Advertisement

முகூர்த்தம் 12

 

வேடிக்கை பார்ப்பதென்ன

வெண்ணிலவே

இரவுகள் உன் தேடல்

ஏன் இந்த ஊடல்

 

சட்டையில் இருந்த இரத்தக் கறைகளை முடிந்த வரை சரி செய்ய பார்த்து தோற்றுக்கொண்டிருந்தான் சேதுபதி. சார் வாஷ் பண்ணாம போகாது உங்களுக்கு வேணும்னா நான் வேற சட்டை  வாங்கிட்டு வரட்டுமா” தயங்கி தயங்கி கேட்டபடி நின்றிருந்தார் கான்ஸ்டபிள் வேலு.

“இல்லை வேலு வேண்டாம் வீட்டுக்குத்தானே போகப்போறேன், நான் பாத்துக்குறேன்”

“அதுனால தான் கேட்டேன் சார், உங்க வீட்டம்மா போனவாரம் தானே இந்த சட்டையை உங்க பிறந்தநாளுக்காக வாங்கினாங்கன்னு சொன்னீங்க”

“அட இவ்வளவு சரியா ஞாபகம் வச்சிருக்கீங்க”

“ஹி ஹி நீங்க அன்னிக்கு டீ குடிக்கும் போது சொன்னீங்களே சார்”

“சரி அந்த அண்ணா நகர்ல நடந்த ஆக்சிடெண்ட் கேஸ் பைல் எங்க வச்சீங்க, எடுத்துட்டு வாங்க”

“சார் அது…. வந்து….”

“போங்க வேலு எடுத்துட்டு வாங்க”

“அதுவந்து சார் நான் நம்ம அலமாரியில தான் வச்சேன் சார் ”

“என்ன இழுக்குறீங்க இதெல்லாம் ஞாபகம் இருக்காதே, போங்க போய் வேலையை பாருங்க”

கோபத்தை எதிர்ப்படுவோர் மேல் காட்டிக் கொண்டிருந்தவனின் கண்ணில் நக்கல் சிரிப்புடன் கடந்து சென்ற வேந்தனே இருந்தான்.

அந்த கோபத்தை தன் பிரத்யேக அறையில் இருந்த கண்ணாடியில் காட்ட அது கையில் சிதற விட்ட இரத்தத்துளிகள் சட்டை முழுதும் சிதறல்களாய் மாறி இருந்தது.

தன் கண் முன்னே ஏளனமாய் சவால் விட்டு சென்றவனை கைது செய்யும் நேரத்தில் தானா இந்த கமிஷ்னர் மீட்டிங்க் என்று அழைக்க வேண்டும், அதுவும் எனக்கு மட்டும்.

கடமையை செய்யும் போது குறுக்கிடுறவங்களை வைச்சு செய்யனும் என்று எண்ணிக் கொண்டிருக்கையில் அவன் அலைப்பேசி அழைத்தது.

“ஹலோ….” என்றவனுக்கு அமைதி மட்டுமே விடையாய் கிடைக்க, சட்டென்று ஒளிர்த்திரையில் மின்னிய அவன் மகளின் புன்னகை தெரிந்தது.

“பாப்பு குட்டி அப்பா இன்னும் கொஞ்ச நேரத்தில வீட்டுக்கு வந்துடுவேன், என்ன வேணும் அம்முவுக்கு”

“பாப்பா கோமா இருகே” என்ற மகளின் மழலையை ரசித்தவன்,

”அச்சோ பாப்புக்குட்டிக்கு என்னடா கோவம் “

“பாப்பா அப்பா வீட்டிக்கி வரல”

“கிளம்பிட்டேன் டா தங்கம், இப்ப கார் சத்தம் கேக்குறியா”

“ம்ம்மா அப்பா வந்தாச்சு” என்று போனில் கேட்ட கார் சப்தத்திற்கு அவன் நேரிலேயே வந்துவிட்டதாய் எண்ணி போனை தரையில் போட்டுவிட்டு வாசலை நோக்கி ஓடினாள் அவன் மகள் ஆதிரா.

