UUU 3 - 16.1

Advertisement

Priyaasai

Active Member
View attachment 10691

பொதுவாக மென்மைக்கு மலரை ஒப்பிடுவர் ஆனால் அதனினும் மென்மையானது பெண்களின் மனம் என்பது பலரின் அனுபவ கூற்று.

மனம் என்றான பின் அதில் ஆண் பெண் என்ற பேதம் என்ன..??

மனமே மென்மையானது தான்..!!

மனிதன் மனதால் தான் வாழ்கிறான்..!! மனம் பக்குவப்பட்டால் எத்தகைய கடின சூழலையும் எளிதாக கையாளலாம் ஆனால் அதே மனம் காயங்கள் பல காணும் போது அதன் மென்மை தன்மையை இழந்து அதற்க்கு நேர்மாறாக கல்லாய் இறுகி, முள்ளை விட கூர்மையாகி, நெருப்பாக கனக்க தொடங்கி விடும்.

மென்மையான மனம் கொண்ட சரணும் இத்தனை வருடம் கடந்து வந்த நிகழ்வுகளால் மென்மையை இழந்து இறுகி கிடக்கிறான். எத்தனை பெரிய துன்பத்தையும் கடந்து வர உதவுவது மனம் மட்டுமே..!!

மனம் ஏற்று கொண்ட பின் கொண்டிருக்கும் காயங்களுக்கான புறக்காரணிகள் அனைத்தும் புறம் தள்ளப்பட்டு காயமும் வலியும் மட்டுமே பிரதானமாகி போகிறது..!! அதை எவ்வாறு போக்குவது என்பதையே மனம் தேடும். அதுபோலவே அவன் காயத்திற்கு காரணமான பிரகாசமும், ப்ரீத்தியும் புறம் தள்ளப்பட்டு இப்போது கொண்ட வலிகள் மட்டுமே எஞ்சியிருக்க அதை போக்கும் மருந்தின் தேடலை மட்டுமே அவன் மனம் பிரதானமாக கொண்டிருக்கிறது.

அவன் காயங்களுக்கான மருந்தான கீர்த்தியின் காதலை அவள் அரவணைப்பை சரண் தேடி நிற்க மருந்திட்டு குணப்படுத்த வேண்டியவளோ மற்றவர்களை முன்னிலை படுத்தி அவன் காயத்தை மேலும் கிளறி கொண்டிருக்கிறாள்.

மனம் நிறைந்திருப்பவள் அவனை ஏற்று கொள்ளாமல் விலகி செல்ல செல்ல அவன் மனம் வெகுவாக காயப்பட்டு இறுகி போகிறது. முதலில் பெங்களூர் வந்தவனை மறுத்து பின், அவனுடனான திருமணத்தை மறுத்து இப்போது அவன் தொடுகையை மறுத்து என்று ஒவ்வொருமுறை அவள் அவனை மறுக்கும் போதெல்லாம் சரணின் மனம் படும்பாட்டை அவன் மட்டுமே அறிவான்..!!

அவன் ஏமாற்றம் அனைத்தும் கோபமாக உருமாறி கொண்டிருப்பதை சரனுமே உணர்ந்து தான் இருந்தான். என்னதான் சரண் வெளியே கோபமுகம் காட்டினாலும் கொள்ளை காதலை தன் மீது பொழிந்து எந்நேரமும் தன்னை குறித்த சிந்தனையில் மட்டுமே இருந்தவளின் இன்றைய அச்சமும், மிரட்சியும் அவனை மிகவும் அச்சுறுத்தியது, அதை விட அவள் அழுகை..!!

முணுக்கெனும் முன் கண்ணீர் சிந்துபவள் அல்ல கீர்த்தி, அதையும் மீறி இப்போதெல்லாம் அழுகிறாள் என்றால் தன் மீதான வெறுப்பிலா..?? அல்லது கட்டாயத்தின் பேரில் தன்னை மணந்ததை எண்ணியா..?? அல்லது தன்னை காதலித்ததை எண்ணியா..?? அல்லது இன்னமும் ப்ரீத்தி...?? அல்லது அல்லது என்று அல்லதுகள் வரிசை கட்டி நிற்க சரணுக்கு பைத்தியம் பிடிக்காத குறை தான், பெண் மனதின் ஆழத்தையும் அதன் அழுகையின் காரணத்தையும் ஏன் என்று அவனால் கண்டறியவே முடியவில்லை.


