'நெஞ்சமெல்லாம் அலரே !!' - 52

Advertisement

Priyaasai

Active Member
அகனலர் - 52.1

View attachment 11109


பிரசவ வலியை தாங்க இயலாமல், "போதும் வேண்டாம் விட்டுடுங்க" என்று கதறியவாறே அலர் மயங்கியதிலேயே எழில் உருக்குலைந்து போயிருக்க அதை மேலும் அதிகபடுத்துவது போல இருந்தது கண்விழித்தவளின் பார்வை. ஆம் மயங்கிய அலருக்கு உடனே சிகிச்சை அளித்த செவிலியர் அடுத்த சில நிமிடங்களில் அவளை கண்விழிக்க செய்திருக்க பாரமாகி போயிருந்த இமைகளை கடினப்பட்டு திறந்தவளின் விழிவட்டத்தில் பதிந்தது என்னவோ வியர்வையில் குளித்து நிறமிழந்து உணர்வுகள் தொலைத்த எழிலின் முகமும் பதட்டத்துடன் மருத்துவரிடம் வாதிட்டு கொண்டு இருந்தவனின் உடலில் அப்பட்டமாக வெளிப்பட்ட நடுக்கமும் தான்.


அலைபாய்ந்த விழிகளை அச்சம் மேவிய எழிலின் முகத்தில் நிலைக்க விட்டு அவன் உணர்வுகளை உள்வாங்கியவளுக்கு அந்நொடி மின்னலென இடையை கவ்வி பிடித்த வலியை கூட உணரமுடியாமல் போனது அவன் துடிப்பை கண்டு..!! ஆம் இத்தனை நாட்களாக மசக்கையில் அவதி பட்டவளுக்கு வாந்தி, சோர்வு, குமட்டல், ஓவ்வாமை, கால்வலி, தூக்கமின்மை போன்ற பொதுவான அறிகுறிகள் இருந்தாலும் அவற்றில் எல்லாம் மகிழ்வுடன் பங்கு கொண்ட எழில் மிக இயல்பாக அலரை கடக்க செய்திருந்தான்.


ஆனால் நேற்று ஏற்ப்பட்ட பால்ஸ் பெயின் போது அதை தாங்க இயலாமல் பரிதவிப்பு அதிகரிக்க ஒளியிழந்த விழிகளுடனும் கசங்கிய முகத்துடனும் அவள் பின்னேயே எழில் திரிந்து கொண்டிருந்தது எல்லாம் நினைவில் வர அப்போதுதான் அவளுக்கு முக்கியமான நினைவு வர தன்னையே நிந்தித்து கொண்டாள்.


ஆம் திருமணமான முதல் மாதத்தில் இருந்து அவள் கருவுற்ற நாள் வரையில் அலரின் மாதாந்திர நாட்களில் அவளை விட்டு இம்மியும் நகராதவன் முதல் இரு நாட்கள் அவள் வேண்டாம் என்று மறுத்தாலும் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்து கொண்டு நாள் முழுக்க அவளருகேயே இருந்து கவனித்து கொள்பவன் அந்நேரங்களில் கடும் வயிற்று வலியில் அவதிப்படுபவளை கண்டு துடிதுடித்து போய் அதை போக்க அவனால ஆனதை இயன்றவரை செய்பவன் ஒரு முறை அவளின் துடிப்பை காண சகியாமல் கண்ணீர் விடவும் அரண்டு போனாள் அலர்விழி.


வலியும் வேதனையும் பெண்களுக்கு ஒன்றும் புதிதில்லை என்று அவனுக்கு எடுத்து சொன்னாலும் தன் சிறு சுணக்கத்தை கூட பொறுக்க முடியாது அந்நேரங்களில் அவளை விட்டு அகலாது அடைக்காப்பவன் இன்று அவளின் இத்தனை பெரிய வலியை எங்கனம் தாங்குவான்.!! என்று கூட யோசிக்காத தன் முட்டாள்தனத்தை அப்போது தான் உணர்ந்தாள். ஆனால் அவள் அதை உணர்ந்த நொடி காலம் மிகவும் கடந்து விட்டிருந்ததையும் தன்னவன் சுக்குநூறாக சிதறி போனதையும் அவள் அறியாள்..!!!


