Advertisement

                    அத்தியாயம் 43

இரவு உணவை அனைவருடனும் உண்டுவிட்டு தன் அறைக்கு வந்த ஆத்ரேயன் கதிருக்கு அழைக்க, ரேயனின் அழைப்பை ஏற்ற கதிர் “சொல்லு ரேயா.. இந்த நேரத்துல போன் பண்ணிருக்க” என்று வினவ, ரேயன் “ஒன்னுமில்ல கதிர்.. வீட்ல இந்துவோட கல்யாணத்தை பத்தி பேச்சு வந்தது.. உனக்கு ஓகேன்னா நாளைக்கு வீட்ல வந்து பேசுவோம்” என்றான்.

கதிர் சிறு தயக்கத்துடன் “இல்ல.. இன்னும் எதுவும் சரியாகலயே” என்றிழுக்க, அழைப்பில் இருந்த அக்னி “அட லூசு.. அதுக்கும் இதுக்கும் என்னடா சம்மந்தம்” என்று கேள்வியெழுப்ப, கதிர் “டேய் நீ எப்போ டா லைன்ல வந்த” என்றான். ரேயன் “நீ இப்படி அறிவா பேசுவன்னு தெரிஞ்சு நான் தான் அவனுக்கு கூப்பிட்டேன்” என்றான். கதிர் “இன்னும் யாரெல்லாம் டா இருக்கீங்க” என்று வினவ, நேஹாவும் கிஷோரும் ஒருசேர “நாங்க இருக்கோம்” என்றனர். அதில் மானசீகமாக தலையில் அடித்துக்கொண்ட கதிர் “முதல ஆரு சமாதானம் ஆகட்டும்.. அதுக்கு அப்புறம் கல்யாணம் வெச்சுக்கலாம்” என்றான் முடிவாக.

அக்னி “இவன் வேலைக்கு ஆகமாட்டான் ரேயா.. நீ பேசாம இந்துக்கு வேற பையன் பாரு” என்க, ரேயன் “அதுவும் சரி தான்.. டேய் கிச்சா.. நாளைக்கே இந்துவுக்கு வேற மாப்பிள்ளை பாக்குறோம்” என்றிட, அவர்களின் வேகத்தில் மிரண்ட கதிரோ “என்னடா ஜெட்டு வேகத்துல இருக்கீங்க” என்றான் அரண்ட குரலில். நேஹா “பின்ன என்னடா.. இன்னும் எவ்ளோ நாள் அந்த பொண்ணை காக்க வைக்க போற.. நமக்காக ஒருத்தி காத்திருக்கா அப்படின்றதுக்காக அவளை இவ்ளோ அலையவிட கூடாது” என்றாள் கண்டிப்பாக.

அக்னிக்கோ அவள் வார்த்தைகளில் குற்றவுணர்வு தலைதூக்க, பிடரியை அழுத்தமாக வருடி தன்னை சமநிலை செய்தவன் அமைதியாகவே இருக்க, கதிரிடம் பேசிய பின் தான் தன் வார்த்தைகளை உணர்ந்தவள் நாக்கை கடித்துக்கொள்ள, சூழ்நிலையை சகஜமாக்கும் பொருட்டு ரேயன் தான் “என்ன கதிர்.. என்ன சொல்லுற” என்று வினவ, கதிர் “எனக்கு ஓகே தான் ரேயன்..  நாளைக்கு அப்பா அம்மாவை அங்க வந்து பேச சொல்லுறேன்” என்றிட, கிஷோர் “அப்படி வா வழிக்கு” என்றவன் “சரிடா நான் தூங்க போறேன் பாய்” என்றிட, ரேயன் “சரிடா.. நாளைக்கு பார்ப்போம்” என்று அழைப்பை துண்டித்தான்.

மறுநாள் திருமணத்தை பற்றி பேச கதிரின் வீட்டிலிருந்து ஆட்கள் வந்திருந்தனர். அக்னி, ஆரு மற்றும் நேஹாவின் பெற்றோர்களும் வந்திருக்க, அந்த இடமே கலகலப்பாக இருந்தது.

