Advertisement

அத்தியாயம் – 3

 

 

“அஜி கண்ணா எழுந்திருங்க… இங்க பாருங்க செல்லம்… செல்ல குட்டி, எழுந்திருடா என்ற மனோ அப்போது தான் விழிக்க முற்ப்பட்ட குழந்தையை இருகைகளாலும் தூக்கி தோளில் போட்டவாறே கொஞ்சினாள்.

 

 

“அவ்வே… ஹான்… ஆஆஆஆ… என்ற குழந்தை அவள் முகம் முழுதும் எச்சில் படுத்தியது. அப்போது தான் அவள் குளித்துவிட்டு வந்திருந்தாள். சுத்தம் என்பதெல்லாம் மறந்து அந்த நிமிடம் அவள் குழந்தையின் செய்கையை மட்டுமே ரசித்தாள்.

 

 

குழந்தை எச்சில் படுத்தியதை கூட துடைக்காமல் அந்த சந்தோசத்தை அவள் மெய் மறந்து சிறிது நேரம் ரசித்தாள். முன்னில் லேசாய் ஒரு பால் பல் முளைக்க தொடங்கியிருந்தது போலும் மூக்கின் நுனியில் குழந்தை கடித்து லேசாய் வலித்தது.

 

 

“செல்லக்குட்டிக்கு பல்லு முளைச்சிருச்சா!! நல்லா கடிக்கறீங்களே!! அம்மாக்கு வலிக்குதே பட்டுக்குட்டி!! அம்மா பாவமில்லை என்று சொல்லிக்கொண்டே குழந்தையை சற்றே இறக்கி இடுப்பில் அமர்த்தினாள்.

 

 

குளியலறையில் குழந்தைக்கான நீரை ஏற்கனவே வளாவி வைத்திருந்தவள் குழந்தையுடன் அங்கு சென்றாள். குழந்தையுடன் தன் போக்கில் பேசிக்கொண்டே குளிப்பாட்டி முடித்தவள் குழந்தைக்கு வேறு உடைமாற்றி தங்களுக்கு தேவையானதை எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு குழந்தையுடன் வெளியில் வந்தாள்.

 

 

மாடி வீட்டில் இருந்த பெண் ஏதோ அவளை பார்த்து பேசுவது போல இருந்தது. ஒரு மாதிரியாக முதலில் தோன்றிய போதும் தோள்களை குலுக்கிவிட்டுக் கொண்டு தன் வேலையை பார்க்கச் சென்றாள்.

 

 

வண்டியை எடுத்துச் சென்றவள் காப்பகத்திற்கு சென்று குழந்தையை விட்டுவிட்டு பின் பள்ளிக்கு சென்றாள். புதிதாக அட்மிஷன் நடந்து கொண்டிருந்தது பள்ளியில். அவள் வகுப்பு இல்லாத நேரங்களில் அலுவலக வேலைகளும் ஒன்றிரண்டை பொறுப்பேற்றிருந்தாள்.

 

 

அதனால் அவளுக்கு மதிய இடைவேளை தவிர்த்து வேறு இடைவெளி எதுவும் கிடைக்கவில்லை. மாலையில் குழந்தையை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு செல்லும் வழியில் தான் யோசித்துக் கொண்டே வந்தாள்.

 

 

இன்னும் ஒரு மாதத்தில் குழந்தையின் முதல் பிறந்தநாள் வருகிறது. எப்படியாவது அவரை வரவழைக்க வேண்டும் பெரிதாக கொண்டாட முடியாவிடிலும் ஓரிரு நாள் முன்னதாக குழந்தைக்கு கோவிலில் வைத்து முடி இறக்கி காது குத்த வேண்டும்.

 

 

பிறந்தநாளை ஒரு ஆசிரமத்தில் அமைதியாய் கொண்டாட வேண்டும் என்று மனதிற்குள்ளாக சில திட்டங்களை போட்டுக்கொண்டே வீடு வந்து சேர்ந்தவள் முதலில் அங்கு நடப்பதை கவனிக்கவேயில்லை.

