Advertisement

அத்தியாயம் – 7

 

 

அவனின் கேள்வியில் மொத்தமாய் அதிர்ந்தவள் “என்ன என்ன கேட்டீங்க?? என்றாள்.

 

 

“நான் உன்னை கஷ்டப்படுத்திடலையே என்றான்.

 

 

‘போன நிமிஷம் வரைக்கும் எனக்கு கஷ்டமாவேயில்லை. உங்களை  நம்பி என் வாழ்க்கையையே கொடுத்திருக்கேன். அதெல்லாம் உங்க மேல நம்பிக்கை இல்லாமலா

 

 

‘உங்க மேல நம்பிக்கை வரணும்ங்கறதுக்காக தான் நடந்துதா எல்லாமே!! கடைசியில் என்னை நீங்க புரிஞ்சுகிட்டது அவ்வளவு தானா என்று எண்ணியவளின் விழிகளில் நீர் நிறைந்தது.

 

 

“என்னாச்சு மித்ரா நான் கேட்டதுக்கு எதுவும் பதிலே இல்லை என்ற அவன் கேள்விக்கு பதில் சொல்ல விருப்பமில்லாமல் அமைதியாய் இருந்தாள்.

 

 

“உன் மௌனமே பதில்ன்னு இப்பவும் நான் எடுத்துக்கலாமா என்றான் அவன்.

 

 

‘நான் என்னன்னு பதில் சொல்றது. எப்படி சொன்னாலும் அது தப்பாகி போகும். உனக்காய் ஒரு நாள் என்னை புரியும், அன்னைக்கு இந்த மாதிரி பேசினதுக்கு நீங்க வருத்தப்படுவீங்க என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டு விரக்தி புன்னகை ஒன்றை சிந்திவிட்டு நகர்ந்தாள்.

 

 

தினமும் இரவில் அவளை நெருகியவன் பகலிலோ சாதாரணமாய் கூட அவளிடம் வந்து பேசியதில்லை. எதுவும் வேண்டுமென்றால் காவ்யாவோ அல்லது அவன் தம்பியோ தான் வந்து அவளிடம் சொல்லிச் செல்வர்.

 

 

‘இது தான் வாழ்க்கையா!! தன் வாழ்க்கை இப்படியே முடிந்துவிடுமா!! என்று அவளுக்கு உள்ளூர வலித்தது.

அன்று இரவு எப்போதும் போல் அவன் அவளை நெருங்கி வர மித்ரா விலகினாள். “என்னாச்சு என்றான் அவன்.

 

 

‘இவருக்கு இப்போ என்ன பதில் சொல்றது. நல்லபடியா பேசி பழகியிருந்தா என் நிலைமை புரிஞ்சிருக்கும். இல்லை நானாச்சும் சொல்லியிருப்பேன்

 

 

‘இப்போ மட்டும் எப்படி சொல்றது என்று எண்ணி அமைதியாய் இருந்தாள். “என்னாச்சுன்னு கேட்டேன் என்றான் அவன். “ஒரு நாலைஞ்சு நாளைக்கு வேண்டாமே என்றாள்.

 

 

“இதை சொல்லவா என்கிட்ட நீ தயங்குன. நானும் ஒரு தங்கையோட பிறந்தவன் தான் எனக்கும் புரியும். நீ வாய் திறந்து சொன்னா தானே எனக்கு தெரியும் என்றான்.

 

 

“தூங்கு என்றவன் அவள் இடையில் அணைவாய் கைப்போட்டே உறங்கினான். ‘இவன் என்ன மாதிரி மனிதன். என்னை புரிந்தவனா!! இல்லை புரிந்து கொள்ளாதவனா!! இல்லை புரிந்தும் புரியாமல் இருப்பவனா!! என்று எண்ணி தலை வலித்தது அவளுக்கு.

 

 

இந்நிலையில் சைதன்யன் ஊருக்கு போகும் நாள் நெருங்கி வந்தது. இன்னும் இரண்டு வாரத்தில் அவன் கிளம்பிவிடுவான் என்றிருக்க மித்ராவுக்கு இரண்டு நாட்ளாகவே தலையை சுற்றுவது போல் இருந்ததில் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்தாள்.