தன் மீதான கணவனின் கரை கடந்த காதலை இத்தனை மாதங்களாக அனுபவித்து கொண்டிருந்தவள் பிரசவத்தின் போது அவன் உடன் இருக்க வேண்டும் என்று அவள் நிலையில் இருந்து சுயநலமாக யோசித்தாளே தவிர அவளின் பிரசவ வேதனை அவனிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கணிக்க தவறி இருந்தாள்.


**


எழிலின் மீதே நிலை கொண்ட அவள் விழிகள் தன்னால் அவன் சிறுக சிறுக உடைத்து கொண்டிருப்பதை கண்டு கலங்கிட இனியும் அவனை வருந்த விடக்கூடாது என்று மனதினுள் அலர் சூளுரைக்க அதே நேரம் மருத்துவரின் 'புஷ் அலர்' என்ற கட்டளை அவள் செவி தீண்டினாலும் அதற்கு வினையாற்ற இயலாமல் விம்மும் நெஞ்சோடு தன்னவனை மனதினுள் நிறைத்து கொண்டிருந்தாள்.


தன் மீது பதிந்திருந்த அவள் விழிகளின் ஈரம் உணர்ந்ததில் நொடிக்கும் குறைவாக தடுமாறிய அகனெழிலன் அதன்பின் அவளிடம் இருந்து தன் உணர்வுகளை மறைக்க அரும்பாடு பட்டு போனான்...


அதிலும் அவளை தேற்றும் விதமாக ஆறுதல் கூற முற்ப்பட்டவனின் உடைந்த குரலில் அலரின் விழிகள் மேலும் கலங்குவதையும் அதை தொடர்ந்த மருத்துவரின் 'குழந்தை தலை வெளியே தெரியுது இன்னும் கொஞ்சம் தான் அலர் புஷ்' என்ற கட்டளைக்கு வலியில் துடிக்கும் உதடுகளை இறுக கடித்து அவன் வலக்கரத்தை அழுத்தமாக பிடித்தவளின் நிலையே அவள் வலியை சொல்லாமல் சொல்வதை கண்டு அவள் மீது பார்வையை படர விட, அவன் விழிகளில் வழிந்த உணர்வுகளில் அலர் அதிர்ந்து போனாள்.


ஆம் என்றுமே சீண்டலும், காதலும்,தேடலுமாக அவள் மீது படியும் அவன் பார்வை இன்று அச்சத்துடனும் இன்னதென்று பிரித்தரிய இயலா புது உணர்வுடனும் படிவதை கண்டு திகைத்து போனவள் அவ்வுணர்வை நீடிக்க விடுவது நல்லதில்லை என்பதை உணர்ந்து இறுதியாக மூச்சை அடக்கி அடுத்த இரு நிமிடங்களில் தன் மகனை பூமியில் அவதரிக்க செய்திருந்தாள்.


அலர் குழந்தையை பிரசவித்த நொடி ஆர்பரிக்கும் மனதுடன் அலர்விழியை தலை முதல் கால் வரை வருட தொடங்கியவன் தன் உணர்வுகளை மறைக்க அரும்பாடு பட்டு போனான். இயல்பிலேயே மெல்லிய தேகம் கொண்டவள் கருவுற்ற பின்னர் சரியான முறையில் அவளை சிரத்தை எடுத்து கவனித்தாலும் இதோ பிரசவ நாள் வரையிலுமே உண்ணும் உணவு வயிற்றில் தங்காமல் போக எவ்வாறு அவள் வலியை தாங்கி பிரசவிக்க போகிறாளோ என்ற பதட்டத்துடனே இருந்தவனுக்கு ஒரு உயிரின் ஜனனம் எத்தனை வலி, வேதனைக்கிடையில் நடைபெறுகிறது என்பதை கண் முன்னால் கண்டவனுக்கு இன்னும் அதன் தாக்கத்தில் மீள முடியவில்லை. அதிலும் தன் மகனை ஜீவிக்க சற்று முன் வாழ்விற்கும் சாவிற்கும் இடையில் அவள் நடத்தய போராட்டம் அகனெழிலனின் அகத்தை விட்டு அகல மறுக்க இப்போது அவனுள் பெரும் போராட்டம்.