 

 

மனோவை பார்த்ததும் கௌசல்யா சற்று குரலுயர்த்தி அங்கிருந்த பெண்ணை உள்ளே போகச் சொன்னாள். அப்பெண்ணோ நகர்வேனா என்பது போல் அங்கேயே நின்றிருந்தாள்.

 

 

அவள் மட்டுமல்லாது மாடி வீட்டில் இருந்த மற்றொரு வீட்டின் பெண்மணியும் அங்கு நின்றிருந்தார். மனோ எதுவோ பேசிக்கொள்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டு வண்டியை நிறுத்தி இறங்கினாள்.

 

 

அவள் பொருட்களை சேகரித்துக் கொண்டிருக்கும் போது தான் பேச்சு அவளை பற்றியதாக இருந்ததை அவள் உணர்ந்தாள். கௌசல்யா அவர்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டு விழிப்பது போல் தோன்ற ஒரு நிமிடம் அமைதி காத்தவள் பின் அவர்களை நோக்கிச் சென்றாள்.

 

 

“அக்கா என்ன பிரச்சனை?? என்றாள் கௌசல்யாவை பார்த்து.

 

 

“ஒண்ணுமில்லை மனோ நீ வீட்டுக்கு போ இப்போ தானே வந்தே. நான் அப்புறம் வந்து உன்கிட்ட பேசறேன் என்றாள் கௌசல்யா.

அதற்குள் மாடி வீட்டு பெண்மணியோ “என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சா நீ வந்து தீர்த்து வைக்க போறியா?? என்று நொடித்தாள்.

 

 

“நான் உங்ககிட்ட கேட்கலையே?? என்று திருப்பிக் கொடுத்தாள் மனோ.

 

 

“பிரச்சனையே நீ தானேடி நீயே வந்து என்ன பிரச்சனைன்னு கேட்குற?? என்றாள் அப்பெண்மணி.

 

 

“ப்ரியாம்மா உங்க வேலையை பார்த்திட்டு போங்க தேவை இல்லாத பேச்சை எல்லாம் பேசி வார்த்தையை வளர்க்காதீங்க!! என்று முறைத்தாள் கௌசல்யா.

 

 

“ஏன் நான் ஏன் பேசக் கூடாதுங்கறேன். இவள போல உள்ளவளுங்க எல்லாம் கண்டபடி அலைவாளுங்க. அவளுங்க இருக்கற இடத்துல நம்மளை மாதிரி சம்சாரி பொம்பளைங்க எல்லாம் எப்படி இருக்கறதாம். நீங்க கொஞ்சம் பேசாம இருங்க மயூரிம்மா என்று கௌசல்யாவை பார்த்து சொன்னார் அந்த ப்ரியாம்மா.

 

 

“ஆமா மயூரிம்மா நீங்க கொஞ்சம் பேசாம இருங்க என்றார் மற்றொரு பெண்மணியான ஜானகியம்மா.

 

 

“நான் இங்க இருக்கறதுல உங்களுக்கு என்ன பிரச்சனை?? என்றாள் மனோ வெகு நிதானமாய்.

 

 

“உன்னை மாதிரி பொம்பளைங்க எல்லாம் இங்க இருக்க கூடாது. கண்டவனும் வர்றான் போறான், நீயும் பல்லிளிச்சுட்டு இருக்க!! இங்க வயசுப்பசங்க எல்லாம் இருக்காங்க

 

 

“பேசாம வீடு காலி பண்ணிட்டு எங்கயாச்சும் போக வேண்டியது தானே என்றாள் ப்ரியாம்மா என்பவர்.

 

 

“நீங்க இந்த வீட்டுக்கு ஹவுஸ் ஓனரா?? நீங்க எதுக்கு என்னை காலி பண்ண சொல்றீங்க??

 

“உன்னை மாதிரி பொம்பளை இருக்கற வீட்டுல எல்லாம் நாங்க எப்படி இருக்கறது என்று ஆங்காரமாய் பேசினாள் மற்றவள்.

