அத்தியாயம் - 5 சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

Advertisement

Yaazhini madhumitha

Well-Known Member
அத்தியாயம்-5

அறைக்குள் நுழைந்ததில் இருந்து
அழுதுகொண்டே இருந்தாள் மதுமிதா.
நான்கு வருடங்களாக கட்டுப்படுத்தி
வைத்திருந்த வேதனைகள் எல்லாம்
வெடித்துச் சிதறி கண்ணீராய் அவள்
தலையணையை நனைத்ததுக்
கொண்டிருந்தது.
ஏன் இப்படி நடக்கிறது?
எது நடக்கக்கூடாது என்று நினைத்து
பயந்தாலோ அதுவே நடந்துவிட்டதே..

யாருக்கும் தெரியாமல் மறைக்க
நினைத்ததை அனைவரும் தன்னை
இறுக்கிக் குடுத்த நெருக்கடியில்
சொல்லிவிட்டாள் தான். இருந்தாலும்
தன்னை என்ன நினைத்திருப்பார்கள்
என்ற எண்ணம் எழுந்து அவளை
வாட்டியது.

ஏன் அவன் தன் வாழ்வில் வந்தான்?
ஏன் அவனிற்காக இப்படித் தவிக்கிறேன்?
மறக்கவும் முடியாமல் அடுத்து நகரவும்
முடியாமல் இந்த எட்டு வருடங்களாக
அவள் படும் பாடு சொல்லி மாளாது.
ஒரு சிலர் முதல் காதலை எளிதாக
மறந்துவிட்டுச் செல்லும் போது
தன்னால் மட்டும் ஏன் முடியவில்லை
என்று யோசித்தவளுக்கு மனது
பாரமாகக் கனத்தது.

இந்த எட்டு வருடத்தில் ஒவ்வொரு
செயலிலும் அவன் நினைப்பே
அவளை வாட்டியது. ஒரு மணி
நேரத்தில் 59 நிமிஷம் அவன்
நினைப்பு தான். எதை எடுத்தாலும்
அவன் நியாபகமே வந்து நின்று அவளைக் கொன்னது.

நினைவு எட்டு வருடங்களுக்கு
முன்னால் சென்றன மதுவிற்கு.
மதுமிதா தன் வாழ்க்கையில்
சந்தோஷங்களை மட்டுமே பார்த்து
வந்த அழகிய நாட்கள். அப்போது
அவள் நினைத்தது கூட இல்லை
ஒருவனுக்காக இப்படித் தவிப்போம்
என்று.

மது அப்போது பதினொன்றாம் வகுப்பு
முடிந்து கோடை விடுமுறையில்
இருந்தாள். வருணும் நான்காம்
வகுப்பு முடித்திருந்தான். இருவரும்
வீட்டில் இருந்தால் வம்பிழுத்து
சண்டை போட்டுக்கொள்வார்கள்
என்று திருமுருகன், பெயிண்டிங்
க்ளாஸ் ஒன்றில் இருவரையும்
சேர்த்திவிட்டார். அப்போது தான்
ஒருநாள் அவர்கள் இருவரையும்
அழைத்து வரச் சென்ற சுந்தரமூர்த்தி
கார்த்திக்கின் அம்மா ஜானகியைச்
சந்தித்தது.

கார்த்திக்கின் அப்பா வேலுமணிக்கு
சுந்தரமூர்த்திக்கு தூரத்து உறவு.
வேலுமணி-ஜானகி கல்யாணத்தில்
ஜானகியைப் பார்த்த நினைவு
சுந்தரமூர்த்தி.

"ஜானகி நீங்க எப்படிமா இங்கே?" என
யோசனையுடன் வினவினார்
சுந்தரமூர்த்தி.

