யாருமிங்கு அனாதையில்லை - 14

Advertisement

pon kousalya

Active Member
“யாருமிங்கு அனாதையில்லை! (14)”
(நாவல்)
(டாக்டர்.பொன்.கௌசல்யா)

அத்தியாயம் :14​

அன்று இரவே திவாகரிடம் தன் அக்கா ஜோதி சொன்ன விஷயங்களை அப்படியே ஒப்பித்தாள் சவிதா. அதைக் கேட்டு “ஹைய்யா!” என்று துள்ளிக் குதித்தார் திவாகர்.

தான் சொன்ன சங்கடமான விஷயங்களைக் கேட்டு, தன் கணவர் சந்தோஷமாய்க் குதிப்பதைக் கண்டு செல்லமாய்க் கோபித்தாள் சவிதா. “என்னங்க நான் எவ்வளவு மனக் கஷ்டத்தோட சொல்லிட்டிருக்கேன்...நீங்க பாட்டுக்கு சந்தோஷமாக் குதிக்கறீங்களே?...என் அக்கான்னா உங்களுக்கு அத்தனை இளப்பமாய்ப் போச்சா?”

“கோவிச்சுக்காதடி என் கோமேதகமே!...”என்று அவள் கன்னத்தை கிள்ளி விட்டு, “அந்த நகைக்கடை ஓனர் உதயகுமார் வேற யாருமில்லை!...என்னோட நெருங்கிய நண்பர்தான்!” என்றார்.

விழிகளை விரித்துக் கொண்டு “அப்படியா?” என்றாள் சவிதா.

“அப்படியேதான்!” என்ற திவாகர், அவளிடம் நெருங்கி வந்து, “சவிதா...ஜோதி உன் கிட்ட பேசினதில் உனக்கு வேற ஏதாவது தெரிஞ்சுதா?” கேட்டார்.

“வேற ஏதாவதுன்னா?”

“ம்ம்...ஜோதி மனசிலும் அந்த உதயகுமார் மேல காதல் இருக்கற மாதிரி ஏதாவது தெரிஞ்சுதா?”
“ஆமாம்ங்க!...அவள் பேசும் போது அந்த உதயகுமார் பெயரைக் குறிப்பிடும் போதெல்லாம்...அவள் முகத்தில் லேசாய்ச் செம்மை படர்ந்தது!...”

“ம்ம்ம்...அது...அதுதான் காதல்!...அப்ப ஜோதி மனசிலும் அவர் இருக்கார்!”

“அப்புறம்....இடையில் ஒரு தரம் நான் அவரைப் “பணக்கார ராஸ்கல்” ன்னு பேச்சு வாக்கில் சொல்லப் போக...வந்ததே பாருங்க அவளுக்கு கோபம்!..அம்மாடி...என்னைய பிச்சு உதறிட்டா!...அப்பவே நான் கேட்டேன்... “ஏண்டி...நீயே அவரு பேச்சு பிடிக்கலைன்னு வேலைக்கே போகாமக் கிடக்கறே?...அப்புறம் ஏண்டி அவரைத் திட்டினா உனக்கு இப்படி “புஸ்ஸு”ன்னு கோபம் வருது?”ன்னு...அதுக்கு அவ சொல்றா... “என்ன இருந்தாலும் முதலாளிடி!” ங்கறா!”

“சந்தேகமேயில்லை சவிதா...ஜோதியும் அந்த உதயகுமாரை மனசார விரும்பறா!...ஆனா....அந்த ஜுவல்லரில...பெரிய முதலாளி காலத்துல அவளுக்கு ஏற்பட்ட அந்த மோசமான அனுபவம் அவளை இன்னும் மிரளச் செய்யுது!...எங்கே பெரிய முதலாளி தன்னைப் பற்றிக் கேவலமாப் பேசி மறுபடியும் ஒரு அவமானத்தை ஏற்படுத்தி விடுவாரோ?ன்னு பயப்படறா!” திவாகர் தெளிவாய்ச் சொல்ல,

“என்னங்க பண்ணலாம்...இப்ப?”

