Advertisement

அத்தியாயம் 1

பல தரப்பு மக்களின் வாழ்விடமாக திகழும் சென்னை மாநகரின் கிழக்கு கடற்கரை சாலையில் முன்னூறு ஏக்கர் பரப்பளவை விழுங்கி வளர்ந்திருந்தது சென்னையின் பழமை வாய்ந்த மற்றும் புகழ்பெற்ற ‘ஏ.கே. கல்வி நிறுவனம்’.

பிரமிக்க வைக்கும் கட்டிட அமைப்புடன் நான்கு தளங்களை தாங்கி நின்றது அங்கிருந்த ஒவ்வொரு கட்டிடமும். ஒவ்வொரு பிரிவின் நடுவே மரங்களும் வண்ண மலர்களும் நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்தது. அவற்றை பார்க்கும் போதே தெரிந்துவிடும் அதை நிர்வாகிப்பவர் ஒரு கலாரசிகரென்று.

நுழைவாயிலிலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் உள்ளே அமைந்திருந்தது அக்கல்லூரியின் நிர்வாகி கட்டிடம். அக்கட்டிடத்தின் வலது பக்கம் மருத்துவ கல்லூரியும் இடது பக்கம் பொறியியல் கல்லூரியும் அவற்றிலிருந்து சற்று தள்ளி கலை கல்லூரி கட்டிடமும் சட்டக்கல்வி கல்லூரி கட்டிடமும் அமைந்திருந்தது. சுமார் பத்தாயிரம் மாணவர்கள் படிக்கும் இந்தியாவின் முதன்மை கல்லூரிகளில் ஒன்று தான் ஏ.கே குழும கல்லூரிகள். சென்னை மட்டுமின்றி வேறு ஊர்களிலிருந்தும் ஏன் வேறு மாநிலங்களிலிருந்தும் கூட பல மாணவ மாணவிகள் அங்கு தங்களின் படிப்பை மேற்கொண்டுள்ளனர்.

பற்பல எதிர்கால ஆசைகளுடன் கண்களில் கனவு மின்ன இன்று முதல் நாள் கல்லூரியில் அடி எடுத்து வைத்தனர் மாணவ மாணவியர். அன்று முதல் நாள் என்பதால் முதலாம் ஆண்டு சேர்ந்திருந்த மாணவர்கள் அனைவரும் கல்லூரியின் ஆடிட்டோரியத்தில் அமர வைக்கப்பட்டிருந்தனர்.

அமர்ந்திருந்த அனைவரும் தங்கள் பக்கத்தில் அமர்ந்திருந்த மாணவர்களுடன் பேசி அறிமுகமாகிக்கொண்டிருக்க ஆராத்யா மட்டும் கண்களை சுழலவிட்டபடி அமர்ந்திருந்தாள். அவள் அருகிலிருந்தவனோ அவ்வயதிலே ஆண்மகனுக்குரிய கம்பீரத்துடன் சிறு கீற்று புன்னகையை இதழில் தவழவிட்டபடி அமர்ந்திருந்தான். அவன் ஆராத்யாவுடைய பாலிய ஸ்நேகிதன் அக்னி, அவளுக்கு மட்டும் ‘அகி’. அக்னி, பெயருக்கு ஏற்றார் போல் தனித்து நின்று செயல்படுபவன்.

அக்னிக்கு வலதுபுறத்தில் அமர்ந்திருந்த ஆராத்யா அவன் தோளில் இடித்து “அகி அங்க பார்” என அவர்கள் அமர்ந்திருந்த வரிசைக்கு இரண்டு வரிசை முன் அமர்ந்திருந்தவனை சுட்டிக்காட்டி “அவன் செம்மையா இருக்கான்ல” என்று இளிக்க, அவள் காட்டிய திசை நோக்கி சரிந்தவன் அங்கு அமர்ந்திருந்த ஆத்ரேயனை பார்த்து இறுகினான். யார் முகத்தை இனி காணவே கூடாது என்றெண்ணினானோ அவனே அமர்ந்திருந்தான். அதுவரை இதழில் தவழ்ந்திருந்த புன்னகை மறைந்து இறுக்கம் குடிக்கொண்டது ஆனால் அதை கவனிக்கும் நிலையில் அவள் இல்லை.