”கோபமா இருக்க சொல்லிக் கொடுக்கலாம் ஆனா அவளை அப்படி இருக்க வைக்குறது ரொம்ப கஷ்டம், இப்போவாவது புரிஞ்சுக்கோ டி என் பொண்டாட்டி” கீழே விழுந்த போனை எடுத்து காதில் வைத்தவளுக்கு சேதுவின் வார்த்தைகள் முழுமையாய் கேட்டது.

“ஆமா ஆமா ஆனா ஆதிரா மாதிரி நான் ஒண்ணும் குழந்தையில்லை, எப்படி வந்து சமாதானம் செய்யுறீங்கன்னு பாக்குறேன்” என்றாள் அவன் காதல் மனைவி தமிழினி.

“அதானே…. என் பொண்டாட்டியை எப்படி சமாதானம் பண்ணுறது…? அவ வேற ரொம்ப கோவமா இருக்காளே….” என்று தன் சிந்தனையை வெளியே சொல்லவும்,

“அய்யோ பாவம் ஒண்ணுமே தெரியாத பச்சை மண்ணு இவரு, “

“ஆமா ஆமா இப்ப கூட பாரு உன் பின்னாடியே நின்னாலும் என்ன செய்யுறதுன்னு தெரியாம நிக்குறேன், அவ்வளவு GS நானு”

“என்னது” என்றவளது கழுத்தை வளைத்து பின்னால் திரும்ப இடைவெளி இல்லாதவகையில் அவளை நெருங்கியிருந்தான் சேதுபதி.

எங்கே மீண்டும் சென்றிடுவானோ என்று அத்தணை இறுக்கமாய் அணைத்திருந்தாள் அவள்.

தமிழி என்று அவனும் நெருக்கிக் கொள்ள,  சப்தமில்லா முத்தங்கள் அங்கே மலர்ந்து கொண்டிருந்தது.

“ப்பா ரொம்ப மோசம் “ இடுப்பில் கைகளை ஊன்றிய படி

இதழ்களில் துவங்கி இமைகளை வருடிக்கொண்டிருந்த மீசை நுனி இதயத்துள் இறங்கும் முன் கேட்ட மகளின் குரலில் அவளை விட்டு மகளை தூக்கிக் கொண்டான்.

சட்டையில் இருந்த இரத்தச்சிதறல்களை கவனித்தாள் தமிழினி.

“ம்மா அப்பா வீட்டுக்கு வந்தும் போன்லயே பேசுறாங்க ஹி ஹி ஹய்யோ ஹய்ய்யோ அப்பாக்கு தெய்யவே இல்லை” மகளின் தேன்குழல் குரலில் மூழ்கியிருந்தவனை உலுக்கினாள்.

“என்னங்க சட்டையெல்லாம் ஒரே இரத்தக்கறையா இருக்கு என்று அவள் பதற்றமானாள்.

அவளை சமாதானப்படுத்த கையை உயர்த்துகையில் அவன் கையைப் பார்த்துவிட்டாள் தமிழினி , “அய்யோ இதென்னங்க கையில கட்டு என்னாச்சு “

“ஹே அதெல்லாம் ஒண்ணுமில்லை நீ டென்ஷனாகாதே, சும்மா சின்ன காயம் தான்”

“சின்ன காயமா இவ்வளவு பெரிய கட்டு போட்டிருக்காங்க, சின்ன காயம்னு சொல்லுறீங்க, வாங்க ஹாஸ்பிடலுக்கு போகலாம் ,என்று அவனை அழைத்தவளுக்கு கண்ணில் நீர்த்துளிகள் துளிர்த்துவிட்டிருந்தது.

