யாருமிங்கு அனாதையில்லை - 10

Advertisement

pon kousalya

Active Member

“யாருமிங்கு அனாதையில்லை!”

(நாவல்)

எழுதியவர் :
பொன்.கௌசல்யா​

அத்தியாயம் 10

இயல்பாகவே இளகிய மனம் படைத்தவரான திவாகர், “கவலைப் படாதம்மா!...இந்த வீட்டுக்கு மாப்பிள்ளை ஆகணும்ன்னுதான் வந்தேன்...உன் அக்காவைக் கட்டிக்கிட்டாலும் இந்த வீட்டுக்கு மாப்பிள்ளைதானே?..நீ உன் விருப்பம் போல எவ்வளவு படிக்க ஆசைப்படறியோ அவ்வளவு படிம்மா!...என்னால முடிஞ்ச அளவுக்கு நானும் உதவறேன்!”

அங்கு நிகழும் ஒவ்வொன்றும் தன் எண்ணத்திற்கு எதிராகவே ஓட, பொறி கலங்கிப் போன சித்திக்காரி, “என்னய்யா...நீ இன்ஸ்பெக்டருங்கறதுக்காக இங்க வந்து உன்னோட அதிகாரத்தைக் காட்டறியா?...எங்களுக்கும் மேலிடம் தெரியும்...நாங்க அங்க போய்ப் பார்த்துக்கறோம்!” சும்மாவாகிலும் சொல்லிப் பார்த்தாள்.

“தாராளமாப் போங்க....அதுக்கு முன்னாடி இன்னோரு விஷயத்தையும் கேட்டுக்கிட்டுப் போங்க!” என்றவர் ஜோதியை நோக்கிக் கை நீட்டி, “இதோ...இந்தப் பெண்ணை தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்துக்காக முதல்ல உன்னையக் கைது செய்யறேன்!...அதுக்கு இந்த ஊரே சாட்சி இருக்கு!...அப்புறம் நீங்க அந்த மேலிடத்தோட செல்வாக்கை வெச்சு தப்பிச்சுக்கங்க....என்ன ஓ.கே.வா?” திவாகர் கொக்கி போட்டுப் பேச,

சட்டென்று முகம் மாறிப் போன சித்திக்காரி, தன் புருஷனைப் பார்த்து, “யோவ்...நீயெல்லாம் என்ன ஜென்மம்யா?...ஒரு மூணாம் மனுஷன் வீடேறி வந்து உம் பொண்டாட்டிய அதட்டிட்டிருக்கான்...நீ பாட்டுக்கு புடிச்சு வெச்ச புள்ளாராட்டம் பார்த்திட்டிருக்கியே!...உனக்கு ரோஷமே வராதா?...நீயெல்லாம் ஒரு ஆம்பளையா?” என்று கத்தி எந்த இடத்திலும் செல்லாத தன் கோபத்தை அந்த அப்பாவி ஜீவன் மீது திருப்பினாள்.

அப்போதும் ஜோதியின் தந்தை அதே நிலைப்பாட்டில் சிலையாய் நின்றிருந்தார்.

“த்தூ...நீயெல்லாம் சோத்துல உப்புப் போட்டுத் திங்கறியா?..இல்லையா?” மறுபடியும் அவள் அந்த மனிதரை வசை பாட,

விருட்டென்று தலையைத் தூக்கி அவளையே சில நிமிடங்கள் ஊடுருவிப் பார்த்த ஜோதியின் தந்தை, யாரும் எதிர்பார்க்காத வேளையில், மின்னலாய்ப் பாய்ந்து வந்து தன் மனைவியாகிய அந்த அரக்கியை ஓங்கிப் பேயறை அறைந்தார்.

எல்லோருமே ஒரு கணம் ஸ்தம்பித்து விட்டனர்.

