Advertisement

அத்தியாயம் 37

அக்னி தன் வேலையில் மூழ்கி இருக்க, மணியோ இரவு எட்டை தாண்டி இருந்தது ஆனால் அவனுக்கு வீடு திரும்பும் எண்ணம் இல்லை போலும், கணினியில் பதித்த கண்ணை விலக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கைபேசி அவன் கவனத்தை திசை திருப்பும் வரை.

ப்ரைவேட் எண்ணிலிருந்து அழைப்பு வர, அதை புருவ முடிச்சுகளோடு ஏற்றவன், “ஹலோ” என்றிட மறுமுனையில் பதிலில்லை. மீண்டும் அக்னியே “ஹலோ யாரு” என்று வினவ, “ஹாஹா.. எல்லாம் உனக்கு தெரிஞ்சவன் தான் அக்னி” என்ற பதில் வர, அக்னிக்கோ அக்குரல் பரிச்சயம் இல்லாமல் இருந்தது.

அக்னி “யாரு நீங்க” என்று அழுத்தமான குரலில் வினவ, அந்த நபரோ “அடடா.. போன்லயே எல்லாம் கேட்பியா பா.. வா நேர்ல பாப்போம்” என்றிட, “புல்ஷிட்” என்றவன் அழைப்பை துண்டித்தான். மீண்டும் அதே எண்ணிலிருந்து அழைப்பு வர “ஹே யாருடா நீ.. எதுக்கு இப்போ தேவ இல்லாம பேசிட்டு இருக்க” என்று அக்னி சீற, மறுமுனையில் இருந்தவனோ “அட பாஸ்.. ரிலாக்ஸ்.. அது இங்க உங்க ஸ்டாப் ஒருத்தங்க என்கூட இருக்காங்க, போக சொன்னா போகவே மாட்டுறாங்க, அதான் உங்கள கூட்டிட்டு போக சொல்லலாம்னு கூப்பிட்டேன்” என்றான் நக்கல் குரலில். அக்னியின் மனமோ லேசாக படபடக்க, அக்னி “டேய் என்ன.. மிரட்டி பாக்குறியா” என்று கூறும் போதே அவன் குரல் பிசுறு தட்டியது.

அதை கண்டுகொண்டவன் “அட என்ன பாஸ் வாய்ஸ் கொஞ்சம் பிசுறு தட்டுது… பயப்படுறீங்களா என்ன” என்று ஏகத்துகும் நக்கலாக வினவ, “சொல்ல வர்ரத நேரா சொல்லு” என்றான் கர்ஜனையாக. அந்த முகம் தெரியாதவனோ “ஹப்பா என்ன ஒரு குரல்.. அதாவது.. இங்க உன் ஸ்டாப் முக்கூம் …இப்படி கூட சொல்லலாம் போலயே, உன் முன்னாள் காதலி….” என்று கூறும் போதே, “டேய் ****..  யாருடா நீ.. எங்கடா இருக்க” என்று அக்னி கெட்ட வார்த்தைகளில் சீற, அதில் காதை தேய்துக்கொண்டவன் “என்னங்க ஒரு பியூரோ கன்ஸ்ட்ரக்ஷன் முதலாளி இப்படியா பேசுவீங்க.. ச்ச ச்ச” என்று உச்சு கொட்டி அக்னியின் கோபத்திற்கு ஆளானான்.

அக்னி “நீ என்ன சொன்னாலும் நான் நம்பனும்னு நினைக்கிறியா” என்று சீறியவனின் மனம் அவள் அங்கு இருக்க கூடாது என்று வேண்டிக்கொண்டது. “பாஸ் சேட் பண்ணமாட்டீங்க போல, கொஞ்சம் வாட்சப் பாருங்க” என்று கூறியதும் அக்னி தன் வாட்சப் செயலியை திறக்க, அதில் கை, கால், வாய் கட்டிபோட்ட நிலையில் நேஹாவின் புகைப்படம் வந்து இருந்தது. அதை பார்த்த மறுநொடி அக்னியின் இதயத்துடிப்பு ஏகத்துக்கும் எகிறியது.

