான் பேசிகிட்டு இருக்கேன் நீ படுக்க போறே, நம்ம ரெண்டு பேருக்கும் தானே சாப்பாடு ஆர்டர் பண்ணேன். நீ சாப்பிட்டு என்ன வேணா பண்ணிக்கோ” என்று ஒரு மாதிரி குரலில் சொல்லிவிட்டு கதவை திறந்து வெளியேறி சென்றுவிட்டான்.
‘நாம இப்போ என்ன செஞ்சோம், தப்பா எதுவும் செஞ்சிட்டமா!! சாப்பாடு வேணாம்ன்னு சொன்னது ஒரு குத்தமா!!’ என்று அவளுக்கு சாதகமாகவே யோசிக்க ஆரம்பித்தாள்.
‘அவரை உதாசீனமா பேசிட்டமோ!!’ என்று மெதுவாக யோசிக்க ஆரம்பித்தாள். ‘சாப்பிட சொன்னது ஒரு குத்தமா!! இல்லையே!! அப்புறம் ஏன் நான் அப்படி சொன்னேன்’ என்று சுய ஆராய்ச்சியில் இறங்கவும் ரூம் சர்வீஸ் கதவை தட்டவும் நினைவுகள் தடைபட்டு வந்திருந்த உணவை வாங்கி வைத்தாள்.
‘பசி தாங்க மாட்டாரே’ என்று யோசித்துக்கொண்டே எழுந்தவள் குழந்தையை திரும்பி பார்த்து இருப்பக்கமும் அணைவாய் தலையணை வைத்துவிட்டு ரூமை விட்டு வெளியில் வந்தாள்.
பிரணவ் லானில் இருந்து வெளியே சென்ற பகுதியில் நின்றிருந்தது கண்ணில் விழ அவனை நாடிச் சென்றாள்.
அவன் அருகே வந்தவள் அவன் தோளைத் தொட்டு “உள்ள வாங்க சாப்பிடலாம்” என்று கூற பிரணவ் அவன் மனைவியை உற்று நோக்கினான்.
பின் எதுவும் கூறாமல் முன்னே நடக்க ஆரம்பித்தான். ‘செம கோவத்துல இருக்காரு போல’ என்று எண்ணிக்கொண்டே வேகமாய் நடந்து அவன் கையுடன் தன் கையை கோர்த்துக் கொண்டாள்.
இருவருமாக சாப்பிட்டு முடிக்கும் வரையில் அமைதியே அங்கு ஆட்சி செய்தது. பிரணவே ஆரம்பித்தான் “என்னாச்சுடா உனக்கு இன்னமும் அப்போ நடந்ததே நினைச்சுட்டு இருக்கியா நீ!!”
“மறக்க முடியலைங்க!! எல்லாமே என்னோட முட்டாள்த்தனத்தினால தானே!!” என்றாள்.
“இதுல முட்டாள்தனம் எங்கேயிருந்து வந்தது. உன் மனசாட்சி தொட்டு சொல்லு நீ அவனை விரும்பினியா!!”
“நிச்சயம் இல்லைடா!! அன்னைக்கு உன்னோட சூழல் அப்படி நீ கேட்டுட்ட!! அதுக்காக இன்னைக்கு வரைக்கும் அதையே நினைச்சு பீல் பண்ணிட்டு இருக்கறதுல என்ன நியாயம் சொல்லு”
மனோவிற்கு கண்கள் கலங்கிவிட அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள். “நீங்க சொல்றது புரியுது!! நானும் மறக்கணும்ன்னு தான் நினைச்சேன்”
“ஆனா அவன் கண்ணு முன்னாடி வந்து ஞாபகப்படுத்தறானே!! என்னெல்லாம் சொல்றான் தெரியுமா!!” என்றவளுக்கு அழுகையினூடே பேச்சு வரவில்லை.
“அதெல்லாம் தான் நினைக்கவே வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்ல. விட்டு தள்ளு ரதிம்மா. நான் இருக்கேன் உனக்கு எப்பவும் அதை மனசுல வை”
“அப்புறம் உன் மேல நம்பிக்கை வை. உன்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது. நான் பக்கத்துல இல்லைன்னாலும் எவ்வளவு அழகா நீ சமாளிச்சே தெரியுமா எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு ரதி” என்றான் அவளை பெருமையாய் பார்த்து
“நீ பழைய மாதிரி இல்லை, நெறைய மாறியிருக்க ரதிம்மா!! முன்ன மாதிரி எல்லாத்துக்கும் என்னையே எதிர்பார்த்திட்டு இருக்கற அந்த ரதி இப்போ இல்லை தெரியுமா!!” நான் நினைச்ச மாதிரி நீ மாறிக்கிட்டு வர்றே” என்றான்.
