ஹாய் ஃப்ரெண்ட்ஸ்....
இதோ அடுத்த பகுதி. இதுவும் சின்ன அப்டேட் தான்ப்பா. அதற்கு ஈடு செய்யும் விதமாய் ஒரு டீசர் நாளை ஈவினிங் போடறேன். இனி அடுத்த பகுதி ஞாயிறு தான் அளிக்க முடியும் என்று நினைக்கிறேன். முடிந்தால், இடையில் தரப் பார்க்கிறேன்.
View attachment 5035
இரண்டு நாட்களுக்கு முன்பு,
“குட் மார்னிங் சார்!” என்றவாறு அந்த கேபினுள் நுழைந்தாள் மகிழ்.
“குட் மார்னிங் மகிழ்!” என்று அவளை வாழ்த்திய எதிரில் இருந்தவருக்கு ஐம்பதை தாண்டிய வயதிருக்கும். சாந்தமான முகம், எப்பொழுதும் புன்னகை அமர்ந்திருக்கும் உதடுகள், கூரிய பார்வை, இவையே அவரை பார்த்தவுடன் நம் கண்களுக்கு தெரிபவை.
“மகிழ்தினி, இப்போ நாம கட்டிட்டு இருக்கற அந்த 5 ஃப்ளோர் கட்டிடத்துல ஒரு சில ப்ளோர்க்கு மட்டும் இன்டீரியர் செய்ய சொல்லி கேட்டிருந்தாங்க இல்லையா? அதற்காக அந்த இடத்தை ஓனருடன் சென்று பார்த்தீங்களா? அவர்களின் தேவை என்னவென்று கணிக்க முடிந்ததா?”
“யெஸ் சார். அவங்களோடவே போய் பார்த்துட்டு வந்தாச்சு. அந்த ஐந்து மாடி கட்டிடம் மொத்தமாகவே ஷாப்பிங் காம்ப்ளக்சாக வாடகைக்கு விடும் எண்ணத்தில் கட்டுவது தான் என்றாலும், அதில் ஒன்று அல்லது இரண்டு கடைகளில் தங்களுடைய கடையையும் வைக்கலாமேன்னு ஒரு திட்டம் அவங்களுக்கு. அதற்காக தனியா எல்லாத்தையும் தொடங்குவதை விட, கட்டிட வேலைகள் முடிஞ்ச சில நாட்களில் எல்லாமே ரெடி செய்துட்டா நம்ம வொர்க் சீக்கிரம் முடிஞ்சுருமேன்னு நினைத்திருக்காங்க. அவங்க எக்ஸ்பெக்டேஷன் பற்றி எல்லாமே விசாரிச்சாச்சு சார். இது முழுக்க முழுக்க கஸ்டமர்ஸை கவர் செய்வது போல் இருக்க வேண்டும் என்பதால் அதனை பற்றி முழுவதும் பார்த்துட்டு இருக்கேன்” என்றவளைக் கண்டு புன்னகைத்தவர்,
“வெல், ஹோப் யூ டூ இட், அண்ட் ஐ க்னோ யூ வில் டெஃபினைட்லி டூ இட் குட்” என்று அவளிடம் கூறியவர்,
“நவ், அஸ் அவர் ஒஃபிஷியல் டால்க் இஸ் ஓவர், அம்மாவும் அப்பாவும் எப்படி இருக்காங்கம்மா?” என்று அவள் நலம்விரும்பியாக விசாரித்தார்.
“இரண்டு பேரும் நல்லா இருக்காங்க அங்கிள். அப்பா தான், உங்களை பார்க்க வரனும்னு சொல்லிட்டு இருந்தார்” என்றவளைப் பார்த்து,
“இப்படி தான் ஆறு மாசமா சொல்றான். பட், இன்னும் அவன் வர்ற அந்த அமாவாசை தான் வரல” என்று தன் பால்ய சிநேகிதனை கலாய்த்தார் விஷ்வநாதன்.