பெரியவர்கள் கலந்து பேசி இரண்டு மாதத்திற்கு பின் வரும் ஒரு நாளில் திருமணத்தை நிச்சயித்து இருந்தனர். அதன் பிறகு அவர்கள் பொதுவாக பேசிக்கொண்டிருக்க, சிவகுமார் “நான் கூட ஆருக்கு மாப்பிள்ளை பாக்கலாம்னு இருக்கேன்.. இவ்ளோ நாள் அவ மனசு மாறும்னு தான் நினைச்சேன் ஆனா அவ மாறுர மாதிரி இல்ல.. அதான் அட்லீஸ்ட் வேற மாப்பிள்ளைய பார்க்கலாம்னு இருக்கேன்” என்று குண்டை தூக்கி போட, அங்கிருந்த அனைவரும் அதிர்ந்தனர்.

அக்னி ஏதோ கூற முயற்சிக்க, அவனை பார்த்து மறுப்பாக தலையசைத்த சிவகுமார் “வேண்டாம் அக்னி.. அவ கஷ்டப்படுறதை இனியும் எங்களால பார்க்க முடியாது” என்றிட, ஆரு தான் அவர் வார்த்தையில் வெகுவாக அதிர்ந்து போனாள்.

இரவு வீடு வந்து சேரும் வரை அமைதியாகவே வந்தவள், வீடு வந்து சேர்ந்ததும் “யாரை கேட்டு அப்படி சொன்னீங்க” என்று எரிந்து விழ, அவளை புருவம் சுருக்கி பார்த்தவர் “யார கேட்கணும்” என்றார். “என்ன கேட்கணும் ப்பா.. என் விருப்பமில்லாம நீங்க எப்படி அந்த மாதிரி சொல்லலாம்” என்று சத்தமிட, நிலா “ஆரு.. அப்பா கிட்ட இப்படி தான் பேசுவியா.. அவர் சொல்லுறதுல மட்டும் என்ன தப்பிருக்கு” என்று அதட்ட, ஆரு “ம்மா நீங்களும் புரிஞ்சிக்காம பேசாதீங்க.. நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க போறது இல்ல.. கடைசி வரை உங்க பொண்ணா மட்டும் இருக்கேன்” என்றிட, எப்போதும் மகளை அதிர்ந்து பேசாத சிவகுமாருக்கு கூட அவள் வார்த்தை கோபத்தை விழைத்தது.

சிவகுமார் “பைத்தியம் மாதிரி பேசாத ஆராத்யா.. ஒன்னு எல்லாத்தையும் மறந்துட்டு ரேயனை கல்யாணம் பண்ணிக்கோ இல்லன்னா நான் காட்டுற பையனை கல்யாணம் பண்ணிக்கோ” என்றார் கண்டிப்பாக. தந்தையின் வார்த்தையில் ஸ்தம்பித்து நின்றவளுக்கு அவர் கண்டிப்பில் கண்கள் கலங்கி விட அதை காண சகிக்காது, நிலா “என்னங்க கொஞ்சம் பொறுமையா பேசுங்க” என்றார். சிவகுமார் “நீ கொஞ்சம் அமைதியா இரு நிலா.. சின்ன வயசுல இருந்து அவ இஷ்டத்துக்கு விட்டதால தான் இப்படி வளர்ந்து நிக்குறா” என்னும் போதே அங்கு வந்த அக்னி “ப்ச்.. என்னப்பா..எதுக்கு அவளை அழ வைக்குறீங்க” என்றவன் ஆருவை சமாதானம் செய்ய, “யாரும் என்னக்காக பேச வேண்டாம்” என்று சீறினாள்.

