அத்தியாயம் – 17
“சீக்கிரம் குளிச்சுட்டு வாங்க… அப்பா நைட்டே ஊருக்கு போகணும்ன்னு சொல்லிட்டு இருந்தாங்க. அவங்களை போய் பஸ் ஏத்திட்டு வந்திடுங்க” என்றாள்.
‘நீ வந்து குளிப்பாட்டி விடு’ என்று மனதிற்குள் நினைத்ததை கேட்காமல் “சரிம்மா வந்திர்றேன்” என்று எழுந்து போனான்.
மித்ராவும் காலை உணவை முடித்து அவள் தந்தைக்கு பாரிமாறி முடித்திருந்தாள்.
“சாரி மாப்பிள்ளை… ஊருக்கு கிளம்பணும் நீங்க முத சாப்பிடுங்கன்னு மித்ராம்மா என்னை சாப்பிட சொல்லிட்டா… தப்பா எடுத்துக்காதீங்க மாப்பிள்ளை” என்று நெளிந்தார் அவன் மாமனார்.
“மித்ரா சரியா தானே மாமா சொல்லியிருக்கா… எனக்காக நீங்க ஏன் சாப்பிடாம இருக்கணும் மாமா… என்னை உங்க மருமகன்னு பார்த்தா தான் இதெல்லாம் சொல்லத் தோணும். மகன்னு நினைச்சு பாருங்க வித்தியாசம் தெரியாது” என்று அவன் கூறவும் அவர் நெகிழ்ந்தார்.
குளித்துவிட்டு வந்தவன் அவரை கூட்டிக்கொண்டு பேருந்து நிலையம் சென்று அவரை மதுரைக்கு பஸ் ஏற்றிவிட்டு வந்தான்.
வீட்டிற்கு வந்தவன் மனைவியை தேட அவள் சமையல் அறையில் எதையோ உருட்டும் சத்தம் கேட்க உள்ளே எட்டி பார்த்தான். முதல் நாள் வாங்கி வந்திருந்தவற்றை அடுக்கிக் கொண்டிருந்தாள் போலும்.
“இதெல்லாம் தான் நேத்து வாங்கிட்டு வந்தீங்களா!!” என்று அவள் காதருகே கேட்ட குரலில் அதிர்ந்து போய் திரும்பியவள் அவன் மேல் இடித்துக்கொண்டாள்.
“சாரி… சாரி…” என்றாள்
“தப்பு என் மேல தான் நான் தானே இப்படி வந்து நின்னேன். மது எங்க போய்ட்டா??”
“பன்னீர் அண்ணா கூட வெளிய விளையாடுறா… அவரை நல்லா பிரண்டு பிடிச்சி வைச்சிருக்கா உங்க பொண்ணு” என்றாள்.
“என் பொண்ணு என்னை மாதிரி ஈசியா பழகிருவா!!”
“ஓஹோ அப்படியா!! யார் சொன்னாங்க அப்படி!!”
“நான் தான் சொல்லிக்கறேன் என்னை பார்த்தா அப்படி தெரியலியா!!”
“அதெல்லாம் அப்புறம் இருக்கட்டும் இப்போ நீங்க சாப்பிட வாங்க!!”
“நீ சாப்பிட்டியா!!” என்றான் அவன். இது போல் அவன் அதிகம் கேட்டதில்லை அதுவே அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. “நீங்க சாப்பிட்டதும் தான் சாப்பிடணும், நான் அப்புறம் சாப்பிடுவேன்”
“அப்புறம் எல்லாம் வேண்டாம். நான் வீட்டில இருக்கும் போது ரெண்டு பேருமே சேர்ந்து சாப்பிடுவோம்” என்றவன் அவளையும் இழுத்து தன்னருகில் அமர்த்திக்கொண்டான்.
“என்னடி என்னாச்சு!! பேச்சு மூச்சே காணோம்!! அமைதியா சாப்பாட்டை வைக்குற” என்றான்.
“தெரியலை எனக்கு பேச்சே வரலை. எல்லாம் புதுசா இருக்கா போல இருக்கு” என்றாள் மனதில் தோன்றியதை மறையாது.