“அங்கிள்!” என்று மெலிதாக சினுங்கியவள், “அவருக்கு அம்மாவை விட்டுட்டு வர முடியலை, அம்மாக்கு ஸ்கூலை விட்டுட்டு வர முடியலை”
“ஹ்ம்ம்ம்… அதுவும் கரெக்ட் தான். உன் ஆண்டி கூட ப்ரவீனையும் திவ்யாவையும் பார்க்க போகனும்னு ஆசையை மனசுல வெச்சுட்டு எனக்காக மட்டும் தான் இன்னும் யோசிச்சுட்டே இருக்கா” என்றவரின் முகம் யோசனையை தத்தெடுத்தது.
விஷ்வநாதனும் மகிழின் தந்தையும் பள்ளி தோழர்கள். அந்த நட்பு இன்று வரை தொடர்கிறது. மகிழ் வேலைக்கு சென்றே தீருவேன் என்று நின்றபோது அவளை வெளியில் எங்கும் அனுப்ப விருப்பமில்லாமல் இருந்த நண்பனை சமாதானப்படுத்தி தன் கம்பனியிலேயே மகிழை வேலைக்கு அமர்த்திக்கொண்டார் விஷ்வநாதன். அவ்ருக்கு ப்ரவீன் என்று ஒரே மகன். தந்தை படித்து வா என்று அயல்நாட்டிற்கு அனுப்ப, அங்கே படித்து வேலையும் தேடிக்கொண்டு கூடவே தன் வாழ்க்கைத்துணையையும் தேடிக்கொண்டவன். ப்ரவீனின் பாதி திவ்யா, அமைதியானவள். இவர்களின் காதல் திருமணத்தால் அவள் குடும்பம் பகையாகிப் போக, மாமியார் வீடே அதன்பின் தாய்வீடு என்றானது. அதற்கு ஏற்றாற்போல் விஷ்வநாதனின் மனைவி கங்காவும் அவளை நன்றாகவே கவனித்துக்கொள்வார். தற்போது திவ்யா கருவுற்றிருக்க, அவளை பார்த்துக்கொள்ள செல்ல நினைத்த கங்காவிற்கு தான் இல்லாமல் கணவன் என்ன செய்வார் என்று தோன்றியதால் இருதலைக் கொள்ளி எறும்பாய் அவர் நிலை.
தான் அங்கு வேலையில் சேர்ந்ததில் இருந்தே தாய்-தந்தை இருவரையும் அங்கேயே வந்துவிடுமாறு கூறிக்கொண்டிருந்த ப்ரவீனுக்கும் அவன் தந்தைக்கும் அடிக்கடி வாக்குவாதம் வந்தாலும், தற்போது அவருக்கு இரண்டு முறை ஸ்ட்ரோக் வந்திருக்க, முடிவுடன் கம்பனியை விற்றுவிட்டு தங்களுடன் வந்திடுமாறு தீர்மானமாக சொல்லிவிட்டான். அதன்படி, கம்பனியை விற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டார் விஷ்வநாதன்.
தற்போது, தன் நிலையை விளக்கியவர் மகிழின் முகம் பார்த்தார். அவருக்கும் அவளை விட்டு செல்வது சிறிது வருத்தமாகத் தான் இருந்தது. அவர் இங்கே இருப்பதால் அவளுக்கு பாதுகாப்பு அளிக்க முடிந்தது. இனி, தனியாக அல்லவா அவள் அனைத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டும்? அந்த பழைய சம்பவத்தை யாரேனும் கிளரி விட்டால்? ஏதோ இப்போது தான் சிறிது சிறிதாக தங்கள் வழிக்கு வருகிறாள்!
இதனை எல்லாம் நினைத்து வர் அவளை பார்த்துக்கொண்டிருக்க, அவர் வருத்தம் உணர்ந்தவள், “அங்கிள்! பீ ஹேப்பி! இனிமேல் நீங்க உங்க மகன் மற்றும் மருமகளுடன் இருக்கலாம். இந்த கம்பனியை விட்டு போறோமேன்னு கவலை படறீங்களா? எப்பவுமே அனைத்தும் பேக்கேஜ் டீல் போல் கிடைக்காது இல்லையா? இதனை விட்டால் தான் பேரனுடன் இருக்கும் சந்தோஷம் கிடைக்கும் என்றால், அந்த சந்தோஷம் எல்லாத்தையும் விட விலைமதிப்பற்றது தான?” என்று அவரை பலவாறு சமாதானப்படுத்தியவள் அந்த அறையை விட்டு வெளியேறினாள்.