சிவகுமார் “பார்த்தியா.. அவளுக்கு திமிரு அதிகமாகிடுச்சு அக்னி.. நம்ம பேசுற எதுவும் அவ மூளைக்கு ஏறாது” என்று அக்னியிடம் கடுப்பாக கூறியவர், ஆருவிடம் “என்னமோ அக்னி மேலயும் ரேயன் மேலயும் மட்டும் தான் தப்பு இருக்குற மாதிரி பேசுற.. ஏன் உன்மேல தப்பு இல்லையா” என்று எகிற, ஆருவோ அவரை அடிபட்ட பார்வை பார்த்தாள்.

சிவகுமார் “நல்லா யோசிச்சு பாரு ஆரு.. சின்ன சின்ன விஷயத்தை கூட அக்னிகிட்ட கேட்டு பண்ணுற நீ.. அவ்ளோ பெரிய விஷயத்தை சொல்ல தயங்குனதால தான் இவ்ளோ பிரச்சனையும்.. ஒருவேளை நீ லவ் பண்ணுறேன்னு சொல்லிருந்தா கூட அக்னி உன்ன ஒரு வார்த்தை கேட்டிருக்க மாட்டான்.. நீ தான் எல்லாத்தையும் காம்ப்ளிகேட் பண்ணிருக்க” என்று நெற்றில் பொட்டில் அடித்தார் போல் அவர் கூற, அவள் தான் அவர் வார்த்தையில் கலங்கி நின்றாள்.

அக்னி “அப்பா விடுங்க.. ஆரு நீ ரூம்க்கு போ” என்றிட, அவனை கலங்கிய கண்களுடன் பார்த்தவள், எதுவும் பேசாது தன் அறைக்குள் புகுந்துக்கொண்டாள். கட்டிலில் அமர்ந்து தன் தந்தையின் வார்த்தைகளில் உழன்றவளுக்கு அவர் கூறியதும் சரியென்றே தோன்றியது ஆனால் மறுமனமோ அதை ஏற்க முடியாமல் வலியில் துடித்தது.

கண்கள் நிற்காமல் கண்ணீரை பொழிய, எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தவளின் அறை கதவு தட்டப்பட்டது. ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை சமன் செய்தவள், கண்களை அழுத்தமாக துடைத்துக்கொண்டு கதவை திறக்க, அங்கு ரேயன் மார்பிற்கு குறுக்கே கை காட்டியபடி நின்றிருந்தான்.

ரேயனை அங்கு எதிர்பாராதவள் “என்ன வேணும்.. எதுக்கு இங்க வந்த” என்று எரிச்சலாக வினவ, அவளை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்தவன் அவளை தள்ளிக்கொண்டு அவள் அறைக்குள் நுழைந்து கதவை தாழிட்டான்.

ரேயனின் செயலில் அதிர்ந்தவள், “என்ன பண்ணுற.. முதல கதவை திற” என்று சத்தமிட, இரண்டே எட்டில் அவளை நெருங்கி அவள் இடையில் கை கோர்த்தவன், மறுகரம் கொண்டு அவள் வாயை பொத்த, ஆராத்யாவின் விழிகளோ தெறித்துவிடும் அளவிற்கு விரிந்தது.

ரேயன் “எதுக்குடி இப்படி கத்துற.. யாராவது கேட்டா என்ன நினைப்பாங்க” என்று அதட்டியவன், “தள்ளி போறேன் ஆனா கத்தாத” என்றபடி அவளை விட்டு விலகி நின்றான். ஆரு “இப்போ எதுக்கு வந்தீங்க” என்று வினவ, ரேயன் “பேசணும்டி” என்றான்.

ஆரு கைகளை கட்டியபடி அவனை பார்க்க, ரேயன் “இன்னும் எவ்ளோ நாள் இப்படியே இருக்க போற ஆரா” என்று நலிந்த குரலில். பின் அவனே “தப்பு எங்க மேல தான்.. அதுக்கு சாரி.. ஆனா முடிஞ்சு போனதை நினைச்சு இன்னும் எவ்ளோ நாள் இப்படி வீம்பா இருக்க போற.. ஒரு நிமிஷம் என்னோட இடத்துல இருந்து யோசிச்சு பாருடி.. அன்னிக்கு நான் முக்கியமா இல்ல அவன் முக்கியமான்னு கேட்டதுக்கு ஒரு வார்த்தை சொன்னியா.. அப்போ எனக்கு எப்படி இருந்திருக்கும்.. அந்த கோபத்துல தான் அப்படி பேசிட்டேன்.. மத்தபடி மனசுல இருந்து எதுவும் பேசல.. ப்ளீஸ் புரிஞ்சிக்கோ” என்றான்.

