'நெஞ்சமெல்லாம் அலரே !!' - 48

Advertisement

Priyaasai

Active Member
View attachment 11092

அகனலர் - 48.1

'என் பேச்சை மதிக்காமல் நேர்த்திகடனை நிறைவேற்றாமல் போனதன் விளைவு இப்போ என் பேரன் தனி மரமா இருக்கான்' என்று நாதன் கூறவுமே..,


அலர்விழிக்கு புரிந்து போனது தந்தையின் பேச்சு எங்கு தொட்டு எங்கு நீண்டு யாரிடம் முடியபோகிறது என்று..!! ஆனால் அதை தவிர்க்கும் வழி புரிபடாமல் 'அப்பாஆஆ' என்று அதிர்வுடன் அவரை பார்க்க..,


நாதனுக்கு மறுபுறம் நின்றிருந்த வளர்மதியும் கணவனின் பேச்சை எதிர்பாராதவராக முதலில் திகைத்தவர் பின் மகளை பார்த்துக்கொண்டே, “என்னங்க கொஞ்சம் அமைதியா இருங்க... இப்போ இந்த பேச்சு தேவையா..!! எதுக்கு..??? நான் பேசிக்கிறேன் விடுங்க” என்று அவரை கட்டுபடுத்த முயல,


‘என்ன பேசப்போற நீ’ என்று விழிகள் சிவக்க வளர்மதியின் புறம் திரும்பி,


“இன்னிக்கு தாமரை கடைக்கு வந்திருந்தப்போ என்ன ஆச்சு தெரியுமாடி உனக்கு..??" என்று என்றுமில்லாத ஆக்ரோஷத்தில் முகம் மிளிர வளரிடம் நாதன் சீற.., அவர் குரலில் தொனித்த கடுமையிலும் கட்டுகடங்காத கோபத்திலும் வளர் மட்டுமின்றி அலர்விழியின் உடலும் ஒருநொடி அதிர்ந்து போனது.


தாமரையின் வரவால் என்ன நேர்ந்திருக்க கூடும் என்று அவளால் யூகிக்க முடியாது போனாலும் ஏற்கனவே தன்னால் ஒரு முறை தந்தை மருத்துவ வாசம் பெற்று திரும்பி இருக்கும் நிலையில் தங்களை முன்னிறுத்தி தற்போதைய அவரின் ஆக்ரோஷம் அவரின் உடல் நலனில் எத்தகைய விளைவை ஏற்படுத்த கூடுமோ என்று அலரின் உள்ளம் பதறி பரிதவித்து போனது.


ஆம் அவிரனை கருவுற்றிருப்பதை உறுதி செய்ய மருத்துவமனை சென்றிருந்த போது சூழல் காரணமாக தன்னை தனியே விட்டு சென்றிருந்த எழிலை தந்தை குற்றம் சுமத்தி கேள்வி எழுப்ப, அப்போது ஆற்றாமையில் அலர் தாய்க்காகவும் கணவனுக்காகவும் தந்தையை எதிர்த்து அவரின் தவறுகளை சுட்டி காட்டி பேசிட, அப்போதே தன் மீது உயிராக இருக்கும் மகளின் திடீர் மாற்றத்தில் மனம் நொறுங்கி போயிருந்த நாதன் அதன் பின் மகளுக்காகவே தன் தவறை திருத்தி வளர்மதியிடம் இணக்கமாக இருந்தாலும்.


அலர்விழியின் குணஇயல்பு அவரை எளிதில் மன்னிக்க தயாராக இல்லாது போக அவரிடம் இருந்து சில காலம் விலகி இருந்தது மட்டுமின்றி பழையபடி தந்தையுடனான ஆத்மார்த்தமான பேச்சையும் நிறுத்தி தேவைக்கு மட்டுமே பேச்சு என்பதாக இருந்தாள்.


ஏற்கனவே தான் செய்த முட்டாள்தனத்தால் மகன் தன்னை விட்டு நீங்கி விலகி இருப்பதை தாங்க இயலாமல் இருந்த மனிதருக்கு இப்போது மகளின் பாராமுகமும் விலகலும் சேர்ந்து அவரை மனதளவில் பெரிதாக பாதிக்க வளர்மதியிடம் பல நேரம் தன் மனக்குறையை கொட்டி தீர்ப்பவர் ஒரு நாள் அதீத அழுத்தத்தின் காரணமாக மாரடைப்பால் மயங்கி சரிந்திருந்தார்.


