UUU 3 - 3

Advertisement

Priyaasai

Active Member
View attachment 10512

"கேட்கிறது காதுல விழலை..??" என்று வைதேகி உரக்க கேட்கவும் சரணையே பார்த்துகொண்டு அமர்ந்திருந்தவளின் உடலில் சிறு நடுக்கம் மெல்ல அவர் புறம் திரும்பியவள்,

'சோ... சொல்லுங்கம்மா" என்று மெல்லிய குரலில் கேட்க,

"என்னத்த சொல்ல சொல்ற..??" என்று அவளை உறுத்து விழித்தவர், "புருஷனை பக்கத்துல வச்சிக்கிட்டு அப்படி என்ன கனவு உனக்கு..??" என்று கடிய,

அவர் குரலே கீர்த்தியை பயமுறுத்த இருகரங்களிலும் வியர்வை ஆறாக பெருக படபடப்பு குறைய வேண்டி கரங்களை ஒன்றோடு ஒன்று கோர்த்தவாறே அவரை பார்த்தவளுக்கு பேச்சு வரவில்ல்லை.

“வைதேகி அவளே கொஞ்சம் பதட்டமா இருக்கா.., நீ ஏன் இன்னும் பயமுறுத்துற..? மெதுவா பேசு” என்று வளர்மதி கீர்த்தியின் நிலை உணர்ந்து பரிந்து பேச,

"யாரு இவ பதட்டமா இருக்காளா..??” என்று கீர்த்தியை ஏளனமாக பார்த்தவர் பின்,

"நம்புற மாதிரி பேசு வளர்..!! அன்னைக்கு அப்பா இறந்தப்போ இவ வீட்டுக்கு தேடி போன தம்பியை அத்தனை பேர் முன்னாடி அறைஞ்சதோட இல்லாம அந்த கேவலமானவனுக்காக சரணை என்னல்லாம் பேசினான்னு உனக்கு தெரியுமா..??" என்று ஆவேசமாக கேட்க,

கீர்த்தி சரணை அடித்தாள் என்பதில் வளர்மதி நம்பாமல் வைதேகியை பார்க்க,

வளர்மதியின் பார்வையை உணர்ந்த வைதேகி "என்ன நான் சொல்றதை நம்ப முடியலையா..??? எந்த புத்துல எந்த பாம்பு இருக்கும்ன்னு யாருக்கு தெரியும் வளர்" என்று கீர்த்தியை வெறுப்புடன் பார்த்தவர்

இதோ ஒன்னும் தெரியாத பச்ச குழந்தை மாதிரி மூஞ்சியை வச்சிட்டு இருக்க இவ தான் அன்னைக்கு சரணை அடிச்சா, அது மட்டும் இல்லை தம்பி அத்தனை முறை கூப்பிட்டும் அவனை வேண்டாம்ன்னு சொல்லி வர மறுத்துட்டா...!!

"சித்தி இப்போ எதுக்கு முடிஞ்சி போனதை பத்தி பேசுறிங்க..?? இந்த நேரத்துல இந்த பேச்சு தேவையா..??" என்று வைதேகியின் பேச்சு கீர்த்தியை மேலும் காயப்படுத்துவதை உணர்ந்து அலர் அவரை கண்டிக்க,

இந்த நேரத்துல பேசாம வேற எப்ப பேசனும்ன்னு சொல்ற அமுலு..? என்று அவளிடம் கேட்டவர் வளர்மதி புறம் திரும்பி, "மாமாவை பத்தியும் அவர் கோபத்தை பத்தியும் எங்க எல்லாருக்கும் நல்லா தெரியும் உன்கிட்ட இதை சொல்லி தேவை இல்லாம உன் குடும்பத்துல பிரச்சனை வேண்டாம்ன்னு தான் நாங்க எதையும் சொல்லல, ஆனா இப்போ தலைக்கு மேல வெள்ளம் போன பிறகு எதையும் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை"

"இதுக்கு மேலயும் இவ இஷ்டத்துக்கு போனா என் தம்பியை நடுத்தெருவுல நிறுத்திடுவாளோன்னு பயமா இருக்கு.." என்று வேதனையுடன் சரண் சென்ற வழியை பார்த்தவர் தொடர்ந்து,