கொண்டிருக்கும் கோபத்தை விடுத்து நிதானமாக யோசித்திருந்தால் இதே சரண் அவள் அழுகையின் காரணத்தை கண்டுபிடித்து இருப்பான்.... ஏனெனில் அவன் அறியாத மனபக்கங்கள் என்று அவளிடம் இதுவரை இருந்தது இல்லையே..!! அவளின் ஒவ்வொரு அசைவின் பொருளையும் உணர்ந்திருந்தவனுக்கு இப்போது கீர்த்தியால் கோபம் கண்ணை மறைக்கும் நிலையில் சரியாக பயணிக்க முடியாமல் அவனுமே தவித்து தான் நின்றான்.

இதோ இப்போதும் தன்னவளின் எதிர்பாரா செய்கையில் அகமெல்லாம் தீப்பற்றி எரிய நின்றிருந்த சரணின் நிலை உணராது கீர்த்தி வெட்கத்தோடும் பதட்டத்தோடும் அறையிலிருந்து வெளியே சென்றிருந்தாள்.

அவள் எதிர்பார்த்தது போலவே குழந்தைகள் அவளை சமையலறை தொடங்கி கலைவாணியின் அறைவரை தேடி விட்டு இப்போது மாமி என்று கூச்சலிட்டவாறே சரண் அறை நோக்கி வந்தவர்கள் கீர்த்தி எதிர்படவும் 'மாமி வாங்க' என்று அவளை சுற்றி கொண்டனர்.. கண்களை துடைத்தவாறே குழந்தைகளை பார்த்து புன்னகைத்தவள் அவர்களை அழைத்து கொண்டு கூடத்திற்கு சென்று சில நிமிடத்தில் வருவதாக கூற வருண் கீர்த்தியின் முகத்தை உற்று பார்த்து 'மாமி உங்க முகத்துல என்ன..??' என்றான்.

'என்னது வருண்..?? எங்க..??' என்றவாறே நெற்றியை வருட,

"அங்க இல்லை மாமி உங்க கன்னத்துல..." என்று அவன் தொடங்கவும்

"உங்க கண்ணு கிட்ட"

"அப்புறம் உங்க டிரஸ்லயும்" என்று ஸ்வாதிகா கூற,

"அப்புறம்..."

அப்போது தான் நினைவு வந்தவள் 'அது... அது ஒண்ணுமில்லை...' என்று முந்தானை கொண்டு முகத்தை மறைத்தவாறே, 'நான் வாஷ்ரூம் போயிட்டு வரேன் நீங்க அவிரனை கூட்டிட்டு போங்க' என்று கூறி ஓட்டமும் நடையுமாக முன்பு இருந்த அறைக்குள் வந்து கதவடைத்தவளுக்கு இதய துடிப்பு இன்னுமே சமன்பட மறுத்தது.

குறையாத நடுக்கத்துடன் நெஞ்சில் கை வைத்து அமர்ந்துவிட்டவளுக்கு இன்னுமே கணவனின் தீண்டலில் சிலிர்த்த தேகம் அடங்க மறுத்தது. தேகமெங்கும் அவன் வெம்மையும் வேட்கையும் மீதமிருக்க எச்சில் கூட்டி விழுங்கியவள் ஓடி சென்று கண்ணாடியில் தன்னை பார்த்தாள்.

தன் பிம்பத்தை பார்த்த கீர்த்தியின் முகம் மறுகணமே கணவனின் கைவண்ணத்தில் கலைக்கபட்டிருந்த தன் கோலத்தை கண்டு செவ்வானமாக சிவந்து போனது..!! ஆம் குங்குமமாய் சிவந்திருந்த அவள் முகத்தில் இதழிலில் தொடங்கி இமையோரம் வரை ஆங்காங்கே சரண் ஊட்டி விட்ட சாக்லெட்டின் மிச்சங்கள் மீதமிருக்க அவள் அணிந்து சென்ற சந்தன நிற புடவையும் அவனால் நிறம் மாறி போயிருந்ததை உணர்ந்தவளுக்கு வெட்கத்தில் இதழ்கள் துடித்து அடங்கியது.

