Advertisement

முகூர்த்தம் 23

 

மீண்டும் கடந்து சென்று சீதாவை அழைத்து வர எண்ணியவர், ஒரு அடி எடுத்து வைக்க அங்கே வந்து கொண்டிருந்த கார் ராஜேந்திரன் முன் நின்றது.

நின்ற காரின் முதல் சக்கரம் ராஜேந்திரனின் காலை இடித்திருக்க, தடுமாறி விழுந்தவர் அப்போதும் குழந்தையை மிக கவனமாய் அடிபடாதவாறு பிடித்துக் கொண்டிருந்தார்.

தரையில் விழுந்த கிடந்தவரை சுற்றி நொடியில் கூட்டம் கூடிவிட சாலைக் கடந்து படபடப்பாக வந்த சீதாவிற்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.

முதுகில் நல்ல அடிவிழுந்திருக்க, அந்நிலையிலும் மகளை இறுக்க கட்டிக் கொண்டு தலையில் அடிபடாமல் தலையை தூக்கியவாறு இருக்கவும் நல்லதாய் போனது.

கூட்டத்தில் ஒருவர் அவரிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொள்ள, ஒருவர் தூக்கிவிட ஒருவர் சோடா வாங்கி வந்து தர மனிதநேயம் மனங்களில் பூத்திருந்ததில் சற்று நேரத்திற்கெலாம் இயல்பு நிலை திரும்பி இருந்தது.

சீதா கையில் இருந்த குழந்தை அப்படியே இருக்க, ராஜேந்திரன் கையில் இருந்த குழந்தையை காணவில்லை. கூட்டத்தில் யார் வாங்கினார்கள் என தெரியவில்லை ஒருவருக்கும்.

இடித்து தள்ளிய காரையும் காணவில்லை. அந்த நிமிடத்தில் குழந்தையைக் காணவில்லை என்பதை அவர்கள் உணர்ந்த நிமிடத்தில் அவர்களின் உணர்வுகளை சொல்ல வார்த்தைகளே இல்லை.

இங்கே தான் இருப்பாள் என்றும், கிடைத்துவிடுவாள் என்றும் ஊக்கம் கொடுத்துக் கொண்டெ உடன் தேடும் நல்ல உள்ளங்களுக்கு ஏனோ ஏமாற்றமே மிஞ்சியது. அங்கிருந்தவர்களை கேட்டு கேட்டு ஓய்ந்து போயிருந்தார் சீதா.

உண்மையில் பிள்ளையார் மீது அவ்வளவு கோவம் வந்தது அவருக்கு.

சில நிமிடங்களுக்கு முன்பு வரை கையில் இருந்த குழந்தையை இப்போது காணவில்லை. ’உன்னைக் காணவென தானே வந்தோம், எங்கள் பிள்ளையை பறி கொடுத்துவிட்டோமே… எல்லாம் உன்னால் தான்…‘ என்று ஒரு மனம் வஞ்சனை இல்லாமல் திட்டியது.

இன்னொரு மனமோ ’தெய்வமே உன் கண்முன் தானே இருக்கிறோம் என்ன நடந்ததென உனக்கு தெரியாதா, தயவு செய்து எங்கள் பிள்ளையைக் கொடுத்துவிடு…’ என்று மன்றாட்டு பாடியது.

ஏனோ இவை எதுவுமே பிள்ளையாரின் காதை எட்டவேயில்லை போலும். தொலைந்த குழந்தை மீண்டும் கிடைக்கவே இல்லை.

போலீஸ் கம்ளைண்ட் கொடுத்தார்கள், செய்தித்தாள்களில் காணவில்லை என அறிவித்தார்கள், அறிந்த அத்தனை தெய்வங்களுக்கும் வேண்டுதல் வைத்தார்கள். ஆனால் எதற்குமே பலன் இல்லாமல் போனது.

ஒருவேளை இன்றிருப்பது போல் சிசிடிவி கேமரா, சமூக வளைதளங்கள் என இருந்திருந்தால், அன்றே மலர்விழி கிடைத்திருப்பாளோ என்னவோ…

      நாட்கள் மாதங்களாகி வருடத்தை நெருங்கியும் குழந்தை பற்றிய தகவல் கிடைக்கவேயில்லை. செய்தித்தாளில் குழந்தைகளைப் பற்றிய செய்தியைப் பார்க்கும் போதெல்லாம் சீதாவின் அரற்றலும் அழுகையும் கட்டுப்படுத்த முடியாத அளவில் இருந்தது.