இருவருமே சற்று நேரம் எதுவும் பேசவில்லை. அங்கு அமைதி மட்டுமே ஓரிரு நிமிடம் ஆட்சி செய்ய இருவருமே ஒன்றாய் திரும்பினர் ஒருவரை ஒருவர் பார்த்து.
“எனக்கு உங்ககிட்ட பேசணும்” என்று அவள் சொல்ல “நீ என்ன எனக்கு வாய்ஸ் கொடுக்கறியா!!” என்றான் அவன். “என்ன சொல்றீங்க?? எனக்கு புரியலை??” என்று விழித்தாள் மித்ரா.
“நான் என்ன சொல்ல நினைச்சனோ அதையே தான் நீயும் சொல்ற, அதான் அப்படி சொன்னேன்”
“நீங்க எப்பவும் லேட் தான்” என்று அலுத்துக்கொண்டாள் அவன் மனைவி.
“எதுல நான் லேட்டா இருந்தாலும் அய்யா அந்த விஷயத்துல சூப்பர் பாஸ்ட்” என்று சட்டை காலரை தூக்கிவிட்டுக் கொண்டான் அவன்.
“எந்த விஷயம்??”
“ஐயோ வேணாம்மா தாயே!! இப்போ தான் ஏதோ நல்லா போய்க்கிட்டு இருக்கு நான் ஏதாச்சும் சொல்லி மறுபடியும் நீ மலையேறிட்டா!!”
“என்னன்னு சொல்லுங்க??”
“நான் சொல்றதை கேட்டு நீ அடிக்க வரக்கூடாது!! அப்புறம் தேவை முடிஞ்சு போச்சு அப்படி இப்படின்னு லூசுத்தனமா உளறக்கூடாது”
“போதும் போதும் கொஞ்சம் விட்டா பேசிட்டே போவீங்க. நான் எதுவும் சொல்ல மாட்டேன் என்னன்னு சொல்லுங்க”
“உன்னை கல்யாணம் பண்ணதுலயும் மது நமக்கு கிடைச்சதுலையும் நான் சூப்பர் பாஸ்ட் தானே”
“ஹ்ம்ம் உங்களை!!!” என்று அவள் அலுக்கவும் பன்னீர் வாசலில் வந்து “அம்மா!!” என்று அழைக்கவும் சரியாக இருந்தது.
“வாங்க அண்ணா!!” என்றாள்
“பாப்பா உங்களை தேடினாம்மா அதான் கூட்டிட்டு வந்தேன்” என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே மது அவரிடம் இருந்து இறங்கி இவர்களை நோக்கி ஓடி வந்தாள்.
சைதன்யன் அவரிடம் “அண்ணா வாங்க நீங்களும் எங்களோட உட்கார்ந்து சாப்பிடுங்க” என்று அவரை அழைத்தான்.
“இல்லை சார் எனக்கு வேணாம். நான் காலையிலேயே நல்லா சாப்பிட்டேன்”
“அண்ணா பரவாயில்லை வந்து சாப்பிடுங்க அண்ணா” என்று மித்ராவும் அழைத்தாள்.
“இல்லைம்மா இன்னைக்கு கொஞ்சம் ஹெவியா சாப்பிட்டிடேன். வீட்டில இன்னைக்கு இடியாப்பமும் ஆட்டுக்கால் குழம்பும் வைச்சாங்க, நீங்க சாப்பிடுங்க” என்று சொல்லிவிட்டு அவர் வெளியில் சென்றுவிட்டார்.
மித்ராவோ மதுவை தூக்கி மடிமீது வைத்துக்கொண்டு முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். “சாப்பிடுறீங்களா செல்லம்” என்று கேட்டுக்கொண்டிருக்க அருகில் அமர்ந்திருந்தவனுக்கோ பெருமூச்சாய் இருந்தது.
“இதெல்லாம் எனக்கும் கிடைக்குமா!!” என்றான்.
‘என்ன கேட்குறாரு. ஆட்டுக்கால் குழம்பை கேட்குறாரோ’ என்று பன்னீர் சொன்னதை நினைத்துக்கொண்டு “அதுக்கென்னங்க செஞ்சுட்டா போச்சு” என்று சொல்லியவள் ‘முதல்ல ஊருக்கு போன் பண்ணி அம்மாகிட்ட கேட்டு செஞ்சு தரணும்’ என்று நினைத்துக்கொண்டாள்.