"அன்னைக்கு மட்டும் இல்ல ரெண்டு நாள் முன்ன கல்யாணத்துக்கு மாமா சம்மதம் கேட்டப்பவும் தம்பியை வேண்டாம்ன்னு சொல்றா.., இவ மனசுல என்ன நெனச்சிட்டு இருக்கானு எனக்கு சத்தியமா புரியலை வளர்.., அப்போ இவளையே நெனச்சி சரண் இத்தனை வருஷ வாழ்க்கையை தொலைச்சதுக்கு என்ன அர்த்தம்..!! அவன் பாரின்ல இருந்தப்ப நாம எல்லாம் எத்தனை முறை கல்யாண பேச்சு எடுத்து இருப்போம் அப்பவும் பிடிகொடுக்கமா இருந்தது எல்லாம் யாரால இவளால தானே..??” என்று வெறுப்புடன் கீர்த்தியை பார்த்தவர்,

இவளுக்காக ஒருத்தன் வாழ்க்கையையே தொலைச்சிட்டு நிற்கிறான் அந்த கவலை இவளுக்கு இருக்கா..?? சரியான நேரத்துல அவனுக்கு கல்யாணம் ஆகி இருந்தா இந்நேரத்துக்கு அவனுக்கு இரண்டு பசங்க இருந்திருப்பாங்க இப்படி முப்பத்தி மூணு வயசு வரை தனக்குன்னு குடும்பத்தை அமைச்சிக்காம ஊர் பக்கமே வராம அமெரிக்கா, சென்னைன்னு நாடோடியா திரிஞ்சி இருக்கமாட்டான் என்று ஆதங்கத்துடன் கூறியவர்,

"அம்மா அவனை பத்தின கவலையால படுத்த படுக்கையா ஆனப்போ கூட அவன் இவளை தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க தயாரா இல்லையே வளர். அதேபோல அவன் ஊர் பக்கமே வராம போனதுக்கு யார் காரணம்..?? இவளும் இவ குடும்பமும் தானே..??" என்று கீர்த்தியை பார்க்க அவள் கண்களில் எல்லையில்லா குற்ற உணர்வு மேலோங்கியது.

மீண்டும் வளரிடம் திரும்பியவர், "இதோ பார் வளர் இவ உன் மச்சினன் பொண்ணுன்ற கதை எல்லாம் நேத்தோட முடிஞ்சது, இன்னைக்கு சரண் தாலி இவ கழுத்துல ஏறின நிமிஷத்துல இருந்து இனி அவ நம்ம அம்மாக்கு மருமகள், நமக்கு தம்பி பொண்டாட்டி..!! நம்ம நாலு போரோட குடும்பத்தையும் பார்க்கிற கடமை இவளுக்கு இருக்கு. காதலிச்ச நம்ம தம்பியையே வேண்டாம்ன்னு சொன்னவ நாளைக்கு நம்மையும் வீட்டுக்கு வரவேண்டாம்ன்னு சொல்ல மாட்டான்னு என்ன நிச்சயம்..??” என்றிட,

அவளை குறித்த வைதேகியின் கணிப்பை கேட்டு கீர்த்திக்கு திக்கென்றானது..!! பதறிக்கொண்டு அவரை பார்த்தவள் தான் அப்படி பட்டவள் இல்லை என்று அவருக்கு புரிய வைக்கும் நோக்கத்தோடு கீர்த்தி பேச முற்ப்பட அருகே இருந்த அலர் அவள் கரத்தை பிடித்து தடுத்து வேண்டாம் எதுவும் பேசாதே என்று அவளை நிறுத்தி இருந்தாள்.

ஆற்றாமையில் பேசிக்கொண்டு இருப்பவர்களிடம் இவள் விளக்கம் அளித்தாலும் அதை அவர்கள் ஏற்க போவதில்லை அதோடு கீர்த்தி பேசி மேலும் சிக்கல் ஆக்கவேண்டாம் என்றே அலர் தடுத்திருந்தாள்.

