Advertisement

                  அத்தியாயம் 40

         அக்னி தன் சட்டையின் கையை மடக்கிவிட்டுக்கொண்டு அடிக்க எத்தனித்த சமயம் அவனை தடுத்து ரேயன், “மாப்ஸ் சட்டையை இந்த பயலுக்காகலாம் கசக்காத” என்றபடி அதனை சரி செய்து விட, அக்னியோ அவனை புரியாமல் ஏறிட்டான்.

இம்ரான் “டேய் ரொம்ப  பிழியாதிங்கடா.. முடியல என்னால.. என்ன ரேயா பயத்தை காட்டிக்காம மெயின்டைன் பண்றியா” என்று நக்கலாக கேட்க,
அக்னி “டேய் உனக்கெல்லாம்
அறிவே இல்லையா” என்றான் சலிப்பாக.
இம்ரான் “நீங்க எதுக்கு தேவையில்லாம  நடுல வரீங்க மிஸ்டர் அக்னி பிரதாப்.. அப்பறம் சேதாரம் ரொம்ப மோசமா இருக்கும்” என்று மிரட்டல் விட, ரேயன் அவனை அழுத்தமாக பார்த்துக்கொண்டு  “என்னடா செய்வ, என்ன செஞ்சிருவ.. எங்க யார்மேலயும் உன் நுனி விரல கூட பட விடமாட்டேன்” என்றான் அடி குரலில்.

  இம்ரான் அவன் அடியாட்களுக்கு கண் காட்ட, அக்னி ரேயனை குழப்பமாக ஏறிட்டான். ரேயன் “இது சினிமா இல்ல மாப்ஸ், நம்ம சண்டை போட்டா நமக்கும் கண்டிப்பா அடி படும், அப்பறம் என் அம்முக்கு யாரு பதில் சொல்றது, உன் ஆருக்கு யார் பதில் சொல்றது..” என்று மெல்லிய புன்னகையுடன் வினவ, ரேயனின் இந்த மாறான விளிப்பு அக்னியின் இதழிலும் ஒரு புன்முறுவலை பூக்க செய்தது.

அக்னி “ஓகே புரிஞ்சிது.. கிச்சா எங்க” என்று சுற்றிமுற்றி பார்க்க, அவனை மெச்சும் பார்வை பார்த்த ரேயன் “மாப்ஸ்க்கு இருக்க அறிவே அறிவு.. கிச்சா.. போதும் வா.. சாங் போட்டுலாம் உனக்கு என்ட்ரி வைக்கமுடியாது” என்று அழைத்த நொடி இம்ரானின் அடியாட்கள் ரேயன் மற்றும் அக்னியை நோக்கி பாய, கிஷோர் அதற்கு இரு மடங்கு அடியாட்களுடன் உள்ளே நுழைந்தான். கிஷோருடன் உள்ளே நுழைந்தவர்கள் இம்ரானின் ஆட்களை கவனித்துக்கொள்ள, கிஷோர் கண்ணனின் அருகே சென்றான்.

இவ்வளவு நேரம் ரேயன் அக்னியின் செயலை புரியாமல் பார்த்துக்கொண்டு இருந்த கண்ணன், இப்பொழுது கிஷோரை பார்த்து “என்னடா போலீஸ கூட்டிட்டு வருவன்னு பாத்தா, நீயும் ஆள் கூட்டிட்டு வந்திருக்க” என்று வினவ,
கிஷோர் “ஐயோ அப்பா, என்ன நீங்க.. போலீஸ் என்னிக்கு டைம்க்கு வந்தாங்க” என்றிட,
கண்ணன் “என்ன டா உளறுர” என்றார் புருவம் சுருக்கி.

கிஷோர் “அப்பா அவங்ககிட்ட இன்போர்ம் பண்ணியாச்சு, ஆனா அவங்கதான் இந்த பயலும் இவனுக்கு வேலை செய்யுற குண்டனுங்களும் ஓவரா ஆடிருக்கானுங்க, இங்க வச்சா ஈஸியா வெளிய வந்திடுவாங்க.. நீங்க கொஞ்சம் கவனிச்சு விடுங்க அப்பறம் நாங்க மாஸ் என்ட்ரி குடுக்குறோம்னு சொல்லிட்டாங்க..” என்றான் கதை கூறுவது போல். கண்ணன் அவனை சந்தேகமாக பார்க்க, “டாடி.. பிலீவ் மீ.. வேணும்னா உங்க பிள்ளைக்கிட்ட கேளுங்க” என்றான் கள்ளச்சிரிப்புடன்.

கண்ணன் ரேயனிடம் பேச தயங்க,
ரேயனுக்கும் அதே நிலை தான், இதை உணர்ந்த அக்னி “சரி ரேயன் எப்போ வீட்டுக்கு போக போற” என்று எடுத்துக்கொடுக்க, மெல்லிய புன்னகை ஒன்றை உதிர்த்தவன் “இன்னைக்கு ஈவினிங் போயிடுவேன்” என்றான் சமாதானமாக. பின் கிஷோரிடம் திரும்பிய ரேயன் “நீயும் வாடா” என்றழைக்க, கிஷோரோ “அப்போ அக்னி” என்று யோசனையாய் பார்க்க,
அக்னி “ஹே இல்ல இல்ல” என்றான் மறுப்பாக. ரேயன் “நீயும் வரனும்.. அம்முவையும் கூட்டிட்டு வா” என்றவன் பின் அவன் அருகே சென்று “நான் உனக்கு ஹெல்ப் பண்றேன் மாப்ஸ்” என்றான் கிசுகிசுப்பான குரலில்.

மெல்லிய புன்னகையை சிந்திய அக்னியிக்கு அதற்கு மேல் ரேயனிடம் பேசாமல் இருக்க முடியவில்லை. அக்னியால் இயல்பாக பேச முடியவில்லை என்றாலும் சிறிது சிறிதாக பேச முயற்சித்தான்.

கிஷோரை அழைத்த ரேயன் கண்ணனை வீட்டுக்கு அழைத்து செல்லும்படி பணிக்க,  கிஷோர் “வாங்க அப்பா போலாம்” என்று அவரை அழைத்துக்கொண்டு சென்றான். கண்ணன் அங்கிருந்து செல்லும் போது  ரேயனை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றார், ரேயன் அதை கண்டும் காணாதது போல் நின்றிருந்தான்.