பின் அழுத்தமாக தன் முகத்தை துடைத்துக்கொண்டவன் “சரி அதை விடு.. உன்கிட்ட கோபமா பேசுனப்ப கூட உனக்காக நான் அக்னிகிட்ட மன்னிப்பு கேட்க ஒத்துகிட்டேன் தான.. உனக்காக என் சுயத்தை கூட விட்டு இறங்கிட்டேனேடி.. இதுக்கு மேல என்னை என்ன பண்ண சொல்லுற.. ஒருவேளை உனக்கு என்ன பிடிக்கிலயா.. அப்படி பிடிக்கலன்னா முகத்துக்கு நேரா சொல்லிடு.. இன்னொரு முறை உன் கண்ணு முன்ன கூட வரமாட்டேன்” என்னும் போதே அவன் குரல் தழுதழுத்த.

அவனுக்கோ காதலின் பாரத்தை தாங்கவே முடியவில்லை. இதயத்தை யாரோ கூர் வாள் கொண்டு அறுப்பது போன்றதோர் உணர்வு. மனதின் பாரத்தை தாங்கா முடியாது அவன் விழிநீர் கசிந்து அவளிடம் காதலை யாசிக்க, அவளோ கல்லை போல் அல்லவா இறுகியிருந்தாள்.

அவள் இறுகிய முகம் அது ஆணவனின் இதயத்தை செதில் செதிலாக்கி நொறுக்க, அவளை பார்த்து கசந்த முறுவல் ஒன்றை உதிர்த்தவன், புறங்கையால் தன் விழிநீரை விழ விடாமல் துடைத்துக்கொண்டு, சட்டென அங்கிருந்து வெளியேறிவிட, அவன் பேசியதை கேட்டு யோசனையில் நின்றவள் அவன் கண்ணீரில் ஸ்தம்பித்து தான் போனாள். அவன் அழுத்தக்காரன் தான் ஆனால் இந்த காதல் அவனை வலிக்க வலிக்க அடித்தால் பாவம் அவனும் என்ன தான் செய்வான். ஆருவிடம் பேசிவிட்டு வந்தவன், யாரையும் காணாது அங்கிருந்து வெளியேறிட, ரேயன் செல்வதை கண்ட அக்னி “நானும் கிளம்புறேன் ப்பா.. வரேன் ம்மா” என்றவன் ரேயனை தொடர்ந்து வெளியேறினான்.

வேக நடையுடன் வண்டியில் ஏற எத்தனித்த ரேயனின் கையை பிடித்து தடுத்த அக்னி “நான் வண்டி ஓட்டுறேன்” என்றிட, ரேயனுக்கும் அதுவே சரியென பட்டது. எதுவும் பேசாது மறுபக்கம் சுற்றி வந்து ஏறியவன், இருக்கையில் சாய்ந்து கண் மூட, அவன் தோளை தட்டிக்கொடுத்த அக்னி “ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணிக்காத” என்றான்.

அக்னியை அடிபட்ட பார்வை பார்த்தவன் “என்னால முடியல அக்னி.. நானும் எவ்ளோ நாள் தான் வலிக்காதது போல நடிக்கிறது.. ஒரு ஒரு நாளும் அவ நினைப்புல செத்துட்டு இருக்கேன்டா ஆனா அவ.. அவளுக்கு நான் ஒரு பொருட்டா கூட இல்ல அக்னி.. நான் உண்டு என் வேலை உண்டுன்னு தான இருந்தேன்.. அவளா தான வந்தா.. நான் கண்டுகாத போது என்ன சுத்தி சுத்தி வந்தவ.. இப்போ நான் கெஞ்சும் போது கூட இறுகி நிக்கிறா.. கஷ்டமா இருக்குடா.. யாரகிட்டயும் சொல்லாம உள்ளுக்குள்ளேயே மருகிட்டு இருக்கேன்” என்று மனம் திறக்க, அக்னி தான் குற்றவுணர்வில் தவித்து போனான்.