தாயின் ஸ்பரிசம் வேண்டி மகனை அலர் மார்பின் மீது வைத்திருக்க, முகம் கொள்ளா பூரிப்புடன் "மாமா அப்பு வந்துட்டான், பாருங்க" என்று மெல்லிய குரலில் சோர்வுடன் கூறியவளை கண்டவனுக்குள் சிறு அதிர்வு.


இருக்காதா பின்னே..!! மருத்துவர் கூறியது போல அவளின் வலியும் வேதனையும் குழந்தையை கண்ட நொடி மாயமாய் மறைந்திட அவளையும் மீறி கண்ணீர் கசிந்திருந்த விழிகளில் மகிழ்வும் பெருமிதமும் போட்டி போட தன்னிடம் குழந்தையை காட்டி புன்னகை புரிந்திருந்த மனைவி அவனை ஆச்சர்ய படுத்தியிருந்தாள். ஆம் இது தான் பெண்கள், எத்தனை பெரிய வலி, போராட்டமாக இருந்தாலும் கத்தி கூப்பாடு போட்டு ஆர்பாட்டம் செய்பவர்களின் முகத்தில் அவர்களையும் அறியாமல் குழந்தையின் பூமுகத்தை கண்ட அடுத்த நொடி ஏற்ப்படும் கலப்படமில்லா புன்னகையும், அதன் ஸ்பரிசத்தில பட்ட வேதனை அனைத்தும் துணி கொண்டு துடைத்தார் போல காணாமல் போய் விடும்.


ஆனால் எழிலால் தான் அதன் தாக்கத்தில் இருந்து வெளி வர முடியவில்லை. என்றுமே பெண்களை மதிப்பவன் தான் என்றாலும் தாய்மையின் ஒவ்வொரு படிநிலைகளும் அவனுக்கு பெண்கள் மீதான மதிப்பை உயர்த்தியது என்றால் இப்போது தன்னலமற்ற தாய்மையின் உச்ச நிலையை கண்டவன் ஒரு வித பக்தியுடன் பிரமிப்பில் அமிழ்ந்து போனான்.


அலர் குழந்தையை குழந்தையை பற்றி கூறுகையில் அவன் விழிகள் இயந்திர தனமாக குழந்தையின் புறம் திரும்பியதே தவிர அலரிடம் தென்பட்ட பூரிப்போ பெருமிதமோ அவன் முகத்தில் சுத்தமாக இல்லை. நொடிக்கும் குறைவான நேரமே அவன் பார்வை குழந்தையின் மீது பதிந்து மீள மறுநொடியே அவன் விழிகள் குழந்தையை பிரசவித்திருந்த தன்னவளின் நிலையை தான் ஆராய்ந்தது. அதிலும் சக்தி அனைத்தும் வடிந்த நிலையில் துவண்டு போய் கிழிந்த நாராக படுத்திருந்தவளின் முகத்தில் அரும்பிய புன்னகை கூட பெரிதாக அவனை ஈர்க்காமல் போக அவன் மனமோ இத்தனை நேர அவள் வேதனையையே அசைபோட்டு கொண்டிருந்தது.


அவன் நிலையை சரியாக உணர்ந்திருந்த மருத்துவரோ, "லுக் அட் யுவர் வைப் எழிலன்" என்று அவனை அழைக்கவும் அவர் புறம் பார்வையை திருப்ப, "நவ் ஷீ இஸ் ஆல்ரைட், நான் சொன்ன மாதிரியே குழந்தையை பார்த்ததும் அலர் முகத்துல எவ்ளோ சந்தோசம் பாருங்க" என்று கூறிக்கொண்டிருக்கும் போதே அறைக்கதவை திறந்து கொண்டு வந்த செவிலியர் "டாக்டர் எமெர்ஜென்சி" என்று பதட்டத்துடன் அழைக்க..,


அலரின் நஞ்சுகொடியை நீக்கி கொண்டிருந்தவர் அருகே இருந்த பயிற்சி மருத்துவரிடம் அதை தொடருமாரு கூறி இறுதியாக தையலிடும் முறையையும் விளக்கி அவசர அவசரமாக தலைமை செவிலியருடன் வெளியேறி இருந்தார். மற்றொரு பிரசவத்தில் தாயின் ரத்த அழுத்தம் அதிகமாக உயர்ந்து சிக்கலாக்கி இருக்க அங்கிருந்த மருத்துவ குழு தலைமை மருத்துவரான சுசீலாவை அழைத்திருந்தனர்.