அவர்களை தொடர்ந்து அக்னியும் வாசலை நோக்கி திரும்ப, ரேயன் “அக்னி ஒரு நிமிஷம்” என்றழைக்க, அக்னி அவனை ‘என்ன’ என்பது போல் பார்க்க, ரேயன் “தேங்க்ஸ்” என புன்னகைக்க, அக்னியும் புன்னகைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

ரேயனின் ஆட்கள் இம்ரானின் ஆட்களை சுற்றி வளைத்திருக்க, இம்ரானை நோக்கி சென்றவன், “நீ என்னவேணா பண்ண நினைச்சிருக்கலாம், ஆனா என் தங்கச்சி மேல கை வைக்க பாத்து தப்பு பண்ணிட்ட.. உன்ன என்ன பண்ணலாம்” என்று அவனை பார்வையால் எரித்துக்கொண்டிருந்த ரேயனின் இதழ்கள் வில்லங்கமாய் விரிய, அதில் எச்சிலை விழுங்கிய இம்ரான் “வேண்டா ரேயன்” என்று அப்போதும் எச்சரிக்க,
ரேயன் “ஐயோ எனக்கு வேணும்” என்றான் ராகமாக.

இம்ரான் “நான் சும்மா இருக்கமாட்டேன் ரேயன்” என்று மீண்டும் எச்சரிக்க,
எரிச்சலாக அவனை ஏறிட்ட ரேயனோ “டேய் நீயே இருக்கமாட்டேன்னு சொல்னுறேன்.. நீ டயலாக் அடிச்சிட்டு இருக்க” என்று அவனை கேவலமாக ஒரு பார்வை பார்த்தான். ரேயனின் கூற்றில் இம்ரானின் அடியாட்கள் சீற, “பார்ரா.. விசுவாசமா” என்று நக்கலடித்தவன் இம்ரானிடம் “டேய் என் அப்பாதான் இந்த நியாயமா இருக்கனும்.. அது இதுன்னு இவ்ளோ நாளா உன்ன லீகளாவே ஹேண்டில் பண்ணாரு ஆனா சத்தியமா நான் அப்படி இல்ல.. உன் பிசினஸ் எல்லாத்தையும் இன்னைக்கு சாயந்தரமே  தரமட்டம் ஆக்கிடுவேன்.. யூ நோ.. அதுக்கு தான் எல்லாரும் என்ன ஆத்யன்னு கூப்பிடுறாங்க.. ஆத்யனோட அர்த்தம் என்னன்னு தெரியுமா” என்று புருவமுயர்த்தியவன் பின் அவனே “தெரிஞ்சிருக்கும்.. இல்லன்னா இன்னிக்கி தெரிய வைப்பேன்” என்று அழுத்தமாக கூறியவன் தன் ஆட்களிடம் “பசங்களா.. இங்க இருக்க ஒருத்தனை விடாம எல்லாரையும் நல்லா துவச்சு தொங்க போடுங்க.. கொஞ்ச நேரத்துல போலீஸ் வந்து அவங்களை காய போடுவாங்க” என்றான் கண்ணில் கூளர்ஸை மாட்டியபடி.

ரேயன் அங்கிருந்து வெளியேறிய சிறிது நேரத்தில் காவல் அதிகாரிகள் இம்ரானின் ஆட்களையும் அவனையும் கைது செய்தனர். பிரகாஷின் மூலம் அன்று மாலையே நீதிமன்றத்தில் அவர்கள் ஒப்படைக்கப்பட, இம்ரானுக்கு ஏழாண்டுகள் சிறை தண்டனையும் அவன் அடியாட்களுக்கு இரண்டாண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.

வீடு வந்து சேர்ந்த கண்ணன் நடந்த அனைத்தையும் ஷோபனாவிடம் தெரிவிக்க அவருக்கோ சந்தோஷம் தாளவில்லை. மகன் கோபங்களை துறந்து வீடு திரும்புகிறான் என்பதே அவருக்கு நிம்மதியை தர, வேலையாட்கள் அனைவரிடமும் அதை தெரிவித்து தன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். வேணி காதிற்கும் இந்த செய்தி வந்தடைய, அடுத்த நிமிடமே மகளை அழைத்துக்கொண்டு அங்கு சென்றுவிட்டார்.

இந்து “பெரிம்ஸ் வாங்க ஒரு கூட்டு விழா நடத்துவோம்..” என்க, ஷோபனா அவளை புரியாமல் பார்க்க, வேணி “என்ன டி உளறுர” என்று வினவ, “ஐயோ.. கெட் டு கெதேர தான் அப்படி சொன்னேன்.. இது கூட தெரியல உங்களுக்கு.. ச்ச ச்ச….” என்று சலித்துக்கொள்ள, அவள் காதை பிடித்து திருகிய வேணி “வாய்டி உனக்கு” என்றிட, ஷோபா “அவ சொல்றதும் நல்லாதான் இருக்கு வேணி.. நம்ம சின்ன பார்ட்டி ரெடி பண்ணலாம்.. வெறும் நமக்கு வேண்டியவங்கள மட்டும் கூப்பிடலாம்” என்றார்.

ஷோபாவை கட்டிக்கொண்ட இந்து “செம்ம பெரிம்ஸ்.. வேற லெவல்.. நான் போய் என் ஆளுங்களை கூப்பிடறேன்” என்று எழ,
ஷோபா “உன் ஆளுங்களையா இல்ல உன் ஆளயா” என்று நக்கலாக கேட்க,
இந்து “ஐயோ பெரியம்மா.. எல்லாரையும் தான்” என்று சிணுங்கியவள்  சிரித்துக்கொண்டே அங்கிருந்து ஓடிவிட்டாள். ஷோபனா ரேயனுக்கு அழைத்து பார்ட்டியை பற்றி தெரிவிக்க, மனதில் சில திட்டங்களை தீட்டியவன் “ஓகே ம்மா.. உங்க மருமாகளோட வரேன்” என்றவன் அதற்கான திட்டங்களை தீட்டியபடி ஆருவின் அலுவகத்திற்கு சென்றான்.

கதிர்,கிஷோர், அக்னி, நேஹா மற்றும் ஆருவின் பெற்றோருக்கு அழைத்தவள் பார்ட்டியை பற்றி தெரிவிக்க, பெண்கள் இருவரை தவிர்த்து மற்ற அனைவரும் ஆர்வமாகவே கிளம்பினர்.

