பதினெட்டாம் படி கருப்பணசாமி

Advertisement

SahiMahi

Well-Known Member
திருமாலிருஞ்சோலை 18ம் படி கருப்பண்ண சுவாமி :
---------------------------------------------------------------------

சித்திரைத் திருவிழா என்றதும் நம் நினைவுக்கு வருவபர் கள்ளழகர்தான். தமிழ் கூர் நல்லுலகின் ஆகச் சிறந்த வைணவ திருத்தலமான அழகர் கோவிலின் மகிமை 'ஆக்னேய புராணம்', 'ஹாலாஸ்ய (மதுரை) மஹாத்மியம் போன்ற பல்வேறு புராணங்களிலும் சொல்லப்பட்டிருப்பதோடு ஆழ்வார்களின் 123 பாசுரங்களிலும் பாடப்பட்டிருக்கிறது.

பிற்கால இலக்கியங்களான, 'அழகர் கலம்பகம்', 'அழகர் அந்தாதி', 'அழகர் கிள்ளை விடுதூது', 'சோலைமலைக் குறவஞ்சி' ஆகிய நூல்கள் அழகர் கோயிலின் சிறப்பைப் போற்றுகின்றன

சிலப்பதிகாரத்தில், முக்திதரும் இந்தத் தல மகிமைகள் குறித்து கவுந்தியடிகள், கோவலன் கண்ணகிக்கு எடுத்துக் கூறுகிறார்.

இத்தனை சிறப்புகளை உடைய அழகர் கோயில், ஆழ்வார்களால் பாடப்பட்ட வைணவத்தலம் மட்டுமன்று. அது, பதினெட்டாம்படிக் கருப்பன், விநாயகர் வழிபாடு, பைரவர் வழிபாடு என்று பல்வகையான வழிபாடுகளையும் தன்னுள் அடக்கி, அனைத்துத் தரப்பு மக்களும் வந்து தொழும், பண்பாட்டுப் பொக்கிஷமாகத் திகழ்கிறது.

அழகர் கோயில் மூலவருக்கு 'பரமஸ்வாமி' என்று பெயர். நின்றகோலத்தில் எழிலுற ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் எழுந்தருளியிருக்கும் இந்த இறைவனின் உற்சவருக்கே 'அழகர்' என்று பெயர். ‘சுந்தரராஜன்’ என்பது பெயரில் மட்டுமல்ல, அவரின் தோற்றமும் கொள்ளை அழகு. உலகில் இவர் அழகுக்கு நிகரான உற்சவ மூர்த்திகள் இல்லை என்பது அனைவரின் கருத்து. இதனை கேட்டறிந்த மலையாள தேசத்தைச் சேர்ந்த லாடர்கள் என்ற கள்வர் கூட்டம் ஒன்று நம் அழகரின் தேஜஸ்-ஐ(வசீகரத்தை/அழகை) கவர்ந்து செல்ல திட்டமிட்டது. அங்கிருந்து கிளம்பி தங்களின் துணையான தங்களின் தெய்வத்தையும் துணைக்கு அழைத்துக் கொண்டு அழகர் மலையை சென்று சேர்ந்தது.

பக்தர்கள் போல பிரகாரத்தில் நுழைந்து தங்களின் வழகப்படி தாங்கள் தயாரித்த மந்திர மையை கண்களின் இமைகளில் பூசிக்கொண்ட கள்வர்கள் யார் கண்களிலும் தென்படவில்லை. அவ்வாறே மறைந்திருந்து கொண்டு மந்திரத்தை செபிக்க துவங்கி நம் பராமசாமியின் தேஜஸை கவர்ந்து மண்பானையில் அடைக்க ஆரம்பித்தார்கள்.

நாட்கள் செல்லச் செல்ல எம்பெருமானின் சோபையில் மாற்றம் கண்ட தலைமை குருக்களும் ஐயனை தொழுது வேண்டவே கயவர்களின் திட்டத்தை முறியடிக்கத் திருவுள்ளம் கொண்ட பெருமாள், பட்டரின் கனவில் தோன்றி மந்திரவாதிகள் குறித்து எச்சரித்து மறைந்தார். கண்விழித்த பட்டரோ, மந்திரவாதிகளைப் பிடிக்க தக்கார் மற்றும் குழுவினரோடு ஆலோசித்து ஓர் உபாயம் செய்தார்.