வைதேகி பேசிக்கொண்டு செல்வதை பார்த்த கீர்த்திக்கு சகலமும் ஒடுங்கி போனது இருக்காதா பின்னே..!! இன்று தான் சரணின் உறவுகளை முதல் முறையாக பார்க்கிறாள் அன்று சரண் அவளை தேடி வந்த போது அவன் பின்னே வந்த வைதேகியை அவள் எங்கே கவனித்தாள்..?? அன்று அவள் கவனம் முழுக்க தன் தந்தை மீதல்லவா இருந்தது. ஆனால் நெருங்கிய உறவுகளிடம் முதல் சந்திப்பிலேயே அவர்களின் வெறுப்பிற்கு தன்னை ஆளாக்கிய தந்தையின் சூழ்ச்சி குறித்து அவர்களிடம் எங்கனம் அவளும் விளக்க அதனால் காலத்தின் போக்கில் இழுபட்டு செல்வது தான் தன் விதி என்று அமைதி காத்து அமர்ந்திருந்தாள்.

“இவ்ளோ சொல்லியும் எப்படி அழுத்தமா உட்காந்திருக்கா பாரு” என்று கீர்த்தியை சுட்டி காண்பித்தவர் வளர்மதியின் முன் இருகரங்களையும் கூப்பி,

“உன்னை கெஞ்சி கேட்கிறேன் வளர் இவளுக்காக பரிஞ்சி பேசி சப்பகட்டு கட்டி இனியும் தம்பி வாழ்க்கையை பாழாக்கிடாத !! போதும் இவ குடும்பத்தால அவன் பட்டதெல்லாம் போதும்",

'எனக்கு என் தம்பி முக்கியம்' என்று வைதேகி நா தழுதழுக்க கூற, உடன் இருந்த சரணின் மற்ற தமக்கைகளும் அதை ஆமோதித்து வைதேகியின் புறம் நின்றனர்.

வளர்மதிக்கு கீர்த்தி தன் தம்பியை பல வருடங்களுக்கு முன்பே மறுத்திருக்கிறாள் என்ற செய்தி புதிது..!!

அதை ஜீரணிக்க முடியாமல் உடனே கீர்த்தியின் புறம் திரும்பியவர் "என்னடா கீர்த்தி வைதேகி சொல்றது நிஜமா..?? அப்போ அர்த்தமே இல்லாம தான் என் தம்பி உனக்காக இத்தனை வருஷ வாழ்க்கையை தொலைச்சி இருக்கானா..??" என்று வேதனையுடன் கேட்க,

அன்றைய நிகழ்வில் தந்தையால் ஏற்பட்ட குளறுபடியில் அவளே சரணை தன் வாழ்வை விட்டு போக சொன்ன அவலத்தை எண்ணி கீர்த்திக்கு தொண்டையை அடைத்து கொண்டு வந்தது..., கண்களை முட்டி நின்ற கண்ணீருடன் வளர்மதியை பார்த்தவள், 'ஆம்' என்பதாக தலை அசைக்க,

வளர்மதியின் முகத்தில் சிறு அதிர்வு..!!

இருக்காதா பின்னே...!! இத்தனை வருடமாக திருமணம் செய்து கொள்ள சொல்லி சரணை அனைவரும் வற்புறுத்திய போதும் திடமாக அதை மறுத்தது எல்லாம் அவனை வேண்டாம் என்று தூக்கி எறிந்த ஒருத்திக்காகவா..?? நிச்சயம் இல்லாத வாழ்க்கையை எதிர்பார்த்து காத்திருந்த சரணின் காதலை கண்டு வளர்மதிக்கு பெரும் வியப்பு..!!

ஒருவேளை இன்று கீர்த்தியுடன் திருமணம் நடக்காமல் போயிருந்தால் கீர்த்தியின் நினைவில் தன் தம்பி வாழ்நாள் முழுக்க ஒற்றையாகவே கழித்திருப்பானோ என்ற எண்ணமே அவரை அச்சுறுத்தியது. மனதில் எழுந்த ஒருவித அச்சத்துடன் அதே கேள்வியை கண்களில் தேக்கி வைதேகியை பார்க்க வளர்மதியின் எண்ண ஓட்டத்தை உணர்ந்த அவரும் 'ஆம்' என்பதாக கண்களை மூடி திறந்தார்.