அக்னி “டேய்.. அவளுக்கு எதாச்சு ஆச்சு” என்னும் போதே அவன் குரல் நடுங்க,
அத்தனை நேரம் சாதாரணமாக இருந்த அந்த முகம் தெரியாத நபரின் குரல் இப்போது இறுகி வெளிவந்தது. “இப்போ நம்புறல, முடிஞ்சா கண்டுபுடி டா” என்று கூறிவிட்டு அனைப்பை துண்டித்தான். அக்னியின் மனம் படபடக்க, அவன் கால்களோ பார்க்கிங்கை நோக்கி சென்றது. அவன் மூளையோ அவன் யாராக இருக்க கூடும் என்று யோசித்துக்கொண்டு இருக்க, காரை செலுத்தியபடி அருணிற்கு அழைத்தவன் நடந்ததை கூற, அருணும் அந்த நபரின் அலைபேசி எண்ணை ட்ராக் செய்ய தொடங்கினான். ஐந்து நிமிடத்திற்கு பின்  அக்னியை அழைத்தவன், “அவன் ஏதோ டிவைஸ் யூஸ் பண்ணுறான் அக்னி, அதான் அவனோட எக்ஸாக்ட் லொகேஷன் கிடைக்கல, ஆனா நான் ஒரு லொகேஷன் அனுப்புறேன், அது சுத்தி 5 கிலோமீட்டருக்குள்ள தான் அவன் இருக்க முடியும், நீ போய் பாரு.. நானும் அங்க தான் வந்துட்டு இருக்கேன்.. நானும் தேடுறேன், என் தங்கச்சிக்கு எதுவும் ஆகாது, ஆகவும் விடமாட்டேன்” என்று உறுதியாக கூறியவன் அழைப்பை துண்டித்தான்.

அக்னி அருண் அனுப்பிய இடத்திலிருந்து தன் தேடலை தொடங்கினான் ஆனால் எங்கும் நேஹா தென் படவில்லை. அதன் பிறகு அவன் வாழ்வையே புரட்டிப்போட்ட அந்த மைதானம் இருக்கும் சாலை வந்தது, உள்மனம் அவள் இங்கு எங்கோ தான் இருக்கிறாள் என்று அடித்துக்கொள்ள, ஒரு நிமிடம் தயங்கியவன் பின் தாமதிக்காமல் உள்ளே நுழைந்தான்.

விளையாடுவதற்காக போடப்பட்ட மின் விளக்குகள் கண்களை கூச, ஆங்காங்கே சில வாலிபர்கள் தங்களின் பயிற்சியை செய்து கொண்டு இருந்தனர். அவன் கண்களோ அவனவளை தேடி சுழன்றது. எல்லா இடங்களிலும் அவளை தேடியவன் மீண்டும் மைதானத்தின் நுழைவிற்கே வர, அங்கு சந்தேகப்படும் படியாக ஒன்றும் தோன்றவில்லை.

கோபத்தில் காலை தரையில் உதைத்தவனுக்கு பைத்தியம் பிடிக்காத குறை தான், அவனை போலவே அங்கு எதிர் திசையில் ஆரு மற்றும் கதிர் நின்றுகொண்டு இருந்தனர். அக்னியை கண்ட கதிர் “அக்னி டேய்” என்று அவன் அருகில் வர, ஆருவும் இருந்த பதட்டத்தில் அவன் பின்னே சென்றாள். அக்னி “நீங்க என்ன பண்றீங்க இங்க” என்று கேட்டவனின் குரல் தழுதழுக்க, கதிர் தனக்கும் ஆருவிற்கும் நேஹாவை அடைத்து வைத்திருப்பது போல் ஒரு புகைப்படம் வந்ததாகவும் எங்கு அவனுக்கு தெரிந்தால் பயப்பட போகிறான் என்று அருணிடம் பேசியதாகவும், அருண் தான் அக்னி அங்கிருப்பதாக தகவல் தெரிவித்ததையும் கூறினான்.

பின் கதிரே “வாடா போய் தேடலாம்” என்றழைக்க, அக்னி “எல்லா இடத்துலயும் தேடிட்டேன்டா எங்கேயும் இல்ல, கால் பண்ணாலும் எடுக்கல” என்று சோர்வாக கூற, ஆருவிற்கு அவனை பார்க்கவே பரிதாபமாக இருந்தது, எப்போதும் தனி மிடுக்குடன் வலம் வருபவன் இன்று தலை கலைந்து, சோர்ந்து போய் இருக்க, அவனுக்கு ஆறுதல் கூற துடித்த மனதை கட்டுப்படுத்திக்கொண்டு நின்றிருந்தாள். அக்னியின் அருகே சென்ற கதிர் “மச்சா டேய் ஏன் டா இப்படி தளர்ந்து போற.. வா கண்டுப்பிடிச்சிடலாம்” என்று தோளை தட்ட, மறுப்பாக தலையசைத்தவன் “நிறையா கண்ணுக்கு தெரியாத எனிமீஸ் இருக்காங்கடா கதிரு.. என்னோட கேரக்டராலயே எல்லாரையும் இழந்துட்டேன்” என்று தலையில் கைவைத்தபடி கூற, ஆரு வெகுண்டுவிட்டாள்.

“டேய் என்ன இப்போ இப்படியே பேசிட்டு இருந்தா நேஹா கிடைச்சிடுவாளா, சும்மா உக்காந்து கண்டதை பேசாம வர சொல்லு போய் கண்டுப்பிடிக்கலாம்” என்று கதிரை பார்த்து சத்தமிட்டாள். அக்னி அவளை பார்த்துக்கொண்டு நிற்க, அப்போது அதே ஸ்டோர் ரூமில் இருந்து சத்தம் கேட்டது,
கதிர் “டேய் அங்க ஏதோ சத்தம் கேட்டுச்சு” என்றுரைக்க, அக்னி அவ்வறையை உணர்ச்சிகளற்று பார்த்துக்கொண்டிருந்தான்.