“யூ டோண்ட் வொரி...நாளைக்கே நான் உதயகுமாரைச் சந்திச்சுப் பேசறேன்!...அப்புரம் அப்படியே அவரோட பேரண்ட்ஸ் கிட்டேயும் பேசிடறேன்!” திவாகர் வழக்கமான தன்னம்பிக்கையுடன் பேச,

“இது சாத்தியமாகுமா?” சவிதா இழுத்தாள்.

“சவிதா... “நம்மால் முடியும்”னு நம்பினா...மலைகளைக் கூட ஈஸியாத் தாண்டலாம்!.. “நம்மால முடியுமா?” என்று சந்தேகப்பட்டா குப்பை மேடுகளைக் கூட தாண்ட முடியாது!..” சொல்லி விட்டுச் சிரித்த திவாகரை வியப்போடு பார்த்தாள் சவிதா.

பொதுவாகவே, லட்சியம் என்பது நல்லதாக இருக்கும் பட்சத்தில், அதன் வெற்றி என்பது எளிதாகவே இருக்கும். “காடு...மேடு, கரடு...முரடு, கல்லு...முள்ளு” என ரணங்களின் மீதே பயணம் நடத்தி, தன் தியாகத்தால் பிறரை வாழ வைத்து, தன் பொறுமையால் எல்லோருக்கும் பெருமை உண்டாக்கிக் கொண்டிருக்கும் ஜோதி என்னும் அந்த உத்தமியின் வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டும் என்கிற உயர்ந்த லட்சியத்துடன் உதயகுமாரைச் சந்தித்துப் பேசினார் திவாகர்.

“திவாகர்...உன்னைப் பார்த்ததும்தான் எனக்கு என் காதல் நிச்சயம் வெற்றியடையும்னு நம்பிக்கையே வந்திருக்கு” என்று திவாகரின் கைகளைப் பிடித்துக் கொண்டு தழுதழுத்த குரலில் பேசிய உதயகுமாரின் முதுகில் தட்டிக் கொடுத்த திவாகர்,

“கவலைப் படாதே உதயகுமார்...உண்மைக் காதலுக்கு தோல்வியே என்றும் கிடையாது!...சரி...எப்ப உங்க பேரண்ட்ஸ் கிட்ட பேசலாம்?”

“ம்ம்...இன்னும் மூணு நிமிஷத்துல பேசலாம்!” என்றார் உதயகுமார் புன்னகையுடன்,

நெற்றியைச் சுருக்கிக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தார் திவாகர்.

அவரது குழப்பத்தைப் போக்கும் விதமாய் சி.சி.டி.வி.யின் மானிட்டரைக் கை காட்டினார் உதயகுமார். உதயகுமாரின் தந்தையும், தாயும் ஜுவல்லரிக்குள்ளே வந்து கொண்டிருந்தார்கள்.

“எப்படி?” திவாகர் கேட்க,

“இங்க எங்கியோ பக்கத்துல ஒரு கோயிலுக்கு வந்திருக்காங்க...அப்படியே கடையைப் பார்த்திட்டுப் போகலாம்னு வர்றாங்க!”

“பரவாயில்லை...எல்லாம் நல்லவிதமாகவே போகுது!” என்றார் திவாகர்.

அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த பெரிய முதலாளி நாகராஜன் திவாகரைப் பார்த்து நெற்றி சுருக்க, அறிமுகப் படுத்தினார் உதயகுமார்.

ஆரம்பத்தில் சில பொது விஷயங்களை அவர்களுடன் பேசிய திவாகர், சட்டென்று உதயகுமாரின் திருமணப் பேச்சையெடுக்க,

“க்கும்...நாங்களும்தான் கேட்டுட்டே இருக்கோம்...இவந்தான் பிடியே குடுக்க மாட்டேங்கறான்!” உதயகுமாரின் தாய் தன் வருத்தத்தைச் சொல்ல,

“கவலைப்படாதீங்க...இப்ப பிடி குடுத்துட்டாரு உங்க மகன்?”