"இங்கே என்னோட பெண் நிலா
பெயிண்டிங் கிளாஸ் வருகிறாள்
அண்ணா" என்ற ஜானகியை
சுந்தரமூர்த்தி புரியாமல் பார்க்க
"நாங்கள் வால்பாறையில் இருந்து
பொள்ளாச்சி வந்து இரண்டு மாதம்
ஆகிறது அண்ணா" என்று சொல்ல
இருவரும் பேசியபடியே உள்ளே
நடந்தனர்.

அங்கு தான் மதுமிதா ஜானகி
அம்மாள் மற்றும் நிலாவை முதலில்
கண்டது. மதுவை விட இரண்டு வயது
சிறியவள் நிலா. அவ்வப்போது
நிலாவை க்ளாசில் பார்த்த
மதுமிதாவிற்கு நிலா தன் உறவினர்
என்று சத்தியமாக
எதிர்பார்க்கவில்லை.

அடுத்த நாளில் இருந்து நிலாவும்
மதுவும் நன்றாக பழக ஆரம்பித்தனர்.
ஏனோ நிலா மதுவிடம் நன்றாக
ஒன்றிப் போனாள். வருணும்
அவ்வப்போது அவர்களுடன் சேர்ந்து
கொண்டு கலாட்டா செய்து
கொண்டிருப்பான்.

ஒரு நாள் சுந்தரமூர்த்தி வீட்டிற்கு
அழைக்க வேலுமணி ஜானகி
தம்பதியர் நிலாவுடன் ஒரு
ஞாயிற்றுக்கிழமை மதுவின் வீட்டிற்கு
வருகை தந்தனர். மதிய உணவு
முடித்துக் கொண்டு பேச உட்கார்ந்த
போது தான் வேலுமணி
வால்பாறையில் உள்ள எஸ்டேட்டிற்கு
ஆள் வைத்துவிட்டு சொந்த ஊருக்கே
வந்ததையும்.. கோயம்புத்தூரில்
தொழில் தொடங்கியதையும்
கூறினார். மேலும் நிலாவின்
கல்விக்காக என்றும் கூறினார்.

"உங்களுக்கு ஒரு பையனும்
இருக்கிறான் இல்லை? பையன் என்ன
படிக்கிறான்" என்று சண்முகம் ஐயா
வேலுமணியிடம் கேட்டார். அந்தக்
கேள்வியில் தான் ஒருத்தி தன்
மனதையே ஒருவனிடம் ஒப்படைக்கப்
போகிறாள் என்று யாரும் அப்போது
அறியவில்லை.

"கார்த்திக் இப்போது கோயம்புத்தூரில்
ஆர்க்கிடெக்ட் படிக்கிறான். இரண்டாம்
வருடம் போய் விட்டான். போன வாரம்
தான் செமஸ்டர் லீவ் முடிந்து கோவை
சென்றான்" என்றார் வேலுமணி.

"அவன் நம் மது, வருண், நிலா படித்த
பள்ளியில் தான் +1,+2 படித்தான்.
ஆனா பள்ளி ஹாஸ்டலில் தங்கி
இருந்து படித்தான். விளையாட்டில்
ரொம்பவே கெட்டிக்காரன்.
பாஸ்கட்பால் (basketball) இல் கூட
பள்ளியில் டீம் கேப்டன் அவன். மாநில அளவு கூட போய்விட்டு வந்தான்"
என்றார் ஜானகி பெருமையாக. அவர்
சொன்னது யாருக்கு எட்டியதோ
இல்லையோ ஒருவளின் காதுக்குள்
சென்று ஆழமாகப் பதிந்து
ஆர்வத்தைத் தூண்டியது.

"அந்த அண்ணாவா? அவர் எனக்கு
ஒரு தடவ பாஸ்கட்பால் விளையாட
சொல்லிக் கொடுத்தார்" என்றான்
வருண். வருண் சொல்ல மேலும்
ஜானகி அம்மாள் தன் மகனின்
புராணத்தை அளந்தார்.