*


தலையை அழுந்த கோதியவாறே அறையை விட்டு வெளியே சென்ற சரண் எதிர்பட்டவர்களின் கேள்விக்கு பதிலளிக்க பிடிக்காமல் நேரே மாடிக்கு சென்று விட்டான். இப்போது அவனுக்கு தேவை தனிமை, யாரின் குறுக்கீடும் இல்லாமல் தன்னை சமன்படுத்த வேண்டிய கட்டாயத்தாலேயே மாடிக்கு வந்துவிட்டான். முழுக்கை சட்டையை முழங்கை வரை மடித்து ஏற்றியவாறு பல நிமிடங்கள் ஆற்றாமையில் நடை பயின்றவன் பின் அங்கிருந்த கைபிடி சுவரில் கரங்களை ஊன்றி இறுகி போய் நின்றான்.

மனம் முழுக்க கீர்த்தியையே வட்டமிட்டு கொண்டிருக்க கடந்த சில நாட்களாகவே தன்னை மறுத்து வருபவளின் இன்றைய உதாசீனத்தை எத்தனை முயன்றும் அவனால் தாங்க முடியவில்லை. அதுவும் தான் வளர்த்த பிள்ளைகளின் முன்னிலையில் அவள் நடந்து கொண்ட விதம் அவள் அவன் மீது கொண்டிருந்த காதலின் மீதே கேள்வி எழுப்பி இருந்தது.

ஆம் அவனிடம் பணிக்கு சேர்ந்ததில் இருந்தே ஏதேனும் சந்தேகம் என்றால் அவள் முதலில் தேடுவது அவனை தான், அதில் மட்டுமா அதன் பின்பான அவர்கள் காதலித்த காலத்தில் கூட எந்த இக்கட்டான சூழலாக இருந்தாலும் அவள் தந்தையை விடுத்து சரணிடம் தஞ்சம் புகுந்து அவனிடம் ஆறுதல் தேடவுமே விருப்பம் கொண்டிருந்தவள் ப்ரீத்தி விடயத்தில் இத்தனை பெரிய முடிவு எடுக்கும் முன் அவனை பற்றிய நினைவு இல்லாமல் போனதில் அவன் காதல் மனம் வெகுவாக அடிபட்டு போனது.

பெங்களூரு செல்லும் முன் தன்னிடம் ஒரு வார்த்தை கூற முடியாத அளவு அவன் வேண்டாதவனாகி போனானா அல்லது இவனிடம் கூறினால் பெரிதாக என்ன செய்து விடுவான் என்ற அலட்சியமா என்று மேலும் மனமெனும் குரங்கு எங்கெங்கோ தாவுவதை கண்டவன் அதிலிருந்து தப்பிக்கும் முயற்சியாக தன் கவனத்தை திசை திருப்பி கீழே நடக்கும் பந்தியை கவனிக்க தொடங்க அங்கு வந்து சேர்ந்திருந்தார் தீபிகா.

'மாப்பிள்ளை'

அவர் வரவை அறிந்த சரணின் உடல் தளர்ந்து இயல்பிற்கு திரும்பினாலும் கீர்த்தி மீது கொண்டிருந்த அனல் குறையாத நிலையில் பார்வையை மாற்றாமலே 'சொல்லுங்க' என்றான்.

சரண் திரும்பாமல் இருப்பதை கண்டு "நா... நான் உங்க கிட்ட பேசணும் என் பொண்ணு பத்.." என்றபோதே அவர் புறம் திரும்பியவனின் பார்வையில் என்ன இருந்தது என்று அவருக்கு புரியவில்லை.

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்களே அதை சரண் விடயத்தில் கண்டிருப்பவர் ஆயிற்றே தீபிகா ஆம் ஒரு சில முறை என்றாலும் அவர் கண்டது என்னவோ புன்னகை மாறா சரணை தான் ஆனால் என்று பிரகாசத்தால் அவன் வாழ்க்கை புரட்டி போடபட்டதோ அப்போது தங்கள் வீட்டிலும் சென்னையிலும் பிரகாசத்தின் மீதான சரணின் கோபத்தை அது பிரகாசத்திடம் ஏற்படுத்திய சேதாரத்தை நேரில் கண்டிருந்தவருக்கு இப்போது மகள் மீதான அவனது கோபம் எங்கே அவளையும் காயபடுத்தி விடுமோ என்ற பயம் அதிகரிக்க அவனை தேடி வந்து விட்டார்.