தன் இடது பக்கத்தில் அமர்ந்திருந்த ஆராத்யாவை முறைத்தவன் “ஏன் ஆரு.. இங்க வேற பசங்களே இல்லையா.. அவன் மட்டும் தான் உன் கண்ணுக்கு தெரியுறானா” என்று எரிந்து விழ, அவனை ஒரு மாதிரி பார்த்தவள் பின் என்ன நினைத்தாலோ அவனிடம் பேசாது அவளின் இடது பக்கம் அமர்ந்திருந்த நேஹாவின் தோளை சுரண்டினாள். அவள் அழைத்தவுடன் அவள் பக்கம் சரிந்த நேஹா “என்ன கிட்டி” என்று கிசுகிசுப்பான குரலில் கேட்க இவளும் அதே குரலில் “அங்க பாரு” என்று மீண்டும் ஆத்ரேயனை கண்களால் சுட்டிக்காட்ட நேஹாவும் அவனை பார்த்தாள். அலையலையான கேசத்தை இடது கையால் கோதியபடி தன் அருகில் அமர்ந்திருந்தவர்களிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்தான் ஆத்ரேயன். அவனை பார்த்துவிட்டு மீண்டும் ஆருவின் பக்கம் திரும்பியவள் “இப்போ அவனுக்கென்ன” என்று புரியாமல் கேட்க அதில் தலையில் அடித்துக்கொண்ட ஆராத்யா அவள் காதுகளில் “பிக்ஸ் பண்ணிட்டேன் கிட்டி அவன் தான் என்னோட க்ரஷ்” என்று வெட்க புன்னகை சிந்த, நேஹா தலையில் அடித்துக்கொண்டாள் ‘வந்த முதல் நாளேவா’ என்ற பார்வையோடு.

நேஹா ஆராத்யாவின் ஆருயிர் தோழி. ஆராத்யா நேஹா மற்றும் கதிர், (இவர்களின் கூட்டாளி) பொருத்தவரை அம்மா அப்பா அக்னி இவர்கள் தான் அவர்களின் உலகம். அவர்கள் வாழ்க்கையின் எந்த ஒரு முடிவையும் அக்னியிடம் கேட்காமல் எடுக்க மாட்டார்கள் அப்படி ஒரு நம்பிக்கை அவன் மேல். இதோ இப்போது இவர்கள் என்ன படிக்கவேண்டும் எங்கு படிக்க வேண்டும் என்ற முடிவு கூட அவன் எடுத்தது தான் அந்த அளவிற்கு அவர்கள் மூவரின் வீட்டிலும் அவன் மேல் நம்பிக்கை இருந்தது. அவர்கள் அனைவரையும் பொருத்தவரை அக்னி எடுக்கும் முடிவுகள் என்றுமே தவறாகாது. அதே போல் தான் அக்னி அவர்களுக்கு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வான். என்னதான் அவர்களின் மீது அக்னி அளவுகடந்த அன்பு வைத்திருந்தாலும் எப்போதும் அவர்களிடம் சற்று கண்டிப்பாக தான் நடந்துகொள்வான்.

இவர்கள் இங்கு பேசிக்கொண்டிருக்க, ஆருவின் கண்கள் மட்டும் இரண்டு வரிசைக்கு முன் அமர்ந்திருந்த ஆத்ரேயனின் மேல் தான் இருந்தது. அவள் பார்வை உணர்ந்து அக்னி அவளை முறைத்தபடி அமர்ந்திருக்க, நேஹா ஆருவின் தோளில் இடித்து “அடியே அக்னி உன்ன அந்த முறை முறைக்கிறான் நீ என்னடான்னா முன்னாடி உட்கார்ந்திருக்க அவனை பார்த்திட்டு இருக்க” என மெல்லிய குரலில் கூற, அதை சிறிதும் சட்டை செய்யாதவள் “அட அவன் கிடக்குறான் கிட்டி” என்றவள் மீண்டும் கண்களை அலைபாய அமர்ந்திருந்தாள். அவள் உயரத்திற்கு சரிந்த அக்னி “கொஞ்சம் ஸ்டேஜை பார்த்தா நல்லா இருக்கோம்” என்று அடிக்குரலில் கோபத்தை அடக்கிக்கொண்டு கூற,
ஆரு அசால்டாக “நல்லா இருந்தா பார்க்க மாட்டுமா..” என பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்க அக்னி அவளை முறைத்துவிட்டு சற்று சாய்ந்து நேஹாவை அழைத்தவன் “ஹே லூசு, இவ இப்படி பண்றா.. இதெல்லாம் கேட்க மாட்டியா” என முறைக்க, நேஹா தான் இவர்களுகிடையில் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி அமர்ந்திருந்தாள்.

பின் அக்னி பார்ப்பதை உணர்ந்த நேஹா “டேய் நான் என்னடா பண்ண, சொன்னா கேட்க மாற்றா, சினிமா டயலாக்லாம் பேசுறா கேவலமா” என தலையில் அடித்துக்கொள்ள, அக்னி அவளை முறைத்துவிட்டு திரும்பினான்.