      அதேசமயம் கையிலிருக்கும் மைவிழியை அவரைத்தவிர யாரிடமும் கொடுப்பதில்லை. யாரைப்பார்த்தாலும் சந்தேகம், புதிதாக யாரையாவது பார்த்தால் ’என் கொழந்தையைத் திருடிட்டு போக வந்திருக்கியா…’ என கிட்டதட்ட மனநிலை பாதிக்கப்பட்டவர்களை போலவே நடந்துகொள்ள ஆரம்பிக்கவும் ராஜேந்திரன் ஒருமுடிவுக்கு வந்தார்.

      இனி இங்கிருக்கக் கூடாது என முடிவு செய்தவர் வேலையில் மாற்றல் வாங்க முயற்சி செய்தார் முடியாததால் வேலை நிரந்தரமாக விட்டுவிட்டு அதன் மூலம் வந்த பணத்தை பெற்றுக் கொண்டு தன் சொந்த ஊரான திருச்சிக்கே திரும்பி விட்டார்.

இடம் மாறியதில் கொஞ்சம் கொஞ்சமாக சீதாவுமே இயல்பு நிலைக்கு வந்திருந்தார். இழந்த குழந்தையை எண்ணி இருக்கும் குழந்தையை இழந்துவிடக்கூடாது என கண்ணும் கருத்துமாய் பார்த்து வளர்த்தார்.

அப்போது கூட அவர்களின் சந்தேகம் டேவிட் ஜென்சி பக்கம் திரும்பவில்லை.

சில வருடங்கள் கழித்து ராஜேந்திரன் தன் நண்பர் இல்லத்திருமணத்திற்காக மீண்டும் கோவை சென்றிருந்தார். அதே திருமணத்திற்கு டேவிட் ஜென்சி தம்பதியும் வந்திருந்தனர்.

ராஜேந்திரனாக அவர்களிடம் பேச முயற்சி செய்யவில்லை எனும் போதிலும் அவரைக் கண்டதும் டேவிட் முகத்தில் தொற்றிக் கொண்ட பதற்றமும் பரபரப்பும், அவரை சந்தேகத்திற்கு உள்ளாக்கியது.

டேவிட் ராஜேந்திரன் இருக்கும் இடத்தை தவிர்த்து வேறு புறம் ஓடுவதும், யதேச்சையாக ராஜேந்திரன் செல்கையில் திருடன் போல் மீண்டும் ஓடுவதுமாய் இருக்க, அவருக்கு இவன் ஏன் இப்படி என்னைக் கண்டால் ஒளிகிறான் என்று தோன்றியது.

இப்படி கண்ணாமூச்சி ஆடியவன் சற்று நேரத்தில் மாயமாகி இருந்தான். இவனின் இந்த செயலை பார்த்து ஆயாசமாய் அவரின் நண்பரிடம்,” இந்த டேவிட் பய பெரிய ஆளாயிட்டான்னு நான் என்ன அவன்கிட்ட காசு பணம்னு போய் நிப்பேன்னு நெனச்சானா அவன், நான் பார்த்து ஆளான பய என்னமா ஓடி ஒளியிறான்…” என்றார்.

அதற்கு அவரின் நண்பர். “என்னது அப்படியா… அதான் டேவிட் அதுக்குள்ள போயிட்டானா…?” என்று கேட்க

“என்னவோ எனக்கென்ன அவசியம் அவன்கிட்ட போய் நிக்க…?”

“உன்னைப் பத்தி எனக்கு தெரியாதா… அவன் புது பணக்காரன் பா அதான் அப்படி, பொண்டாட்டி புள்ளை காசு பணம் காரு பங்களான்னு ஜாம் ஜாம்னு இருக்கான், ஆனா என்னவோ நடந்திருக்கு இல்லன்னா அவனுக்கு இந்த வளர்ச்சியும் இல்லை, இந்த குழந்தையும் இல்லை…”

“என்னப்பா சொல்ற…”

“அட ஆமாப்பா, அந்த பெரியவர்கிட்ட வேலைபாத்தாங்களே, அவரை சொரண்டி அந்த பணத்துல சேர்த்தது தான் இந்த சொத்துன்னு ஊரெல்லாம பேசிக்கிறாங்கப்பா…”