பின்னே எதையெதையோ எண்ணி குழப்பி கொண்டு கீர்த்தி திருமணதிற்கு சம்மதிக்காததில் தொடங்கி இப்போது சரணிடம் நடந்து கொண்ட முறையால் அவனது சினம் எத்தகைய உச்ச நிலையை அடைந்து இருக்கும் என்பதை அறியாதவரா அவர்...??

என்னதான் சுமந்து பெறவில்லை என்றாலும் கீர்த்தியை வளர்த்த அவருக்கு தானே தெரியும் தன் மகளை பற்றி..!! இயல்பிலேயே இளகிய மனம் கொண்டு யாரிடமும் அதிர்ந்து பேசாதவளாயினும் சில வருடங்களுக்கு முன் அடுத்தவர்களிடம் தன் கருத்துக்களை எடுத்து உரைப்பதில் எத்தனை திடமாக இருந்த மகள் காலம் செய்த கோலத்தில் எந்த தவறுமே செய்யாமல் மற்றவரின் பாவங்களுக்கும் வஞ்சினத்திற்க்கும் பிணையாகி சிறகு ஒடிந்த கிளியாக மனம் உடைந்த நிலையில் வாழும் ஆசையே இல்லாமல் ஒடுங்கி தடுமாறி கொண்டிருகிறாள் என்பது..!!

பிரகாசத்தின் மகளாக இருந்தாலும் அவரது கொடூர குணங்கள் ஏதுமின்றி மற்றவரின் நன்மையை மட்டுமே நாடுபவளாயிற்றே கீர்த்தி. அப்படி இருப்பவளை சரணின் தமக்கைகள் தவறாக புரிந்து கொண்டிருப்பதில் அவளது வாழ்க்கையின் புது அத்தியாயம் இத்தகைய கசடுடன் தொடங்குதில் அவருக்கு உடன்பாடு இல்லை. அதனாலேயே மகளின் நிலையை சரணுக்கு புரியவைத்துவிடும் வேகம் அவரிடம்.

சரண் சம்மதமாக பார்த்ததும் குரலை செருமி, "என் பொண்ணு பண்ணின தப்புக்கு முதல்ல மன்னிச்சிடுங்க" என்று கை கூப்பியவர், "நாங்க யாருமே இப்படி எல்லாம் நடக்கும்ன்னு எதிர்பார்க்கலை மாப்பிள்ளை..., அதுவும் கீர்த்தியால அவங்க அப்பா பண்ணின துரோகத்துல இருந்து வெளியே வர முடியலை அந்த அளவு பாசம் வச்சிட்டா" என்ற போதே சரணின் விழிகளில் கனல் கனன்றது.

பின்னே சரணே மறக்க நினைக்கும் விடயத்தை அவர் நினைவூட்ட கீர்த்தியின் பாசம் எந்த நிலைக்கு சென்று தன்னை அன்னியபடுத்தி இருக்கிறது என்பதை அசை போட தொடங்கி இருந்தான்.

ஆம் பெரும்பாலும் தம்பதியருக்கு இடையிலான கருத்து மோதல்களோ, புரிதலின்மையோ அவர்கள் இருவரும் அமர்ந்து பேசினாலே தீர்ந்துவிடும் மூன்றாம் மனிதர் அது தாயாகவே இருந்தாலும் பலநேரங்களில் அவர்களின் தலையீடு தேவை இல்லாத பிரச்சனைகளில் கொண்டு விட்டுவிடும் இங்கும் அதுவே தான் நடந்தது.

அவன் மனநிலை அறியாத தீபிகா மேலும் தொடர்ந்து கொண்டே செல்ல சரணின் கோபத்தை குறைக்க தீபிகா எடுத்த முயற்சி அதை பன்மடங்காக அதிகரிக்க செய்திருந்தது என்றால் மிகையல்ல.

