சரண் கீர்த்தி முன்னோட்டம் :

Advertisement

Rudraprarthana

Well-Known Member
அவள் விழிகள் வியப்பில் விரிவதை கண்டே அவள் எண்ணபோக்கை புரிந்து கொண்டவன் வசீகர புன்னகையுடன் ஷாலை பிடித்து கொண்டிருந்த அவள் கரத்தோடு தன் கரத்தை பிணைத்து மெல்ல தன் அருகே இழுத்தவன் அவள் நெற்றியில் முட்டி, "நமக்கே நமக்கான நாளில் என் ஆசையோட அளவை நீ தெரிஞ்சிப்ப பாப்பு" என்றான்.

அவன் வார்த்தைகளை மனதில் அசை போட்டவளுக்கும் எதிர்பார்ப்பு கூடிட பலவருட ஏக்கங்களை சுமந்த அவர்களுக்கே அவர்களுக்கான இரவில் சர்வ அலங்காரத்தோடு அவன் முன் இருக்கும் அவளை கண்டுகொள்ளாமல் அவளுக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது போல நடந்து கொண்டவன் தன்னை பார்த்து புன்னகைக்கவும் மறந்தது அவளை வெகுவாகவே அச்சுறுத்தி இருந்தது.

அதேநேரம் ஆசை கொண்ட மனது மாலை இதே அறைக்கு அவள் வந்த போது எத்தனை மென்மையாக அவளை அணுகி நொடியும் விலகாமல் தன்னை அவன் ஆராதித்தான் என்பதை எண்ணி பார்த்த கீர்த்திக்கு இப்போது அதற்கு நேர்மாறான அவன் புறக்கணிப்பும் அலட்சியமும் ஊசியாய் மனதை தைக்க அழவேகூடாது என்ற உறுதியுடன் வந்தவளுக்கு கண்கள் கலங்கி விட்டது இருப்பினும் சாமார்த்தியமாக தலையை குனிந்து கண்ணீர் வெளியேறாமல் உள்ளிழுத்து தன்னை திடபடுத்தி விட்டாள்.

அவன் பின்னே அவள் நிற்க நிச்சயம் கண்ணாடியில் அவள் பிம்பம் சரணின் விழியை சேர்ந்திருக்கும் அப்படி இருந்தும் சரண் எதுவும் பேசாமல் இருப்பதை கண்டவளுக்கு அவன் உணர்வுகள் புரிபட கணவன் மனைவிக்குள் எதற்கு தயக்கம் என்று உணர்ந்து அவளே முதல் அடி எடுத்து வைத்துவிட முடிவு செய்து விட்டாள். நிச்சயம் பழசையோ அல்லது கோவிலில் நிகழ்ந்ததையோ பேசி இன்றைய இரவின் இனிமையை கெடுத்து மேலும் சிக்கல் ஆக்க கூடாது என்ற உறுதி கொண்டவளுக்கு எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்ற குழப்பம்.

படபடப்பில் உள்ளங்கைகள் வியர்க்க அதை துடைக்க எண்ணி விழிகளை அறையில் சுழலவிட்டவள் கண்ணில் மேஜையில் அவள் கொண்டு வந்த பால் படவும் எப்படி ஆரம்பிப்பது என்ற குழப்பம் தீர்ந்து போனது. மூச்சை இழுத்து விட்டவள் கைகளை துடைத்து கொண்டு உடனே பால் டம்ப்ளரை கையில் எடுத்து கொண்டவள் இரண்டடி அவனை நோக்கி வைத்து சமாதான குரலில் 'மாமா' என்று அழைக்க கண்ணாடியில் அவள் முகம் பார்த்தவனின் கரம் ஒரு நொடி செயலை நிறுத்தியதே தவிர சரணிடம் பதிலில்லை.

தலை வாரி முடித்து மீசையை திருத்தியவன் மேஜை மீதிருந்த கைபேசியை எடுத்து கொண்டு திரும்ப அவனை மேலும் நெருங்கி நின்ற கீர்த்தியோ மெல்லிய முறுவலுடன் "மாமா உங்களுக்கு பால்" என்று கையில் இருந்த டம்ப்ளரை அவன் முன் நீட்ட அடுத்த நொடி அவன் அதை விசிறி அடித்த வேகத்தில் எதிரே இருந்த சுவரில் பட்டு தெறித்த பால் அறை எங்கும் தெறித்து கிடக்க தரையில் விழுந்து உருண்ட டம்பளர் சத்தம் அடங்க வெகு நேரம் பிடித்தது.

சத்தம் கேட்டு வைதேகியும் வளர்மதியும் ஒரு நொடி திடுக்கிட்டாலும் பூஜை அறையில் அமர்ந்திருந்தவர்கள் மீண்டும் கைகூப்பி கண் மூடி இருந்தனர்.

அவன் ஆவேசத்தை எதிர்பாராதவள் மருண்ட விழிகளுடன் இரு அடி பின்னே வைக்க அவள் கையை பிடித்து இழுத்து தன் முன்னே நிறுத்தியவன் அவள் முகம் நோக்கி குனிந்து, 'இங்க எதுக்கு வந்திருக்கன்னு தெரியுமாடி உனக்கு ..?? பெருசா இந்தாங்க மாமான்னு பாலை நீட்டுற..?? நீ இருக்க லட்சணத்துக்கு அது ஒன்னு தான் குறைச்சல்' என்று அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் கேட்க,

'மாமா..!!' என்று அதிர்ந்து நின்ற கீர்த்திக்கு வார்த்தை எழவில்லை.

'என்னடி மாமா..??' என்று அவள் தாடையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன், 'ஆமா மேடம் எப்படி பெரிய மனசு பண்ணி இங்க வர ஒத்துக்கிட்டீங்க..?? எப்படியும் அழுது சீன் க்ரீயேட் பண்ணி என் ரூம்க்கு வர மாட்டேன்ன்னு சொல்லி என்னை அசிங்க படுத்துவேன்னு இல்ல நெனச்சேன் ' என்றவனுக்கு தன் கையில் நிறைந்திருந்த அவள் மாசுமறுவற்ற முகமும் துடிக்கும் இதழ்களும் பித்தம் கொள்ள செய்ய அவளில் மூழ்க துடிக்கும் மனதை அடக்க வழி தெரியாமல் தத்தளித்து போனவனுக்கு தன் மீதான ஆற்றாமையும் அவள் மீதே கோபமாக உருமாற உடனே அவள் தாடையை விட்டவன் சுட்டு விரல் நீட்டி,

"இதோ பார் நான் எதுவும் பேச கூடாதுன்னு இருக்கேன் ஆனா நீ தேவை இல்லாம என் முன்னாடி வந்து என்னை பேச வச்சிடாத.. தாங்கமாட்ட" என்று எச்சரித்தவன் " ப்ச் போடி " என்று அவளை தன் வழியில் இருந்து அகற்றியவன் கடுகடுத்த முகத்துடன் படுக்கையை அலங்கரித்து இருந்த பூக்களை இழுத்து போட்டு பெட்ஷீட்டை உதறியவன் அதை கீழே விரித்து நெற்றி மீது கரம் பதித்து படுத்துவிட்டான்.

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top