“இத நானும் யூகிச்சேன், ஆனா எது நெசம்னு தெரியாம நாமளா எதுவும் சொல்லக்கூடாது, இன்னொன்னு அவன பத்தி நமக்கென்னப்பா, நம்ம பொழப்பு உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருக்கப்போவே நமக்கு என்னன்னவோ நடக்குது, யாருக்கும் எந்த துரோகமும் பண்ணல யாருக்கும் கெட்டது நெனக்கல அப்படி இருக்கப்போவே தொலைஞ்ச என் குழந்தை கிடைக்கவே இல்ல, இதுல இவன் என்ன செஞ்சா எனக்கென்ன…”

“நீ மனச தளர விடாதப்பா, என்னைக்கு இருந்தாலும் உன் பொண்ணு உன் கைக்கு கிடைப்பா, நீ வேணும்னா பாரு, அந்த சூலக்கல் மாரியாத்தா உன் மனக்கொறைய கண்டிப்பா சரி பண்ணிடுவா அன்னிக்கு குடும்பத்தோடு வந்து இந்த ஒத்த ரூவாயை ஆத்தாவுக்கு செலுத்து…” என்று அவர் கொடுத்த ஒற்றை நாணயம் இன்னும் ராஜேந்திரனின் பாக்கெட்டில் இருக்கிறது.

ஆனால் அதை செலுத்தும் நாள்தான் வரவில்லை இன்று வரை…!

”குழந்தை கூட எதோ கேரளாக்காரங்க குழந்தையை இவன் தத்து எடுத்து வளக்கிறான்னு பேசிக்கிறாங்க…” என்று நண்பர் சொன்னதை ராஜேந்திரன் அன்று காதில் வாங்கவே இல்லை.

————————————————————————————————————————-

அன்றைய டேவிட்டின் கள்ளத்தனமான பார்வையும் இன்று மலர்விழி மைவிழி உருவ ஒற்றுமையும் அவருக்கு டேவிட்டின் மேல் சந்தேகத்தை வரவழைத்தாலும், பேர் கூட மாற்றாமல் இருப்பது அவருக்கு ஆச்சர்யத்தை அளித்தது.

சந்தேகமாய் மட்டும் இருந்தது இன்று டேவிட் ஜென்சியின் வருகையால் உறுதியானது.

மலர் கத்தியதில் அடிப்பதை நிறுத்தியிருந்தவருக்கு அத்தணையும் கண்முன் வந்து சென்றது.

அவரின் அமைதியைப் பார்த்த டேவிட் குற்ற உணர்வில் கூனிக் குறுக, ஜென்சியின் தலையும் மலரை எதிர்கொள்ளமுடியாமல் கவிழ்ந்தது.

மலருக்கு அப்போதே புரிந்துவிட்டது தவறு இவர்கள் மீது தான் என்று…!

இங்கு நடப்பதைக் கண்டு என்னவோ ஏதோவென வந்த சீதா, டேவிட் ஜென்சியைக் காணும்வரை கூட மலர் தன் மகளாய் இருப்பாள் என்று எண்ணவில்லை.

எல்லோரும் இங்கிருக்கையில் கல்யாண ஜோடி மட்டும் என்ன விதிவிலக்கா, அதிலும் கோபமே வராத தன் தந்தை கேபம் கொண்டு ஒருவரை அடிக்கிறார் என்றால் அவளுக்கு ஆச்சர்யத்தைத் தாண்டி என்னவாயிற்று என்ற பதற்றமே இருந்தது.

மலர் கோபத்திலும் மைவிழி பதற்றத்திலும் அருகருகே நிற்க, சீதா ராஜேந்திரனின் கண்களில் ஆனந்த கண்ணீர் பொங்கியது.

சீதா இருவரையும் சேர்த்து அணைத்துக் கொள்ள இருவருக்குமே காரணம் தெரியவில்லை.