அக்னியும் சில திட்டங்களை தீட்டியபடி இல்லத்திற்கு சென்றான். அன்று மைதானத்தில் நடந்த நிகழ்விற்கு பின் அவன் தன் இல்லத்திற்கு சென்றான், பல வருடங்களுக்கு பின் வீட்டிற்கு வந்த மகனை பார்த்த கல்பனாவிற்கு கண்ணீரே வந்துவிட்டது. மகனை கட்டிக்கொண்டு கண்ணீர் விட்டவர் அவனை அங்கே தங்கிவிடும் படி கேட்க, அவனோ வேதாவை மனதில் வைத்து அதை மறுத்துவிட்டான். இத்தனை ஆண்டுகள் தன்னை கண்ணும் கருத்துமாய் பார்த்துக்கொண்டவரை அப்படியே விட்டுவிட அவனுக்கு மனம் வரவில்லை. அக்னியின் பெற்றோர்களுக்கும் அவன் முடிவே சரியென பட, அவன் விருப்பப்படியே விட்டுவிட்டனர்.

வீட்டிற்கு வந்து பார்டிக்காக தயாரானவன்   வேதாவிடம் “வேதா அண்ணா.. நான் இன்னிக்கு ஒரு பார்ட்டிக்கு போறேன்.. வர லேட் ஆகிடும் அதனால நீங்க சாப்பிட்டு தூங்கிடுங்க” என்றான். வேதா “தம்பி அப்போ நீ வர ஒரு 9 மணி ஆகிடுமா” என்று வினவ, “ஆமா ண்ணா ஆகிரும்.. ஜாக்கிக்கும் சாப்பாடு வச்சிருங்க.. சாப்பிடாமா அடம் புடிச்சாலும் சாப்பிட வைங்க..” என்று கூறிக்கொண்டே ஜாக்கயின் தலையை தடவிக்கொடுத்தவனின் குரலில் இருந்த உற்சாகத்தை கண்டு வேதாவின் மனம் நிறைந்தது.

வேதா “இப்போலாம் உன்ன பாக்க ரொம்ப நல்லா இருக்கு பா.. இப்படியே இரு” என்றார் மனம் நெகிழ்ந்து. அக்னி அவரை அனைத்துக்கொண்டு “நீங்களும் ஜாக்கியும் இல்லன்னா நான் என்ன ஆகிருப்பேன்னு தெரியலண்ணா, என்னைக்கும் உங்களை மறக்கமாட்டேன், எப்போவும் உங்கக்கூட தான் இருப்பேன்” என்றான் மனமார்ந்து. அக்னியின் வார்த்தைகளில் அவருக்கு கண்கள் கலங்கியது.

அக்னி “சரிண்ணா நான் போயிட்டு வரேன்” என்றிட, வேதா “தம்பி…” என்று தயங்க அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை உணர்ந்தவன் “சொல்லுங்க உங்க நேஹா பாப்பா தான.. அவளை பார்க்கதான் போறேன்” என்றான் மந்தகாச புன்னகையுடன். அதை கேட்ட வேதாவின் முகத்திலும் புன்னகை அரும்ப “ரொம்ப சந்தோசம் ப்பா” என்றார்.

வண்டியை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து கிளம்பியவன் நேராக தன் பெற்றோர்களை அழைக்க காலனிக்கு சென்றான். எப்படியும் நேஹாவின் வீட்டை  கடந்து தான் செல்லவேண்டும் என்பதால் பின் பக்கமாக வந்தவன் காரை நிறுத்திவிட்டு வீட்டினுள் நுழைந்தான்.

அக்னி வீட்டினுள் நுழைய, கல்பனா “எவ்ளோ நேரம் டா” என்று பரபரக்க,
அக்னி “சாரி மா கொஞ்சம் லேட் ஆகிருச்சு” என்றான். கல்பனா “யாரோ பலமா ரெடி ஆனா மாதிரி இருக்கே” என்று அவன் உடையை பார்த்து சொல்ல, அதில் முத்துபற்கள் தெரிய புன்னகைத்தவன் “அப்பா எங்க” என்று வினவ, “மேல இருக்காரு, அவரும் எப்பயோ ரெடி” என்றார். அக்னி “சரி நான் போய் கூட்டிட்டு வரேன்.. கிளம்பலாம்” என்று படிகட்டின் அருகே செல்ல,
கல்பனா “இருந்தாலும் கொஞ்சம் ஓவர் தான் டா அக்னி.. நான்தான் உனக்கு பர்ஸ்ட் சொல்லிட்டேன்..” என்று அவனை வம்பிழுக்க, அவர் கன்னத்தை கிள்ளியவன் “எப்பவும் நீங்கதான்.. இப்போ அவரை பாத்துட்டு வரேன்” என்று மேலே சென்றவன் அவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு அவருடன் கீழே இறங்கினான்.

இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்திருப்பதை அப்போது தான் கவனித்த கல்பனா “அட பாவி.. இது எப்போ.. அதான் என்னையும் இவரு சான்டல் கலர் போட சொன்னாரா.. ஆனா நீ சொல்லல பார்த்தியா” என்று முகத்தை தூக்கி வைத்துக்கொள்ள, “நான்தான் ம்மா சொல்ல சொன்னேன்.. இப்போ வாங்க போலாம்.. உங்க மருமகளை வேற கூப்பிட்டு போனும்” என்றான். அவன் மருமகள் என்று கூறியதை கேட்ட
கல்பனாவும் ஜெகதீஷும் அதிர,
ஜெகதீஷ் “யாரு அக்னி.. சொல்லவே இல்லை” என்று வினவ, கல்பனா “நீயாயப்படி நான் தான் இதை கேட்கணும்” என்றார் முறைப்புடன்.

ஜெகதீஷ் “அப்போ கேளு” என்று அடக்கப்பட்ட புன்னகையுடன் கூற, கல்பனா “சொல்லு டா.. யாரு.. எப்போத்துல இருந்து.. எங்க இருக்கா”  என்று கேள்விகளை அடுக்க,
அக்னி “ஸ்கூல்ல இருந்து” என்றான் மார்பிற்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு. “எதே ஸ்கூல்ல இருந்தா” என்று கல்பனா வாயை பிளக்க, ஜெகதீஷிற்கு ஏதோ புரிவது போல் இருந்தது.

கல்பனா “யாரு டா” என்று வினவ,
ஜெகதீஷ் “இன்னுமா உனக்கு தெரியல” என்று கேட்க, கல்பனா “ஏன் உங்களுக்கு தெரிஞ்சிருச்சா..யாரு சொல்லுங்க பாப்போம்” என்று கேலியாக வினவ,
அக்னியும் “ஆமா சொல்லுங்க பாப்போம்” என்றான் ஆர்வமாக.
ஜெகதீஷ் “உன் புள்ள யார உத்து உத்து பாப்பான்னு யோசி உனக்கே தெரியும்” என்று அவர் பீடிகை போட, கல்பனா “ஐயோ தெரியல.. நீங்களே சொல்லுங்க” என்றிட, ஜெகதீஷ் “அட.. என்ன அக்னி, நம்ம நேஹா தான” என்று சரியாக கணிக்க, அக்னியோ அவர் கூற்றில் அதிர்ந்து தான் போனான்.