 

 

“நான் காலி பண்ணணும்ன்னு ஹவுஸ் ஓனர் சொன்னா நான் பண்ணிக்கறேன். நீங்க ஒண்ணும் என்னை பத்தி கவலைப்பட வேண்டியதில்லை உங்க வேலையை மட்டும் பாருங்க என்று நகரப்போனாள் மனோ.

 

 

“ஹேய் என்ன நான் பாட்டுக்கு சொல்லிக்கிட்டே இருக்கேன் நீ உன் பாட்டுக்கு போய்கிட்டே இருக்கே. முதல்ல யாரு நீ?? புருஷன் இல்லாம குழந்தையோட ஒத்தை ஆளா வந்து இருக்க??

 

 

“கண்டவனும் வர்றான் எதையோ கொடுக்கறான் ஈன்னு இளிச்சுட்டு அதை வாங்கிக்கற… உள்ள கூட்டிட்டு போய் கதவை அடைச்சுக்கற… நீயெல்லாம் ஒரு குடும்ப பொம்பிளையா?? என்று ஏகத்துக்கும் வார்த்தைகளை விட திரும்பிச் செல்ல அடியெடுத்து வைத்த மனோ மீண்டும் அருகே வந்தாள்.

 

 

கௌசல்யாவை நோக்கிச் சென்றவள் “அக்கா குழந்தையை கொஞ்ச நேரம் பார்த்துக்கோங்களேன்… என்றவள் “அவங்க வீடு மாடியில எங்க இருக்கு?? என்றாள்.

 

 

கௌசல்யா என்ன?? எதற்கு?? என்று கூட கேட்காமல் குழந்தையை வாங்கியவள் “மாடியேறினா முதல் வீடு என்று எதையோ அவள் சொல்லி முடிக்கும் முன்னேயே அங்கிருந்து நகர்ந்திருந்தாள் மனோ.

 

 

அங்கிருந்தவர்களை கண்டுகொள்ளாது மளமளவென்று படியேறியவள் திறந்திருந்த ப்ரியாம்மாவின் வீட்டில் சென்று அமர்ந்து கொண்டாள். எதற்கு என் வீட்டை பற்றி விசாரிக்கிறாள் என்று ப்ரியாம்மா யோசித்துக் கொண்டிருக்கும் போதே படியேறியவளை பார்த்து ஆவென்று நின்று கொண்டிருந்தாள்.

 

 

மனோ அவர்கள் வீட்டிற்குள் நுழையவும் அவசர அவசரமாய் ஜானகியம்மாவும் ப்ரியாம்மாவும் படிகளில் ஏறினர். ஜானகியம்மாவிற்கு சற்று பயம் கண்டுவிட அவர் ப்ரியாம்மாவின் வீட்டிற்குள் நுழையாமல் அடுத்திருந்த அவர்களின் வீட்டிற்கு அவசரமாய் சென்று கதவை பூட்டிக் கொண்டு ஜன்னலின் வழியே வந்து நின்று எட்டி பார்த்தார்.

 

 

“ஏய் என்னடி நான் பேசிக்கிட்டு இருந்தா நீ பாட்டுக்கு இங்க வந்து உட்கார்ந்திருக்க… என்னடி நினைச்சுட்டு இருக்க உன் மனசுல… உன்னை மாதிரி ஆளுங்க எல்லாம் எதுக்குடி என் வீட்டுக்குள்ள நுழையறீங்க…

 

 

“வெளிய போடி முதல்ல, இன்னும் கொஞ்ச நேரத்துல என் பொண்ணு வந்திடுவா… போடி முதல்ல… என்ற ப்ரியாம்மா வாய்க்கு வந்ததையும் பேசி ஏச மனோவோ கைகடிக்காரத்தை பார்ப்பதும் வாசலை நோக்குவதும் கீழே பார்ப்பதும் என்று நேரத்தை கடத்தினாள்.