செய்தியை கேள்வி பட்டதுமே ஏழுமாத கர்ப்பிணியான மனைவியை அழைத்து கொண்டு ராத்திரி நேரம் என்றும் பாராமல் எழில் கிளம்பிவிட்டிருந்தான். வழி நெடுக தன்னால் தான் தந்தைக்கு இந்நிலையோ என்று குற்ற உணர்வில் தவித்த தன்னவளின் கண்ணீர் சுமந்த முகம் அவனை வதைக்க அவளுக்கு ஆறுதல் அளித்தவாறே விரைவாக அவளை அவள் தந்தையிடம் சேர்ப்பித்திருந்தான் அகனெழிலன்.


இப்போதும் நாதனின் அதீத கோபம் அவர் உடல் நலனிற்கு ஏற்புடையது அல்ல என்பதை உணர்ந்தவள், "அப்பா எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகுறீங்க" என்று எச்சில் கூட்டி விழுங்கியவாறே மெல்லிய குரலில் அலர் கேட்கவும்..,


'எதுக்கா..??' என்று மகளை அழுத்தமாக பார்த்தவர், "இன்னிக்கு தான் என் பேரனோட விஷ் என்னன்னு எனக்கு தெரிஞ்சது" என்று கட்டுகடங்காத கோபத்துடன் கூறியவரின் விழிகளோ எத்தனை நாட்கள் இதை நீ என்னிடம் இருந்து மறைக்க முடியும் என்ற கேள்வியை தேக்கி இருக்க...,


இது நேரம் வரை சிறு அச்சத்துடனே அவரை பார்த்து கொண்டிருந்த அலர்விழி அவர் கூறியதை கேட்ட மறுநொடி நிலைகுத்திய விழிகளுடன் ஸ்தம்பித்து போனாள். ஆம் தந்தையுடன் கடைக்கு சென்றிருந்த மகன் தாமரையை அங்கு கண்டதுமே என்ன செய்திருப்பான் என்பது இப்போது அவளுக்கு புரிபட்டாலும் அதன் நீட்சியாக அவனது விஷ் குறித்து தந்தைக்கு தெரியவரும் என்பது அவள் கனவிலும் எண்ணி பார்க்காதது அல்லவா..!!


அதிலும் எழில் இங்கிருக்க இப்போதைய தந்தையின் பேச்சு நிச்சயம் தன்னவனை காயபடுத்துவதிலேயே முதன்மையாக இருக்கும் என்பதை உணர்ந்தவள் உடனே அவனை இங்கிருந்து அனுப்பிட வேண்டி அவனை பார்த்தாள்.


தன் எதிரே இறுகிய முகத்துடன் உணவையே வெறித்து கொண்டிருந்தவனிடம், குரலை செருமிக்கொண்டே, "மா...மா நீ.. நீங்க அப்புவை கூட்டிட்டு கிளம்புங்க.. நான் அப்புறம் வரேன்" என்று கூற..,அவள் கூறியது காதில் விழுந்ததா இல்லையா என்பதை கூட உணரமுடியாத அளவு தனக்குள் உழன்ற வண்ணம் இருந்தவனிடம் அசைவில்லை.


தந்தையின் பேச்சையும் கட்டுபடுத்த முடியாமல் தன்னவனையும் இங்கிருந்து அனுப்ப முடியாமல் போக அவள் மனமோ இருதலை கொல்லி எறும்பாய் துடித்துகொண்டிருந்தது.