 

 

அறைக்குள் சுருண்டு படுத்திருந்தவளை தேடி வந்தார் மகேஸ்வரி “என்னாச்சு இங்க படுத்து கிடக்குற. உம் புருஷன் ஊருக்கு போகணும்ல அவனுக்கு தேவையானது எல்லாம் வாங்க கொள்ள கூடமாட ஒத்தாசையா இல்லாம இப்படி லீவ் போட்டு படுத்து கிடந்தா என்ன அர்த்தம் என்று முறைத்தார்.

 

 

‘ஹ்ம்ம் ஆமா அவர் என்னை கூப்பிட்டாரு நான் தான் வர மாட்டேன் சொல்லிட்டேன் என்று மனதிற்குள் குமைந்தவள் மெதுவாய் எழுந்து அமர்ந்தாள்.

 

 

“எனக்கு உடம்பு சரியில்லை அத்தை. தலை சுத்துது அதான் லீவ் போட்டு வீட்டில இருக்கேன்

 

 

“ஹ்ம்ம்… தலை சுத்துதா… என்று யோசித்தவர் “கடைசியா என்னைக்கு தலைக்கு ஊத்தின என்று விசாரித்துக்கொண்டு அவளருகில் வந்து நின்றார்.

 

 

அவள் சொல்லவும் “தள்ளி போயிருக்கே, டாக்டர் போய் பார்த்திட்டு வந்திடுங்க என்றார். ‘இவர் என்ன சொல்றார் என்று யோசித்தவளுக்கு அவர் சொல்ல வருவது புரியவும் ‘இது ஏன் நமக்கு தோணவேயில்லை என்று எண்ணினாள்.

 

 

“ஹ்ம்ம் போயிட்டு வர்றேன் அத்தை. வீட்டிலேயே டெஸ்ட் பண்ணிக்கற மாதிரி இப்போ ஒரு கிட் மெடிக்கல் ஷாப்ல கிடைக்குது. அதை வாங்கி டெஸ்ட் பண்ணி பார்த்திட்டு அப்புறம் டாக்டர் பார்க்கலாம் அத்தை

 

 

“அதை வாங்கி சீக்கிரம் பாரு. சின்னவனை அனுப்பறேன் என்ன வேணுமோ அவனை வாங்கிட்டு வரச்சொல்லு. ராஜா வந்ததும் டாக்டர் போய் பாருங்க என்று நகர்ந்தார் அவர்.

 

 

சைலேஷிடம் அவளுக்கு வேண்டியதை ஒரு தாளில் எழுதிக்கொடுத்து வாங்கி வாருமாறு சொல்லியனுப்பினாள். அதற்குள் அவள் மாமியார் பெரிய மகனை அழைத்து விபரத்தை கூறி உடனே வரவழைத்திருந்தார்.

 

 

அண்ணனும் தம்பியும் ஒரே நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்தனர்.வாசலிலேயே நின்றிருந்த மகேஸ்வரி “கண்ணா நீ வாங்கிட்டு வந்ததை அண்ணன்கிட்ட கொடுத்திரு என்று சொல்லவும் சைலேஷ் கையிலிருந்ததை அண்ணனிடம் கொடுத்துவிட்டு நகர்ந்தான்.

 

 

“என்னமா என் கையில எதுக்கு கொடுக்க சொன்னீங்க?? என்றான்.

 

 

“போய் உன் பொண்டாட்டிகிட்ட கொடு, என்ன ஏதுன்னு பார்த்திட்டு சாயங்காலமா நம்ம மலர்விழி டாக்டர்கிட்ட கூட்டிட்டு போயிட்டு வந்திடு. எனக்கென்னமோ எல்லாமே நல்ல விஷயமா தான் தெரியுது“சாயங்காலம் போடும் போது பைக்ல கூட்டிட்டு போய்டாதே ஆட்டோல பார்த்து பத்திரமா கூட்டிட்டு போய்டு என்றார்.

 

 

வெளியில் மாமியாரும் கணவனும் பேசுவது ஸ்பஷ்டமாய் அவள் காதில் விழுந்தது. ‘அத்தை நல்லவங்களா!! இல்லை கெட்டவங்களா!! இவங்களை புரிஞ்சுக்கவே முடியலையே என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே சைதன்யன் அவர்கள் அறைக்குள் நுழைந்திருந்தான்.

