Advertisement

அத்தியாயம் 35

நேஹா வீடு திரும்பிக்கொண்டிருக்க, அங்கே அவள் வீட்டின் அருகே அக்னி நின்றுகொண்டிருந்தான். அவனை பார்த்த குழம்பியவள் அவனை கண்டுகொள்ளாதது போல் வீட்டை நோக்கி சென்றாள். நேஹாவிற்கு அவனிடம் பேச விருப்பமில்லை என்பதே அதற்கான முக்கிய காரணம். அக்னி அவள் தன்னிடம் பேசுவாள் என்று எதிர்பார்க்க, அவளோ அப்படி ஒருவன் அங்கு இல்லாதது போல் அவனை கடந்து செல்ல, அக்னி குரலை செருமிவிட்டு “ஒரு நிமிஷம்” என்றான். அதில் நடையை நிறுத்தியவள் அவனை என்னவென்று பார்க்க, “ஒரு விஷயம் பேசணும்” என்றான்.

நேஹா “என்ன பேசணும்” என்று புருவம் சுருக்க, தன் காரை பார்த்தவன் “ரித்து” என்று அழைத்தான், ரித்துவும் காரில் இருந்து இறங்கி அவன் பக்கத்தில் வந்து நிற்க, நேஹாவிற்கு சுர்ரென்று கோபம் ஏறியது. நேஹா “நான் கிளம்புறேன்” என்று திரும்ப, அவள் கை பிடித்து தடுத்தவன் “நான் இன்னும் சொல்லவே இல்லையே” என்று அவள் முகம் பார்க்க,
“எல்லாத்தையும் கேட்டுட்டு நிக்கணும்னு எனக்கு அவசியம் இல்ல”என்றாள் சிடுசிடுப்பாக.

அக்னியிக்கு இப்போது அவளை விட்டால் வேறு வழி இருக்கவில்லை, எனவே “ப்ளீஸ்” என்று மெதுவாக கூற,
நேஹாவிற்கும் அதற்குமேல் அவளுடைய கோபத்தை அவனிடம் இழுத்து பிடிக்க முடியவில்லை. “சொல்லு என்ன விஷயம்” என்று எங்கோ பார்த்தபடி வினவ, அவள் முன் வந்தவன் “ரித்துவ ஒரு பையன் ரொம்ப நாளா பால்லோ பண்ணி டார்ச்சர் பண்ணிட்டு இருக்கான், எவ்ளோ சொல்லியும் திருந்தல, அவன் அந்த ஏரியா ஓட ரௌடி கேங்ல ஒருத்தன் அப்படின்றதால போலீஸ் கப்லைன்ட் எடுத்துக்க மாட்டுறாங்க.. நான் எதாச்சு பண்ணாலும் அது இவளைதான் பாதிக்கும், அதான்….” என்றிழுக்க,
நேஹா அவனை கூர்மையாக பார்த்து, “அதனால” என்றாள் கைகளை மார்பிற்கு குறுக்கே கட்டியபடி.

அக்னி “இங்க உன்கூட விடலாம்னு கூட்டிட்டு வந்தேன்” என்று கூறிவிட
நேஹாவிற்கு ‘இதுகெல்லாம் மட்டும் நான் வேணுமா’ என்று கோபம் தலைக்கு ஏறியது. அதுவும் யார் இவள், இவளுக்கு ஏன் இவன் இவ்வளவு செய்யவேண்டும் என்ற எண்ணமும் தலைத்தூக்க ஏதும் பேசாமல் அப்படியே நின்றாள்.