“த பாருடி...இத்தனை நாளு...ஒரு மானம்...மரியாதைக்குக் கட்டுப்பட்டு என்னையே நான் அடக்கிக்கிட்டிருந்தேன்!...என்னோட கோபங்களையும், உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்திக்கிட்டிருந்தேன்!...எப்ப நீ என் மகளையே சாகடிக்கற அளவுக்குத் துணிஞ்சியோ...அப்பவே நான் என்னை மீறிட்டேன்!...நல்லவேளையா இந்த ஜோதி உசுரோட வந்திட்டா...ஒருவேளை நான் மட்டும் அவளைப் பொணமாப் பாத்திருந்தேன்னா...அடுத்த நிமிஷமே உன்னைப் பொணமாக்கிட்டு ஜெயிலுக்குப் போயிருப்பேன்!”

கன்னத்தில் விழுந்த அறை, உள்ளத்தையும் தாக்கி விட்டதில் உறைந்து போய் நின்றாள் சித்திக்காரி.

அப்படியொரு நிகழ்ச்சி நடந்து விட்ட பின் தொடர்ந்து அங்கு அமர்ந்திருப்பது நாகரீகமில்லை, என்பதைப் புரிந்து கொண்ட திவாகர், “சரி...நாம கிளம்புவோம்1” என்று எழுந்தார்.

அப்போது திவாகரை நெருங்கிய ஜோதி, “அப்பாவையும்...சவிதாவையும் நம்ம கூடவே கூட்டிக்கிட்டுப் போயிடலாமுங்க!” என்று கெஞ்சலாய்க் கேட்டாள்.

“ம்ம்ம்....தாராளமாக் கூட்டிட்டுப் போகலாம்...ஆனா இப்ப நம்ம கூட கூட்டிட்டுப் போக முடியாது..ஏன்னா...கார்ல இடம் பத்தாது!...வேணா ஒண்ணு செய்வோம்...நாம போயிட்டு காரைத் திருப்பியனுப்புவோம்...அதுல சவிதாவும் உங்கப்பாவும் வந்திடட்டும்!...என்ன சொல்றே?”

கண்களில் நன்றி கண்ணீராய் வடிய, அவரை உணர்ச்சி பொங்கப் பார்த்தாள் ஜோதி.

“சரி...சரி..ரொம்ப உணர்ச்சி வசப்படாத..” என்ற திவாகர் சவிதாவைத் தன் அருகில் அழைத்து, “த பாரும்மா...நாங்க போய் இறங்கிட்டு காரை அனுப்பறோம்..அதுல நீய்ம் அப்பாவும் கிளம்பி வந்துடுங்க...ஒருவேளை உங்க சித்தியும் மனசு மாறி உங்க கூட வர இஷடப்பட்டாங்கன்னா...அவங்களையும் கூட்டிட்டு வந்துடு!...பாவம்...அப்பா அடிச்சதுல ரொம்ப மனசு உடைஞ்சு போயிருப்பாங்க!” என்று திவாகர் சொல்ல,

அவரையே வியப்பாய்ப் பார்த்தனர் ஜோதியும், சவிதாவும், “என்ன மனிதர் இவர்...இத்தனை நேரம் ராட்சஸியாட்டம் கத்திக்...களேபரம் பண்ணி...இவரையே மரியாதை இல்லாமப் பேசினவ மேல கூட இரக்கத்தைப் பொழியறாரே!..”

ஜோதியை மட்டும் அழைத்துக் கொண்டு அவர்கள் கிளம்பினர்.

எல்லா மனங்களும் நல்லதையே நினைத்து...நல்லதையே எதிர்பார்த்து...ஓடிக் கொண்டிருக்க, ஒருவர் மட்டும் கெடுதல் செய்வதற்கென்றே காத்திருப்பர். அவர் வேறு யாருமில்லை...விதி அரக்கன்தான்.

இங்கும் அந்த அரக்கன் தன் கைங்கர்யத்தைக் காட்ட ஆரம்பித்தான்.

எல்லோரையும் ஏற்றிக் கொண்ட கார், அந்த இடத்தை விட்டு அகன்றதும், ஜோதியின் சித்தி தன் ருத்ர தாண்டவத்தைத் துவக்கினாள்.