 

 

கத்தி கத்தி ஓய்ந்த ப்ரியாம்மா “நான் பாட்டுக்கு கத்திக்கிட்டே இருக்கேன் எனக்கென்னன்னு உட்கார்ந்திருக்க எவ்வளவு திண்ணக்கம்டி உனக்கு… உன்னை… என்று சொல்லிக்கொண்டே அவளை பிடித்து வெளியில் தள்ள வேண்டும் என்று நோக்கில் ஒரு எட்டு எடுத்து வைக்க மனோ எழுந்து நின்றாள்.

 

 

“இப்போ எப்படி இருக்கு உங்களுக்கு?? என்றாள் அமைதியாய்.

 

 

‘இவ என்ன சொல்லுறா என்பது போல் ப்ரியாம்மா விழித்தார்.

 

 

“உங்க வீட்டுக்குள்ள சொல்லாம கொள்ளாம வந்து உட்கார்ந்திட்டேன்னு உங்களுக்கு எவ்வளவு கோவம் வருது. என் விஷயத்துல நீங்க கண்டபடி பேசுறது மட்டும் சரி அப்படி தானே என்றாள் வெகு நிதானமாய்.

 

 

“ஹேய் நானென்ன உன்னைய மாதிரி ஒழுக்கமில்லாதவளா, உன்னை பத்தி பேசிட்டேன்னு இம்புட்டு கோவம் வருது உனக்கு. அதுக்கு என் வீட்டுக்கே வந்து சட்டமா உட்கார்ந்துக்குவியா என்று முறைத்தாள் அவள்.

 

 

“சரி இப்போ என்ன நான் உங்க வீட்டுக்கு வந்திருக்க கூடாது அவ்வளவு தானே. அப்போ உங்க வீட்டு விஷயம் பேசலாம் சரி தானே… பேசிற வேண்டியது தான்… என்றவள் ஏதோ பேச வாயெடுக்கும் முன் “என் வீட்டு விஷயம் பேச நீ யாருடி… உன்னை மாதிரி யாரும் எங்க வீட்டுல இல்லை என்று வரிந்து கட்டிக்கொண்டு வந்தாள் அப்பெண்.

 

 

“எப்படி காலையில புல்லட்ல போற உங்க கணவர் தெருமுனையில இருக்கற பஸ் ஸ்டாப்ல இருக்கற பொண்ணை பார்த்து கையாட்டிட்டு போறாரே அது தான் ஒழுக்கமா!!

 

 

“இல்லை உங்க பொண்ணு பிரியா அன்னைக்கு அந்த பார்க்கு எதிர்க்க இருந்த ஐஸ்கிரீம் பார்லர்ல ஒரு பையனுக்கு ஐஸ்கிரீம் ஊட்டிட்டு இருந்துச்சே அது தான் ஒழுக்கமா!! என்று மெதுவான குரலில் சொன்னாள்.

 

 

ப்ரியாம்மாவிற்கு வந்ததே ஆத்திரம் “என் வீட்டை பத்தி பேச நீ யாருடி!! அவங்களை பத்தி உனக்கு என்ன தெரியும்.. நீ எப்படிடி அவங்களை பேசலாம் என்று ஆங்காரமாய் அவளருகே நெருங்கி வந்தவளை லாவகமாய் தடுத்தாள் மனோ.

 

 

“அதே தான் கேட்கறேன். உங்க வீட்டை பத்தி எனக்கும் தெரியாதுன்னா என்னை பத்தி மட்டும் உங்களுக்கு எப்படி தெரியும். என்னை பத்தி பேச நீங்க யாரு??