நல்லவேளை குழந்தைகளை தவிர வேறு யாரும் அவளை பார்க்கவில்லை பார்த்திருந்தால் நிச்சயம் மானம் போயிருக்கும் என்று தான் கீர்த்திக்கு தோன்றியது. சரி முகம் கழுவி உடை மாற்றலாம் என்று கூந்தலை அள்ளி கொண்டையிட போனால் அங்கும் பிசுபிசுப்பு, மீண்டும் கண்ணாடியில் தன்னை ஆராயந்தவளுக்கு சரணின் இதழ் ஊர்வலம் நினைவில் எழ நெஞ்சம் படபடக்க தொடங்கியது கைகளால் முகத்தை பொத்தி அமர்ந்துவிட்டாள்.

எத்தனை நேரம் அமர்ந்திருந்தாளோ திடீரென 'அக்கா' என்று கதவு தட்டப்பட்டதில் தன்னிலை அடைந்தவள் குரலை வைத்து அது சரண்யா என்பதை அடையாளம் கண்டு கொண்டு வேகவேகமாக முகத்தை துடைத்து புடவையை களைந்து கையில் அகப்பட்ட நைட்டியை போட்டு கொண்டு கதவை திறந்தாள்.

'என்ன சரண்யா..??'

"அக்கா பெரிப்பா வர சொன்னாருன்னு பெரிம்மா கதிர் கூட கிளம்பிட்டாங்க நீங்க கோவிலுக்கு போயிட்டு வரதுக்குள்ள வந்துடுராங்களாம் உங்க கிட்ட சொல்ல சொன்னாங்க" என்றவள் அப்போது தான் அவளை கவனித்து,

"என்ன ஆச்சுக்கா..? கோவிலுக்கு போகணும்ன்னு இப்பதான் ரெடி ஆனீங்க அதுக்குள்ளே மாத்திட்டீங்க" என்று அவளை ஆராய,

அவளுக்கு என்ன பதில் சொல்லவது என்று புரியாமல் கீர்த்தி திகைத்து நிற்கவும்

அவள் முன் சொடக்கிட்டு, "அக்கா என்ன..?? அப்போ கோவிலுக்கு போகலையா நீங்க..??"

'ஹாஆன்'

"இல்லை கோவிலுக்கு போகலையான்னு கேட்டேன், ஒருவேளை உங்களுக்கு..." என்று கேள்வியாய் கீர்த்தியை பார்க்க

'இல்லைல்ல' என்று வேகமாக தலை அசைத்தவள் வியர்த்த கரங்களை துடைத்தவாறே, "அது அவி... அவிரன் தூக்கிட்டு .... அப்போ அப்போ" என்று முதல் முறையாக பொய்யை கூட சரியாக சொல்ல தெரியாமல் கீர்த்தி திணற

"என்னது அவிரனா..?? என்று சரண்யாவுக்கும் பதறி போனது

இவளும் அவள் கேட்டதில் 'ஆம்' என்று எதார்த்தமாக தலை அசைக்க,

"அவிரனுக்கு என்னக்கா ஆச்சு..?? இப்போதான் அலர் அக்கா அவனை பத்திரமா பார்த்துக்க சொல்லி கால் பண்ணாங்க எங்கயாவது விழுந்துட்டானா..??" என்று பதட்டத்தோடு கேட்க

"ஐயோ இல்லல அப்படி எல்லாம் இல்ல.. அது... என்று எச்சில் கூட்டி விழுங்கியவள் அது வந்து சரண்யா... அவ... அவனை தூக்கிட்டு வந்தப்போ கையில இருந்த சாக்லேட் டிரஸ்ல பூசிட்டான் அதான் சேன்ஜ் பண்ண வந்தேன்" என்று ஒருவழியாக வாய்க்கு வந்த பொய்யை அவள் நம்பும் விதத்தில் கொட்டி கிளறி வைக்க,

