Advertisement

 

                    அத்தியாயம் 15

ஆராத்யாவை சந்தித்த பிறகு தான் ஆத்ரேயனின் மனம் புத்துணர்ச்சி பெற்றது ஆனால் அப்போதும் மனதில் பல குழப்பங்கள் இருக்க தான் செய்தது.

வண்டியை செலுத்திக்கொண்டிருந்த ரேயன் “இப்போ நான் ஏன் அவளை மீட் பண்ண போனேன்.. அதுவும் அவனோட பிரெண்ட்ன்னு தெரிஞ்சும் ஏன் இப்படி பண்றேன்.. அவளுக்கு காய்ச்சல்ன்னா எனக்கு ஏன் ஏதோ போல இருக்கு.. அவகிட்ட நான் அவ்ளோவா பேசுனது கூட இல்ல.. ஆனாலும் ஏன் இப்படி” என தனக்கு தானே பேசிக்கொண்டிருக்க
அவன் மூளையே “ரொம்ப யோசிக்காதடா ரேயா.. ஆபத்து தான்” என எச்சரிக்க,

அவன் மனமோ “அதெல்லாம் பரவால்ல.. உனக்கு சந்தோஷமா இருக்குல அதான் முக்கியம்” என்றது. இருவேறு மனநிலையுடன் வண்டி ஓட்டியவனுக்கு அவளிடம் பேச வேண்டாம் என்றது மறந்தே போயிருந்தது.

இங்கு ஆருவோ பேய்யறைந்தார் போல் வீட்டினுள் நுழைய,
சிவகுமார் “என்ன நம்ம புள்ள இப்படி வருது.. வழக்கமா இவ தான மத்தவங்களுக்கு ஷாக் கொடுப்பா.. இப்போ என்ன ஆச்சு.. ஆரு.. அடியே.. என்ன ஆச்சு உனக்கு ஏன் இப்படி போற” என்று கத்த,
ஆரு “என்ன ப்பா” என்று புரியாமல் கேட்க
சிவகுமார் நெஞ்சில் கைவைத்து அப்படியே அமர்ந்திட, நிலா “என்னங்க.. என்ன ஆச்சு” என்று பதற
சிவகுமார் “உன் பொண்ணு என்ன அப்பான்னு கூப்பிடுது” என்றார்.

அவர் கூற்றில் அவரை முறைத்த நிலா “ஆமா இப்போதான் உங்க பொண்ணுக்கு ஒரு வயசாகுது, முதல் தடவ அப்பான்னு கூப்பிடுறா பாருங்க.. போங்க அப்படி நானும் என்னமோ ஏதோன்னு நினைச்சுட்டேன்.. நீ ஏன்டி இப்படி வர”  என்று சிவகுமாரிடம் தொடங்கியவர் ஆருவிடம் முடிக்க,
ஆரு “மா.. அங்க.. கீழ.. கார்” என்று தவணை முறையில் பேச
சிவா “கார்கிட்ட” என்றார் ஆர்வமாக
ஆரு “அப்போ அங்க” என்று இழுக்க,
நிலா வெறியாகி “அட சே.. போ போய் தூங்கு” என்றுவிட்டு சென்றிட,
சிவகுமார் “என்ன சொன்னான் அவன்” என்று ஹஸ்கி வாய்ஸில் கேட்டிட,
ஆரு அவன் அணைத்ததை மறைத்து “பேசவே வேண்டாம்ன்னு சொல்லிட்டு, நான் வரலன்னதும் என்ன பார்க்க வந்திருக்கான்”
“ஓ”
“என்ன சிவா ஓ சொல்ற”
“பின்ன என்ன சொல்ல.. ஆமா இவனுக்கும் வளர்ந்தவனுக்கும் தான் பிரச்சனையா” என்று யோசனையாக கேட்டிட ஆரு தலை குனிந்து “ஆமா பா” என்றாள்.
சிவகுமார் “விடு.. அக்னி உனக்கு பிடிச்சது தான் செய்வான்” என்றிட, ஆரு அதிர்ந்து “பா.. நான் எதுவும் சொல்லலயே.. என்ன எனக்கு பிடிச்சது”
“நடிக்காத போ போ” என்றவர் புன்னகையுடன் உள்ளே சென்றிட ஆருவுக்கு தான் ஏதோ போல் இருந்தது.

ஆத்ரேயனை விட அக்னியின் நினைவே அவளை பெரிதும் பாதித்தது. அக்னியிடம் சொல்லவும் முடியாமல் மறைக்கவும் முடியாமல் தவித்து போனாள்.

ஏனோ இப்போதே அக்னியிடம் பேசவேண்டும் என்றிருக்க, ஆரு அக்னிக்கு அழைப்பு விடுத்தாள். சில தொழில் நிலையங்கள் பற்றி ஆராய்ந்துக்கொண்டிருந்த அக்னி ஆருவின் அழைப்பை கண்டு புருவம் சருக்கியவன் அதை ஏற்க, மறுமுனையில் ஆரு “ஹலோ அகி.. தூங்கிட்டியா” என்றாள்.

அக்னி “இல்லடா.. நானே இப்போ வரனும்ன்னு நினைச்சேன்.. இப்போ எப்படி இருக்கு உனக்கு”

“டேய் மணி இப்போ 10:15.. நீ 9:30 மணிக்கு தான பார்த்துட்டு போன”
“சும்மா தோணுச்சு”
“நல்லவேளை வரல” என ஆரு முணுமுணுக்க,
அக்னி “என்ன” என்று புரியாமல் கேட்க
ஆரு “ஒன்னுமில்ல ஒன்னுமில்ல” என்றுவிட்டு அமைதியாகிவிட, அவனும் மௌனித்தான். அந்த மௌனத்தையும் அவளே கலைத்தாள்.