எல்லாவற்றையும் கேட்டுக்
கொண்டிருந்த மதுவிற்கு ஏனோ "யார்
அவன்? இதுவரை நாம் பார்த்தது
இல்லையே?" என்று கார்த்திக்கைப்
பார்க்க ஆவல் எழுந்து ஒரு ஐடியாவும்
தோன்றியது. மாலை ஆனதும்
வேலுமணி குடும்பத்தார் கிளம்பிச்
சென்றனர்.

கோடை விடுமுறை முடிந்த உடனேயே
பள்ளிக்கு சென்ற மது தனது
நெருங்கிய தோழி ஸ்வேதாவை
அழைத்துக் கொண்டு லன்ச் ஹார்
(lunch hour) இல் பள்ளி விளையாட்டு
அறைக்குச் சென்றாள். அவள் எங்கே
எங்கே என்று கேட்டுப் பார்த்தும் மது
ஒன்றும் சொல்லாமல் அவளின்
கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு
போக ஸ்வேதாவும் அவள் இழுத்த
இழுப்பில் போனாள். ஸ்வேதாவை
வெளியே காவலுக்கு நிறுத்தி விட்டு
உள்ளே தன் வேலையைப் பார்க்கச்
சென்றாள்.

உள்ளே சென்று கார்த்திக் படித்த
ஆண்டு அச்சடிக்கப்பட்ட புக்லெட்டை
(booklet) தேடினாள். ஒவ்வொரு
ஆண்டாகப் பார்த்து கடைசியில்
அவன் படித்த ஆண்டு புக்லெட்
கண்ணில் சிக்கவும் குஷியாக அதை
எடுத்துப் பிரித்தாள். தேடித்தேடி
அவனின் போட்டோவை கண்டுப்
பிடித்தாள். அவனின் போட்டோவிற்குக்
கீழ் அவன் பெயருடன் இருக்கவே
அவளுக்கு அவ்வளவு சிரமமாக
இருக்கவில்லை மதுவிற்கு.

ஒரு க்ரூப் போட்டோ மற்றும் ஒரு தனி
போட்டோ இருந்தது. சற்று ஒல்லியாக
உயரமாக இருந்தவனைப் பார்த்து
அவளுக்குச் சிரிப்பு தான் வந்தது.
தனியாக இருந்த போட்டோவில்
நேராக வெற்றி மிதப்புடன் கையில்
கோப்பையுடன் நின்றிருந்தவனைக்
காண்கையில் அவளின் கண்கள்
அந்தப் பேப்பரை துளையிடும்
அளவுக்கு கூர்மையானது. அவனது
சிரிப்பு ஏனோ அவளையறியாமல்
அவளை ஈர்த்தது. எவ்வளவு நேரம்
போட்டோவைப் பார்த்துக் கொண்டு
இருந்தாள் என்று இன்றும்
நினைவில்லை மதுவிற்கு.

"மது டைம் ஆச்சு" என்ற ஸ்வேதாவின்
குரல் கேட்டு, "அ.. வரேன்" என்றவள்
அதை அங்கு வைக்க
மனமில்லாதவளாய் அவன் இருந்தப்
பக்கத்தை மட்டும் கிழித்துத் தன்
யூனிபார்மில் வைத்தாள். ஸ்வேதா
மதுவிடம் எவ்வளவோ கேட்டும்
சமாளித்து வைத்தாள் தான் தேடி
வந்தது கிடைக்கவில்லை என்று.

வீடு வந்ததும் அறைக்குச் சென்று
கதவைச் சாத்திவிட்டு அவனது
போட்டோவை மீண்டும் எடுத்து
மீண்டும் பார்த்தாள் மது. ஏனோ
தன்னையறிமால் சிரித்துக் கொண்டே
இருந்தாள். ஏனோ அவனின்
போட்டோவின் மீது தன் விரலை
வைத்துப் பார்க்கையில் தன்னை
அறியாமல் சிலிர்த்து கைகள்
நடுங்கின மதுவிற்கு.