அக்னி “எப்படி பா.. சான்ஸே இல்ல” என்று மெச்ச, கல்பனா “அட பாவி நம்ம புள்ளையேவா.. பிராடு.. அவளுமா” என்று வினவ, “அவளை நான் பண்ண கொடுமைக்கு இன்னும் என்ன மர்டர் பண்ணாம வச்சிருக்கான்னு நீங்க சந்தோசப்படனும்” என்றான் நக்கலாக. ஆனால் அவன் குற்றவுணர்வே அவனை அவ்வாறு பேச வைத்தது.
ஜெகதீஷ் “இப்போ என்ன சொல்ல வர” என்று புருவம் சுருக்க, அக்னி “போற வழில உங்களுக்கே புரியும், வாங்க.. இனி நான் பண்ண போறதுக்கெல்லாம் ஹெல்ப் பண்ணுங்க போதும்” என்றபடி அவர்களை அழைத்துக்கொண்டு சென்றான்.

நேஹாவின் தாய் தந்தை இருவரும் தங்கள் ஊர் திருவிழாவிற்கு சென்றுவிட்டனர், நேஹா தனக்கு வேலை இருப்பதாக கூறி மறுத்துவிட்டாள். இதை தன் உளவாளி கதிரின் மூலம் அக்னி அறிந்துகொண்டான். கல்பனா மற்றும் ஜெகதீஷுடன் கிளம்பியவன் நேஹாவின்  வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தவும் நேஹா மற்றும் ரித்து வெளியே வரவும் சரியாக இருந்தது. ரித்துவை வீட்டில் தனியே விட்டு செல்ல மனமின்றி நேஹா அவளையும் தன்னுடன் அழைத்துக்கொண்டாள்.

அக்னி வந்ததை பார்த்த ரித்து “ஹாய் அண்ணா.. செம்ம டைமிங்ல வரிங்க” என்று குதூகளிக்க, கல்பனா “அட நீ வேற பத்து நிமிஷமா இங்க கொஞ்சம் பின்னாடி தான் இருந்தோம், உங்க வீட்டு கேட் திறக்குற சத்தம் கேட்டு கிட்ட வந்தான்” என்று அக்னியை வார,
அக்னி “மா” என்றான் பல்லை கடித்துக்கொண்டு.
ஜெகதீஷ் “நீ கொஞ்சம் சும்மா வேடிக்கை பாரு” என்றிட, கல்பனா “ரொம்பதான்.. இப்போ என் டயலாக் தான்.. வா நேஹா போலாம் ஏறு.. நாங்களும் ரேயன் வீட்டுக்கு தான் போறோம்” என்றழைக்க,
அக்னி நேஹாவையே பார்த்துக்கொண்டு இருந்தான்.

நேஹா அவன் பார்வையை தவிர்த்து “இல்ல மா நாங்க ஆட்டோ புக் பண்ணிட்டோம்.. வந்திடும்” என்று மறுக்க,
அக்னி “அப்படியா ரித்து” என்று சந்தேகமாக வினவினான். ரித்து “இல்ல ண்ணா.. இன்னும் பண்ணல” என்று போட்டு கொடுக்க, நேஹா அவளை தீயாய் முறைக்க, அதில் அவரசமாக மறுத்தவள் “இல்ல ண்ணா பண்ணிட்டோம்.. இப்போ வந்துரும்” என்றாள்.

ஜெகதீஷ் “பண்ணாலும் பரவால்ல.. கேன்சல் பண்ணிடுங்க.. நைட் நேரம் அதுல போக வேண்டாம்.. வந்து ஏறுங்க” என்று அதட்ட அது சரியாக வேலை செய்தது. நேஹா பின்னிருகையில் அமர செல்ல, அக்னி ரித்துவிற்கு கண் காட்ட, அதை புரிந்துக்கொண்டவள் “நான் தான் பின்னாடி.. முன்னாடி ஏசி ரொம்ப வரும்.. அம்மா அப்பா நான் பின்னாடி இருக்கவா” என்று கேட்க, கல்பனா “வாடா வந்து உட்காரு” என்றார்.

அக்னி அடக்கப்பட்ட புன்னகையுடன் நேஹாவை பார்க்க, அவளோ வேறு வழியின்று முன்னிருக்கையில் அமர்ந்தாள். ரித்து ஜெகதீஷ், கல்பனாவுடன் கதை அளந்துக்கொண்டு இருக்க, அக்னி “ஹே வாயாடி.. கொஞ்சம் கேப் விட்டு பேசு” என்று அவளை வம்பிழுக்க, ரித்து “என்னால உங்கள மாதிரி சாமியார் மாதிரி எல்லாம் இருக்கமுடியாது” என்றாள் உதட்டை சுழித்து.

கல்பனா “அதான.. நீ வீட்டுக்கு வா ரித்து.. எனக்கும் ஒரு பொண்ணு இல்லன்னு ரொம்ப நாளா ஏக்கம் இருக்கு.. எங்க கூடவே இருந்திடு” என்றவருக்கு பெண் பிள்ளை என்றாள் கொள்ளை பிரியம். அவர் தன்னை அழைத்தவுடன் ரித்துவின் கண்கள் கலங்கிவிட,
அக்னி “என்ன சத்தத்தை காணும்” என்று கண்ணாடியினூடு பின்னால் பார்த்தான். ரித்துவின் கலங்கிய கண்களை கண்ட அக்னி “ஹே என்ன இது” என்று பதற, நேஹாவும் அப்போது தான் ரித்துவை கவனித்தாள்.

ரித்துவின் கரத்தை பற்றியவள் “என்ன ரித்து இதெல்லாம்.. அழாத டா” என்று அவளை சமாதானம் செய்ய, கல்பனா “சாரிடா உன் இஷ்டம் தான்.. தப்பா எடுத்துக்காத” என்றார் மெல்லிய குரலில். அவருக்கோ தான் அவளை அழைத்ததால் தான் அவள் அழுகிறாளோ என்ற எண்ணம். ரித்து “ஐயோ அம்மா.. ஏன் நீங்க சாரி கேக்குறிங்க, நீங்க என்ன கூப்பிட்ட சந்தோசத்துல தான் கண்ணுல தண்ணி வந்திடுச்சு” என்றாள். அவள் கண்கள் கலங்கி இருக்க, அவள் இதழ்களோ அதற்கு மாறாக ஆழ்ந்த புன்னகையை சிந்தியது.