“என்னப்பா சொல்றே?” நாகராஜன் குழப்பமாகிக் கேட்டார்.

தன்னுடைய பொறுமையான பாணியில், பெருந்தன்மையான வார்த்தைகளைப் பயன் படுத்தி, உதயகுமார் மனதில் ஜோதியின் மீதிருக்கும் காதலை அவரது பெற்றோரிடம் நாசூக்காகச் சொல்லி முடித்தார் திவாகர்.

சில நிமிடங்கள் அமைதியாய் கீழேயே பார்த்தபடி அமர்ந்திருந்த நாகராஜனை “திக்...திக்” நெஞ்சுடன் பார்த்தார் திவாகர்.

ஒருவித உதறலுடன் பார்த்துக் கொண்டு நின்றார் உதயகுமார்.

மெல்லக் கனைத்து விட்டு, “ம்ம்ம்...அந்தப் பொண்ணு...இவனுக்கு நகைகளை அற்புதமா டிஸைன் பண்ணிக் கொடுக்கும் போதே நெனச்சேன்!...இவளாலதான் இவனோட வாழ்க்கையையும் நல்லா டிஸைன் பண்ண முடியும்னு!...அதை நானே என் வாயாலே சொல்லத்தான் இன்னிக்கு இங்க வந்தேன்!...அதுக்காகத்தான் நாங்க ரெண்டு பேரும் கோயிலுக்குப் போயி பூ கேட்டுட்டும் வந்தோம்!”
“என்னாச்சு?...சாமி உத்தரவு குடுத்திச்சா?” உதயகுமார் ஆர்வமாய்க் கேட்க,

“எந்த சாமிடா நல்ல விஷயத்துக்கு உத்தரவு குடுக்காமப் போகும்?...உடனே குடுத்திடுச்சு!” என்றாள் உதயகுமாரின் தாயார்.

திவாகர் மனம் நெகிழ்ந்து போய் அமைதியாய் அமர்ந்திருக்க, “என்ன இன்ஸ்பெக்டர் சார்...எப்ப வர்றது நாங்க...பொண்ணு பார்க்க?” நாகராஜன் தமாஷாய்க் கேட்டார்.

“உங்களுக்குத் தெரியாததில்லை!...நீங்களே ஒரு நல்ல நாளா பார்த்து வாங்க!...”

“அதுக்கென்ன....சீக்கிரமே வந்திட்டாப் போச்சு” சந்தோஷமாய்க் கூவினாள் உதயகுமாரின் தாயார்.

அப்போது, “எக்ஸ்க்யூஸ் மீ” என்றபடி உள்ளே வந்த மேனேஜர் வெளியே ஜோதி வந்து காத்திருப்பதை சொல்ல,

எல்லோரும் குழப்பத்துடன் விழித்தனர்.

உதயகுமார் மட்டும், “ம்...வரச் சொல்லுங்க! என்றார்.

உள்ளே வந்த ஜோதி, தன் கையிலிருந்த பேப்பரை உதயகுமாரிடம் தந்தாள்.

அதை வாங்கிப் படித்து விட்டு, புன்முறுவல் பூத்த உதயகுமார், அதைத் தன் தந்தையிடம் கொடுத்தார்.

அவர் அதைப் படித்து விட்டு சின்ன சிரிப்புடன், திவாகரிடம் கொடுத்தார்.

திவாகர் அதை நிதானமாய்ப் படித்தார். படித்து முடித்ததும் உதயகுமாரின் தாயாரிடம் தந்தார்.