அக்னி அவள் பதிலுக்காக அமைதியாக அவளையே பார்த்தான். ரித்து இருவரையும் பார்த்துக்கொண்டு,
“இல்ல.. நான் வேற எதாவது ஹாஸ்டல்ல தங்கிக்கிறேன்.. ஏன் அவங்கள டிஸ்டர்ப் செய்யணும்” என்று அக்னியையும் நேஹாவையும் பார்த்து மெலிதான குரலில் கூற,
நேஹா “நான் இன்னும் எதுவுமே சொல்லலயே மிஸ்.ரித்து” என்றவள் அவளை துளைத்தெடுக்கும் பார்வை பார்க்க,
அக்னி “உனக்கு வேண்டானா நான் அவளை வேற ஹாஸ்டல் கூட்டிட்டு போறேன், இல்லனா என் வீட்டுக்கே கூட்டிட்டு போறேன்” என்றான் அவளை தீவிரமாக பார்த்துக்கொண்டு.

நேஹாவிற்கு ‘எது வீட்டுக்கு கூட்டிட்டு போவானா, எவ்ளோ திமிரு’ என்று கடுப்பானவள் “ஓ.. வீட்டுக்கு கூட்டிட்டு போவீங்களா” என்று பல்லை கடித்துக்கொண்டு கேட்க
அக்னி “யெஸ்” என்றான் உறுதியான குரலில். நேஹா “வெளிய எல்லாரும் யாருன்னு கேட்டா என்ன சொல்லுவீங்க” என்று கேட்க, அக்னி அசால்ட்டாக “அது உங்களுக்கு தேவ இல்லனு சொல்வேன்” என்று பட்டென்று கூறிவிட்டான்.

நேஹாவிற்கு அனைத்தும் தன் வசமிருந்து நழுவுவது போல் ஓர் உணர்வு, ஆனால் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் அமைதியாக அவனை பார்த்தாள்.
அக்னி “சொல்லுங்க மிஸ். நேஹா.. என்ன செய்யலாம்” என்று வினவ,
நேஹா அவனை திரும்பியும் பாராது “வாங்க ரித்து, நைட் டைம்ல எங்கயும் ஒத்துக்கமாட்டாங்க, அண்ட் அவன் திருப்பி நீங்க எந்த ஹாஸ்டல் போனாலும் கண்டுபுடிச்சி வந்து வம்பு பண்ணவும் சான்ஸ் இருக்கு, நான் என் அண்ணா கிட்ட சொல்றேன், அவரு போலீஸ் தான் அவரு பாத்துக்குவார், நீங்க உள்ள வாங்க” என்றாள். என்னதான் அளவு கடந்த கோபம் அவள் கண்ணில் தெரிந்தாலும் மனிதாபிமானம் இழக்காமல் நடந்துகொள்பவளை பார்த்துபடி நின்ற அக்னி ‘தட்ஸவை ஐ லவ் யு நேஹா’ என்று மனதில் நினைத்துக்கொண்டு வெளியில் “தான்க் யு” என்றான்.

பின் ரித்துவிடம் திரும்பியவன் “எந்த பிரச்னைனாலும் கால் பண்ணு, ஒழுங்கா சாப்பிடு, தூங்கு.. காலைல ஆபீஸ்ல பாக்கலாம்” என்று மென்மையாக கூற, ரித்துவும் தலைல ஆட்டினாள். பக்கத்தில் நின்ற நேஹாவோ எங்கோ பார்த்தபடி நின்றாள். அவனின் இந்த மென்மையான குரலை கேட்டு எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது என்று நினைத்தவளுக்கு மனம் வெதும்பியது, அவர்களிடம் இருந்து முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொண்டு நின்றாள். எங்கு அவனை கண்டால் அழுதுவிடுவோமோ என்ற பயத்தில்.

அவள் அறியாவண்ணம் சிரித்தவன் “வரேன்” என்று கூற,
நேஹா அவனை கண்டுகொள்ளாமல், “வாங்க ரித்து உள்ளே போலாம்” என்று அவளுடைய ஒரு பையை வாங்கிகொண்டு உள்ளே சென்றுவிட்டாள். ரித்து அவள் செல்வதையும், அக்னியையும் பார்க்க, அக்னி ‘போ’ என்று தலையசைக்க, ரித்துவும் நேஹாவின் பின் சென்றுவிட்டாள். அவர்கள் செல்லும் வரை பார்த்தவன் பின் காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.