நேஹா “எப்போவுமே நீ சிரிச்சிட்டே தான் இருக்கனும்.. சரி எப்போ அங்க போற” என்றாள் பேச்சை மாற்றும் பொருட்டு. நேஹா நினைத்ததை போல் கண்ணை துடைத்துக்கொண்ட ரித்து “என் திங்ஸ்லாம் நீங்களே வச்சுக்கோங்க, நான் அப்படியே போறேன்” என்றாள் சிறு பிள்ளையாய். அவள் கண்ணீரே அவளின் அன்பிற்கான ஏக்கத்தை புரிய வைக்க, கல்பனா “அவ்ளோதான்.. எனக்கு ஒரு பொண்ணு வந்துட்டா.. இனி உன் பர்த்டே இன்னைக்கு தேதி தான் சரியா” என்றிட,
ரித்து “ஹைய் அப்போ ரெண்டு பர்த்டே.. சூப்பர்” என்றாள் குதூகலமாக. நேஹா “குட் கேர்ள்” என்றுவிட்டு திரும்ப அக்னி அவளை விழுங்கும் பார்வை பார்த்துக்கொண்டிருந்தான்.

பின் அவனே “நீ எப்போ வீட்டுக்கு வர போற” என்று நேஹாவை பார்த்து கேட்க,
நேஹா “என்னது” என்று புருவம் சுருக்க,
அக்னி “இல்ல.. நீ எப்போ வீட்டுக்கு வரபோற.. ரொம்ப நாள் ஆச்சுல.. என்ன மா” என்று சமாளிக்க, கல்பனா “ஆமா நேஹா.. நீ இங்க இருந்தும் எங்களயெல்லாம் கண்டுகவே இல்ல.. உன் பிரண்ட் இருந்தா தான் நாங்க தெரிவோமா..” என்றவர் அந்த பிரண்ட்டில் அழுத்தம் கொடுக்க,
நேஹா “அப்படி இல்ல மா வரேன்” என்றாள் மென்மையாக புன்னகைத்தபடி.

அக்னியின் வண்டி ரேயனின் வீட்டு வாயிலில் நிற்க, ரித்து மற்றும் அக்னியின் பெற்றோர்கள் இறங்கிவிட, வண்டியிலிருந்து இறங்க முனைந்த நேஹாவின் கையை பற்றினான், அவன்.
நேஹா “கைய விடு” என்றிட, அக்னி “முடியாது.. விடுறதுக்காக நான் உன் கைய பிடிக்கில” என்றான். நேஹா “பைத்தியமா உனக்கு” என்று காய, அக்னி “ஆமா, கதவை சாத்து” என்றான். நேஹாவோ அவனிடமிருந்து விலக பார்க்க, அக்னி சீட் பெல்ட்டை கழட்டிவிட்டு அவள் புறம் சரிந்தான். நேஹா அவனை விழி விரித்து பார்க்க, அவனோ இன்னும் நெருங்கி அமர்ந்தான். அவன் நெருக்கத்தில் அவளுக்கு வார்த்தைகள் மறந்து போக, படபடவென அடித்துக்கொண்ட மனதை சிரமப்பட்டு அடக்கியவள் “எ.. என்ன பண்ணுற” என்று திக்கி திணறி வினவ, அவனோ அந்த கதவை சாற்றிவிட்டு “இதுக்கு தான்” என்றான் கண் சிமிட்டி.

வீட்டினுள், கிஷோர் “என்ன மச்சா மாமனார் வீடு எப்படி இருக்கு” என்று கதிரை கேலி செய்ய, கதிர் “டேய் சும்மா இரு டா கேட்கபோது.. எரும மாடு” என்றான்.
கிஷோர் “ஐய் பார்ரா.. வெட்கமெல்லாம் வருது மாப்பிள்ளைக்கு” என வம்பிழுக்க,
இந்து “டேய் அண்ணா என்னடா என் ஆளையே ஓட்டுற” என்று முறைக்க, அதில் மிரண்ட கிஷோர் “ஐயோ ஆத்தா நான் எதுமே சொல்லல” என்றான் நல்ல பிள்ளையாய். கதிர் “என்ன ஒரு பயம்” என்று சிரிக்க, கிஷோர் ” ஐயோ சைக்கோ குடும்பம்.. எப்பவும் அலர்ட்டா இருக்கனும்”  என்னும் போதே தூரத்தில் நின்றிருந்த கண்ணன் “கிஷோர் இங்க வா” என்றழைத்தார். கிஷோர் “பாத்தியா கேட்டிருக்கும்” என்று கதிரிடம் கூறியவன் “இதோ வரேன் பா” என்று ஓட, கதிர் மற்றும் இந்து அவனை பார்த்து சிரித்துக்கொண்டனர்.

அக்னி வண்டியை செலுத்திக்கொண்டிருக்க, நேஹா “இப்போ எங்க போறோம்” என்று வினவ, “சொல்றேன்” என்றவன் அவளை அழைத்து சென்றது என்னவோ கடற்கரைக்கு தான். வார நாள் என்பதால் அங்கு கூட்டம் பெரிதாக இருக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில ஜோடிகள் அமர்ந்திருக்க, சீட் பெல்ட்டை கழட்டியவன் “நம்ம இந்த மாதிரி வெளிய வந்து ரொம்ப நாள் ஆகுதுல” என்றபடி வண்டியிலிருந்து இறங்க, அவளோ அழுத்தமாக அமர்ந்திருந்தாள்.

நேஹாவின் புறம் வந்தவன் கதவை திறந்துவிட, எங்கோ பார்த்தபடி அமர்ந்திருந்தவள் “நான் எங்கயும் வரல.. நீ முதல வண்டிய எடு” என்றிட, அவள் கையை பிடித்தவன் “சரி.. கொஞ்ச நேரம் இருந்துட்டு போயிடலாம்.. உனக்கு தான் நைட் டைம் பீச்க்கு வர்ரது பிடிக்குமே” என்றான். தன்னை முறைத்தபடி வண்டியிலிருந்து இறங்கியவளின் இடையை பற்றி தன்னோடு அணைத்துக்கொண்டவன் “இந்த கலர் உனக்கு செம்மையா சூட் ஆகுது” என்றான்.