கதிர் ஆரு இருவரும் அப்போது தான் அவன் பார்வை மாற்றத்தை உணர்ந்தனர். அக்னி அந்த அறை நோக்கி செல்ல, அவர்கள் இருவரும் அவன் பின் சென்றனர். அக்னி வேகமாக சென்று கதவை திறக்க, அங்கு ஒருவன் நேஹாவின் பக்கத்தில் அமர்ந்து அவள் முகத்தின் அருகே கையை கொண்டு செல்ல, நேஹாவோ சுயநினைவின்றி மயங்கியிருந்தாள்.

நேஹாவின் அருகே இருந்தவனின் சட்டையை பிடித்த அக்னி அவனை ஆக்ரோஷமாக அடிக்க தொடங்க, கதிரும் அவனுடன் சேர்ந்து அடிக்க தொடங்கினான். ஆரு, நேஹாவின் அருகே சென்று அவள் கட்டுகளை அவிழ்த்துவிட்டவள் அங்கிருந்த தண்ணீர் பொத்தலில் இருந்த நீரை எடுத்து அவள் முகத்தில் தெளிக்க, அதில் கொஞ்சம் கொஞ்சமாக தெளிய ஆரம்பித்தாள்.

அங்கிருந்தவனின் சட்டையை பிடித்து அக்னி “சொல்றா, எதுக்கு இப்படி பண்ண.. யாரு டா நீ” என்று சீற, அவனோ
“நான் ஏதும் பண்ணலங்க” என்றபடி அவன் கையை தட்டிவிட பார்க்க, அவன் சட்டையை இறுக பற்றிய அக்னி “கதிர் அந்த நம்பர்க்கு கால் பண்ணு டா” என்று கூற அவனும் அதற்கு அழைப்பு விடுத்தான், அது அங்கே நின்று கொண்டிருந்தவனின் பாக்கெட்டில் இருந்து ஒலிக்க, அதை வெளியே எடுத்தவன் “இது என்னோடது இல்ல” என்றிட, அக்னி “அப்போ உன்னோட போன் எங்க” என்று வினவ,
“இதோ” என்றபடி மறுபக்க பாக்கெட்டில் கைவிட்டவன் “ஐயோ காணோம்” என்றான்.

அக்னி “டேய் கிட்னாப் பண்ணிட்டு, இப்போ மாட்டிகிட்டதும் பேச்சை மாத்துறியா” என்று எகிற,
கதிர் “நீ இங்க தான் ப்ராக்டீஸ் பண்றியா.. யாரு உன் கோச்” என்று வினவ
“ஸ்டீபன் சார்” என்றான். அக்னி அவனை இழுத்துக்கொண்டு வெளியே செல்ல, அந்த அரவம் கேட்டு அங்குள்ள மாணவர்கள் கூடிவிட அதை பார்த்த அந்த மாணவனோ “சார் நான் எதுவும் பண்ணல, எதுக்கு என்ன கூட்டிட்டு போறீங்க..” என்று சொல்லிக்கொண்டே அக்னியின் இழுப்பிற்கு சென்றான்.

அங்கு கதிர் அந்த மாணவர்களிடம் ஸ்டீபன் சாரை அழைத்து வர கூற, அவர் அங்கு இல்லாததால் வேறொருவரு பயிற்சியாளர் வந்திருந்தார். அக்னி “நீங்கதான் ஸ்டீபன்னா” என்று வினவ, அவரோ “இல்ல நான் முரளி.. ஸ்டீபன் சார் இன்னைக்கு லீவ்.. வினித் என்ன செஞ்சான்” என்று அந்த பையனை சுட்டி காட்டி கேட்க, அக்னி “ஓ இவன் பேரு வினித்தா..” என்றவன் நடந்தவற்றை கூறினான்.

நேஹா சோர்வாக இருந்ததில் அவளுக்கு அரைகுறையாகவே நடந்தவை புரிய,  அனைவரையும் பார்த்தபடி ஆருவின் கையணைப்பில் நின்றிருந்தாள். வினித் “ஐயோ எதுவுமே உண்மை இல்ல சார், நான் எதுவும் செய்யல, இது என் போன் இல்ல, எப்படி வந்துச்சுன்னும் தெரியாது, நான் அங்க சத்தம் கேட்டுதான் போனேன்.. அப்போ தான் இவங்க வந்தாங்க” என்று நடந்தவற்றை விளக்க,
அக்னி நேஹாவிடம் சென்று “உனக்கு எதாச்சு ஞாபகம் இருக்கா நேஹா” என்றான் கேள்வியாக. நேஹா அவனை பார்த்து “என்ன அந்த ரூம்ல போட்டு தள்ளி கை கால் கட்டுறப்ப வெளிச்சம் லைட்டா தெரிய அப்போ எல்லோ ஷர்ட் மாதிரி இருந்துச்சு” என்றாள் திக்கி திணறி.