இங்கு அவிரனின் விஷ் என்னவென்று புரியாத வளர்மதி அவரிடம் அது குறித்து கேட்க.., இருவரையும் ஒரு முறை பார்த்தவர்,


"ஹ்ம்ம் என் பேரனுக்கு தங்கச்சி வேணுமாம்..!! இதை தான் அவன் ரெண்டு வருஷமா சாமிகிட்ட கேட்டுட்டு இருக்கானாம் ஆனா சாமி சித்துக்கு மட்டும் சுபி அப்புறம் இன்னொரு பாப்பா கொடுத்துடுச்சாம் என்றவர், கடையில அத்தனை பேருக்கு முன்னால இதை சொன்னான்டி எப்படி இருக்கும் எனக்கு யோசிச்சி பாரு" என்று விழிகள் சிவக்க கேட்டவர் தொடர்ந்து...,


இன்னைக்கு மட்டுமில்லை வேதாவோட விசெஷத்தப்பவும் இதே மாதிரிதான் சுபி கூடவே போவேன்னு இவன் ஒரே அடம்... அப்போ தாமரை ஏதேதோ சொல்லி அவனை கூட்டிட்டு போயிட்டா ஆனா இன்னைக்கு அவனை சமாளிக்கிறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆகிடுச்சி.." எனவும்..


தந்தையின் வார்த்தைகளை கேட்ட அலர்விழியின் இதயம் எக்குதப்பாக துடிக்க ஆரம்பிக்க மூச்சு காற்றுக்கும் தவித்தவளின் முகத்தில் வியர்வை அரும்புகள் உற்பத்தி ஆக விம்மும் மனதுடன் எழிலின் முகத்தை கண்டவள் உள்ளுக்குள் உருக்குலைந்து போனாள்.


ஆம் அங்கு தன்னவனின் முகம் இறுகிபோய், ரத்தபசை இழந்து, உயிர்பற்று, விழிகளில் வெறுமையை சுமந்திருப்பதை கண்டவளின் மனமோ எது நடந்து விடக்கூடாது என்று அவள் மிக கவனமாக இத்தனை வருடங்களின் ஒவ்வொரு நொடியையும் கடந்திருக்க இன்று அவள் தந்தையே அவள் பொத்தி வைத்து கையாண்ட எழிலின் மனம் எனும் கண்ணாடி பாத்திரத்தை சில்லு சில்லாக நொறுக்க முற்படுவதை கலங்கிய விழிகளுடன் கண்டவளுக்கு அதற்குமேலும் தன்னவனின் முகத்தை காணும் துணிவற்று, 'அப்பா ப்ளீஸ்... நிறுத்துங்க' என்று தவிக்க தொடங்கியது.


அன்று அன்னையிடம் தத்தெடுப்பேன் என்று பேசி விட்டு வந்த பின்னர் தன் பேச்சு நாதனின் செவிகளை சென்று சேர்ந்து பிரளயத்தை ஏற்படுத்தி விடக்கூடாதே என்பதாலேயே உடனே சென்று அன்னையை சமாதானபடுத்தியவள் அடுத்த குழந்தை குறித்த கணவனின் நிலை அறிய இல்லாத க்ளைன்ட்டை சந்திக்க வேண்டும் என்று கூறி அவனை சென்னைக்கு அழைத்து சென்று அங்கு அவனுக்கும் மருத்துவருக்கும் இடையிலான சந்திப்பை எதார்த்தமான நிகழ்த்தி மிக சாதூர்யமாக செயல்பட்டு அவரின் துணை கொண்டு அவன் கொண்டிருந்த ரணத்தை நினைவுபடுத்தாமல் கிளறி அதிகபடுத்தாமல் மறைமுகமாக தன்னவனின் நிலை அறிய அவள் அரும்பாடு பட்டு கொண்டிருக்க..,


இங்கு நாதனே தன் மகளின் முயற்சிகள் அனைத்தையும் முறியடித்து வார்த்தை எனும் அம்பை கொண்டு எழிலின் மனதை சிதறடிக்க தொடங்கியிருந்தார். அவளே அவனிடம் நேரிடையாக கேட்டு விட ஒற்றை நொடி போதும் ஆனால் இங்கு வந்த புதிதில் பல வருடங்களுக்கு பின் அன்று தன் விழிகளில் தென்பட்ட குழந்தைக்கான தேடலை கண்டுகொண்டவன் அதன் பின் அவளுடன் ஒன்றமுடியாமல் பட்டபாட்டையும் பழைய நினைவுகளின் ஆர்பரிப்பில் மன்னிப்பை யாசித்து குழந்தையாய் தன் மடி சேர்ந்ததையும் கண்டு துடித்து போனவளுக்கு அதன் பின் அவனிடம் நேரடியாக கேட்கும் தைரியம் இல்லை என்பது தான் நிஜம்.