அவர்களின் இந்த நிலைக்கு அவனும் ஒரு வகையில் காரணமாகி போய்விட்டான் அல்லவா.. அன்றே சற்று நிதானித்து இருந்திருந்தால் இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காதே.. எப்போதும் தன் பிடியில் இருந்து இறங்காதவன் இன்று அவளிடம் காதலை யாசி வந்துள்ளான் ஆனால் அவளோ அவன் மனம் புரியாமல் அவனை விலகி நிற்கிறாள்.

அக்னி “சாரி ரேயன்.. என்னால தான் இப்படி” என்னும் போதே மறுப்பாக தலையசைத்த ரேயன் “முடிஞ்சதை பத்தி பேச வேண்டாம் அக்னி.. தப்பு உன்மேல மட்டும் இல்ல” என்றவன் தொடர்ந்து “இனி நான் அவளை டிஸ்டர்ப் பண்ண போறதில்லை.. நாளைக்கு அவ எடுக்குற முடிவு தான் கடைசி முடிவு.. ஒருவேளை அவ மனசு மாறலன்னா.. இனி நான் அவ கண்ணு முன்னாடி வரவே மாட்டேன்” என்றான் உறுதியாக. அக்னி “கோபத்துல முடிவெடுக்காத ரேயன்.. கொஞ்சம் பொறுமையா யோசி” என்று அறிவுரைத்தான்.

ரேயன் “நல்லா யோசிச்சு தான் சொல்லுறேன்.. இது நான் ஏற்கனவே எடுத்த முடிவு தான்” என்றான். அக்னியோ யோசனையாக வண்டியை செலுத்த, ரேயனோ கண் மூடி அமர்ந்துவிட்டான்.

இங்கு அறையில் அவன் விட்டு சென்ற பின்பும் அதே அதிர்ச்சியுடன் நின்றிருந்த ஆரு கலைந்தது என்னவோ நேஹாவின் அழைப்பில் தான். அக்னியின் குறுஞ்செய்தியை கண்டு ஆருவின் வீட்டில் நடந்தவற்றை ஓரளவிற்கு யூகித்தவள், ஆருவை சமாதானம் செய்யவே அவளுக்கு அழைத்திருந்தாள்.

நேஹாவின் அழைப்பை ஏற்ற ஆரு “சொல்லுடி” என்க, நேஹா “ஆரு நான் அவங்களுக்கு சாதகமா பேசுறேன்னு தப்பா எடுத்துக்காத.. ரேயன் அப்பறம் அக்னியை பத்தி உனக்கு நல்லாவே தெரியும்.. அவங்க எவ்வளவுக்கு எவ்வளவு கோபக்காரங்களோ அதே அளவுக்கு பாசக்காரங்க.. உன்ன திட்டிட்டு அவங்க மட்டும் சந்தோஷமா இருந்தாங்கன்னு நினைக்குறியா” என்று வினவ, ஆருவிடமோ பலத்த மௌனம் மட்டுமே நிலைத்திருந்தது.