 

 

கையிலிருந்ததை எதுவும் சொல்லாமல் நீட்டினான். அவளோ வேண்டுமென்றே எதுவும் தெரியாது போல் என்ன இது என்பது போல் விழித்தாள்.

 

 

“சைலேஷ் வாங்கிட்டு வரச்சொன்னியே!! அது தான் பிடி எனவும் ‘அதை சொல்லாம கொள்ளாம நீட்டினா நாங்க வாங்குவோமா. இந்தா இப்போ நீயே சொல்லிட்டல்ல அப்படி வா ராசா வழிக்கு என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டு அவனிடம் இருந்ததை வாங்கிக் கொண்டாள்.

 

 

“காலையிலேயே என்கிட்ட சொல்லியிருக்கலாமே என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு வெளியில் சென்றுவிட்டான்.

 

 

‘நின்று கேட்டால் பதில் சொல்லலாம். நிற்காமல் சொல்லிச் சென்றால் என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டே குளியலறை நோக்கிச் சென்றாள்.

 

 

டெஸ்ட் பாசிடிவ் என்று வந்ததும் அவளுக்கு குதூகலமாய் இருந்தது. மனதிற்குள் ஒரு இனிய சாரல் தூவிக் கொண்டிருந்தது. சைதன்யனின் குழந்தை எங்கள் வாரிசு வரப் போகிறதா!! என்ற எண்ணமே அவளுக்கு இனித்தது.

 

 

இதை கேள்விப்பட்டால் தன் கணவன் சந்தோசப்படுவானா!! இல்லையா!! என்று எண்ண ஆரம்பித்தாள்.அவள் தன் போக்கில் எதையோ எண்ணிக்கொண்டிருக்க மகேஸ்வரி உள்ளே நுழைந்தார். “என்னாச்சு இன்னும்மா தெரியலை?? என்றார்.

“அது வந்து அத்தை டெஸ்ட் பணத்துல உறுதியாகிட்டுஎன்றாள்.

 

 

சட்டென்று அவர் முகம் மலர்ந்தது போல் இருந்தது அது பிரமையா இல்லை உண்மையா என்று அவளுக்கு புரியவில்லை. “சரி நீ ஜாக்கிரதையா இருந்துக்கோ. அவனை டாக்டர்கிட்ட கூட்டி போக சொல்லி இருக்கேன்

 

 

“இன்னைக்கே போயிட்டு வந்திடுங்க, நல்ல நாளா வேற இருக்கு என்று தன் போக்கில் சொல்லிக்கொண்டே வெளியில் சென்றுவிட்டார் அவர்.

 

 

சற்று நேரத்திற்கெல்லாம் சைதன்யன் உள்ளே வந்தான். அவளுக்கு அவனிடம் எப்படி விஷயத்தை சொல்ல என்று வெட்கமாக இருந்தது. சாதாரணம் போல் பேசி பழகியிருந்தால் சொல்லியிருப்பாளோ!! என்னவோ!!

 

 

அவனாகவும் கேட்பதாக தெரியவில்லை. நாமாக சொல்லவில்லை என்று நினைப்பானோ என்று எண்ணிக் கொண்டு “டெஸ்ட் பண்ணிட்டேன் பாசிடிவ் ரிசல்ட் தான் என்றாள்.

 

 

“ஹ்ம்ம் அம்மா சொன்னாங்க!! என்று முணுமுணுத்துவிட்டு பீரோவில் எதையோ தேடி எடுத்துக் கொண்டு போனான்.

 

 

‘எதுக்கு இப்படி எந்த ரியாக்சனும் கொடுக்காம போறாரு என்று மனதிற்குள் குமைந்து கொண்டாள். அதிசயத்திலும் அதிசயமாக மித்ராவின் மாமியார் மருமகளுக்காய் அல்வா செய்து ஊட்டினார்.

 

 

மித்ராவிற்கு ஏனோ அவள் அம்மாவின் நினைவு வந்தது. கூடவே அவர் பிடிவாதமாய் மகளிடம் பேசாமல் இருப்பதும் நினைவிற்கு வர அவள் அந்நினைவை புறந்தள்ள முயன்றாள்.