வினித்தின் புறம் திரும்பிய அக்னி அவனை மேலிருந்து கீழ் அழுத்தமாக பார்க்க, அவனோ என்னவென்று புரியாமல் நின்றான். கதிர் “இப்போ என்ன சொல்ற” என்று வினவ,
வினித் “சார் நான் இல்ல சார்” என்றான். கதிர் “போன் இல்லை, ஷர்ட் இல்லை.. நெஸ்ட் என்ன சொல்ல போற” என்று நக்கலாக வினவ அக்னியோ அவனையே பார்த்தபடி நின்றான். ஆரு அக்னியை பார்த்துவிட்டு முரளியிடம், “சார் இங்க சிசிடிவி இருக்கா, பாக்க முடியுமா” என்று வினவ,
முரளி “ஆன் இருக்கு மா” என்றார் ஆனால் கூட்டத்தில் நின்ற ஒருவனோ “இல்ல சார், அது நேத்து பசங்க சண்டைல” என்றிழுக்க, அவனை முறைத்த முரளி “மீட் மீ லேட்டர்” என்றவர் ஆருவிடம் “சாரி மா” என்றார்.

வினித் “சார் ஏன் சார் அதெல்லாம் பாக்கணும், நான் தான் சொல்றேன்ல நான் எதுவும் பண்ணல” என்றான் அழுத்தமாக. அக்னி ஏதோ பேச வர, “ஏன் அக்னி அவன் தான் சொல்றான்ல உனக்கு ஏன் அவன நம்ப தோணல” என்று பின்னிலிருந்து குரல் வர, அனைவரும் திரும்பினர். வெள்ளை நிற பார்மல் ஷர்ட்டும், சந்தன நிற பேண்ட்டும் அணிந்து, கண்ணில் இருந்த குளர்ஸை கழட்டியபடி, ஆறடியில், மாநிறத்தில் ஒருவன் அவர்களை நெருங்கினான்.

கதிர் அவனை பார்த்து “யாரு நீங்க” என்று வினவ, “என்ன கதிர், பிரண்ட் என்ன சொன்னாலும் உண்மைன்னு நிப்பியா, இருடா விசாரிக்கலாம்னு சொல்லமாட்டியா” என்று நக்கலாக வினவ, அக்னியோ புரியாமல் “யாரு நீங்க, உங்களுக்கு எப்படி எங்களை தெரியும்” என்றான் புருவம் சுருக்கி. “எல்லாம் தெரியும் மிஸ்டர் அக்னி பிரதாப்.. ஆமா அவன் தான் நேஹாவை கடத்துனான், தப்பா நடந்துக்க பாத்தான்னு எப்படி சொல்ற” என்று மார்பிற்கு குறுக்கே கையை கட்டிக்கொண்டு வினவ, அக்னி அவனை கூர்மையாக பார்த்தானே ஒழிய பதிலளிக்கவில்லை.

அந்த புதியவன் “அவனுக்கு சொல்ல புடிக்கல போல, நீ சொல்லு கதிர் ஏன் இவன் தான் பண்ணான்னு சொல்றீங்க.. ஆரு நீ கூட சொல்லலாம்” என்று அவளையும் சரியாக அடையாளம் காண, அங்கிருந்த யாரும் அவனை அறியவில்லை. கதிர் “இல்ல போன் அவன் பாக்கெட்ல தான் இருந்துச்சு, லொகேஷன் இங்கதான் காட்டுச்சு, அப்பறம் நேஹாவும்” என்று கூறி முடிக்கும் முன் வாய் விட்டு சிரித்தவன் “மஞ்ச கலர் சட்ட அதான” என்று கேட்டு கண்ணடித்தவன் அக்னியிடம் நெருங்கி “ஏன் அக்னி இங்க அவன் மட்டும் தான் எல்லோ கலர் ஷர்ட் போட்டிருக்கானா” என்று அழுத்தமாக வினவ, அக்னிக்கு அன்று தான் கேட்ட “நான் மட்டும் தான் இங்க ரெட் ஷர்ட் போட்டிருக்கேனா” என்ற கேள்வி மனதில் தோன்றியது.