 

 

“என் ஒழுக்கத்தை உங்ககிட்ட நிருபிக்க வேண்டிய அவசியம் எனக்கென்ன?? என்னைபத்தி பேசுறதை இதோட நிறுத்திக்கோங்க!! இனி பேசினா நானும் நெறைய பேச வேண்டி வரும்

 

 

“உங்க வீட்டுல அத்துமீறி நான் நுழைஞ்சதுக்கே இவ்வளவு ஆத்திரம் உங்களுக்கு. என் விஷயத்துல அத்துமீறி நீங்க நுழைஞ்சதுக்கு எனக்கு எவ்வளவு ஆத்திரம் வரணும்

 

 

“இப்பவும் நான் நிதானமா தான் பேசிட்டு இருக்கேன். ஊர்ல யாரு எப்படி இருக்காங்கன்னு பார்க்கறதைவிட்டுட்டு முதல்ல உங்க குடும்பம் எப்படி இருக்கு என்னன்னு பாருங்க என்றவள் அவர்கள் வீட்டை விட்டு வெளியேற போனாள்.

 

 

வீட்டு வாசலில் அந்த பெண்மணியின் பெண் பிரியா திகைத்து போய் நின்றிருந்தாள். அவளை கண்டுவிட்ட மனோ அவளருகே சென்று ப்ரியாம்மாவின் காதில் விழுமாறு அப்பெண்ணிடம் பேசினாள்.

 

 

“மன்னிச்சுடும்மா ப்ரியா, உங்கம்மா கொஞ்சம் தேவையில்லமா பேசிட்டாங்க. அதுக்காக நான் உன்னை பத்தி தப்பா பேசிட்டேன். சாரிம்மா… என்று சொல்லி அவள் கையை லேசாய் அழுத்திச் சென்று விட்டாள்.

 

 

உண்மையிலேயே அப்பெண் பிரியாவை மனோ ஓரிரு முறை ஒரு பையனுடன் அவள் பார்த்திருக்கிறாள் தான். அவள் கணவரை பற்றி அவள் சொன்னதும் உண்மையே எதையும் திரித்து அவள் கூறவில்லை.

 

 

தன்னால் அச்சிறு பெண்ணிற்கு தேவையில்லாத கலக்கத்தை உண்டாக்க வேண்டாம் என்று எண்ணியே அவளிடம் மன்னிப்பை கேட்டுவிட்டு சென்றாள்.

 

 

அவள் அந்த விஷயத்தை பேசியதில் அப்பெண்ணின் வீட்டிற்கு விஷயம் தெரிந்தால் சற்று பயமும் அந்த பெண்ணிற்கு வரும் என்பதும் ஒரு காரணமே…

 

 

படியிறங்கி வந்தவள் கௌசல்யா வீட்டு வாசலில் நின்று அவளை அழைத்தாள். “அக்கா!! அக்கா!! என்றாள்.

 

 

“உள்ள வா மனோ!! என்று உள்ளிருந்தவாறே குரல் கொடுத்தாள் கௌசல்யா.

 

 

மனோவும் கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள். அவளை கண்டுவிட்ட அபராஜித் அவளை நோக்கி பாய்ந்து வந்தான்.

 

 

“டேய் கண்ணா உங்கம்மா வந்ததும் என்னை டீல்ல விட்டு போய்ட்ட பார்த்தியா என்ற கௌசல்யாவை பார்த்து திரும்பி ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு மனோவின் புடவையை பிடித்து எழுந்து நின்றான் குழந்தை.

 

அவனை வாரியணைத்து தூக்கிக் கொண்டாள் மனோ. “உட்காரு மனோ என்றாள் கௌசல்யா.

 

 

“சாரி மனோ அவங்க எப்பவும் இப்படி தான் ஊர் வம்புக்குன்னு அலையறவங்க. நல்லா படிச்சவங்க ஏன் தான் இதெல்லாம் புரிஞ்சுக்காம தேவையில்லாத பேச்சு பேசறாங்களோ!! என்று மனம் வருந்தினாள் கௌசல்யா.

 

 

“அதுக்கு நீங்க என்னக்கா பண்ணுவீங்க?? என்றாள் மனோ.

