Advertisement

முகூர்த்தம் 21

 

”பேசுனது போதும், ரொம்ப நேரமாச்சு, அவனுக்கே வேற உடம்பு சரியில்ல, ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு பேசுங்கப்பா….” என்றபடி ராஜாவின் தாயார் மகாலட்சுமி வந்து நின்றார்.

“யாருக்குமா…? இவனுக்கா உடம்பு சரியில்ல…” என்று பூபதி கேட்க, “உனக்கு தெரியாதா தம்பி, யாரோ பெரிய அரசியல்வாதியாமே, அவங்க ஆளுங்க ஏதோ லோன் பிரச்சினையில தம்பிய அடிச்சு போட்டாங்கப்பா, பத்து நாளைக்கு மேல ஆஸ்பத்திரியில இருந்துட்டு நேத்துதான் வீட்டுக்கு கூட்டி வந்தோம் பா, உங்களுக்கு தெரியும்னுல நினைச்சேன்…”

“அப்படியா எங்களுக்கு தெரியாதே மா…” என்றான் சேது அப்பாவியாக.

“ஏன் தம்பி நீ கூட போலீசா தான இருக்க, இத கொஞ்சம் விசாரிக்கக் கூடாதாப்பா…?”

“நீங்க கவலைப்படாதீங்க மா, நாங்க பாத்துக்குறோம்…” என்றவன், ஒன்றும் அறியா குழந்தையாய் மாறி முகத்தை பவ்யமாய் மாற்றியிருந்த ராஜாவைப் பார்த்து, “பாத்துடா பாத்து ரொம்ப பாவமா இருக்க, ரெஸ்ட் எடு… நாங்க கிளம்பவா…” என்றான்.

அவர்கள் இருவரும் விடைபெற்று கிளம்ப, அன்னை கொடுத்த பாதாம் பாலை குடித்துவிட்டு தன்னறைக்கு வந்தவன் மீண்டும் மைவிழிச்செல்விக்கு அழைக்க, எடுக்கப்படாமலே ரிங்டோன் முடிந்துவிட, அவள் உறங்கியிருப்பாள் நாளை பேசலாம் என்றெண்ணி அவனும் உறங்கிப்போனான்.

அதே நேரம் வானதி ஸ்ரீராமிற்கு முதுகு காட்டிய படி படுத்திருந்தாள் அவர்கள் அறையில், அவனும் சமாதானப்படுத்துவதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை, அவனின் இந்த செய்கை அவளுக்கு மேலும் மேலும் கோபத்தை அதிகப்படுத்திக் கொண்டே இருந்தது.

அவனின் எல்லா செயல்களும் அவளுக்கு எரிச்சலையே தந்தது. ‘என்ன மனுசன் இவன், புது பொண்டாட்டியை கோவில்ல மறந்துட்டு போகிற அளவுக்கு இவனுக்கு வேலை முக்கியமா, அவ்ளோ சின்சியரான ஆளு எதுக்கு கல்யாணம் பண்ணிக்கனும்…’ என்று யோசித்தபடி அவள் படுத்திருக்க அவனோ அவளுக்கு முற்றிலும் மாறான சிந்தனையில் இருந்தான்.

’வேந்தன் கேஸை இந்த அளவுக்கு சீக்கிரம் முடிக்கிற அளவுக்கு என்ன அவசியம், கொஞ்சம் டைம் குடுத்தா எல்லா உண்மைகளை நானே கண்டுபிடிச்சிருப்பேன், இதை வேற நார் செஞ்சிருந்தாலும் மேலிடத்தில சொல்லி என்னால சரிபண்ண முடியும், ஆனா சொன்னதே மினிஸ்டர், அதுவும் இறந்து போன வேந்தனுடைய சொந்த அண்ணன், அவரே சொல்லும் போது அவரை மீறி என்னால ஒண்ணும் செய்ய முடியலயே, அவர் அப்படி சொல்ல என்ன காரணம்…? என்னுடைய கடமைய என்னால சரியா செய்ய முடியல… இந்த டென்சன்ல கல்யாணம் வேற… பரவால்ல அந்த பொண்ணு அமைதியா இருக்கு, அதுவரைக்கும் நிம்மதி…’ என்று நினைத்தவனின் நிம்மதிக்கு ஆயுள் சற்று குறைவு தான் என்பதி அறியாமலே அவனும் உறங்கிப்போனான்.