அந்த கேள்வி தோன்றவும் கண்ணில் மின்னல் வெட்ட, அந்த பெயர் தெரியாதவனை ஏறிட்டான். அதற்குள் அங்கு அருண் வந்துவிட, அந்த வெள்ளை சட்டை அணிந்தவனோ “என்ன அக்னி, அவன போலீஸ் கிட்ட பிடிச்சு குடுத்துத்திட ஆள் வரவச்சிட்ட போல” என்று கேட்க,
அக்னியிடம் வந்த அருண் “யாரு டா அக்னி.. இவந்தானா” என்று கோபமாக கேட்டுக்கொண்டே வினித்தை நெருங்க, அவனை தடுத்த அக்னி அந்த வெள்ளை சட்டை போட்டவனிடம் திரும்பி “ஆத்ரேயன் எங்க” என்றான்.

அக்னியை கண்டு கள்ள சிரிப்பு ஒன்றை உதிர்த்தவன் “வாவ்.. என்ன மூளைடா உனக்கு” என்று அவனை மெச்சிவிட்டு திரும்பி பார்க்க, அங்கு ரேயன் அவர்களை நோக்கி நடந்து வந்தான். கதிரம் ஆருவும் புரியாமல் பார்க்க, அவர்களை நோக்கி நடந்து வந்த ரேயனோ ஆருவை பார்த்து கண்ணடிக்க, அவளோ முகத்தை திருப்பி கொண்டாள். அதை கண்டு புன்னகைத்தவன், அக்னியின் புறம் பார்வையை திருப்பினான்.

ரேயன் “என்ன மாப்ஸ்.. இங்க என்ன பண்ற, ப்ராக்ட்டிஸ்ஸா” என்று புருவமுயர்த்த, அக்னியோ அவனை அமைதியாக ஏறிட்டான். கதிர் “ரேயா என்ன நடக்குது இங்க” என்று சற்று காட்டமாகவே வினவ, ரேயன் “கூட்டமா இருந்துச்சு அதான் நானும் என் பிரண்டும் என்னன்னு பாக்க வந்தோம்.. அப்படி தான டா” என்று அந்த புதியவனை பார்த்து கேட்க, அவனும் “அமா மச்சா.. நான் அப்படியே சும்மா பேசிட்டு இருந்தேன்” என்றான் தோளை உலுக்கி. அதில் கடுப்பான நேஹா “என்ன நடக்குதுன்னு சொல்லுங்க ரேயன்.. ப்ளீஸ்” என்றிட, “அம்மு கேக்குறான்னு சொல்றேன்” என்றான்.

ரேயன் கூறியதை கேட்டும் ஆருவும் அக்னியும் அவனை பார்வையாலே எரிக்க, ரேயன் “நேஹாவை கிட்னாப் பண்ணது நாந்தான்” என்றான் அலுங்காமல் குலுங்காமல். நேஹா அக்னி ஆரு கதிர் தவிர மற்ற அனைவரும் அவர்களை வேடிக்கை பார்க்க, வினித் மற்றும் முரளி அவனை உன்னிப்பாக கவனித்தனர். அக்னி, “என்ன பண்ண ட்ரை பண்ற” என்று எரிச்சலாக வினவ, அதற்கு மேல் அவர்களை சோதிக்க வேண்டாம் என்றெண்ணியவன் “எனக்கு மட்டும் தெரிஞ்ச அந்த உண்மைய உங்க எல்லாருக்கும் காட்ட தான் இதெல்லாம் பண்ணேன்” என்றான்.

அன்று நடந்த அனைத்தையும் தன் பார்வையில் விளக்க வேண்டும், அதே சமயம் அக்னியின் மீது எந்த தவறும் இல்லை என்பதையும் புரியவைக்க வேண்டும் என்றெண்ணியவன், அதற்கு துருப்பு சீட்டாய் பயன்படுத்தியது நேஹாவை தான்.  தன் அலுவலகத்தில் அமர்ந்து யோசித்துக்கொண்டிருந்த ரேயனுக்கு இந்த திட்டம் தோன்ற கிஷோரை அழைத்தவன் அதை அவனிடம் கூறியிருக்க, அதை கேட்டு அதிர்ந்தவன் “எப்படி இந்த திருட்டுதனத்தை பண்றதுனு என்ன மாதிரி ஒரு பியூர் கோல்ட் கிட்ட கேக்குற” என்று வாயில் கைவைக்க, ரேயன் அவனை கேவலமான பார்வை ஒன்று பார்த்து வைத்தான்.

கிஷோர் “சரி சரி.. இவ்ளோ கேவலமா லுக்கு விடாத” என்றவன் சிறு இடைவேளை விட்டு “டேய் மச்சா, நம்ம விக்கி கிட்ட கேக்கலாமே.. அவன் தான் இதுக்கெல்லாம் செட் ஆவான்” என்று கூற, ரேயன் “யாரு நம்ம விக்கியா” என்றான் யோசனையாக. கிஷோர் “ஆமாடா.. அவன் தான் பிளான்லாம் பக்கவா செஞ்சு தருவான்.. நம்ம என்ன பண்ணனும் சொன்னா போதும்.. தலைவன் பக்காவா பண்ணுவான்” என்று கூற, ரேயன், விக்கி என்ற விக்ரமாதித்யனிற்கு அழைப்பு விடுத்தான்.