 

 

“ஜானகியம்மா எதையோ பேசிட்டு இருந்தாங்க, நடுவுல இந்த ப்ரியாம்மா வந்து கண்டதும் பேச ஆரம்பிச்சு என்னைய வேற உள்ள இழுத்து வைச்சுட்டாங்க

 

 

“இதுக்கு தான் நான் எப்பவும் வீட்டை விட்டு வெளிய வர்றதேயில்லை மனோ. அவர்க்கும் இவங்களோட பேசினா பிடிக்காது. எனக்குமே அவங்க இப்படி பேசுறது பிடிக்காது இருந்தாலும் அக்கம் பக்கத்து ஆளுங்களை பகைச்சுக்க வேண்டாமேன்னு பார்க்கறப்போ பேசிக்கிறது தான்

 

 

“எதுக்குக்கா எனக்கு விளக்கம் சொல்லிட்டு. எனக்கு தெரியாதா யாரு பேசுறவங்க யாரு பேசாதவங்கன்னு… நீங்க அதையெல்லாம் விடுங்க… குழந்தை உங்களை தொந்திரவு பண்ணிட்டானா!! என்றாள்

 

 

“உன் பிள்ளை உன்னை மாதிரி தான் மனோ. ரொம்ப சமத்து அவனுக்கு விளையாட ரெண்டு பொம்மை எடுத்து கொடுத்தேன். அவன் பாட்டுக்கு விளையாடிட்டு இருந்தான்

 

 

“பிஸ்கட் சாப்பிடுவானோன்னு கொடுத்து பார்த்தேன். வாங்கவே மாட்டேன்னுட்டான்… என்றாள் கௌசல்யா.

 

 

“தேங்க்ஸ்க்கா… நான் வீட்டுக்கு கிளம்பறேன் என்றுவிட்டு குழந்தையுடன் அவள் வீட்டை எட்டி நடை போட்டாள் மனோ.

 

முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்
அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்
இதயம் கொடு என வரம் கேட்டேன்
அதை கொடுத்தாள் உடனே எடுத்தே சென்றுவிட்டாள்

 

என்ற பாடலை தொலைக்காட்சியில் கேட்டதுமே பிரணவ் முடிவெடுத்துவிட்டான் இன்றைய அவனின் ரிங்டோன் அது தான் என்று.

 

 

ஏனோ பாடலின் ஒவ்வொரு வரியும் அவனுக்கு தன்னவளுடன் ஒத்துப்போவதாகவே தோன்றியது. மீண்டும் ஒரு முறை அந்த பாடலை கேட்க தோன்ற தன் கைபேசியில் அப்போது தான் பதிந்த அந்த பாடலை ஓடவிட்டு ரசித்து கேட்டான்.

 

 

இன்று ஒரு முக்கியமான வேலையாக அவன் வெளியே செல்ல வேண்டி இருந்தது. போவதற்கு முன் அலுவலகம் சென்று அதற்குரிய தகவல் அடங்கிய கோப்பை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதால் சீக்கிரமே அலுவலகம் வந்தடைந்தான்.

 

 

அவனுக்கு தேவையான தகவல்களை சேகரித்துக் கொண்டு அங்கிருந்து அவன் கிளம்பும் வேலை வந்து சேர்ந்தான் ராகவ்.

 

 

“டேய் மச்சான் என்னடா இன்னைக்கு சீக்கிரம் வந்திட்ட!! ஒரு வார்த்தை சொன்னியாடா என்கிட்ட முன்னாடியே!! நான் பாட்டுக்கு உன் வீட்டுக்கு போயிட்டு வந்தேன்

 

 

“போன் பண்ணாலும் எடுக்கலை. வேற வழியில்லாம ரொம்ப நாள் கழிச்சு என் பைக்கை தூசி தட்டி எடுத்திட்டு வந்தேன் தெரியுமா என்றான் ராகவ்.

 

 

“அடேய் உனக்கு என்ன ஞாபக மறதியா!! நம்ம வேலையில நீ இப்படி ஞாபக மறதியா இருந்தா எப்படி ராசா?? நேத்தே நான் சொன்னேன்ல இன்னைக்கு நான் சீக்கிரம் வந்திடுவேன்னு…

 

 

“நீ நான் சொன்னதை கவனிக்காம அந்த ஐடி ரூம்ல இருக்கற பொண்ணு இந்த பக்கம் கிராஸ் பண்ணுறதை பார்த்து ஜொள்ளுவிட்டுக்கிட்டு இருந்த!! என்று வாரினான் பிரணவ்.