“இப்போவே கிடைக்குமா” என்றான் அவன்.
“இப்போவேவா” என்று யோசித்தவள் “அதுக்கு முதல்ல கடைக்கு போகணுமே” என்றாள்.
“கடைக்கா அங்க எதுக்கு” என்றான் சைதன்யன்.
“ஆட்டுக்கால் வாங்க வேண்டாமா”
“ஆட்டுக்கால் வாங்கி நீயே சூப்பு வைச்சு குடிம்மா என்னருமை பொண்டாட்டியே. நான் என்ன கேட்டேன் நீ என்ன சொல்ற”
மித்ராவுக்கு நிஜமாகவே அவன் கேட்டிகிறான் என்று புரியவில்லை. “நீங்க என்ன கேட்டீங்க??” என்றாள்.
“நீ மதுக்கு கொடுத்ததை கேட்டேன்”
“நா… நான் மதுக்கு…” என்று ஆரம்பித்து நிறுத்தியவள் ‘அட ராமா மதுவுக்கு முத்தம் கொடுத்தது போல கொடுக்க சொல்றார் போல நானும் மட்டி மாதிரி தலையை ஆட்டி வைச்சிருக்கேன்’ என்று நினைத்துக் கொண்டாள்.
“என்ன கொடுப்பியா!! மாட்டியா!!”
“இதென்ன புதுசா என்னை கேட்டுகிட்டு”
“என் தேவைக்காக இல்லாம, கேட்காம கிடைச்சா நல்லாயிருக்கும்ன்னு ஒரு ஆசை தான்… இப்போவே கொடுக்கணும்ன்னு இல்லை பட் வேணும்” என்று சொல்லிவிட்டு எழுந்து கைகழுவ சென்றுவிட்டான்.
குழந்தையை தூக்கிக்கொண்டு பின்னோடு வந்தவளிடம் குழந்தையை வாங்கிக்கொண்டான். அவளும் கைகழுவி வர “கிடைக்கும் தானே!! காத்திட்டு இருப்பேன்!!” என்றான்.
அவள் முகமோ சிவந்து கொண்டிருந்தது ‘எப்படி தான் இப்படி எல்லாம் பேசுறாரோ’ என்றிருந்தது அவளுக்கு.
“இப்போ தான் பார்க்கறேன், நான் பேசுறதுக்கே சிவக்கறதை!!” என்றுவிட்டு அவளை இன்னும் ரசனையாக பார்த்துக்கொண்டிருந்தான். அவளுக்கு தான் நிற்கவும் முடியாமல் நகரவும் முடியாமல் தடுமாறி நின்றுக் கொண்டிருந்தாள்.
“ப்ளீஸ் போதுங்க!! என்னால முடியலை!!” என்றவளின் குரல் அவளுக்கே கேட்டிருக்குமோ என்னவோ அவ்வளவு மெதுவாய் வெளியே வந்தது.
“என்னாலயும் தான் முடியலை மித்ரா…” என்றவனின் குரலில் ஏக்கம் அதிகமிருந்தது.
“ஈவினிங் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வர்றேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பியவன் எதிர்பாராதது அவனால் அவளிடம் அன்று மனம்விட்டு பேச முடியாது என்று.
அவன் கிளம்பிச் சென்றதும் மதுவை தூங்க வைத்தவளுக்கு அவன் நினைவே அதிகமாயிருந்தது. பாட வேண்டும் போல் தோன்றியது அவளுக்கு.
மெதுவாய் வாய்விட்டு பாடினாள் அவள் மனதை சொல்லும் அந்த பாடலை
நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா
இளமை பொங்கி விட்டதா
இதயம் சிந்தி விட்டதா
சொல் மனமே..
சட்டென்று ஞாபகம் வந்தவளாய் சுஜிக்கு அழைத்தாள். இவளின் அழைப்பை எதிர்பார்த்திருந்தவள் போல் அவள் உடனே எடுத்து “சொல்லும்மா ஊருக்கு போயிட்டியா??” என்றாள்.
“ஊருக்கு வந்துட்டேன் சுஜி, ஆனா எங்கன்னு கேட்க மாட்டியா!!” என்றவளின் குரலில் இருந்த துள்ளல் சுஜியையும் தொற்றிக்கொண்டது.