சரணின் விழிகளில் சினம் மண்டிக்கிடப்பதை கண்டவர், "அவர் உங்களுக்கு பண்ணினது மன்னிக்க முடியாத தப்பு மாப்பிள்ளை நான் ஒத்துக்குறேன் ஆனா அதுக்காக என் பொண்ண உங்க அக்காக்கள் .." என்று மேலும் பேசிக்கொண்டே செல்ல ஒரு கட்டத்தில் கரம் உயர்த்தி அவர் பேச்சை தடுத்து நிறுத்தியவன்,

"அப்படி உங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தா உங்க பொண்ணை உங்க கூடவே வச்சிக்கலாம் நிர்பந்தத்துல என கூட அனுப்ப வேண்டிய அவசியமில்லை. எப்போ உங்களுக்கு என் மேலயும் என் குடும்பத்து மேலயும் நம்பிக்கை வருதோ அப்போ அனுப்புங்க " என்று ஒவ்வொரு வார்த்தையையும் சரண் நிறுத்தி நிதானமாக இறுகிய குரலில் கூறினாலும் அதில் மறைந்திருந்த மறைபொருளை தீபிகா சரியாகவே கண்டு கொண்டார்.

அதற்கு மேலும் பேசும் துணிவு தீபிகாவிற்கு இல்லை. இருந்திருந்து இருபத்தி எட்டு வயதில் மகளுக்கு திருமணம் நடந்திருக்கும் நிலையில் இனியும் அவளை வீட்டோடு வைத்து கொள்ளவா அத்தனை பேச்சுக்களும் என்று எண்ணியவர் இருவருமே காதலித்தவர்கள் அவர்களுக்கிடையில் இல்லாத புரிதலா...??? மருமகனின் கோபத்தை மகளே குறைத்து விடுவாள் என்ற போது தன் பேச்சு அதிகப்படியே என்று உணர்ந்தவர் அவனிடம் மன்னிப்பை வேண்டி பின் அமைதியாக கீழே சென்றுவிட்டார்.

**


அதன் பின் மணமக்கள் இருவரையும் உணவருந்த அழைக்க வெளியில் வெற்றி, விஷ்வா, எழிலுடன் பேசிக்கொண்டிருந்த சரணை அழைக்க, அவனோ 'பசி இல்லை' என்று கூறி அனுப்பிவிட்டான்.

அதை அறிந்து அவனின் நான்கு தமக்கைகளில் இருந்து தீபிகா வரை அனைவரும் வந்து எத்தனை வற்புறுத்தி அழைத்தும் உணவருந்த மறுத்து விட்டான்.

அவன் மறுப்பை அறிந்த கீர்த்தியின் நிலையை சொல்லவும் வேண்டுமா..??

அவளால் தான் சரண் உணவை தவிர்த்தான் என்று உறுதியாக நம்பியவளுக்கு நேற்று இரவில் இருந்தே திருமணம் குறித்த பயத்தில் உண்ணாமல் போனதன் விளைவாக சிறுகுடலை பெருகுடல் தின்று கொண்டிருக்க சரண் மறுத்ததை அறிந்ததும் அதுநேரம் வரை இருந்த பசி வந்த இடம் தெரியாமல் பறந்து போனது.

அலரும் சரண்யாவும் கீர்த்தியை எத்தனை வற்புறுத்தியும் அவளும் உணவை மறுத்துவிட்டாள்.

திருமணத்திற்க்காக வந்திருந்த கூட்டம் மெல்ல கலைந்து கொண்டிருந்த நிலையில் குடும்ப அங்கத்தினருடன் புகைப்படம் எடுக்க வேண்டி இருவரும் ஒன்றாக இணைந்து நின்ற போதும் இரு மனங்களுக்கிடையிலான இடைவெளி அதிகரித்து இருப்பதை கண்ட கீர்த்திக்கு நெஞ்சம் வெதும்பி போனது...,

அனைவருக்கும் திருமணத்திற்கு பின் சிக்கல் வருமென்றால் இங்கே பெரும் மனசிக்கலுக்கு இடையில் தான் அவளுக்கு திருமணமே நடைபெற்று இருப்பதை என்னவென்று சொல்ல..!!