ஆரு “என்ன நீ அமைதியா இருக்க.. எதாச்சு பேசு.. எனக்கு ஒரு மாதிரி இருக்கு” என்று கூற,
அக்னி “ஹ்ம்ம்.. நீ பேசு நான் கேட்குறேன்.. என்ன பண்ண இன்னிக்கு சொல்லு” என்று அவன் எதார்த்தமாக கேட்க, ஆரு அதிர்ந்து “எது.. நான் எதுவும் பண்ணல.. ஏன் இப்படி கேட்குற” என்று திக்கி திணறி கேட்க
அக்னி “ஹே லூசு.. நீ காலேஜ் வரல, கண்டிப்பா வீட்ல அடங்கி இருந்திருக்க மாட்ட, அதான் கேட்டேன்”
“ஓ அப்படி கேட்டியா.. ஓகே ஓகே” என்றாள். என்னதான் அக்னியுடன் பேசிக்கொண்டிருந்தாலும் அவளால் நிதானமாக இருக்கமுடியவில்லை.

ஆரு “அகி டேய்.. நான் ஒன்னு கேட்கவா”
“சொல்லு ரொம்ப நேரமா ட்ரை பண்ற..சொல்லிடு” என்று மென்னகையுடன் கேட்க,
ஆரு “இல்ல.. நான் எதாச்சு தப்பு பண்ணா என்ன பண்ணுவ” என்று தவறு செய்த குழந்தையாய் கேட்க,
அக்னி “என்ன பண்ணுவேன்னு நினைக்கிற”
“திட்டுவ.. பேசாம இருப்ப.. அப்பறம் பேசிடுவ” என்று அவளின் வழியே பதிலை வரவைத்தவன்
“ஹ்ம்ம்.. அப்போ ஏன் என்கிட்ட கேட்குற” என்று கேட்க,
ஆரு “இல்ல கொஞ்சம் பெருசா பண்ணா” என்று ஆரு பரிதவிப்புடன் கேட்க, அக்னி அமைதியாகினான்.

ஆரு குரல் கமற “அகி.. விட்டுட்டுலாம் போய்ட மாட்டல” என்று கேட்க,
அக்னி “ஹே சீ.. என்ன டி பேசுற.. நான் ஏன் உன்ன விட்டுட்டு போக போறேன்” என்று குழந்தைக்கு புரியவைப்பது போல் பொறுமையாக அவன் புரிய வைக்க,
ஆரு “சாரி அகி.. நான் அப்படி மீன் பண்ணல.. ஆனா இருந்தாலும்.. நான் எது பண்ணாலும் என்ன விட்டுட்டு போய்டாத அகி” என்றவளின் குரல் எவ்வளவு முயன்றும் உடைந்தே வந்தது.

ஆருவின் இந்த பேச்சு அக்னியை குழப்ப,
அக்னி “என்னடா என்ன ஆச்சு..  ஏதாவது மறைகிரியா என்கிட்ட” என்று புரியாமல் கேட்க,
ஆரு “இல்லடா, இன்னிக்கி ஒரு கெட்ட கனவு அதான்” என்று சிறுகுரலில் கூற அப்போது தான் அக்னிக்கு சற்று நிம்மதியானது.
அக்னி “அட லூசு அவ்ளோதானா.. நானும் என்னமோன்னு நினைச்சு பயந்துட்டேன்.. இங்க பாருடா.. நான் எப்போவும் உன்கூட தான் இருப்பேன்.. நான் உன்மேல கோபமாவே இருந்தாலும் உன்ன பத்தி நினைக்காம இருக்க மாட்டேன், இருக்க முடியாது.. புரியுதா.. போ போய் தூங்கு” என்றவன் அப்போது அறியவில்லை அவனே அவளை விட்டு விலகி செல்வானென்று.
அக்னியுடன் பேசிய பிறகு தான் ஆருவிற்கு மன பாரம் குறைந்தது.

மறுநாள் கல்லூரியில் கிஷோரை இறக்கிவிட்ட ரேயன் காரை நிறுத்திவிட்டு வெளியில் வரும்போது எதர்ச்சியாக அக்னியின் வண்டியிலிருந்து இறங்கிய ஆருவை பார்க்க, அவன் முகம் பாறை போல் இறுகியது.

அக்னியிடம் கூறிவிட்டு புத்தகம் ஒன்று எடுக்க நூலகம் செல்ல எத்தனித்த ஆரு, வழியில்  நின்ற ஆத்ரேயனை பார்த்து அவன் அருகே சென்றாள்.

ஆரு “ஹாய்” என்று புன்னகையுடன் கூற ரேயனின் முகம் சற்றே மென்மையை தத்தெடுக்க, “ஹாய்” என்றுவிட்டு அவன் முன்னே நடக்க ஆருவும் அவனுடன் இணைந்து நடக்க தொடங்கினாள்.

ஆரு “டெய்லி நீதான பார்ட்னரை கூட்டிட்டு வருவ.. பார்ட்னர் எங்க”
“உள்ள போய்ட்டான்”
“அதை ஏன் இப்படி உர்ருன்னு சொல்ற, சிரிச்சிட்டே சொல்லு” என்க, அவனுக்கு சிரிப்பு வந்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் அமைதியாகவே நடந்தான்.
ரேயன் “இப்போ பீவர் எப்படி இருக்கு” என்று வினவ,
ஆரு “போயும் போயும் அந்த பீவர எப்படி இருக்குன்னு கேட்குற.. நான் எப்படி இருக்கேன்னு கேளேன்” என்று பொய்யாய் முறைக்க, ஆத்ரேயன் அதற்கு மேல் தாங்காது சிரித்திவிட்டான்.
ஆரு “ஹப்பா சிரிப்பு வருது சிரிப்பு வருது.. பாரு இது எவ்ளோ நல்லா இருக்கு” என்று கூற, அவள் முகம் பார்க்க திரும்பியவன் அவள் பின் யாரோ கட்டையுடன் ஓடி வருவதை கண்டு அவளை தன் பக்கம் இழுத்து, எதிரில் வந்தவனை தள்ளிவிட்டு சுற்றி பார்க்க அங்கு பலர் அதே போல் கட்டை, ஹாக்கி ஸ்டிக் மற்றும் கம்புகளுடன் உள்ளே நுழைந்துக்கொண்டிருந்தனர்.

