மாதவன் பூங்குழல் மந்திர கானமே... 12

Advertisement

மதுரயாழினி

Writers Team
Tamil Novel Writer
கனத்த முகத்துடன் மதுமித்ரா வாசல் அருகில் நின்று கொண்டு இருந்தாள். கடைக்கு சென்று விட்டு வந்த பார்வதி அவளைப் பார்த்ததும்., 'ஏன் வெளிய நிக்குறமா... உள்ள வா...' என்றுவிட்டு அவளைத் தாண்டி நடந்தாள்.

மதுமித்ரா அசைவில்லாமல் நிற்கவும் பார்வதி மீண்டும் அவளிடம் திரும்பி., 'மித்ரா... ' என்றாள். இம்முறையும் அவளிடம் சலனமில்லாததால் அவளைப் பிடித்து உலுக்கினாள்.

திடுமென்று நினைவு வந்தவளாய்., 'ம்மா.... என்னாச்சு... ' என்றாள் மதுமித்ரா...

பார்வதியும் நித்தியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்... நித்தி மதுவிடம் திரும்பி., 'அதை நாங்க கேட்கணும் மது... என்னாச்சு உங்களுக்கு... ஏன் வாசல்ல நிக்கிறீங்க...' என்றாள்.

மதுமித்ரா அமைதியாக அவர்களை கடந்து உள்ளே சென்றுவிட்டாள். எதிரே வந்த சஞ்சனா ஒரு நமட்டுச் சிரிப்புடன் அவளை இடிப்பதைப் போல் நடக்க மதுமித்ராவிற்கு உடலெல்லாம் என்னவோ போல் ஆகிவிட்டது.

சஞ்சனாவையே இப்படியென்றால் நந்தனின் நிலை இன்னும் மோசம்... அவன் மேல் பட்ட காற்று கூட தன் மேல் படாத அளவிற்கு நகன்று கொண்டாள்.

மதிய உணவின் போது மதுமித்ரா மட்டும் பசிக்கவில்லை என பார்வதியிடம் மறுத்துவிட, பார்வதிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை...

'என்ன ஆச்சு மித்ரா உனக்கு... காலைல இருந்து நீ சரியாவே இல்லை... என்ன நடந்திடுச்சு இப்போ ' என்று கரிசனத்துடன் விசாரித்தாள் பார்வதி...

இதற்கு மேல் வேறு என்ன நடக்க வேண்டும் என மனதினுள் நினைத்துக் கொண்டாலும் அதை வெளிக்காட்டாமல்., 'அம்மா அப்பா நியாபகமாவே இருக்கும்மா...' என்றாள்.

சஞ்சனாவிற்கு அவள் முக வாட்டத்திற்கான காரணம் தெளிவாய் புரிந்து போயிற்று. அவளை வீட்டை விட்டு வெளியேற்றுவதற்கான கடைசி அஸ்திரமாய் இதை பயன்படுத்தி இருந்தாள். இப்போது மது முகத்தைப் பார்க்கவும், 'அபித்தான் உனக்கு தான் சஞ்சு... ' என அவளது மனம்‌ துள்ளாட்டம் போட்டுக் கொண்டு இருந்தது...

பார்வதிக்கு இதற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. நந்தன் அவளது முகத்தை பார்த்துக் கொண்டே இருந்தான். பரிதாபத்தில் தான்.. ஆனால் மதுமித்ராவிற்கோ அதுவே இம்சையாக தெரிந்தது... இரண்டு மூன்று முறை கழுத்தை மாறி மாறி திருப்பிக் கொண்டே இருந்தவள்., அவன் பார்வையைத் தாங்காமல் உள்ளே எழுந்து சென்றுவிட்டாள்.

குளியலறைக்குள் சென்றவள் அரைமணி நேரம் வெளியே வரவே இல்லை... அடுத்து வெளிவந்தவளின் முகம் வீங்கி இருந்தது... கண்களைத்‌ திறக்க மாட்டாமல் திறந்திருந்தாள். பார்வதி அவளைத் திரும்பிப் பார்த்தவுடன்., 'ம்மா... நான் எங்க வீட்டுக்கு போறேன்... ' என்றாள்.

திடுக்கிட்டு நிமிர்ந்தாள் நித்தி... பார்வதி வினாவாய் நோக்க., சஞ்சனாவின் முகத்தில் வெற்றிக் களிப்பு.. நந்தனுக்கு கஷ்டம்‌தான் என்றாலும் அவள் நிம்மதியாய் இருப்பாளே என்று ஒரு ஆறுதல்.. நீண்டதொரு மௌனம் நிலவியது அங்கே..

