Advertisement

                   அத்தியாயம் 39

அலுவலகத்தினுள் நுழைந்த ராகுல் சுஷ்மி கிஷோரின் விளிப்பை கேட்டு அதிர்ந்திருக்க, கிஷோர் “என்ன.. உங்கள யாரு கூப்பிட்டா” என்றான் யோசனையாக. ராகுல் “என்ன ண்ணா நீங்க தான கூப்பிட்டீங்க.. இப்போ இப்படி கேட்குறீங்க” என்று நெஞ்சில் கை வைக்க,

கிஷோர் “ஓ ஆமால.. போங்க போங்க” என்றான்.

சுஷ்மி “அண்ணா….” என்றிழுக்க

கிஷோர் “என்னா….” என்று ராகம் பாட,

சுஷ்மி “என்ன ண்ணா ரேயன் சாரை உங்களுக்கு முன்னாடியே தெரியுமா..” என்று மீண்டும் கேட்க, அவள் தலையில் கொட்டிய ராகுல் “லூசு இப்போதான சொன்னாரு 23வருஷ பிரண்ட்னு….காது போச்சா” என்றான் கேலியாக. சுஷ்மி திருட்டு முழி முழித்துக்கொண்டு நிற்க, கிஷோருக்கு அவர்களை பார்த்து சிரிப்பு பீறிட்டு எழ, பலமாக சிரித்துவிட்டான்.

ராகுலும் சுஷ்மியும் அக்னியின் அலுவலகத்தினுள் நுழைய, அங்கு வந்த நேஹா “டேய் இந்த ரேயன் ஏன் டா இப்படி பண்றான், அவ சாமி ஆடுறா” என்று அலுத்துக்கொள்ள, மீண்டும் சுஷ்மியும் ராகுலும் அதிர்ச்சியில் ஸ்லொ மோஷனில் திரும்ப, அதை கண்ட கிஷோர் “இதுங்க வேற, சீரியல்ல வர மாதிரி பண்ணிட்டு இருக்குதுங்க” என்று தலையில் அடித்துக்கொண்டான்.

அதன் பிறகு ராகுலும் சுஷ்மியும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் சென்றமர, பக்கத்து அறையில் இருந்த ஆராத்யா “யாரை கேட்டு ஆத்ரேயனோட பொருளை இங்க வைக்கிறீங்க” என்று அந்த பணியாளிடம் சீறிக்கொண்டிருந்தாள். ஆராத்யாவின் அறை கதவு திறந்திருந்ததால் ராகுலுக்கு சுஷ்மிக்கும் அவள் பேசுவது நன்றாக காதில் விழுந்தது.

ஆராத்யா “என்ன நினைச்சுட்டு இருக்கான் அந்த ஆத்ரேயன்.. எல்லாம் பிளான் பண்ணி பண்றீங்களா” என்று அப்போது தான் கிஷோரிடம் பேசிவிட்டு வந்த நேஹாவிடம் சத்தமிட, அதை கேட்ட ராகுலும் சுஷ்மியும் மீண்டும் அதே போல்  ஸ்லோ மோஷனில் திரும்பினார்.

சுஷ்மி “போதும்டா கழுத்து வலிக்குது இப்படி திரும்பி திரும்பி பாத்து” என்று கழுத்தை பிடிக்க,

ராகுல் “ல போதும்” என்றான். சுஷ்மி “என்ன டா எல்லாருக்கும் எல்லாரையும் தெரியும் போல, இல்ல நாமா எதாச்சு கோமால இருந்தோமா.. இவங்கலாம் எதிர் எதிர் கம்பெனி தான” என்று குழம்ப,

ராகுல் “ஆமா நம்ம கோமால இருந்தோம் அதனால தெரியல.. இல்லனா எல்லாம் நம்மகிட்ட சொல்லிருப்பாங்க.. போடி லூசு.. விடு.. இனி நமக்கு டைம் பாஸ் வந்திருச்சு, இதை எல்லாத்தையும் கண்டு பிடிக்கிறோம்” என்று கையை நீட்ட, அவளும் ஹைபை அடித்தாள்.