"ஒஹ் அவ்ளோதான நானும் என்னமோன்னு பயந்துட்டேன், சரிக்கா நீங்க ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வாங்க" என்று அவள் கிளம்ப,

முதல் முறை பொய் சொல்லியதில் வேகமாக துடித்த நெஞ்சை அழுத்தி பிடித்து இதழ்களை குவித்து ஊதியவளுக்கு அப்போது தான் சரண் இன்னும் சாப்பிடாமல் இருப்பது நினைவு வர அவசரமாக கதவை திறந்து சரண்யா... சரண்யா ஒரு நிமிஷம் என்று அழைக்க,

திரும்பி வந்தவளிடம், "ப்ளீஸ் ஒரு சின்ன ஹெல்ப் பண்ண முடியுமா..??"

'என்னக்கா சொல்லுங்க..??'

"சரண்யா மாமா இன்னும் சாப்பிடலை ப்ளீஸ் கொஞ்சம் சாப்பாடு கொடுத்துடுறியா...?" என்று கேட்க

"நான் எதுக்குக்கா..?? நீங்களே சேன்ஜ் பண்ணிட்டு வந்து கொடுங்க நான் மாமாவை வர சொல்றேன்" என்று மறுக்க,

இன்னமும் அவன் கரத்தின் வெம்மை நீங்காத நிலையில் திரும்ப அவனை எதிர்கொள்ளும் திடம் இல்லாதவளால் எப்படி அவன் முன் சென்று நிற்க முடியும் அதனால்,

"ப்ளீஸ் சரண்யா எனக்காக..!!" என்றவள்,

'இங்க பாரு' என்று தன் காதோரம் இருந்த கற்றை கூந்தலை சுட்டி காட்டிட,

அவளும் அதை தொட்டு அங்கும் பிசுபிசுப்பு இருப்பதை கண்டு, "அச்சோ என்னக்கா இது..!! குட்டி உங்க மேல சாக்லேட் அபிஷேகம் பண்ணிட்டானா..??" என்றிட,

திகைத்து விழித்தவள் 'ஆமாம்' என்று வேகமாக தலை அசைக்க, ,

'சரிக்கா நீங்க குளிச்சிட்டு வாங்க நான் பார்த்துக்குறேன்' என்று விடைபெற்றவள் அப்போது தான் நினைவு வந்தவளாக சாற்றிய கதவை தட்டினாள்.

"என்ன சரண்யா..??"

"இல்லை நீங்களும் சரியா சாப்பிடலையே உங்க சாப்பாட்டை அவிரனுக்கு ஊட்டிடீங்க அதான் உங்களுக்கு எடுத்துட்டு வரட்டான்னு கேட்க வந்தேன்"

'சாப்பாடா..??' என்று தன்னையே கேட்டுகொண்டவளுக்கு சரண் அவளுக்கு புகட்டிய இனிப்பு இப்போதும் அவள் அடி நெஞ்சம் வரை தித்தித்து கொண்டிருப்பதை உணர்ந்து மீண்டும் மேனி சிலிர்க்க முகமும் சிவந்து போனது.

'ஒற்றை சாக்லெட் பசியை போக்குமா..??' என்றால் இதோ மனம் கவர்ந்தவன் அதை அவளுக்கு புகட்டிய விதத்தில் மனதோடு சேர்ந்து வயிரும் நிறைந்து விட்டது..!! அதனால் சரண்யாவிடம் 'இல்லை எனக்கு பசி இல்லை வேண்டாம் மாமாக்கு மட்டும் கொடுத்துடு' என்று விட்டாள்.

***

சிவந்த விழிகளோடு கட்டிலில் இருகரங்களையும் தலைக்கு பின் கோர்த்து கொண்டு விட்டத்தை வெறித்து பார்த்தவாறு படுத்திருந்தான் சரண். இத்தனை நேரம் தன்னை நீங்கி சென்றவளை பிடித்து நிறுத்தி கேள்வி கேட்க துடித்த மனதை கட்டுபடுத்த போராடி வெற்றி கண்டவன் முகம் தான் உணர்வுகளை வெளிபடுத்தாமல் இருந்ததி தவிர அகமெல்லாம் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது.

இருக்காதா பின்னே..!! என்னதான் கோபத்தில் அவளை வதைக்க நினைத்தாலும் காலையில் இருந்தே அவள் நெருக்கம் தன்னை வெகுவாக பாதிப்பதை சரணும் நன்கு உணர்ந்திருந்தான். உறங்கி கொண்டிருந்தவன் மீது சாய்ந்து கீர்த்தி அவிரனை பிடிக்க முற்பட்டதில் வழக்கம் போல கனவில் அவளை உணர்வதாகவே சரண் நினைத்து கொண்டிருந்தான்.

ஆனால் நேரம் செல்ல செல்ல ஈரகூந்தலும் மல்லிகையின் மணமும் கனவல்ல நினைவென்று அவன் உறக்கத்தை கலைத்து இம்சிக்க அறையினுள் அவள் வரவை சுத்தமாக எதிர்பார்க்காதவனுக்கு முதலில் எந்த எண்ணமும் இல்லை... தன்னை தேடி வந்தவள் என்ன செய்யபோகிறாள் என்ற ஆவல் தான் எழுந்தது அவளோ அவனுக்கு குறுக்காக சாய்ந்து ஏதோ தேடுகிறேன் என்ற பெயரில் அவனை உரசி தீபற்ற வைத்து கொண்டு இருந்தாள்.

காலையில் இருந்து அவன் தொட்டாலே பிடிக்கவில்லை, வேண்டாம் என்று மறுத்தவளின் தற்போதைய செய்கை சொல்லுக்கு நேர்மாறாக இருக்கவும் தான் அவளை நெருங்கினான். ஆனால் அவளோ மீண்டும் வேதாளம் முருங்கை ஏறிய கதையாக பற்ற வைத்த தீயை அணைக்க முயலாமல் அவனை தவிக்க விட்டு ஓடி விட சரணுக்கு கட்டுகடங்காத கோபம் முகிழ்த்து பரபரத்த கரத்தை கட்டுபடுத்தி தலைக்கு பின் கோர்த்திருந்தவன் மனமோ பலவித எண்ண சஞ்சாரத்தில் மூழ்கியது.

பல நிமிட யோசனைக்கு பின் ஒரு முடிவிற்கு வந்தவனாக எழுந்து சென்றவன் அடுத்த சில நிமிடத்தில் முகம் கழுவி உடை மாற்ற அறை கதவு தட்டப்பட்டது.

சென்று திறக்கவும் அங்கு சரனுக்கான உணவுடன் சரண்யா நின்றிருந்தாள்.

கீர்த்தியை எதிர்பார்த்தவன் சரண்யாவை கண்டதும், 'என்ன..??" என்றான்

அவளோ கரத்தில் இருந்த சாப்பாட்டை உயர்த்தி பிடித்து, "உங்களுக்கு சாப்பாடு மாமா"

யோசனையுடனே "யார் கொடுத்தா..??" என்றான்

'அக்கா'

அவள் வார்த்தையை கேட்டதும் அத்தனை அலட்சியமா..?? என்று அவனுக்கு தாடை இறுகி போக, "ஏன்..?? அவ என்ன பண்ணிட்டு இருக்கா..??" என்றான் அடக்கப்பட்ட குரலில்.

"குளிக்க போய் இருக்காங்க மாமா அதான் நான் எடுத்துட்டு வந்தேன்"

சற்று முன் அவள் இங்கு வந்த போது தானே குளித்திருந்தாள் இப்போது மீண்டும் குளிக்க சென்றிருக்கிறாள் என்றால் தன் தொடுகையை அவள் எத்தனை தூரம் வெறுத்து இருக்க வேண்டும் என்று எண்ணிய மனம் சுணங்கி போனாலும் அடுத்த கணமே இருமடங்கு ஆத்திரத்தை பூசியிருந்தது... ஒரு நொடி கண்களை இறுக மூடி திறந்தவன், 'சரி நீ போ' என்று தட்டை வாங்கி சரண் மேஜையில் வைக்க,

வாசல் வரை சென்றவள் திரும்பி வந்து, "மாமா நீங்களும் அக்காவும் கோவிலுக்கு கிளம்பனும்ன்னு அம்மா சொல்ல சொன்னாங்க"

'வரேன்னு சொல்லு' என்று அமர்ந்தவனுக்கு மனதின் வேதனை கழுத்தை நெறிக்க தொடங்கியது.

