Advertisement

அத்தியாயம் 41

ஆண்கள் இருவரும் தத்தம் துணையுடன் நுழைவதை கண்ட பெற்றோர்களின் மனம் குளிர்ந்திருந்தது.

சிடுசிடுப்பாக தன் பெற்றோர்களின் அருகே சென்று நின்றுக்கொண்ட ஆராத்யா “இங்க எதுக்கு வர சொன்னீங்க.. அவன் சும்மாவே ஆடுவான்.. நீங்க இன்னும் அவன் காலுக்கு சலங்கை கட்டி விடுற மாதிரி எல்லாம் பண்ணுங்க” என்று பொறும, அவர்கள் அவளை கண்டுகொண்டால் தானே.

சிவகுமாரும் நிலாவும் மற்றவர்களிடம் பேசிக்கொண்டிருக்க, ஆராத்யாவோ ஒரு மூலையில் நின்று அலைபேசியை நோண்டிக்கொண்டிருந்தாள். அதே போல் கிஷோருடன் பேசிக்கொண்டிருந்த ஆத்ரேயனின் விழிகள் வண்டாய் தன்னவளை மேய, கிஷோர் “உன் பார்வையே சரியில்லயே” என்று புருவம் சுருக்கினான்.

ஒற்றை கண் சிமிட்டியவனோ “எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துக்குவான்” என்றான் கண்களில் குறும்பு மின்ன, “எதையாவது புரியிற மாதிரி பேசுதா பாரு” என்று தலையில் அடித்துக்கொண்ட கிஷோருக்கு தான் எப்போதும் போல் ரேயனின் செயல்கள் சப் டைட்டிலின்றி கொரியன் படம் பார்ப்பது போல் இருந்தது.

இவர்கள் இங்கு பேசிக்கொண்டிருக்கும் போதே அங்கு ஆராத்யாவின் மீது இந்து ஜூஸை தவறவிட, ஆராத்யாவின் அருகே சென்ற ஷோபனா “அடடா, பார்த்து வர மாட்டியா இந்து” என்று கடிய, “இல்ல பெரியம்மா தெரியாம தான்” என்று அவள் இழுக்க, கண்ணன் “சரி விடு இந்து.. ஆராவை நிரஞ்சனா ரூம்க்கு கூட்டிட்டு போ” என்றார்.

ஆராத்யா “இல்ல பரவால்ல” என்று மறுக்க, வேணி “வாஷ் பண்ணிட்டு வந்திடு ஆரா.. போ” என்று அன்பு கட்டளையிட அதை மறுக்க முடியாது இந்துவுடன் செல்ல, அதை கண்ட ஆத்ரேயனின் இதழ்கள் விஷமமாய் வளைந்தது. நடந்த கூத்தை அக்னி கண்டும் காணாதது போல் நமுட்டு சிரிப்புடன் நின்றிருக்க, கிஷோர் “குடும்பமா சேர்ந்து என்ன நேக்கா திருட்டு தனம் பண்ணுதுங்க” என்று நெஞ்சில் கை வைத்துக்கொண்டான்.

ஆருவை நிரஞ்சனாவின் அறைக்கு அழைத்து சென்ற இந்து “அது தான் வாஷ்ரூம்” என்று கை காட்ட, “ம்ம்” என்றவள் பெருமூச்சுடன் உள்ளே செல்ல, இந்து சத்தமின்றி அங்கிருந்து வெளியேறினாள். இந்து வெளியேறிய நொடி பூனை போல் அவ்வறையினுள் நுழைந்த ரேயன், கதவை தாழிட்டுவிட்டு தன்னவளுக்காக காத்திருந்தான்.

உடையில் இருந்த கரையை எளிதாக சுத்தம் செய்தவளுக்கு மனதில் மிதமிஞ்சிய பாரம் குடிக்கொண்டது. இனி காணவே கூடாது என்று அவள் விலக, அவனோ நிழலாய் அவளை தொடர்கிறான் அல்லவா.. அவன் உண்டாக்கிய காயங்களை மன்னிக்கவும் முடியாது அவன் நினைவுகளை ஒதுக்கிவிட்டு வாழவும் முடியாது காதலேனும் கடலில் தத்தளிக்கும் படகாகி போனாள் அவள்.

குளிர்ந்த நீரால் முகத்தை அடித்து கழுவியவளுக்கு மனதின் வெம்மை சிறிதும் குறையவில்லை. அவள் தான் தன் சுயத்தை இழந்து பல வருடங்கள் ஆயிற்றே. உணர்வின் பிழம்பாய் குளியலறையிலிருந்து வெளி வந்தவள் கட்டிலில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்த ஆத்ரேயனை கண்டு அதிர்ந்து விழித்தாள்.