நேஹாவிற்கு என்னதான் அக்னி ரித்துவிடம் நெருங்கி பழகுவது பிடிக்கவில்லை என்றாலும், இந்த ஒரு நிலையில் இருக்கும் பெண்ணை தங்கவிடாமல், அவளிடம் வெறுப்பு காட்ட மனம் கேட்கவில்லை. அவளிடம் மிகவும் மென்மையாகவே நடந்துகொண்டாள்.

அவள் பெற்றோரிடம் தன்னுடன் வேலை செய்யும் தோழி என்றும், அவளுடைய இக்கட்டான நிலையையும் கூற, அவர்களும் அவள் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் இருக்கட்டும் என்று கூறிவிட்டனர்.

ரித்து அவர்களை பார்த்து “அங்கிள் ஆண்ட்டி நான் இன்னும் 1 ஆர் 2 வீக்ஸ்ல வேற ஹாஸ்டல் பார்த்திடுறேன்.. சாரி உங்கள கஷ்ட படுத்துறதுக்கு” என்றிட, நேஹாவின் தாய் கவிதா “அட என்ன மா நீ… நீ எவ்ளோ நாள் வேணாலும் இருக்கலாம்… எதுக்கு இப்படியெல்லாம் பேசுற….” என்று கடிய, நேஹாவின் தந்தை சதீஷ் “ஆமா மா.. முதல உன் அண்ணன்கிட்ட சொல்லி அந்த பையனை ரெண்டு தட்டு தட்ட சொல்லு” என்று ரித்துவிடம் ஆரம்பித்து நேஹாவிடம் முடிக்க, நேஹாவும் சரி என்று தலையாட்டினாள்.

முதலில் கடைமைக்கு என்று தங்க வைக்க நினைத்தவள், ரித்துவின் இந்த அடக்கமான குணத்தில் வெகுவாய் ஈர்க்கப்பட்டாள் ‘இவளை நான் ஆபீஸில் சரியாக கவனிக்கலயோ’ என்று கூட நினைத்தாள் பின் “வாங்க ரித்து, நீங்க என்கூட என் ரூம்லயே இருக்கலாம், உங்களுக்கு ஓகே தான” என்று வினவ
ரித்து “ஐயோ உங்களுக்கு ஓகேவான்னு நான் தான் கேக்கணும், நீங்க கேக்குறீங்க…” என்றாள்.

நேஹா சிரித்துவிட்டு “எனக்கு ஓகே தான் வாங்க” என்று அவளை அழைத்துக்கொண்டு சென்றாள். அதன் பிறகு குளித்து உடை மாற்றிவிட்டு, அனைவரும் உண்டுவிட்டு, படுக்க சென்றனர். ரித்து நேஹாவுடன் அவளின் அறைக்கு சென்றாள், நேஹா “எது வேணாலும் தயங்காம கேளுங்க.. சரியா” என்று மெல்லிய புன்னகையுடன் கூற, ரித்துவிற்கு நேஹாவை பார்க்க ஆச்சிர்யமாக இருந்தது.

நேஹா “என்ன அப்படி பாக்குறீங்க” என்று கேட்க,
ரித்து “இல்ல.. எப்படி உங்களால முடியுது.. யாரோ ஒருத்திய பாஸ் சொன்னாருங்கிற ஒரே காரணத்துக்காக உங்க வீட்டில, உங்க ரூம்ல தங்க வச்சிருக்கிங்களே.. அதான்” என்று சிலாகிக்க,
நேஹாவிற்குதான் அவன் அவளளுக்கு வெறும் பாஸ்ஸாக மட்டும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று தோன்றியது, ஆனால் அவன்தான் அவளின் உலகம் ஆயிற்றே… பெருமூச்சு ஒன்றை எறிந்தவள் “அப்படி இல்ல, உங்க நிலைமை யோசிச்சுதான்..” என்றிட,
ரித்து “ரொம்ப தேங்க்ஸ்.. நான் இதை என்னைக்கும் மறக்கமாட்டேன்” என்றாள்.
நேஹா “விடுங்க ரித்து… படுத்து தூங்குங்க” என்று படுக்க போக
ரித்து “ஹ்ம்ம்..” என்றவளும் படுக்க சென்றாள் பின் மீண்டும் திரும்பி, “உங்களுக்கு என்ன வயசு” என்று வினவ
நேஹா “26” என்றாள்.