அவர்களை பார்க்கும் போதே ஏதோ கலவரம் என்பதை உணர்ந்தவன் “தியா என்கூட வா” என்று அவளை அழைத்துக்கொண்டு மாணவர்கள் இருந்த இடத்திற்கு செல்ல, அங்கு அஷ்வின், அன்பு சலீம் பிரபு என அனைவரும் ஆளுக்கொரு பக்கம் மாணவர்களை வெளியே வரவிடாமல் வகுப்பிலேயே இருக்கும் படி பணிந்துக்கொண்டிருந்தனர்.

அஷ்வின் அருகே சென்றவன் “அண்ணா என்ன நடக்குது இங்க” என்று புரியாமல் கேட்க,
அஷ்வின் “ரேயா பேச நேரமில்ல.. இப்போதைக்கு எல்லாரையும் பத்திரமா கிளாஸ்க்குள்ள அனுப்பு.. போ” என்று பணிக்க, ரேயனுக்கும் அதுவே சரியென பட்டது.

ஆத்ரேயன் மாணவர்கள் அதிகமிருந்த வகுப்பில் ஆருவை விட, ஆரு அவன் கையை பிடித்துக்கொண்டு “நீயும் உள்ள வா” என்றாள் இறைஞ்சலாக.
ரேயன் “நீ உள்ள இருமா.. நான் மத்தவங்களையும் பார்க்கனும்” என்றிட,
ஆரு “ஆன் அதெல்லாம் அண்ணாங்க பார்த்துக்குவாங்க.. நீ இங்கயே இரு” என்று அடம்பிடிக்க
ரேயன் “அப்போ அவங்கள யாரு பார்த்துக்குவா.. அவங்களுக்கு எதுனா ஆச்சுன்னா பரவால்லயா” என்று புருவமுயர்த்தி கேட்க, ஆரு தலை குனிந்தாள்.
அவள் கையை ஆதரவாக பற்றியவன் “எனக்கு ஒன்னும் ஆகாது.. நீ உள்ளயே இரு.. நான் சீக்கிரம் வந்திடுவேன்” என்றவன் அவள் கையில் அழுத்தம் கொடுக்க, பெண்ணவளும் சற்று தெளிந்த மனநிலையுடன் ஒப்புக்கொண்டாள்.
ரேயன் “ஆன் அப்பறம் அம்மு.. ப்ச், நேஹாக்கு கால் பண்ணி எங்க இருக்கான்னு கேளு” என்று உத்தரவிட, ஆருவும் நேஹாவிற்கு அழைப்பு விடுத்தாள்.

ஆரு “கிட்டி எங்க இருக்க” என்று கேட்க
நேஹா “நான் இங்க லேப்ல இருக்கேன்.. அகி தான் போக சொன்னான்.. உனக்கு கால் பண்ணான் ஆனா ரீச் ஆகலன்னு உன்ன தேடி தான் போனான்.. நீ எங்கே இருக்க.. என்ன நடக்குது கீழ.. எதுவும் பிரச்சனை இல்லையே” என்று பேசிக்கொண்டே செல்ல, ஆரு தலையில் அடித்துக்கொண்டாள்.

ஆரு “நீ எங்க இருக்கன்னு ஒரு கேள்வி தான கேட்டேன்.. எதுக்கு இப்போ இவ்ளோ பாட்டு பாடுற.. நான் சேப் தான், நீ அங்கயே இரு..” என்றவள் தான் இருக்கும் இடத்தின் தகவல் தெரிவித்துவிட்டு அழைப்பை துண்டித்தாள்.

ரேயன் ஆருவை பார்க்க,
ஆரு “அவ மேல லேப்ல இருக்கலாம்.. அவக்கூட கதிர், பார்ட்னர், ஆதி எல்லாரும் இருக்கங்களாம்”
“ஹ்ம்ம் சரி.. பார்த்து இரு” என்றவன் அஷ்வின் பின் சென்றான்.

அஷ்வின் மாணவர்களை பத்திரமாக வகுப்பினுள் அனுப்பிக்கொண்டே ரேயனிடம் நடந்தவற்றை கூற தொடங்கினான்.