 

 

மாலையில் சொன்னது போலவே சைதன்யன் மித்ராவை மருத்துவமனை அழைத்து சென்றான். அம்மருத்துவரும் தன் பங்கிற்கு ஒரு முறை டெஸ்ட் செய்து உறுதி செய்துவிட்டு அவளுக்கு ஸ்கேனுக்கு எழுதிக் கொடுத்தார்.

இரண்டொரு நாளில் ஸ்கேன் செய்து பார்த்தனர், குழந்தையின் துடிப்பு நன்றாக இருப்பதாக கூறிவிட்டு அவளுக்கு தேவையான சத்து மாத்திரை எல்லாம் எழுதிக்கொடுத்து அனுப்பினார் மருத்துவர்.

 

 

மருத்துவமனையில் இருந்து வந்ததும் ஏதோ தோன்றியவனாக “ஊருக்கு போன் பண்ணி சொல்லிட்டியா?? என்றான்.

 

 

அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘ஒரு வேளை இவர் ஊருக்கு கிளம்பப் போவதை பற்றி சொல்லிவிட்டாயா என்று கேட்கிறாரோ என்று எண்ணினாள்.

 

 

“என்ன கேள்வி கேட்டா அப்பப்போ நீ யோசனைக்கு போய்டுற?? உன்னோட மைன்ட் வாய்ஸ் எல்லாம் கேட்டு முடிச்சிட்டியா?? என்றான் ஒரு மாதிரி குரலில்.

 

 

அந்த குரலில் இருந்தது நக்கலா!! இல்லை கிண்டலா!! என்பதை தான் அவளால் பிரித்தறிய முடியவில்லை. எப்போதும் அவளுக்கு அவள் தந்தையை பற்றி தான் இது போன்ற கணிப்புகள் இருக்கும்.

 

 

இவனும் நம் தந்தை போலவே என்ன நினைக்கிறான் என்று தெரியவில்லையே என்று மீண்டும் எண்ணத்திலேயே உழன்றாள். (இது போல தானே அவனுக்கும் இருக்கும் மித்து)

 

 

“மித்ரா உனக்கு காது சரியா கேட்கலையா?? என்னாச்சு உனக்கு நான் பாட்டுக்கு கேட்டுகிட்டே இருக்கேன். நீ எனக்கென்னன்னு மோட்டுவளையைப் பார்த்துகிட்டு இருக்க?? என்றான்.

 

 

“இல்லை என்ன… என்ன கேட்டீங்க?? என்றாள்.

 

 

“அப்போ கன்பார்ம் தான், அடுத்த முறை டாக்டர்கிட்ட போகும் போது காது சரியா கேட்கலைன்னு சொல்லி அதுக்கும் எதும் மருந்து வாங்கி போட்டுக்கோ என்றவன் “ஊருக்கு போன் பண்ணி சொல்லிட்டியான்னு கேட்டேன், அதுக்கு இன்னும் பதில் வரலை

 

 

“நீங்க அடுத்த வாரம் கிளம்புறீங்கன்னு அப்பாக்கிட்ட போன வாரம் பேசும் போதே சொல்லிட்டேங்க என்றாள்.

 

 

“நான் ஊருக்கு போறது பத்தி இப்போ கேட்கலை. நாம டாக்டர்கிட்ட போயிட்டு வந்த விஷயத்தை பத்தி போன் பண்ணி சொல்லிட்டியான்னு கேட்டேன் என்றான்.

 

 

அவளுக்கு அப்போது தான் உரைத்தது அதைப்பற்றி இன்னும் அவள் தந்தையிடம் சொல்லவில்லை என்று. ஆம் அவள் தான் ஈஸ்வரியிடம் பேசுவதில்லையே.

 

 

எப்போது பேசினாலும் சொக்கலிங்கத்திடம் மட்டும் பேசிவிட்டு வைத்துவிடுவாள். ஒரு நாளும் ஈஸ்வரியாக அவளுக்கு போன் செய்ததுமில்லை. மித்ராவும் அவரிடம் பேச வேண்டும் என்று கேட்டதுமில்லை.

 

 

“திரும்பவும் உன்னோட மைன்ட் வாய்ஸ்க்கு போயிட்டியா?? போன் பண்ணியா?? இல்லையா?? அதை மட்டும் சொல்லு. இல்லன்னா நான் இப்போ மாமாகிட்ட பேசுவேன் சொல்லிடறேன் என்றான்.