நேஹா ‘அவ பண்ணதுக்கு என்ன முறைக்கிறான் லூசு பய’ என மனதினுள் அவனுக்கு அர்ச்சனை செய்தவள் தன் அருகே அமர்ந்திருந்த கதிரை திரும்பி பார்த்தாள். கதிர் மேடையை பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்க, அவன் காதில் “டேய் குரங்கே அப்படி என்ன இருக்குன்னு அந்த ஸ்டேஜை அப்படி பார்த்திட்டு உட்கார்ந்திருக்க”
கதிர் “ஏன் காதுல கத்துற.. அங்க பாரு அந்த பொண்ணை, செம்மையா இருக்குல” என ஒரு பெண்ணை காட்டி கேட்க, நேஹா அவனை கேவலமாக பார்த்துவிட்டு “டேய் அது பொண்ணு இல்ல ப்ரொபசர்.. ஆன்டியா பாக்குறேன் எருமை.. சீ” என தலையில் அடித்துக்கொண்டு திரும்பினாள்.
கதிர் “என்னது ப்ரொபசரா.. பரவால்ல, கடவுளே அந்த லேடி என் கிளாஸுக்கு வரனும்” என்று வேண்டிக்கொள்ள, அக்னி ஆரு, நேஹா மூவரும் “தூ.. மானம் கெட்டவன்” என்றிட, அதை துடைத்துவிட்டு நேஹாவிடம்
“உனக்கு பொறாமை அவங்க உன்னைவிட அழகா இருக்காங்கன்னு”
“போட டேய்” என்றவள் அமைதியாக திரும்பிக்கொண்டாள். ஆரு ஆத்ரேயனை பார்த்துக்கொண்டிருக்க, அக்னி அவளை முறைக்க, நேஹா இவர்களிடம் மாட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

முன் வரிசையில் அமர்ந்திருந்த ஆத்ரேயன் தீவிரமாக மேடையில் பேசிக்கொண்டிருந்த பேராசிரியரை கவனித்துக்கொண்டிருக்க, அவன் அருகே அமர்ந்திருந்த கிஷோர் (ஆத்ரேயனின் உயிர் நண்பன்), ‘என்னடா நடக்குது இங்க’ என்பது போல் அமர்ந்திருந்தான்.

கிஷோர் “மச்சா இன்னும் எவ்ளோ நேரம்டா இந்த சொட்ட பாட்டு பாட போறான்” என பாவமாக கேட்ட,
ஆத்ரேயன் “இன்னும் இருபது ஸ்லைட் இருக்கு சோ 40 நிமிஷம் அட்லீஸ்ட் ஆகும்” என்றிட,
கிஷோர் நெஞ்சில் கைவைத்துக்கொண்டு “ஏது.. நாப்பது (40) நிமிஷமா.. இதுக்குமேல ஒரு நிமிஷம் கூட என்னால முடியாது”
“ஏன் சாக போறியா” என ஆத்ரேயன் எவ்வித உணர்வையும் முகத்தில் காட்டாது கேட்க,
கிஷோர் “நான் செத்தே போனாலும் நீ அசர மாட்டேன்னு எனக்கு தெரியும்”
“…..”
“டேய்”
“என்னடா வேணும் உனக்கு”
“சாப்பாடு வேணும்.. எனக்கு பசிக்கிது மச்சா”
“ஆடிட்டோரியதுல சாப்பிட கூடாது, மூடிட்டு இரு”
‘இவன் வேற ரூல்ஸ் ரங்கசாமியா இருக்கானே’ என நொந்தவன் “மச்சா அந்த சொட்ட தலை நல்லா கொட்டிக்கிட்டு வந்திருப்பான் ஆனா உன் கிச்சா பச்சை தண்ணி குடிக்கில டா” என அவனை பார்க்க,
“அப்போ காலைல சிக்கன் பஃப், ஜூஸ், சிப்ஸ் எல்லாம் சாப்பிட்ட எருமை யாரு” என்று புருவமுயர்த்த, கிஷோர் “மச்சான் நான் தண்ணி தான் குடிக்கிலன்னு சொன்னேன், சரி அதெல்லாம் விடு இப்போ எனக்கு பசிக்கிது” என்று புலம்ப, ஆத்ரேயன் அமைதியாக அமர்ந்திருந்தான்.