அஷ்வின் “நேத்து ஷக்தி அவ பிரெண்ட்ஸ் கூட மால் போயிருந்தா.. அங்க எம் எல் ஏ ஆனந்தம் பையன் விதுன் ஷக்தி கிட்ட தப்பா நடந்துக்க பார்திருக்கான். அந்த ஜான்ஸி ராணி சும்மா இருப்பாங்களா..  அவனை இழுதிட்டு வந்து எல்லார் முன்னாடியும் அடிச்சு போலீஸ் கிட்ட பிடுச்சு கொடுத்திருக்கா.. அப்பறம் நான் போய் பார்த்து அவளை கூட்டிட்டு வந்தேன்… ஆனா சீட் பவரை வச்சு அவன் பையன வெளிய கொண்டு வந்துட்டான்.. இப்போ இந்த ஏரியா போலீஸை மடக்கி இங்க ரௌடிங்களை அனுப்பி ஷக்தியை போட சொல்லிருக்கான்.   இந்த மாதிரி ஏதாவது நடக்கும்ன்னு தெரிஞ்சு தான் காலைல நானே அவளை கூட்டிட்டு வந்தேன்.. ஆனா அவனுங்களும் பின்னாடியே வந்திருக்காணுங்க.. நாங்க உள்ள வரவும் அவங்க கேட்டை மூடிட்டு கலவரம் பண்ண ஆரம்பிச்சுட்டானுங்க அதுவும் அவங்க வீட்டு பொண்ணு மேல நாங்க கைவச்சோம் அப்படின்ற மாதிரி.. மேல ஷக்திய சில பேர் பாதுகாப்புல விட்டுட்டு இங்க மத்தவங்கள பார்க்க வந்துட்டேன்” என்று கூறியவனின் குரலோ சீற்றமாக இருந்தது.
ரேயன் “ஒன்னும் ஆகாது ண்ணா.. இவங்கள சும்மா விட கூடாது” என்றவனுக்கு பிரகாஷின் நியாபகம் வர, அவனுக்கு அழைக்க எத்தனித்தவன் அங்கிருந்தவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைப்பதில் மும்முரமானான்.

இங்கு அக்னியும் கட்டைகளுடன் வந்தவர்களிடம் சண்டையிட்டுக்கொண்டே மாணவர்களை வகுப்பினுள் அனுப்பி வைத்த ஆத்ரேயனை கண்டான்.

ரேயன் “அண்ணா நீங்க மேல அவங்க கூட இருங்க.. இங்க நிறைய பேர் இருக்கோம்.. பார்த்துக்குறோம்” என்று அக்னியை பார்த்தபடி கூற,
அஷ்வின் “ஹாஹா.. ரேயா, நான் எப்படி ஷக்திய மத்தவங்கள நம்பி விட்டிருப்பேன்.. அங்க ஜீவா இருக்கான்” என்றான்.

அஷ்வின் கூறியதை போல் மேல் தளத்தில் இருந்த ஜீவா அங்கு வெளியாட்களை வர விடாமல் தடுத்துக்கொண்டிருந்தான். ஜீவா இருந்த கோபத்தில் அவனிடம் பேசவே அனைவரும் பயந்திருக்க, அவன் தோளில் கை வைத்த ஷக்தி “நான் அப்படி பண்ணிருக்க கூடாதுல ஜீவா.. என்னால தான இப்போ எல்லாருக்கும் பிரச்சனை” என்று குரல் கமற பேச, அவள் தலையில் ஆதரவாக கைவைத்த ஜீவா “நீ என்ன பண்ணுவ.. அவன் செய்றதை செய்வான் நம்ம பார்த்திட்டு சும்மா இருக்கணுமா.. இன்னிக்கி இருக்கு அவனுங்களுக்கு”

“போலீஸ்க்கு கால் பண்ணு ஜீவா.. இல்லனா எதுவும் பண்ண முடியாது”
“லூசு.. போலீஸ் அவங்க கன்ட்ரோல்ல இருக்கு.. ஒன்னும் பண்ண முடியாது” என்க,
“அப்போ என்னதான் பண்ணுறது” என்றாள் ஆயாசமாக.
ஜீவா சிறு புன்னகையுடன் “உன் புருஷனும் நானும் எதுக்கிருக்கோம்.. நான் உனக்கு ஒன்னும் ஆகாம பார்த்துக்குறேன்னா அங்க அவன் யார் மேலயும் ஒரு கீறல் கூட விழாம பார்த்துக்குவான்” என்று பெருமையாக கூற,
ஷக்தி “இதெல்லாம் வக்கனையா பேசுங்க ஆனா நீங்க ரெண்டு பேர் பேசிடாதீங்க” என்று உதட்டை சுழிக்க

ஜீவா “யாரு பேச மாட்டோம்ன்னு சொன்னா” என்று விஷம புன்னகையுடன் கூற,

ஷக்தி “என்ன சொன்ன” என்று விழி விரிக்க
ஜீவா “பேச மாட்டோம்ன்னு சொன்னேன்” என்று தோளை உலுக்க, அவனை சந்தேகமாக பார்த்தவள் “எனக்கு வேற மாதிரில கேட்டுச்சு” என குழம்பினாள்.

அதே அறையில் இருந்த நேஹா கதிரிடம் “டேய் நீயும் அகியும் ஒன்னா தான இருந்தீங்க.. அப்போ அவன் மட்டும் ஏன் கிளாஸ்க்கு வரல” என்று பதட்டமாக வினவ,
கதிர் “இல்ல டி.. அவன் பைக்ல செயின் ஏதோ சவுண்ட் வந்துச்சு, அதான் பார்த்துட்டு வரேன் நீ போன்னு சொன்னான்” என்க,
நேஹா “ஜீவா அண்ணா பேசுறத பார்த்த எனக்கு பயமா இருக்கு டா”
கதிர் “ஹே லூசு.. அக்னிக்கு எதுவும் ஆகாது..” என்று சமாதானம் செய்ய
நேஹா “அவனுக்கு யாரு பயந்தா.. அந்த லூசு யாரையாவது அடிச்சு போலீஸ் அவனை பிடிச்சிட்டா.. மிலிட்டரி டின் கட்டிடுவாரு.. அதான் பயமா இருக்கு” என்றிட,
கதிர் “அடிப்பாவி.. சரி நம்ம கூட ஒருத்தி இருப்பாளே அவ எங்க” என்று கேட்க,
நேஹா “அவ கீழ ரூம்ல இருக்கா” என்றாள்.