 

”என்னங்க மாத்திரை போட்டீங்களா இல்லையா இவ்ளோ நேரம் தூங்காம என்ன செய்றீங்க…?” என்று கேட்டபடி சீதா வர,

தன் சிந்தனைகளில் மூழ்கியிருந்த ராஜேந்திரன் நினைவு வந்தவராய், “அது ஒண்ணுமில்ல சீதா… அன்னிக்கு பஸ் ஸ்டாண்ட்ல பாத்த பொண்ணு யாரா இருக்கும்னு யோசிக்கிறேன்…”

“எந்த பொண்ணுங்க…”

“அதான் என்னைக் கொண்டு வந்து ஹாஸ்பிடல்ல சேத்துச்சு, நம்ம செல்வி மாதிரியே இருந்துச்சே அந்த பொண்ணு…”

“அட ஆமாங்க, அன்னிக்கு நான் செல்வின்னு நெனச்சு கூப்பிட்டே இருக்கேன், அது பாட்டுக்கு போயிடுச்சு… அச்சு அசல் செல்வி மாதிரியே இருந்துச்சு, என்ன முடிய கொஞ்சம் சின்னதா வெட்டி கண்ணாடி போட்டு பொட்ட எடுத்துட்டா நம்ம செல்வியும் அந்த பொண்ணும் ஜெராக்ஸ் தான் போங்க….” என்றவரின் கண்கள் சட்டென குளமாகிட,

“ஏங்க நம்ம இன்னொரு பொண்ணும் உயிரோட இருந்திருந்தா இந்த பொண்ணு மாதிரிதான் இருந்திருக்கும் இல்ல…”

“ஆமா சீதா, எனக்கு இப்பவும் அந்த டேவிட் டெய்சி மேல சந்தேகம் குறையவே இல்ல… அந்த இன்சிடெண்ட்க்கு அப்புறம் நான் அவங்கள காண்டாக்ட் பண்ண எவ்ளோ முயற்சி செஞ்சும் முடியாம போயிடுச்சு… கடைசியா அவங்க சொந்த ஊர்ல அதான் கேரளாவில போய் செட்டில் ஆயிட்டதா கேள்விப்பட்டேன்…”

“அதை இப்ப யோசிச்சு என்ன பண்றதுங்க, எல்லாம் நம்ம விதி, ரெட்டைபிள்ளைங்கள பெத்து ஒன்னை தொலைச்சிட்டு அந்த ரணத்தை இன்னொரு பிள்ளைகிட்ட காட்டாம இந்தா கல்யாணம் வரைக்கும் வந்துட்டோம். இவளையாச்சும் பத்திரமா, நல்ல இடத்தில நல்லவன் கையில பிடிச்சு கொடுத்திடணும்னு நினைச்சோம் அதுவும் நல்லபடியா கூடி வந்திருச்சு…”

“நல்லவன் மட்டுமில்ல, நம்ம பொண்ணோட மனசுக்கு பிடிச்சவனும் கூட… காலேஜ்ஜில படிக்கும் போதே மாப்பிள்ளை நம்ம பொண்ண தொறத்தி தொறத்தி லவ் பண்ணியிருக்கார், நம்ம செல்விய பத்தித் தெரியாதா…?அவ ஒத்துக்கவே இல்லை, கடைசியில அதுதான் கடவுளோட சித்தம்ங்குற மாதிரி நம்ம சொந்தமா போயிடுச்சு, கல்யாணமும் முடிவாயிடுச்சு…”

“ஏங்க இவ பாட்டுக்கு இன்னமும் அந்த பையன் மேல வெறுப்பா இருந்து நாளைக்கு அவங்க வாழ்க்கை நல்லாயிருக்கணும்ல…”