நேஹா “அக்னி.. சாப்பாடு தூக்கம் இல்லாம உன்ன அப்படி பேசுனதுக்கு தனக்கு தானே தண்டனை கொடுத்துகிட்டான்னு உனக்கு தெரியுமா..  இல்ல உறவுகளை எல்லாம் விட்டுட்டு அனாதை மாதிரி எங்கயோ இருந்து கஷ்டப்பட்டுட்டு இருந்த ரேயன் பத்தியாச்சு உனக்கு தெரியுமா.. உன்ன திட்டுனதுக்கு உன்ன விட அதிகமா வருத்தப்பட்டது அவங்க ரெண்டு பேர் தான்.. அக்னிக்கும் ரேயனுக்கு நீ எவ்ளோ முக்கியம்னு உனக்கே தெரியும்.. அதே மாதிரி உனக்கும் அவங்க எவ்ளோ முக்கியமன்னு தெரியும் அப்பறம் எதுக்கு இந்த வெட்டி வீராப்பு.. ரேயன் வேற அழுதாருன்னு அக்னி சொன்னான்.. கேட்ட எனக்கே மனசுக்கு ஒரு மாதிரி இருக்குடி.. தயவுசெய்து எதுவா இருந்தாலும் யோசிச்சு முடிவெடு” என்று படபடப்பக கூறியவள் ஆருவின் பதிலுக்கு கூட காத்திருவாமல் அழைப்பை துண்டித்தாள்.

காதிலிருந்து அலைபேசியை எடுத்து அதை வெறித்துக்கொண்டிருந்த ஆருவின் மனமோ கலங்கிய குட்டையை  குழம்பி இருந்தது. இன்றும் ரேயனின் மீது மனம் நிறைய காதல் இருக்க தான் செய்தது ஆனால் மனதின் ஓரத்தில் சிறு தயக்கமும் இருந்தது. மீண்டும் மீண்டும் பலவற்றை போட்டு தன்னை தானே குழப்பிக்கொண்டவளுக்கு ஒரு முடிவெடுப்பது அவ்வளவு எளிதாக ஒன்றும் இருக்கவில்லை. மனதினுள் குழப்பம் மட்டுமே எஞ்சியிருக்க, அவள் அழைத்தது என்னவோ கௌதமிற்கு தான்.

அப்போது தான் சித்துவை வண்டி ஏற்றிவிட்டு வீட்டிற்கு வந்தவன் ஆருவின் அழைப்பில் குழம்பி அதை ஏற்க, மறுபக்கம் இருந்த ஆருவிற்கோ பேச்சை தொடங்கவே தயக்கமாக இருந்தது. இதுவரை அவனிடம் அவள் நன்றாக பேசியதை விரல் விட்டு எண்ணிவிடலாம் அல்லவா.. ஆனால் அவனுக்கு அதெல்லாம் பெரிதாக இருக்கவில்லை. அழைப்பை ஏற்றவுடன் இருபக்கமும் பலத்த மௌனம் ஆட்சி செய்ய, அதை கலைக்கும் வண்ணம் கௌதம் “ஹெலோ ஆரு இருக்கியா” என்று பேச்சை தொடங்க, “ஹான்.. இரு.. இருக்கேன்” என்றாள் தட்டு தடுமாறி.

கௌதம் “சொல்லு.. என்ன இந்த நேரத்துல கால் பண்ணிருக்க” என்று வினவ, ஆருவோ சற்றே தயங்கினாள். அவள் தயக்கத்தை உணர்ந்து கொண்டவனோ “எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லு” என்றான். ஆரு “எனக்கு குழப்பமா இருக்கு கௌதம்.. ஒரு .. ஒரு முடிவு எடுக்க முடியல.. மனசெல்லாம் பாரமா இருக்குறத போல இருக்கு” என்றிட, கௌதம் “மீட் பண்ணலாமா” என்றான். “ம்ம்” என்றவள் “எங்க வரணும்” என்று வினவ, “உங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்க கிரௌண்ட் கிட்ட வா” என்றவன் பத்தே நிமிடத்தில் அங்கிருந்தான்.

குளியறைக்குள் புகுந்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவியவள், உடை மாற்றிக்கொண்டு கிளம்ப, சிவாவோ அவளை அழுத்தமாக பார்த்தபடி அமர்ந்திருந்தார். ஆரு “கொஞ்சம் வெளிய போயிட்டு வரேன் ம்மா” என்றவள் சிவகுமாரை காணாது அங்கிருந்து வெளியேறினாள்.