ரேயன் “விக்கி” என்றிட, அவனோ “யாரு…” என்றான் வேண்டுமென்றே. ரேயன் “டேய்.. நடிக்காத” என்க, விக்ரமோ  “சாரி யாருன்னு தெரியல” என்றான். ரேயன் “சரி காண்டாக்ட் இல்லாம இருந்ததுக்கு சாரி” என்று மன்னிப்பு வேண்ட, விக்ரம் “வாவ் ஆத்ரேயன் சாரி சொல்றானா.. பார்டா” என்று அதிசயித்தவன் பின் “சொல்லுடா என்ன வேணும்” என்று வினவ, ரேயன் “நேர்ல பேசணும்… நான் வீட்டுக்கு வரேன்” என்றான். விக்ரம் “அட்ரஸ் சொல்லமாட்டேன்” என்று சிலுப்பிக்கொள்ள, ரேயன் “மதனுக்கு போன் போட்டா தெரிய போகுது” என்று நக்கலாக கூற, விக்ரம் “சரி.. வந்து சேரு” என்றான்.

அதன் பிறகு அவனை சந்தித்தவன் அனைத்தையும் கூற, விக்ரமும் அதற்கு ஒப்புக்கொண்டான். அக்னியிடம் அலைபேசியில் பேசியதும் அவனே, அக்னி அருணிடம் இதைப்பற்றி கூற நேரும் என்று யூகித்தவன் விக்ரமிடம் அதை தெரிவிக்க, விக்ரமோ “டேய் எது பண்ணுறதா இருந்தாலும் தடயம் இல்லாம பண்ணனும்” என்றவன் “இதோ ஹாக்கர்.. உன் மாமா என்ன அவரோட மாமாவே வந்தாலும் கண்டுபிடிக்க முடியாது.. ஆனா அக்னி நம்மல ரீச் பண்ணனும்ல சோ நம்ம இருக்க இடத்த சுத்தி ஒரு 5 கிலோமீட்டர் வரை இது லொகேஷன் காட்டுற மாதிரி செட் பண்றேன்” என்றவன் ரேயனுக்காக அனைத்தையும் செய்து முடித்தான்.

நடந்தவற்றை ரேயன் கூற அனைவருக்கும் அது அதிர்ச்சியே. விக்ரம் “உங்க எல்லாருக்கும் குழப்பமா இருக்குனு புரிது, உங்க எல்லாருக்கும் தெரியாத உண்மைய சும்மா வாயில சொன்னா நல்லா இருக்காதுன்னு ரேயன் நினச்சான், அதனால எல்லாத்தையும் முன்னாடி எப்படி நடந்துச்சோ அப்படி நடத்த நினச்சோம், நேஹாவுக்கு ரொம்ப கம்மியான மயக்க மருந்து போட்டு தூக்கிட்டு வந்து வச்சிட்டு, கூடவே தான் இருந்தோம்” என்று கூறியவன் அக்னியிடம் சென்று “ஏன் அக்னி நீ ஏன் வினித்த எதுவும் கேட்காம அடிச்ச, அவன்தான் இல்லன்னு சொன்னான்ல” என்று உணர்த்த, இப்போது அக்னிக்கு ரேயனின் நிலை புரிந்தது.

விக்ரம் “உனக்கு இப்போ புரியும்னு நினைக்குறேன், ஆனா பாதிப்பு என்னவோ உனக்குத்தான் இல்லையா.. அதை சரி பண்ணணும்ல..” என்று கூறிவன் ரேயனை பார்க்க,
ரேயன் “கிச்சா” என்று குரல் கொடுத்தான்.  ஆரு நேஹா கதிர் அக்னி என அனைவரும் அவசரமாக திரும்பி பார்க்க, அங்கு கிஷோருடன் கோச் மைகேல், திலிப், அந்த காவலர் மற்றும் அன்று இருந்த மாணவர்கள் அனைவரும் வந்துக்கொண்டு இருந்தனர்.

அக்னி அவர்களை அதிர்ந்து பார்க்க, ஆரு ரேயனை தான் திரும்பி பார்த்தாள். ரேயன் யாருமறியா வண்ணம் அவளுக்கு  பறக்கும் முத்தத்ததை அனுப்ப அவளோ அதை உணரக்கூட முடியாமல் அவனை வெறித்துக்கொண்டிருந்தாள். அத்துவா இது என்ற கேள்வி அவளுள், நேஹா அக்னியின் அருகில் வந்து நிற்க, அக்னி அவள் கையை இறுக பற்றிக்கொண்டான். கதிர் “பாவி ஒரு வார்த்தை சொல்லல” என்று கிஷோரை பார்க்க, கிஷோர் “சொல்லிருந்தா உன்னோட இந்த அழகான ரியாக்ஷன பாத்திருக்க முடியுமா..” என்று அவன் கன்னத்தை கிள்ளினான்.