அவள் தன் மூக்குக் கண்ணாடியை எடுத்து மாட்டிக் கொண்டு, ஒரு வரி விடாமல் படித்து விட்டு, மேனேஜர் பக்கம் திரும்பி “மேனேஜர் சார்...இதை உடனே ஓ.கே.பண்ணி...இந்தப் பொண்ணை வேலையை விட்டுத் தூக்கிடுங்க!” என்று சொல்லியவாறே எழுந்து ஜோதியின் அருகில் வந்து, அவள் காதரோமாய், “மருமகளே!...நீதான் இந்தக் கடைக்கே முதலாளியம்மா ஆயிட்டியே!...அப்புறம் எதுக்கு அந்த வேலைன்னுதான் உன்னை உடனே வேலையை விட்டுத் தூக்கச் சொன்னேன்!” என்றாள்.

ஜோதி எதுவும் புரியாமல் திவாகரைப் பார்க்க, அவர் புன்னகையுடன், “ஆமாம்!” என்று தலையாட்ட,

கண்களில் கண்ணீர் கொப்பளிக்க அவரைப் பார்த்து இரு கைகளையும் கூப்பினாள்.
*****

வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டங்கள், நஷ்டங்கள், துன்பங்கள், துயரங்கள் வந்தாலும் ஊக்கப்படுத்தவும், “உன்னால் முடியும்” என்று எடுத்துரைக்கவும் ஒரு உறவு உடனிருந்தால் தோல்விகள் மொத்தமாய்த் தோற்று ஓடி விடுவதோடல்லாது, வெற்றிகள் உடனுக்குடன் நிறைவேறிக் கொண்டே இருக்கும்.

திவாகர், என்னும் அந்த ஊக்க சக்தி உடனிருந்த காரணத்தால் உதயகுமார், ஜோதி திருமணம், நகரின் இருதயப் பகுதியிலிருந்த ஒரு திருமண மண்டபத்தில் ஆர்ப்பாட்டமாகவும் இல்லாமல், எளிமையாகவும் இல்லாமல், ஆனால் சிறப்பாக நடந்தேறியது.

மகிழ்ச்சியும்…சந்தோஷமும், உற்சாகமும்…உல்லாசமும், நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு கரை புரண்டோடிய நேரத்தில்…

யார் கண் பட்டதோ?

திவாகருக்கு உத்தியோக மாற்றல் வந்தது. எல்லோருடைய கண்களிலும் கண்ணீரை வரவழைத்து விட்டது அந்த மாற்றல் கடிதம்.

குறிப்பிட்ட நாளில், கனத்த நெஞ்சுடன் பிரியா விடை பெற்றுச் சென்றது திவாகரின் குடும்பம்.

*****
காலை நேர வெயில் லேசாய் உறைக்கத் துவங்கியிருந்தது. சூரியன் தன் இதமான கதிர்களை வாபஸ் பெற்றுக் கொண்டு, உஷ்ணக் கதிர்களை சப்ளை செய்து கொண்டிருந்தான்.

மணி பதினொன்று.

“அப்பப்பா...இன்னேரத்துக்கே என்னமா வேகுது?...”கழுத்துப் பகுதியை வியர்வை “நச...நச”வென்று அரிக்க, காலரைத் தூக்கி விட்டபடியே வந்தான் முரளி. பெயரில் மட்டுமல்ல...தோற்றத்திலும் நடிகர் முரளியை ஞாபகப்படுத்துவான்.

“என்ன தம்பி வேக்காட்டுக்கு இதமா...எலுமிச்சம் பழ சர்பத் போட்டுத் தரவா?” கடை பெஞ்சில் வந்தமர்ந்த முரளியிடம் கடைக்காரர் விஸ்வநாதன் கேட்டார். அது வியாபார நோக்கமே தவிர அவன்பால் கொண்ட அன்போ அக்கறையோ...அல்ல என்பது முரளிக்கும் தெரியும்.

“இருங்கண்ணே....தனசேகரன் வர்றேன்!னு சொல்லியிருக்கான் அவன் வந்ததும் ரெண்டு பேருக்குமா சேர்த்துப் போட்டுக் குடுங்க!” என்றான் முரளி. தோழன் இல்லாமல் தான் மட்டும் பருக மனமில்லாத உண்மை சிநேகிதன்.