ஆரு கௌதம் குறிப்பிட்டிருந்த மைந்தானத்திற்கு வர, அங்கிருந்த கல் இருக்கையில் அமர்ந்திருந்த கௌதம் “இங்க வா” என்றான். ஆருவோ அவன் அருகே சிறு இடைவெளி விட்டு அமர, கௌதம் “இப்போ சொல்லு.. என்ன குழப்பம்” என்றான் கேள்வியாக. ஆரு பெருமூச்சுடன் நடந்தவற்றை தெரிவித்தாள், அதை கூறும் போதே அவள் கண்ணில் நிற்காமல் நீர் வழிய, அதை துடைத்துக்கொண்டவள் “ரெண்டு பேரும் என்ன புரிஞ்சிக்கில கௌதம்.. எனக்கு..  எனக்கு என்ன பண்ணுறதுனே தெரியல” என்று பாவமாக கூறியவளை கனிவாக பார்த்தவன் “அவங்க இல்லாம உன்னால இருக்க முடியுமா” என்று அவளை ஆழம் பார்க்க, அவளோ மறுப்பாக தலையசைத்தாள். பின் ஆருவே “அவங்க இல்லாம என்னால நானா இருக்க முடியல.. இப்போ இருக்குற ஆரு நான் கிடையாது.. நான் மாறிட்டேன் கௌதம்.. ரொம்ப மாறிட்டேன்.. ஒரு விஷயம் தெரியுமா.. இதுவரை என் அப்பா என்ன அதிர்ந்து கூட பேச மாட்டாரு ஆனா இன்னிக்கி” என்றவள் சிவகுமார் பேசியதையும் ஒன்றுவிடாமல் கூறி முடித்தாள்.

ஆரு “அப்பா சொன்ன மாதிரி தப்பு என் மேலயும் இருக்கு தான” என்று தலைகுனிய, கௌதம் “தப்பு எல்லார் மேலயும் சமமா தான் இருக்கு ஆரு.. ஆனா அவங்க பக்கம் இருந்த தவறுகளை அவங்க சரி பண்ணிட்டாங்க” என்றவன் சிறு இடைவெளி விட்டு “நீ நினைச்சதை போல எதிர் எதிர் துருவங்களா இருந்த அவங்க ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்துட்டாங்க.. உன்கிட்ட மன்னிப்பும் கேட்டுட்டாங்க, இன்னும் என்ன எதிர்பார்க்குற” என்றான் புருவம் சுருக்கி.

கௌதமின் கேள்வியில் இதழ் பிதுக்கியவளுக்கு  தான் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதே புரிந்துக்கொள்ள முடியவில்லை. “எனக்கு தெரியல கௌதம்.. நான் என்ன எதிர்பார்க்குறேன்னு எனக்கே தெரியல” என்றிட, கௌதம் “மனசை ரொம்ப குழப்பிக்காத.. அவங்க இல்லாம உன்னால நீயா இருக்க முடியாதுன்னு சொன்னப்பவே உன் மனசு எனக்கு புரிஞ்சிடுச்சு.. இந்த ஆறரை வருஷம் தனியா இருந்து நீங்க எல்லாரும் அனுபவிச்ச தண்டனை போதும்.. இந்த வெட்டி கௌரவம் ஈகோலாம் பார்த்துட்டு அவங்களை இழந்திடாத” என்று அறிவுரைத்தான்.