அக்னியிடம் வந்த திலிப் அவனை கட்டிக்கொண்டு “ஒருவழியா உன்மேல இருந்த கரை போயிருச்சு டா அக்னி” என்றார் நெகிழ்ந்த குரலில். அவனும் அவரை கண் கலங்க பார்க்க, அவனிடம் வந்த மைகேல் “சாரி அக்னி அன்னைக்கு என்னால எதுவும் செய்ய முடியல” என்றார் உண்மையான வருத்தத்துடன். அக்னி “ஐயோ அதெல்லாம் எனக்கு புரிது சார்.. ஏன் சாரிலாம்” என்றிட, அதன் பிறகு அவனிடம் வந்த காவலர் “எனக்கு தெரியும் அக்னி உன்மேல தப்பு இருக்காதுன்னு…” என்று கூற, விரக்தி புன்னகையை சிந்தியவன், “தெரிய வேண்டியவங்களுக்கு தெரியலயே சார்” என்றான் தன் தந்தையை நினைவில் கொண்டு.

அதை உணர்ந்த ரேயன் “மாப்ஸ்” என்று அக்னியை அழைக்க, அவனோ என்ன என்பதாய் அவனை ஏறிட்டான். ரேயன் “அக்கட சூடு” என்று அவன் பின்னல் கை காட்ட, அங்கு அக்னியின் தந்தை ஒரு ஓரமாக நின்றுகொண்டு இருந்தார். அதை கண்டவன் அப்படியே நிற்க, கதிர் தான் ஓடி சென்று அவரை அழைத்தான். அவர் தூரத்தில் இருந்தே அவனிடம் கை கூப்பி “என்ன மன்னிக்க முடிஞ்சா மன்னிக்க சொல்லு கதிர்” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.

கதிர் அக்னியிடம் வந்து அவர் கூறியதை கூற, அக்னியின் முகத்தில் அப்படி ஒரு அமைதி, ஏன் அனைவர் முகத்தில் அமைதியை கடந்த மகிழ்ச்சி இருந்தது.
விக்ரம் “சரி மச்சா நான் கிளம்புறேன்” என்று விடை பெற, ரேயன் “ஏன் டா.. வா வீட்டுக்கு போயிட்டு போலாம்” என்றழைக்க, விக்ரமோ “ஏன் என் பொண்டாட்டி என்ன அடிக்கவா.. நோ.. எல்லாருக்கும் பை” என்றவன் திரும்பி நடக்க, அக்னி அவனை அழைத்தான்.

விக்ரம் “என்ன அக்னி.. சொல்லுங்க” என்று வினவ,
அக்னி “தேங்க்ஸ்” என்றான் மென் புன்னகையுடன். அக்னி கூறியதை கேட்டு புன்னகைத்த விக்ரம் “நீங்க அத என்கிட்ட சொல்ல கூடாது” என்றவன் கண் சிமிட்டிவிட்டு அங்கிருந்து செல்ல, அக்னியின் பார்வை ரேயனின் புறம் திரும்பியது. ரேயன் கிஷோரிடம் ஏதோ பேசிக்கொண்டு இருக்க, கதிர் அவனை அணைத்துகொண்டு “செம்ம ரேயா.. வேற லெவல்..தேங்க்ஸ்” என்றான் மனம் மகிழ, ரேயன் தான் “டேய் நான் இந்து இல்ல டா..” என்று கூறி அவனை சீண்டிக்கொண்டிருந்தான்.

ஆருவிற்கு தான் ஏன் இப்படி தனிமரம் ஆனோம் என்ற வருத்தம் மனம் முழுவதும் பரவி ஒரு வலியை தந்தது.   நண்பனின் மகிழ்வை பங்குபோட முடியவில்லை, காதலனின் இந்த உயர்ந்த மனதை எண்ணி முழுதாக சந்தோஷப்பட முடியவில்லை ஏன் தனக்கு மட்டும் இவ்வாறு நடக்கிறது என்றெண்ணியவளின் கண்கள் கலங்கிவிட அங்கு ஒரு மூலையில் சென்று நின்றவள் பல்லை கடித்து தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு நின்றாள்.

நேஹா ரேயனின் அருகே வர, ரேயன் “சாரி அம்மு.. உங்கிட்ட சொல்லாம பண்ணதுக்கு” என்று மன்னிப்பை வேண்ட, சட்டென அவன் தோளில் அடித்தவள் “நான் கேட்டேனா உங்க சாரிய” என்றாள் குரல் தழுதழுக்க.  அனைவரின் முன்னும் அக்னியை நிரபராதி என காட்ட அவன் மேற்கொண்டவற்றை நினைத்து நேஹா கண் கலங்க, ரேயன் “அட என்ன நீ.. கண்ண தொட.. போ வீட்டுக்கு போ.. எல்லாரும் போகலாம்..லேட் ஆகிடுச்சு” என்றான்.