தெருவில் சைக்கிள்காரனொருவன், “தெழுவு...தெழுவு” என்று கூவிக் கொண்டு போக, “ஆஹா...வேக்காட்டுக்கு தெழுவு குடிச்சா சும்மா பிச்சுக்குமே?...இந்த தனசேகரனை வேற காணோம்...அவனும் இருந்தா ஆளுக்கு ரெண்டு கிளாஸ் தெழுவு குடிச்சிருக்கலாம்”என்றான் முரளி.

“அட ஏன் தம்பி?....சைக்கிள்காரனுக கொண்டு வர்ற தெழுவெல்லாம் நல்ல தெழுவில்லை தம்பி!...எல்லாம் கழிவு!....நல்லதையெல்லாம் வடிச்சு தனியா ஊத்தி வெச்சுக்கிட்டு...வடிச்ச வண்டல தண்ணிய ஊத்தி அதைத்தான் சைக்கிள்காரனுகளுக்குக் குடுப்பான் பனை மரக் குத்தகைக்காரன்!...அதைக் குடிச்சா காசு குடுத்து நோயை வாங்கிக்கற மாதிரி!” என்றான் கடைக்கார விஸ்வநாதன்.

“அடக் கஷ்டகாலமே?....இதிலும் கலப்படமா?...கடவுளே...போகிற போக்கைப் பார்த்தால் எதிர்காலத்தில் இயற்கையான பண்டங்கள் எதுவுமே இருக்காது போலிருக்கே?” என்று முரளி சொல்ல,

“உண்மை தம்பி!...நீங்க மட்டும் அந்த தெழுவை...ரெண்டு டம்ளர் குடிச்சீங்க...வயித்துப் போக்கு நிச்சயம்!...நாலு டம்ளர் குடிச்சீங்க...ஆஸ்பத்திரில அட்மிட் ஆயிடுவீங்க?..அப்புறம் குளுக்கோஸ் தண்ணி ஏத்தினால்தான் உங்களால் எழுந்து நடக்கவே முடியும்!” சொல்லி விட்டுச் சிரித்தான் கடைக்காரன்.

அப்போது “பட...பட”வென வந்து நின்றது அந்த பைக்.

“டேய்...முரளி!...ரொம்ப நேரமாச்சா வந்து?” கேட்டவாறே பைக்கிலிருந்து இறங்கி, அதை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி, அதன் மீதே ஸ்டைலாக அமர்ந்த தனசேகர் அந்த கிராமத்தின் விரல் விட்டு எண்ணக் கூடிய பணக்காரக் குடும்பங்கள் ஒன்றின் ஒரே வாரிசு. வசதியிலும், வசந்தத்திலும் ஊறித் திளைப்பவன். காசுக்கும் தண்ணீருக்கும் வித்தியாசம் தெரியாதவனாய் இரண்டையும் ஒரே மாதிரி இறைப்பவன். நிறத்திலும் அழகிலும் முரளியை விடக் கூடுதலாயிருந்த போதும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இயல்பாய்ப் பழகுபவன்.

விலையுயர்ந்த ஆடைகளை உடுத்திக் கொண்டு ஊருக்குள் மைனர் போல் திரிந்தாலும் ஏழையான முரளியிடம் அவன் கொண்டிருந்த நட்பு மட்டும் மாறாமலேயிருந்தது. காரணம்?...பள்ளி முதல் வகுப்பு முதல் இறுதி வகுப்பு வரை இருவரும் ஒன்றாகவே படித்தவர்கள். கிராமத்தில் பல பேருக்கு அவர்களுடைய நட்பு ஆச்சரியத்தைக் கொடுத்தாலும் சில பேருக்கு பொறாமையையும் கொடுத்திருந்தது. நட்புக்கு நிறமுமில்லை...ஏழை பணக்காரன் என்கிற வித்தியாசமும் இல்லை என்பது அவர்களுக்குத் தெரியாது.

