அத்தியாயம் 3 - சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

Advertisement

Yaazhini madhumitha

Well-Known Member
அத்தியாயம்-3

மது வந்து இரண்டு நாட்கள் கழிய
எல்லோரும் அவளை விழுந்து விழுந்து
கவனிக்க ஆரம்பித்தனர்.
திருமுருகனும் மாலை வரும்போது
ஏதாவது வாங்கி வந்தார். மதுவும் தன்
வீட்டில் புத்துணர்ச்சியுடன் வலம்
வருவதை உணர்ந்தாள். அவ்வப்போது
மனதில் எழும் நியாபகங்களை
அப்புறப்படுத்தவும் செய்தாள்.

"என்ன நான் ஒருத்தன் இருப்பதையே
மறந்துட்டீங்களா எல்லாரும்? என்னை
யாரும் இப்போல்லாம் கண்டு
கொள்வதே இல்ல" என்று ஒரு நாள்
பொய்க்கோபம் காட்டினான் வருண்.

"ஏன் இரண்டு வருசம் அடிச்ச சேட்டை
பத்தாதா?" என்று திருமுருகன் கூற
ஏதோ புத்தகத்தைப் படித்துக்
கொண்டிருந்த மது சிரித்துவிட்டாள்.

"பாருங்கள் பெரியம்மா இவங்களை"
என்று உமா மகேஸ்வரியின் தோளில்
சலுகையாக சாய்ந்து முறையிட்டான்
வருண்.

"விடுடா தங்கம் எல்லாம் கொஞ்ச நாள்
தான்" என்று மகனைச் சமாதானம்
செய்து ஓரக்கண்ணால் மகளைப்
பார்த்ததார் உமா.

மதுவோ அந்தப் பேச்சே காதில்
விழாதது போல தன் தந்தையிடம்
பேசிக் கொண்டிருந்தாள். "அப்பா
நாளை கோவையில் ஒரு
ஹாஸ்பிடல்ல எனக்கு இன்டர்வியூ
இருக்கு, நீங்க கார்மெண்ட்ஸ்
போகும்போது என்னை அங்கே
விட்டுட்டு போங்க" எனக் கூறினாள்.

"நாளை உன் சித்தப்பாக்குத் தான்
கோவையில வேலை மது, நீ
அவனுடனே சென்றுவிடு" எனச்
சுந்தரமூர்த்தி கூற, திருமுருகனும்
"நாளை ஏழு மணிக்குத் தயாராகிவிடு
மதுமா, போகும்போது பிள்ளையார்
கோயில் சென்று தேங்காய்
உடைத்துவிட்டுப் போகலாம்" என்றார்.

"சரி சித்தப்பா" என்று அனைவருக்கும்
பொதுவாக இரவு வணக்கம்
கூறிவிட்டு மாடிப்படி ஏறினாள்.
அறைக்குள் நுழைந்து கதவை
சாத்திவிட்டு பாடுக்கையில்
விழுந்தவளுக்கு தன் அன்னை
சொன்னது காதில் விழாமல் இல்லை.
அம்மா மறைமுகமாக தன் கல்யாணப்
பேச்சை எடுப்பது புரிந்தது. ஏனோ
பயமாக இருந்தது மதுவிற்கு. "முருகா
சரணம்" என்று தன் இஷ்ட
தெய்வமான முருகனை
வேண்டிவிட்டு கனத்த மனதுடன்
தூங்க ஆரம்பித்தாள்.

மகளின் நடவடிக்கையில் மனம்
நெருடியது உமாவிற்கு.
எதற்கெடுத்தாலும் வாயாடும் மகள் ,
இன்று தன் பேச்சை கேட்காதது
போலச் சமாளித்துவிட்டுப் போனது
அவருக்குச் சரியாகப்படவில்லை.
தான் வீணாக கற்பனை
செய்கிறோமோ என்று கூடத்
தோன்றியது உமாவிற்கு. எதுவாக
இருந்தாலும் காப்பாற்றுப்பா முருகா
என்றுவிட்டு உறங்கச் சென்றார்.
(முருகன் யார் பேச்சைக் கேட்பாரோ
இரண்டு பேர் வேண்டுதலில்).