 

 

“டேய் அதை வேற ஏன்டா ஞாபகப்படுத்துற!! ஆனா மச்சான் பொண்ணு செம பிகர்டா சும்மா என்னமா இருக்கா!! என்று வர்ணித்தான் ராகவ்.

 

 

“டேய் போதும் எனக்கு வேலையிருக்கு நான் கிளம்புறேன் நீ உட்கார்ந்துகிட்டே கனவு காணு. நான் போகும் போது கிரண்க்கு ஒரு போன் போட்டு சொல்லிடறேன் நீ இப்படி கனவுலோகத்துல இருக்கேன்னு என்று வெடிகுண்டு ஒன்றை வீசியவாறே சென்றான்.

 

 

“அடேய் அப்படி எதுவும் செஞ்சிடாதடா போன வாரம் ஷாப்பிங் போகும் போது தெரியாம ஒரு பொண்ணை பார்த்திட்டு நான் பட்ட அவஸ்தை இருக்கே அய்யய்யோ… ஒரு வாரம் மச்சான் ஒரு வாரமா எனக்கு அவ சோறே போடாம பட்டினி போட்டுட்டா!! என்றான் ராகவ் சோகமாய்.

 

 

பிரணவ் அவனை திரும்பி ஒரு பார்வை பார்க்க “சோறுன்னா சோறு இல்லை… இதெல்லாமா உன்கிட்ட விளக்கமா சொல்லுவாங்க… நீ சின்ன பையன்டா!! என்று சொல்லவும் பிரணவ் முறைத்தான்.

 

 

“ஆமா பிரணவ் இன்னைக்கு என்ன பாட்டு வைச்சிருக்க மச்சான். நான் கேட்கவேயில்லையே. நைட் எல்லாம் நீ இன்னைக்கு என்ன பாட்டு வைப்பேன்னு யோசிச்சுட்டே இருந்தேன்டா

 

 

பிரணவ் அவன் பேசுவதை கேட்டும் கேட்காமல் நடக்கவும் அவன் பின்னாலேயே வளவளத்துக் கொண்டு வந்தான் ராகவ்.

 

 

பிரணவ் அவனுக்கு பதில் சொல்லாமல் கதவை திறக்கப் போக அந்த பக்கமும் கதை யாரோ இழுக்க பிரணவ் இழுப்பதை நிறுத்திவிட்டான். பிரணவின் பின்னால் வந்த ராகவும் அப்படியே நின்றான்.

உள்ளே ஒரு பெண் நுழைந்துக் கொண்டிருந்தாள். அப்போது சரியாக பிரணவ் கைபேசி ஒலித்தது.

 

முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்

 

“டேய் இந்த பாட்டு தானா சூப்பர்டா… பாரேன் பாட்டுக்கும் எதிர்க்க வர்ற பொண்ணுக்கும் என்ன பொருத்தம்ல என்று பிரணவின் காதை கடித்தான் ராகவ்.

 

 

அவளை பார்த்ததும் பிரணவ் அதிர்ந்து நின்றான். ‘இவளா!! இவள் எங்கு இங்கு வந்தாள் என்பதாய் இருந்தது அவன் பார்வை.

 

 

எதிரில் நின்றவளோ ‘ஆஹா வா ராசா நீ இங்க தான் இருக்கியா!! வசமா மாட்டினியா!! எனக்கே டேக்கா கொடுக்கறியா!! என்று நினைத்துக் கொண்டு அவனை பார்த்து குறும்பாய் சிரித்தாள்.

 

 

அவளின் குறும்பு சிரிப்பை பார்த்தவனுக்கு உள்ளே கோபம் சுறுசுறுவென்று வந்தது. திறந்திருந்த கதவின் வழியே வேகமாய் வெளியேறி சென்று விட்டான் அவன்.

Advertisement