ரித்து “எனக்கு 23 தான், அப்போ நான் உங்கள அக்கானு கூப்பிடவா” என்று ஆர்வமாக கேட்க,
நேஹாவும் சிரித்துக்கொண்டே சரி என்றாள். ரித்துவும் சிரித்துவிட்டு “அப்போ உங்களுக்கும் அக்னி அண்ணாக்கும் ஒரே வயசுதானா” என்று வினவ, அவள் கூறிய அண்ணா என்ற வார்த்தையை கேட்ட நேஹா அவளை விழி விரித்து பார்த்தாள்.

நேஹா “என்ன சொன்ன இப்போ” என்றாள் அதிர்ச்சி நிரம்பிய குரலில்,
ரித்து “உங்ககுக்கும் அக்னி அண்ணாக்கும் ஒரே வயசான்னு கேட்டேன்” என்று மீண்டும் கூற,
நேஹா “அக்னி…”
ரித்து “அண்ணா …” என்றாள்…

இந்து “டேய் அண்ணா” என்று தான் கைபேசியில் பேசுவது அறிந்தும் காச்சு மூச்சென்று கத்திக்கொண்டு இருக்க,
ரேயன் “ஹே ஏன் டி இந்த கத்து கத்துற” என்றான் காதை ஒரு விரல் கொண்டு தேய்தபடி,
இந்து “பின்ன கத்தாம, என்னடா பண்ணி வச்சிருக்க, வீட்ல எப்போ என் லவ் பத்தி சொன்ன” என்று கொலை வெறியில் கத்த, ரேயனோ விசில் அடித்துக்கொண்டு இருந்தான்.

கதிர் “எப்பா சாமி என்ன பா இப்படி பண்ணிட்ட” என்று வினவ, ரேயன் “ஓ மாப்பிள்ளை சார் நீங்களும் லைன்ல இருக்கீங்களா” என்று சிரித்துக்கொண்டு கேட்க, அங்கு காண்பிரன்ஸ் காலில் இருந்த கதிரும் இந்துவும் தலையில் அடித்துக்கொண்டனர். இந்து “டேய் உனக்கு அவ்ளோதான் மரியாதை” என்று எகிற, ரேயன் “இல்ல இவ்ளோநேரம் பயங்கரமா மரியாதை குடுத்துட்ட பாரு, இந்த வீட்ல பொறந்த எந்த பொண்ணுக்கும் அது இல்லையே.. உன்னோட ட்ரைனர் என் அக்கா தான, வேற எப்படி இருப்ப நீ” என்று கேலி செய்ய,
இந்து “அதெல்லாம் விடு.. இப்போ என்ன பண்றது” என்றாள் படபடப்பாக.

ரேயன் “ஹே பார்டா… லவ் பண்றப்போ என்கிட்ட கேட்டுட்டா பண்ண.. இதை மட்டும் ஏன் என்கிட்டே கேக்குற” என்று நக்கலாக கேள்வியெழுப்ப
கதிர் “தலைவரே.. ஏதோ தெரியாம லவ் பண்ணிட்டேன் உன் தங்கச்சிய, அதுக்குன்னு இப்போவே பாழங்கிணறுல தள்ளி விட பாக்குறியே, இந்து அப்பா கால் பண்ணி எப்போ வீட்டுக்கு வந்து பேசுறீங்க, அடுத்த மாசம் கல்யாணம் வச்சுக்கலாமா கேக்குறாரு” என்று புலம்பி தள்ள,
இந்து ரேயனை விட்டு கதிரிடம் தாவினாள், “எது உனக்கு என்ன கல்யாணம் பண்றது கிணத்துல விழுற மாதிரியா” என்று பல்லை கடிக்க,
ரேயனின் பக்கத்தில் அன்று அவனுடன் தங்க வந்த கிஷோர் அதை கேட்டு விட்டு “செத்தான் சேகரு.. ஹாஹாஹா” என்று சிரித்தான்.