கேபின் கதவின் பின் நின்றவளின் மனம் யோசனையை தத்தெடுத்தது. புதியதாக வருபவனால் கம்பெனியில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்?
(உன் வாழ்வில் என்னென்ன நிகழும் என்று முதலில் யோசி பெண்ணே!)
******
“அச்சோ! ரொம்ப லேட்டாகிடுச்சே! இன்னேரம் ப்ளைட் லேண்ட் ஆகிருக்கும். எல்லாரும் வந்திருப்பாங்களா?” என்று அவன் நினைக்க,
‘எல்லாரும் வந்திருந்தா கூட பரவாயில்லை. அவ வந்திருந்தா, இது தான் வர்ற நேரமா என்று உன்னை நல்லா வெச்சு செஞ்சுருவா’ என்று உண்மை நிலையை உரைக்க, ஏர்போர்ட்டை நோக்கி வேகப்படுத்தினான் தன் காரை.
புகழ் செங்கல்பட்டில் இருக்கும் தன் நண்பன் ஒருவனை பார்க்க செல்ல, அங்கே பல நாள் கழித்து சந்தித்துகொண்டவர்கள் நீண்ட நேரம் பேச, வெகு நேரம் கழித்தே அவனுக்கு ஏர்போர்ட் செல்ல வேண்டியதே நியாபகம் வந்தது. அதனால் நண்பனிடம் இருந்து விடைபெற்றவன் தற்போது மீனம்பாக்கம் இன்டர்நேஷ்னல் ஏர்போர்ட் செல்லும் வழியில் வந்துகொண்டிருந்தான்.
அப்போது சாலையில் சென்றுகொண்டிருந்த குழந்தையின் கையில் இருந்த அதற்கு பள்ளியில் அளித்திருந்த ப்றாஜெக்டிற்கான பேப்பர் நடுரோட்டிற்கு பறந்து வந்து விழ, அதனை எடுக்க அந்த குழந்தை ரோட்டை நோக்கி வந்து கொண்டிருப்பது கண்களில் பட, சட்டென்று ப்ரேக்கை நிறுத்தியும் அது பிடிபடாததால் தன் காரை சாலையோரம் இருந்த வாக்கிங் பாத்தை நோக்கி திருப்பினான்.
தனக்கு அடிபட்டிருந்தாலும் அந்த குழந்தைக்கு எதுவும் ஆகவில்லை என்ற நினைப்பில் சந்தோஷமாக மயக்கத்திற்கு சென்றான் புகழ்.
*******
பதைபதைத்தவாறு அந்த ஸ்டெரக்சரின் பின்னால் ஓடி வந்தாள் அகமகிழ்தினி. அவள் கண்களில் அப்படி ஒரு பயம். தன் முன்னால் காயம்பட்டு படுத்திருந்த அந்த உருவத்திற்கு எதுவும் ஆகக்கூடாது என்று அவள் மனம் இடைவிடாது பிரார்த்தித்தவாறு இருந்தது.
அவன் இல்லாவிடில் தன் வாழ்வில் என்ன? என்று யோசிக்கையிலேயே தான் ஏதோ திக்கு தெரியா காட்டில் நிற்பதைப் போல உணர்ந்தாள். உடனேயே, “Be positive” என்று அவன் எப்பொழுதும் சொல்வதை தனக்கும் சொல்லிக்கொண்டு தலையை லேசாக உதறியவாறு அவனைத் தொடர்ந்தாள்.
அவனை சிகிச்சைக்காக உள்ளே அழைத்துச் செல்ல, வெளியே நின்று தன் கண்களில் வழியும் கண்ணீரை துடைத்தவாறே இருந்தவளுக்கு அவனன்றி வேறு எந்த நினைவும் இல்லை. அவன் பெயரையே அவள் உதடுகள் உச்சரித்தன. என்றோ அவள் தனக்குள் எடுத்த அனைத்து சத்தியங்களும் அந்த ஒற்றை காட்சியில் தவிடு பொடியாகிவிட்டன.