“அம்மா வீட்டுக்கு போனா எல்லாருக்கும் சந்தோசமா தான் இருக்கும். ஆனா நீ ரொம்ப சந்தோசமா இருக்கறியே!! என்னன்னு சொல்லும்மா எனக்கு சஸ்பென்ஸ் எல்லாம் எப்பவும் தாங்காது” என்றாள் சுஜி எதிர்முனையில்.
“கடலூர்ல இருக்கேன்”
“என்னது கடலூரா!! இதெப்ப நடந்துச்சு, நேத்து காலையில வீட்டுக்கு வரும் போது கூட ஒண்ணுமே சொல்லவேயில்லை கள்ளி. அதான் இவ்வளவு சந்தோசமா” என்ற சுஜிக்கும் மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது.
“நேத்தே காலையில நீ வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடியே அவரை போய் பார்த்திட்டு தான் ஊருக்கு போகணும்ன்னு நினைச்சேன். பாவம்டி அவரு முத நாள் நைட் முழுக்க தூங்கவேயில்லை இந்த புயல் மழையினால”
“எல்லாரையும் முடிஞ்ச வரை சேப் பண்ணுறதுக்காக அங்கயும் இங்கயும் ஓடிட்டே இருந்ததை நான் நைட் டிவில பார்த்தேன். மனசே கேட்கலை அப்போ தான் போகலாம்ன்னு நினைச்சேன்”
“நீ வந்த, உன்கிட்ட மனசுவிட்டு கொஞ்சம் பேசினதுனால மனசும் கொஞ்சம் லேசாச்சு. நீ கிளம்பினதுமே கிளம்பிட்டோம் கடலூர்க்கு. அப்பா தான் கொண்டு வந்து விட்டுட்டு போனார்”
“என்னது விட்டுட்டு போனாரா?? அப்போ நீ அப்பா கூட போகலையா!!”
“இல்லை நான் இங்க இருக்கேன்னு சொல்லிட்டேன்” என்றவள் நேற்றில் இருந்து நடந்ததனைத்தும் தோழியிடம் பகிர்ந்தாள்.
“வார்ரேவா!! சூப்பர்டி!! அப்போ நேத்துல இருந்து ஒரே ரொமான்ஸ்ன்னு சொல்லு” என்று கிண்டல் செய்ய ஆரம்பித்தாள்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை”
“நீ ஒண்ணுமில்லைன்னு சொல்றதே ஓராயிரம் சேதி சொல்லுதே மித்தும்மா!! எனக்கு ரொம்ப சந்தோசமாயிருக்குடி!!”
“ஹேய் நீ வேறடி நிஜமாவே ஒண்ணும் இல்லை”
“ஒண்ணுமில்லைன்னு ஓவரா பீல் பண்ணுறியோ!!” என்று அதையும் கலாய்த்தாள் அவள்.
“அச்சோ நீயுமாடி!! ச்சு கொஞ்சம் பேசாம இருடி!!” என்று சொன்ன மித்ராவின் குரல் வெட்கத்தை வெளிபடுத்தியதை உணர்ந்தாள் சுஜி.
“நான் என்னம்மா பண்ணேன் எல்லாம் உன் அவர் பண்ண வேலை”
“அச்சோ சுஜி ப்ளீஸ் போதும்டி என்னால முடியலை. நேத்துல இருந்து அவர் என்னை இப்படி தான் அடிக்கடி பேச விடாம எதாச்சும் சொல்லிட்டே இருக்கார்” என்றாள்.
“நல்லது தானே மித்ரா. அவர் எப்படி இருக்கணும்ன்னு நினைச்சியோ அப்படி தானே இருக்கார், இனிமே எல்லாமே உனக்கு நல்லதா தான்டி இருக்கும்” என்றாள் சுஜி மனதார.
“ஆனாலும் கொஞ்சம் பயமாவே இருக்குடி”
“மறுபடியும் ஆரம்பிக்காதே மித்ரா. எதை நினைச்சு உனக்கு பயம், அஸ்வினியை பத்தி எதுவும் யோசிக்கறியா”
“நான் தான் நேத்தே உன்கிட்ட சொன்னேன்ல அஸ்வினி பத்தி எனக்கு எந்த சந்தேகமும் இல்லைன்னு”
“அப்புறமும் என்னடி???”