கதிர் “டேய் வாய மூடு டா” என்று கிஷோரிடம் கெஞ்சியவன், இந்துவிடம் “மா அப்படி இல்ல.. இப்போ வேணான்னு தான் சொன்னேன்” என்றிழுக்க, இந்து மற்றும் ரேயன் கோரஸாக “அப்போ எப்போ” என்றனர்.

கிஷோர் “குடும்பம் ஒன்னு சேந்துருச்சு டா கதிரு.. மாட்டிக்கிட்ட” என்று கூறி கல கலவென சிரிக்க,
கதிர் “இப்போதான் என் ரெஸ்டாரண்ட் ஸ்டார்ட் ஆகி ஒன் இயர் ஆகுது.. இன்னும் அதுல டெவெலப் ஆகணும், இன்னும் கொஞ்சம் செட்டில் ஆகணும் பேமிலி மேனேஜ் பண்றதுக்கு… அதுக்குள்ள எப்படி கல்யாணம்” என்றான்.
இந்து “அண்ணா இவன் சரிப்பட்டு வரமாட்டான், பேசாம எனக்கு வேற பையன் பாரு” என்றிட
ரேயன் “சரி டா.. பாத்துருவோம்” என்றான்.

கதிர் “எதே… வேற பையனா.. இப்போ நீயும் தான கோவப்பட்ட ரேயன் வீட்ல பேசுனதுக்கு” என்று பாயின்ட்டாக பேச
இந்து “எது.. யார் கல்யாணத்துக்கு கோவப்பட்டா, என்கிட்ட சொல்லாம அவன் சொல்லிட்டான், அதான் கோவப்பட்டேன், சொல்லிருந்தா நானும் பேசிருப்பேன்… நான் சொல்றது தான கரெக்டு.. அதான் கோவப்பட்டேன்” என்று கூற,
கதிர் “ஆத்தி” என்று வாயை பிளந்தான்.

கிஷோர் “ஐயோ கதிரு கதிரு.. உனக்கு இன்னும் இந்த குடும்பத்தை பத்தி தெரியல.. வெளிய தான் பாக்க மாஸா இருப்பாங்க, உள்ள எல்லாம் லூசுங்க” என்று கூறி சிரிக்க,
இந்து “எது லூஸா….எங்க அம்மாகிட்ட சொல்றேன் இரு” என்று மிரட்ட,
கிஷோர் “ஐயோ இந்து செல்லம் எதுக்கு அதெல்லாம்.. நீங்களாம் எவ்ளோ புத்திசாலிங்க” என்று அசடு வழிய,
இந்து “அது” என்றாள்.

ரேயன் “சரி சரி.. கதிர் உனக்கு ஒன் இயர் டைம்.. அதுக்குமேல நோ.. என்ன ஓகேவா” என்றிட
கதிர் “ஐயோ போதும் போதும்… டபுள் ஓகே” என்றான், எங்கு இவன் நாளையே அனைவரையும் கூட்டி வந்துவிடுவானோ என்ற பயத்தில்.

ரேயன் “நீங்க சும்மா வீட்டுக்கு தெரியாம பாக்குறது எனக்கு புடிக்கல, அதான் சொல்லிட்டேன் உன் வீட்ல இருந்து வரும்போதே…” என்றிட
இந்து “அடப்பாவி, அதான் என்ன அங்கயே விட்டுட்டு போனியா” என்று வாயில் கை வைக்க, ரேயன் தோளை உலுக்கினான். கிஷோர் “உன் அண்ணன் வீட்ல போய் பேசிட்டு அப்பறம் தான் உன் அக்காவை பார்க்கவே போனான்..”
கதிர் “அப்போ எல்லாம் ப்ரீ பிளான்டா” என்றான் வடிவேலு பாணியில்.