அவர் செல்லவும் குழந்தையை சுத்தபடுத்தி வெளியில் இருந்த உறவினர்களுக்கு காண்பிக்க எடுத்து செல்ல இங்கு நஞ்சுக்கொடியை நீக்கிய பயிற்சி மருத்துவர் அடுத்து அலருக்கு மயக்க மருந்து செலுத்தி தையலிட தொடங்கி இருந்தார்.


ஆழ்ந்த மயக்கத்திருக்கு சென்றிருந்த அலரின் அருகே நின்றிருந்தவன் மருத்துவ உபகரணங்களுடன் அவளுக்கு தையலிட்டு கொண்டிருப்பதை கண்கொண்டு காண முடியாமல் விழிகளில் நீர் கசிய தோய்ந்து அமர்ந்து அவள் இடக்கரத்தை தன் கரங்களுக்குள் பொத்தி எடுத்து தன் கன்னத்தில் பதித்த எழிலின் உள்ளம் அவளுக்கு அளிக்கும் சிகிச்சையை கண்டு தாள முடியாமல் தவித்து மழலையாய் மிழற்ற தேற்றுவார் யாரும் அற்று அவன் கண்களில் இருந்து சூடான கண்ணீர் வெளியேறி அலரின் கரத்தை நனைக்க தொடங்கிய அதே நேரம் சத்தமே இல்லாமல் அவளுக்கான அவன் உணர்வுகளும் மரத்து மரித்துபோயின.


"சார் தையல் போட்டு கொஞ்ச நேரம் அப்சர்வேஷ்ன்ல வச்சிட்டு ரூம்க்கு ஷிப்ட் பண்ணிடுவோம் நீங்க இன்னும் சாப்பிடலை" என்று அலர் அனுமதிக்க பட்டதில் இருந்து எழில் ஊன் உறக்கம் இன்றி அலருடனேயே இருப்பதை கண்டு அவளுக்காக அசைன் செய்யபட்டிருந்த செவிலியர் உணவருந்தி விட்டு வருமாறு கூற,


புறங்கையால் கண்ணீரை துடைத்தவன் கரகரத்த குரலில், "இல்லை பரவாயில்லை சிஸ்டர் நான் இருக்கேன், அவ கண் விழிக்கட்டும் " என்று பார்வையை அலர் மீது பதித்தவன் தையலிட்டு முடிக்கும் வரை அவளை விட்டு அகலவில்லை.


"சார் அவங்க மயக்கம் தெளிய கொறஞ்சது ஒரு மணி நேரமாகும் நீங்க குழந்தை முகத்தை கூட சரியா பார்க்கலை" என்று அவனை கவனித்து கூறவும் தான் எழிலே அதை உணர்ந்தான். ஆம் மனம் முழுக்க தன்னவளின் ரணமும், வேதனையும் நிறைத்திருக்க நொடிக்கும் குறைவாக மகனை பார்த்திருந்தவனுக்கு அவன் பூமுகம் மனதில் பதியவில்லை.


அவர் எடுத்து சொன்ன பின்னர் தான் மகன் பற்றிய நினைவே அவனுக்கு வர மகனை பார்க்கும் ஆவல் மேலிட தொடங்கவும், செவிலியரிடம் ஒன்றிற்கு மூன்று முறை அலரின் பாதுகாப்பை உறுதி செய்த பிறகே அங்கிருந்து அகன்றான்.


அது முழுக்க முழுக்க பிரசவத்திற்காக கட்டமைக்க பட்ட பகுதி என்பதால் பல அறைகளை கொண்டது அங்கிருந்து வெளியில் வந்தால் தான் காத்திருப்போருக்கான பகுதி வரும். மகனை தேடி வெளியில் வந்தவன் இரு அறைகளை கடக்கையிலேயே சற்று தொலைவில் வீரிட்டு அழும் குழந்தையை ஏந்தியவாறு நின்றிருந்த சஞ்சீவ் கண்ணில் விழுந்தான்.


எழில் 'சஞ்சீவ்' என்றவாறு அவனை நெருங்குகையிலேயே வீரிட்டு அழும் குழந்தையைகூட தேற்றாமல் ரத்த பசையற்ற முகத்தில் இருந்து வழிந்த கண்ணீர் ஆறாக பெருக மனமுடைந்த நிலையில் மருத்துவமனை வளாகத்தின் தரையில் முழங்காலிட்டு அமர்ந்திருந்தான்.