ஆண் பிள்ளைகளிடம் மது பேசவே
மாட்டாள் என்று சொல்ல முடியாது.
பள்ளிகளில் கூட நல்ல ப்ரண்ட் ஆக
இருப்பாள் பையன்களிடம். ஆனால்
எவர் மேலேயும் மதுவிற்கு ஈர்ப்புக் கூட
வந்ததில்லை. இந்த மாதிரி உணர்வு
முதல் முறையாக ஏற்பட்டது கார்த்திக்
மேல்தான். அவனது போட்டோவைப்
பத்திரமாக எடுத்து வைத்துவிட்டு தன்
அறையில் உள்ள ஆளுயரக்
கண்ணாடி முன் நின்றாள். மாநிறம்
தான். ஐந்தரை அடிக்கும்
நெருக்கமான உயரம். துறுதுறு
விழிகளும் செதுக்கிய முக அமைப்பும்
இடை வரை இருந்த கூந்தலும்
அவளை அழகாக காண்பித்தது.

"மது டீ குடிக்க வரலையா?" என்று
கீழிருந்து ராதா குரல் கொடுக்க
விருட்டென சுயநினைவிற்கு வந்தவள்
"வந்துட்டேன் சித்தி..." என்றபடி கீழே
இறங்கி வந்தாள்.

கீழே வந்தும் சிரித்துக் கொண்டே
இருக்க அதை கவனித்த வருண்
"அம்மா, பெரியம்மா, பாட்டி இங்க
ஒருத்திக்கு பைத்தியம் பிடித்து
விட்டதுபோல இருக்கு" என்று வருண்
மதுவை மாட்டி வைத்தான்.

"சும்மா இருடா" என்று மது அவனை
அடிக்க வருணோ அவளது கையை
பிடித்து கடித்துவிட்டான். இருவரும்
சண்டையில் ஒருவரை ஒருவர்
அடித்துக் கொண்டு இருக்க ஈஸ்வரி
அம்மாதான் வந்துத் தடுத்தார்.

வருண் மீண்டும் அவள் சிரித்ததைப்
பற்றி ஈஸ்வரி அம்மாவிடம் மாட்டி
வைக்க தம்பியை முறைத்தாள்
மதுமிதா. எதற்கு சிரித்தாய் என்று
பாட்டி கேட்க வகுப்பில் நடந்த பழைய
கதையைச் சொல்லி வைத்து
தப்பித்தாள் மதுமிதா.

நாட்கள் செல்லச் செல்ல வேலுமணி
குடும்பமும் சுந்தரமூர்த்தி குடும்பமும்
நெருங்கியது. கோவிலில்
வாராவாரம் சந்தித்தனர். ஜானகி
அம்மாவிற்கு மதுவும் வருணும்
துறுதுறுவென இருப்பதால்
அவர்களை மிகவும் பிடித்துப் போனது.

கார்த்திக்கின் நண்பன் சிவாவின்
தங்கை மிதுனா, மது வகுப்பில் தான்
படித்தாள். மதுவின் தோழியும் கூட.
ஒருநாள் நிலாவும் மதுவும் பள்ளியில்
எதேச்சையாக சந்தித்து ப்ரேக் டைமில்
பேசியதைப் பார்த்த மிதுனா "உனக்கு
கார்த்திக் அண்ணா பேமிலியைத்
தெரியுமா?" என்று கேட்டாள்.

"ம்ம் தெரியுமே..நிலா அப்பா என்
அப்பாக்கு தூரத்து உறவு" என்ற மது
"உனக்கு எப்படித் தெரியும்?" என்று
ஆர்வத்துடன் கேட்டாள் மது. அவளின்
ஆர்வத்தை ஸ்வேதா குறித்துக்
கொண்டாள்.

"என் அண்ணா கூடதான் கார்த்திக்
அண்ணா படித்தார் ஸ்கூல்ல.
அப்பப்போ வீட்டிற்குக் கூட வருவார்"
என்றாள் மிதுனா.