“ஹே லூசு இங்க பாருடி எனக்கு ஒண்ணுமில்லை சின்ன காயம் தான் இங்க வேணா பாரு என்று கட்டை பிரித்து காட்டிய பின் தான் சமாதானமானாள்.

அதன் பின் அவனுக்கு உடை மாற்றுவது முதல் உணவு உண்பது வரை அனைத்தையும் அவளே செய்தவள் மகளை ஒரு புறமும், கணவனை ஒரு புறமும் மடியில் கிடத்திக் கொண்டாள்.

இருவரின் தலையையும் கோதிக் கொண்டே, “இவ்வளவு பெரிய உலகத்தில அந்தக் கடவுள் எனக்குன்னு கொடுத்தது உங்க ரெண்டு பேரையும் தான் உங்களுக்கு எதாவது ஆச்சுன்னா என்னால தாங்க முடியாது, எதுவந்தாலும் எனக்கு வரட்டும், உங்க ரெண்டு பேருக்கும் ஒண்ணும் ஆகக்கூடாது.”

“அடியே என் ஆசை பொண்டாட்டி இந்த கிளைமேட்டுல, இப்படியா டி எமோஷனலா பேசிகிட்டு இருக்குறது, நாம நல்லா சந்தோஷமா இருப்போம் டி, இந்த நிலா வெளிச்சத்தில குளிர்காத்துல சுத்திலும் தென்னைமரமா இருக்க வீட்டு மாடியில பொண்டாட்டி மடியில படுத்திருக்குறதெல்லாம் வரம் டி, எல்லாருக்கும் கிடைக்காது. லெட்ஸ் என்ஜாய்” என்றபடி அவள அணைக்க, தென்னங்கிளையில் தன்னை மறைத்துக் கொண்டது நிலா.

 

உறங்காத கண்களோடும் மனம் முழுக்க பிரார்த்தனையோடும், மகாலட்சுமிக்கும் நந்தகோபனுக்குமான உணவை எடுத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தாள் மைவிழிச்செல்வி.

ஐ.சி.யூவில் இருந்து பனிரெண்டு மணிநேரம் வரை பிழைப்பானா என்ற கேள்வி குறியோடு நிற்கவைத்திருந்தவன் அதன்பின் சுயநினைவிற்கு திரும்பி அனைவரின் மனதிலும் பால் வார்த்திருந்தான்.

அன்றைய இரவு முழுக்க எவ்வளவு சொல்லியும், செல்வியும் மகாலட்சுமியும் அவனை விட்டு அகல மறுத்துவிட, அவர்களுக்கு துணையாக நந்த கோபனும் மருத்துவனையிலேயே தங்கியிருந்தார்.

விடியற்காலையில் வந்த மருத்துவர் அபாயம் எதுவும் இல்லை விரைவில் அவன் பூரண நலம் பெற்றிடுவான் என்று கூறவும், இரவு முழுக்க அவள் கொண்டிருந்த விரதம் விடிகையில் அவள் கை சேர்ந்திருந்தது.

அதன் பின்பே வீட்டிற்கு சென்று குளித்து மாமனார் மாமியாருக்கான மதிய உணவோடு வந்து கொண்டிருக்கிறாள். சரியாக அறைக்கதவை திறக்க கை வைக்கையில் உள்ளிருந்து வந்த குரலில் அப்படியே நின்று விட்டாள்.

“ஏன் மகா இன்னுமா உனக்கு புரியலை, இத்தணை நாளா நல்லா இருந்த பிள்ளை நிச்சயம் செஞ்ச உடனே படுத்த படுக்கையாயிட்டானே, முகூர்த்த கால் ஊன்றின அன்னைக்கே இப்படி நடக்குதுன்னா, புத்தியுள்ளவங்களுக்கு புரியவேணாமா, இதுக்குமேல உனக்கு என்னத்தை தெளிவா எடுத்து சொல்றது, சூதானமா நடத்துக்கோடியம்மா” என்றபடியே வெளியே வந்த அந்த வெள்ளைத்தலைக் கிழவி வாசலில் செல்வியை சற்றும் எதிர்பார்க்கவில்லை போலும்.

முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் நின்றிருந்தவளின் கண்களை சந்திக்க முடியாமல் தலை குனிந்தவாறே சென்றுவிட ஆராயும் கண்களோடு உள்நுழைந்தாள் செல்வி.

அங்கே தேம்பியபடி அமர்ந்திருந்த மகாலட்சுமியைக் கண்டவள், “ அத்தை அழுதுகிட்டே இருக்காதீங்க, அவருக்கு ஒண்ணும் ஆகாது, எழுந்து வந்து சாப்பிடுங்க” என்றாள்.

ஊரார் வாய்க்கு தன் மகனும் மருமகளும் அவலாகி விட்டனரே, அனுபவிக்கும் துன்பம் நமதென்றாலும் அதை பகிர்ந்து கொள்ளாவிடினும், இப்படி அதை அதிகப்படுத்தவெனவே வருபவர்களை என்ன செய்வது, என்ற ஆற்றாமையில் அமர்ந்திருந்தவருக்கு, அந்த நேரம் சாப்பிட அழைத்த செல்வியின் அழைப்பு எரிச்சலாகவே இருந்தது.

”ஆமா வாழவேண்டிய பிள்ளை ஓய்ஞ்சு போய் படுத்துட்டான் சாகப்போறவ எனக்கென்ன இப்ப சாப்பாடு “ என்றுவிட்டார்.

யார் என்ன சொன்னாலும் அவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு நடக்கும் ரகம் மகாலட்சுமி கிடையாது என்பதை அறிந்திருந்தவள், அவரிடம் இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லை, குழப்பம் கொண்ட மனது அதை அப்படியே எதிர்பதத்தில் எடுத்துக் கொள்ள தன்னை திருமணம் செய்து வைக்க முடிவு செய்ததால் தான் மைத்ரேயனுக்கு இப்படியெல்லம் நடந்துவிட்டது என்று மகாலட்சுமி நினைக்கிறார் போலும் என்று புரிந்து கொண்டுவிட்டாள்.

எத்துணை கட்டுப்படுத்தியும் தன்னை மீறி தரையில் விழுந்திட்ட துளிகளை மறைத்தபடியே அங்கிருந்து வெளியேறிவிட்டாள், மறந்தும் கூட மைத்ரேயராஜா இருக்கும் பக்கம் அவள் திரும்பவில்லை.

தன்னை பிரிந்திருந்தால் அவன் நன்றாக இருப்பான் என்று எண்ணிக் கொண்டு, மனதைக் கல்லாக்கியபடி வெளியேறிவிட்டாள்.

நேரம் கடந்து கொண்டே இருந்தது, இரவு உணவோடு வந்த அவளின் தந்தை ராஜேந்திரன், ”இந்த பொண்ணு எங்க போனா மா, அவளுக்கு எத்தனை முறை தான் கால் செய்யுறது, போனையே எடுக்கமாட்டேங்குறா” என்றபடி இரவு உணவை அங்கிருந்த டேபிளில் வைத்தார்.

“செல்வி வீட்டுக்கு வரலையா” என்று மகாலட்சுமியும்,

“செல்வி இங்க இல்லயா” என்று ராஜேந்திரனும் கேட்டுக் கொள்ள உணவுக்கூடையின் ஆக்கிரமிப்பில், டேபிளின் ஓரத்தில் இருந்த அவளின் அலைப்பேசி கீழே விழுந்து நான் இங்கு இருக்கிறேன் என்று அவர்களுக்கு காட்டியது.