அடுத்த நாள் மதியம் இன்டர்வியூ
முடிந்து வேலை கிடைத்துவிடப்
பேருந்திலேயே பொள்ளாச்சி வந்து
விட்டாள் மது. வீட்டினுள் நுழைந்த மது
ஹாலில் அமர்ந்திருந்த பாட்டியின்
அருகில் சென்று அமர்ந்து அவரின்
தோளில் வாஞ்சையாகத் தலை
சாய்த்து வேலை கிடைத்ததைத்
தெரிவித்தாள்.

"எனக்கு நேற்றே உனக்கு வேலை
கிடைத்துவிடும் என்று தெரியும்
கண்ணு" என்று பேத்தியின்
நெற்றியில் முத்தமிட்டார் ஈஸ்வரி.
மதுவின் குரல் கேட்டு வெளியே வந்த
பெண்கள் விஷயம்அறிந்து
மகளுக்குச் சுற்றிப் போட்டனர்.
உமாமகாகேசுவரி கேசரி செய்ய
சமையல் அறைக்கு விரைய, ராதா
வீட்டு ஆண்களுக்குத் தகவல்
தெரிவித்தார். சுந்தரமூர்த்தியும்
சண்முகமும் பொள்ளாச்சி
கார்மெண்ட்ஸில் இருந்ததால்
விரைவில் வரவும், வருணும் கல்லூரி
முடிந்து வரச் சரியாக இருந்தது.

தன் பெரியம்மா தந்தக் கேசரியை
விழுங்கிக் கொண்டே "உனக்கு
இவ்வளவு அறிவு என்று நான்
எதிர்பார்க்கவே இல்லை" என்று
வேண்டுமென்றே சீண்டினான் வருண்.

"ஆமா உன் அக்கா தானே நான்..
அதனால் தான் அப்படி நினைச்சு
இருப்ப நீ.. ஆனால் அது தப்பு-ன்னு
நிருபித்துவிட்டேன் பார்" என்றுக் கூறி
நாக்கை துருத்திக்காட்டினாள் மது.

"உன்கூட எல்லாம் பேச்சில் ஜெயிக்க
முடியாதுடி அக்கா" என்று இரு
கைகளையும் தூக்கி
ஒத்துக்கொண்டான் வருண்.

சுந்தரமூர்த்தி இன்று வெளியே
சென்று சாப்பிட்டு வரலாம் என்று
சொல்ல அனைவரும் கிளம்பினர்.
திருமுருகன் நேரே ஹோட்டல் வந்து
விடுவதாகத் தெரிவித்து விட்டார்.

எல்லோரும் உண்டு முடித்து வீடு வந்து
சேர்ந்தனர். வீடு வந்தவுடன் மாடி ஏறிய
மதுவிடம் "மதும்மா உன்னிடம்
கொஞ்சம் பேச வேண்டும்டா" என்றார்
சுந்தரமூர்த்தி. எல்லாரும் பொதுவாக
ஹாலில் அமர்ந்தனர்.

மதுவும் தந்தை அருகில் அமர "உனக்கும் கல்யாண வயது ஆச்சு
மதுமா. நீயும் மேலே படிக்க வேண்டும்
என்று எம்.பி.பி.ஸ் முடித்தவுடன்
சொன்னதால் நாங்களும் உன்னைத்
தொந்திரவு செய்யவில்லை. இப்போ
மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து
விடலாம் மது" என்று சொல்லி
முடித்து மகளைப் பார்த்தார்
சுந்தரமூர்த்தி.

மது இந்தப் பேச்சு வரும் என்று
எதிர்பார்த்தது தான். "எனக்கு
கல்யாணம் வேண்டாம் அப்பா" என்று
மது கூற எல்லாரும் அதிர்ந்து விட்டனர்.

அதிர்ந்த முகத்தை வெளியே
காட்டாமல் "ஏன்டா எல்லாரும் ஒரு
நாள் கல்யாணம் செய்து
கொண்டுதானே ஆக வேண்டும்"
என்றார் சுந்தரமூர்த்தி பொறுமையாக.
அவருக்குப் பொறுமை சீக்கிரம்
பறந்துவிடும் என்று எல்லோரும்
அறிந்ததே.