ஆரு இருந்த அறைக்கு சென்ற அக்னி “ஹே உனக்கு எத்தனை முறை கால் பண்றது.. எங்க போன.. எவ்ளோ நேரமா உன்ன தேடுறேன் தெரியுமா” என்று பொரிய,
ஆரு “அகி நேஹா சொன்னா டா.  நானும் உனக்கு பண்ணேன் ஆனா கால் போல நீயே பாரு” என்று அலைபேசியை நீட்ட, அக்னியும் சற்று நிதானித்து “சரி இங்கயே இரு நான் வரேன்” என்க, ஆரு  “இல்ல அகி.. நீ போகாத.. இங்கயே இரு” என்றிட, அக்னி அவள் கையை ஆதரவாக பற்றி “நம்ம மட்டும் சேப்பா இருந்தா போதுமாடா.. மத்தவங்களையும் பார்க்கணும்ல” என்று ரேயன் கூறியதை போலவே அக்னியும் கூற, ஆரு அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் முன் சொடுகிட்ட அக்னி “ஓய் என்ன”
“ஒன்னுமில்ல.. பார்த்து ஜாக்கிரதையா இரு” என்க,
“நீ பத்திரமா இரு” என்றவன் அங்கிருந்து அகன்றான்.

இரண்டு மணி நேரமாகியும் கலவரம் அடங்கவில்லை, மாணவர்களும் சண்டையிட்டு களைத்திருக்க,
அஷ்வின் அக்னி மற்றும் ரேயனை பார்த்து “போதும்.. ரெண்டு பேரும் மேல போங்க.. இனி இங்க இருக்க வேண்டாம்”
அக்னி “அதெல்லாம் ஒன்னுமில்ல ண்ணா.. இவங்கள வெளிய அனுப்பாம விட கூடாது” என்க
ரேயன் “நீங்க கவலை படாதீங்க.. எனக்கு தெரிஞ்ச போலீஸ் ஒருத்தரை கூப்பிடுறேன்” என்று அலைபேசியை எடுக்க, அதற்குள் காவல்துறை வாகனங்கள் கல்லூரியினுள் நுழைந்திருந்தது.

அஷ்வின் “அக்னி நீ மேல போய் மத்தவங்க எப்படி இருக்காங்கன்னு பாரு.. நான் இன்னும் பார்க்கவே இல்ல” என்றிட, அக்னி மேலே சென்றான்.

தூரத்தில் யாரோ காவல் அதிகாரி அங்கிருந்த ரௌடிகளை அடிப்பது தெரிய, ஆத்ரேயன் அங்கு நோக்கினான். அது வேறு யாருமல்ல பிரகாஷ் தான்.

பிரகாஷின் அருகே சென்ற ரேயன் “மாமா நீங்க எப்படி இங்க..” என்று ஆர்ச்சிர்யமாக கேட்க,
பிரகாஷ் “ரேயா நீ இந்த காலேஜ் தானா”
“ஆமா மாமா.  உங்களுக்கு எப்படி நியூஸ் வந்துச்சு.. நீங்க இந்த ஏரியா இல்லையே” என்று புருவம் இடுங்க கேட்க,
பிரகாஷ் “அது வந்து” என அவன் ஏதோ கூற வரும் முன் அவனுக்கு ஏதோ அழைப்பு வந்துவிட, “ரேயா இரு.. நான் வரேன்” என்றவன் அலைபேசியில் பேசிவிட்டு அங்கிருந்த காவல் துறையினரிடம் “இவங்க எல்லாரையும் வண்டில ஏத்துங்க” என்று கட்டளையிட,
அங்கிருந்த ரௌடிகளின் தலைவன் “வேண்டா போலீஸ்.. நீ திரும்ப திரும்ப எங்க வழில வர அது சுத்தமா நல்லதுக்கு இல்ல” என்று மிரட்ட,
பிரகாஷ் “ஹே சீ பே” என்றான் திமிராக.
ரௌடி ஒருவன் “அண்ணா நீ வா.. இந்த போலீசை நம்ம தலைவர் பார்த்துக்குவாரு”
பிரகாஷ் “ஆன் ஏறு ஏறு.. அடுத்த ரைடே உன் தலைவன் வீட்ல தான்” என்று அசட்டையாக கூறியவன் ரேயனின் அருகே வந்து “உங்க ப்ரெசிடெண்ட் எங்க” என்று வினவ, ரேயன் அஷ்வினை கை காட்டினான்.

அஷ்வின் அருகே சென்றவன் “என்ன ப்ரெசிடெண்ட் இந்த ஏரியா போலீஸ் அந்த எம் எல் ஏக்கு மட்டும் இல்ல உனக்கும் பயந்து நடுங்குறாங்க” என்று சிரிக்க,
“அப்படியெல்லாம் ஒன்னுமில்ல சார்” என்றான் அஷ்வினும் புன்னகையோடு.

ஆத்ரேயன் இருவரையும் புரியாமல் பார்த்தவன், பிரக்ஷிடம் “ஏன் அப்படி சொல்லுறீங்க”
“பின்ன என்ன.. அந்த எம் எல் ஏ இவனுங்களை கலவரத்தை தடுக்குற மாதிரி நடிக்க சொன்னா அவனுங்க அஷ்வினுக்கு பயந்து நாங்க கண்டுக்காத மாதிரியே இருந்துக்குறோம்ன்னு சொல்லிட்டாங்க” என்றிட,
ரேயன் இப்போது அஷ்வினை ‘ஏன்’ என்ற கேள்வியுடன் நோக்க,

அஷ்வின் “அது போன வருஷம் இங்க எலெக்ஷ்ன் நடக்கும்போது இதே மாதிரி கட்சி ஆளுங்க வந்து கலவரம் பண்ணானுங்க.. அதான் போலீஸ்ல கம்ப்லைன் கொடுத்தேன் ஆனா அந்த போலீஸ்காரனும் அப்படி தான் பண்ணுவோம்ன்னு கட்சி ஆளுங்களோட சேர்ந்து ஜிங் சக் அடிச்சான், அதான் நானும் அவன அடிச்சேன்” என்று நல்ல பிள்ளையாய் கூற, மற்ற இருவரும் சிரித்துவிட்டனர்.

