Advertisement

                    அத்தியாயம் 42

       ரேயனும் அக்னியும் ஆருவின் பின் செல்ல, அவர்கள் நெருங்கும் முன்னே ஆட்டோ பிடித்து சென்றிருந்தாள் அவள். வண்டியில் ஏறி சென்றவளை கண்ட அக்னியோ “போயிட்டா” என்க, இடுப்பில் கை வைத்துக்கொண்ட ரேயன் “ரொம்ப குஷ்டமப்பா.. இவளுக்கு மட்டும் எப்படி டக்குன்னு ஆட்டோ கிடைக்குது” என்று சலித்துக்கொண்டான், பின் அவனே “அத விடு.. வேற வழியே இல்ல.. நம்ம அத பண்ணிதான் ஆகணும்” என்றிட, “ஐயோ” என்று தலையில் அடித்துக்கொண்ட அக்னிக்கும் வேறு வழி இருக்கவில்லை.

மறுநாள் அவர்களின் விடியல் விடிந்தது என்னவோ கிஷோர் மற்றும் கதிரின்  முகத்தில் தான். அக்னியின் அலுவலகத்தில், ரேயன் அக்னி மேசையின் ஒரு புறம் அமர்ந்திருக்க, மறுபுறம் கதிரும் கிஷோரும் அமர்ந்திருந்தனர்.

கிஷோர் “என்ன பா ஹீரோ மக்களே, எங்களயெல்லாம் பாக்க வர சொல்லிருக்கீங்க..” என்று நக்கலாக பேச்சை தொடங்க, கதிர் “அதானே.. நீங்கதான் பெரிய ஆளுங்களாச்சே” என்றான் கிஷோருடன் சேர்ந்து. அக்னி “இதுக்கு தான் சொன்னேன், இவனுங்கெல்லாம் தேரமாட்டானுங்கன்னு..கேட்டியா” என்றபடி தன் இருக்கையில் சாய்ந்து அமர, ரேயன் “இரு இரு.. டேய்.. ரெண்டு பேரும் எதாச்சு ஐடியா குடுங்க, இல்லனா” என்றிழுக்க, கிஷோர் கால் மேல் கால் போட்டுக்கொண்டு “இல்லனா என்ன.. சொல்லு பா சொல்லு” என்றான் எகத்தாளமாக.

ரேயன் அவன் கால் மேல் தாட்கட்டை கல்லை (பேப்பர் வெயிட்) தூக்கி எறிய, அதில் பதறி காலை நகர்த்தியவன் “அட கொலகாரா.. சாவடிக்க பாக்குறான் பாரு” என்றிட, கதிர் “பேசலாமா வாங்க.. ஈ..”என்று இளித்துக்கொண்டே சரணடைந்தான். கிஷோர் “ச்ச.. உயிரே போனாலும் மானத்தை விடமாட்டான் இந்த கிஷோர்” என்று அவன் கூறி முடிக்கும் முன் ரேயன் வேறொரு கல்லை கையில் எடுக்க, அதை கண்டு கலவரமானவன் “அதாவது எதுனாலும் பொறுமையா உக்காந்து பேசுனா சரி ஆகிரும்.. வா அத்து வா பேசுவோம்” என்றிட, ரேயன் “அது” என்றான் மிதப்பாக.

கிஷோர் “உடனே கல்ல எடுக்க வேண்டியது” என்று புலம்பியவன், தொடர்ந்து “சரி சொல்லுங்க நாங்க என்ன பண்ணனும்” என்று நானும் ரவுடி தான் சேதுபதி போல் மிதப்பாக வினவ, அவனுடன் சேர்ந்துக்கொண்ட கதிரும் “ஹான் சொல்லுங்க செஞ்சிரலாம்” என்றான் சட்டையின் காலரை தூக்கி விட்டபடி. அதை கேட்ட அக்னியும் ரேயனும்  “நீங்க ஒன்னும் கிளிக்க வேண்டாம்” என்றனர் ஒருமித்த குரலில்.

கிஷோர் “எதே” என்று அதிர, ரேயன் “ஆமா” என்றான். கதிர் “அப்போ எதுக்கு எங்கள கூப்பிட்டிங்களாம்” என்று முறைக்க, அக்னி “ஆருவோட பிரண்ட் கெளதம் அண்ட் சித்துவ பாக்க போறோம்.. சும்மா கூட வாங்க” என்றான்.
கதிர் “யூ மீன் சப்ஸ்டியுட்.. ஒப்புக்கு சப்பா” என்று கேள்வியெழுப்ப, அவன் தலையில் தட்டிய கிஷோரோ “அவனுங்க தான் ஒன்னு சேர்ந்துட்டு அசிங்கப்படுத்துறானுங்கன்னா, நீ இன்னும் அப்படியா நொப்பிடியான்னு கேட்டுட்டு இரு.. ச்சை.. வாங்க போவோம்” என்றிட, கதிர் “நீயும் இப்போ மானங்கெட்டுபோய் தான போற” என்று அவனை வாரினான்.

“டேய் இங்க இருந்தா வேலை செய்யணும்.. அவங்க கூட போனா அப்படியே ஒரு நாள ஓட்டலாம்” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறியவன், “யாரு மானங்கெட்டு போறாங்க, ஏதோ பிரண்ட்ஸ்னால கூட போறேன்.. வா வா” என்று சிலுப்பிக்கொண்டு முன்னே செல்ல, கதிரும் தலையில் அடித்துக்கொண்டு அவர்களை தொடர்ந்தான்.

அக்னி “நீங்க போங்க நான் வரேன்” என்றிழுக்க, ரேயன் “ஏன் எங்க கூட வா.. இப்போ எங்க போற” என்று வினவ, மானசீகமாக தலையில் அடித்துக்கொண்ட கிஷோர் “டேய் நீதான் இன்னும் சிங்களா சுத்துற, அவன் அப்படியா.. அவன் தான் மிங்கில் ஆகிட்டானே” என்றான் குறும்பு மின்ன. கதிர் “அஹன் அதான், அதுவும் இவன் சும்மாவே காதல் மன்னன் ரேஞ்சுக்கு தான் சுத்துவான் இப்போ கேட்கவா வேணும்” என்று அவனும் தன் பங்கிற்கு அக்னியை வாரினான்.

அவர்கள் பேசியதை கேட்டு புன்னகைத்த ரேயனோ “நீயாச்சு நல்லா இரு மாப்ஸ்.. அப்படியே அம்முவயும் கூட்டிட்டு வா, நானே கூப்பிடனும் நினைச்சேன்.. அவ இருந்தா தான் எல்லாம் நடக்கும்” என்றிட,
அக்னி “ஒகே ஒரு ஒன் ஹவர்ல அங்க இருப்போம்” என்றான். “டேய் நீ அவளை கூட்டிட்டு வந்தாலே 15 மினிட்ஸ் தான்டா ஆகும்” என்ற கதிரின் கேள்வியை கண்டுக்கொள்ளாது அக்னி சென்று விட, கதிரின் தோள் மீது கை போட்ட கிஷோர் “ஆமா உன்னலாம் எப்படி இந்து லவ் பண்ணா” என்று தீவிரமாக வினவ, கதிர் “ஏன் டா” என்றான் பாவமாக .

ரேயன் வாய் விட்டு சிரிக்க, கிஷோர் “அச்சோ.. வாடி வாடி தங்கோ.. குழந்தையாவே இருக்கு புள்ள” என்று வார, மூவரும் ஒருவரை ஒருவர் வாரியபடி ஆருவின் அலுவலகத்திற்கு அருகே சென்றனர்.

அவர்களை அனுப்பி வைத்துவிட்டு நேஹாவின் அறைக்குள் நுழைந்த அக்னி “எக்ஸ்கியூஸ் மீ மேம், மே ஐ கம் இன்” என்று உத்தரவு கேட்க, “அட வாங்க பாஸ்.. நீங்க ஏன் எக்ஸ்கியூஸ் கேட்குறீங்க, உங்க ஸ்டாப் கிட்ட” என்றவள் இருக்கையில் இருந்து எழ, அவளை எழவிடாமல், அவள் தோளை பிடித்து இருக்கையில் அமர வைத்தவன்  “உட்காரு” என்றான். பின் அவள் முன்னிருந்த மேசையில் சாய்ந்தமர்ந்தவன் அவள் கண்களை பார்க்க, நேஹா “என்ன பாஸ் நீங்கதான் உட்காரனும் நான் நிக்கணும்.. மாத்தி பண்றீங்க” என்று கேலி செய்ய, அக்னி “நான் பாஸ் கிடையாது… நீதான்” என்றான் நமுட்டு புன்னகையுடன். நேஹா “ஹாஹா சரி சரி” என்றிட, “ஒரு நிமிஷம்” என்றவன் தனதறைக்கு சென்று ஒரு கோப்பை எடுத்து வந்தான்.

நேஹா “இது என்ன பைல்” என்று புருவம் சுருக்க, “பாரு” என்றவன் அதை அவள் மேசையில் வைத்துவிட்டு மார்பிற்கு குறுக்கே கை கட்டி நின்றான். புருவமுடிச்சோடு அதை படித்தவள் அதிலிருந்த தகவலை கண்டு அதிர, அக்னியோ இதழில் தவழிய புன்னகையுடன் அவளை தான் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

நேஹா  “என்ன அகி இது.. எனக்கு புரில” என்றாள் திக்கி திணறி. அக்னி “உனக்கு புரியிறது சரிதான்” என்றிட, “என்ன சொல்ற” என்றாள் குழப்பமாக. அக்னி “எனக்கு ரெண்டு கம்பெனி இருக்குனு தெரியும்ல” என்று வினவ, “ம்ம்” என்றாள். அக்னி “அந்த கம்பெனி அம்மா அப்பா பெயர்ல இருக்கு.. அப்பறம் இது” என்றிழுக்க, அவளும் “இது” என்றாள் கேள்வியாக.

அவள் அருகில் நெருங்கி நின்றவன் அவள் முகம் தாங்கி “இது என் பொண்டாட்டி பெயர்ல இருக்கு” என்றான் அடக்கப்பட்ட புன்னகையுடன். அவன் பதிலில் சிலையாய் சமைந்தவளின் தோளை பிடித்து உலுக்கியவன் “ஓய்.. என்ன.. இப்படியே நின்னா வேலைய யாரு பாப்பாங்க பாஸ்” என்று அவளை போலவே பேசி காட்ட, அப்போது தான்  சுயம் பெற்றவள் “அகி விளையாடுற தான.. அப்படிலாம் இல்லல.. வேண்டாம் இதெல்லாம்” என்றிட, அக்னியின் முகம் சுருங்கியது.

“வேண்டாமா.. விளையாடுறேனா.. என்ன பேசுற”என்று முறைத்தவன், அவளுக்கு முதுகு காட்டி நின்றுக்கொள்ள, அதில் பதறியவள் அவன் முன் சென்று “இல்ல அகி அப்படி இல்ல” என்று திணற,
“வேற எப்படி” என்றான் கடுமையாக. நேஹா “எதுக்கு இப்போ கத்துற.. கோபப்பட மாட்டேன்னு சொல்லிருக்க” என்று சிறுபிள்ளை போல் கோபித்தவள், வேறு பக்கம் திரும்பி நிற்க, அவள் கூற்றில் அரும்பிய புன்னகையுடன் பின்னிலிருந்து  அணைத்துக்கொண்டான், அவள் கள்வன்.

நேஹா “மிஸ்டர் அக்னி பிரதாப் இது ஆபீஸ்” என்றிட,
அக்னி “பரவால்ல மிஸ்ஸஸ் அக்னி.. நீங்க ஒன்னும் ஏதோ ஒருத்தன் கூட ரொமேன்ஸ் பண்ணல.. உங்க புருஷன் கூடத்தான் பண்றீங்க” என்றவன் அவளை இன்னும் இறுக்கமாக அணைத்துக்கொண்டான். நேஹா “அது வெளிய இருக்கவங்களுக்கு தெரியாது” என்க, அதெல்லாம் அவன் காதை எட்டினால் தானே.

பெண்ணவளின் பிரத்யேக நறுமணத்தில் தடுமாறி போனவன் அவள் கழுத்தில் முகம் புதைக்க, நேஹா “ஏன் அக்னி இப்படி பண்ற.. எதுக்கு என் பெயர்ல” என்று மீண்டும் அதை பற்றி கேட்க, அவள் தோளில் நாடியை வைத்தவன் “எனக்கு என் பெயர் பிடிக்கல அதான் உன் பெயர் போட்டேன்” என்று கேலி செய்ய,
நேஹா அவனை கேவலமாக ஒரு பார்வை பார்த்தாள். அக்னி “சரி சரி அப்படி மட்டமா பாக்காத.. எனக்கு நிஜமாவே என் பெயர்ல ஆரம்பிக்க பிடிக்கல.. முதல அவங்க பெயர்ல ஆரம்பிச்சிட்டேன், அப்புறம் இந்த ஆபீஸ் திறக்குறதுக்கு முன்னாடியே முடிவு பண்ணிட்டேன் இனி எதாச்சு பிரான்ச் ஓபன் பண்ணா அது உன்னோட பெயர்ல தான்னு.. நீ என்கூட இருந்தாலும் சரி இல்லனாலும் சரி எப்போவும் நான் உனக்கு தான், கண்டிப்பா நீ எனக்கு தான்… உன் மேல கோபமா இருந்தாலும் நீ என் பொண்டாட்டி தான்.. அதனால அப்போவே பண்ணிட்டேன்” என்றான் ஒற்றை கண் சிமிட்டி.

அக்னியின் நேசத்தில் பெண்ணவளின் கண்கள் கலங்கிவிட, அதை அவனுக்கு காட்டாமல் திரும்பிக்கொண்டாள். அக்னி “நீ எதுவும் சொல்ல வேண்டாம்.. உனக்கு மட்டும் பண்றேன்னு நினைக்காத.. நெக்ஸ்ட் சுவேதா பெயர்ல ஓபன் பண்ணலாம்னு இருக்கேன்” என்று அவளை வம்பிழுக்க, பட்டென திரும்பி அவனை முறைத்தவள் “என்ன என்ன.. எவ பெயர் வைப்ப” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் வினவ, அக்னி “வேற யாரு.. நம்ம சுவேதா பெயர்ல தான்” என்றிட, “எவ்ளோ தைரியமிருந்தா அவ பெயரை சொல்லுவ” என்றவள் அவனை மொத்தி எடுத்தாள்.

உடற்பயிற்சிகளின் பயனால் விரிந்திருந்த அவன் திண்ணிய புஜங்களுக்கு மலர் கரங்களின் அடிகள் எதுவும் வலிக்கவில்லை. அவள் கரங்களை பற்றியவன் அவளை தன்னை நோக்கி இழுக்க, அவன் மீதே மோதி நின்றாள். மலரினும் மெல்லிய பெண்ணவளின் மேனியில் கிறங்கியவனின் “இப்போ மட்டும் எங்க இருந்து உனக்கு இவ்ளோ வாய் வருது, இவ்ளோ நேரம் மௌன விரதம் இருந்த” என்று அவள் மூக்கோடு மூக்கை உரச, அவன் நெஞ்சில் உரிமையாக சாய்ந்தவள் “அக்னி ப்ளீஸ் கோபப்படாத, இந்த கம்பெனி உன் ஹார்டுவர்க்… என் பெயர்ல இருக்ககூடாது… அது எனக்கு பிடிக்கில” என்று தன் மனதில் பட்டதை கூற, அக்னி “நீ இப்படி சொல்லுவன்னு எனக்கு தெரியும்” என்றான்.

நேஹா அவனை பாவமாக பார்க்க, அவளை தன்னிடமிருந்து விலக்கியவன் “சரி சொல்லு நம்ம பிரச்சனைக்கு அப்புறம் நான் எப்படி இருந்தேன்” என்று புருவமுயர்த்த, நேஹாவிற்கோ கண்கள் மேலும் கலங்கியது. அவளோ மாட்டேன் என்பதை போல் தலையசைக்க,  “ஹ்ம்ம் விடு.. எனக்கே தெரியாம என்னோட பி.ஜிக்கு அப்ளிக்கேஷன் போட்டு, எங்க அம்மா தான் போட்டாங்கன்னு சமாளிச்சது யாரு” என்று வினவ, நேஹா “நான்தான்” என்றாள்.

அக்னி “யாரும் இல்லாதப்போ எனக்காக வேதா அண்ணாவை வரவச்சது யாரு” என்று வினவ, அதிர்ந்து அவனை நிமிர்ந்து பார்த்தவள் “உனக்கு எப்படி” என்று முடிக்கும் முன் ஒரு கரம் நீட்டி அவளை தடுத்தவன் “கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு” என்றான். நேஹா “நான்தான்” என்றவள் அவனை காணாமல் எங்கோ பார்வையை திரும்ப, அவள் நாடியயை பிடித்து நிமிர்த்தியவன் “நான் சாப்பிடுறனா, தூங்குறனான்னு டெய்லி பார்த்துகிட்டது யாரு” என்று கேட்க, “வேதா அண்ணா” என்றாள். அவள் பதிலில் வாய் விட்டு சிரித்தவன் “அவரை பாக்க சொன்னது யாரு” என்றிட,
நேஹா “நான்தான்” என்றாள் சிறுப்பிள்ளையாய். அக்னி “ஹ்ம்ம் இப்போ சொல்லு.. இதுல நான் என்ன பண்ணேன் இந்த கம்பெனிக்கு, முதல் நான் இருந்தா தான் கம்பெனி இருந்திருக்கும்.. நான் படிக்க, சம்பாதிக்க நினைக்க, கம்பெனி உருவாக்க, இன்னும் ஏன் நான் ஒருத்தன் இருக்குறதே உன்னால தான், அப்போ எந்த விதத்துல நீ உன் பெயரை வைக்க கூடாதுன்னு சொல்ற.. அண்ட் இந்த கம்பெனி நேம்னு மட்டும் இல்ல, என்னோட எல்லாம் உன்கிட்ட இருக்கனும், அத நீ பாத்துக்கணும், அது தான் எனக்கு சந்தோஷம்.. அதுக்காகதான் உன் பெயர்ல ஆரம்பிச்சேன்.. நீ உன் உழைப்பு இல்லாம எதையும் எடுக்கமாட்டனு எனக்கு தெரியும், பட், நீ இல்லாம பியூரோ பில்டர்ஸ் கிடையாது, அக்னி கிடையாது” என்று நீளமாக பேசி முடித்தவனை இமைக்க மறந்து பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.

அவள் பார்வையில் உள்ளுக்குள் புன்னகைத்தவன், அவள் தலையில் தட்டி “முடிச்சிட்டேன்.. தூங்காத” என்றான் குறும்பு மின்ன, நேஹாவோ அவன் பேச்சில் துளிர்த்த விழி நீரை அவளிடமிருந்து காட்டாது திரும்பி நிற்க, அவள் இடையை பற்றி தன்னை நோக்கி திருப்பியவன் “எதுவா இருந்தாலும் என் முன்னாடி பண்ணு… நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்” என்றான் குறும்பாக.
நேஹா அவன் தோளை தட்டியவள் பின் அவன் மார்பில் சாய்ந்துக்கொண்டு “ஐ லவ் யு அகி.. சாரி எதாச்சு உன்ன ஹர்ட் பண்ணிருந்தா” என்றாள். அவள் முகத்தை நிமிர்த்தியவன் “ஹே நீ ஏன் சாரி சொல்ற.. நான் தான் லைப் முழுக்க குட் மார்னிங் குட் நைட் மாதிரி உன்கிட்ட சாரி சொல்லணும்” என்றான் கேலியாக. ஆனால் அவனவளோ அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை, அவன் அருகாமை ஒன்றில் மொத்தமாக உருகி போயிருந்தாள், உருக வைத்திருந்தான் அவன்.

அக்னி “சரி போதும் அழுதது” என்றவன் அவள் முகத்தை அழுத்தமாக துடைத்துவிட்டு, கலைந்திருந்த அவள் முடிகளை சரி செய்தான் பின் “முக்கியமான வேலை இருக்கு” என்றவன் அவள் கைபிடித்து இழுத்து செல்ல, நேஹா “எங்க.. எங்க போறோம்.. கைய விடு நானே வரேன்.. எல்லாரும் பாக்குறாங்க” என்றாள் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில். அக்னி “அஹான் அப்போ என்ன சொன்ன.. வெளிய இருக்கவங்களுக்கு தெரியாது சொன்னல.. இப்போ தெரியும்” என்றான் ஒற்றை கண் சிமிட்டி. நேஹா “அகி ஷட் அப்.. ப்ளீஸ்” என்று கண்களை சுருக்க, அதையெல்லாம் கேட்டால் அவன் அக்னி அல்லவே.

அனைவரின் முன் வந்து நின்றவன் “லிஸன் எவ்ரிவொன்” என்று தொடங்க, அனைவரும் அவனை கவனிக்க, நேஹா “அகி நோ” என்றாள் மென் குரலில்.  அவள் புறம் திரும்பியவன் “நோ” என்றுவிட்டு, ஏனையவர்களிடம் “மீட் மை சூன் டு பி வைப்.. நேஹா.. அண்ட் இது நீங்க நினைக்கிற மாதிரி ஸ்டாப் பாஸ் லவ் இல்ல, என் ச்சைல்ட்ஹூட் லவ்.. என் ஒரே லவ்.. நேஹா.. நேஹா அக்னி பிரதாப்” என்று முடிக்க, அங்கோ பலத்த கரகோஷம்.

கூட்டத்தில் ஒருவன் “சார் எப்போ கல்யாண சாப்பாடு” என்று வினவ, பக்கவாட்டாக திரும்பி நேஹாவை பார்த்தவன் “சீக்கிரமே” என்றான். அக்னி “ஒகே ஆல் கண்டின்யு யுவர் வர்க்” என்றவன் நேஹாவை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டான்.

தற்போது ரேயனின் ப்ரொஜெக்ட் ஒன்றிற்காக அக்னியின் அலுவலகத்தில் தான் ஆரு வேலை செய்துக்கொண்டிருந்தாள். ஆனால் அன்று அவள் வரவில்லை என்பதை அறிந்து தான் அவன் அனைவரின் முன்னும் தங்கள் காதலை போட்டு உடைத்தான். மற்றவர்களிடம் கூறுவது போல் அவளிடம் கூற முடியாதல்லவா..

ரேயன், கிஷோர் மற்றும் கதிர்  கௌதமிற்காக அவன் அலுவலகத்தின் அருகில் இருந்த காபி ஷாப்பில் காத்திருக்க, நேஹாவும் அக்னியும் அவர்களுடன் இணைந்துக்கொண்டனர். ரேயன் “அம்மு.. ஹாய்” என்க, நேஹா “ஹாய்.. என்ன திடீர் மீட்டிங்.. யார பாக்க போறோம்” என்று ஆர்வமாக கேட்க,
ரேயன் “என்ன மாப்ஸ் அம்மு முகத்துல பல்பு ப்ரைட்டா எரியுது.. என்ன பண்ண” என்று விஷமமாக வினவ, அக்னி ஏதோ கூற வரும் முன் கிஷோரும் கதிரும் “கல்யாண அறிக்கை விட்டா எப்படி இருக்கும் முஞ்சு” என்றனர் ஒருசேர.

ரேயன் அவர்களை புரியாமல் பார்க்க, கிஷோர் நடந்தவற்றை கூறினான். ரேயன் “எதே” என்று அதிர, அக்னி “டேய் உங்களுக்கு எப்படி டா தெரியும்.. நானே போறபோக்குல தான் சொன்னேன்.. அதுவும் சொல்லி கொஞ்சம் நேரம் தானடா ஆகுது” என்று அதிர்ந்து வினவ,
கிஷோர் “ஹாஹா.. எங்களுக்கு எல்லா இடத்துலயும் கண்ணு இருக்கு” என்றான் சட்டை காலரை தூக்கி விட்டபடி.

கதிர் “நீங்க எல்லாரும் ஒவ்வொரு இடத்துல இருக்குறப்போ நாங்க என்ன பண்ணோம்னு நினைச்சீங்க” என்று மிதப்பாக வினவ, ரேயன் “என்ன பண்ணிங்க” என்றான் புருவமுயர்த்தி.  கதிரும் கிஷோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு பின் அவர்கள் அமர்ந்திருந்த மேசைக்கு கீழே குனிய,
ரேயன் “டேய் கீழ என்ன தேடுறீங்க” என்று குழம்ப, கிஷோர் “ச்சை.. பட அறிவு இல்லாதவனுங்களையெல்லாம் வச்சிக்கிட்டு” என்று தலையில் அடித்துக்கொள்ள, அதில் வாய் விட்டு சிரித்த நேஹா “கத்தி விஜய் மாதிரி பாக்குறானுங்க.. இப்போ நம்ம பிஜிம் போடணும்” என்க, அக்னி மற்றும் ரேயன் இருவரையும் கேவலமாக பார்த்து வைத்தனர்.

கதிர் “ரைட்டு விடு.. செத்த நாய் மேல எத்தனை லாரி ஏறுனா என்ன” என்று தோளை உலுக்க, கிஷோர் “அதானே.. வாங்க சாப்பிடலாம்” என்றான். ரேயன் “இங்க என்ன விருந்துக்கா கூட்டிட்டு வந்தோம்.. கெளதம் எங்க இருக்கான்னு கேளு டா” என்றிட, கிஷோர் “இதோ வந்திடுவான்” என்றான். நேஹா கிஷோரை புரியாமல் பார்த்து “யாரு கெளதம்” என்று வினவ, அக்னி “ஆரு பிரண்ட்” என்றவன் கௌதமை பற்றியும் ரேயனின் திட்டத்தையும் கூறி முடிக்க, நேஹா “ரேயன் மாஸ் பண்றோம்.. தட்டுறோம் தூக்குறோம்” என்று அவனுடன் ஹைபை அடித்துக்கொண்டாள்.

சரியாக அந்நேரம் கௌதமும், அன்று தான் ஊரிலிருந்து வந்த சித்துவும் உள்ளே நுழைந்தனர். கிஷோர் “கெளதம் இங்க” என்று கைகாட்ட, இருவரும் அவ்விடம் வந்தனர். ரேயன் “வாங்க கெளதம், வா சித்து.. உட்காருங்க” என்றிட,
சித்து “ஹாய் ஹாய்” என்றபடி அமர,
கெளதம் ஒரு சிறு தலையசைப்புடன் அமர்ந்தான். அக்னி அவர்களை பார்த்து பொதுவாக சிரித்து வைத்தான், அவனுக்கு தான் அவர்களிடம் பேசி பழக்கமில்லையே.

நேஹா “ஹாய்.. நான் நேஹா.. ஆரு பிரண்ட்.. இன்பாக்ட் நாங்க எல்லாருமே” என்க, ரேயன் “அம்மு” என்று பதறினான். அதில் அழகாக புன்னகைத்தவள் “சின்ன கரெக்ஷ்ன்.. இவரு அவளோட எக்ஸ் லவர்” என்று அடக்கப்பட்ட புன்னகையுடன் கூற,  ரேயன் “இதுக்கு அதுவே பரவால” என்று சலித்துக்கொண்டான். ரேயன் கூறியதை கேட்டு அனைவரும் சிரிக்க, சித்து நேஹாவின் முன் கை நீட்டி “ஹாய் நேஹா, நான் சித்து” என்று வழக்கம் போல் தன் வேலையை தொடங்கினான், அங்கு அக்னி என்று ஒருவன் இருப்பது அறியாமல்.

நேஹா “ஹாய் சித்து” என்று கை குலுக்க, அக்னி சித்துவை குறுகுறுவென பார்த்தான். அதை கவனித்த ரேயன் “சித்து இன்னும் ஒரு வார்த்தை பேசுன நீ பஸ்பம்தான்” என்றிட, அதில் பதறியவன், “என்ன ப்ரோ சொல்றிங்க” என்று அதிர, “உன் பக்கத்தில ஒருத்தன் இருக்கான் அவன பாத்தியா.. அவன் பொண்டாட்டிக்கு தான் நீ இப்போ கை குடுத்த, அவன் டக்குனு கிளாஸ் எடுத்து அடிச்சாலும் நோ ஆச்சிர்யம்” என்றிட, திருட்டு முழி முழித்த சித்து “சிஸ்டர்.. அண்ணன் எப்பவும் கூட இருப்பேன் சரியா” என்று பல்டி அடிக்க, அனைவரின் முகத்திலும் புன்னகை அரும்பியது. கெளதம் மட்டும் அவர்கள் பேசுவதை அமைதியாக கவனித்துக்கொண்டிருந்தான்.

கதிர் “என்ன கெளதம் அமைதியா இருக்கீங்க” என்று கேட்க,
கெளதம் “அப்படியெல்லாம் இல்ல.. கேட்டுட்டு இருக்கேன்” என்றான். சித்து “அவன் அப்படி தான் ப்ரோ.. சரி விஷயத்துக்கு வாங்க.. நாங்க என்ன செய்யணும்” என்று தீவிரமாக வினவ,
கெளதம் “அதுக்கு முன்னாடி உங்களுக்குள்ள நடந்தத சொல்லுங்க.. உண்மையா என்ன நடந்துச்சோ அதை சொல்லுங்க” என்றான் அழுத்தமாக. அவன் கூற்றே அவன் ஆருவின் பக்கம் என்பதை தெளிவாக எடுத்துரைத்தது.

ரேயன் பெருமூச்சுடன் நடந்தவற்றை கூற, அவன் பேசியதை கேட்ட கௌதமோ “சோ ரெண்டு பேரும் கோபத்துல வார்த்தை விட்டுடீங்க” என்று துளைத்தெடுக்கும் பார்வையுடன் வினவ, இருவரும் சிரம் தாழ்த்தினர். கௌதம் ஒரு பெருமூச்சுடன் “சரி விடுங்க.. நாங்க ஹெல்ப் பண்ணுறோம்” என்றான். அதன்பிறகு என்னவெல்லாம் செய்யலாம் என்பதை பற்றி பேசியவர்களுகிடையே அழகிய நட்பு ஒன்று மலர்ந்திருந்தது.

மறுநாள் காலை அக்னியின் அலுவலகத்திற்குள் நுழைந்த ரேயனை தொடர்ந்து வந்த நவ நாகரீக யுவதியை கண்டு ராகுல் வாயை பிளக்க, சுஷ்மியோ புருவம் சுருக்கி பார்த்துக்கொண்டிருந்தாள். சுஷ்மி “இது யாருடா புது என்ட்ரி” என்று வினவ, தெரியாது என உதட்டை பிதுங்கியவன் “யாரா இருந்தா என்ன.. பாக்க செம்மையா இருக்கா” என்று வழிய, அவனை கேவலமாக பார்த்து வைத்தவள் “துடைச்சிக்கோ” என்னும் போதே ரேயனும் அப்பெண்ணும் அவர்களை கடந்து உள்ளே சென்றனர்.

ஆருவின் அறை கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தவனை நிமிர்ந்து பார்த்த ஆருவின் கண்கள் அவன் பின் நுழைந்த பெண்ணை பார்த்து சுருங்கியது. ரேயன் “வெல்கம் டூ அவர் ஆபிஸ் ரீனா” என்று வரவேற்க, அதில் மென்மையாக புன்னகைத்தவள் ஆருவை கண்டு “ஹே ஆராத்யா.. எப்படி இருக்க” என்றாள் சிநேகமாக. “ம்ம்.. இருக்கேன்” என்றவள் வலுக்கட்டாயமாக புன்னகைத்தாள். ரேயன் “ரீனா.. பீல் ப்ரீ.. உனக்கு எது வேணாலும் என்கிட்ட கேளு” என்றிட, “சியூர்” என்றவள் ரேயனுடனே அமர்ந்துவிட்டாள்.

கல்லூரி முதலே ரேயன் மீது பித்தாகி இருந்தவளுக்கு சரியான வாய்ப்பு கிடைத்துவிட, முடிந்த அளவிற்கு ஆராத்யாவை வெறுப்பேற்ற தயாராகிவிட்டாள்.

ரேயன் ஏதோ வேலை செய்துக்கொண்டிருக்க, வேண்டுமென்றே அவனை உரசிக்கொண்டு நின்றவள் அவனிடம் சந்தேகங்கள் கேட்க, அவனும் கண்ணும் கருத்துமாக அவள் சந்தேகங்களை தீர்த்து வைத்தான். முதலில் அவர்களை கண்டுக்கொள்ளாமல் இருந்த ஆராத்யாவிற்கோ ரீனாவின் செயலில் கோபம் தலைக்கேறியது. “அவ தான் வந்து விழுறான்னு தெரியுதுல.. இவனும் எப்படி இளிச்சிட்டு இருக்கான் பாரு” என்று மனதினுள் அவனை அர்ச்சித்தவள் சிடுசிடுப்பாகவே அமர்ந்திருந்தாள்.

ரீனா விழுவது போல் பாவனை செய்ய, ரேயன் அவள் விழாவண்ணம் தாங்கி பிடித்தான். அவ்வளவு தான் இருந்த கொஞ்ச நஞ்ச பொறுமையும் பறந்து போக, தன் இருக்கையிலிருந்து எழுந்தவள் ரேயனின் கையை பிடித்து தரதரவென இழுத்து செல்ல, ரீனாவோ “கொஞ்சம் பெர்பாமன்ஸ் பண்ண விடுறாளா” என்று அழுத்துக்கொண்டாள்.  எதர்ச்சியாக திரும்பிய ராகுல், ரேயனின் கையை பிடித்துக்கொண்டு செல்லும் ஆருவை கண்டு “போகும் போது ஒரு ஆளு.. வரும் போது ஒரு ஆளு.. ப்பா வாழுறார்டா மனுஷன்” என்று பெருமூச்சு விட்டான்.

ரேயனை மறைவான இடத்திற்கு அழைத்து சென்றவள் “அறிவிருக்கா.. அவ தான் வந்து விழுறான்னா நீயும் இளிச்சிட்டு இருக்க.. இடியட்” என்று எரிந்து விழ, அவளை நக்கலாக பார்த்தவனோ “நான் இடியட்டாவே இருக்கேன்.. ஆனா இந்த இடியட் என்ன பண்ணா உனக்கு என்ன.. நீ ஏன் கோபப்படுற.. ஒருவேளை மேடம்க்கு பொறாமையா” என்றவன் அவளை நெருங்கி அவள் பின்னிருந்த சுவரில் கை  குத்தி நிற்க, இருவரின் சுவாசமும் ஒருங்கே கலந்து வெளியேறியது.

ஆருவோ படபடக்கும் இமைகளை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு “அ..அதெல்லாம் இல்ல.. இது ஆபிஸ்.. உங்க ரொமென்ஸை வெளிய வச்சுக்கோங்க” என்று அவள் முடிக்கும் முன் அவளை உரசும் அளவிற்கு நெருங்கி நின்றான். அவன் நெருக்கத்தில் அவள் விழிகள் தெறித்துவிடும் அளவிற்கு விரிந்துவிட, அவள் கூர் நாசியில் இதழ் பதித்தவன் “இனிமே வெளியவே என்னோட ரொமென்ஸை வச்சிக்கிறேன்” என்றுவிட்டு செல்ல, அவள் தான் அவன் வார்த்தையில் அதிர்ந்து நின்றாள்.

ரேயன் விசிலடித்தபடி அங்கிருந்து செல்ல, ஆருவோ பேயறைந்தார் போல் தன் இருக்கைக்கு சென்றாள். ஆரு செல்வதை கண்ட கிஷோர், “என்ன இவ இப்படி மந்திரிச்சுவிட்ட மாதிரி போறா” என்றெண்ணியவன் இது நிச்சயமாக ரேயனின் வேலையாக தான் இருக்கும் என நினைத்து தன் வேலையை தொடர்ந்தான்.

அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு திரும்பிய ரேயன் அங்கு குழுமியிருந்த மொத்த குடும்பத்தையும் பார்த்து இன்பமாய் அதிர, மித்து ஓடி சென்று “ரே மாமா” என்று அவன் காலை காட்டிக்கொள்ள, “ஹே மித்து குட்டி.. எப்படி இருக்கீங்க” என்றவன் அவளை தூக்கி சுற்ற, மித்துவோ கிளுக்கி சிரித்தாள். பின் அவளே “ஹ்ம்ம் சூப்பர்.. சாக்கி” என்று கை நீட்ட, “இதோ….” என்றவன் உள்ளே சென்று குளிர்சாதனப் பெட்டியிலிருந்த இனிப்பை எடுத்துக்கொடுக்க,  நிரஞ்சனா  “ரேயா ஆல்ரெடி இங்க தாத்தா பாட்டி சித்தின்னு எல்லார்கிட்டயும் வாங்கி சாப்பிட்டா டா” என்று அலுத்துக்கொள்ள,
ரேயன் மித்துவை பார்த்து “இனி நோ சாக்கி.. ஓகே?” என்று வினவ, அவளும் நல்ல பிள்ளையாக தலையாட்டினாள்.

“செல்லம்டா நீ” என்றவன் கை நீட்ட, அதில் ஹைபை அடித்தவள் சாக்லேட்டை உண்ண தொடங்க, நிரஞ்சனா “பாவி.. இவ்ளோ நேரம் நான் கத்துனேன் கேட்டாளா பிரகாஷ்.. இப்போ மாமா சொன்ன உடனே ஓகேவாம்” என்று கணவனிடம் முறையிட, முத்து பற்கள் தெரிய புன்னகைத்தவன் “எப்படி இருக்க ரேயா” என்று நலம் விசாரிக்க, “நல்லாருக்கேன் மாமா… அப்பறம் என்ன மீட்டிங் இன்னைக்கு.. ஏன் வர சொன்னீங்க” என்று அருனிடம் தொடங்கி தன் தந்தையிடம் முடித்தான்.

கண்ணன் “இந்து கல்யாண விஷயம் பேச தான் ரேயா வர சொன்னேன்” என்றிட,
ரேயன் “வாவ்.. நானே பேசணும் நினைச்சேன்” என்றான். சுரேஷ் “அதான் மாப்பிள்ளை ஒரு வருஷம் டைம் கேட்டாரு, இப்போவே எட்டு மாசம் ஆகிருச்சி, அவரும் நல்ல நிலமையில தான் இருக்காரு, சோ இப்போ பேசுன ஒரு மூனு மாசத்துல கல்யாணம் வச்சுக்கலாம்.. அதான்” என்றார். ரேயன் “ஆமா சித்தப்பா.. சரிதான்.. ஆனா கதிர் கிட்ட பேசுனியா இந்து.. அவன் என்ன சொல்றான்” என்று வினவ,
இந்து “அவர்லாம் வேலைக்கு ஆகமாட்டார் அண்ணா.. நீங்க எல்லாரும் பேசுங்க.. ஒத்துக்குவாங்க” என்றிட, ரேயன் “நீயே சொல்லிட்ட.. அப்போ பேசிடலாம்” என்றவன் கண்ணனிடம் “நாளைக்கு போகலாம் பா அவங்க வீட்ல சேர்ந்து பேசிடலாம்… நான் இன்னிக்கு போன் பண்ணி சொல்லிடுறேன்” என்றிட,
கண்ணன் “சரிப்பா” என்றவர் “வாங்க சாப்பிடுவோம்” என்றழைக்க, பல வருடங்களுக்கு பிறகு ஒன்றாக அமர்ந்து நிறைவாக உணவு உண்டனர்.

தொடரும்..

Advertisement