அக்னியால் அவ்வளவு எளிதில் ரேயனிடம் பேசிவிட முடியவில்லை ஆனால் அவன் மனதில் ரேயனின் மீது ஒரு தனி மதிப்பு வந்தது. எதர்ச்சியாக திரும்பிய அக்னி ஒரு மூலையில் நின்றுகொண்டிருந்த ஆருவை பார்க்க, அவன் மனதின் ஓரத்தில் ஒரு வலி உண்டாகியது, ‘சாரி ஆரு, ரொம்ப பேசிட்டேன், இப்போ எப்படி பேசனும்னு தெரியாம இருக்கேன்.. ஐ அம் சோ சாரி’ என்று மானசீகமாக மனதினுள் மன்னிப்பை வேண்டியவன் நேஹாவை அழைத்து ஆருவிடம் பேச சொன்னான்.

நேஹாவிற்கும் அவளை பார்க்க பாவமாக இருந்தது, அதற்கு மேலும் கோபத்தை இழுத்து பிடிக்க விரும்பாமல் ஆருவின் அருகே சென்றாள். அலைபேசியை நொண்டியபடி நின்றிருந்த ஆருவின் அருகே நிழலாட, நிமிர்ந்து பார்த்தாள். நேஹா நின்றுகொண்டிருக்க, அலைபேசியை அணைத்துவிட்டு அவள் முகத்தை கண்டாள். நேஹா “பார்டா ரொம்ப மரியாதை தான்” என்று கூற, ஆரு அவளை புரியாமல் பார்த்தாள்.

நேஹா “வீட்டுக்கு போகலயா” என்று வினவ, ஆரு “ஹ்ம்ம் நீங்க எல்லாரும் கிளம்புன அப்புறம் போகலாம்னு” என்றாள் இழுவையாக. நேஹா “வா வீட்டுக்கு போகலாம்” என்றழைக்க, ஆரு “இல்ல நீங்க எல்லாரும் போங்க, நான் போயிப்பேன்” என்றாள் அங்கும் இங்கும் பார்த்தபடி, நேஹா என்பதால் தான் இந்த அமைதி.

நேஹா “நான் உன்னை உன் வீட்டுக்கு போக சொல்லல, என்கூட வர சொன்னேன்” என்று அழுத்தமாக கூற, ஆரு விலுக்கென அவளை நிமிர்ந்து பார்க்க நேஹாவோ கண் கலங்கி நின்றிருந்தாள், அவளை கட்டிக்கொண்ட ஆரு “சாரிடி, இனி உங்கிட்ட பேசாம போகமாட்டேன், நான் எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா உன்ன” என்றாள் இன்னும் இறுக்கமாக அணைத்துக்கொண்டு.

நேஹாவும் கண்களை துடைத்துக்கொண்டு “சரி சரி விடு, இனி அத பத்தி பேச வேண்டாம், நீ இப்போவும் எங்க ஆரு தான், என் கிட்டி தான்” என்று கூற, ஆருவின் இதழ்களில் மெல்லிய புன்னகை. தூரத்தில் இருந்து அதை கண்டுக்கொண்ட ரேயனின் இதழ்களும் புன்னகையை சிந்தியது. அக்னிக்கும் அதன் பிறகு தான் மனம் நிறைந்தது. நேரமானதால் அங்கிருந்த அனைவரும் கிளம்பிவிட்டனர், நண்பர்கள் பட்டாளத்தை தவிர.

ரேயன் கிஷோருக்கு கண் காட்ட, அதை புரிந்துகொண்ட கிஷோர் கதிரை இழுத்துக்கொண்டு சென்றிட, நேஹாவின் அருகே வந்த ரேயன் “அம்மு கிஷோர் காரை எடுத்துட்டு போயிட்டான்.. எனக்கு கொஞ்சம் தலை வலியா இருக்கு.. உன் பாஸ்ஸ கொஞ்சம் பெரிய மனசு பண்ணி என்ன டிராப் பண்ண சொல்லேன்” என்றுவிட்டு கண்ணடிக்க, நேஹா “வாங்க வாங்க அதெல்லாம் அவர் டிராப் பண்ணுவார்” என்றுவிட்டு ஆருவை அழைத்துக்கொண்டு செல்ல, ரேயனும் அக்னியும் அவர்கள் பின் சென்றனர்.

அக்னி ஓட்டுனர் இருக்கையில் அமர, நேஹா அவனுடன் அமர்ந்துக்கொண்டாள். பின்னிருக்கையில் ஆரு அமர்ந்திருக்க, நேஹாவிற்கு மானசீகமாக நன்றியுரைத்த ரேயன் தன்னவளின் அருகே அமர்ந்துக்கொண்டான்.

Advertisement