பின் பிரகாஷ் “சரி நீங்க கிளாஸ் போங்க.. நான் உங்க ப்ரின்ஸி கிட்ட பேசிட்டு கிளம்புறேன்” என்று விடைபெற்றுக்கொண்டு கிளம்பினான்.

மேல் தளத்திற்கு சென்ற அக்னி ஜீவாவிடம் காவல்துறையினர் வந்ததை பற்றி கூற அப்போது தான் ஜீவாவும் ஷக்தியும் ஆசுவாசமாகினர்

அக்னியை பார்த்த பின் தான் நேஹாவிற்கு மூச்சே வந்தது. அக்னி நேஹாவின் அருகே வந்தவுடன் அவன் கையை இறுக பற்றியவள் “அகி உனக்கு ஒன்னுமில்ல தான” என்று சிறு கேவலுடன் கேட்க, அக்னி அவள் தலையை வருடி “எனக்கு ஒன்னுமில்ல டா.. ஏன் அழுற” என்று சமாதானம் செய்ய, அவனிடமிருந்து விலகியவள் “அப்போ இதுக்கு பெயர் என்ன” என்று அவன் நெற்றியில் இருந்த காயத்தை சுட்டிக்காட்ட,
அக்னி மென்னகை புரிந்தான்.

நேஹா “இரு நான் கிட் கொண்டு வரேன்”
அக்னி “இரு.. ஒன்னுமில்ல எனக்கு” என அவள் கையை பிடித்து தடுத்தவனை நேஹா தீயாய் முறைக்க,
அக்னி “சரி போ” என்று அனுப்பி வைத்தான்.

கதிர் அக்னியை அணைத்து “மச்சா ஒன்னுமில்ல தான”
“ஒன்னுமில்ல டா . சீரியலை ஓட்டாத.. விடு”  என்க
கதிர் “ஒரு எமோஷனல் டச் கொடுக்க விட மாட்டியே” என்று அலுத்துக்கொள்ள, அக்னி சிரித்துவிட்டான்.

நேஹா அவன் காயத்தை துடைத்துக்கிந்திருக்க, அக்னி அவளையே  தான் பார்த்துக்கொண்டிருந்தான். பதட்டத்தில் அவள் கண்கள் படபடவென அடித்துக்கொள்ள, அவளோ தன் சிவந்த அதரத்தை கடித்து இன்னும் சிவக்க வைத்துக்கொண்டிருந்தாள் தன் பதட்டத்தை மறைக்க. அவள் நெற்றியில் தொடங்கி அவள் இதழில் ஆணவனின் பார்வை நிலைகொள்ள,  பெண்ணவளின் மென்மையில் முற்றிலுமாக தொலைந்து தான் போனான் அந்த ஆடவன். அவளின் அதரங்கள் அவனை பித்துக்கொள்ள வைத்தது.

தறிகெட்டோடும் கனவு குதிரைக்கு கடுவாளமிட்டவன் அவளிடமிருந்து விலக,
நேஹா “இப்போ என்னடா உனக்கு” என்று காரமாக கேட்க,
அக்னி “அது… ஆரு.. அவ எப்படி இருக்கான்னு பார்க்கணும்” என்றிட,
நேஹா “அதெல்லாம் அவ நல்லா தான் இருக்கா.. முதல உனக்கு மருந்து போடலாம் அப்பறம் அவளை பார்க்க போவோம்” என்றவள் ஆடவனின் நிலை அறியாது கடமையே கண்ணாக மருந்திட்டுக்கொண்டிருந்தாள், அக்னி தான் ஒருவித இன்ப அவஸ்தையில் நெளிந்துக்கொண்டிருந்தான்.

அக்னியின் அருகே வந்த கிஷோர் “பையர்.. சே.. அக்னி” என்றழைக்க, அக்னி அவனை ‘என்ன’ என்பது போல் பார்த்தான்.
கிஷோர் “கீழ எல்லாம் ஓகே தான.. ரேயன் எங்க” என்று பதட்டமாக வினவ,
அக்னி “எல்லாரும் ஓகே தான்.. போலீஸ் வந்துட்டாங்க.. எல்லாரும் அவங்க கூட இருக்காங்க” என்ற பின் தான் கிஷோர் ஒரு நிலைக்கு வந்தான்.

கீழ் தளத்தில் அஷ்வின் ஒவ்வொரு அறையாக திறந்துவிட்டுக்கொண்டிருந்தன்.