அதுவரை தலை கவிழ்ந்திருந்த ஜென்சி, ”எங்களை மன்னிச்சிருங்க கா… உங்க குழந்தையை நாங்க தான் திருடினோம், அன்னிக்கு கோவில் வாசல்ல அண்ணனை இடிச்சதும் இவர் தான், அவர் கீழ விழுந்ததும் அவர் கையில இருந்து குழந்தையை வாங்கினதும் எங்க ஆள்தான், போலீஸ்க்கு பணம் கொடுத்து குழந்தை உங்க கைக்கு கிடைக்காம வச்சிருந்தோம், இங்க இருந்தா கண்டுபிடிச்சிடுவீங்கன்னு கேரளா கொண்டு போயிட்டோம், நாங்களும் கொஞ்ச நாள் போய் அங்கயே இருந்தோம், உங்க கிட்ட இருந்து குழந்தையை பிரிச்சு உங்கள கஷ்டப்படுத்தி பாக்கணும்னு நெனச்ச எனக்கு அந்த கடவுள் குழந்தை பாக்கியமே கிடைக்காதபடி செய்திட்டார்.

முதல்ல உங்க குழந்தையை கடத்துனதே உங்கள ஒரு வாரம் அழவிட்டு குடுத்திடனும்ன்னு தான். ஆனா அப்போ தான் எங்களுக்கு இனிமே குழந்தையே பிறக்க வாய்ப்பில்லை டாக்டர் சொன்னாங்க, அதோட ஒரு வாரம் அவள வளர்த்த எனக்கே அவள பிரிய மனசில்லை. அவளையே சொந்த பொண்ணா நெனச்சு வளக்க ஆரம்பிச்சிட்டோம், எந்த வகையிலயும் அவளுக்கு குறை வைக்காம , நல்லபடியா வளர்த்திருக்கேன் கா, ஆனா இனிமேலும் அவகிட்ட உண்மையை மறைக்க முடியாதே…” என்று சீதாவிடம் சொல்வது போல் அனைத்தையும் அனைவருக்கும் சொல்லி முடித்திருந்தார்.

அனைத்தையும் கேட்ட மலருக்குத் தான் உச்சபட்ச அதிர்ச்சி ஆட்கொண்டிருந்தது. ’இத்தணை நாளும் தன்னை பெற்றவர்கள் என அவள் நம்பிக் கொண்டிருந்தவர்கள் அவளைத் திருடிக் கொண்டு வந்து தன் அன்னையை அழ வைத்தவர்களா… இவர்கள் மீதா அளவு கடந்த அன்பும் நம்பிக்கையும் வைத்திருந்தேன்…’ இந்த எண்ணங்களே அவளை படுத்திக் கொண்டிருந்தது.

இதையெல்லாம் பார்த்த மைவிழிக்கோ இன்னும் அதிர்ச்சி, அவளுக்கு நன்கு விவரம் தெரியும் முன்பே மலர்விழி

தொலைந்து போயிருந்ததால், அவளிடம் அவள் இரட்டையர்களுள் ஒருத்தி என்பதையே அவள் பெற்றவர்கள் மறைத்திருந்தனர். அதை ஒருபோதும் அவளுக்கு தெரியவிட்டதும் இல்லை.

மலர்விழி பற்றிய விபரங்களை சேகரிக்க சொல்லி பூபதியிடம் ராஜா சொல்லியிருந்தான். அவன் சேகரித்துக் கொடுத்த செய்திகளை கண்டவனுக்குபுரிந்தது ஒன்று மட்டும் தான்.

மலரின் பெற்றோர்களை மைவிழி வீட்டாருடன் சந்திக்க வைத்தாலே பல உண்மைகள் வெளியில் வரும் என்று அவர்கள் எதிர்பார்த்தபடியே நடந்தது.

ராஜாவும் பூபதியும் பெரிய அளவில் அதிர்ச்சியுறவில்லை. ஏனெனில் இது அவர்கள் எதிர்பார்த்ததே. ஆனால் மைவிழியோ மலர்விழியோ இதையெல்லாம் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

இவற்றையெல்லாம் ஒரு நம்பாத பாவனையுடன் கேட்டிருந்த மைவிழி தன் அன்னையிடம் கண் நோக்க அவர் ஆமொதிப்பாய் தலை அசைக்க, அவளுக்கு ஏதோ போல் இருந்தது.

கண்பார்வை மங்கலாக, ஒரு முறை கண்களை மூடித் திறந்தால் தெளிவாகிவிடும் என்று தோன்றியது. ஆனால் கண்களை மூடியவளால் மீண்டும் திறக்கவேயில்லை.

அருகில் நின்றிருந்தவளை சட்டென சரியவும் தாங்கிப் பிடித்த ராஜாவின் மடியில் கிடந்தவள் கண்களைத் திறக்கவில்லை.

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement