Advertisement

                  அத்தியாயம் 45

நட்பு மற்றும் காதலுக்கிடையே நாட்கள் தெளிந்த நீரோடையாய் கழிய, நண்பர்கள் அனைவரும் வாழ்வின் அடுத்த கட்டத்தில் அடி எடுத்து வைத்திருந்தனர். ஆம் கதிர் இந்துவின் திருமணம் முடிந்த கையோடு அக்னி நேஹாவின் திருமணனும், ஆத்ரேயன் ஆரத்யாவின் திருமணமும் நடைபெற்றிருந்தது.

அன்று ஆத்ரேயனின் அலுவலகத்தில் கணினியில் எதையோ பார்த்தபடி அமர்ந்திருந்த ரேயனின் அறையை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்த ஆராத்யா, “அத்து.. இன்னும் டூ டேஸ்ல இந்தியா ப்ரிவிலேஜ் டெண்டர் இருக்கே.. இன்னும் எந்த கொடேஷனும் அனுப்பாம இருக்க” என்று கேள்வியெழுப்பியவள், தற்போது அவன் அலுவலகத்தில் தான் வேலை செய்துக்கொண்டிருந்தாள்.

ஆரத்யாவின் கேள்வியில் மறுப்பாக தலையசைத்தவன் “இல்லமா.. ஏ.ஆர் குரூப்ஸ் இந்த டெண்டர்ல கலந்துக்க போறதில்லை” என்றான் அப்போதும் கணினியில் பதிந்திருந்த விழியை அகற்றாது. ரேயனின் கூற்றில் அதிர்ந்தவள் “என்ன சொல்லுற அத்து.. இதுக்காக நீ மூனு மாசம் உழைச்சிருக்க.. எதுக்கு திடீர்னு இந்த முடிவு” என்று புருவம் சுருக்க, “சொல்லுறேன்” என்றான் கண் மூடி திறந்து.

அதே சமயம் அக்னியின் அலுவலகத்தில், நேஹாவிற்கு எதிரில் அமர்ந்திருந்தவன் “நீ என்ன சொன்னாலும் பியூரோ இந்த டெண்டர்ல கலந்துக்க போறதில்ல” என்றான் அழுத்தம் திருத்தமாக. அக்னியின் கூற்றில் குழம்பி அமர்ந்திருந்தவளை அழைத்த ஆரு “கிட்டி.. இந்த அத்துக்கு ஏதோ ஆகிடுச்சு போல.. இந்தியா ப்ரிவிலேஜ் டெண்டர்ல கலந்துக்க மாட்டேன்னு சொல்லுறான்” என்று புலம்ப, நேஹா “இங்கயும் அதே நிலை தான் கிட்டி.. அக்னியும் கலந்துக்க முடியாதுன்னு சொல்லுறான்” என்றாள் அவனை முறைத்தபடி. அக்னியோ அவள் பார்வையை கண்டு உள்ளுக்குள் புன்னகைத்துக்கொள்ள, ஆருவின் அலைபேசியை பிடுங்கிய ரேயன் “அம்மு.. அதெல்லாம் ஒன்னுமில்ல.. எங்களுக்கு அதுல கலந்துக்க விருப்பமில்லை அவ்ளோ தான்.. இதை போய் பெரிய விஷயமா பேசறீங்க.. நீ போ.. போய் வேலைய பாரு” என்றபடி அழைப்பை துண்டித்தான்.

இப்படியே இரண்டு நாட்கள் கழிய, ஆருவும் நேஹாவும் டெண்டர் நடைபெறும் இடத்திற்கு கிளம்பிக்கொண்டிருந்தனர். ஆருவிற்கு அழைத்த நேஹா, “எனக்கு என்னவோ சந்தேகமாவே இருக்கு கிட்டி.. இவ்ளோ பெரிய டெண்டர்ல ஏன் இவங்க ரெண்டு பேரும் கலந்துக்கல” என்று கேள்வியெழுப்ப, ஆரு “எனக்கும் அது தான் புரியல.. கேட்டாலும் சொல்ல மாட்டானுங்க” என்றவள் தொடர்ந்து “சரி கிட்டி, நான் கிளம்பிட்டேன்.. கொஞ்ச நேரத்துல வந்திடுறேன்” என்றிட, நேஹா “நானும் கிளம்பிட்டேன்.. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுறேன்” என்றபடி அழைப்பை துண்டித்தாள்.

இங்கு கண்ணாடி முன் தயாராகிக்கொண்டிருந்த நேஹாவை பின்னிலிருந்து அணைத்துக்கொண்ட அக்னி “இந்த புடவை உனக்கு அழகா இருக்கு” என்று அவள் கழுத்தில் முகம் புதைக்க, அவனிடமிருந்து விலகியவள் “அதெல்லாம் இருக்கட்டும்.. டெண்டருக்கு எதுக்கு என்ன புடவை கட்ட சொன்ன” என்று வினவ, “சொல்லுறேன்.. சொல்லுறேன்” என்றான். நேஹா “லவ்வரா இருக்கும் போது சொல்லுறதை கூட கல்யாணம் பண்ணிக்கிட்ட அப்பறம் சொல்ல மாட்டுற” என்று இதழை சுழிக்க, சுழித்திருந்த அவள் இதழை தன்வசப்படுத்தியவன்  “ரொம்ப யோசிக்காதடி” என்று அவளை விட்டு விலகி அவள் நெற்றியோடு நெற்றி முட்ட, பெண்ணவளின்  கன்னக்கதுப்புகளோ அவன் தீண்டலில் ரத்தமென சிவந்துவிட்டது. பின் அவள் விரலோடு தன் விரல்களை பிணைத்துக்கொண்டவன் “கிளம்பலாமா”  என்று வினவ “ம்ம்” என்றவள் அவனுடன் இணைந்துக்கொண்டாள்.

அதே சமயம் ரேயனின் வண்டி செல்லும் திசையை கவனித்த ஆரு “என்ன வேற ஏதோ வழில போற.. ஆல்ரெடி லேட் ஆகிடுச்சே” என்றிட, ரேயன் “அதை விட முக்கியமான ஒரு இடத்துக்கு போறோம்” என்று பீடிகை போட்டான். ஆரு “சஸ்பென்ஸ்லாம் பலமா தான் இருக்கு” என்று கேலி செய்ய, அதில் மெலிதாக புன்னகைத்தவன் அவளிடம் பதிலளிக்காது வண்டியை செலுத்த, அவள் தான் அவனிடம் பேசி பேசி ஓய்ந்து போனாள்.

சிறிது நேரத்தில் ஆண்கள் இருவரின் வண்டியும் ஒரே கட்டிடத்தின் முன் வந்து நிற்க, அக்னியின் வண்டியிலிருந்து இறங்கிய நேஹா “என்ன சொல்லி வச்ச மாதிரி ஒரே நேரத்துல வரீங்க” என்று கேள்வியெழுப்ப, ஆண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தனர். நேஹாவின் அருகே வந்த ஆரு “நீ என்ன கேட்டாலும் அவங்க பதில் சொல்ல போறதில்லை கிட்டி.. இப்படியே லூசு மாதிரி சிரிச்சிட்டு தான் இருக்க போறாங்க” என்னும் போதே அங்கு வந்த கிஷோர் “டேய்.. எவ்ளோ நேரம்டா.. சீக்கிரம் வாங்க.. உள்ள எல்லாரும் காத்திட்டு இருக்காங்க” என்றான்.

கிஷோருடன் இணைந்துக்கொண்ட ஆரு “பார்ட்னர்.. நீயாச்சு இங்க என்ன நடக்குதுன்னு சொல்லு.. இவங்க ரெண்டு பேரும் சொல்லவே மாட்டுறாங்க” என்றாள் ரேயன் மற்றும் அக்னியை சந்தேகமாக பார்த்தபடி. ஆருவின் தலையில் வலிக்காத வண்ணம் ஒரு கொட்டு வைத்த அக்னி “கொஞ்சம் பொறுமையா இருடி.. நாங்களே சொல்லுவோம்” என்று முன் செல்ல, பெண்கள் இருவரும் அவர்களை தொடர்ந்து சென்றனர்.

கட்டிடத்தின் பணிகள் முடியும் தருவாயில் இருக்க, ஆங்காங்கே வேலையாட்கள் கட்டிட பணியை செய்துகொண்டிருந்தனர். கட்டிடத்தின் வாயிலில் ‘ஹைவ் கன்ஸ்ட்ரக்ஷன்’ என வெள்ளி எழுத்துக்களால் பிரம்மாண்டமாக பொறிக்கப்பட்டிருந்தது. கட்டிடத்தின் முகப்பில் அவர்களின் பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் அவர்களுக்காக காத்த்துக்கொண்டிருந்தனர்.