தான் கேட்டு மறுப்பது அவனுக்கு எத்தகைய கொடுமையான உயிர் வலியை கொடுக்கும் என்பதை நன்கு அறிந்திருப்பதாலேயே அத்தகைய விஷபரிட்ச்சையில் இறங்க அவள் தயாராக இல்லை. மாறாக அவனே மனம் இறங்கும் தினத்திற்காக பொறுமையாக காத்திருக்கிறாள்.



இங்கு மகளை ஒருமுறை பார்த்த வளர் அவரிடம் “ஏங்க குழந்தைன்னா அப்படி தான்.., இதெல்லாம் ஒரு பேச்சுன்னு பேசுறீங்க விடுங்க.., இன்னும் கொஞ்ச நாள் போகடும்ம்னு..” என்றவரை இடைமறித்த நாதன்..,


"ஏய் அறிவுகெட்டவளே பேச்சு அதோட நிற்க்கலைடி அவிரன் இப்படி சொல்லவும் அங்க வேலை செய்ற பொண்ணுங்க சமாதனபடுத்துறேன் என்ற பேருல...." என்றவரின் விழிகள் கோபத்தில் சிவக்க, "ஏய் ஆளுக்கு ஒரு பேச்சுடி .., எல்லாமே என் பொண்ணு மேல.." என்றவருக்கு அங்கே கேட்ட பலதரப்பட்ட பேச்சுக்களால் மனம் கனத்து போக சில நொடிகள் விழிகளை இறுக மூடி அமர்ந்தவரிடம் அடுத்த சில நிமிடங்களுக்கு மௌனம் குடிகொண்டது.


கைகளை பிசைந்து கொண்டு நின்ற வளர்மதிக்குமே நாதனின் நிலை நன்கு புரிந்தது அன்று சுடர்க்கொடியின் வீட்டில், சரண்யாவின் நிச்சயத்தின் போது தான் எதிர்கொண்ட கேள்விகள் இன்று கணவனை வேறு விதத்தில் துரத்தி இருப்பதை புரிந்து கொண்டவர், ஆதூரமாக அவர் தோள் தொட..,


கலங்கிய கண்களுடன் மனைவியை ஏறிட்டவர் ஆற்றாமையோடு,"இதுல கொடுமை என்ன தெரியுமா வளர...?? அப்போ பணம் கட்ட வந்த ஒரு பொம்பளை யாருன்னே தெரியலை அவங்க எல்லாம் என் பெண்ணை..." என்றவரை இடைமறித்தது எழிலின் கட்டளையுடனான உரத்த குரல்..,


**


“மாமி..!! இது எங்களோட விஷயம் யாரும் தேவையில்லாம இதுல தலையிட வேண்டாம்” என்று அழுத்தமாக கூற,


இதை கேட்ட நாதனின் கோபம் பன்மடங்காக பெருக, “என்ன, என்ன தலையிட வேண்டாம்..!! என் பொண்ணு நான் கேட்பேன், என் பெண்ணை மத்தவங்க கேள்வி கேட்கிற நிலையில நிறுத்திட்டு வெட்டி ரோஷத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” என்று நாதன் குரல் உயர்த்த,


எழிலின் உணர்வுகளையே அவதானித்து கொண்டிருந்த அலர் உடனே, “அப்பா என்ன பேசுறிங்க, கொஞ்சம் அமைதியா இருங்க, தேவை இல்லாம எதுவும் பேசாதிங்க என்று அழுத்தமாக கூறியவள் நான் உங்ககிட்ட அப்புறம் பேசுறேன்” என்று எழுந்து எழிலிடம் சென்றவள் மீண்டும் அவரிடம் ‘இத்தோட இந்த பேச்சை விடுங்க ப்ளீஸ்’ என்றாள் மன்றாடலாய்.


"நாம போகலாம் மாமா.." என்று அவன் கரம் பிடித்த அதே சமயம் நாதன் அவளிடம்..,


“சரி அவங்க உன்னை பேசினதை பத்தி நான் கேட்கலை ஆனா என் பேரன்..!! அவன்.., அவனோட விஷ்.. அதுக்கு என்ன பதில்..?” என்று கேட்க..,


'அப்பாஆஆ... ப்ளீஸ் போதும்' என்று கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டே அலர் கூற...,


மகளின் கண்ணீர் சுமந்த முகம் எழிலை இன்னும் எதிர்மறையாகவே அவருக்கு எடுத்துக்காட்ட, இருவரையும் பெரும் சீற்றத்துடன் வெறித்தவாறு அமர்ந்திருந்தார்.