தன் இடையை வளைத்திருந்தவனின் கையை தட்டிவிட்டவள் அப்போது தான் அவனும் அதே நிறத்தில் உடை அணிந்திருப்பதை கவனித்தாள். அக்னி “பரவால்ல மண்டைக்குள்ள பல்ப் எரிஞ்சிடுச்சு போல” என்று அவளை வம்பிழுக்க, நேஹா “எல்லாம் கூட்டு களவாணிங்க” என்றாள் முணுமுணுப்பாக. ஆம் அவள் அணிந்திருந்த உடை அக்னி எடுத்துக்கொடுத்தது தான், ரித்துவின் மூலம் அதை நேஹாவை அணிய வைத்திருந்தான்.

நேஹாவின் முணுமுணுப்பில் வாய் விட்டு சிரித்தவனை முறைத்தவள் “அவ இந்த ட்ரெஸ் தான் நீங்க போடணும்னு வற்புறுத்தும் போதே நான் யோசிச்சிருக்கனும்.. சரியான பிராடு” என்று அர்ச்சிக்க, அவளை தோளோடு அணைத்தவனோ “சரிடி திட்டாத.. சின்ன பொண்ணு அவ” என்றவன் “நம்ம ஒரே மாதிரி கலர்ல ட்ரெஸ் போட்டு ரொம்ப நாள் ஆச்சுல” என்றிட, அவனை பார்த்து இதழ் சுழித்தாள்.

சுழித்திருந்த அவள் இதழின் மீது மோக பார்வையை செலுத்தியவன் உஷ்ண பெருமூச்சு விட, அவன் பார்வையின் அர்த்தத்தை உணர்ந்துக்கொண்ட பெண்ணவளின் முகமோ குங்கும பூவை போல் சிவந்துவிட்டது. முகத்தை அவனுக்கு காட்டாமல் திருப்பிக்கொண்டவளின் மனதில் மெல்லிய படபடப்பு.

அக்னி “சரி டைம் ஆகுது கிளம்பலாமா”  என்று ஒரு மாதிரி குரலில் வினவ, அவன் குரலின் பேதத்தை உணராதவளோ “ம்ம்” என்றபடி நடக்க, பிடரியை வருடியபடி அவனை பின் தொடர்ந்தவனுக்கோ தன்னவளின் அருகாமையில் புதுப்புது உணர்வுகள் மேலெழும்பியது. காரின் முன்புற கதவை திறந்தவளின் கையை பிடித்தவன் அவளை பின்புறத்தில் அமர வைக்க, அவனை குழப்பமாக பார்த்தவள் ‘என்ன’ என்று வினவவும் முன்னே தானும் அவளுடன் எறிக்கொண்டான்.

நேஹாவோ அவனை அதிர்ந்து பார்க்க, அவளை நெருங்கி அமர்ந்தவனோ “ரொம்ப நாள் ஆச்சு.. ஒரு முறை” என்றிழுக்க, கண்களை அகல விரித்தவள் “ஒருமுறை” என்று கேள்வியாக இழுக்க, அவள் இடையை பற்றி தன்னை நோக்கி இழுக்க, அவன் நெஞ்சின் மீதே மோதி அமர்ந்தாள் அந்த பாவை.

நேஹா “அக்னி என்ன பண்ணுற” என்று அவஸ்தையாக வினவ, அவள் முகத்தை கையில் ஏந்தியவனோ “என் வீட்டுக்கு வரியா” என்று வினவ, “மாட்டேன்.. நான் ஏன் வரனும்.. வர மாட்டேன்.. உங்க ஸ்டாப்ஸ் எல்லாரையும் இப்படி தான் வீட்டுக்கு கூப்பிடுவீங்களா” என்றாள் தெனாவட்டாக. அவள் கூற்றில் புருவம் உயர்த்தியவன் “ம்ம்.. நீ வெறும் ஸ்டாப்பா இருந்தா கூப்பிட்டிருக்க மாட்டேன்.. ஆனா நீ வெறும் ஸ்டாப் இல்லையே” என்றிழுத்தவனை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்தாள்.

அவள் கோபம் அவன் மனதை பிசைய “சாரிடி” என்றான். அவளோ பெருமூச்சுடன் “விடு அக்னி.. கிளம்பலாம்” என்றிட, அவனோ “ஐ லவ் யூ” என்றான். அவன் கூறியதை கேட்டு சட்டென பெண்ணவளின் கண்கள் கலங்கிவிட, அக்னி “எனக்கு உன்மேல கோபமே இருந்ததில்ல நேஹா.. உண்மைய சொல்லனும்ன்னா உன்மேல என்னால கோபமா இருக்கவே முடியாது.. எங்க மத்தவங்க மேல இருக்க கோபத்தை உன்மேல காட்டிடுவேனோன்ற பயத்துல தான் நான் உன்கிட்ட இருந்து விலகி இருந்தேன்.. அண்ட் ஐ அம் எக்ஸ்ட்ரீம்லி சாரி பார் தட்.. என்னால.. என்னால இதுக்கு மேல இதை சொல்லாம இருக்க முடியலடி.. ஒவ்வொரு வாட்டி நீ கேட்கும் போதும் உன்ன கட்டி பிடிச்சு ஐ லவ் யூ நேஹான்னு கத்தனும் போல இருக்கும்.. ஆனா அப்போம் முடியல அதான் இப்போ சொல்லுறேன்.. ஐ லவ் யூ.. நான் நேசிச்சது.. நேசிக்கிறது இனியும் நேசிக்க போறது உன்ன மட்டும் தான்.. என்னோட காதல் உனக்கு மட்டும் தான்” என்று அவன் கூற, அவள் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது, பின்னே அவள் கேட்க தவமிருந்த வார்த்தைகள் அல்லவா அவை.