"........." - அமைதி காத்தாள் மதுவிதா.

"யாரையாவது விரும்புகிராயா மது?"
எனக் கேட்டார் திருமுருகன்.

"எனக்கு கல்யாணமே வேண்டாம்.
நான் உங்களுடனே.." என்று கூறி
முடிப்பதற்குள், "போதும் நிறுத்து மது.
ஒரே பெண் என்று செல்லம்
கொடுத்தது தப்பாகப் போச்சு.
பேச்சைப் பார். கல்யாணமே
வேண்டாமாம். இன்னும் ஒரு
மாதத்தில் ஒரு நல்ல முடிவை நீ
சொல்ல வேண்டும்.. இல்லை என்றால் என் முடிவுக்குக் கட்டுப்பட்டு தான் ஆக
வேண்டும்" என்று கத்திவிட்டு அவர்
அறைக்குள் சென்று படாரென கதவை
அடைத்தார்.

உமா ஏதோ மகளைத் திட்ட ஆரம்பிக்க
சண்முகம் ஐயா தன் மகளை
அடக்கினார். "உமா.. எதுவும் இப்போ
பேச வேண்டாம்.. எல்லோரும் போய்
படுங்க" என்றார் சண்முகம் தாத்தா..
எல்லோருமே சங்கடமாக உணர்ந்து
அவரவர் அறைக்குள் புகுந்தனர்.
மகளை முறைத்தபடியே அறைக்குள்
சென்றார் உமா மகேஸ்வரி.

அன்று மாலை இருந்த மகிழ்ச்சி
யாருக்கும் இரவு இல்லை. எல்லாரும்
தங்கள் யோசனையில் மூழ்கி
விடியற்காலையிலேயே உறங்க
ஆரம்பித்தனர்.

அடுத்து இரண்டு நாட்களில் மது
ஹாஸ்பிடல் சென்று வர
ஆரம்பித்தாள். கண் மருத்துவத்தில்
முதுகலைப் பட்டம் பெற்றிருந்தாள் மது. அதனால் காலை 9 முதல் மதியம் 3.30 வரையே அவளது பார்வை நேரம்.
ஏதாவது அறுவை சிகிச்சை அல்லது
அவசர சிகிச்சை இருந்தால் மட்டுமே
தாமதம் ஆகும். ஞாயிறும் விடுமுறை.
மது வேலை முடித்து வீடு வந்தால்
சாப்பிட மட்டுமே கீழே வருவது மற்ற
எல்லா நேரமும் அறையிலேயே
கிடந்தாள். அவளுக்குத் தன்
குடும்பத்தாரை முகம் பார்க்கவே
சங்கடமாக இருந்தது.எல்லோரும்
ஒரு வித இறுக்கத்துடையே வலம்
வந்தனர். ஒரு வாரம் கடந்தது.

ஒரு நாள் இரவு உணவிற்கு வந்த
அனைவரையும் அழைத்த சண்முகம்
தாத்தா "நமது ஜோசியரை இன்றுப்
பார்த்தேன். அவரிடம் வீட்டில் உள்ள
நிலையைச் சொன்னப் போது அவர்
நமது காமாட்சி அம்மன் கோயிலில்
ஒரு பரிகாரம் செய்யச் சொன்னார்.."
என்று கூறிவிட்டு, "வர
ஞாயிற்றுக்கிழமை எல்லாருக்கும்
வசதிதானே" என மகள்களைப்
பார்த்துக் கேட்டார் சண்முகம்.

"வருணிற்கும் நாளையுடன் தேர்வு
முடிகிறது அப்பா. அடுத்து ஒரு மாதம்
விடுமுறை தான். மதுவிற்கும் ஞாயிறு
விடுமுறை தான்" என்று தந்தைக்கு
பதிலளித்தார் ராதா.