ஆத்ரேயன் அக்னி இருவரும் வேலை சம்மந்தமாக வெளியில் சென்றிருந்தனர். வந்த முதல் நாளே அவளை சோதிக்க வேண்டாம் என்றெண்ணி ரேயன் தன் வேலைகளில் மூழ்கிப்போனான். ஆரு தனக்கு கொடுக்கபட்ட வேலையை துரித கதியில் முடித்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு அந்த அலுவலகத்தில் இருப்பதே முள்ளின் மீது இருப்பது போல் அவஸ்தையாக இருந்தது.

மறு நாள் காலை ரேயன் தன் அலுவலகத்தில் தீவிரமாக வேலை செய்துகொண்டு இருக்க, அங்கு வந்த கிஷோர் “அத்து உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான் தயக்கமாக. ரேயன் “சொல்லுடா ஏன் பெர்மிஸ்சன்லாம் கேட்குற” என்று இயல்பாக வினவ, கிஷோர் “அப்பா.. அதாவது கே.ஸ் குரூப்ஸ்ல இருந்து ப்ராஜெக்ட் பண்ண ரெக்வஸ்ட் வந்திருக்கு” என்றிட, அவனை உறுத்து விழித்த ரேயனோ “ரிஜெக்ட் பண்ணி அனுப்பு” என்றான் சிம்ம குரலில்.

கிச்சா “மச்சா எப்பயோ கோபத்துல பேசுனத இன்னமும் பிடிச்சிட்டு தொங்காதடா.. எங்க அப்பாவும் தான் டெய்லி எதாச்சு சொல்வாரு முன்னாடி.. அதுக்குன்னு விட்டுட்டு போயிட முடியுமா” என்று முடிக்கும் முன் அவன் சட்டையை பிடித்தவன் “என்ன பாத்தா உனக்கு எப்படி தெரியுது.. அவ்ளோ கேவலமா போயிட்டேனா.. அப்படியே நான் விட்டுட்டு போன மாதிரி பேசுற.. யாருடா என்ன வெளிய போக சொன்னது, யாருடா இனி இந்த கம்பெனிக்கு வீட்டுக்கு எதுக்கும் நீ தேவயில்லன்னு சொன்னது.. நானா.. இல்ல கேக்குறேன் எப்போவும் நான் தான் தப்பு பண்ணுவேனா” என்று அவன் சட்டையை உதறி விட்டு திரும்பி நின்றான்.

கிஷோரும் அதற்கு மேல் எதுவும் கேட்க முடியாமல் மௌனமாக, கிஷோரிடம் ஏதோ பேச திரும்பிய ரேயன் அப்போது தான் வாயிலில் நின்றிருந்த அக்னியை கவனித்தான். எப்போதும் போல் இறுக்கமாக நின்றிருந்த அக்னியை கவனித்த கிஷோர் “வாங்க அக்னி” என்றான் மரியாதை நிமித்தமாக.

ரேயன் “தப்பா எடுத்துகலன்னா ஒரு ரெண்டு நிமிஷம்” என்றிட, அக்னி “நான் ஜஸ்ட் ப்ராஜெக்டோட அவுட்லைன் குடுத்துட்டு போக தான் வந்தேன்.. நீங்க உங்க வேலைய தொடரலாம்” என்றான்.

தன் கையிலிருந்த கோப்பை ரேயனின் மேசை மீது வைத்த அக்னி “ஒருமுறை பார்த்துக்க சொல்லு” என்று கிஷோரிடம் கூறிவிட்டு வெளியேறினான்.