நிலைமை கைமீறி போவதை உணர்ந்த வளர்மதி, “என்னங்க, எதுக்கு நீங்க இதெல்லாம் கேட்டுட்டு இருக்கீங்க..? விடுங்க ” என்றவருக்கு அதற்குமேல் அவரை தனியாக கட்டுபடுத்த முடியும் என்று தோன்றாது போக தாயம்மாளை கண்களால் துணைக்கு அழைக்க,


“நான் கேட்காம வேற எவன்டி கேட்பான். எதையும் எடுத்து சொல்லகூடாது, கேள்வி கேட்ககூடாதுன்னு இவங்க இஷ்டத்துக்கு விட சொல்றியா..?” என்றார் மகளின் தற்போதைய கண்ணீரில் மேலும் கொதித்துபோனவராய்...!!


ஏங்க அடுத்தவங்களை வலிக்க செய்யனும்னு நினைக்குறவங்க ஒன்னுமில்லாததை கூட ஊதி பெருசாக்கி என்ன வேணும்னாலும் கேட்பாங்க, அதுக்காக.." என்றவர் மேலும் தொடராது எழிலை சங்கடமாய் பார்க்க,


"நாதா யார் உனக்கு உரிமை இல்லைன்னு சொன்னது... ஆனா கேட்கிற விதம்ன்னு ஒன்னு இருக்கே..! ராசா உன் தங்கச்சி மகன்னு நீ இவ்ளோ உரிமை எடுக்ககூடாது தப்பு" என்று தாயம்மாள் கூற,


அவிரனின் வாய்மொழியாய் அவர் கேட்ட அவனது தங்கைக்கான ஏக்கமும் மகளை பற்றிய பேச்சும் அவளின் கண்ணீரும் அவரை எதை பற்றியும் சிந்திக்க விடாது செய்ய, “என்னம்மா விதம் இதம்ன்னு பேசிட்டு இருக்க, இன்னிக்கு என் பொண்ணை கண்டவங்களும் விதவிதமா பேசுறாங்க அவங்க கிட்ட போய் சொல்லுங்க” என்று ஆதங்கத்துடன் கூறியவர் 'எல்லாம் யாரால..?' என்றவாறு கண்களால் எழிலை எரிக்க தொடங்கவுமே..,


இதை கண்ட அலர் அவரின் பேச்சுக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டி, “இல்லைப்பா எங்களுக்கு ஒரு குழந்தையே போதும், இனி இதை பத்தி பேசாதீங்க” என்று கூறியவளின் பார்வை மொத்தமும் எழிலிடமே பதிந்திருந்தது.


நாதன் ஆரம்பித்த போதே உண்பதை நிறுத்தியிருந்தவன் நாதன் பேச பேச தன்னை கட்டுபடுத்தியவனாய் கரங்களை அழுத்தமாய் கோர்த்துக்கொண்டு அவரையே வெறித்து கொண்டு அமர்ந்திருந்தான்.


நாதனோ அலரிடம் திரும்பி “என்ன ஒன்னு போதும்..!! எல்லாமே நீங்களே முடிவு பண்றதுன்னா அப்புறம் பெத்தவங்க, பெரியவங்கன்னு நாங்க எதுக்கு இருக்கோம்..? எத்தனை நாள் இங்க விட்டுட்டு போகும்போது எல்லாம் குழந்தை தன் சந்தோஷத்துக்காக அடுத்தவங்க வீட்டுக்கு தேடி போறான், அது தெரியுமா உனக்கு...?? இன்னும் எத்தனை நாளைக்கு அவன் இப்படியே இருக்க அவனுக்கு துணை வேண்டாமா..!! குழந்தைக்கு அஞ்சு வயசாக போகுது அது நியாபகம் இருக்கா உங்களுக்கு..?? என்று அலரை முறைத்தவர், எவ்ளோ சம்பாதிச்சி பேரெடுத்து என்ன பிரோஜனம் அதெல்லாம் நாளைக்கு என் பேரன் கூட நிற்குமா இல்லை அவன் தங்கையோ தம்பியோ நிற்பாங்களா" என்று அவர் தொடர்ந்து ஆவேசமாக பேசிக்கொண்டே போக,