“ஏய்யா..உன் பொணுக்கு இன்ஸ்பெக்டர் மாப்பிள்ளை கிடைச்சுட்டாருங்கற தைரியத்துல என் மேலேயே கையை வைக்கறியா?..உங்க ரெண்டு பேரையுமே இங்கிருந்து போக விட மாட்டேன்யா?...உங்களை...?” என்று சொல்லி விட்டு சுற்றும் முற்றுக் எதையோ தேடினாள் சித்தி.

சற்றுத் தள்ளி சமையலறைச் சுவரோரம் வைக்கப் பட்டிருந்த கெரஸின் கேன் அவள் கண்களில் பட, ஓடிப் போய் எடுத்தாள்.

பதறிப் போன சவிதா, “ம்மா..என்னம்மா?..எதுக்கு இப்ப அதை எடுக்கறே?” நடுங்கும் குரலில் கேட்டாள்.

“ஏய்...ஏய்...என்ன...என்ன பண்றே நீ?” அவள் தந்தையும் டென்ஷனானார்.

அவர்கள் கத்துவதைச் சிறிதும் காதில் வாங்கிக் கொள்ளாமல், அந்தக் கேனிலிருந்த கெரஸின் மொத்தத்தையும் தன் மேல் ஊற்றிக் கொண்டாள்.

முகமெங்கும் கெரஸின் வடிய, “இப்படியே தெருவுல போய்...ஊன் ஜனக்க முன்னாடி... “எங்க பொண்ணு ஜோதியை இன்ஸ்பெக்டர் விபச்சாரக் கேஸ்ல அரெஸ்ட் பண்ணிட்டு வந்து...எங்க கிட்ட விசாரணை பன்ணிட்டுப் போறார்!...அந்த அவமானம் தாங்காமத்தான் நான் தற்கொலை பண்ணிக்கறேன்”ன்னு சொல்லி...தீ வெச்சுக்குவேன்!...அப்புறம் நீயும்...உன் மக ஜோதியும்...ஏன் அந்த இன்ஸ்பெக்டரும் கூட நிம்மதியா வாழவே முடியாது!” ஆக்ரோஷம் வந்தவளாய் ஆடினாள்.

அவ்வப்போது வாய்க்குள் போய் விட்ட கெரஸினை பெருத்த ஓசையுடன் காறித் துப்பினாள்.

நடு...நடுங்கிப் போனாள் சவிதா.

திக்பிரமை பிடித்தவர் போல் நின்று விட்டார் சவிதாவின் அப்பா.

“தன் மகள்களுக்கு ஒரு நல்ல விடிவு காலம் பிறந்து விட்டது...ஒரு நல்ல மனிதருடன் இணைந்து விட்டார்கள்!...இனி தன்னை மரணமே தழுவினாலும் கவலையில்லை!...அந்த திவாகர் அவர்களிருவரையும் தன்னை விடச் சிறப்பாய் பார்த்துக் கொள்வார்!” என்று ஒரு புது நிம்மதியை அடைந்திருந்த அவர், தன் மனைவியும் அந்தக் கொடூரமான அதிரடித் தாக்குதலில் நிலை குலைந்து போனார். “ஆண்டவா!...முழுமையான நிறைவோட என் வாழ்க்கை முடியக் கூடாதுன்னே நீ முடிவு பண்ணிட்டியா?” உள்ளுக்குள் அரற்றினார். என செய்வதென்றே புரியாமல் தவித்தார். துடித்தார். தள்ளாடிச் சென்று சுவரோரம் சாய்ந்தமர்ந்தார்.

“அம்மா...வேண்டாம்மா!...வேண்டாம்மா!” சவிதா கண்ணீருடன் அம்மாவின் அருகில் செல்ல முயல,

“ஏய்...கிட்ட வராதடி...நாயே!...உனக்காகத்தான் நான் இத்தனை கஷ்டமும் படறேன்...ஆனா நீ அதைப் புரிஞ்சுக்காம “அக்காதான் பெரிசு...அப்பாதான் பெரிசு”ன்னு போறியா?... போ...போ..அங்க போயி சீரழிஞ்சு சின்னப்பட்டுப் போனப்புறம் தெரியும்டி இந்த அம்மாவோட அருமை!” சொல்லிக் கொண்டே சமையலறையை நோக்கிச் சென்றாள் அவள்.