மறுநாள் காலை நிவேதனத்துக்கு வழக்கமாகச் செய்யும் பொங்கலை பெரும் அளவில் அண்டாக்களில் செய்து ஆள் உயர வாழை இழைகளில் கொட்டி கதவை மூடிவிட்டனர். பொங்கலில் பரந்த நீராவி பிரகாரம் எங்கும் பரவி கள்வர்கள் கண்களில் பட்டு உருகி கண் இமைகளில் இட்டிருந்த மை அழிந்தது. மை அழிந்ததும், அவர்களின் மாய சக்தி மறைந்து அவர்களின் உருவமும் வெளிப்பட்டது. உடனே, அங்கிருந்த காவலர்கள், அவர்களைப் பிடித்துக் கொன்றனர். அவர்கள் 18 பேரையும் படிக்கு ஒருவராய் புதைத்தனர். மந்திரவாதிகளுக்குத் துணையாக வந்த காவல் தெய்வத்தையும் மந்திர சக்தியால் பிடித்துக் கட்டினர்.

அந்தத் தெய்வமோ, சுந்தர தோளுடையானின் அழகில் மயங்கி, தான் இனி இங்கிருந்து அழகருக்குக் காவல் செய்வதாகச் சொல்லியது. அதற்குக் கூலியாகத் தினமும், அழகருக்குச் செய்யப்படும் அர்த்தஜாம நிர்மால்ய நிவேதனங்களைத் தனக்கு வழங்க வேண்டியது என்றும் அழகருக்குக் போட்டு கழற்றிய கதம்ப மாலை தனக்கு அணிவிக்க வேண்டியது எனவும் கரிப்பத்து சோறு படையலாய் இட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது. அதற்கு எல்லோரும் சம்மதிக்க இன்றளவும் பதினெட்டாம்படிக் கருப்பாக இருந்து அழகரைப் பாதுகாக்கிறது. அது லாடர்களுக்கு துணையாய் வந்ததால் லாடசாமி என்றும் அழைக்கப் படுகிறது. இன்றும், ஆலயம் மூடியதும் சாவியைப் பதினெட்டாம்படிக் கருப்பின் சந்நிதியில் கொண்டு வந்து வைக்கும் வழக்கம் உள்ளது.

ஆலயத்தின் சொத்துகள் முழுமைக்கும் அவர்தான் காவல். 'அரங்கன் சொத்து, அழகர் அங்கவடிவுக்கும் காணாது' என்று சொல்லும் படியாக அழகருக்கு மிகுதியான ஆபரணங்கள் உண்டு. திருவிழாவுக்காக அழகர் வெளியே செல்லும்போது பதினெட்டாம்படிக் கருப்பனிடம், அவர் என்னென்ன நகைகள் அணிந்து செல்கிறார் என்று பட்டியல் வாசித்துக் காண்பித்துச் செல்ல வேண்டும். அதேபோல திரும்பும்போதும், அதே நகைகள் வந்திருக்கின்றனவா என்பதையும் உறுதிசெய்தே உள்ளே செல்ல வேண்டும்.

பதினெட்டாம்படியின் வாசலாக இருக்கும் கருப்பனுக்கென்று உருவம் இங்கு இல்லை. பெரும் கதவே கருப்பனின் வடிவாக வணங்கப்படுகிறது. எப்போதும் மூடியே இருக்கும் இந்தக் கதவு, பிரம்மோற்சவத்தில் சக்கரத்தாழ்வார் எழுந்தருளலுக்காக மட்டுமே திறக்கப்படும். மூடியிருக்கும் கதவுக்கே இங்கு பூஜைகள் நடைபெறுகின்றன.

பதினெட்டாம்படிக் கருப்பின் காவலைத் தாண்டி எதுவும் உள்ளே செல்ல இயலாது. தினமும் நூபுர கங்கையில் இருந்து அழகருக்குக் கொண்டுவரப்படும் தீர்த்தத்தைக் கருப்பனின் சந்நிதியில் வைத்து, அது தூய்மையாகக் கொண்டுவரப்பட்டது என்று பிரமாணம் செய்தபின்னே உள்ளே கொண்டு செல்ல இயலும். கருப்பனிடம் செய்யும் பிரமாணம் நீதி தேவன் சந்நிதியில் செய்யும் பிரமாணத்துக்கு இணையானது.

இந்தத் தலத் தீர்த்தங்களின் அதிதேவதையான ராக்காயி அம்மனுக்கு அமாவாசையன்றும், பதினெட்டாம்படிக் கருப்புக்கு பௌர்ணமியன்றும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
 

Amburi

Well-Known Member
இது வரை இப்படி ஒரு தல வரலாறு கேட்டதில்லை. மிகவும் அருமையான கட்டுரை. Thank You for the valuable information sis. Super information.(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top