அதுவரை உணர்வுகளை வெளிக்காட்டாமல் இருந்த அக்னியின் முகம், ரேயன் ஏன் தன் தந்தையிடம் பேசுவதில்லை என்ற யோசனையில் சுருங்கியது. ரேயனின் கூற்றிலிருந்தே ஓரளவிற்கு பிரச்சனையை யூகித்த அக்னி அறிவான் கண்ணனுக்கு ரேயன் மீதிருக்கும் அன்பை, அப்படிப்பட்டவர் ஏன் இப்படி பேச வேண்டும் என்று யோசித்துக்கொண்டே வண்டியில் ஏறிவனின் மூலையில் மின்னல் வெட்டியது. “ஒருவேளை அவரோட தொழில் எதிரிங்களால அப்படி பேசி இருப்பாரோ” என்று சிந்தித்தவனுக்கு அது தான் காரணமாக இருக்கும் என்று மனம் அடித்து கூறியது.

நிச்சயம் பயத்தில் அவர் இதை செய்திருக்க மாட்டார், ரேயனுக்கு தெரிய வந்தால் அவன் அவர்களை உண்டில்லை என்றாக்கி விடுவான் என்ற எண்ணத்தில் தான் அவர் அப்படி பேசியிருப்பார் என்று புரிந்தது, இந்த சில நாட்களில் ரேயனின் அடாவடி தனத்தை அவனும் காண்கிறான் அல்லவா.. ரேயனின் அடாவடியை நினைத்து மெல்லிய புன்னகை ஒன்று உதயமாக, வீட்டிற்கு சென்றவன் கண்ணனை மறைமுகமாக தொடர ஆரம்பித்தான்.

இரண்டு நாட்கள் கழிந்த நிலையில், அன்று மாலை கண்ணன் யாருடனோ பதட்டமாக பேசியபடி வெளியில் செல்ல, அக்னியும் அவரை தொடர்ந்தான். ஒரு பூங்காவின் அருகே வண்டியை நிறுத்திய கண்ணன், அடியாள் போல் நின்றிருந்த ஒருவனிடம் ஒரு பையை கொடுக்க, அக்னி அவர்களை யோசனையாக பார்த்துக்கொண்டிருந்தான்.

அதே சமயம் அக்னியின் அலுவலகத்திற்கு சென்றுக்கொண்டிருந்த ஆராத்யா, அந்த பூங்காவின் அருகே கண்ணன் நின்றிருப்பதை பார்த்து புருவம் சுருக்கினாள். ‘பார்க் கிட்ட இவர் என்ன பண்ணுறார்’ என்று வண்டியை நிறுத்திவிட்டு யோசனையாக அவரை பார்த்தவளின் விழிகள் அவருக்கு அருகே இருந்தவனை பார்த்து விரிந்தது.

“இவனை எங்கயோ பார்த்திருக்கேன்” என்று கண் மூடி யோசித்தவளுக்கு முதல் வருடம் கல்லூரியில் ஒரு விழா நடக்கும் போது ரேயனை அடிக்க வந்த ஆள் தான் அவன் என்று நினைவு வர, “அங்கிள் இவன் கூட என்ன பேசுறாங்க” என்று குழம்பினாள். பின் அதே குழப்பத்துடன் அக்னியின் அலுவலகத்திற்கு சென்றாள்.

கண்ணனை தொடர்ந்த அக்னியோ, அந்த அடியாளை யாருடனோ பார்த்தது போல் தோன்ற, யோசனையுடன் வண்டியை செலுத்தினான். மீண்டும் அலுவலகத்தினுள் நுழைந்தவன் கண்டது என்னவோ ஆரத்யாவை சீண்டியபடி அமர்ந்திருந்த ஆத்ரேயனை தான். சட்டென அவன் கண்களில் மின்னல் வெட்ட,  அனைவரையும் மீட்டிங் அறைக்கு அழைத்திருந்தான். கண்ணனை பற்றி ரேயன் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றுணர்ந்த அக்னி அதை ரேயனிடம் மறைமுகமாக தெரிவிக்கவே அந்த மீட்டிங்கை ஏற்பாடு செய்திருந்தான்.