கிஷோர் “டேய் நான் நாப்பது வார்த்தை பேசுனா, நீ நாலு வார்த்தை தான் பேசுவேனு சபதம் எடுத்திருக்கியா” என மூச்சு வாங்க முறைக்க,
ஆத்ரேயன் “ஹான்.. அது அவரு தப்பா சொல்றாரு டா, அவர் சொல்றதுலே லாஜிக்கே இல்ல” என மேடையில் பேசிக்கொண்டிருந்தவரை கைகாட்டி, அவனை முறைத்த கிஷோர் “டேய் இங்க ஒருத்தன் நாக்கு தள்ள பேசிட்டு இருக்கேன், நீ என்னடான்னா அந்த சொட்ட தலை பேசுறத இவ்ளோ சீரியஸா கேட்குற, அதுவும் இல்லாம அதுல தப்பு வேற கண்டுபிடிக்கிற” என்று குற்ற
பத்திரிகை வாசிக்க
ஆத்ரேயன் “டேய் நீ போடுற மொக்கைய கேட்குறதுக்கு அந்த சொட்ட பேசுறதையே கேட்பேன்” என திரும்பிட
கிஷோர் “பெருத்த அவமானம்” என்று வாராத கண்ணீரை துடைத்துக்கொண்டான். கிஷோர் அமர்ந்து புலம்பிக்கொண்டிருக்க, பொறுமையை இழந்த ஆத்ரேயன் “என்ன கிச்சா உனக்கு.. சாப்பிடனும் அவ்ளோ தான”
“ஆமா என் தெய்வமே.. ஆமா” என்றிட, அவனை இழுத்துக்கொண்டு சென்றான். மொத்த ஆடிட்டோரியமே அமைதியாக இவர்களை தான் பார்த்தது, ஆத்ரேயன் கிஷோருடன் நடக்க அவர்களை தடுத்த நெல்சன் (அப்பாவி ப்ரொபசர்) “தம்பி இப்படி பாதில போக கூடாது உள்ள போங்க”
ஆத்ரேயன் “ஐயோ சார், இதுக்குமேல இவன் உள்ள இருக்க கூடாது” என்று தீவிரமாக பேச ,
நெல்சன் “ஏன்பா, அவன் ஏன் உள்ள இருக்க கூடாது”
“சார் இவன் ரொம்ப நல்லா படிக்கிற பையன்”, கிஷோர் ‘யாருடா அது’ என்று பார்க்க, ஆத்ரேயன் அவனை பார்த்து கண் அடித்தான் அதை புரிந்துகொண்டு கிஷோர் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டான்.
நெல்சன் ஆத்ரேயன் கூறியது புரியாமல் “அதுக்கும் அவன் உள்ள இருக்குறதுக்கும் என்ன சம்மந்தம்”
“அதான் சார், இவன் நல்லா படிக்கிற பையன்.. படிச்சிட்டே இருக்கிறதால அவன் சாப்பிட கூட மாட்டான்.. இன்னிக்கும் முதல் நாள்னு சாப்பிடாம வந்துட்டான் அதான் இவனை திட்டி சாப்பிட கூட்டிட்டு போறேன்”
“ப்ரோக்ராம் முடிச்சிட்டு போங்க பா”
“அய்யோ புரிஞ்சிக்கோங்க சார், இவனுக்கு ஆல்ரெடி லாஸ்ட் ஸ்டேஜ் அல்சர்.. இன்னும் கொஞ்ச நாள் விட்டா கேன்சரா மாறிடும்” என்று பொய்க்கு மேல் பொய் சொல்ல,
கிஷோர் மனதில் ‘சோறு கேட்டது குத்தமா, இப்படி கேன்சர் ஸ்டேஜுக்கு கூட்டிட்டு போய்ட்டானே’ என்று புலம்பினான் (மனதிற்குள் தான்).
ஆத்ரேயன் “இப்போ கூட்டிட்டு போகட்டுமா சார்” என்று அவரை பார்க்க, அவர் தான் என்ன செய்வது என்று தெரியாமல் முழழிக்க இவர்கள் பேசுவதை கேட்டு அங்கு வந்த குமரன் (இவர்கள் துறையின் பேராசிரியர்) “டேய் டேய் பொய் சொல்லலாம் ஆனா ஏக்கர் கணக்குல பொய் சொல்ல கூடாது, இவனை பார்த்தா பாஸ் ஆகுற ரேஞ்சல கூட இல்ல”
“அவ்ளோ தேஜஸ் தெரியுதா என் முகத்துல” என்று கிஷோர் கேட்க, குமரன்
“பல்ல பேத்துருவேன்.. போய்ட்டு சீக்கிரம் வாங்க”
கிஷோர் “தெய்வமே என் பசி உங்களுக்காவது புரிஞ்சிதே” என்று தலைமேல் கைவைத்து கும்பிட, குமரன் சிரித்தான்.