வந்தது முதல் பாவையவளின் முகத்தில் ஆராய்ச்சி பார்வையை செலுத்த விட்டவனுக்கு அவள் உணர்வுகள் எல்லாம் அத்துபடியே. அழுத்தமான காலடிகளுடன் அவள் வழியை மறைத்தபடி நெருங்கியவன் ஏதோ பேச வரும் முன் ஒரு கரம் நீட்டி அவனை தடுத்தவள் “வழி விடுங்க ஆத்ரேயன்.. உடைஞ்சதை ஓட்ட வைக்க நினைக்காதீங்க.. நீங்க எவ்ளோ முயற்சி செய்தாலும் அதுல இருக்குற கீறல்கள் மறையாது” என்றாள் உணர்வற்ற குரலில்.

“ஊப்” என இதழ் குவித்து ஊதியவன் “முதல மூச்சு விடு டி.. நான் எதுக்கு வந்தேன்னு தெரியாம ஏன் இப்படி மூச்சு முட்ட பேசுற” என்று அவளை நக்கலடித்தவன் ஒரு பையை அவள் கையில் திணித்து “இதை கொடுத்துட்டு வர சொன்னாங்க.. இந்துவை தேடுனேன் ஆளை காணும் சரி நம்மளே கொடுத்துட்டு போவோம்னு வந்தா ரொம்ப தான் கற்பனை பண்ணிக்கிற” என்றுவிட்டு திரும்ப அவள் தான் அவன் கூற்றில் பேவென விழித்தாள்.

கதவை நோக்கி திரும்பியவன், ஏதோ நியாபகம் வந்ததுபோல் அவளை நெருங்கி வர, அவளோ அவனை என்னவென்று பார்க்க, “இன்னொனும் கொடுக்கனும்.. மறந்துட்டேன்” என்றவனை அவள் விழி சுருக்கி பார்க்க, அவள் இடையை பற்றி இழுத்தவன் வேண்டுமென்றே அவள் கன்னத்தில் முத்தமிட்டு சென்றான். அனைத்தும் கண் இமைக்கும் நொடிக்குள் நடந்துவிட, அவள் தான் எப்போதும் போல் அவன் செயலில் அதிர்ந்து நின்றாள்.

சில பல நிமிடங்கள் நிலைத்த அவன் செயலின் தாக்கத்திலிருந்து வெளி வந்தவள் “இன்னிக்கி ஒரு முடிவு எடுத்தே ஆகணும்” என்று அவனை கண்ட மேனிக்கு திட்டியபடி உடையை கூட மாற்றாது அங்கிருந்து வெளியேறினாள்.

வேக நடையுடன் வந்தவள் அங்கு நின்றிருந்த சிவகுமாரை நெருங்கும் போது அவள் அருகே வந்த ஜெகதீஷ் “ஆரு எப்படி இருக்க.. ஆளே மாறிட்ட” என்று ஆச்சிர்யபட, “நல்லா இருக்கேன் பா.. நீங்க” என்று அவரிடம் நலம் விசாரித்தவள் “எனக்கு கொஞ்சம் தலை வலிக்கிது.. நான் வீட்டுக்கு போறேன்” என்று பொதுவாக கூற, கண்ணன் “நீ தனியா போக வேண்டாம் ஆரா” என்னும் போதே “நான் கூட்டிட்டு போறேன்” என்று இரு ஆண்களின் குரல் ஒருசேர ஒலித்தது. அதை கூறியது வேறு யாருமல்ல ரேயனும் அக்னியும் தான்.

ரேயன் “சரி.. நீயே விட்டுடு மாப்ஸ்” என்க, அக்னி “இல்ல ரேயன் நீ போய் விட்டுட்டு வா” என்றான். ரேயன் “பரவால்ல நீ போ” என்றிட, அவர்களை இடைமறித்த கிஷோர் “அட ச்ச ரெண்டு பேரும் போக வேண்டாம்.. நான் போய் விடுறேன்” என்று அவர்களை வாரினான். கிஷோரின் சட்டை காலரை பிடித்த ரேயன் “உனக்கு இந்த சீன்ல டயலாக்யே இல்ல.. நீ ஏன் சம்மந்தமே இல்லாம ஆஜர் ஆகுற” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கேலி செய்ய, கிஷோர் “சரி ஒரு நல்லது பண்ணலாம்ன்னு பார்த்தேன்” என்றான் தோளை உலுக்கி.

ரேயன் “மூடிட்டு போடா” என்றவன் அக்னியிடம் “ரெண்டு பேரும் போவோம்” என்றான். அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்ட ஆருவோ, இன்று இதை பேசி முடித்தே ஆக வேண்டும் என்ற முனைப்பில் இருந்தாள். ஆராத்யா முன்னே செல்ல, ஆத்ரேயனும் அக்னியும் அவளை தொடர்ந்து சென்றனர்.

அக்னி “அவ அமைதியா போறத பார்த்த ஏதோ சரியில்லாத மாதிரி இருக்கு” என்றிட, ரேயன் “சாமி ஆட போறா” என்று அக்னியின் காதில் கிசுகிசுக்க, அக்னியும்  புன்னகையுடன் அமோதிப்பதாய் தலையசைத்தான். ஆண்கள் இருவரின் மனதும் கலவரமாய் தான் இருந்தது. தொழிலில் அரிமாவை போல் வலம் வருபவர்கள், எந்த ஒரு சிக்கலையும் தங்கள் புத்தி கூர்மையை வைத்து முடித்து வைப்பவர்களுக்கு பெண்ணவளை எதிர்கொள்ள தனி தைரியம் தேவைப்பட்டது. இருவரின் இதயமும் பலமாக அடித்துக்கொண்டது ஆனால் அதை முகத்தில் காட்டாது மறைத்தவர்கள், மௌனமாகவே அவளை பின் தொடர்ந்தனர்.

ரேயன் வண்டியை எடுக்க, ஆராத்யா பின்னிருக்கையில் அமர்ந்துக்கொள்ள, அக்னி ரேயனின் அருகே அமர்ந்துக்கொண்டான். ஆண்கள் இருவரையும் துளைத்தெடுக்கும் பார்வை பார்த்தவள், அழுத்தமாக அமர்ந்திருக்க, ரேயன் வண்டியை கிளப்பினான். மூவரும் வெவ்வேறு சிந்தனையில் அமர்ந்திருக்க, மௌனமே அங்கு ஆட்சி செய்தது.

ஆரத்யாவின் வீட்டின் முன் இருந்த பூங்காவில் வண்டியை நிறுத்தியவன் “பேசலாமா” என்று வினவ, “ம்ம்” என்றவளுக்கு பேசி முடிக்க வேண்டி இருந்தது.

பறவைகள் தங்கள் கூட்டை நோக்கி பறந்துக்கொண்டிருந்த பின் மாலை பொழுது. வானம் முழுவதும் இருள் சூழ்ந்திருக்க, பூங்காவின் மின் விளக்குகள் கசியும் ஒளியில் மூவரும் நின்றிருந்தனர். பேச்சை தொடங்கும் விதமாக அக்னி “ஆரு.. சாரி.. உன்ன புரிஞ்சிக்காம தப்பா பேசிட்டேன்” என்று மன்னிப்பு கேட்டவனின் குரலில் இருந்தது எல்லாம் குற்றவுணர்வே. மார்பிற்கு குறுக்கே கை கட்டிக்கொண்டு நின்றிருந்த ஆரு “உங்களை மன்னிக்கிற அளவுக்கு நான் யாரு மிஸ்டர் அக்னி.. நீங்க என்கிட்ட மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியமே இல்ல.. நான் வெட்கம் கெட்டவ அக்னி.. எல்லார் முன்னாடியும் தப்பா நடந்துக்குவேன்.. அவன் கூட குடும்பம் நடத்துவேன்.. உங்க நட்பை மதிக்க தெரியாதவ.. என்கிட்ட மன்னிப்பு கேட்டு நீங்க ஏன் உங்க லெவல்ல இருந்து இறங்கி வரீங்க” என்றவளுக்கு இன்றும் அவன் வீசிய வார்த்தைகள் காதினுள் ரீங்காரமிட்டது.

ரேயன் “பிடிவாதம் பிடிக்காத தியா.. உன்னால எங்க ரெண்டு பேரையும் வெறுக்க முடியாது” என்றிட அவனை ஏளனமாக பார்த்தவள் “ஓ.. வாங்க மிஸ்டர் ஆத்ரேயன்.. இப்போ இந்த அக்னி நல்லவன்ல.. உங்களுக்கு வேண்டாம்னா எல்லாரும் ஒதுங்கிடனும்.. வேனும்னா எல்லாரும் சேர்ந்திடனுமா” என்று முறைத்தாள். அக்னி “எல்லாத்தையும் மறந்திடு ஆரு.. நீ நினைச்சது இது தான.. நாங்க ரெண்டு பேர் சேர்ந்திட்டோம்.. இன்னும் எதுக்கு கோபத்தை இழுத்து பிடிச்சிட்டு இருக்க.. ப்ளீஸ்டி.. பேசு” என்றான் இறைஞ்சலாக.

“தயவுசெய்து விட்டுடு அக்னி.. புரிதலும் நம்பிக்கையும் காதலுக்கு மட்டுமில்ல நட்புக்கும் தான்.. இதுவரை நான் உன்கிட்ட ஏதாவது மறைச்சிருக்ககேனா.. இல்லையே.. இதை எப்படி உன்கிட்ட சொல்லுறதுன்னு மனசுக்குள்ள ஒரு தடுமாற்றம்.. ஒரு பயம் அவ்ளோ தான்.. அதனால தான் உன்கிட்ட என்னால சொல்ல முடியல.. சின்ன விஷயத்தை கூட மறைக்காத நான் இவ்ளோ பெரிய விஷயத்தை உன்கிட்ட இருந்து மறைப்பேன்னு எப்படிடா நினச்ச.. அப்ப அவ்ளோ தான் நீ என்ன புரிஞ்சிக்கிட்டதா.. எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா” என்று கோபமாக ஆரம்பித்தவள் அவன் சட்டையை பற்றி கண்ணீரில் முடிக்க, அவன் கண்களும் கலங்கியது. மறுபக்கம் நின்றிருந்த ரேயனின் கண்களும் மெலிதாக கலங்கியது, அவர்களின் நட்பு என்றுமே அவனுக்கு வியப்பு தான்.

ஆருவை தோளோடு அணைத்துக்கொண்டவன் “சாரிடி.. இனி எப்போவும் இப்படி பேச மாட்டேன்” என்றான் கெஞ்சும் குரலில். கண்ணை துடைத்துக்கொண்டு அவனிடமிருந்து விலகியவள் ரேயனை பார்க்க, அவனும் காதை பிடித்து “சாரி” என்றான். அவனை உறுத்து விழித்தவளோ “பேசாத.. நீ பேசவே பேசாத.. நான் நடிச்சேன்னாடா.. நான் உன்ன அசிங்கப்படுத்துனேன்னா.. மூஞ்சில முழிக்காதன்னு சொன்னல.. இப்போ மட்டும் எதுக்கு வர.. போ.. ரெண்டு பேரும் போங்க.. எனக்கு யாரும் வேண்டாம்” என்று கத்தியவள் மனதின் பாரம் தாங்க முடியாது அங்கேயே மடங்கி அமர்ந்தாள். அவளால் எவ்வளவு முயன்றும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.

அழுதால் மட்டுமே மனதின் பாரம் குறையும் என்றறிந்த ஆண்கள் இருவரும் அவளை சிறிது நேரம் அழ விட்டனர். மனதின் பாரம் குறையும் வரை அழுதவளை பார்க்கவே பரிதாபமாக இருந்தது. பட்டாம்பூச்சியாய் சிறகடித்து பறந்தவளை இப்படி பார்க்கும் போது ஆண்கள் இருவரின் மனதிலும் வேதனை மட்டுமே மிஞ்சி இருந்தது.

அவளை தன் நெஞ்சோடு புதைத்துக்கொண்ட ரேயனோ “கோபமா பேசுனாலும் அடுத்த நாளே உன்கிட்ட தானடி வந்து நின்னேன்.. நீ இல்லாம நரகமா இருந்துச்சுடி” என்றவன் தொடர்ந்து “ஐ அம் சாரி தியா.. ஐ லவ் யூ” என்று அவள் உச்சியில் இதழ் பதிக்க, அக்னியோ குற்றவுணர்வில் தவித்துக்கொண்டிருந்தான்.

ரேயனின் கைகளை தட்டிவிட்டவளோ “ரெண்டு பேரும் பேசாதீங்க.. அதான் ரெண்டு பேரும் நான் வேண்டாம்னு விட்டு போனீங்கல.. இப்போ மட்டும் என்ன அக்கறை” என்று சிறுப்பிள்ளையாய் சிலுப்பிக்கொண்டவள் “எனக்கு வீட்டுக்கு போனும்” என்றிட, ரேயன் “எங்க ரெண்டு பேருக்கு முதல பதில் சொல்லுடி” என்றான். ஆரு “என்ன சொல்ல.. உங்களை மன்னிக்கிற அளவுக்கு பெரிய மனசெல்லாம் எனக்கில்லை” என்றவள் விறுவிறுவென முன்னே செல்ல, சலிப்பாக தலையசைத்த ஆண்களோ “வேதாளம் திரும்பவும் முருங்கை மரம் ஏறிடுச்சு” என்றனர் ஒருசேர. பின் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக்கொள்ள, அக்னி “வா.. அப்பறம் தனியா போனாலும் போயிடுவா” என்றபடி அவள் பின் சென்றான்.

தொடரும்

Advertisement