தனசேகரின் குடும்பத்தார்க்கோ தங்கள் மகன் ஒரு ஏழை இளைஞனுடன் நட்பு பாராட்டிக் கொண்டிருப்பது சுத்தமாகவே பிடிக்கவில்லை. அதை கௌரவக் குறைவாகவே பார்த்தனர். பலமுறை கண்டித்தும் இணக்கமாய்ச் சொல்லிப் பார்த்தும் தனசேகர் முரளியின் நட்பை விடாமல் வஜ்ரம் போல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டே இருந்ததால் “எக்கேடோ கெட்டுப் போ...எங்களுக்கென்ன?...நாளைக்கு ஒருத்தி வந்து அவள் பங்குக்குத் திட்டுவா...அப்ப அவளோட பேச்சைக் கேட்பே!” என்று விட்டுத் தொலைத்தனர்.

“இல்லை சேகர்...நான் இப்பத்தான் வந்தேன்...ஒரு அஞ்சு நிமிஷமிருக்கும்...அவ்வளவுதான்!” என்ற முரளி கடைக்காரர் பக்கம் திரும்பி “விஸ்வநாதண்ணே...ரெண்டு எலுமிச்சம் பழ ஜூஸ் போடுங்க!..சேகருக்கு சக்கரை தூக்கலா!” என்றான்.

“ஆமாம் கடைக்காரரே...கொஞ்சம் ஐஸும் நெறைய போட்டு...சும்மா “குளு..குளு”ன்னு குடுங்க” என்றான் தனசேகர்.

“ஆமாம்...எதுக்கு என்னைய இங்க வெய்ட் பண்ணச் சொன்னே?...எங்காவது போக வேண்டியிருக்கா?” முரளி கேட்டான். அப்போது கடைக்காரர் இரண்டு கண்ணாடி டம்ளர்களில் ஜூஸ் நிரப்பிக் கொண்டு வந்து நீட்ட இருவரும் வாங்கிக் கொண்டனர்.

முதல் வாய் பருகிய முரளி “ஸ்ஸ்ஸ்ஆஆஆ.... பயங்கரமா ஜில்லுன்னு இருக்கு” என்று சொல்ல

“முரளிக் கண்ணா இதை விட ஜில்லுன்னு ஒரு சமாச்சாரம் சொல்றேன் என் கூடக் கிளம்பி வா” என்றான் தனசேகர்.

“அதென்னடா...அப்படியொரு ஜில்லு மேட்டர்?” தலையைச் சாய்த்துக் கொண்டு முரளி கேட்க

“அது...சஸ்பென்ஸ்!...உடனே சொல்லக் கூடாது...” என்றபடி கண்ணடித்தான் தனசேகர்.

குடித்து முடித்த டம்ளரை தனசேகரிடமிருந்து தானே வாங்கி கடைக்காரரிடம் முரளி கொடுக்க, தனசேகர் தன் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்தான். “அடேய் சேகரா...இன்னிக்கு ஒருநாளாவது நான் பணம் குடுக்கறேண்டா” என்றபடி முரளி பனத்தை எடுக்க

“அந்த வேலையே ஆகாது...இன்னிக்கு நான் செம சந்தோஷத்துல இருக்கேன்...அதனால...நான்தான் குடுப்பேன்” என்றபடி தானே பணத்தைக் கொடுத்தான் தனசேகர்.

அப்போது “சர்”ரென்று வந்து நின்ற அந்த போலீஸ் ஜீப்பைப் பார்த்து இருவரும் ஒரு கணம் தயங்கி நிற்க, அதிலிருந்து இறங்கி வந்தார் இன்ஸ்பெக்டர் திவாகர்.