“தெரியலை சுஜி” என்றவளை என்ன செய்வது என்பது போல் அமைதியானாள் சுஜி.
“இங்க பாரு மித்ரா எதையும் யோசிச்சு குழப்பிக்காதே. இப்போ தான் நீ தெளிவான முடிவெடுத்திருக்கன்னு நான் ரொம்ப சந்தோசப்பட்டுட்டு இருக்கேன்”
“அண்ணாகிட்ட பேசிட்டா உன்னோட இந்த பயம் கூட போய்டும் பாரேன்” என்று தோழியின் பயம் போக்க அவளை சமாதானம் செய்தாள்.
“ஹ்ம்ம் சரி சுஜி எனக்கும் புரியுது. நான் அப்புறம் பேசறேன்” என்றாள்.
“மித்ரா இரு இரு ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன். பெருமாள் இங்கவே இருக்க போறேன்னு சொல்லிட்டார்டி. இனிமே அடிக்கடி ஊருக்கு போற வேலையெல்லாம் வைச்சுக்க மாட்டேன்னு சொல்லிட்டார்”
“ஹேய் சூப்பர் சுஜி, அப்போ இனிமே அங்கயும் ஒரே ரொமான்ஸ் தான் போ… ரொம்ப சந்தோசம்டா, அண்ணா வந்ததும் சொல்லு நாங்க பேசறோம்” என்று தோழியை மேலும் கொஞ்சம் கிண்டல் செய்து போனை வைத்தாள் மித்ரா.
மதிய உணவை மதுவுக்கு ஊட்டிவிட்டு தானும் உண்டு பின் சற்று இளைப்பாறியவள் மடியில் உறங்கியிருந்தாள் குழந்தை மது. அவளை தூக்கிச் சென்று கட்டிலில் கிடத்திவிட்டு அருகே தலையணை போட்டு வெளியில் வந்து அவள் அமரவும் சைதன்யன் வீட்டிற்குள் நுழைந்தான்.
முகம் ஏனோ வாட்டமாய் இருந்தது போல் இருந்தது. “சொன்ன மாதிரியே சீக்கிரம் வந்துட்டீங்க. சாப்பிடுறீங்களா!! இல்லை காபி போடட்டுமா!!” என்றாள் அவன் மனைவி அக்கறையாய்.
“இப்போ எதும் வேணாம் மித்ரா. நீ இங்க வா” என்று அவளை நோக்கி கையை நீட்டினான். அவள் கையும் அவன் நீட்டிய கையில் வைக்க அவளிடம் “இங்க உட்காரேன்” என்று அவன் மடியில் அமர்ந்திக்கொண்டான்.
“மது உள்ளே தூங்குறாளா”
“ஹ்ம்ம் ஆமாம்”
“என்னாச்சு டல்லா இருக்க மாதிரி இருக்கு?? ரொம்ப வேலையா”
“ஹ்ம்ம் வேலை தான் மித்ரா. எனக்கு கேம்ப் போக வேண்டி இருக்கு, அதான் சீக்கிரம் கிளம்பி வீட்டுக்கு வந்தேன்.கடலூர் நாகப்பட்டினம்ன்னு இன்னும் சில இடங்களுக்கு நான் பார்வையிட போகணும்”
“புயல் பாதிச்ச இடங்கள் பத்தின டீடெயில்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணி ரிபோர்ட் சப்மிட் பண்ணியாகணும். மக்களுக்கு அப்போ தான் நிவாரணம் கிடைக்க உதவியா இருக்கும். ஒரு வாரம் ஆகும் மித்ரா” என்றான் கவலையாக.
“அதை ஏன் கவலையா சொல்றீங்க!! இது உங்க வேலை தானே அதை போய் முதல்ல பாருங்க. நான் தப்பா நினைப்பேன்னு எல்லாம் நினைக்காதீங்க!!”
“நமக்கு பேச இந்த வாழ்க்கை முழுக்க காத்திட்டு தான் இருக்கு” என்று அவனுக்கு சமாதானம் சொன்னாள்.