தன் உணர்வுகளை அவனிடமிருந்து மறைத்தவள் “அக்னி.. ப்ளீஸ் கிளம்பலாம்” என்றிட, அவள் முகத்தை ஒரு விரல் கொண்டு நிமிர்தினான். அவள் விழிகளோ தாழ்த்தி இருக்க, “என்ன பாருடி” என்றான் மென்மையாக. அவள் மெதுவாக அவனை நிமிர்ந்து பார்க்க, இருவரின் விழிகளும் ஒரே நேர்கோட்டில் மோதி நின்றது. இருவரின் கண்ணிலும் காதல் அப்பட்டமாக தெரிய, காந்தம் போல் தன்னை ஈர்க்கும் அவன் விழிகளின் வீச்சில் சுகமாக தொலைந்தாள். தங்களை மறந்து இருவரும் ஒருவரை ஒருவர் நெருங்கி அமர, இருவரின் மூச்சுக்காற்றும் கலந்து வெளியேறியது. அவன் மூச்சு காற்றில் அவள் தேகம் உருக தொடங்க, அவள் மென்மையில் அவன் கரைய தொடங்கினான். அக்னி மெல்ல அவள் இதழ் நோக்கி குனிய, அவன் என்ன செய்ய போகிறான் என்று அறிந்தவளின் விழிகள் மேலும் விரிந்துக்கொள்ள “வேண்டாம் அக்னி” என்று சொல்ல வந்தவளின் வார்த்தைகள் அவன் இதழ்களுகிடையே சிக்கிக்கொள்ள, அவள் விழிகளோ உணர்வுகளின் பிடியில் தாமாக மூடிக்கொண்டது.

அதுவரை காதல், பிரிவு, கோபம், ஏக்கம் வருத்தம் என பல்வேறு உணர்வுகளில் சிக்கியிருந்தவளுக்கு அந்த ஒற்றை இதழோற்றல் அருமருந்தாகி போனதை போன்றதோர் உணர்வு. மனதின் ஓரத்தில் இனி எல்லாம் நல்லதே நடக்கும் என்ற நிம்மதி எழ, அவள் விழியின் ஓரத்தில் நீர் துளிர்த்தது. அவள் விழி நீர் அவன் கரத்தில் பட்டு தெறிக்க, அதில் பதறி விலகியவன் “ஹே அழுறிய.. சாரிடி.. உனக்கு பிடிக்கும்ன்னு” என்று அவன் முடிக்கும் முன் அவன் நெஞ்சில் சாய்ந்தவள் “எதுக்குடா இப்படி பண்ணுற.. இதை சொல்ல உனக்கு இத்தனை நாள் தேவை பட்டுச்சா.. ஐ ஹேட் யூ.. போ.. என்கிட்ட பேசாத” என்று அவன் நெஞ்சில் தன் தளிர் கரங்களை கொண்டு அடிக்க, அதை சுகமாக வாங்கிக்கொண்டவன் அவளை இறுக அணைத்துக்கொண்டான்.

“தப்பு தான்.. உன்ன இவ்ளோ நாள் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்.. என்ன மன்னிச்சிடுடி” என்று உணர்ந்து மன்னிப்பு வேண்ட, அவனை விட்டு விலகி அமர்ந்தவளோ “மன்னிக்கலா மாட்டேன்.. கண்டிப்பா தண்டனை கொடுப்பேன்.. இவ்ளோ நாள் ஆபிஸ்ல என்ன எவ்ளோ டார்ச்சர் பண்ண.. இனி வாழ்க்கை முழுக்க உன்ன டர்ச்சர் பண்ணிட்டே இருப்பேன் பாரு” என்றாள். அதை கேட்டு வாய் விட்டு சிரித்தவனோ “இப்படி நீ தண்டனை கொடுத்தா.. வாழ்க்கை முழுக்க நான் தப்பு பண்ணிட்டே இருப்பேன்” என்றான் காதலாக. நேஹா “சரி போதும்.. ஆல்ரெடி ரொம்ப நேரம் ஆகிடுச்சு” என்றிட, “ம்ம்.. ம்ம்” என்றவன் அவள் இதழில் மீண்டும் அழுத்தமாக இதழ் பதித்துவிட்டு வண்டியை ரேயனின் இல்லத்திற்கு கிளப்பினான்..

இங்கு இவ்வாறு இருக்க, அங்கு ஆரத்யாவின் அலுவலகத்தில்  ஜெயபிரகாஷை சந்திக்க வந்த ஆத்ரேயன் அவரிடம் பேசிவிட்டு வெளியேற நினைத்த சமயம் ஆராத்யாவின் அறையிலிருந்து சத்தம் வர “யார இப்படி கத்திக்கிட்டு இருக்கா” என்றெண்ணியவன் யோசனையுடன் அவள் அறைக்கு சென்றான். ஆராத்யா “இன்னொரு முறை இப்படி பண்ணாத” என்று கௌதமிடம் கூறும் போது ரேயன் உள்ளே நுழைந்தான்.

ரேயன் நுழைவதை பார்த்து இன்னும் கடுப்பானவள் “நீங்க எதுக்கு இங்க வரீங்க” என்று கேள்வியெழுப்ப, அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன் “ஆபீஸுக்கே கேட்குற மாதிரி கத்திட்டு இருந்தியே அதான் உன்கிட்ட மாட்டுன அந்த அப்பாவி ஜீவன் யாருன்னு பாக்க வந்தேன்” என்றான். ஆரு “ஷட் அப் மிஸ்டர் ரேயன்.. முதல என் கேபின விட்டு வெளியே போங்க” என்றாள். கௌதம் “இப்போ எதுக்கு இப்படி டென்க்ஷன் ஆகுற.. உங்க அப்பா வந்து உன் கார் சாவி கேட்டாரு உன்கிட்ட கேட்க வந்தா நீ மீட்டிங்ல இருந்த அதான் கொடுத்துவிட்டேன்.. அதுக்கு போய் இவ்ளோ டென்க்ஷன் ஆகுற.. ரேயன் சார் இப் யூ டோன்ட் மைண்ட்.. இவளை கொஞ்சம் டிராப் பண்ணிட முடியுமா” என்று கேட்டு ஆராத்யாவின் தீ பார்வைக்கு இரையானான்.

ரேயன் “கண்டிப்பா கௌதம்.. வாங்க ஆராத்யா நானும் பார்ட்டிக்கு தான் போறேன்.. நான் உங்களை கூட்டிட்டு போறேன்” என்றிட, “தேவையில்லை” என்றாள் எரிச்சலாக. கௌதம் “ப்ச்.. நம்மள மதிச்சு பேசுறவங்கள எப்போவும் எடுத்தெறிஞ்சு பேச கூடாது” என்று பாடம் எடுக்க, அவனை கை எடுத்து கும்பிட்டவள் “நான் கிளம்புறேன்” என்று முன்னே செல்ல, ரேயன் “தேங்க்ஸ் கௌதம்” என்றவன் ஆருவின் பின் சென்றான். கௌதமிற்கோ ரேயனை பார்க்க பிரமிப்பாக இருந்தது. ஆத்ரேயனின் இறுக்கத்தையும் அவன் அழுத்தத்தையும் பற்றி கேள்வி பட்டிருந்தவனுக்கு இந்த ஆத்ரேயன் மிக பெரிய ஆச்சிர்யமே. காதல் ஒருவனை இந்த அளவிற்கு மாற்றுமா என்று அதிசயித்தவனுக்கு மெல்லிய புன்னகை வந்து இதழோரம் குடிக்கொண்டது.