சில நிமிடத்தில் அனைவரும் அங்கு குழுமிவிட, ஆராத்யா மற்றும் ரேயனை கண்ட அக்னி “ப்ரொஜெக்ட் அவுட்லைன ஓகே பண்ணிட்டா அடுத்த வேலைய பார்க்கலாம்” என்று பொதுவாக உரைக்க, ரேயனோ “அவுட்லைன் ஓகே அக்னி.. அடுத்த கட்ட வேலைங்களை ஆரம்பிக்கலாம்” என்றிட, ஆராத்யா மௌனமாகவே அமர்ந்திருந்தாள்.

ஆருவின் மௌனம் அக்னியை வெகுவாய் தாக்க, பெருமூச்சோடு தன்னை சமன் செய்தவன் “ஓகே.. நாளைக்கு சைட் விசிட் பண்ணிடலாம்” என்றான். அதன் பின் மேலும் சில விவரங்களை விவாதித்தனர். மீட்டிங் முடிந்து அனைவரும் வெளியேறிவிட, அக்னியும் ரேயனும் மட்டுமே தனித்து விடப்பட்டனர்.

ரேயன் பொதுவாக ஏதோ பேச, அக்னி “உண்மை தான் ஆத்ரேயன்.. எந்த ஒரு விஷயத்துக்கும் இரண்டு பக்கம் இருக்கும்ல.. அது ப்ரொஜெக்ட்டா இருந்தாலும் சரி, வாழ்க்கையா இருந்தாலும் சரி.. நம்ம பாக்குற ஒரு பக்கம்.. இன்னொன்னு இப்படியும் இருக்குமோன்னு நம்ம நினைச்சு கூட பார்க்காத ஒரு பக்கம்.. நம்ம கோபமா இருக்குறப்ப எப்போவும் நம்ம பக்கம் மட்டும் தான் பார்ப்போம்” என்றுவிட்டு ரேயனின் முகம் காண அவனோ அமைதியாக அவனை பார்த்துக்கொண்டிருந்தான்.

அக்னி “உதாரணத்துக்கு நமக்கு முக்கியமான ஒருத்தர் அதுவும் நம்ம அளவுக்கு அதிகமா பாசம் வச்ச ஒருத்தர் நம்மள தப்பா பேசிட்டா கண்டிப்பா கோபம் வரும் தானே.. அவங்க என்ன எப்படி அந்த மாதிரி பேசலாம்னு நம்ம ஒரு பக்கத்துல இருந்து தான யோசிக்கிறோம்.. எதுக்கு அவங்க அப்படி பேசுறாங்கன்னு யோசிக்கிறதே இல்லையே.. கூட இருந்து பார்க்கும் போது எதுவும் நம்ம கண்ணுக்கு  படாது எல்லாம் ஒரு மூன்றாவது மனுஷனா பார்க்கும் போது தான் தெரியும்..” என்றிட, மேலும் கீழுமாய் தலையசைத்த ரேயனுக்கு தன் தந்தையின் முகமே கண் முன் வந்து சென்றது. கிஷோர் பேசியதில் இருந்தே மனதில் ஒருவித கலக்கத்தை சுமந்து திரிந்துகொண்டிருந்தவனுக்கு அக்னியின் கூற்று நிதானமாக சிந்திக்க வைத்தது.

ரேயனின் யோசனை முகத்தை கண்டு அக்னி “பேசுனா சரியாகத பிரச்சனை எதுவுமே கிடையாது, அது தொழிலையும் சரி, தனிபட்ட வாழ்க்கையிலும் சரி” என்றவன், அமைதியாக வெளியேறினான். முகத்தை மூடி மேசையில் சாய்ந்த ரேயனின் மனதில் பல சிந்தனைகள். அனைத்தையும் ஒதுக்கியவன், தன் தந்தையின் பி.ஏவான  ரகுராமிற்கு அழைத்தான்.