ஆரு “ஆனா இவ்ளோ நாள் பேசாம இப்போ போய் பேசவும் தயக்கமா இருக்கு” என்று தன் மனதை மறைக்காது கூறிவிட, அவளை நினைத்து உள்ளுக்குள் புன்னகைத்துக்கொண்டவனுக்கு அவளை பார்க்க புதிதாக தான் இருந்தது. ஆனால் இது தான் அவள் இயல்பு என்பதை புரிந்துக்கொண்டவன் “நீ இவ்ளோ தயங்குற அளவுக்கு அவங்க உனக்கு தெரியாதவங்க இல்லையே.. ஒருத்தர் உன்கூடவே வளர்ந்தவர்.. இன்னொருத்தர் உன்னை உயிரா நேசிக்கிறவர்” என்றவன் தொடர்ந்து “நீ அவங்ககிட்ட பேச கூட வேண்டாம்.. உன் கண்ணை வைச்சே அவங்க உன் மனசை புரிஞ்சிக்குவாங்க” என்றிட, அவனை பிரமிப்பாக பார்த்தவள் “எப்படி இவ்ளோ நிச்சயமா சொல்லுற” என்று கேட்க, இருபக்கமும் தலையாட்டி சிரித்தவன் “நீ சொன்னதை வச்சு தான் சொன்னேன்” என்றான்.

ஆரு “ம்ம்” என்றவள் தொடர்ந்து “இதுவரை நான் உன்கிட்ட நல்லா கூட பேசுனதில்லை ஆனா எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்னு சொன்ன உடனே வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்” என்று மனமார நன்றி வேண்ட, அவளுக்கு ஒரு புன்னகையை பதிலாக தந்தவன் “இட்ஸ் ஓகே” என்றான்.

ஆரு “அப்பறம் நதியா எப்படி இருக்கா” என்று குறும்பாக வினவ, அவள் கூற்றில் அதிர்ந்து விழித்தவன் “உனக்கு எப்படி” என்று குழம்ப அதில் வாய் விட்டு சிரித்த ஆருவோ “நதியா உனக்கு ஜூனியருன்னும்.. நீயும் நதியாவும் ஸ்கூல்ல இருந்து லவ் பண்ணுறீங்கனும்.. அவ படிக்க வெளிநாடு போயிருக்குறதும்.. அவளுக்காக நீ காத்துகிட்டு இருக்குறதுக்கும் சித்து சொல்லி எனக்கு தெரியாதுப்பா” என்று கண் சிமிட்டி சிரிக்க, அவளை போலியாக முறைத்தவன் “சரியான ஆல் இந்தியா ரேடியோ” என்று சித்துவை அர்ச்சித்தான்.

ஆரு “ஆனா ஒன்னு மட்டும் புரியல கௌதம்” என்று தீவிரமாக முகத்தை வைத்துக்கொண்டு கூறியவளை அவனும் புரியாமல் பார்க்க, ஆரு “நீ ஒரு சின்சியர் சிங்கமுத்துவாச்சே.. உன்ன எப்படி அவ லவ் பண்ணா” என்று சிரிப்பை அடக்கிக்கொண்டு கேட்க, “அடிங்கு” என அவளை முறைக்க முயன்று தோற்றவன், அவளுடன் இணைந்து புன்னகைத்தான்.  ஆரு “ஜோக்ஸ் அப்பார்ட் கௌதம்.. எப்போ நதியாவை எங்களுக்கு இன்ட்ரோ பண்ண போற” என்று வினவ, “அடுத்த மாசம் படிப்பு முடிஞ்சு இந்தியா வரா.. அப்போ அறிமுகப்படுத்துறேன்” என்றவன் தொடர்ந்து “லேட் ஆகிடுச்சு.. நீ வீட்டுக்கு போ.. நானும் கிளம்புறேன்” என்றான்.

ஆரு “ஓ.. நதியா கூட ஸ்கைப் கால் பேசுற டைமோ” என்று கேலி செய்ய, அதில் போலியாக அவளை முறைத்தவன் “உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியாது.. பை” என்று விடைபெற, அவளும் ஒரு மென்னகையுடன் வீட்டிற்கு திரும்பினாள். கௌதமிடம் பேசிய பின் மனதை அழுத்திக்கொண்டிருந்த பாரம் வெகுவாய் குறைந்திருப்பதை உணர்ந்தவள், இந்த ஆறுவருட தவ வாழ்வை முடிக்க ஒரு முடிவும் எடுத்திருந்தாள்.

தொடரும்…

Advertisement