மேனியெங்கும் வடியும் கெரஸினுடன் சமையலறைக்குள் புகுந்து தீப்பெட்டியைத் தேடிக் கொண்டிருந்த மனைவியை இங்கிருந்தே பார்த்தார் சவிதாவின் தந்தை. அவரது உள் மனம் கூவியது. “இவ கூட வாதம் செய்வதை விட, இவளையே வதம் செய்தால்தான் எல்லோருக்கும் நிம்மதி கிடைக்கும்!...அதுதான் உத்தமமான செயல்!...இல்லேன்னா இவள் என் குழந்தைகளை வாழ விடமாட்டா...!...அதனால..அதனால.....!”

எங்கிருந்துதான் வந்ததோ அத்தனை ஆவேசம்.. “விருட்”டென எழுந்து, வேக, வேகமாய்ச் சமையலறைக்குள் நுழைந்து அவளை முந்திக் கொண்டு அந்தத் தீப்பெட்டியைக் கைப்பற்றினார்.

“அப்பாடா” அப்பா எப்படியோ அம்மாவின் கைக்கு சிக்காமல் தீப்பெட்டியை எடுத்து விட்டார்!” என்று சந்தோஷப் பட்டாள் சவிதா.

“ஏய்...உன்னைத் தெருவுக்கு விட்டாத்தாண்டி ஊரைக் கூட்டிக் கூப்பாடு போடுவே?...உன்னைய இங்கியே வெச்சு எரிச்சுட்டா...என்னடி பண்ணுவே?” கேட்டபடியே தன் கையிலிருந்த தீப்பெட்டியிலிருந்து இரண்டு குச்சிகளைச் சேர்த்தெடுத்தார்.

சாது மிரண்டதில் பீதி கொண்ட சவிதாவின் அம்மா கணவரை வெறித்துப் பார்த்தாள்.

அவர் கண்களில் வெறி தாண்டவமாடியது.

அவள் கண்களில் அச்சம் அலை மோதியது.

சவிதாவின் கண்களில் குழப்பம் குவிந்தது.

ஒரு நிமிடம்...அரை நிமிடம்...கால் நிமிடம்...

“சவிதா நீ அங்கியா இரு இங்க வராதே” என்று சொல்லயவாறே தன் கையிலிருந்த இரு குச்சிகளையும் சேர்த்துப் பிடித்து ஒன்றாய் உரசினார்.

படீரென்று பற்றிக் கொண்ட அந்த நெருப்பை, திடீரென்று அவள் மீது எறிய, குபீரென்று அது பற்றிக் கொண்டு கொழுந்து விட்டெரிய...

எரியும் நெருப்பைச் சுமந்து கொண்டு, அங்குமிங்கும் அலறிக் கொண்டு ஓடினாள் சவிதாவின் தாயார்.

“அய்யோ..அய்யோ!...யாராவது காப்பாற்றுங்களேன்...யாராவது காப்பாற்றுங்களேன்!” நின்ற இடத்திலிருந்தே கதறினாள் சவிதா.

தான் இறுதி அத்தியாயத்தை நெருங்கி விட்டோம்!...தனக்குக் கொள்ளி போடப்பட்டு விட்டது...இன்னும் சில விநாடிகளில் தனக்கு இந்த உயிர்...இந்த உலகம்...எதுவுமே சொந்தமில்லை என்பதை பற்றியெரிந்து கொண்டிருக்கும் அந்த நேரத்திலும் தெளிவாக யூகித்துக் கொண்ட சவிதாவின் தாய், “நான் மட்டும் சாவது...இவர் உயிரோடு இருப்பதா?...விடக் கூடாது!” என்று எண்ணியவளாய், தன் கணவர் எதிர்பார்க்காத விநாடியில் ஓடிச் சென்று அவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.