ரேயன் வந்து நின்றவுடன் கண்ணன், “என்ன விஷயம் ரேயா.. இது யாரோட கம்பெனி” என்று வினவ, அக்னி “நானும் ரேயனும் சேர்ந்து ஒரு முடிவெடுத்திருக்கோம்” என்றான் சம்மந்தமே இல்லாது. நேஹா “ப்ச்.. அவர் என்ன கேட்டாரு.. நீ என்ன சொல்லுற” என்று வினவ, அதில் மெலிதாக புன்னகைத்த ரேயன் “இனி ஏ.ஆர் அண்ட் பியூரோ தனியா இயங்க போறதில்லை” என்றிட, ஆரு “இப்போ கம்பெனிய நடத்தாமா ரெண்டு பேரும் என்ன பண்ணுறதா இருக்கீங்க” என்றாள் இடுப்பில் கைவைத்தபடி.

அக்னி “நடத்த போறதில்லைன்னு நாங்க சொல்லவே இல்ல.. தனியா நடத்த போறதில்லன்னு தான் சொல்லுறோம்.. ஏ.ஆர் அண்ட் பியூரோ சேர்ந்து ஹைவ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் அப்படின்ற பெயர்ல இனி ஒன்னா வர்க் பண்ண போகுது.. ஹைவ் இஸ் கோயிங் டூ பி அ ஜாயின்ட் வெண்ட்சர் ஆப் ஏ.ஆர் அண்ட் பியூரோ” என்று அறிவிக்க, பெண்கள் இருவரும் விழி விரித்தனர். ரேயன் “ஹைவ்ல நானும் அக்னியும் மட்டுமில்ல, ஆரா நேஹா, கதிர், கிஷோர் எல்லாருமே பார்ட்னர் தான்” என்றபடி ஆருவை காண, அவளோ பேசற்று போனாள். அனைவரும் ஒன்றாக இணைந்து இது போல் ஒரு நிறுவனத்தை நிறுவ வேண்டும் என்று அவள் பல முறை நினைத்ததுண்டு ஆனால் அவ்வளவு எளிதில் இது நடந்துவிடாது என்று அவள் நினைத்திருக்க, அதை நிறைவேற்றி வைத்திருந்தான் அவளவன்.

அக்னி “அதுமட்டுமில்ல, படிக்க ஆசைப்பட்டு வீட்டு நிலமையாள படிக்க முடியாம கஷ்டப்படுற பசங்களுக்கு உதவுற வகைல, ஹைவோட மாச வருமானத்துல இருந்து இருபது சதவீதம் கொடுக்குறதா முடிவு பண்ணிருக்கோம்” என்றிட, நேஹாவிற்கோ அவன் கூறியதை கேட்டு கண்கள் கலங்கிவிட்டது. அவளுக்கு தான் இது போன்ற சமூக சேவைகள் என்றால் உயிர் மூச்சாயிற்றே.

கண்ணன் “இது ஒரு கிரேட் மூவ்.. உங்க ரெண்டு பேரையும் நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்குடா” என்றவர் இருவரையும் அணைத்து விடுவிக்க, பெரியவர்கள் அனைவரும் தத்தமது வாழ்த்துகளை தெரிவித்தனர். கௌதம் மற்றும் சித்துவும் கூட தங்கள் வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர்.

ராகுல் “அப்பறம் அண்ணே.. எப்படியோ ஹைவ்கும் நாங்க தான சீஃப் டிசைனர்” என்று மிதப்பாக கிஷோரிடம் வினவ, அவனை மேலிருந்து கீழ் ஒரு பார்வை பார்த்து வைத்த கிஷோர் “முதல இந்த கொசுவை அடிச்சு விரட்டனும்” என்றிட, இப்படியே கேலியும் கிண்டலுமாக அன்றைய நாளும் இனிதே கடந்தது.

அலுவலக வேலைகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போது ரேயனின் தோள் மீது சாய்ந்த ஆரு “ரொம்ப சந்தோஷமா இருக்கு அத்து.. நீயும் அக்னியும் இதெல்லாம் பண்ணுவீங்கன்னு நான் நினைச்சு கூட பார்க்கல” என்றவள் “தேங்க்ஸ்” என்றாள் உணர்வின் பிடியில்.

யாருமற்ற சாலை ஒன்றின் ஓரத்தில் வண்டியை நிறுத்தியவன், தன் கரத்தின் மீதிருந்த பெண்ணவளின் கரத்தை இறுக பற்றி “நானும் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்” என்று அவளை போலவே கூற, அவனை நிமிர்ந்து பார்த்தவள் “எதுக்கு” என்று வினவ, “ம்ம்.. ஏன்னா நீ என் வாழ்க்கைய ரொம்ப அழகா மாத்துன்ன ஏஞ்சல்” என்றான் அவள் நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்து.

×××××××××××

தங்கள் அறையில் உடை மாற்றிவிட்டு வந்த அக்னியை பின்னிலிருந்து இடையோடு கட்டிக்கொண்ட நேஹா “தேங்க்ஸ்” என்றிட அவள் கரத்தை பற்றி முன் இழுத்தவன் “எதுக்காம்” என்று அடக்கப்பட்ட புன்னகையுடன் வினவ, அவன் மார்பில் சாய்ந்துக்கொண்டவள் “உங்க ரெண்டு பேரையும் இப்படி பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.. அதுக்கு” என்றாள்.

நேஹாவின் தலை மீது கன்னம் பதித்தவன் “இது எல்லாத்துக்கும் காரணம் நீயும் ஆருவும் தான்”, அவர்கள் இல்லையென்றால் இத்தகைய ஒரு நட்பு அவன் வாழ்வில் கிடைத்திருக்காது அல்லவா, நேஹாவோ அவனிடம் மனம் விட்டு பேசிக்கொண்டிருக்க, அவளை நெருங்கி அமர்ந்த அக்னி “அதெல்லாம் இருக்கட்டும்.. சண்டை முடிஞ்சிடுச்சு.. எல்லாரும் சேர்ந்தாச்சு.. அடுத்து” என்றிழுக்க, அவன் குரலை வைத்தே அவன் என்ன கேட்க போகிறான் என்பதை உணர்ந்துக்கொண்டவள் “எனக்கு தூக்கம் வருதுப்பா” என்று ஓட பார்க்க, அவள் கரத்தை பற்றி தன்னை நோக்கி இழுத்தவன் அவளை பூக்குவியலாய் அள்ளிக்கொண்டான்.

அதன்பிறகு வாய்மொழிகளுக்கு அங்கு வேலையில்லாமல் போக, முத்த சத்தங்களும் முனங்கல்களுமே அவ்வறையை நிறைந்திருந்தது.

இரண்டு வருடங்களுக்கு பின்                         

“தியா இன்னும் கிளம்பாம என்னடி பண்ணிட்டு இருக்க” என்று தன் சட்டையின் கையை மடித்துவிட்டபடி வந்தவன், மேடிட்ட வயிற்றுடன் ஆரத்தை அணிய சிரம்மப்பட்டுக்கொண்டிருந்த ஆரத்யாவின் அருகே வந்து “இரு இரு.. நான் போட்டு விடுறேன்” என்று ஆரத்தை கையில் எடுத்தான்.

அவளுக்கு அதை அணிவிக்க உதவியவள் கண்ணாடியினூடு அவளை காண, அவளோ தாய்மையின் பூரிப்பில் மின்னிக்கொண்டிருந்தாள். ஒன்பது மாத கருவை சுமந்திருந்தவள் சற்றே பூசியிருக்க, அவளை பின்னிலிருந்து கட்டிக்கொண்டவன் “ரொம்ப அழகா இருக்க” என்று அவள் கன்னத்தில் இதழ் பதித்தான். அவன் கூற்றில் உதட்டை சுழித்தவள் “பொய் சொல்லாத அத்து.. நல்லா குண்டாகிட்டேன்.. பாரு பிளவுஸ் கூட பத்த மாட்டிங்கிது” என்று குறைபட, அவள் கன்னத்தில் பற்கள் படிய கடித்தவன் “எனக்கு இந்த தியாவை தான் ரொம்ப பிடிச்சிருக்கு” என்றான் கண்ணில் காதல் போங்க.

பின் நேரமாவதை உணர்ந்தவன், அவள் அருந்த பால் கொண்டு வந்து “நேத்து நைட் கூட ஒழுங்கா சாப்பிடல.. முதல இதை குடி” என்றிட, அதில் அவனை நன்றாக முறைத்தவள் “நேத்து ஒருவேளை ஒழுங்கா சாப்பிடலன்னு.. ஒரு மணி நேரத்துக்கு ஒரு வாட்டி என்ன சாப்பிட வைக்காதடா” என்றாள் சிணுங்களாக.

“ப்ச்.. நீ பசி தாங்குவ.. ஆனா பாப்பா தாங்க மாட்டா” என்றவன், அவள் மேடிட்ட வயிற்றை வருடி, “என்ன பேபி டால்.. நான் சொல்லுறது உண்மை தான” என்க, அந்த சிசுவும் சிறு அசைவை கொடுத்து அந்த தந்தையை பூரிக்க வைத்தது.

ஆரு “உங்க பொண்ணை கொஞ்சுனது போதும்.. ஆல்ரெடி நேரமாச்சு.. சீக்கிரம் வாங்க” என்று பேச்சை மாற்ற பார்க்க, “ஒரு அவசரமும் இல்ல.. முதல இதை குடி” என்றவன் அவள் குடித்து முடிக்கும் வரை அவளை விடவே இல்லை. பாலை மொத்தமாக குடித்து முடித்தவள், “இப்போ கிளம்பலாமா” என்று முறைக்க, அவனும் அடக்கப்பட்ட புன்னகையுடன்  ஆருவின் கையை பிடித்து அழைத்து சென்றான்.   கண்ணனும் ஷோபனாவும் மண்டபத்திலேயே தங்கி இருந்ததால் இவர்கள் மட்டுமே கிளம்பினர்.

ரேயன் வண்டியை பொறுமையாக செலுத்திக்கொண்டிருக்க, ஆரு “அத்து.. எதுக்கு இப்படி ஊர்வலம் போற மாதிரி ஓட்டுற.. கொஞ்சம் சீக்கிரம் போ.. நம்ம போறதுக்குள்ள கல்யாணமே முடிஞ்சிடும் போல” என அலுத்துக்கொள்ள, “நோ வே தியா.. வயித்துல பாப்பா இருக்கா.. நான் ஸ்பீடா போக மாட்டேன்” என்றவன் பொறுமையாக தான் வண்டியை செலுத்தினான். எப்போதும் சீறிப்பாயும் அவன் மகிழுந்து, அவள் கரு தரித்ததிலிருந்து ஊர்வலமாக தான் சென்றுக்கொண்டிருந்தது.

ரேயனின் அக்கறையில் என்றும் போல் இன்றும் கரைந்தவளுக்கு அவன் மீதிருந்த காதல் காட்டாற்று வெள்ளமாய் கரைபுரண்டோடியது இருப்பினும் அதை காட்டிக்கொள்ளதாவள் அவனை வம்பிழுத்தபடியே அந்த பயணத்தை மேற்கொண்டாள்.

மண்டபத்தின் வாயிலில் ‘கிஷோர் வெட்ஸ் ரித்து’ என பொறிக்கப்பட்டிருக்க, அதனுள் வந்து வண்டியை நிறுத்தியவர்களை வரவேற்றது என்னவோ சிவகுமார் தான். தந்தையை கண்டவள் வேகமாக இறங்க பார்க்க, அவள் கையை பிடித்து தடுத்தவன் “பொறுமையாடி” என்று அதட்ட, “சரி சரி” என்றவள், வண்டியிலிருந்து இறங்கி சென்று தந்தையின் கையை பற்றிக்கொண்டாள்.

ஆரு சிவகுமாருடன் நிலாவின் அருகே அமர்ந்துக்கொள்ள, ரேயன் மணமகன் அறையினுள் நுழைந்தான். வேட்டி சட்டையில் தயாராக அமர்ந்திருந்த கிஷோர், “வாடா லவர் பாய்.. என்ன இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட.. நான் தாலி கட்டி முடிச்ச அப்பறம் தான் வருவன்னு நினைச்சேன்” என்று நக்கலடிக்க, அவன் முதுகில் ஒன்று வைத்தவன் “அடங்குடா” என்னும் போதே அங்கு நுழைந்த அக்னி “கிச்சா ஐயர் உன்ன மேடைக்கு கூப்பிட்டாங்க” என்றவன் அப்போது தான் அங்கு நின்றிருந்த ரேயனை கவனித்தான்.

அக்னி “பார்ரா மாப்பிள்ளை வீட்டாளுங்க இவ்ளோ சீக்கிரம் வந்துட்டாங்க” என்று கதிரிடம் கேலி பேச, அதில் மானசீகமாக தலையில் அடித்துக்கொண்ட ரேயன் “நீயுமாடா” என்று போலியாக சலித்துக்கொண்டான். அக்னி “சரி சரி.. ஆரு எங்க.. நைட் இங்கயே தங்கிருக்கலாம்ல.. இந்த நேரத்துல எதுக்கு அவளுக்கு இந்த தேவையில்லாத அலைச்சல்” என்க, ரேயன்

“சொன்னா கேட்டா தான.. இன்னும் குழந்தை மாதிரி தான் நடந்துக்குறா” என்று குறைப்பட்ட போதிலும் அவன் என்றுமே அவள் ஆசைகளை நிறைவேற்றாமல் இருந்ததில்லை.

ரேயன் “அது இருக்கட்டும் மாப்ஸ், அம்மு எங்க.. குட்டி பையன் எங்க” என்று நேஹாவையும், பிறந்து ஒரு மாதமே ஆன அவன் மகன் ஆரவை பற்றியும் வினவ, “நேஹா ஹால்ல தான் இருப்பா, பாப்பாவும் அவ கூட தான் இருக்கான்” என்றான்.

ரேயன் “சரி கிச்சா நீ மேடைக்கு போ.. நான் குட்டி பையனை பார்க்க போறேன்” என்று அக்னியின் தோள் மீது கைபோட்டு இணைத்துக்கொண்டு வரவேற்பிற்கு சென்றான்.

நேஹா குழந்தையுடன் ஆருவின் அருகே அமர, குழந்தையை தூக்கிக்கொண்ட ஆரு “ஆரவ் குட்டி.. இங்க பாருங்க.. இங்க பாருங்க” என்று கொஞ்ச, நேஹா “உனக்கு எப்படி இருக்கு கிட்டி.. நேத்து நைட் கூட நீ சரியா சாப்பிடவே இல்லையே” என்று வருத்தப்பட, “அத ஏன் கேட்குற.. நைட் இங்க சரியா சாப்பிடலன்னு.. ஒருத்தன் பாலு.. ஜூஸ்.. ப்ஃரூட்ஸ்ன்னு கொடுத்தே என்ன ஒரு வழி பண்ணிட்டான்” என்று கண்களை விரித்து புலம்ப, அவள் கூறிய விதத்தில் நேஹாவிற்கு சிரிப்பு வந்துவிட்டது.

ஆருவின் அருகே அமர்ந்திருந்த நிலா “சொல்லுவடி சொல்லுவ.. உன்ன கண்ணும் கருத்துமா பார்த்துக்குறார்ல அப்படி தான் சொல்லுவ” என்னும் போதே அங்கு ரேயனுடன் வந்த அக்னி “அம்மாவும் பொண்ணும் என்ன சண்டை போட்டுட்டு இருக்கீங்க” என்று வினவ, ரேயன் “வேற என்ன.. நான் அவளை சாப்பிட வச்சே ஒரு வழி பண்ணிடுறேன்னு சொல்லிட்டு இருப்பா” என்றான் மென்புன்னகையுடன்.

நேஹா “எப்படி ரேயன்” என்று விழி விரிக்க, ரேயன் “மாசா மாசம் இதை தான பண்ணிட்டு இருக்கா” என்றிட, அக்னி “உன் நல்லதுக்கு தான சொல்லுறான்” என்று ஏதோ பேச வர, ஆரு “எப்பா சாமி ஆளை விடுங்கடா.. தெரியாம குத்தம் சொல்லிட்டேன்” என்றாள் பாவமாக. சரியாக அந்நேரம், ஐயர் “பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ” என்று குரல் கொடுக்க, அக்னி “நேஹா, ஆரு, ரேயா.. மூனு பேரும் மேல வாங்க” என்றிட, ரேயன் ஆருவின் கையை பற்றிக்கொள்ள, அவனை செல்லமாக முறைத்தவள் “நானே வரேன்” என்றிட, அவன் விட்டால் தானே.

அக்னி நேஹா, ஆத்ரேயன் ஆராத்யா, கதிர் என அனைவரும் மேடை மீது நின்றிருக்க, ரித்துவை அழைத்து வந்த இந்துவும் எட்டு மாத கருவை சுமந்துக்கொண்டிருந்தாள். மணப்பெண் கோலத்தில் வந்த ரித்துவை பார்த்த கிஷோருக்கு தன்னை நினைத்தே பிரமிப்பாக தான் இருந்தது. ரித்துவை காதலித்து கரம் பிடிப்போம் என்பது அவன் நினைத்து கூட பார்க்காத ஒன்று. எப்போதும் அவளுடன் வம்பு வளர்த்துக்கொண்டிருப்பவனுக்கு எப்போதிலிருந்து அவள் மேல் காதல் வந்தது என்று கேட்டால் அது அவனுக்கே தெரியாது. அவள் மீது கடலளவு காதல் இருந்த போதிலும் அவளை வம்பிழுப்பதையே பிரதான வேலையாக வைத்திருந்தான்.