ஆத்ரேயன் ஆரு இருந்த அறைக்கு வர, அவன் அருகே வந்தவள் அவனை இறுக அணைத்துக்கொண்டு “நீ ஓகே தான.. பிரச்சனை முடிஞ்சிது தான” என பரிதவிப்புடன் கேட்க, அவளை மெல்ல விலக்கியவன் “எனக்கு ஒன்னுமில்ல.. பிரச்சனை எல்லாம் முடிஞ்சிது” என்க,
அப்போது தான் அவன் நெற்றியிலிருந்த காயம் அவளுக்கு தென்பட,
“ஹே என்ன இது.. இப்படி அடி பட்டிருக்கு” என்று பதற, அப்போது அங்கு வந்த அஷ்வின் “பாப்பா நீ ஓகே தான” என்று நலம் விசாரிக்க,
ஆரு “நான் ஓகே தான்.. உங்க ரெண்டு பேருக்கு தான் இப்படி அடி பட்டிருக்கு.. வாங்க மருந்து போடலாம்” என்று இருவரையும் அழைக்க,
அஷ்வின் “இருடா.. ப்ரின்ஸி கூப்பிட்டாரு.. என்னன்னு பேசிட்டு வரேன்” என்க, இருவரையும் சரமாரியாக முறைத்தவள்,
“ரெண்டு பேருக்கும் சூப்பர்மேன்னு நினைப்பா.. காயம் என்ன அப்படியே சரியாகிடுமா.. மேஜிக் ஏதாவது பண்ணுவீங்களா.. வாங்க மரியாதையா இல்ல அவ்ளோதான் உங்களை” என்று பொரிந்துவிட்டு அவர்களை இழுத்துக்கொண்டு செல்ல,
ரேயன் “நீ அண்ணாக்கு மருந்து போடு நான் கிச்சாவ பார்த்துட்டு வரேன்” என்று கூற, “உன் பொண்டாட்டி நல்லா தான் இருக்கான்.. இப்போதான் பேசுனேன். ஒழுங்கா இங்க உட்காரு”
அஷ்வின் “ஹே ப்ரின்ஸி கூப்பிட்டாருடா” என்க,
ஆரு வெறியாகி “இன்னொருவாட்டி கூப்பிட்டா சொல்லுங்க அவரை ரெண்டு போட்டுட்டு வரேன்” என்றவள் இருவருக்கும் மருந்திட,
அஷ்வின் அவள் தலையில் கைவைத்து “தேங்க்ஸ் டா தங்கம்.. நான் போய்ட்டு வரேன்.. நீ பத்திரமா இரு” என்றவன் தலைமையாசிரியரை பார்க்க சென்றுவிட, ரேயன் ஏதும் பேசாது அமைதியாக அமர்ந்திருந்தான்.

ஆரு “ரொம்ப வலிக்கிதா” என்று தன்னவன் வலியை தனதாக்கி முகம் சுருக்க,

ரேயன் “இல்ல.. ஐ அம் ஓகே”
ஆரு “ஹ்ம்ம்”
ரேயன் “உனக்கு ஒன்னுமில்ல ல” என்று கேட்க,
ஆரு “ஐ அம் நாட் ஓகே” என்றாள். அதில் பதறியவன் “ஏன் என்ன ஆச்சு” என்று கேட்க,
ஆரு சிரித்துவிட்டு “சும்மா சொன்னேன்.. நான் இப்படி சொன்னா நீ ஏன் இவ்ளோ பதறுற” என்று நக்கலாக கேட்க, ரேயன் அவளை முறைத்துவிட்டு எழ, அவனை தடுத்து அமரவைத்தாள்.

ரேயன் எங்கோ பார்த்தப்படி அமர்ந்திருக்க, ஆரு அவன் முகத்தை தன்னை நோக்கி திருப்பி “யாரோ என்கிட்ட பேசாதன்னு சொன்னாங்க.. பேச கூடாதா” என்று ஏக்க குரலில் கேட்க, ஆத்ரேயன் அவளை தான் பார்த்தான்.

ஆரு ‘என்ன’ என்று புருவமுயர்த்த,
ரேயன் “நான் சொல்றத கேப்பியா என்ன” என்று முன்தினம் அவள் கேட்டது போலவே கேட்க, ஆருவும் “கேப்பேனே” என்றாள் அவனை போலவே.
ரேயன் “ஹ்ம்ம் ரெடியா இரு.. அப்பறம் என்ன குத்தம் சொல்ல கூடாது.. பார்த்துக்கோ” என்று பீடிகையுடன் கூறிவிட்டு செல்ல, அவன் பின் சென்றவள் “ஹே ஹே என்ன.. எதுக்கு ரெடியா இருக்கனும்” என்று புரியாமல் விழிக்க,
ரேயன் “Won morf uoy nwo I” என்றிட,
ஆரு “என்ன தலைல அடிபட்டு கபாலம் கலங்கிடுச்சா.. புரியுற மாதிரி சொல்லு” என்று சிணுங்க, அவள் அருகே நெருங்கியவன் அவள் காதில் “I own you from now” என்றான் ஏதோ ஒரு வேகத்தில். அதில் ஆரு என்ன கூற என்று புரியாமல் “அப்படின்னா” என்று மலங்க மலங்க விழிக்க,
ரேயன் தலையாட்டிவிட்டு “இனி நீ என் பிரெண்ட்ன்னு சொன்னேன்” என்றான் அழுத்தமாக.

ஆரு “இல்ல.. அது.. நான்” என்று திணற,
ரேயன் “பை தியா” என்றுவிட்டு சென்றிட, ஆரு தான் ‘என்ன பண்ணி வச்சிருக்கேன்’ என்று நடப்பவற்றை புரியாமல் பார்த்துக்கொண்டு நின்றாள். பின் அக்னியின் நியாபகம் வர, சோர்ந்த நடையுடன் வகுப்பிற்கு சென்றாள்.