”அய்யோ இது செல்வி போன் அவகிட்ட போனும் இல்லையா, எங்க போயிட்டா இந்த பொண்ணு” என்று புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அதிர்ச்சியில் நின்றிருக்க, இப்படி அவசரகதியில் முடிவெடுக்கும் பெண்ணல்லவே, எங்கேனும் கோவிலுக்கு சென்றிருக்கலாம் இல்லை மருத்துவரைப்பார்க்க சென்றிருக்கலாம் என்று ஆளுக்கொரு இடமாய் சென்று தேடத்துவங்கினர்.

மயக்கம் தெளிந்த அந்த நேரம் கண்விழித்த ராஜாவுக்கு யாருமில்லாத அறையும் அவனருகில் கிடந்த அவளின் அலைபேசியும் தான் அவன் எங்கிருக்கிறான் என்று காட்டியது.

ஆனால் அவள் இனி தன் வாழ்வில் இல்லை என்று அறியாதவனாய் அவள் வருகைக்காய் காத்திருந்தான்

“ஏன் டா நீ ஏ.சி ரூம் இல்லாம தூங்க மாட்டியாமே அப்படியா,” முகத்திலிருந்த கருப்புத்துணியை அவிழ்க்காமலேயே கேட்டுக் கொண்டிருந்தான் மகேந்திர பூபதி.

“நான் யாருன்னு தெரியாம விளையாடிகிட்டு இருக்க” கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் தரையில் கிடந்த வேந்தன் வாய் கட்டப்படதாதால் கத்திக் கொண்டிருந்தான்.

“நீ யாருன்னு தெரியாம உன்னை கடத்தி வச்சு விளையாட நான் என்ன முட்டாளா, நல்ல தெரிஞ்சு தான் கடத்திருக்கேன், மதுராபுரி வேந்தன்”

“ஓ பேரு சொல்லிக் கூப்பிடுறியா”

“அடச்சீ என்னயா இவ்வளவு மொக்கையா கேள்வி கேக்குற, ரொம்ப பழைய படத்தில வர்ற வில்லன் மாதிரி, கொஞ்சமாச்சும் ட்ரெண்டுக்கு தகுந்த மாதிரி பேசுவியா”

“ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்”

“ஆரம்பிச்சுட்டான், ஹை பிச்சில கத்துனா பாத்தாது, கொஞ்சமாச்சும் மூளையை யூஸ் பண்ணுடா, அதெப்படி உன்கிட்ட இருக்க அடியாளுங்க கூட உன்னை மாதிரியே இருக்கானுங்க, ஒருத்தனுக்கு கூட அறிவில்லை” என்ற பூபதி உன்னை இதுக்கு மேல கத்தவிட முடியாது, என்று வாயில் அந்த பேண்டேஜ் துணியால் ஒட்டிவிட்டான்.

உன்னை இவ்வளவு தூரம் மதிச்சு பேசிகிட்டு இருந்தேன்னு தெரிஞ்சா என்னை உதைப்பாங்க, சுத்திலும் காடு தான் எவ்வளவு வேணுனாலும் கத்து, நெறைய லவ் ஜோடி இங்க தான் வந்து தற்கொலை பண்ணிகிட்டாங்களாம், அவங்க கூட பேசிகிட்டு இரு, ஹாப்பி டெவிள் மீட்” என்றபடி கதவை சாற்றிவிட்டு வெளியேறிய பூபதி தன் முகத்திரை அவிழ்க்கவும் அலைப்பேசி அடிக்கவும் சரியாக இருந்தது.

திரையில் தலை சரித்து ஒற்றை புருவம் உயர்த்தி கிறங்கடிக்கும் பார்வையை வீசியபடி கை நீட்டி அழைத்துக்கொண்டிருந்தாள் மலர்.

அழைப்பை எடுக்காமல் விட்டவன் மெல்லிய புன்னகையை பூசிக் கொண்டு சென்றுகொண்டிருந்தான்.

இரவின் இருளில் செல்லும் பாதை வெகு நீளமாய் இருந்தது.

Advertisement