தடுமாறி அவன் அமர்ந்த வேகத்தில் கையில் இருந்த குழந்தை கீழே விழும் முன் பாய்ந்து அதை பிடித்து நெஞ்சோடு அணைத்த எழில்,


'என்ன பண்றீங்க சஞ்சீவ் , குழந்தையை இப்படி தான் ஹாண்டில் பண்றதா' என்று கடிய,


முழந்தாலிட்டவனின் விழிகளோ எதிரே இருந்த அறையின் மீதே நிலைகுத்தி இருப்பதை கண்ட எழில், "சஞ்சீவ் என்ன ஆச்சு..?? குழந்தை எப்படி அழுது பாருங்க எதுக்காக நீங்க வச்சிருக்கீங்க, உங்க வைப் கிட்ட கொடுங்க பால் கொடுக்கட்டும்" என்று கூற,


'வைப்' என்ற வார்த்தையில் கண்ணீர் வழிந்தோடிய விழிகளுடன் எழிலை நிமிர்ந்து பார்த்த சஞ்சீவ் இதுநேரம் வரை கட்டுபடுத்திய உணர்வுகளை 'ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ' என்று வாய் விட்டு வெளிப்படுத்தியவன் அடுத்த நொடியே 'மைதிலிஈஈஈஈஈஈஈஇ' என்று கதறி இருந்தான்.


அவன் கதறலில் திகைத்த எழில் குழந்தை பயந்து விடுமோ என்று அதை மேலும் நெஞ்சோடு பொதிக்க அதற்குள் அதன் அழுகை பன்மடங்கு பெருகியது என்றால் ஆங்காங்கு இருந்த ஊழியர்கள் ஒன்று கூடி விட்டனர்.


சஞ்சீவின் தோள்களை பற்றி உலுக்கிய எழில், "உங்க வைப்க்கு என்ன ஆச்சு..??" என்று கேட்ட போது சஞ்சய் மேலும் வெடித்து கதற,


"சஞ்சீவ் கண்ட்ரோல் யுவர்ஸெல்ப் எதுக்கு இப்படி கத்தறீங்க..??? குழந்தை பயப்படுது பாருங்க" என்றிட


அதற்குள் எழிலை நெருங்கிய செவிலியர் அவனிடம் இருந்து குழந்தையை பெற்று சமாதனபடுத்த,


"சிஸ்டர் என்ன ஆச்சு எதனால சஞ்சீவ் இப்படி ..?" என்று அவன் நிலை குறித்து கேட்க


பல மாதங்களாக இங்கு வந்து செல்வதால் எழில் மற்றும் சஞ்சீவிடம்நன்கு பரிச்சயமாகி இருந்த அந்த செவிலியர், "சார் உங்களுக்கே தெரியும் அவங்களுக்கும் இது முதல் குழந்தைன்னு.., நாங்களும் எங்களால முடிஞ்சா அளவு முயற்சி பண்ணிட்டோம் அதுக்கும் மேல ஆண்டவனை தான் நாங்களும் நம்புறோம், தலை எழுத்துன்னு ஒன்னு இருக்கிறதை யார் மாத்த முடியும்..?? ஏத்துகிட்டு தான் ஆகணும்" என்று பேசிக்கொண்டு போக அவரை தடுத்த எழில்,


"சிஸ்டர் நீங்க சொல்றது ஒன்னும் புரியலை... என்ன நடந்தது..??"


"ஏன் உங்களுக்கு தெரியாதா சார்..???"