அறையில் இருந்து வெளியில் வந்த ஒரு நர்ஸ் அவளிடம் அவனது உடமைகளை அளிக்க, அவற்றை தன் கைகளில் வாங்கியவளுக்கு அத்தனை நடுக்கம். இதனைத் தொடும் உரிமை உனக்கு இருக்கா? என்று அவளது ஒரு மனம் கேள்வி கேட்க, நீ தான் அவனை ஹாஸ்பிட்டலில் சேர்த்ததென்று மட்டும் அவன் அறிந்தால் என்ன நடக்கும் என்று உனக்கு தெரியும் தானே? என்று எள்ளி நகையாடியது.
அப்போது, அங்கு வந்த ஒரு நர்ஸ், “பேஷண்ட் பெயர் சொல்லுங்க?” என்று அவள் கவனத்தை திருப்ப, அவருக்கு தேவையான அனைத்து விவரங்களையும் தந்தாள். அவற்றை எழுதிய நர்ஸ், “ஓகே மிஸஸ். புகழேந்தி, இங்கே ஒரு சைன் பண்ணுங்க” என்க, அன்றைய நாளில் இரண்டாவது முறை அவள் அதிர்ச்சியடைந்தாள். அவள் நடந்துகொண்ட விதத்தைப் பார்த்தவர்கள் அவளை அவன் மனைவி என்றே நினைத்திருந்தனர். அவர்கள் அறிவார்களா அவர்கள் இருவருக்கும் நடுவில் நடந்ததெல்லாம்?
‘நான் அவன் மனைவி இல்லை!’ என்று துக்கத்துடன் அவள் நினைத்து வெதும்ப, கைகளோ தானாக அந்த ஃபார்ம்களை வாங்கி கையெழுத்திட்டன. இருக்கும் சூழ்நிலையையும் மீறி ஒரு மூச்சு சந்தோசமாக அழ வேண்டும் போன்று தோன்றியது அவளுக்கு. அவர் கூறிய அந்த வார்த்தை அவளது எட்டாண்டு கால தவம் அல்லவா? ஆனால், அவளுக்கு அந்த சிறிய சந்தோசம் கூட இல்லை என்பது அவள் விதி போலும்.
“கவுண்ட்டர்ல பில் பே பண்ணிடுங்க. உங்க ஹஸ்பெண்டுக்கு ஒண்ணும் ஆகாது. தைரியமாக இருங்க. உங்களை பார்த்தால் ரொம்ப பயந்து போயிருக்கீங்க. துணைக்கு வீட்டுல இருந்து யாரையாவது அழைச்சுக்கோங்க” என்று இலவசமாக அவளது நிலையைக் கண்டு அந்த நர்ஸ் பரிதாபத்துடன் சொல்லிவிட்டு சென்றாள்.
மெய்யான பயம் என்றால் என்னவென்று அப்பொழுதுதான் உணர்ந்தாள் பெண். இருந்தாலும், நடப்பை புரிந்தவள், ரிஷப்ஷனில் பணத்தைக் கட்டிவிட்டு அங்கே இருந்து அவன் வீட்டிற்கு அழைத்துக் கூறினாள். அரைமணி நேரத்தில் வருவதாக அவர்கள் கூற, தன் பழைய இடத்திற்கு வந்தவள், சிகிச்சை முடிந்திருக்கவும், உள்ளே சென்று அவனை ஒரு முறை கண்களில் நிரப்பிக் கொண்டாள். அவன் நெற்றியில் முத்தமிட ஒரு ஆசை எழ, அதனை செயல்படுத்த சென்றவளுக்கு நிதர்சனம் உரைக்க, வழிந்த கண்ணீரை துடைத்து வெளியே வந்து அமர்ந்தாள்.
சிறிது நேரத்திற்குப் பின், தூரத்தில் அவன் வீட்டினர் வருவது தெரிய, அங்கே இருந்து அவர்கள் கண்ணில் படாமல் வெளியேறினாள். அவளது மனம் ஓவென அழுதது, அவன் வீட்டினருடன் வந்த அந்த பெண்ணைக் கண்டு. அப்பெண், அவள் காதலனின் காதலி!