அலருக்கோ உள்ளுக்குள் பயபந்து உருள தொடங்கியது நாதனின் ஆவேசத்தை கண்டு, “அப்பா கொஞ்சம் அமைதியா இருங்க” என்று கண்ணீருடன் கூறியவள் அவரிடம் மெல்லிய குரலில் “அதுதான் சர்வேஷ், வேதா, சித்து, சுபி எல்லாம் இருக்...." என்று முடிக்குமுன்னமே,


"என்ன அறிவுகெட்ட தனமா பேசிட்டு இருக்க.., எத்தனை பேர் சுற்றி இருந்தாலும் அது தன்னோட கூட பிறந்த உறவை போல வருமா..?? என்று மகளிடம் சீறியவர் இதுநேரம் வரை கொண்டிருந்த அழுத்தத்திலும் கோபத்திலும் இருதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்ததையும் பொருட்படுத்தாது தொடர்ந்தவர்..,


"எல்லாதையும் உங்க இஷ்டத்துக்கு முடிவு பண்றது..!! கேள்வி கேட்க ஆள் இல்லை.., அப்படி கேட்கிறவங்களையும் மதிக்கிறதில்ல..., ஒவ்வொருமுறையும் என் பேரன் இங்க வரும்போது எல்லாம் வெற்றி மகளை தேடி போறதை பார்த்துட்டு என்னால எப்படி சும்மா இருக்க முடியும்..?" என்று மகளிடம் காய்ந்தவர், வளர்மதியிடம் திரும்பி,


"அதிலையும் இன்னைக்கு என் பெண்ணை கண்டவங்க கண்டபடி பேசுறதை நீ கேட்டிருக்கனும்டி" என்று பல்லை கடித்தவர், "இங்க பாரு எல்லாருக்கும் ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுகோங்க.., எனக்கு என் பொண்ணு முக்கியம்..!! அவளோட கெளரவம் முக்கியம்..!! எல்லாத்துக்கும் மேல என் பேரன் ரொம்ப முக்கியம்..!! அவனோட விருப்பம் அதைவிட முக்கியம்..!! இன்னிக்கு என் பெண்ணை இப்படி எல்லாம் பேச்சு வாங்கவா கட்டி கொடுத்தேன்" என்றவரின் கட்டுகடங்காத சீற்றம் வார்த்தையில் தெறித்த தருணம் அவர் பார்வை அவரையும் அறியாமல் எழில் மீது நிலை கொண்டு உதிர்க்க கூடாத வார்த்தைகளை உதிர்க்க தயாராகியது.


கணவனை பற்றி நன்கு அறிந்த வளர்மதியோ அவரின் வார்த்தைகள் கட்டுபாடுகளை தகர்த்துக்கொண்டு இருப்பதை உணர்ந்து "தம்பி, அமுலு நீங்க கிளம்புங்க மா.." என்று அவர்களை அங்கிருந்து அப்புறபடுத்த முயல அதற்குள் ..,


“பெத்த குழந்தையை ஏங்க விட்டுட்டு, அப்படி என்ன உங்களுக்கு எல்லாம் சு....” என்றவரின் வார்த்தை தடைபட்டு போனது எழிலின் உஷ்ணப்பார்வையில்.



'ஏங்க',


'ப்பாஆஆ'


'நாதாஆஆ' என்று அனைவரின் குரலும் ஒருங்கே ஒலிக்க,


அனைத்தையும் மீறி "மாமாஆஆஆஅ.." என்ற எழிலின் குரல் ஓங்கி ஒலித்திருந்தது.