நெருப்பின் வாய் தன் சூட்டுப் பற்களால் அவரையும் சேர்த்துக் குதற, அவர் அவளிடமிருந்து தப்பிக்க முனைந்து தாறுமாறாய் ஓடினார்.

பார்த்துக் கொண்டிருந்த சவிதா, தந்தையைக் காப்பாற்றி விடும் முனைப்பில் ஓடி வந்து அவரைப் பற்றி இழுக்கப் போக, அவளையும் இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் அவள் தாயார்.

மூவருமே தீயில் பொசுங்க ஆரம்பித்தனர்.

“விலுக்”கென்று சுய நினைவுக்கு வந்த சவிதாவின் அப்பா, மகளைக் காப்பாற்றி விட நினைத்து, தன் மொத்த பலத்தையும் பிரயோகித்து, அவளைத் தன் மனைவியிடமிருந்து பிரித்துத் தூரத் தள்ளி விட்டார்.

உடலெங்கும் தீக் காயங்களுடன் தள்ளிப் போய் விழுந்த சவிதா எளிதாய் மயக்கத்திற்குப் போனாள்.

முதுமையின் காரணமாய் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத சவிதாவின் தந்தை, அப்படியே சரிந்து, தன் மனைவியோடு சேர்ந்து. தரையில் விழ, தீக்கங்குகள் அவர்கள் இருவரின் உடலையும் மொத்தமாய் எரித்து விட்டு, உயிரை மட்டும் எடுத்து விண்ணுலகிற்கு அனுப்பி வைத்தது.
****
திவாகரின் வீட்டில்,

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் ஜோதியின் தந்தையையும், சவிதாவையும் கூட்டி வரச் சென்ற கார், திரும்பி வராது போனதில் குழப்பமடைந்த திவாகர், “என்னாச்சு ஜோதி...போன கார் இன்னும் திரும்பி வரவேயில்லை...ஒரு வேஐ உங்க சித்தி...தானும் வராம...உங்க அப்பாவையும், சவிதாவையும் போக விடாமத் தடுத்து ரகளை பண்ணிட்டிருக்கோ என்னமோ?” என்று கவலையுடன் கூற,

உதட்டைப் பிதுக்கிய ஜோதி, “எனக்கு எங்கப்பாவை நெனச்சாத்தான் ரொம்ப பாவமாயிருக்கு!” என்றாள்.

“ஏன்?...என்ன பாவம்?”

“சில சமயங்கள்ல எங்க சித்தி ரொம்பக் கோபப்பட்டு எங்கப்பாவையே அடிச்சிடுவாங்க!...அப்பக் கூட எங்கப்பா பொறுமையாப் பொறுத்துப் போயிடுவார்!...ஆனா...என்னிக்கும் இல்லாத வழக்கமா இன்னிக்கு எங்கப்பா எங்க சித்தியையே கை நீட்டு அடிச்சிட்டாங்க!...அதான் அதுக்கு எங்க சித்திகிட்ட என்ன பாடு படறாரோ?ன்னு நெனச்சுப் பார்த்தா வயிறு கலக்குது!” ஜோதி தழுதழுத்த குரலி சொல்லிக் கொண்டிருந்த அதே நேரத்தில்,

வாசலில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது.

“வந்துட்டாங்க போலிருக்கு...வாங்க போய்ப் பார்க்கலாம்!” ஆர்வம் உந்த வாசலுக்கு ஓடினாள் ஜோதி, திவாகரும் அவள் பின்னால் சென்றார்.

ஆனால், அவர்கள் எதிர்பார்த்த நபர்கள் யாருமே காரிலிருந்து இறங்கவில்லை. டிரைவர் மட்டும் பதட்ட முகத்துடன் இறங்கி, அவசர அவசரமாக அவர்களை நோக்கி வந்தான்.

“என்னப்பா டிரைவர் நீ மட்டும் வர்றே?...அவங்க வரலையா?” திவாகர் கேட்டார்.

முகமெங்கும் வியர்வை வழிந்தோட, வாய் பேச முடியாமல் திக்கித் திணரிய அந்த டிரைவர், திவாகரின் அருகில் வந்து அவர் காதில் அதைச் சொல்ல,

நெற்றியில் கையை வைத்துக் கொண்டு, “ஓ...மை காட்!” என்றார் திவாகர் உரத்த குரலில்.

“ஏங்க...என்னாச்சு?” ஜோதி தவித்தாள்.

‘அது...வந்து...” என்று தயங்கிய திவாகர், “நீ இங்கியே இரு ஜோதி!...நான் போய்ப் பார்த்திட்டு வந்துடறேன்!” சொல்லி விட்டு வேக, வேகமாக அவர் நடக்க,

டிரைவர் பக்கம் திரும்பிய ஜோதி, சன்னமான குரலில், “நீயாவது சொல்லுப்பா...என்ன நடந்திட்டிருக்குது அங்கே?”

டிரைவர் தர்மசங்கடமாய் திவாகரைப் பார்க்க, அவர் தலையாட்டி அனுமதி கொடுத்தார்.

“ம்மா...நான் அங்க போகும் போதே உங்க வீட்டுக்கு முன்னாடி ஒரே கும்பலாயிருந்திச்சு...நானும் போய்க் காரை நிறுத்திட்டு அவசர, அவசரமா உள்ளார போய்ப் பார்த்தேன்...அங்கே...அங்கே...” அவனால் மேலே தொடர முடியவில்லை.

“பரவாயில்லை தைரியமாச் சொல்லுங்க டிரைவர்...எப்படியும் அவங்களுக்குத் தெரியத்தானே போகுது?” திவாகர் சொல்ல,

“ம்மா...வீட்டுக்குள்ளார உங்க அப்பாவும்...சித்தியும் நெருப்புல கருகி...கரிக்கட்டையாக் கெடந்தாங்க!”

கேட்டவுடன் தன் இரு கைகளையும் எடுத்துக் கன்னத்தில் வைத்துக் கொண்டு, “அய்யோ...அப்பா!” என்று ஓங்கிய குரலில் அலறினாள். திடீரென்று தன் கத்தலை நிறுத்தி விட்டு, “சவிதா?” என்று கேட்டாள்.

“வந்து அவங்களுக்கு உயிர் இருந்ததினால, அக்கம் பக்கத்துல இருக்கறவங்க உடனே ஆம்புலன்ஸை வரவழைச்சு அவங்களை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிட்டாங்க!...ஆனா அவங்களுக்கும் நிறைய தீக்காயங்கள் ஏற்பட்டிருக்காம்!”

ஜோதியின் அலறலைக் கேட்டு பதறியபடி வந்து நின்ற திவாகரின் தாயாரும், தந்தையும் எதுவும் புரியாமல் விழித்தனர்.

தரையில் ஊர்ந்தபடியே வந்தான் கோபி.

தன் தாயாரையும், தந்தையையும் தனியே அழைத்துச் சென்று விபரத்தைச் சொன்ன திவாகர், “நான் இப்பவே அங்க போயி...நிலைமையைப் பார்த்துட்டுச் சொல்றேன்!...அப்புறம் நீங்க வாங்க!” என்று சொல்லி விட்டு வெளியேறினார்.

அப்போது அவர் எதிரில் வந்து நின்றாள் ஜோதி.

“என்னை மன்னிச்சிடுங்க!...நான் இங்க இருந்தா கண்டதை நெனச்சு...நெஞ்சு வெடிச்சே செத்துடுவேன்...ப்ளீஸ்!...என்னையும் உங்க கூடக் கூட்டிட்டுப் போங்க!” கண்ணீருடன் கெஞ்சியவளைப் பார்க்கவே பரிதாபமாயிருந்தது திவாகருக்கு.

“ஓ.கே!...கிளம்பு!” என்று சொல்லி அவளையும் அழைத்துக் கொண்டு காரில் ஏறினார்.
(தொடரும்)​
 

தரணி

Well-Known Member
அடகொடுமையே இப்படி ஒரு ஆங்காரம் இந்த லேடி க்கு இருந்து இருக்க வேண்டாம்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top