ஆத்ரேயன் சிறுநகையுடன் “தேங்க்ஸ் அண்ட் சாரி சார், இவன் ரொம்ப பசிக்கிதுன்னு சொன்னதால தான்” என்றிட
குமரன் “பரவால்ல ஆத்ரேயா போய்ட்டு வாங்க”
ஆத்ரேயன் “உங்களுக்கு எப்படி என் பெயர் தெரியும்” என்று கேட்க அவனை பார்த்து புன்னகைத்த குமரன் “நான் உங்க டிப்பார்ட்மெண்ட் ஸ்டாஃப் தான், உன்னோட அப்ளிகேஷன் பார்த்தேன், அவுட்ஸ்டேண்டிங் ஸ்டுடெண்ட் வேற, அதான் உன்னோட பெரும் முகமும் நியாபகம் இருக்கு” என்றிட,
கிஷோர் “அப்போ கண்டிப்பா உங்களுக்கு என்னையும் தெரிஞ்சிருக்கனுமே” என சட்டை காலரை தூக்கிக்கொள்ள,
குமரன் “டேய் நான் இப்போ கூட உன்னை பத்தி தெரிஞ்சிக்க விரும்பல, பொய் தொல” என்றுவிட்டு உள்ளே சென்றார். இது தான் ஆத்ரேயன் கிஷோருக்காக மட்டும் என்ன வேண்டுமானாலும் செய்பவன், இதை கிஷோரும் நன்கறிவான்.

இவர்கள் செல்வதை பார்த்த ஆராத்யா “கிட்டி கிட்டி அவன் எங்கயோ போறான் டி.. வா நம்மலும் போலாம்”
“அதை அப்படியே உன் பக்கத்துல இருக்கவன் கிட்ட கேளு கிட்டி”
“இதோ” என்றவள் அக்னியிடம்
“அகி, நேஹா காலைல சாப்பிடலையாம், அவளுக்கு தலை சுத்துதாம் பாவம், வாயேன் கேன்டீன் போய் அவளுக்கு ஏதாவது வாங்கி தருவோம்”
“வாயா மூடிட்டு உட்காரல, செவ்வுல திருபுறதுல உண்மையாவே தலை சுத்தும்” என்று பல்லை கடிக்க, ஆராத்யா முகத்தை சுருக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

நேஹா “ஏன் டி என்ன போட்டு கொடுக்குற”
“என்ன மாட்டிவிட்டு என்ன ப்ரோஜினம், அவன் என் செவ்வுல டர்ன் பண்ணிடுவானாம்” என்று கூற
கதிர் “என்னடா ஆரு பேபி, ஏன் உன் முகம் இப்படி தொங்கி போச்சு” என்று பாசமாக கேட்க அவனை நன்றாக மொத்தினாள். அக்னி மற்றும் நேஹா “இப்போ எதுக்கு டி அவனை அடிக்கிற” என்று கேட்க,
ஆரு “ஹான்.. என் பக்கத்துல உட்கார்ந்திருக்க பைத்தியத்தை அடிக்க முடியல அதான் இந்த பைத்தியத்தை அடிக்கிறேன்” என்றாள் உர்ரென்று முகத்தை வைத்துக்கொண்டு.
எப்போதும் அவள் முகம் வாடினால் அவள் கேட்பதை உடனே செய்பவன் இன்று அவள் கேட்டதை முற்றிலுமாக மறுத்தான், அத்தனை கோபம் அவன் மீது.

அக்னி “நீ என்ன சொன்னாலும் நான் உன்னை அவனை பார்க்க விடமாட்டேன்.. டாட்”
“ஏன்டா இப்படி பண்ற, இதுவே எங்க அப்பாவா இருந்திருந்தா வா போய் மாப்பிள்ளைய பார்ப்போம்னு சொல்லி கூட்டிட்டு போயிருப்பாரு” என்று குழந்தை போல் வாதம் செய்ய,
அக்னி “அப்படி பண்ணா, அவருக்கும் ரெண்டு விழும்” என்றான் அசால்டாக.
அவன் முகத்தின் அருகே சென்றவள் “நீயெல்லாம் மனுஷனே இல்ல.. பே” என்று கண்களை உருட்டி கூறினாள், அவள் செய்கை அவனுக்கு சிரிப்பை வர வைத்தாலும் அதை அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான், எங்கு சிரித்தால் அவள் இதை சாக்காக வைத்துக்கொண்டு வெளியே சென்றுவிடுவாளோ என்றெண்ணி.

தொடரும்…

Advertisement