“உனக்கு வருத்தமேயில்லையா மித்ரா!! எப்போடா உன்கிட்ட பேசுவேன்னு நினைச்சுட்டு ரொம்ப ஆசையா இருந்தேன்ம்மா”
“நீங்க ஊருக்கு போயிட்டு வந்ததும் நாம நெறைய பேசலாம் சரிங்களா!! இதுக்கு தான் முகத்தை தூக்கி வைச்சுட்டு இருக்கீங்களா!!”
“நீ ஊருக்கு வேணா போறியா??” என்றவனை பார்த்து முறைத்தாள்.
“இல்லைம்மா இங்க நீ எப்படி தனியா இருப்பே அதான்” என்று இழுத்தான்.
“மூணு வருசத்துக்கும் மேல நீங்க இல்லாம தனியா தானே இருந்தேன். ஒரு வாரம் இருக்க மாட்டேனா” என்றவளின் குரலில் அத்தனை வருத்தமிருந்ததை உணர்ந்தான்.
“நான் மட்டும் சந்தோசமாவா இருந்தேன். எனக்கும் அப்படி தான் இருந்துச்சும்மா. நீயாச்சும் இங்க எல்லாரோடவும் இருந்த ஆனா அங்க நான் தனியா உங்களோட நினைப்பாவே இருந்தேன்” என்றவனை இமைக்காமல் பார்த்தாள்.
“உண்மை தான் மித்ரா”
“தெரியுதுங்க… ஆனா இதுக்கு முன்னாடி நீங்க ஒரு முறை கூட அதை வெளிக்காட்டினதே இல்லையே!!” என்றாள் வருத்தமாய்.
“நீ மட்டும் காட்டினியா என்ன!!” என்றான் அவன் பதிலுக்கு.
“அ… அது… அதுக்காக நீங்க அப்படி இருப்பீங்களா!!”
“மித்ரா இதைபத்தி நாம பேச ஆரம்பிச்சா நிறுத்த முடியாதும்மா!! நான் இன்னும் ஒரு மணி நேரத்தில கிளம்பியாகணும். மூணு நாள் இங்க கேம்ப் முடிச்சுட்டு ரிப்போர்ட்ஸ் எடுத்திட்டு சென்னை போய்டுவேன்”
“பேசாம நீயும் சென்னை போய்டேன்” என்றவனை ‘இதானே வேண்டாங்கறது’ என்ற ரீதியில் முறைத்தாள் அவள்.
“ஒண்ணு பண்ணுவோம் நான் இங்க கேம்ப் முடிச்சுட்டு வர்றேன். நாம சேர்ந்தே சென்னை போவோம் அப்போ ஓகே தானே” என்றான்.
“இது தான் சரி” என்றவள் மகிழ்ச்சியில் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
அவன் ஒரு கணம் உறைந்து போய் அவளை பார்த்தான். அவளாய் கொடுத்த முதல் முத்தம் இனிக்கத்தான் செய்தது அவனுக்கு.
மித்ராவுக்கு முத்தமிட்ட பின்னே தான் உறைத்தது அவள் செய்தது. சைதன்யன் வேறு வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான். இப்படியே பார்த்திட்டு இருந்தா கிளம்பின மாதிரி தான் என்று நினைத்துக்கொண்டு அவள் எழ ஆரம்பித்தாள்.
“மித்ரா ப்ளீஸ்…” என்றான்.
“எ… என்ன ப்ளீஸ்…”
“ஒரே ஒரு முறை”
“என்ன சொல்றீங்க??”
“உங்க தேவைக்காக செய்யறீங்கன்னு சொல்லிடுவியோன்னு பயமாயிருக்கு” என்றவனின் குரலில் அன்று அவள் சொன்ன வார்த்தையின் வலி தெரிந்தது.
“அன்னைக்கு மாதிரி இன்னைக்கும் சொல்லுவேன்னு நினைக்கறீங்களா!!”
“அது ஏதோ முட்டாள்தனமா பேசினது, இன்னமும் அந்த வார்த்தையை பிடிச்சுட்டு இருக்கீங்க”
“என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா”
“என் மேல தான் மிதும்மா உனக்கு நம்பிக்கை இல்லையோன்னு…”
“நம்பிக்கை இல்லாம தான் என்னோட வாழ்க்கையை உங்களை நம்பி ஒப்படைச்சேனே” என்றவளின் குரல் தழுதழுத்தது.