“அட நீ வேற, அவ அப்போ மாப்பிள்ளைய வேணாம்னு சொன்னதையே இப்பயும் பிடிச்சிட்டு இருப்பான்னு நெனைச்சியா, அவ மனசுல மாப்பிள்ளைய தவிர வேற யாரும் இவ்ளோ ஸ்ட்ராங்கா உக்கார முடியாது… எப்படி சொல்றேன்னு பாக்குறியா… எல்லா விசயத்திலயும் போல்ட் டா இருக்கவ எவ்ளோ பிரச்சனைய தனியா சமாளிக்கிறவ, ஊர்ல இருக்க பொண்ணுங்களுக்கு தைரியம் சொல்றவ, அவருக்கு ஒண்ணுன்னதும் மனசு ஒடிஞ்சிட்டா, எவ்ளோ பலவீனமா யோசிருந்தா, சொல்லாம கொள்ளாம கிளம்பியிருப்பா, அவளோட பலம், பலவீனம் ரெண்டும் அவர் தான். இப்ப அவளும் அதை புரிஞ்சுகிட்டா அவங்க வாழ்க்கை நல்லாயிருக்கும் பாரு…” என்றார் ஆரூடம் சொல்வது போல்.

“நல்லாயிருந்தா சரி, அதுக்கு மேல நமக்கு என்ன வேணும் சொல்லுங்க…”என்றார் சீதாவுமே நிறைவாய்.

ஆனால் ராஜேந்திரனுக்குத் தான் மனம் அமைதியாகவே இல்லை. விடிந்ததும் முதல் வேலையாய் கோவையிலிருந்த தன் நீண்ட நாளை நண்பரான வெள்ளிங்கிரிக்கு போன் செய்தார்.

“என்னடா நல்லாயிருக்கியா…”

“நா நல்லாருக்கேன், உனக்கிப்பத்தான் நெனப்பு வந்திச்சாக்கும்… அம்னி பிள்ளையெல்லா நல்லாக்கிறாங்களா…?” என்றார் வெள்ளிங்கிரி.

“எல்லா நல்லாருக்கோம் டா… அந்த டேவிட் இடம் சேல்ஸ் ஆயிருச்சா என்ன…?”

“எந்த டேவிட் அந்த மலையாளத்தானா…”

“ஆமாம் டா நம்ம இடத்துக்கு பக்கத்தால இடம்…”

“இருக்கு இருக்கு இன்னும் விலையாகல, என்ன திடீர்னு அத கேக்குற…”

“அந்த இடத்தையும் நானே வாங்கிக்கலாம்னு தான் கேட்டேன், விசாரிச்சு சொல்றியா…?”

“என்னடா நீ இருக்குறது திருச்சியில, கோயம்புத்தூர்ல இடம் வாங்கி என்ன பண்ணப் போற, உன்னோட இங்க இருக்க இடத்தையே குடுக்கப்போறன்னு என்கிட்ட வந்து எத்தனை பேர் விலை கேட்டு போறாங்க…”

“இல்லடா பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்கேன், அவ பேர்ல அந்த இடத்தை எழுதிக்குடுக்கலாம்னு இருக்கேன், அதோட பக்கத்து இடத்தையும் வாங்கிக் குடுத்தா நல்லாயிருக்குமேன்னு கேட்டேன்…”

“அடப்பாவி டேய் பிள்ளைக்கு கல்யாணம் வச்சத முன்ன சொல்லாம இடம் கேட்டுட்டு இருக்கான்..” என்று கோபமாய் கேட்ட அவருக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சியே அதிகமாய் இருந்தது. திருமணத்தைப்பற்றி விலாவாரியாக இருவரும் பேசி முடித்து வைத்திட மேலும் அரைமணி நேரம் ஆனது. இறுதியில் திருமண அழைப்பாய் பேசி வைத்தவருக்கு மனதில் தன் தொலைந்த பெண் கிடைத்திடுவாள் என்றே தோன்றியது.

இருவீட்டாரும் திருமண வேலைகளில் மூழ்கி இருக்க, சேது பூபதி இருவரும் அவர்களின் வேலையோடு வேந்தன் கேஸையும் துருவிக் கொண்டு இருக்க, எந்த தகவலும் கிடைக்காமல் இருந்தது.