பல வருடங்களுக்கு பின் வரும் ஆத்ரேயனின் அழைப்பை ஏற்ற ரகுராம் “ரேயன் தம்பி, எப்படி இருக்கீங்க.. எவ்ளோ வருஷமாச்சு உங்க கூட பேசி” என்று பூரிக்க, ரேயன் தான் அவர் அன்பில் நெகிழ்ந்து போனான். பின் தன் குரலை செருமியவன் “நான் நல்லா இருக்கேன் ரகு அங்கிள்” என்றான்.

ரகு “சொல்லுங்க தம்பி, அப்பாகிட்ட பேசுறீங்களா” என்று வினவ, அவனோ “இல்ல, வேண்டாம்.. நான் உங்களுக்கு போன் பண்ண காரணமே எனக்கு ஒரு உண்மை தெரிய தான்” என்றான். ரகு “சொல்லுங்க தம்பி.. என்ன தெரியனும்” என்று வினவ, ரேயனோ “அது.. அப்பாக்கு ரொம்ப குடைச்சல் கொடுக்கிற பார்ட்டி யாராவது இருக்காங்களா.. அதாவது பல வருஷமா குடைச்சல் கொடுக்குற மாதிரி.. நான் கேட்குறது உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்.. கண்டிப்பா அப்பா இதைபத்தி உங்க கிட்ட பேசியிருப்பார்.. சோ மறைக்காம சொல்லுங்க” என்றான். அவன் பொறுமையாக பேசினாலும் ‘நீ இதை கூறியே ஆக வேண்டும்’ என்ற அழுத்தம் அதில் இருந்தது. அதை உணர்ந்த ரகுராமும் “தம்பி, அப்பா இதை உங்களுக்கு தெரிய வேண்டாம்னு தான் சொன்னாரு.. ஆனா நீங்க கேட்குறதால சொல்லுறேன்.. கட்டிட பொருட்கள் விக்குற இம்ரான் கம்பெனி தான் கொஞ்ச வருஷமா நமக்கு தொல்லை கொடுக்குறாங்க.. இம்ரானோட அப்பா இருக்குற வரை பொருட்கள் நல்ல தரமா இருந்துச்சு ஆனா எப்போ அந்த கம்பெனி இம்ரான் கைக்கு போச்சோ அப்போவே அதோட தரம் போயிடுச்சு.. இது தெரிஞ்சு கண்ணன் சார் இம்ரான் கிட்ட பேசுனப்ப தான் அவர் ஆளுங்கள விட்டு உங்களை அடிக்க விட்டாங்க.. உங்களுக்கு நியாபகம் இருக்கான்னு தெரியல, நீங்க முதல் வருஷம் படிச்சிட்டு இருக்கும் போது இது நடந்தது.. அப்பறம் நம்ம இந்து பாப்பாவையும் காலேஜ்ல மிரட்டுனது அந்த இம்ரானோட ஆளுங்க தான்” என்றவர் தொடர்ந்து அவன் கொடுத்த குடைச்சல்களை பற்றி ரேயனிடம் கூறிவிட்டு இறுதியாக “உங்களுக்கு தெரிஞ்சா நீங்களும் இதுல வர நேரும்.. அதான் சார் உங்க கூட சண்டை போட்டாரு” என்றார்.

ரகுராம் கூறியதை கேட்ட ரேயனுக்கு தான் ரத்த அழுத்தம் எகிறி கொண்டு இருந்தது. “அப்பா இப்போ எங்க இருக்காரு” என்று கேட்டவன் முயன்று தன் கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு  இருந்தான். ரகுராம் “தெரியல தம்பி.. யாரோ ஒருத்தர் வந்து கூப்பிட்டாரு சாரும் கிளம்பி போயிட்டாரு.. எங்கன்னு சொல்லல” என்றார்.