“நான் என்ன சந்திரமுகியா முழுசா மாறிகிட்டே வர்றேன்னு சொல்றீங்க” என்றவளின் பேச்சில் இப்போது குறும்பு வந்திருந்தது.
“பழைய பாரதி வந்துட்டா இப்போ!! நான் முதன் முதல்ல பார்த்த பாரதி என்னை பார்த்து இடக்கா பேசுற பாரதியை பார்க்குறேன்” என்று பழைய விஷயங்களை நினைவு கூர்ந்தான் பிரணவ்.
“அந்த பாரதி எனக்கு பிடிக்கலை. உங்க கூடவே இருக்கற இந்த சில வருஷம் தான் எனக்கு பிடிச்சது. உங்க ரதியா இருக்கறது தான் எனக்கு பிடிக்குது” என்றவள் நிமிர்ந்து கணவனின் முகம் பார்த்தாள்.
“ம்ச்… அதை விடுங்க கேட்க மறந்திட்டேன். நீங்க ஏன் கவலையா இருந்தீங்க அப்போ??” என்றாள்.
“கவலையாவா!! நானா!! இல்லையேம்மா”
“இல்லை ஏதோ யோசனையா எனக்கு சொல்ல தெரியலை என்னாச்சுன்னு சொல்லுங்க. எதுவும் பிரச்சனையா!!” என்றாள்.
“நான் அப்போ வண்டி விட்டு இறங்கி போனதை பத்தி நீ கேட்கறன்னு நினைக்கிறேன். அது ஒண்ணுமில்லைடா என்னமோ யாரோ நம்மை தொடர்ந்த மாதிரி ஒரு உணர்வு”
“அதுவும் அந்த இடம் வந்ததும் வண்டியை நிறுத்த சொல்லணும்ன்னு தோணிச்சு. அதான் இறங்கி போனேன் நான் நினைச்சது சரி தானே. அப்போ தானே அவரை பார்த்தோம்” என்றான்.
“அவனுக்கு என்ன மரியாதை வேண்டி கிடக்கு அவருன்னு. அவன்னு சொல்லுங்க” என்றாள் மனோ கோபமாய்.
“இப்போ அது ரொம்ப முக்கியமா ரதிம்மா. அந்த கதையை நாம இப்போ விட்டு தள்ளுவோம் ஓகே வா. நாம நம்ம கதைக்கு வருவோம்” என்றவன் ஒரு மார்க்கமாய் அவளை பார்த்து வைத்தான்.
‘இதென்ன இப்படி பார்க்குறாரு’ என்று அவள் யோசிக்க பிரணவ் தொடர்ந்தான்.
“நேத்து தான் எதுவும் இல்லைன்னு சொல்லிட்ட இன்னைக்கும் அப்படியே விட்டுட என்னால முடியாது” என்றவனின் பேச்சு எங்கே செல்கிறது என்பதை புரிந்ததும் முகம் சிவந்து போனாள் மனோ.
“என்னாலயும் முடியாது எனக்கு தூக்கம் தூக்கமா வருது. நான் படுக்க போறேன்” என்று விட்டு அவனிடமிருந்து விலகப் போனாள். எங்கே பிரணவ் அவளை விட்டால் தானே.
“ஹேய் ரதி ஏமாத்தாத!!”அவள் பேச்சில் கனிவான அவன் முகம் காதலாய் அவளை பார்த்தது. “ஐ லவ் யூ ரித்திக்” என்றவள் எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
“ரதி நீயா!! நிஜமாவே நீ தானா!! எனக்கு நீ இப்போ ஐ லவ் யூ சொன்னியா!! நம்பவே முடியலை. நான் இதுவரை கெஞ்சி கேட்டும் சொல்லவேயில்லை”
“இப்போ தான் சொல்ல தோணிச்சா உனக்கு. ப்ளீஸ் செல்லம் இன்னொரு முறை சொல்லேன்” என்று அவள் முகத்தை தன் புறம் இழுத்து அவள் கண்ணோடு கலந்து கேட்டவனை பார்க்காது தலை கவிழ்ந்தாள் அவன் மனைவி…..
“கோல்டன் வோர்ட்ஸ் கேனாட் பீ ரிப்பிட்டடு” என்றாள்.
“சரி நீ சொல்ல வேண்டாம் நான் சொல்லிட்டு போறேன்” என்றவன் அவள் தோளில் முகம் பதித்து மெல்ல அவள் காதில் “ஐ லவ் யூ பொண்டாட்டி” என்றான்.
உடலெங்கும் கூசி சிலிர்த்தது அவளுக்கு. மெதுவாய் அவன் மார்பில் கைவைத்து தள்ள முயல அவள் முயற்சியை தன் கைக்கொண்டு தடுத்தவன் அவளை தன் வசப்படுத்திக்கொண்டான்….