கிஷோரின் அருகே வந்தமர்ந்த ரித்து “என்ன அப்படி சைட் அடிக்குற.. அவ்ளோ அழகா இருக்கேன்னா” என்று ஆர்வமாக வினவ, அவள் காதருகே சரிந்தவன் “ச்ச ச்ச.. உனக்கு அவ்ளோ சீன் இல்ல” என்றிட, அவனை முறைத்தவளோ “தாலி கட்டி முடி.. அப்பறம் வச்சிக்கிறேன்” என்று பல்லை கடிக்க, கிஷோர் ஏதோ கவுண்டர் கொடுக்கும் முன் ஆரு, “ஹே டாம் அண்ட் ஜெர்ரி.. எல்லாரும் உங்களை தான் பக்குறாங்க.. கொஞ்ச நேரம் சண்டை போடாம இருங்க” என்றாள் அதட்டலாக.

ஐயர் “கெட்டிமேளம் கெட்டிமேளம்” என்றிட, மங்கள வாத்தியாகள் முழங்க, பெண்ணவளின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன் சரி பாதியாக ஏற்றுக்கொண்டான்.

சடங்குகள் அனைத்தும் முடிந்த பின் அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொள்ள, கிஷோர் “மச்சா ஒரு குரூப் பிக் எடுக்கலாம் மேல வாங்க” என்றிட, நண்பர்கள் அனைவரும் மேடையேறினர்.

கிஷோர் ரித்து இருக்கையில் அமர்ந்திருக்க, அவர்களின் பின் அக்னி, ஆத்ரேயன், கதிர், கௌதம், சித்து தத்தமது பெற்றோர் மற்றும் துணையுடன் நின்றுக்கொண்டனர்.

புகைப்படகாரரோ “சார் அவ்ளோதான” என்று அந்த கூட்டத்தை பார்த்து மிரள, கதிர் “இப்போதைக்கு இது போதும்” என்றான். புகைப்படம் எடுப்பவன் “ரொம்ப கம்மி கூட்டம் தான்” முணுமுணுக்க, கதிர் “டேய் மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு சத்தமா பேசுற” என்று கேலி செய்ய, அங்கு ஒரு சிரிப்பலை பரவியது.

இதே ஒற்றுமையுடன் அவர்கள் வாழ வாழ்த்தி விடைபெறுவோம்..

                           எபிலாக்   

பல வருடங்களுக்கு உருண்டோடி இருக்க..

   “ஆரவ் இந்த ஹாஸ்டல்ல என்னவோ இருக்குடா” என்று அவர்கள் கல்லூரியின் பெண்கள் தங்கும் விடுதியை பார்த்து கூறிய ஆத்ரேயன் மற்றும் ஆரத்யாவின் ஒரே மகளான அஹானாவை கண்டு அக்னியின் மகன் ஆரவ் தலையில் அடித்துக்கொள்ள, அஹானாவின் கரத்தை பற்றியிருந்த கதிரின் மகள் மகிழோ “என்னடி என்னென்னமோ சொல்லுற” என்று மிரண்டாள்.

மகிழ் பயப்படுவதை கண்டு அஹானாவை உறுத்து விழித்த ஆரவ் “அஹா விளையாடாத.. அவளுக்கு இதெல்லாம் பயம்னு தெரிஞ்சு எதுக்கு இப்படி பண்ணிட்டு இருக்க.. மகிழ் நீ முதல ரூமுக்கு போ” என்று அஹானாவிடம் தொடங்கி மகிழிடம் முடிக்க, அவன் வார்த்தைக்கு கட்டுப்பட்டவள் அஹானாவை பார்த்தபடி தங்கள் அறைக்கு சென்றிட, அவள் செல்லும் வரை அமைதியாக நின்றிருந்த அஹானா, அவள் சென்ற பின் “நான் விளையாடவும் இல்ல.. பொய்யும் சொல்லல ஆரவ்.. என் ரெண்டு கண்ணால பார்த்தேன்.. அதோ அந்த இடத்துல தான் அது இருந்துச்சு.. உடம்பெல்லாம் கருப்பா.. பாதி எரிஞ்சு.. கண்ணெல்லாம் சிவந்து.. பார்க்கவே ஒரு மாதிரி பயமா

பயமாலாம் இல்ல ஆனா அருவெறுப்பா இருந்துச்சு.. அது என்னையே பார்த்துட்டு இருந்தது தெரியுமா” என்று கூறிக்கொண்டே சென்றவளை ஒரு கரம் நீட்டி தடுத்தான் அவன்.