நாதன்-வளர்மதியை தொடர்ந்து சரணின் மற்ற தமக்கைகளின் குடும்பத்தினர் உட்பட அனைவருடனும் புகைப்படம் எடுத்து முடிப்பதற்குள்ளாகவே சரியான உறக்கம், உணவு இல்லாமல் தொடர்ந்து நின்றிருந்ததில் கீர்த்தி பெரிதும் சோர்ந்து போனாள்.

களைப்பு மிகுதியில் ஏதேனும் குடித்தால் தான் தொடர்ந்து நிற்ப்பதற்க்கான தெம்பு கிடைக்கும் என்று தோன்ற அருகே இருந்த சரணை அழைத்தாள்.

ஆனால் அவளது பொல்லா நேரம் அவள் அழைக்கும் முன்னமே சரணை நெருங்கிய புகைப்படக்காரர் அவனிடம் ஏதோ பேச தொடங்கி இருந்தார். அதை கண்ட கீர்த்தி என்ன செய்வது என்று புரியாமல் கைகளை பிசைந்து கொண்டு நின்றிருந்தாள்.

மேடையின் கீழே அமர்ந்து இவர்களை பார்த்து கொண்டிருந்த நாதன் கீர்த்தியின் சோர்வை அவதானித்து உடனே கதிரை அழைத்து அவனிடம் கீர்த்தியை சுட்டி காட்டி கூற அடுத்த சில நொடிகளில் அவளுக்கான பழச்சாறுடன் மேடை ஏறி இருந்தான் கதிர்.

சரனை பார்த்து கொண்டு நின்றிருந்த கீர்த்தியிடம் "அக்கா எடுத்துக்கோ" என்று நீட்ட,

அவள் தேவை அறிந்து தேடி வந்த பழச்சாறை கண்டவள் பாய்ந்து அதை எடுத்து இதழில் வைத்தவள் அப்போது தான் ஒரு குவளை மட்டும் இருப்பதை உணர்ந்து கதிரிடம்,

“மாமாக்கு எங்க கதிர்..??” என்று கேட்க,

‘அப்பா உனக்கு தான்க்கா கொடுக்க சொன்னார்' என்றவனுக்குமே அப்போது தான் சரணுக்கு சேர்த்து கொண்டு வராத தன் மடத்தனம் புரிபட, “சாரி, சாரிக்கா இதோ ரெண்டே நிமிஷம் நான் மாமாக்கு எடுத்துட்டு வரேன்.., நீ குடிக்கா” என்று மேடையை விட்டு கீழே இறங்கினான்.

கதிர் குடிக்க சொல்லி சென்றுவிட்டாலும் தொண்டை வறண்டு போயிருந்த நிலையிலும் கீர்த்தியின் காதல் மனமோ சரணை விடுத்து அவள் மட்டும் குடிப்பதை ஏற்கவில்லை.

கையில் இருந்த குவளை மீது பார்வை பதித்தவள் இதை சரணிடம் கொடுத்து குடிக்க சொல்லி கேட்போமா..?? அப்படியே அவள் கேட்டாலும் அவள் கேட்டால் என்பதற்காகவே அதை மறுப்பானா..?? அல்லது ஏற்பானா ..?? அப்படி தான் அளிக்கும் பழச்சாறை சரண் ஏற்றுக்கொண்டால் தன் மீதான அவன் கோபம் குறைந்தது என்று அர்த்தம் கொள்ளலாமா..?? அல்லது பலர் குழுமி இருக்கும் நிலையில் மறுப்பது நாகரீகமாக இருக்காது என்பதற்காக ஏற்று கொள்வான் என்பதாக அர்த்தம் கொள்வதா..??? என்று ஒரு பழச்சாறை சரணிடம் கொடுப்பதற்கே மனதினுள் பட்டிமன்றம் நடத்தி கொண்டிருந்தவளின் கண்ணிலும் கருத்திலும் போட்டோகிராபர் கூறியது போல புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க வேண்டி தன் கரத்தை அவள் முன் நீட்டி இருந்த சரண் படாமல் போனது அவள் பொல்லா விதியே..!!