"கார்த்திக் எப்படி?" என்று
சாதாரணமாகக் கேட்பது போலக்
கேட்டாள் மது. ஆனால் யார்
நம்புவார்கள் இவள் சாதாரணமாகக்
கேட்டாள் என்று சொன்னால்.

"ஓகோ..." என்று கோரஸ் பாடினர்
ஸ்வேதாவும் மிதுனாவும்.

"என்ன விஷயம்?" என விழிகளைக்
கூர்மையாக்கிக் கேட்டாள் ஸ்வேதா.

"ஒன்றுமில்லையே" என்று தோளைக்
குலுக்கினாள் மது.

"ஆங்.. நம்பிட்டோம்" என்று மிதுனா
கூறிச் சிரிக்க ஸ்வேதாவும் அவளுடன்
சேர்ந்து சிரித்தாள்.

"நாங்களும் உன்னை சில நாளாக
பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.
ரொம்ப வித்தியாசமாக அப்பப்போ
பண்ணற.. உண்மையைச் சொல்லு"
என்று பொய்யாக மிரட்டினாள்
ஸ்வேதா.

"உண்மையைச் சொல்ல என்ன
இருக்கிறது..நீங்கள் நினைப்பது தான்
உண்மை..போதுமா" என்றார் மது.

"ஓ அப்ப கூட வாயத் திறந்து சொல்ல
மாட்ட இல்ல" என மதுவை மிதுனா
கிண்டல் செய்ய மதுவிற்கு உள்ளே
சிலிர்த்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

"சரிசரி கார்த்திக்கை பற்றி சொல்லு"
என்று ஆர்வ மிகுதியால் அங்கேயே
வந்து நின்றாள் மது.

"கார்த்திக் அண்ணாவைப் பற்றி
என்ன சொல்ல...நல்ல அண்ணா தான்.
என் அண்ணணோடு சில சமயம்
வீட்டில் பார்த்திருக்கிறேன். பேசியும்
இருக்கிறேன். நல்ல ஜாலி டைப் மது.
ஆனால் கொஞ்சம் கோவக்காரர்"
என்று முடித்தாள்.

"அவ்வளவு தானா? வேற ஏதாவது
இருந்தாலும் சொல்லுடி" என்று
உதட்டைப் பிதுக்கிக் கேட்டாள் மது.
உண்மையிலேயே ஆர்வ மிகுதியில்
கேட்டவளுக்கு மிதுனா சொன்ன
தகவல் பத்தவில்லை தான்.

"நீ விட்டா பையோடேட்டாவே கேப்ப டி"
என்று சிரித்தாள் ஸ்வேதா. அதற்குள்
சார் வர அந்தப் பேச்சு அங்கேயே
முடிந்தது.

தினமும் அவனது போட்டோவைப்
பார்ப்பதே அவளுக்கு வழக்கமாயிற்று.
அந்த போட்டோ விஷயமும்
ஸ்வேதாவும் மிதுனாவும் அறிந்து
கொண்டு மதுவைக் கலாய்த்துத்
தள்ளினர்.

"உனை எத்தனை முறை
பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு
கணமும் இமைப்பதில்லை"

என்ற கண்ணதாசன் பாட்டுத் தோன்ற
மதுவிற்கு கன்னம் எல்லாம் சிவந்து
விட்டது.

மதுவும் தன்னை அறியாமல்
கார்த்திக்கிடம் காதலில் விழுந்தாள்.
ஏன் அவனைப் பிடித்தது என்று இன்று
வரை அவளுக்குத் தெரியவில்லை.
தெரிந்துகொள்ள அவள் அறியவும்
இல்லை.. அவனால் ஏற்பட்ட இந்த
உணர்வை மகிழ்ச்சியுடன் கடந்தாள்.
ஆனால் படிப்பில் கோட்டை விடாமல்
95% எடுத்தாள். அவளுக்குப் பிடித்த
படிப்பான எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு
அப்ளிகேஷனும் போட்டு வைத்தாள்.

வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்காமல்
தினமும் கோவையில் உள்ள
ஸ்போக்கன் இங்லிஷ் க்ளாஸ் தன்
சித்தப்பாவுடன் சென்று வந்தாள்.

"மதுமா கதவைத் திற" என்று
மூன்றாவது முறையாக கதவைத்
தட்டினார் திருமுருகன். கோவையில்
இருந்து வந்தவரிடம் ராதா
அனைத்தையும் சொன்னார்.

"சாப்பிடக் கூடக் கீழே வரவில்லை.
உமாவும் சுந்தரமூர்த்தியும் உள்ளே
அறைக்குள் சென்றவர்கள் இன்னும்
வெளிவரவில்லை " என்றபடி ஈஸ்வரி
அம்மா வந்தார். கழுத்தைத் திருப்பி
ஷோபாவில் அமர்ந்திருந்த தன்
மாமனாரையும் மகனையும் பார்த்தார்
திருமுருகன். சண்முகமும் ஏதோ
யோசித்தபடி அமர்ந்திருந்தார்.
வருணும் சோபாவில் உட்கார்ந்திருந்த
படியே தந்தையை நோக்கினான்.
மொத்தத்தில் எல்லோரும் அவரவர்
சிந்தனையில் இருந்தனர்.

"சரி சாப்பாடு எடுத்து வைங்க நான்
கூட்டிட்டு வறேன்" என்றபடி மாடி
ஏறினார் திருமுருகன்.

கடந்த காலத்தில் மூழ்கி இருந்த மது
சித்தப்பாவின் குரலில் எழுந்து
கண்களைத் துடைத்து விட்டுக்
கதவைத் திறந்தாள்.

அழுதழுது கண்கள் சிவந்து வீங்கி
இருந்தன. திருமுருகனைக் கண்டதும்
"சித்தப்பா.." என்றபடி அவரின்
தோளில் சாய்ந்து விசும்பினாள்.
திருமுரகனுக்கு மது அழுவதைப்
பார்க்கப் பாவமாக இருந்தது.
காலேஜில் தான் ஏதாவது பையனாக
இருக்கும் என்று நினைத்தவர் ஜானகி
அம்மாள் பையன் என்று நினைக்கவே
இல்லை. மது மனதில் நிறைய சொல்லப்படாமல் இருக்கிறது என்று
யூகித்தார்.

"ஸாரி சித்தப்பா...ஸாரி.. எ.. எனக்கு.. "
என்றவளால் மேல முடியவில்லை..
"ஸாரி" என்று அழுதபடியே மீண்டும்
சொன்னாள்.

"எதற்கு தங்கம் ஸாரி.. அதெல்லாம்
சித்தப்பா ஒன்றும் நினைக்கவில்லை.
வந்து சாப்பிடு. நீ சாப்பிடாமல் யாரும்
சாப்பிடவில்லை" என்றபடி
வற்புறுத்திக் கீழே அழைத்துச் செல்ல
அனைவரும் வந்து அமர்ந்து
அமைதியாகச் சாப்பிட்டு முடித்தனர்.

சாப்பிட்டு முடித்து வந்த மது, 'அந்த
ஸ்போகன் இங்லிஷ் க்ளாஸ் தன்
வாழ்க்கையை இப்படி திருப்பிப்
போட்டு விட்டதே' என்று எண்ணி
மீண்டும் பழைய நினைவுகளில்
மூழ்கினாள்.

அவள் இங்கே மூழ்க அங்கே
ஒருவனுக்கு விஷயம் தெரிந்தது.
 

Geetha sen

Well-Known Member
மது லவ் மெய்சிலிர்க்க வைக்கிறது. டேய் கார்த்திக் எங்கடா இருக்க. இப்பதான் உனக்கு விசயமே தெரியுதா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top