“ம்ம்…மிஸ்டர்…இங்க…பொன்னுரங்கம் அய்யா வீடு எங்கிருக்கு?” திவாகர் கேட்க,

அவர் குறிப்பிட்டுச் சொல்லும் அந்த பொன்னுரங்கம் தன்னுடைய தந்தை என்பதால் ஆர்வமான தனசேகர், “சொல்லுங்க சார்…நான் அவரோட மகன்தான்” என்றான்.

“ஓ…வெரி குட்” என்றபடி திவாகர் தன் கையை நீட்ட, தனசேகர் தயக்கத்துடனே குலுக்கினான்.

“நான் இந்த ஊர் ஸ்டேஷனுக்கு புதுசா வந்திருக்கற இன்ஸ்பெக்டர்…உங்கப்பாவைப் பார்த்து ஒரு அறிமுகம் செய்துக்கலாம்!னுதான் கேட்டேன்” என்றார்.

லேசாய்த் தயங்கிய தனசேகர், “சார்…நான் இப்ப அவசரமா ஒரு இடத்துக்குக் கிளம்பிட்டிருக்கேன்…இல்லேன்னா நானே எங்க வீட்டு வரைக்கும் உங்களைக் கூட்டிட்டுப் போயிடுவேன்” என்று சொல்ல.

“நோ பிராப்ளம்…நீ வழி சொல்லு…நான் போய்க்கறேன்” என்றார்.

தனசேகர் சொல்ல, “தேங்க் யூ யங் பாய்” சொல்லி விட்டு ஜீப்பை நோக்கி நடந்தார் திவாகர்.

“பரவாயில்லைப்பா…ரொம்ப நாளைக்குப் பின்னாடி நம்ம ஊர் ஸ்டேஷனுக்கு ஒரு நல்ல இன்ஸ்பெக்டர் வந்திருக்கார்” என்று அந்த டீக்கடைக்காரர் சொல்ல,

“அண்ணே…இப்பத்தான் அவரை முதல் முதல்லா பார்க்கறீங்க அப்புறம் எப்படிண்ணே…நல்லவர்!ன்னு சொல்றீங்க?” முரளி கேட்டான்.

“தம்பி!…தான் ஒரு இன்ஸ்பெக்டராயிருந்த போதும்…அந்த அகம்பாவம் கொஞ்சமும் இல்லாமல்…உனக்கொரு மதிப்புக் குடுத்து உன் கையைப் பற்றிக் குலுக்கினார் பாரு?...அது ஒண்ணு!...கடைசியா போகும் போது… “தேங்க் யூ”ன்னு சொல்லிட்டுப் போனாரு பாரு…அது ரெண்டு…இதிலேயே அவர் குணத்தை நான் புரிஞ்சுக்கிட்டேன் தம்பி”

சிரித்தபடியே தலையாட்டிக் கொண்டு, இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.

( தொடரும்)​
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
Dr.பொன் கௌசல்யா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
tholuvu appadina enna panankal ya.... jothi udhaya kalyanam nalla padiya nadanthu mudinjiduchu.... super
தெழுவுன்னா பதநீர்
அதை சில இடங்களில் "தெளிவு"-ன்னு சொல்லுவாங்க
பனங்கள் மாதிரித்தான்
ஆனால் அதில் சுண்ணாம்பு கலந்து தெளிய வைப்பாங்க
அதுதான் தெளிவு or பதநீர்
இது உடம்புக்கு ரொம்பவும் நல்லது
இந்த தெழுவில்தான் பனை வெல்லம் பனங்கருப்பட்டி பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன்
 

தரணி

Well-Known Member
தெழுவுன்னா பதநீர்
அதை சில இடங்களில் "தெளிவு"-ன்னு சொல்லுவாங்க
பனங்கள் மாதிரித்தான்
ஆனால் அதில் சுண்ணாம்பு கலந்து தெளிய வைப்பாங்க
அதுதான் தெளிவு or பதநீர்
இது உடம்புக்கு ரொம்பவும் நல்லது
இந்த தெழுவில்தான் பனை வெல்லம் பனங்கருப்பட்டி பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன்
Thanks பானுமா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top