***


நாதன் பேச்சை ஆரம்பித்த போதே அங்கிருந்து அகல முற்பட்ட அகனெழிலனை அடுத்தடுத்து அவரிடம் இருந்து வந்து விழுந்த வார்த்தைகள் இழுத்து பிடித்திருக்க..,உண்பதை நிறுத்தி இத்தனை நேரமாக பேசிக்கொண்டிருந்தவரின் முகத்தை சலனமற்று பார்த்து கொண்டிருந்தவனின் முகம் மெல்ல கறுக்க தொடங்கியது..,


கட்டுக்கடங்காத சீற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர அரும்பாடு பட்டுகொண்டிருந்தவனின் விழிகள் அவனின் வழக்கத்திற்கு மாறான முயற்சியில் ரத்தமென சிவக்க தொடங்கி அவரை கூறு போட தொடங்கியிருக்க..,


நாதனோ அதையெல்லாம் உணரும் நிலையில் இல்லாது மேலும் தொடர அவரின் இறுதி வாக்கியத்தை நிறைவு செய்யுமுன் கொதிநிலை அடைந்திருந்த அகனெழிலன்..,


"மாமாஆஆஆஆஆஅ" என்ற உரத்த கர்ஜனையோடு வலக்கர முஷ்டியை மடக்கி ஓங்கி மேஜையில் குற்றியவாறு நாற்காலியை விட்டு விருட்டென எழ அவன் எழுந்த வேகத்தில் நாற்காலி பின்னால் சென்று பெரும் சத்தத்துடன் விழ, அவன் சீற்றத்தை தாங்காத உணவு மேஜையோ ஒருமுறை பலமாக அதிர்ந்து சிறு குலுக்கலுடன் மீண்டும் தன்னிலை திரும்ப.., அதன் விளைவாக மேஜை மீதிருந்த அவரின் உணவுத்தட்டும் தண்ணீரும் போட்டி போட்டுக்கொண்டு நாதன் மீது கவிழ்ந்திருந்தது.


எழிலின் கர்ஜனையான விளிப்பிலும் அவன் முகத்தில் தாண்டவமாடிய சீற்றத்திலும் தன்னை மீட்ட நாதனுக்கு அப்போதுதான் தான் உதிர்க்க இருந்த வார்த்தையின் வீரியம் உணர்ந்து அதிர்ந்து போனார். இத்தனை நேரம் தன் உணர்வில் எதையுமே கருத்தில் கொள்ளாது பேசிக்கொண்டிருந்தவர் எழிலின் கர்ஜனையில் தான் ஸ்மரன் பெற்றார்.


அங்கு தன் எதிரே இருந்தவனது முகத்தில் எல்லையில்லாத ரௌத்திரத்தை காணவும் ஒரு நொடி அதிர்ந்தவரது முதுகு தண்டுவடம் சில்லிட்டு போக இதயமோ எக்குதப்பாக படபடத்து துடிக்க தொடங்கியிருந்தது. அதில் அவர் முகம் மெல்ல நிறமிழக்க தொடங்கி அவரையும் அறியாமலே அவர் கண்களில் மெல்லிய அச்சம் படர்ந்திருந்தது.


அலர் முதற்கொண்டு குழுமி இருந்த அனைவரின் முகமும் அச்சத்தில் அமிழ்ந்து போனது நாதனுக்கான எழிலின் மறுமொழி எத்தகையதாக இருக்கும் என்பதில்..!! என்ன முயன்றும் நாதனை கட்டுபடுத்த முடியாமல் போனவர்களுக்கும் இப்போது என்ன செய்வது என்று புரியாமல் போக கைகளை பிசைந்து கொண்டிருந்தவர்களுக்கு தங்கள் முன் சிம்மமாய் சிலிர்த்து நின்றிருந்தவனின் விழிகளில் நிறைந்திருந்த கனலே அவர்களை அவனை நெருங்க விடாமல் செய்திருந்தது.


நடக்கும் எதையும் எதிர்பாராத அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த அலர்விழி சில நொடிகளில் தன்னை மீட்டெடுத்து தைரியம் வர பெற்றவளாக கலங்கிய விழிகளுடன் ‘மாமா’ என்று அவன் முன் வர பாறையென இறுகி போயிருந்த அவன் முகத்தை கண்டவளுக்கு உள்ளுக்குள் குளிர் பரவதொடங்கிய நேரம் நாதன் மீதிருந்த பார்வையை விலக்காமல் அவளை தன் வழியில் இருந்து அகற்றி நாதனை நோக்கி முன்னேறி இருந்தான் எழில்.