 

 

“இல்லை நான் போன் பண்ணலை அவங்களுக்கு. இனிமே தான் பேசணும், நீங்க பேசிட்டு எனக்கு கொடுங்க நானும் பேசறேன் என்றாள்.

 

 

“நீ உங்கப்பா அம்மாகிட்ட தனியா பேசி சொல்லிடு. நான் மாமாகிட்ட தனியா பேசிக்கறேன் என்று சொல்லிவிட்டு அவன் பாட்டுக்கு கிளம்பிவிட்டான்.

 

 

கோபம் கோபமாக வந்தது அவளுக்கு. அவனுக்கு என் மேல் பற்றில்லை என்று தெரியும், தெரிந்தும் தலையை கொடுத்தது நான் தான். இப்போது குத்துதே குடையுதே என்றால் என்ன செய்ய என்று தனக்கு தானே பேசிக் கொண்டாள். (சுஜியை இவள் மீண்டும் சந்திக்கும் வரை இப்படி அவள் தனியாக புலம்புவதை கேட்டுத்தான் தீரவேண்டும்)

 

 

அவன் சென்றதும் தந்தைக்கு அழைத்து விஷயத்தை சொல்ல அவருக்கோ தலைக்கால் புரியவில்லை. மருமகன் ஊருக்கு செல்வதற்கு முன் அன்னையுடன் வந்து பார்த்து செல்வதாக கூறிவிட்டு மகிழ்ச்சியாய் போனை வைத்தார் சொக்கலிங்கம்.

 

 

சொன்னது போலவே மறுவாரமே மகளை பார்க்கவும் மருமகனை வழியனுப்பவும் மனைவியுடன் வந்து சேர்ந்தார் அவர். பேசிக்கொள்ளவில்லை என்றாலும் மகளுக்கு பிடித்ததாய் சமைத்து போட்டார் ஈஸ்வரி.

 

 

சைதன்யன் ஊருக்கு போவதற்கு முதல் நாள் இரவு அவளிடம் பேச வேண்டும் என்றான். ‘நானா பேச மாட்டேன்னு சொன்னேன் என்று எப்போதும் போல் அவள் மனதிற்குள்ளாக பேசிக் கொண்டாள்.

 

 

“இப்படி நின்னுட்டே தான் கேட்க போறியா?? இல்லை உட்காருவியா?? என்றதும் தான் அவள் நின்றுக் கொண்டிருப்பதும் அவன் கட்டிலில் அமர்ந்திருப்பதும் புரிய சட்டென்று அவனருகே அமர்ந்தாள்.

 

 

“கொஞ்சம் மெதுவா உட்காரலாமே?? உள்ள ஒரு பேபி இருக்கு மறந்திடுச்சா?? என்றான்.

 

 

‘ஓ!! சார்க்கு இதெல்லாம் கூட ஞாபகமிருக்கா என்று மனதிற்குள் பேசிக்கொண்டாள்.

 

 

“பேசி முடிச்சிட்டியா??

 

 

“என்ன?? என்று விழித்தாள்.

 

 

“உன் மைன்ட் வாய்ஸ் கூட எல்லாம் பேசி முடிச்சிட்டியா?? இல்லை நீ எப்போ ப்ரீ ஆவேன்னு சொல்லு. நான் வெயிட் பண்ணுறேன் என்றான் கிண்டலாக.

 

 

“ஒண்ணுமில்லை நீங்க சொல்லுங்க ஏதோ ஒரு யோசனை என்றாள்.

 

 

“ஏதோ ஒரு யோசனை இல்லை எப்போமே உனக்கு யோசனை தான்

 

 

“சரி நான் சொல்ல வந்தது எல்லாம் சொல்லிடறேன். இதை பிடி என்றவன் அவளிடம் இரண்டு நோட்டு புத்தகத்தை கொடுத்தான்.

 

 

“இது என்ன?? என்றாள்

 

 

“அப்பாடா பேசிட்ட, எங்க வழக்கம் போல ட்ரீம் வேர்ல்ட்க்கு போய்டுவீயோன்னு நினைச்சேன்

 

 

“போதும் கிண்டல் என்னன்னு சொல்லுங்க என்றாள் லேசான கோபத்துடன்.