ரகுராம் கூறியதை கேட்டு நெற்றியை நீவியவன் “சரி நான் பார்த்துக்குறேன்” என்றான். பின் அந்த அறையிலிருந்து வெளி வந்தவன் ராகுலிடம் “ராகுல் நான் உனக்கு ஒரு நம்பர் அனுப்பிருக்கேன்.. அது இப்போ எந்த இடத்துல இருக்குன்னு பார்த்து சொல்லு” என்று கட்டளையிட்டான். ராகுலும் சில நிமிடங்களில் அவனுக்கு அந்த இடத்தை பற்றி தெரிவித்தான் பின் “ஆனா இது ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்க இடம் சார்.. சரியா சொல்லனும்னா மெட்டீரியல் சப்பிலையர் இம்ரானோட குடவுன்” என்றிட, “ம்ம்” என்றவன் ஒருவித இறுக்கத்துடனே வண்டி சாவியை எடுக்க தன் இடத்திற்கு சென்றான்.

அவனுக்கும் ஆருவுக்கும் ஒரே கேபின் கொடுக்கப்பட்டிருக்க, அறையினுள் வேக நடையில் நுழைந்தவன் தன் மேசை மீதிருந்த சாவியை எடுத்துக்கொண்டு வெளியேற நினைத்த சமயம், ஆரு “ஒரு நிமிஷம்” என்றாள். ரேயன் ‘என்ன’ என்பது போல் புருவமுயர்த்த, அவளோ “இன்னிக்கு மதியம் நான் கண்ணன் சாரை ***** பார்க் கிட்ட பார்த்தேன்.. ரொம்ப டென்க்ஷனா இருந்தாரு.. அவர்கூடவே ஒருத்தன் இருந்தான்.. அவன்” என்று ஆரம்பித்தவள் சிறு இடைவெளி விட்டு “காலேஜ்ல உன்ன அடிக்க வந்த ஆள்ல ஒருத்தன்” என்றாள்.

ஒருமுறை அவளை ஆழ்ந்து நோக்கியவன், என்ன நினைத்தானோ அவளை இறுக அணைத்த்துக்கொண்டு “நீ இன்னும் எதையும் மறக்கல தானே..” என்றவன் பின் “எனிவேஸ் இதை சொன்னதுக்கு தேங்க்ஸ்” என்றவன் அவள் கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதித்துவிட்டு செல்ல, ஆரு தான் அவன் செயலில் அதிர்ந்து நின்றாள். பின் சட்டென தன்னை சுதாரித்தவள் “இவனுக்கு போய் சொன்னேன் பாரு.. சே.. என்னமோ அவன் பொண்டாட்டி மாதிரி கட்டி பிடிச்சிட்டு போறான்.. இடியட்” என்றவள் கன்னத்தை துடைக்குக்கொண்டு அவனை அர்ச்சிக்க தொடங்கினாள்.

ரேயன் ராகுல் கூறிய இடத்திற்கு வண்டியை செலுத்த, அக்னி அவனை பின் தொடர்ந்தான்.

இம்ரானின் இடத்தில், கண்ணன் அமர்ந்திருக்க அவர் முன்னிருந்த மேசை மீது அமர்ந்திருந்த இம்ரான் “என்ன கண்ணன்.. முன்னாடி நடந்ததெல்லாம் பத்தாதா.. கவுன்சில்ல என் கம்பெனி மேல புகார் கொடுத்திருக்க போல” என்று நக்கலாக வினவ, கண்ணனோ “ஆமா.. கொடுத்திருக்கேன்.. நான் ஏற்கனவே சொல்லிட்டேன் இம்ரான், உன் கம்பெனில தயாரிக்க படுற எந்த ஒரு பொருளும் குவலிட்டியா இல்ல.. இதால வீடு கட்டுனா நிச்சயம் அது நிலைக்காது.. அதனால என்னோட கம்பெனி இனி உன்னோட தயாரிப்பை உபயோகப் படுத்தாது” என்றார் திட்டவட்டமாக.