ரேயன் “இல்ல இல்ல ஆன் தி வேல தான் தோணுச்சு… சரி சரி போய் படுங்க… குட் நைட்” என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டான். கிஷோர் விட்டதை பார்த்துக்கொண்டு படுத்திருக்க,
ரேயன் “ஹே ச்சி போ படு…” என்று அவன் அறைக்கு அனுப்பி வைத்தவன், கட்டிலில் படுத்து கொண்டு அடுத்தடுத்து என்ன செய்ய என்று யோசனையில் படுத்திருந்தவனின் குறும்புத்தனம் தலை தூக்க, தூங்க சென்ற கிஷாரை எழுப்பி தன் திட்டத்தை கூறினான்.

ரேயன் கூறியதை கேட்ட கிஷோர் “டேய் சைக்கோ… நைட் யோசிச்சிட்டு இருந்தா இப்படி தான் தோணும்… வேணாம் டா” என்று பதற
ரேயன் “வேணும்” என்றான்.
கிஷோர் “இப்படி பண்ணாத டா”
ரேயன் “பண்ணுவனே..” என்றுவிட்டு சென்றிட, கிஷோர் “ஐயோ சும்மா இருக்கமாட்டுறானே.. நாளைக்கு என்னலாம் பண்ண காத்து இருக்கான்னு தெரியலயே..” என்று புலம்பி கொண்டிருந்தவனுக்கு ரேயனின் திட்டத்தை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை.

இங்கு நேஹா பேயரைந்தார் போல் அமர்ந்திருக்க, ரித்து “என்ன கா ஆச்சு.. ஏன் இப்படி உக்காந்திருக்கீங்க” என்று வினவ, நேஹா “ஆன் இல்ல இல்ல ஒன்னும் இல்ல…. ஆமா உனக்கு அக்னிய முன்னாடியே தெரியுமா” என்று யூகித்து கேட்க,
ரித்து “ஆமாக்கா தெரியுமே….” என்றாள்.
நேஹா “தப்பா எடுத்துக்கலான எப்போல இருந்துன்னு சொல்ல முடியுமா” என்று வினவ, ரித்து “அட இதுல தப்பா எடுத்துக்க என்ன இருக்கு.. அது.. எனக்கு அம்மா அப்பா இல்ல, ஆஷ்ரமத்துல தான் வளந்தேன், அவங்கதான் 12த் வர என் படிப்பு செலவு பத்துக்குட்டாங்க, அப்பறம் பார்ட் டைம் ஒர்க் பண்ணி கொஞ்சம் காசு சேத்து அவங்கிட்ட கொடுப்பேன், சோ காலேஜ் பீஸ் கட்ட முடிஞ்சிது.. அந்த ஆஷ்ரமத்துல தான் அக்னி அண்ணாவ பாத்தேன், அவங்க பர்த்டே அப்போலாம் வருவாங்க, சோ அப்படி தெரியும்.. காலேஜ் முடிஞ்ச அப்புறம் அண்ணா அவுங்க கம்பெனி இன்டெர்வியு அட்டெண்ட் பண்ண சொன்னாங்க, அதுல வேலையும் கிடச்சிருச்சு” என்றிட,
நேஹாவிற்கு ஏதோ மின்னல் வெட்ட, “*** ஆஸ்ரமம்மா நீ” என்று கேட்க,
ரித்து “ஆமா கா.. உங்களுக்கும் தெரியுமா.. வருவீங்களா அங்க?” என்று கேள்வியெழுப்ப, நேஹாவிடம் பதிலில்லை.