 

 

“திறந்து பார்க்கலாமே

 

 

அவள் திறந்து பார்க்கவும் அதில் வீட்டு கணக்கு வழக்குகள் இருப்பதை பார்த்தாள். “இதெல்லாம் உனக்காக தான் எழுதி வைச்சிருக்கேன்

 

 

“வீட்டுக்கு எவ்வளவு செலவாகுது!! என்ன வரவு!! யாருக்கு பாக்கி!! முக்கியமான போன் நம்பர் எல்லாமே இருக்கு

 

 

“இந்த மாசம் வாடகை வரை எல்லாமே கொடுத்தாச்சு

 

 

“இதுல இப்போதைக்கு யாருக்கும் பாக்கி இல்லை. இன்னும் இரண்டு நாள்ல மாசம் பிறக்குது இனி நீ தான் எல்லாமே பார்க்கணும்

 

 

“காவ்யா பீஸ், சைலேஷ் பீஸ், வாடகை, மளிகை எல்லாமே. உன் மேல சுமையை ஏத்துறேன்னு நினைக்காத. முதல்ல கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும்

 

 

“போக போக பழகிடும் உனக்கு. எங்க என்ன மாதிரி நடந்துக்கணும்ன்னு உனக்கே புரிஞ்சுடும். நீ இங்க வந்ததுமே இதெல்லாம் உன்னை பார்க்க சொல்லியிருப்பேன்

 

“வந்ததும் ரொம்ப பயமுறுத்த வேணாம்ன்னு தான் நானே எல்லாம் பண்ணிட்டேன். உனக்கு எதுவும் சந்தேகம்ன்னா எனக்கு போன் பண்ணு நான் சொல்றேன்

 

 

“சாரி நான் கேட்க மறந்திட்டேன். இந்த ரெண்டு மாசமும் என் சம்பள பணத்தை நீங்க எடுக்கவேயில்லையா?? நான் தான் அன்னைக்கே என்னோட கார்ட் உங்ககிட்ட கொடுத்துட்டேனே??

 

 

“நான் சம்பாதிக்கற வரை அதுக்கு அவசியமில்லைன்னு தான் எடுக்கலை. அடுத்த மாசத்துல இருந்து நீ தானே வீட்டை பார்த்துக்க போறே!! அப்புறம் உன்னோட ஏடிஎம் கார்ட் அன்னைக்கே உன்கிட்ட கொடுத்திட்டேன் நீ மறந்திட்டேன்னு நினைக்கிறேன்

 

 

“இல்லை உங்க… உங்களுக்கு ஊருக்கு போக செலவு, படிக்குறதுக்கு… இதெல்லாம் எப்படி?? என்று விழித்தாள்.

 

 

“இப்போவாச்சும் கேட்க தோணிச்சா உனக்கு??

 

 

“ஏன் அப்படி சொல்றீங்க?? எனக்கு எந்த அக்கறையும் இல்லாத மாதிரி பேசினா என்ன அர்த்தம் என்றவளின் பேச்சில் கோபம் நன்றாகவே தெரிந்தது.

 

 

“உனக்கு அக்கறையில்லைன்னு நான் சொல்லவேயில்லை. இந்த கேள்வியை நீ எப்பவோ கேட்டிருப்பேன்னு நினைச்சேன். வேற ஒண்ணுமில்லை

 

 

“என்னோட படிப்புக்கான செலவு எங்கப்பாவோட சம்பாத்தியமா இருக்கணும்ன்னு நினைச்சேன். ஏன்னா இது அவரோட கனவு அதனால காவ்யா பேர்ல எங்கப்பா போட்டிருந்த சேமிப்பை எடுத்து தான் யூஸ் பண்ணிட்டு இருக்கேன்

 

 

“நான் படிச்சு சம்பாதிச்சிட்டா அப்புறம் அவளுக்கு என்ன செய்யணுமோ நல்லபடியா செஞ்சிடுவேன். அந்த நம்பிக்கையில தான் அதை எடுத்தேன்

 

‘இவனுக்கு இப்படி ஒரு லட்சியமா என்று கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது அவளுக்கு. ஒரு புறம் வருத்தமாகவும் இருந்தது ‘அப்போ நான் மட்டும் வேறா என்று.

 

 

“என்ன எதுவும் பேச மாட்டேங்குற??