மைவிழியின் பொழுதுகள் எல்லாம் காதலிலேயே கரைந்தோட , திருமணத்திற்கு முன்பான அந்த சர்க்கரை நாட்களை தேன்சுவையால் திகட்டாமல் பருகிக் கொண்டிருந்தாள் அவளின் மைத்ரேயராஜாவால்.

காதலால் காதலிப்பதும் காதலிக்கப்படுவதும் எத்துணை சுகம் என்பதை அவனின் காதலை உணர்ந்த நிமிடத்திலிருந்து அனுபவித்துக் கொண்டிருந்தாலும், அவனை மணமுடிக்கப்போகும் இன்பநாள் தெரிந்துவிட அத்துணை இனிமையாய் நகர்ந்தன அவனின் பொழுதுகள்.

இரவுகள் அவனின் எண்ணங்களை கனவுகளாக்க, பகல்கள் அவனின் வரவை எதிர்பார்த்தபடி கழிந்தன. அவளின் முகத்திற்கு அழகான அரிதான அரிதாரமாய் காதல் இருந்தது.

கண்ணில் எப்போதும் மின்னிடும் ஒளியோடு வலம் வந்தாள். கன்னக்கதுப்புகள் மெருகேறி பளபளப்பாய் அவ்வப்போது செவ்வானம் காட்டிட, உதடுகளோ சந்தோஷவளைவில் ஜொலித்தது.

நெஞ்சம் அவனை நினைத்து விம்ம, அதிக நேரம் கண்ணாடி முன்னே இருந்தாள். கண்ணாடியில் தெரியும் அவள் கண்களுக்குள்ளே அவன் முகம் தெரிகிறதா எனத் தேடினாளோ, மெய்மறந்து நின்றிருந்தவளின் சிந்தை முழுவதும் அவனே நிறைந்திருந்தான்.

பெண்பார்க்க வந்தபோது தொலைத்த அவன் போட்டோவை தேடி எடுத்திருந்தாள், மெல்லிதாய் இழையோடும் புன்னகையோடு தலை சரித்து இடுப்பில் கைவைத்து நிற்கும் அவனைக் காணாது, நிழற்படத்தையே பார்த்திருந்தவளைக் கண்டதும், அவனுள்ளும் துள்ளும் உள்ளத்தை காதலின் பரவசம் என்பதா…? கண்டதும் வரும் விசை என்பதா…? அவளிருக்கும் திசை நோக்கி கால்கள் தானாய் நகர, அவள் முன்னே நின்றும் உணரவில்லை அவனென்று அவள்.

“ஹாய் முத்தம்மா…” என்று அவன் அவள் கண்முன்னே கை அசைக்க கனவுலகை விட்டு வெளியே வந்தவளுக்கு, ஆளுயர பேசும் ஓவியமாய் அவனைக் கண்டதில் மின்சாரம் தாக்கியிருக்குமோ ஷாக் அடித்தது போல் நின்றாள்.

“போதும்டி கனவு கண்டது மாமன் நேர்லயே வந்துட்டேன் இன்னும் கனவுலயே இருக்கியே… உன்ன நார்மல் ஆக்க ஒரு ட்ரீட்மெண்ட் குடுக்கணும் போலயே…” என்று அவளை இன்னும் நெருங்கினான்.

கைகள் உணர்ச்சியற்றுப் போக, மூச்சின் வேகம் அதிகமாக, கழுத்தின் நரம்புகள் விடைத்துவிட, அவனின் மூச்சுக்காற்றும், பிரத்யேகமாய் அவன் வாசமும் நாசிக்கு மிக அருகில் உணர, கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

சில்லென்றிருந்த அவளின் விரல்களுக்கு இதமளிக்க அவன் கரங்கள் சென்று விட, உலர்ந்து போன இதழ்களுக்கு ஸ்பரித்தால் ஈரப்பதம் கொடுக்கப்போக, என்ன உணர்ந்தாளோ நெருக்கம் அதிகரிக்கையில்,முகத்தை பக்கவாட்டில் திரும்பிக்கொள்ள, இடறிய ஈரப்பதம் அவள் கழுத்தில் இறங்கியது மென்மையாக.