'எதுக்கு மது...' என்றாள் நித்தி மௌனத்தை உடைத்துக் கொண்டு...

'அம்மா அப்பா நியாபகம் ஸ்ரீநிதா... சொன்னேனே... ' என்றாள் வேறு எங்கோ பார்த்த வண்ணம்...

'அப்படின்னா நீ போகணும்னு முடிவு பண்ணிட்ட... என்ன!! ' என்றாள்‌ பார்வதி ஒரு விரக்திக் குரலில்...

சஞ்சனாவிற்கு அத்தை மேல் ஆத்திரமே வந்துவிட்டது..‌ 'அசட்டு அத்தை... இந்தப் பெண்ணை இங்கேயே வைத்துக் கொள்ளலாம் என நினைத்தாளா... அந்த மது என் அபித்தானின் மேல் விழுந்து கிடந்த அன்று எவ்வளவு துடித்திருப்பேன்... எவ்வளவு யோசித்து இந்த வழியைக் கண்டு பிடித்தேன்.. கொஞ்சம் பிசகி இருந்தாலும் அபித்தான் கொன்றே போட்டிருப்பான். இந்த அத்தையானால் எல்லாவற்றையும் உடைக்கப் பார்க்கிறாளே... ' என மனதினுள் நொந்து கொண்டாள்...

'சொல்லு மித்ரா.. நீ உங்க வீட்டுக்கு போகணும் அப்படித்தானே...' என்றாள் மீண்டும்..

' ஆமாம்மா...' வார்த்தை தெளிவாய் வந்தது..

'ரைட் மித்ரா நீ போகலாம்... ஆனா சாப்பாடு இங்கதான்‌ சரியா... ' என்றாள்.

நால்வருக்குமே அதிசயம்‌ தான். பார்வதி விடவில்லை என்றாலும் போராடியாவது சம்மதம் பெற வேண்டும் என மதுமித்ரா நினைத்திருந்தாள். இப்போது அதற்கு வேலையில்லை.. சஞ்சனாவிற்கு மகிழ்ச்சியே... நித்தி தான்., 'ஏன்ம்மா...' என்றாள்.

ஒரு விரலை நீட்டி., நித்தியை அடக்கிவிட்டு., 'ஆனா ரெண்டு முக்கியமான விஷயம்... முதலாவது... நீ ஒரு வாரம் உங்க வீட்டுல தங்கிக்க... பிறகு இங்க தான் வரணும்... வயசுப் பொண்ண தனியா விடுற அளவுக்கு நான் கல் நெஞ்சக்காரி கிடையாது... நீ என்ன அம்மானு நிஜமா நெனச்சா இது கட்டாயம்... ' என்றவள் சிறிய இடைவெளி விட்டு., 'இரண்டாவது நித்தி உன் கூட தான் தங்குவா ஒரு வாரமும்... இது ரெண்டும் சரிதான்னா... நீ தாராளமா போகலாம்... ' என முடித்தாள்...

நித்தி முகத்திலும் நந்தன் முகத்திலும் இப்போது தெளிர்ச்சி... சஞ்சனாவிற்கோ இன்னும் மகிழ்ச்சி‌.. தானும் அபித்தானும் மட்டும் வீட்டிலா... மதுமித்ரா யோசனையாய் நோக்கிவிட்டு., 'சரிம்மா... ' என ஒப்புக்கு தலையாட்டி வைத்தாள்.

வேக வேகமாக தன் உடைமைகளை அடுக்கியவளை பார்வதி வினோதமாக பார்த்தாள். அவளது முகத்தில் இருப்பது என்ன என்பதனை அவளால் கண்டு கொள்ளவே முடியவில்லை.. ஆனால் நந்தன் அணைத்தது மட்டும் தான் அவளுக்கு பிரச்சனை என்று தோன்றவில்லை பார்வதிக்கு.. இடையில் சில நாட்கள் நன்றாகத் தானே பேசினாள் என்ற எண்ணம்...

மதுமித்ரா அன்று இரவே நித்தியுடன் அவளது வீட்டிற்கு சென்றுவிட்டாள். காலையில் நந்தன் உணவு கொண்டு வந்து கொடுத்துவிட்டு செல்வான். மதியம் கல்லூரியில்.. இரவுக்கும் உணவு வீட்டிற்கு வந்துவிடும்...

நந்தனோ இரவு 11 மணியைத் தாண்டி தான் வீட்டிற்கு வந்தான். உணவை மட்டும் வாசலில் நின்று கொடுத்துவிட்டு செல்வான். இதற்கிடையில் அத்தைக்கு உதவி செய்கிறேன் என சஞ்சனா செய்தது எதுவும் பார்வதியின் மனதில் பதியவில்லை..

மதுமித்ரா அவளது வீட்டில் கொஞ்சம் நிம்மதியாய் உணர்ந்தாள். அவனைப் பார்க்காமல் இருப்பது சின்னதாய் கவலை அளித்தாலும், சஞ்சனாவின் முகத்தில் முழிக்காமல் இருப்பதே நிம்மதிக்கான காரணமாய் தோன்றியது.. இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருப்பது வழக்கமானது... ஒரு வாரம் வேகமாய் முடியக் கூடாது என வேண்டிக் கொண்டாள்.

புதன் கிழமை இரவு 7 மணி போல் நந்தன் உணவு கொடுக்கவென்று வந்திருந்தான்... நித்தி தூங்கிக் கொண்டு இருக்க மதுமித்ரா தான்‌ அழைப்புமணி ஓசை கேட்டு வெளியே வந்தாள். நந்தனை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை... அவன் எப்போதும் எட்டு மணிக்கு தான் வருவான்.. அவனைப் பார்த்ததும் தயங்கியவள் வாசலில் நிற்க வைத்தே எப்படி பேசி அனுப்புவது., அவனை உள்ளே வரச்சொல்லலாமா என நினைத்துக் கொண்டே மெல்ல கதவைத் திறந்தாள். அவன் அவளது முகத்தைப் பாராமலேயே., தான் கொண்டு வந்த கேரியரை வைத்துவிட்டு சென்றுவிட்டான்..

'அபிநந்தன்... ' என்றழைத்தாள்.

ஒரு கணம் நின்றவன் பின் திரும்பி கேள்வியாய் அவளை நோக்கினான்.

'உள்ள வாங்க...' என்றாள்.

அவள் ஒன்றுமே பேசாததைப் போல் அவன் மீண்டும் நகன்றுவிட்டான். அவளுக்கு என்னவோ போல் இருந்தது... அவனது பாராமுகம்‌ அவளை‌ என்னவோ செய்தது... அவன் மேல் தவறில்லையோ என ஒரு முறை யோசித்தாள்.

ஆனால் கண்ணால் கண்டது எதுவும் பொய் இல்லையே... தானும் அனுபவப் பட்டது தானே... என தன்னை சமாதானப் படுத்திக் கொண்டாள்... அடுத்து வந்த நாட்களும் அவன் மதுமித்ராவைக் கண்டானில்லை.. ஒரு முறையாவது பார்த்திடமாட்டானா என மனம் அடிக்கடி ஆசை அலையை எழுப்பியது... அங்கேயே மீண்டும் சென்றுவிடலாமா... இன்னும் 3 நாட்கள் இருக்கின்றனவே...
சட்டென்று மாட்டியிருந்த அம்மாவின் புகைப்படத்தின் மேல் இருந்து ஒரு பூ வந்து விழுந்தது...

'இதை எப்படியம்மா எடுத்துக் கொள்ள... அவன் நல்லவனா கெட்டவனா... வழிகாட்டுங்கள் அம்மா... ' என கண்களை மூடி வேண்டிக் கொண்டாள்.

மனது அமைதியை சுத்தமாய் இழந்திருந்தது... அவளுக்கு அபிநந்தனைப் புரியும் நாளும் நெருங்கிக் கொண்டு இருந்தது...
 

banumathi jayaraman

Well-Known Member
இவளிடம் காதலைச் சொல்லும்
அபிநந்தனை, அவனோட
உண்மையான காதலை
இன்னுமா மதுமித்ரா புரிந்து
கொள்ளவில்லை?
அபியை, எப்பொழுது மது
புரிந்து கொள்ளுவாள்?

என்ன சம்பவம் நடக்கப்
போகிறது, மதுரா டியர்?
சஞ்சனாவின் நீலச் சாயம்
வெளுக்கப் போகிறதா?

அபி ரொம்பவும் நியாயவான்
தானும் ஒரு பெண்ணுக்கு
அண்ணன்-னு பொறுப்பு
உணர்ந்து மதுவிடமிருந்து
விலகியே நிற்கிறான்
சபாஷ், அபிநந்தன் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top