அஹானாவோ அவனை கேள்வியாக பார்க்க, ஆரவ் “ஹாலிவுட்ல ஆரம்பிச்சு.. மாலிவுட் வரை இருக்க எல்லா பேய் படத்தையும் பார்த்துட்டு படுத்தா இப்படி தான் கனவு வரும்” என்று காய்ந்தான். பின் ஆழ்ந்த மூச்சை எடுத்தவன் அவள் தலையில் கைவைத்து “இப்படி உளறிட்டு சுத்தாமா போய் படு” என்றான். அப்போதும் அஹானாவின் முகம் தெளிவில்லாமல் இருக்க, அவளை தோளோடு அணைத்து விடுவித்தவன் “இங்க எதுவும் இல்ல அஹா.. கண்டதை யோசிச்சு உன்ன நீயே ஸ்ட்ரெஸ் பண்ணிக்காத.. போய் படு.. எல்லாம் சரி ஆகிடும்.. யூ நீட் சம் ஸ்லீப்” என்றுவிட்டு புன்னகைக்க, அவளும் மென்மையாக புன்னகைத்தாள்.

“தட்ஸ் மை கேர்ள்” என்றவன் அங்கிருந்து சென்றிட, செல்லும் ஆரவின் முதுகை வெறித்து பார்த்தவளுக்கு இங்கு வந்த முதல் நாளிலிருந்தே நடப்பவை அனைத்தும் தவறாக பட “நீங்க என்ன நம்புலனாலும் இங்க ஏதோ இருக்குறது உண்மை தான்.. அதை கண்டிப்பா நான் கண்டு பிடிப்பேன்” என தனக்குள் உறுதியெடுத்துக்கொண்டவள் அறியவில்லை அதன் பின் வரவிருக்கும் உயிர் சேதங்களை.

விடுதியின் இரண்டாம் தளத்தில் அமைந்திருந்த தன் அறையை நோக்கி செல்ல விழைந்த அஹானா ஜன்னல்கள் அடித்துக்கொள்ளும் சத்தத்தில் தன் வேகத்தை குறைத்தாள். அந்த தளத்தின்  இருள் படிந்த மூலையில் அமைந்திருந்த ஒரு அறையிலிருந்து சத்தம் வர, “இந்த சைட் யாருமே வர மாட்டங்களே.. எங்கிருந்து சத்தம் வருது” என தனியே பேசிக்கொண்டு சத்தம் வரும் திசை நோக்கி சென்றாள்.

கதவுகள் பூட்டப்பட்டு சிலந்தி வலைகளுடன் சிதைந்திருந்த கதவை புருவம் சுருக்கி பார்த்தவள் “இவ்ளோ பெரிய காலேஜுன்னு பெயர் தான்.. உடைஞ்ச ஜன்னலை கூட ரிப்பெர் பண்ணாம இருக்காங்க.. நீ கவலை படாத.. என் டாடி கிட்ட சொல்லி உன்ன சரி பண்ணுறேன்” என்று உடைந்து அந்த ஜன்னலிடம் பேச்சு வார்த்தை நடத்த, ‘தட்தட்தட்’ என அந்த அறை கதவுகள் பலமாக தட்டப்பட, பூட்டப்பட்டிருந்த அந்த கதவை பார்த்து “ரூம் உள்ள இருந்து எப்படி சத்தம் வருது” என குழம்பி நின்றாள்.

விடுதியில் தங்கும் மாணவிகள் யாரும் இதுவரை அந்த அறையின் திசை பக்கம் கூட வந்ததில்லை என்பதை சீனியர் ஒருவரின் மூலம் அறிந்திருந்தவள் தூசி படிந்த அந்த அறை கதவை ஆராய்ச்சியாக பார்த்துக்கொண்டிருந்தாள். மீண்டும் சத்தம் வர, “அடிங்கு.. யாருடா அது” என்றபடி அந்த கதவில் கைவைக்க விழைந்த நேரம் தங்கள் அறையில் மகிழ் அலறும் சத்தம் கேட்டது.

மகிழின் அலறலில் பதட்டமானவள் மற்றதை மறந்து தன் அறைக்கு விரைய, நீண்டிருந்த அந்த ஜன்னல் கம்பி ஒன்று அவள் கையை பதம் பார்க்க, அவள் கையிலிருந்து ரத்தம் சொட்டி தரையில் விழுந்தது.

இரத்த துளிகள் தரையில் பட்டவுடன் மயமாகியவிட, அதுவரை தெளிந்திருந்த விண்ணை கார்முகில் மூடிக்கொள்ள, காதை பிளக்கும் இடி சத்தங்கள் பூமியை அதிர செய்தது.

அவ்வறையில் புதைந்திருக்கும் மர்மங்கள் உயிரை குடிக்க நினைக்க, ஆபத்தை உணராது அதை ஆராய விளையும் இளையோரின் வாழ்க்கையை பயணமதை அடுத்த பாகத்தில் காண்போம்..

சுபம்…

Advertisement