"ஏங்க தெரியாம தானே கேட்கிறேன், சொல்லுங்க" என்றவன் அவர் கரங்களில் இருந்த குழந்தை இன்னும் அழுகையை நிறுத்தாமல் இருப்பதை கண்டு, "சிஸ்டர் முதல்ல குழந்தையை அதோட அம்மாகிட்ட கொடுங்க பசிக்கு அழுது போல..!!" என்று கூற,


"சார் அவரோட வைப்... என்று தொடங்கியவர் பின் தயங்கி சஞ்சீவை பார்த்து கொண்டே, "ஆல்ரெடி அவங்களுக்கு BP இஷு இருந்தது டெலிவரி அப்போ எதிர்பாரா விதமா வழக்கத்தை விட சடன் இன்க்ரீஸ் ஆகி ரொம்ப காம்ப்ளிகேட் ஆகிடுச்சி, சீப் டாக்டர் வந்து அட்டென்ட் பண்ணி ரொம்ப நேரம் அவங்களை காப்பாத்த போராடினாங்க ஆனா முடியலை, மடேர்னல் டெத்... ஷி இஸ் நோ மோர்" என்று கூற,


ஒரு நொடி தலை சுற்றி போனது எழிலுக்கு,


'என்ன சொல்றீங்க சிஸ்டர்' என்று அதிர்ச்சியுடன் கேட்ட எழிலின் பார்வை அவனையும் அறியாமல் சஞ்சீவ் மேல் படிந்தது. மருத்துவமனையில் பரிட்சயமாகி சில மாதங்களே ஆனாலும் இத்தனை சந்திப்புகளில் இருவருக்குள்ளும் மெல்லிய நட்பு இழையோடிக்கொண்டிருந்தது.


சஞ்சீவ் மைதிலி இருவருமே காதலித்து பெற்றோரை எதிர்த்து திருமணம் புரிந்து வெற்றிகரமாக வாழ்ந்து வரும் தம்பதிகள். மனைவியின் விருப்பத்திற்கு மதிப்பு அளித்து திருமணமான மூன்று வருடத்திற்கு பின் குழந்தைக்கு தயாராகி பிரசவத்திற்காக நேற்று அவர்களுக்கு முன்பாகவே மருத்துவமனையில் மனைவியை அனுமதித்து இருந்தான்.


காவல் துறையில் இருப்பதால் காதல் மனைவியின் பேறுகாலத்தில் பெரும்பாலும் உடன் இருக்க முடியாமல் போனாலும் கிடைக்கும் நேரத்தில் கைபேசி வாயிலாக அவள் நலனை அறிந்து கொள்பவன். அலரை சந்திக்கும் போது எல்லாம் மைதிலியின் பேச்சு முழுக்க முழுக்க குழந்தையை சுற்றியே இருக்கும் ஒரு குழந்தை என்று முடிவு செய்திருந்தவர்கள் அதன் திருமணம் வரை கற்பனை செய்து வைத்திருந்தனர்.


சந்திப்பின் போதெல்லாம் கம்பீரமே உருவான காவல் துறை ஆய்வாளனாகவே அவனை பார்த்திருந்த எழிலுக்கு வாழ்கையே தொலைந்த நிலையில் விரக்தியின் விளிம்பில் இருந்த சஞ்சீவின் நிலை பெரிதும் அச்சுறுத்தியது.


இருக்காதா பின்னே..!! அவர்களுக்கும் இது முதல் குழந்தை அதிலும் இத்தனை நேரமாக பிரசவ அறையில் தன்னவள் துடித்த துடிப்பே இன்னும் அவன் கண்களை விட்டு அகலாத நிலையில் இங்கு ஆருயிர் மனைவியின் பிரிவை தாள முடியாமல் கதறிக்கொண்டிருந்தவனால் எழிலின் மனநிலை மேலும் சிக்கலாகி போனது..


அவர்களை போலவே குழந்தை குறித்த எத்தனை கனவுகளுடன் இருந்தவர்கள் இப்போது அனைத்தும் கானல் நீராகிட, மனைவியின் பிரிவில் உயிர்ப்பற்று போயிருந்த சஞ்சீவ் அனைத்து சம்பிர்தயங்களுக்கு பிறகு வெள்ளை துணியில் மூடப்பட்டு இருந்த மனைவியின் உடலை பெற்று கொண்டு வாயிலுக்கு வர அவன் கரத்தில் குழந்தை அளிக்கப்பட அதை ஏந்தி கொண்டு மனைவியின் உடலை பார்த்தவாறு எதிர்காலத்தை தொலைத்தவனாய் வாகனத்தில் அமர்ந்த சஞ்சீவின் முகம் எழிலின் மனதில் ஆழ பதிந்து போனது.