இதழ்கள் மென்மையை கையாண்டாளும், அவனின் மீசைக்கு அது தெரியவில்லை, அவளின் நெருக்கத்தில் முதல் தீண்டலில், கழுத்தில் இடறி பின் தோள்வளைவில் ஏறி, முகத்தில் படர்ந்த முத்தங்கள் செவிமடலை தொட்டு மீள, சிவந்த முகத்தோடு போட்டியில் தோற்றுப்போனது செங்காந்தள் மலர்கள்.

அத்தணையும் அன்பு ஆண்டுகளாய் புதைத்து வைத்த அன்பு, பரிமாறப்படாத அன்பின் சுவை அதிகமாயிருந்ததே தவிர சற்றும் குறையவில்லை. மண்ணில் புதைந்த நெகிழி போல், நெஞ்சில் புதைந்த நேசம் சேதாரம் சிறிதும் இன்றி அகழ்ந்தெடுக்கப்பட்டது அன்பின் முத்துக்களால்.

உறுதியான உள்ளுணர்வில் பெருமுயற்சிக்குப்பின் அவனை தள்ளி நிறுத்தியிருந்தாள். முகம் கொடுத்துக்கூட பேசாதவள், தன் முத்தப்பூக்களை சூடியபின் என்ன பதில் சொல்வாள் என்று அவன் ஆவலாய் பார்த்திருக்க, நாணப்போர்வையால் மறைத்துக் கொண்டாள் நங்கையவள்.

உன் பதில் கிடைக்காமல் ஒரு அடி பின்வாங்க மாட்டேன் என அவனும் பிடிவாதம் பிடிக்க, நிமிர்ந்து பார்த்தவளின் முகத்தில் சிவந்த மொட்டுகள் கன்னாபின்னாவென பூத்துக்கிடக்க, உற்சாகத்தில் துள்ளிக் குதித்தவனுக்கு வானம் தலையில் முட்டியது.

அவளுடன் இயல்பான பேச்சினை எதிர்பார்த்து வந்தவனுக்கு ஏதேதோ நடந்துவிட, உற்சாகத்தில் துள்ளிக்குதித்திக் கொண்டிருக்க,

“பாத்து பாத்து மாப்பிளை, கீழ விழுந்திடப்போறீங்க…” என்றபடி கையில் காபியோடு வந்த சீதாவின் மீது மோதப்போனவன் சடன் பிரேக் போட்டு நின்றான்.

”அத்தை நீங்க எப்போ வந்தீங்க…”

“இப்பத்தான் மாப்பிள்ளை, நானும் மாமாவும் கடைக்குப் போயிட்டு வந்து வீடு நுழையும் போதே உங்க கார் நிக்கிறதப் பாத்தோம் அதான் உடனே காபி போட்டு எடுத்திட்டு வந்தேன், மாமா ஹால்ல உக்காந்திருக்காங்க…”என்றவர் மகளிடம் திரும்பி

“நீ என்ன செல்வி பேறைஞ்சது மாதிரி நிக்கிற மாப்பிள்ளை வந்தா உக்காரவச்சி ஒரு காபி போட்டு குடுக்கக் கூடாதா, இப்படியா நிக்க வச்சே பேசிட்டு இருப்ப…” என்று கேட்டபடியே தன் கணவருக்கு காபி கொண்டு சென்றார்.

“இவன் எங்க என்னை பேசவிட்டான்…” என்று முனுமுனுத்தாலும், அவனின் செய்கையை நினைத்து கன்னம் சிவந்து காதுமடல் சூடேறியிருந்தது.

அவளின் முனுமுனுப்பைக் கண்டவன், மெல்லிய விசிலடித்து, கண்ணால் மீண்டும் அருகே அழைக்க, முறைத்தவள் அவன் கைக்கு சிக்காமல் ஹாலுக்கு சென்றிருந்தாள்.

 

 

 

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 

 

 

 

 

Advertisement