முதல் முறையாக விருப்பம் இல்லாதவளை கட்டாயபடுத்தி மணம் புரிந்தது தவறோ என்ற கேள்வியை மனம் தொடுக்க சரணின் விழிகளில் கலக்கம் அதிகரித்தது.

***

மொத்த குடும்பமும் வாசலில் கூடி விட்டிருந்தது சரண் கீர்த்தியை கோவிலுக்கு வழி அனுப்ப.. சரண் பைக்கை உயிர்பித்து காத்திருக்க வைதேகி முதல் வான்மதி வரை சொல்லி கொண்டு வந்தவள் அப்போது தான் வெளியே வந்த கலைவாணியிடமும் விடைபெற்று அவனருகே வந்தாள்.

குழந்தைகள் டாட்டா காண்பித்த பின்னும் கீர்த்தி வண்டியில் ஏறாமல் நின்றிருந்தாள். பொறுத்து பார்த்த சரணோ அவள் புறம் திரும்பாமலே, "ஏறு" என்று உறும, அவன் உறுமலில் கீர்த்திக்கு திக்கென்றானது.

அவள் விலகி சென்றதில் சரண் தன் மீது கோபம் கொண்டிருக்க கூடும் என்ற எண்ணமே கீர்த்திக்கு இல்லை, குழந்தையோடு உறங்கி கொண்டிருந்தவன் அவள் சொன்னதும் புரிந்து கொண்டிருப்பான் என்று எண்ணியவள் இப்போது அவன் கோபம் எதனால் என்று புரியாமல் அச்சத்தோடு அவனை பார்க்க,

'கீர்த்தி என்ன பார்த்துட்டு இருக்க உட்காரு' என்ற வெண்மதியின் குரல்

ஏற்கனவே அவன் பேசியதில் திகைத்து நின்றவளுக்கு இப்போது வெண்மதி குரல் கொடுக்கவும் படபடப்பு கூடியது. கையில் இருந்த பூஜை கூடையோடு எப்படி ஏறுவது என்று தெரியாமல் விழித்து கொண்டு நின்றவள் ஒருவழியாக முந்தானையை பிடித்து கொண்டு மறுகையால் புடவை கொசுவத்தை ஏற்றி பிடித்து வலது கால் இடது கால் என்று மாற்றி மாற்றி பூட்ரெஸ்ட்டில் எடுத்து வைத்து கொண்டிருக்க,

'ஏறுடி' என்ற கர்ஜனை சரணிடம்

அதில் தூக்கிவாரி போட அவனை பார்த்தவளின் கண்களில் மிரட்சி அதிகரிக்க 'மா..மாமா இதுல எப்படி ஏறுறது' என்று இது நாள் வரை சில முறை அவனுடன் பைக்கில் சென்றிருந்தாலும் அப்போது எல்லாம் சுடிதார் அணிந்து இருந்தவளுக்கு இப்போது புடவை கட்டிக்கொண்டு எப்படி ஏறுவது என்ற திணறல்.

ஆம் !! பிரகாசத்திடம் செல்வாக்காக வளர்ந்தவள் எங்கு சென்றாலும் காரில் சென்றே பழக்கப்பட்ட நிலையில் ஓட்ட கற்றுக்கொண்டதும் கார் மட்டுமே சிறுவயதில் அவள் சைக்கிள் கற்று கொண்டபோது விழுந்து எழுந்ததில் பிரகாசம் அவளை டூவீலர் பழக்க அனுமதிக்கவே இல்லை... அண்ணன் தம்பி என்று உடன் பிறந்தோர் யாரும் இல்லாததால் வெகு சகஜமாக அவள் யாருடனும் டூவீலரில் சென்று வந்தது இல்லை..