ஆரு வகுப்பிற்கு செல்லவும் அக்னி வெளியே வரவும் சரியாக இருந்தது.
அக்னி “ஆரு.. உனக்கு ஒன்னுமில்ல ல.. நீ ஓகேன்னு நேஹா சொன்னா.. ஓகே தான” என்றவனுக்கு அவளின் முகவாட்டத்திற்காக காரணம் மட்டும் புரியவில்லை. ஆராத்யா அமைதியாக நிற்க,
அக்னி “ஹே உன்ன தான் கேட்குறேன்..”
கதிர் “அடியே சைத்தான்.. என்ன ஆச்சு” என்று அவள் தோளை உலுக்க,
ஆரு “ஆன் நான் பேக் போறேன் கிளாஸ் எடுக்க” என்று உளற,
கதிர் “ஏதே” என்று முழிக்க,
ஆரு “இல்ல இல்ல.. நான் கிளாஸ் போறேன் பேக் எடுக்க” என்றிட, நேஹா தலையில் அடித்துக்கொண்டு அவள் மாட்டியிருந்த பையை தூக்கி காட்ட, ஆரு மீண்டும் அமைதியானாள்.

கதிர் “நீ வா.. முதல தர்கா போய் உன்ன தெளிய வைக்கனும்” என்று அவளை இழுத்துக்கொண்டு செல்ல, அக்னி அவள் நடந்த கலவரத்தில் தான் பயந்திருக்கிறாள் என நினைத்து அமைதியாகினான்.

நேஹா யாரிடமோ அலைபேசியில் பேசிவிட்டு வர,
அக்னி “யாரு”
நேஹா “அருண் கிட்ட தான்.. கிளம்பிடியான்னு கேட்டான்”
“அவன் எங்க இருக்கானாம்”
“வேலைல தான்”
“சரி ஓகே.. வா” என்று அவளை அழைத்துக்கொண்டு சென்றான்.

நன்றாக உறக்கத்தில் இருந்த ஆரு திடீரென அடித்து பிடித்து எழுந்தமர, அவள் கை பட்டு அங்கிருந்த பூ ஜாடி ஒன்று கீழே விழுந்து உடைந்து .

அந்த சத்தம் கேட்டு உள்ளே நுழைந்தனர் சிவகுமார் மற்றும் நிலா.
சிவகுமார் “என்ன ஆச்சு ஆரா.. கெட்ட கனவா” என்று பரிவாய் கேட்க,
ஆரு “ஒன்னுமில்ல” என்றாள் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு.
இருவரும் அவளை தான் பார்த்துக்கொண்டிருந்தனர்,
ஆரு “இப்போ எதுக்கு ரெண்டு பேரும் என்ன இப்படி பார்க்குறீங்க” என்று சிடுசிடுக்க,
நிலா “உன்ன இப்படி பார்க்க கஷ்டமா இருக்கு ஆரா”
ஆரு “ஏன் எனக்கென்ன.. நான் நல்லாதான் இருக்கேன்” என்றவள் உச்சபச்ச கடுப்பில் இருந்தாள்.

சிவகுமார் “சும்மா வாய் வார்த்தையா சொன்னா பத்தாது ஆராத்யா”
ஆரு “இப்போ என்ன உங்களுக்கு.. எனக்கு ஒன்னுமில்ல.. ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்றவள் குளியறைக்குள் செல்ல முற்பட,

நிலா “நம்ம காலனி விட்டு வந்து ஆறு வருஷமாச்சு ஆரா.. ஆனா நீ இன்னும் கொஞ்சம் கூட மாறாம இருக்க.. எவ்ளோ நாள் இப்படியே இருப்ப.. எதுவும் வேண்டாம்ன்னு” என பொறுக்க முடியாமல் கேட்டுவிட,

ஆரு “இப்போ எதுக்கு காலைலயே வெறுப்பேத்திட்டு இருக்கீங்க” என்று அடிக்குரலில் சீறினாள்.

சிவகுமார் “உனக்கு கோவம் வெறுப்புலாம் வரும்னே இந்த ஆறு வருஷமா தான் ஆரா பார்க்குறோம்.. ஒரு வாட்டி எல்லார்கிட்டயும் பேசி பார்த்தா என்ன” என்று கூறி முடிக்கும் முன் அந்த அறையில் இருந்த மற்றொரு ஜாடியை உடைத்திருந்தாள் ஆராத்யா.

ஆரு “இன்னோரு வாட்டி பழச பேசுனீங்க.. வீட்ட விட்டு தனியா போயிடுவேன்.. பார்த்துக்கோங்க” என்றவள் குளியலறைக்குள் புகுந்துக்கொண்டாள்.

குளித்து முடித்து ப்ளேசரை அணிந்துக்கொண்டு வெளிய வாந்தாள், ஜெ பி கன்ஸ்ட்ரக்ஷன்ஸின் ஜி எம் ஆராத்யா சிவகுமார்.

அலுவலகத்திற்கு காரில் கிளம்பிய ஆருவை பார்த்த நிலா தான் மௌனமாக கண்ணீர் வடித்தார்.
நிலா “இவங்களுக்குள்ள இப்படி ஆகும்ன்னு நான் கனவுல கூட நினைச்சது இல்லங்க..” என வருத்தப்பட,
சிவா “எல்லாம் விதி நிலா.. சீக்கிரமே எல்லாம் சரி ஆகிடும்.. கவலை படாத” என்றவர் நிலாவை தோளில் சாய்த்துக்கொண்டார்.

அலுவலகத்தில் அமர்ந்திருந்த ஆருவின் முகமும் மனமும் இரும்பாய் இறுகியிருந்தது. ஏதோ கோப்புகளை பார்வையிட்டுக்கொண்டிருந்த ஆருவின் கண்ணில் அவர்கள் கல்லூரி புகைப்படம் ஒன்று தட்டுப்பட, அதை கிழித்து போட்டவள் “இனி என் வாழ்க்கைல உங்களை பாக்கவே கூடாது” என்று உச்சக்கட்ட வெறுப்பில் பேசினாள்.

ஆருவின் இந்த மாற்றத்திற்கான காரணம் என்ன ?

Advertisement