மின்தூக்கியின் வழி கிழிறங்கியவளின் பின் வந்தவன் “வெயிட் பண்ணு கார் கொண்டு வரேன்” என்க, “தேவையில்லை ஆத்ரேயன்.. எனக்கு போக தெரியும்” என்றவள் முன்னே செல்ல, “அமைதியா பேசுனா வேலைக்கு ஆகாது.. இவளை” என்று மனதினுள் நினைத்தவன் அவள் கரத்தை அழுத்தமாக பற்றிக்கொண்டான்.  ஆராத்யா “என்ன பண்ணுற.. கைய விடு” என்று அவன் கரத்தை விலக்க பார்க்க, அவன் பிடியோ உடும்பு பிடியாக இருந்தது. அவளுக்கோ அவன் பிடி வலியை கொடுக்க, அவள் கண்கள் மெலிதாக கலங்கியது. “வலிக்கிது அத்து” என்று தன்னை மீறி அவள் கூறிவிட, அவள் ‘அத்து’ என்ற விளிப்பு அவனுள் ஆயிரம் பட்டாம்பூச்சிகளை பறக்க செய்தது.

ரேயன் தன் பிடியை சற்றே தளர்த்த, அவன் கையிலிருந்து தன் கையை உருவி எடுத்தவளோ “நானே வரேன்” என்று அவனுடன் இணைந்து நடந்தாள். வண்டியை எடுத்தவன் அவளுக்கு பிடித்த பாடல்களை ஓட விட, அதில்

ஒரு வீட்டில் நாமிருந்து
ஒரிலையில் நம் விருந்து
இரு தூக்கம் ஒரு கனவில்
மூழ்கி வாழ்க்கை தொடங்கும்
நான் சமையல் செய்திடுவேன்
நீ வந்து அணைத்திடுவாய்
என் பசியும் உன் பசியும் சேர்ந்தே ஒன்றாய் அடங்கும்
நான் கேட்டு ஆசைப்பட்ட பாடல் நூறு
நீயும் நானும் சேர்ந்தே கேட்போம் தாலாட்டை கண்ணில் சொன்ன ஆணும் நீ தான்
காலம் நேரம் தாண்டி வாழ்வோம்

என்ற வரிகள் வர, சட்டென பாடலை அணைந்துவிட்டாள், அவளை அடக்கப்பட்ட புன்னகையுடன் பார்த்தவன் “நல்ல பாட்டு தான.. எதுக்கு நிறுத்துன” என்று வினவ, அவனை உறுத்து விழித்தவளோ “பாட்டு போடுறான் பாரு.. ச்ச” என்று அவனை அர்ச்சிக்க, அது அவன் காதுகளில் விழுந்த போதும் அவன் அதை கண்டுகொள்ளாமல் அவளை ரசித்தபடி வண்டியை செலுத்த, அவளுக்கு தான் அங்கு அமர்ந்திருப்பதே அவஸ்தையாக இருந்தது. ஆராத்யா ரேயனை கண்டுகொள்ளாதது போல் காட்டிக்கொண்டாலும் ரேயனின் இந்த மாற்றதை அவள் ஆழ் மனம் ரசிக்கவே செய்தது.

போர்டிகோவில் வண்டியை நிறுத்தியவன், இறங்க போனவளை தடுத்து “ஐ லவ் யூ” என்றிட, அவனை முறைத்து பார்த்தவளோ கதவை திறக்க முயற்சிக்க, அதுவோ திறப்பேனா என்று சதி செய்தது. அவளோ கதவை வேகமாக பிடித்திழுக்க, “எதுக்கு இவ்ளோ கஷ்டப்படுற” என்றவன் அவள் புறம் சரிந்து கதவை திறக்க உதவுவது போல் அவளை உரசிக்கொண்டிருக்க, அவன் மூச்சு காற்றோ அவள் கழுத்தில் பட்டு உடலை சிலிர்க்க செய்தது.

கண் மூடி பல்லை கடித்துக்கொண்டு உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொண்டு அமர்ந்திருந்தவளின் கன்னத்தில் மீசையுரச முத்தம் பதித்தவன் “உணர்ச்சிகளை கட்டுப்படுத்த கூடாது தியா.. கிஸ் பண்ணனும்னு தோனுச்சுன்னா பண்ணிடனும்.. எதுக்கு பல்லை கடிச்சு பீலிங்ஸை மறைக்க பாக்குற” என்றவன் மீண்டும் அவளை நெருங்க, அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளியவளோ “சும்மா சும்மா கிஸ் பண்ண நான் ஒன்னும் உங்க பொண்டாட்டி கிடையாது.. இன்னொரு முறை இப்படி பண்ணா போலீஸ்ல கம்பலைன் பண்ணிடுவேன்” என்று மிரட்டினாள்.

ரேயன் “சோ உனக்கு என்மேல லவ் இல்ல அப்படி தான” என்று வினவ “ஆம்” என்பதாய் தலையசைத்தாள். ரேயன் அவள் கழுத்தில் கை வைக்க, அதில் அதிர்ந்துவிட்டாள் பெண்ணவள். அவள் கழுத்தில் இருந்த செயினை கையில் தூக்கி காட்டியவன் “என்ன லவ் பண்ணலன்னா, நான் கொடுத்த செயினை மட்டும் ஏன் போட்டிருக்க” என்று நக்கலாக வினவ, அவளோ “அது.. அது ஒன்னும் நீ கொடுத்தது இல்ல” என்று மறுக்க, அவள் டாலரலை திறந்தவன் அதனுள் வைக்கப்பட்டிருந்த பென்டெண்டை காட்ட, எப்படி கண்டுக்கொண்டான் என்று அதிர்ந்து பார்த்தவளோ “முதல தள்ளி போ” என்று வண்டியிலிருந்து இறங்க, முகம் முழுக்க புன்னகையுடன் அவள் கையை பிடித்தவன் ஒன்னாவே போலாம்” என்று அவளை அழைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த சமயம் அக்னியும் நேஹாவுடன் உள்ளே நுழைந்தான்.

ஆண்கள் இருவரும் தத்தமது ஜோடிகளுடன் வருவதை பார்த்த அவர்களின் பெற்றோர்களின் மனமோ குளிர்ந்து போனது.

Advertisement