ஜான் ஏறினாள் முழம் சறுக்கும் நிலையில் இருந்த கீர்த்தி பல நிமிடமாக 'கீர்த்தி' என்று அழைத்த சரணிடம் தன் கரத்தை கொடுக்காததன் மூலம் அவன் கோபத்தை மொத்தமாக குத்தகைக்கு எடுத்து விட்டிருந்தாள்.

"மேடம் இங்க பாருங்க" என்று பல முறை போட்டோகிராபரும் அவர் பங்குக்கு அழைத்தும் யோசனையுடனே நின்றிருந்தாள் கீர்த்தி.

தொடரும் அவள் அலட்சிய போக்கும் தன்னை அவமானபடுத்துவது ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படுபவளை கண்ட சரணின் கோபத்தின் அளவை வார்த்தையில் வடிக்கவும் வேண்டுமா என்ன..???

'மாமி !! மாமா எவ்ளோ நேரமா வைட் பண்ணிட்டு இருக்காரு சிக்கிரம் ஜூஸ் குடிச்சிட்டு அவருக்கு கை கொடுங்க' என்று அதுநேரம் வரை அவர்களை கவனித்து கொண்டிருந்த வெண்மதியின் மகன் வருண் அவளை உலுக்கவும் தான் எதிரே கரம் நீட்டி கொண்டிருந்த சரணும் அவன் தகிக்கும் விழிகளும் அவள் கண்ணில் பட, நெஞ்சில் நீர் வற்றி போனது கீர்த்திக்கு..!!

மருண்ட விழிகளுடன் வருணை பார்த்தவள் பின் திரும்பி சரணை பார்க்க அவள் நெஞ்சு கூடே காலியாகி போன நிலை தான் !! உடனே சுற்றுபுறத்தை ஒரு முறை அவசரமாக அலசிட அங்கே பெரும்பாலான விருந்தினர்கள் உணவருந்த போயிருந்தாலும் நெருங்கிய சொந்தங்கள் நண்பர்கள் என்று ஆங்காங்கே குழுமி இருந்தவர்களின் பார்வை மேடையில் இருந்த அவர்கள் மீது படிந்திருப்பதை கண்டவளுக்கு தன்னிச்சையாக உடல் உதறல் எடுக்க தொடங்க கையில் இருந்த பழச்சாறு நழுவி விழுமுன் அதை அருகே இருந்த மேஜையில் வைத்தவள் படபடத்த நெஞ்சை கையில் பிடித்தவாறு சரணிடம் பேச வாயை திறக்க அங்கு வார்த்தைக்கு பதில் காற்று தான் வந்தது.

கருத்து சிறுத்த முகத்துடன் அதுநேரம் வரை அவளை நோக்கி நீட்டி இருந்த கரத்தை சரண் வேகமாக கீழே இறக்கிட கீர்த்திக்கு இதயம் தாளம் தப்பி துடிக்க தொடங்கியது.

தீயாய் அவளை உறுத்து விழித்தவனின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் கீர்த்தி அஞ்சி நடுங்கி தடுமாற்றத்துடன் பின்னே நகர்ந்து நிற்க அதை கண்டவனின் பார்வை ஒரு கணம் அவள் மீது அழுத்தமாய் படிந்து மீண்டது, உடனே போட்டோகிராப்பரை அழைத்தவன் அவரிடம் ஏதோ கட்டளை இட அதை கேட்ட அவரும்,


'ஓகே சார் அப்படியே பண்ணிடலாம்' என்றவர் தன் பொருட்களோடு வெளியேற அடுத்த நிமிடமே கீர்த்தியை நெருங்கி அவள் கரத்தை இறுக்கி பிடித்து இழுக்காத குறையாக வெளியில் அழைத்து சென்றான் சரண்.

ஹாய் ஹனீஸ்....


இதோ 'உயிரில் உறைந்த உறவே !!' - 3 அடுத்த அத்தியாயம் பதித்து விட்டேன் இனி வாரத்தில் இரு நாட்கள் இக்கதையின் பதிவுகள் வரும் படித்து மறக்காமல் உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.
Nice
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top