ஆம்புலன்ஸ் கிளம்பிய பல நிமிடங்களுக்கு பித்து பிடித்தாற்போல நின்றிருந்த எழிலை சாவின் விளிம்பை தொட்டு மீண்டிருக்கும் தன் மனைவியின் முகமே ஆக்கிரமிக்க அவசரமாக அங்கு மருத்துவமனை வளாகத்தில் இருந்த பிள்ளையார் கோவிலுக்கு சென்று கைகூப்பி கண்மூடி மனமுருகி நின்றிருந்தவன் அடுத்த நொடியே அலரை தேடி அறைக்கு சென்றான். அங்கே அலர்விழியின் நஞ்சுகொடியை நீக்கி தையல் போட்டிருந்தவர்கள் இன்னும் சாதாரண அறைக்கு அனுப்பாமல் அப்சர்வேஷனில் வைத்திருந்தனர்.


மயக்கத்தில் இருந்த அலர்விழியை நெருங்கிய எழில் வாடிய கொடியாக கிடந்தவளின் நெற்றியில் நடுக்கத்துடன் முத்தமிட்டு தலை சாய்த்து கண்ணீர் உகுத்தவன் பதட்டத்துடன் நடுங்கும் கரம் கொண்டு அவளை முழுதாக உணர தொடங்க அதில் விலகிய அவள் போர்வையும் அதை தொடர்ந்து அவன் கண்ட காட்சியும் அவனை மிரட்சியுற செய்ய.. விழிகள் தெறித்து விழ எழில் அதிர்ந்து நின்றது சில நொடிகளே..!!


கண்டது காட்சிபிழையோ என்று தோன்ற அதை தெளிவு படுத்த வேண்டி நெஞ்சம் தடதடக்க மெல்ல போர்வையை விலக்கி பார்க்க அங்கே பயிற்சி மருத்துவரின் அஜாக்கிரதையால் அலருக்கு போடபட்டிருந்த தையல் பிரிந்து வெளியேறிய குருதி அவளுக்கு அணிவித்திருந்த மருத்தவமனை உடை தொடங்கி படுக்கை போர்வை வரை நிறைத்திருந்தது.


அவள் உடை, படுக்கை, போர்வை என்று எங்கு காணினும் செங்குருதியாய் காட்சியளிக்க கண்களை இருட்டி கொண்டு வந்தது எழிலுக்கு. அதிர்ந்து நின்றவனின் மனதில் ஆயிரம் கனவுடன் மருத்துவமனைக்கு வந்த சஞ்சீவ் மனைவியை எவ்வாறு கொண்டு சென்றான் என்பது நிழலாட இப்போது அவனுக்கு பதில் எழிலும் கையில் அவன் குழந்தையுமாக காட்சி மாறுவதை கண்டு அதிர்ந்து போனவன் முகத்தை அழுந்த துடைத்து கொண்டு பதட்டமான குரலில் , 'அமுலு' என்று அவள் கன்னம் தட்டி பார்க்க அசைவில்லை அலரிடம்.


பதறிக்கொண்டு மருத்துவருக்கு அழைக்க உடனே அங்கே வந்த செவிலியர்களும் தலைமை மருத்துவரும் தூரிதமாக செயல்பட்டு அலருக்கு மீண்டும் தையலிட்டு அவளின் ரத்தபோக்கை கட்டுக்குள் கொண்டு வர மயக்கத்தில் இருந்தவளிடம் மெல்லிய அசைவு அலர் கண்விழித்த போது அவளவன் அவளின் அகனெழிலன் மனதளவில் முழுதாக மரணித்திருந்தான்.


பட்ட காலிலே படும் என்பதற்கிணங்க இங்கே மனைவியின் பிரசவ வேதனை ஆறடி ஆண்மகனை வேரோடு வீழ்த்தி இருந்ததென்றால் அடுத்து மனைவியை இழந்து கைக்குழந்தையுடன் நின்றிருந்த நண்பனின் கோலம் அவன் மனதில் ஆறா வடுவாகிட அதை மேலும் மெருகூட்டுவது போல தன்னவளின் செங்குருதி என்று அடுத்தடுத்து அடிகள் பலமாக அவன் மனதில் விழுந்து அதை கிழித்து ரணமாக்க உயிர்ப்பற்று போனான்.



அவனை அதன் தாக்கத்தில் இருந்து மீட்டு உயிர்த்தெழ செய்வது அலருக்கு பெரும் சவாலாக அமைந்து போனது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top