சாப்பிட்டு முடித்ததும் அவர்கள் வீட்டின்
முன்னால் உள்ள, சிறிய
புல்வெளியுடன் கூடிய
பூந்தோட்டத்திற்கு வந்து,
மரப்பென்ஞ்சில் அமர்ந்தாள் மது.
ஏனோ தாத்தா கோவில் என்று
சொன்னதும் பதட்டமாகவே இருந்தது.

கார்த்திக்கின் நினைவுகள் வந்து
அலக்கழித்தன. சில வருடங்களுக்கு
முன்பு அவனது நினைப்பு
மயிலிறகாய் மனதை வருடிய நினைவு
வந்தது மதுவிற்கு. இதிலிருந்து
வெளியவே வர முடியாதா என்று
தவித்தவள்.. வரவா என்று இருந்த
அழுகையை அடக்கி, எழுந்து உள்ளே
சென்றாள் மது.

ஞாயிற்றுக்கிழமையும் வந்தது.
வழக்கம் போல மது வாக்கிங் சென்று
விட்டுத் திரும்பி வர, திருமுருகன்
புல்வெளியில் உள்ள மரபென்ஞ்சில்
அமர்ந்த படியே மதுவை வரும்படி கை
அசைத்தார். மதுவும் திருமுருகன்
அருகில் சென்று அமர்ந்தாள்.

ஒரு புன்னகையை சிந்தியவர் "எதை
மதுமா மறைக்கிறாய்? எதை
நினைத்து இப்படித் தவிக்கிறாய்க்
கண்ணு?" என்று நேரிடையாகவே
கேட்டுவிட்டார் திருமுருகன்.

ஷூ லேசைக் கட்டிக்கொண்டு
நிமிர்ந்த மது "ஒன்றும் இல்லையே
சித்தப்பா" என்றாள் ஷூவைப்
பார்த்தபடியே.

"அன்று இரவு நீ இங்கு
உட்கார்ந்திருந்ததை நான் பார்த்தேன்
மது. நீ எதையோ நினைத்துக்
கலங்குவதையும் கண்டேன்" தான்
அவளை கவனித்ததைப் பற்றிச்
சொன்னார்.

"இல்லை சித்தப்பா.. நீங்க தவறாக
புரிந்து கொண்டு இருக்கீங்க" என்றவளின் பேச்சை கை உயர்த்தித்
தடுத்தார்.

"ஏன் மதுமா நான் கூட உன்னைப்
புரிந்து கொள்ள மாட்டேன் என்று
நினைக்கிறாயா? எதற்கும் ஒரு
காரணம் இருக்கும் தானே தங்கம்?"
என்று ஒரு மாதிரி அமைதியான
வெற்றுக் குரலில் கேட்டார்.

இதற்கு மேலும் மறைக்க முடியாது
என்று எண்ணியவள் "ஆமாம்
சித்தப்பா நான் ஒருவரைக்
காதலிக்கிறேன்" என்று கூறி விட்டாள்.
திருமுருகனுக்கு அதிர்ச்சி தான்..
காதல் விவகாரம் என்று தான்
யூகித்திருந்தார் முதலிலேயே.
ஆனால் மது எப்படி காதலில்? அந்த
மாதிரி நடவடிக்கைகள் கண்டது
இல்லையே.. என்று யோசித்த
திருமுருகன் மதுவிடம் அடுத்த
கேள்வியைக் கேட்டார்.

"பையன் யாரும்மா? பெயர் என்ன?"
என வினவினார் திருமுருகன்.

"ப்ளீஸ் சித்தப்பா அதை மட்டும்
கேட்காதீர்கள். எனக்கு மட்டும் பிடித்து
இருந்தால் பத்தாது. அவருக்கும்
என்னைப் பிடிக்க வேண்டும். அதுவும்
இல்லாமல் எ..எனக்கு எனக்கு
கல்யாணமே வேண்டாம் என்று
இருக்கிறது" என்று நடுங்கிய குரலில்
சொல்லிவிட்டு எழுந்தவள் வீட்டிற்குள்
சென்றாள்.

சில நிமிடம் யோசித்து விட்டுத் தானும்
எழுந்து உள்ளே சென்று கோயிலுக்கு
செல்லத் தயாரானார் திருமுருகன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top