சரணை காதலிக்க தொடங்கிய பின் தான் அதிகபட்சமாக இரண்டு மூன்று முறை அவனோடு பைக்கில் சென்றிருப்பாள் அது கூட அருகே சைந்தவி நின்று அவளை அமர வைத்து விழுந்துவிடாமல் இருக்க பக்கவாட்டில் இருக்கும் கம்பியை பிடித்து கொண்டு பலநூறு வேண்டுதல் வைத்து கொண்டே செல்வாள்.

'எப்படியா..??' என்று அவள் புறம் சரண் திரும்ப

'ஆமா... மா..' என்றபோதே அவள் நிலையை உணர்ந்த சரண்யா கீர்த்தியின் கைபிடித்து அவளை அமர வைக்க கீர்த்தியும் வழக்கம் போல காதலித்த போது அவனோடு சென்றது போலவே இப்போதும் அவனிடம் இருந்து இரண்டு இன்ச் இடைவெளி விட்டு பக்கவாட்டில் இருந்த கம்பியை பிடித்து கொண்டு, 'போ..லாம் மாமா' என்றாள்.

தொடரும் அவள் விலகளை உணர்ந்தவன் பேசுவதற்கு இனி என்ன இருக்கிறது என்ற விட்டேர்த்தியான மனநிலையோடு கியரை போட, "கீர்த்தி விழுந்துட போற சரணை பிடிச்சிட்டு உட்காரு" என்றார் வெண்மதி அவளருகே வந்து.

காரணமற்ற அவன் கோபத்தில் பயந்து போயிருப்பவளுக்கு சுத்தமாக தைரியம் இல்லை அதனால் அவரிடம், 'இல்லை சித்தி நான் பத்திரமா பிடிச்சிட்டு இருக்கேன்' என்று பக்கவாட்டில் இருந்த கம்பியை சுட்டிக்காட்டினாள்.

'அது..' என்று வெண்மதி மறுத்து கூறும் முன்னமே சரண் வண்டியை கிளப்பி இருந்தான்.

வழிநெடுக சரண் மௌனமாக வர கீர்த்தியும் திடிரான அவன் கோபத்திலும் மௌனத்திலும் அவனிடம் பேசவும் தயக்கம் கொண்டு அமைதியாக பயணிக்க அடுத்த சில நிமிடங்களில் கோவிலை சென்று சேர்ந்தனர்.

சிறு குலுக்களுடன் வண்டி நிற்கவும் தடுமாறி இறங்கியவள் தன்னை சரி படுத்தி நிமிரும் முன் சரண் வண்டியில் இருந்து இறங்கி கோவிலினுள் சென்று கொண்டிருந்தான். சரணின் நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் வேகமாக ஓடிய கீர்த்தியின் சேலை கொலுசில் மாட்டி கொண்டு புடவையின் மெல்லிய சரிகை இழுபட தொடங்கி அவள் நடையை தடை செய்திருந்தது. அவளோ மேலும் நடக்க முடியாமல் கீழே அமர்ந்தவள் சேலை சரிகையை கொலுசில் இருந்து பிரிக்க போராடி கொண்டிருந்தாள்.

கோவிலினுள் சென்ற சரண் கீர்த்தி தன் பின்னே வராமல் போனதை கண்டு தொடர்ந்து தன்னை அலட்சியபடுத்துகிறாளே என்ற சீற்றத்துடன் நின்றிருந்தான். அதே நேரம் சரணை கண்ட அர்ச்சகர், "வாங்க சரண் கீர்த்தி குழந்தை எப்படி இருக்கா..?? வளைகாப்பு நல்லபடியா முடிஞ்சதா..?? அடுத்த வாரம் தானே தேதி கொடுத்து இருக்காங்க ..?? வழக்கம் போல அவ பேருல தானே அர்ச்சனை" என்று அவர் கேட்க, சரண் முகம் கருத்து சிறுத்து போனது.