“வேணாம் ரெண்டு பேரும் இப்போ இதை பத்தி பேசி மூடை கெடுத்துக்க வேண்டாம்”
“நான் உன்னை மிஸ் பண்ணுவேன்ல, சோ வித் யூவர் பர்மிஷன்” என்றவன் மடியில் அமர்ந்திருந்தவளை தூக்கிச் சென்று சோபாவில் கிடத்தினான்.
“உன் மடியில படுத்துக்கணும் போல இருக்குடி” என்றான்.
“அவ்வளவு தானா அப்பா நான் கூட ரொம்ப பயந்துட்டேன்” என்றாள் மித்ரா.
“நீ நினைக்கறது எல்லாம் செய்யணும்ன்னு தான் தோணுது. ஆனா இப்போ அதுக்கு வசதிப்படாது” என்றவனின் இடது கை அவள் முகவாயை தாங்கியிருக்க கட்டை விரல் உயர்த்தி அவள் இதழை வருடினான்.
அவள் கன்னம் கூச்சத்தில் சிலிர்ப்பது அவனால் நன்றாக உணர முடிந்தது. குனிந்து அவன் மனைவியின் இதழ்களை தன் வசப்படுத்திக்கொண்டான்.
பன்னீர் வந்து கதவை தட்டவும் தான் சுயஉணர்வு வந்து அவளை விடுவித்தவன் “அண்ணா ஒரு அரைமணி நேரத்தில வந்திடுறேன்” என்று உள்ளிருந்தவாறே குரல் கொடுத்தான்.
“வாங்க மேடம் கொஞ்சம் எனக்கு பேக் பண்ண ஹெல்ப் பண்ணுங்க” என்று சிலையாய் அமர்ந்திருந்தவளை கூட்டிச் சென்றான்.
“மித்ரா… மித்ராம்மா… ஆஹா மறுபடியும் மைன்ட் வாய்ஸ்க்கு போயிட்டியாடி நீ”
“மிதும்மா” என்று அவன் உலுக்கவும் “என்னங்க கூப்பிட்டீங்களா!!”
“நான் கரடியா கத்திட்டு இருக்கேன் அப்படி என்னை பத்தி உனக்கு என்ன சிந்தனை” என்றான்.
“நான் ஒண்ணும் உங்களை நினைக்கலை”
“அப்போ வேற யாரை நினைச்சியாம்”
“சும்மா போங்க!!”
“சும்மா எல்லாம் போக முடியாதும்மா. என் டிரஸ் எல்லாம் எடுத்து வை அப்போ தான் நான் போக முடியும்” என்றான்.
“சாரி இதோ எடுத்து வைக்கறேன்” என்றவள் அவனுக்கு உதவ ஆரம்பித்தாள்.
சைதன்யனோ உதவி செய்பவளுக்கு உபத்திரவம் செய்து கொண்டிருந்தான். பீரோவில் இருந்த துணியை எடுத்து கட்டிலில் வைத்தவன், மித்ரா அவன் பேகில் எல்லாம் எடுத்து வைத்து கொண்டிருக்க பின்னே வந்து நின்று அவள் இடையை தழுவி நின்றிருந்தான்.
“இப்படி தொல்லை பண்ணா எப்படி வேலை செய்யறதாம்”
“இது என்னிஷ்டம் அது உன் கஷ்டம்” என்றவன் சேட்டையை நிறுத்தியது மது விழித்த பின்னே தான்.
கண் விழித்த மது “ப்பா…” என்று அழைக்கவும் “செல்லம்” என்றவன் மித்ராவை விட்டு நகர்ந்து சென்று மதுவை தூக்கிக் கொண்டான்.
ஒருவழியாக அவனை கிளப்பி அனுப்புவதற்குள் மித்ராவுக்கு மூச்சு முட்டியது. அவன் கிளம்பி சென்ற பின்னே ‘மடியில படுக்கணும் போல இருக்குன்னு சொல்லிட்டு மறந்திட்டார் போல…’
‘இவ்வளவு குறும்பையும் இவ்வளவு நாளா எங்கே தான் ஒளிச்சு வைச்சிருந்தார்ன்னு தெரியலை’ என்று எண்ணத் தோன்றியது மித்ராவுக்கு…..