இம்ரான் “உன்னோட இந்த முடிவால உன்னோட குடும்பத்துக்கு தான் ஆபத்து கண்ணன்.. நிச்சயம் உன் குடும்பத்தை நான் சும்மா விட மாட்டேன்” என்று மிரட்டல் விட, கண்ணனோ “நான் இருக்குற வரை என் குடும்பத்துக்கு ஒன்னும் ஆகாது” என்றார்.  இம்ரான் “இந்த வயசுலயும் உன் திமிரு அடங்குதா பாரேன்” என்று பல்லை கடிக்க, “ஒருவேளை என்னோட அப்பா அப்படின்றதால இருக்குமோ” என்று சந்தேகம் கேட்டபடி ஆத்ரேயன் நுழைய, இம்ரான் “வாடா.. நீ வருவேன்னு எனக்கு நல்லா தெரியும்” என்றான்.

ரேயனோ “ப்பா.. செம்ம வில்லன்டா நீ.. சரி ஒரு சேரை போடு.. உட்கார்ந்துட்டே பேசுவோம்” என்று சாவகாசமாக கூற, அடுத்ததாக நுழைந்த அக்னியோ “அப்படியே எனக்கும் ஒரு சேர் போடுங்க” என்றான். ரேயனோ அக்னியை அங்கு எதிர்பாராது “உனக்கு எதுக்கு இந்த தேவையில்லாத பிரச்சனை” என்று வினவ, அக்னி “அதெல்லாம் தேவையான பிரச்சனை தான்” என்றவன், இம்ரானின் முன் கால் மீது கால் போட்டபடி அமர்ந்து “நீயும் உட்காரு” என்றான் ஆத்ரேயனை கண்டு.

ரேயனோ இருபக்கமும் தலையாட்டி சிரித்தவன், அக்னியின் அருகே அமர்ந்தான். ரேயன் வந்ததிலிருந்து கண்ணன் அவனையே பார்த்துக்கொண்டிருக்க, அவனோ கண்ணனை கண்டுக்கொண்டான் இல்லை. தந்தையின் மீதிருந்த பாசத்தில் அவன் வந்திருந்தாலும், தந்தை இத்தனை பெரிய விஷயத்தை தன்னிடமிருந்து மறைத்ததில் அவனுக்கு கோபம் இருக்கவே செய்தது.

ரேயன் “சோ.. தரமில்லாத கட்டிட பொருட்களை தயாரிச்சு அதை வாங்க சொல்லி எல்லாரையும் மிரட்டிட்டு இருக்க.. அப்படி தான” என்று ஏளனமாக வினவ, இம்ரானோ “ஆமா” என்றான் மிதப்பாக. அக்னி “செய்யுறது முள்ளமாறி தனம் அதுல கெத்து வேறயா” என்றான்.

இம்ரான் “என்னடா திமிரா.. நீங்க இருக்குறது என்னோட இடத்துல அது தெரியுமா.. நான் நினைச்சா இங்கயே உங்க மூணு பேரையும் கொன்னு புதைக்க முடியும்” என்று சீற, அக்னி மற்றும் ரேயன் இருவரும் சலிப்பாக தலையசைத்தனர். ரேயன் “ஏன்டா இந்த வில்லனுங்கலாம் எப்போடா திருந்த போறீங்க.. ஊருக்கு வெளியே குடவுன் வச்சா நீங்க பெரிய ஆளா”

அக்னி “உன் இடத்துக்கு தனியா வந்து.. உன் முன்னாடி இப்படி கால் மேல கால் போட்டு உட்கார்ந்து பேசிருக்கும் போதே தெரியலயா நாங்க எல்லாத்துக்கும் ரெடியா தான் இருப்போம்ன்னு” என்று நக்கலாக பேச, இம்ரான் “டேய்.. இவனுங்களை இங்கயே கொன்னு புதைங்கடா” என்றான்.

இம்ரான் சத்தமிட்ட மறுநொடி இருபது அடியாட்கள் உள்ளே நுழைய, ரேயன் “ஆக்ஷன் சீக்குவேன்ஸ் பண்ணி ரொம்ப நாள் ஆகுதுல” என்று கைகளை தூக்கி சோம்பல் முறித்தபடி வினவ, அக்னியோ சட்டையின் கை பகுதியை மடக்கிவிட்டபடி கண்ணடித்தான்.

தொடரும்

Advertisement