அவன் பதிலளிக்கும் முன் ஓடி வந்து அவன் அருகில் கீர்த்தி நிற்கவும் அவளை கண்டவர், "என்ன சரண் அதுக்குள்ள பிரசவமாகிடுச்சா..?? என்றவர் கீர்த்தியிடம் திரும்பி, "என்னமா இது எப்போ குழந்தை பிறந்தது...??? ஒன்னு ரெண்டு நாளிலேயே தீட்டோட கோவிலுக்கு வரக்கூடாதுன்னு தெரியாதா நீ எதுக்கும்மா வந்த...??" என்று கேட்க,

அவளோ 'குழந்தையா..??' என்று ஒன்றும் புரியாமல் சரணை பார்க்க,

"எங்களுக்கு இன்னைக்கு தான் கல்யாணம் ஆச்சு" என்றான் சரண் இறுகிய குரலில்

'என்னது' என்று அவனை அதிர்ந்து பார்த்த அர்ச்சகர் மீண்டும் கீர்த்தியை ஆராய அவள் கழுத்தில் முன்பு இருந்த மஞ்சள் கயிறுக்கு பதில் திருமணத்தின் போது அணியப்படும் ஒன்பது இழைகள் கொண்ட புது மஞ்சள் கயிறு வீற்றிருப்பதை கண்டவர் "அம்மாடி கீர்த்தி அப்போ.." என்று அவள் முன்பு அணிந்திருந்த மஞ்சள் கயிறுக்கு என்ன அர்த்தம் என்பது சுத்தமாக புரியாதவர்,

"என்ன கீர்த்தி இது..?? சரண் எதுக்கு திரும்ப தாலி கட்டினீங்க அதுவும் பிரசவிச்சி இருக்க பொண்ணுக்கு" என்று அவனை பார்த்தவர் நீ எதுக்கும்மா பச்ச பிள்ளையை விட்டுட்டு வந்த..?? வரக்கூடாதே..!! தப்பும்மா" என்றார்.

இரு நாட்களுக்கு முன் கீர்த்தியின்(ப்ரீத்தி) வளைகாப்பிற்கு பிரகாசம் இவரையும் அழைத்திருக்க அவர் ஒரு கும்பாபிஷேகத்திற்காக திருச்சி சென்று இருந்தவர் இன்று தான் ஊர் திரும்பி அதிகாலையே கோவிலுக்கு வந்துவிட்டார்.

சரணோ அதற்கு மேலும் அங்கு நிற்க முடியாமல் விறுவிறுவென கிளம்பிவிட்டான். கீர்த்திக்கு அப்போது தான் அவர் கேள்வி புரிய அவசரமாக அவரிடம், "இல்லை இல்ல சாமி எனக்கு குழந்த.. எங்களுக்கு... பிறக்.. " என்று திணறியவளுக்கு பதட்டத்தில் வார்த்தை எழவில்லை.

சரண் கிளம்பி விட்ட நிலையில் அவள் இன்னமும் இங்கேயே நிற்பதை கண்டவருக்கு பிரசவித்த ஓரிரு நாளிலேயே கோவிலுக்கு வந்து அதன் புனிதத்தை கெடுத்து விட்டவளின் மீது கோபம் எழ "என்னமா பேசுற..?? முதல்ல இங்க இருந்து கிளம்பு" என்று அவர் இறைய, திடுக்கிட்டு போனவள் திரும்பி சரனை தேட அவன் வாசலை நோக்கி சென்று கொண்டிருந்தான்.

"மாமா.. மாமா " என்று கண்ணீரோடு அழைத்தவாறே அவன் பின்னே ஓடினாள்.

ஹாய் செல்லகுட்டீஸ்..


இதோ " உயிரில் உறைந்த உறவே !!" அடுத்த அத்தியாயத்தின் முதல் பகுதி பதித்துவிட்டேன். படிச்சிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் அடுத்த பகுதி வெள்ளி அன்று ..!!

நன்றிகள்
When they unite
 

monies

Well-Known Member
AvLe payathula sodapuraa
Adu piriyama Ivan vera oh god
Nice baby
Miss panna saran keerthi story padichirunda teliva irukum hoom ipa konjam puriudu konjam puriyala
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top