 

 

“ஒண்ணுமில்லை

 

 

“டாக்டர்க்கு மருந்துக்கு எல்லாம் செலவாகும். அதுக்கெல்லாம் செலவழிக்க யோசிக்க வேண்டாம். பணம் பத்தலைன்னா என்கிட்ட கேளு. என்கிட்ட இருப்பு கொஞ்சமிருக்கு

 

 

“மத்தபடி மற்ற செலவு எல்லாம் நீ பார்த்து பண்ணிக்கோ. காவ்யாவும் சைலேஷும் காசு கேட்டா என்ன ஏதுன்னு விசாரிச்சு கொடு. படிக்கற பசங்க படிப்புல கவனமிருக்கட்டும். கண்டதும் செலவு பண்ண கேட்டா கொடுக்க வேண்டாம் என்று நீளமாக அவளுக்கு அறிவுரை செய்தான்.

 

 

சைதன்யன் ரயில் நிலையத்திற்கு செல்வதற்கு முன்பு அவர்கள் அறைக்கு வந்தான். மித்ராவிற்கு தான் அவன் பிரிந்து செல்வது பெரும் துயராக இருந்தது.

 

 

சரியாக பேசிக்கொள்ளவில்லை என்றாலும் ஒரே அறையிலேயே அவனுடன் கழித்த ஒவ்வொரு நிமிடமும் அவள் நினைவு பெட்டகத்தில் சேமிப்பாய் இருந்தது.

 

 

எல்லோரிடம் ஆயிரம் அறிவுரைகள் சொல்லி கிளம்பியவன் அவளிடம் தனியாக வந்து சொல்லிக் கொள்ளவில்லை என்று அவளுக்கு கவலையாக இருந்தது.

 

 

முதல் நாள் அவளிடம் பொறுப்பை ஒப்படைக்கவென்று பேசியது தான். மற்றபடி உன் உடம்பை பார்த்துக்கொள் குழந்தையை பார்த்துக் கொள் என்றெல்லாம் சொல்லுவான் என்று எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றமே!!

 

 

பிடித்த மனைவியாக இல்லாவிட்டாலும் அவனின் உயிர் சுமக்கும் அவளிடம் ஒரு வார்த்தை அவளை பற்றி அக்கறையாக பேசியிருக்கலாம் கிளம்புமுன் வந்து தன்னிடம் பேசுவானா என்று ஏங்கியது அவள் உள்ளம்.

 

 

அவள் எண்ணம் போல் அவன் வந்தான். “நான் ஊருக்கு கிளம்பறேன். எல்லாரையும் பத்திரமா பார்த்துக்கோ, உன்னை நம்பி அவங்களையும் அவங்களை நம்பி உன்னையும் விட்டுட்டு போறேன்

 

 

“நான் அடிக்கடி எல்லாம் வரமுடியாது. முடிஞ்சவரைக்கும் வந்து போறேன். உனக்கு ஆபீஸ் போய் வேலை பார்க்க முடியாதுன்னா, வீட்டில இருந்து பார்க்கற மாதிரி வைச்சுக்கோ

 

 

“வேலைக்கு ஆள் வேணா போட்டுக்கோ. பார்த்து இருந்துக்கோ. நான் கிளம்புறேன், அங்க போனதும் வேற போன் நம்பர் வாங்கிடுவேன். ஊருக்கு போனதும் நம்பர் தரேன் என்றுவிட்டு கிளம்பினான் அவன்.

 

 

அவளுக்கு தான் துக்கம் தொண்டையை அடைத்தது. பேசும் போது அவன் குரலில் தடுமாற்றம் இருந்தது போல் ஒரு உணர்வு. நிமிர்ந்து அவனை பார்த்தாலோ எந்த உணர்ச்சியுமே அதில் தெரியவில்லை.

 

 

ஒரு வழியாக அவன் ஊருக்கு கிளம்பிக் சென்றுவிட மறுநாளே அவள் அன்னையும் தந்தையும் அவளுக்கு ஓராயிரம் அறிவுரைகள் சொல்லி கிளம்பினர்.

 

 

ஈஸ்வரி மகளிடம் நேரிடையாக பேசாவிடினும் மகேஸ்வரியிடம் பேசுவது போல் ஜாடை மாடையாக மகளிடம் சொல்ல வந்ததை சொல்லிவிட்டார்.

Advertisement