நேஹாவிற்கு அப்போது தான் புரிந்தது அது அவள் அக்னியின் பிறந்த நாளன்று அவனிடம் பேச வைத்த ஆஸ்ரமம் என்று. அக்னி அதன் பிறகும் அங்கு சென்று வந்திருக்கிறான் என்று தெரிந்தவுடன் நேஹாவின் கண்கள் கலங்கியது, அதை மிகவும் சிரமாம்பட்டு கட்டு படுத்தி கொண்டாள்.

ரித்து “என்னக்கா டல் ஆகிட்டீங்க, எதாச்சு தப்பா சொல்லிட்டேனா” என்று முகம் சுருக்கி வினவ,
நேஹா “ஹே ச்ச… அதலாம் ஒன்னும் இல்ல…”
ரித்து “அக்னி அண்ணா சொன்னாங்க அவங்களோட வருங்கால பொண்டாட்டி தான் எங்களை எல்லாம் வந்து பாக்க சொன்னாங்கன்னு, அப்பறம் அவங்க குடுக்குற கிப்ட்ஸும் கொடுப்பாங்க.. ஆனா நானும் எவ்ளோவோ கேட்டு பாத்துட்டேன் அவங்க போட்டவை மட்டும் காட்ட மாட்டுறாங்க.. எங்க மேனேஜர்க்கு அவங்களை தெரியும், ஆனா அவரையும் சொல்ல விடமாட்டிங்கிறாங்க இவங்க” என்று சிறு பிள்ளை போல் கூற நேஹாவிற்குதான் தான் எப்படி உணர்கிறோம் என்றே புரியவில்லை.

தன் சிந்தையை தாண்டிய நடந்துகொண்டிருக்கும் விஷயங்களை நினைத்து என்ன செய்வது என்று கூட தெரியாமல் அப்படியே சிலையென சமைந்திருந்தாள், அவளை கலைத்தது என்னவோ ரித்துவின் குரல் தான். “அக்கா…என்னாச்சு… அடிக்கடி பிரீஸ் ஆகிட்றீங்க” என்று கேட்க,
நேஹா “இல்ல இல்ல போ நீ போய் தூங்கு” என்றாள். ரித்து “ஹ்ம்ம் சரி கா… குட் நைட்” என்று படுத்துக்கொள்ள, நேஹாவிற்கு தான் தூக்கம் வரவில்லை, இரவு மூன்று மணி வரை முழித்துக்கொண்டு அக்னியை பற்றியே நினைத்துக்கொண்டு இருந்தாள்.

அக்னி காலையில் ஆபீஸ் கிளம்பிக்கொண்டிருக்க, அவன் தொலைபேசி சிணுங்கியது. அதை எடுத்து பார்க்க, அதில் நேஹாவின் குறுஞ்செய்தி ஒளிர்ந்தது. “ஐ அம் சாரி” என்று மட்டும் அனுப்பியிருந்தாள், அதை பார்த்து மென்னகை பூத்தவன், தனது அலுவலகத்துக்கு கிளம்பி சென்றான்.

அக்னி ஆபீஸ் நுழைந்தவுடன் கண்டது என்னவோ சிரித்து பேசிக்கொண்டிருந்த நேஹாவையும் ரித்துவையும் தான், அதில் அவன் மனம் நிறைந்தது. ஆனால் ஐந்து நிமிடம் கூட அது நீடிக்கவில்லை, அவன் மகிழ்ச்சியை கலைத்தது ஒரு குரல். அந்த குரலை கேட்டவுடன் அக்னியின் முகம் மாறியது, பின்னால் நின்றது வேறு யாருமல்ல, சாக்ஷாட் ஆத்ரேயனே தான்.

ரேயன் “மாப்ஸ் உன்னதான்” என்று கூறிக்கொண்டு அக்னியின் அலுவலகத்தினுள் நுழைய, நேஹா இதழ் விரித்து சிரித்தாள். ஆத்ரேயனின் பின்னால் வந்த கிஷோரை பார்த்து ரித்து அதிர்ந்திருக்க, அவளை பார்த்த கிச்சா “ஹே” என்று அலறினான்.

தொடரும்…

Advertisement