என்னதான் கணவன் பேசியது மிகவும் தரம் தாழ்ந்த செயல் என்றாலும் எழில் நாதனை நெருங்குவதை கண்டு பதறிய வளர்மதி நாதனின் முன் வந்து நிற்க அவரை ஒரு பார்வை பார்த்தவன் அவர் அகலவும் தன் முன் இத்தனை நேரம் கொண்டிருந்த ஆக்ரோஷம் மொத்தமும் வடிந்த நிலையில் விழிகளில் பெரும் தவிப்புடனும் சிறு அச்சத்துடனும் நின்றிருந்த நாதன் முன் சுட்டு விரல் நீட்டி என்றுமில்லாத அழுத்தத்துடன் கூடிய சீற்ற குரலில், “இதுக்குமேல ஒரு வார்த்தை பேசினாலும் நான் மனுஷனா இருக்க மாட்டேன்” என்று பொதுவாய் கூறி இடத்தை விட்டு வேகமாய் அகன்றான்.


"புலி வரும் நாள் எந்நாளோ என்று இத்தனை நாட்கள் அலர் அஞ்சிக்கொண்டிருந்த நாளும் புலியும் இதோ இன்று நாதன் மூலமாக வந்தே விட..., அதை வரவேற்ப்பது போல எழில் அவன் வழியில் இருந்து அலரை அகற்றய நொடி அலர் முழுதுமாக உடைந்து போனாள்".


அன்று கனவில் நடந்தது போலவே இதோ இப்போது தந்தையின் பேச்சிற்கு தண்டனையாக தன்னை இங்கேயே விட்டுவிட்டு பிரிந்து சென்றுவிடுவானோ என்று மனம் விம்மி வெதும்ப, உடலின் மொத்த ரத்தமும் வடிந்த நிலையை அடைந்தவள் நாசி விடைக்க தன்னை அகற்றி சென்றவனை பார்த்திருந்தவளின் சிவந்த விழிகளில் இருந்து கண்ணீர் அருவியாய் கொட்ட தொடங்கியது.


தற்போது அவன் மனம் படும்பாடு நன்கு அறிந்திருந்தவளுக்கு தனிமையே அவன் காயத்திற்கான அருமருந்து என்பது புரிந்தாலும் தன்னை விட்டு சென்ற நொடியில் அனைத்தும் மறந்து..,"ப்ளீஸ் மாமா என்னை விட்டு போகாதே" என்று உதட்டை அழுந்த கடித்து கொண்டு ஊமையாய் கதறிய மனதுடன் அவன் பிரிவை தாங்க முடியாமல் அங்கேயே மடங்கி அமர்ந்தவளின் மனமோ தன்னை நீங்கி செல்பவன் பின்னேயே குழந்தையாய் அரற்றி கொண்டு செல்வதை கண்டு தாள முடியாமல் துடிதுடித்து போனாள்.


அதுமட்டுமின்றி தந்தையின் இன்றைய பேச்சில் "முடிந்தது இத்தோடு எல்லாம்...!!" என்று தோன்றாமல் இல்லை. எந்த நிலையிலும் தன்னை விட்டு நீங்க மாட்டேன் என்று கூறியவனே இப்போது தன்னுயிரை வேரோடு பிடுங்கி செல்ல அதன் வலியை தாங்க முடியாமல் பித்து பிடித்த நிலையில் செல்லும் அவனையே வெறித்து கொண்டிருந்தாள் அலர்விழி.

ஆம் பல நாள் உறக்கத்தை களவாடிய கனவு இன்று நிஜமாகிட ஜீவனற்ற விழிகளுடன் தன் உயிரின் ஒரு பாதி தன்னை தவிக்க விட்டு நீங்கி சென்ற திசையையே பல நிமிடங்களுக்கு வெறித்துகொண்டிருந்தாள் அலர்.

பின் முழங்கால்களை கட்டி கொண்டு மௌனமாய் அவள் வடித்து கொண்டிருந்த கண்ணீர் ஒரு கட்டத்தில் அழுகையாய் வெடித்து சிதற குழந்தையாய் தேம்பி அழ தொடங்கி இருந்தாள்.
Good
 

apsareezbeena loganathan

Well-Known Member
தந்தையின் ஆதங்கம்
தாயின் தவிப்பு
மகளின் கலக்கம்
கணவனின் கோபம் ...
நீலாவின் பேச்சு
எல்லாம் கலந்த உணர்வு குவியல்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top