Advertisement

                   அத்தியாயம் 33

        இந்துவை அழைத்து வர சென்ற கதிர்  சிறிது நேரத்தில் திரும்பி விட, மாடியில் அக்னியிடம் சண்டையிட்டு வந்த நேஹா அவனை  குழப்பமாக ஏறிட்டு, “டேய் என்ன போன வேகத்துல வந்துட்ட?” என்றாள்.  கதிர் “இல்ல நேஹா அவளே வரேன்னு சொன்னா, ஏதோ வேலை இருக்காம், சரி நமக்கும் இன்னும் டைம் இருக்குல்ல அதான் திரும்ப வந்துட்டேன்” என்றான்.

நேஹா “ஓ, இங்கயே கால் பண்ணிட்டு போனியா” என்று கேள்வியெழுப்ப

கதிர் “ஆமா எதர்ச்சியா அப்படியே கால் பண்ணேன்.. நல்லவேளை பன்னேன்” என்று கூறி கொண்டே உள்ளே நுழைந்தான். அவர்கள் பேசியதை கேட்டுக்கொண்டே கீழிறங்கினான் அக்னி.

அக்னி “அமா அந்த பொண்ணு நம்ம காலேஜ்னு சொன்னல” என்று அவனிடம் வினவ,

கதிர் திருட்டு முழி முழித்துவிட்டு “ஆமாடா நம்ம காலேஜ் தான், ஆர்க் டிபார்ட்மெண்ட்” என்று முடித்துக்கொண்டான். இப்போதே கூறி விடலாமா என்று யோசித்தவன் பின் அவள் வந்த பிறகே கூறலாம், அவளை கண்டால் தன் நண்பன் சிறிது இறங்குவான் என்றெண்ணிக்கொண்டே வாசலை நோக்க அங்கு கிஷோர் வந்து கொண்டு இருந்தான்.

கிஷோரை பார்த்த அக்னி கதிரை கேள்வியாய் நோக்க, கதிர் “நீங்க எல்லாரும் முறுக்கிட்டு போயிட்டீங்க, நாங்க ரெண்டு பேரு தான் தெருவுல நின்னோம், அப்போ நிக்குறப்போ ரெண்டு பேரும் பிரண்ட் ஆகிட்டோம்” என்றிட, அப்போதும் அக்னி அவனை குறுகுறுவென பார்த்து வைத்தான். கதிர் “கண்ணை நொண்டிடுவேன்.. பாக்குறான் பாரு” என முணுமுணுத்தவன் பின் அக்னி தன்னை பார்ப்பதை உணர்ந்து “அவன் நல்லவன் தான் ஸ்பை மாதிரி பார்க்காத” என்று கூறவும் கிஷோர் “நான் ஒன்னும் அவ்ளோ வர்த்தும் இல்லையே” என்று கூற,

கதிர் “ஆன் அப்படி இருந்திருந்தா நீ உறுப்பட்டிருப்ப” என்று அவனை வாரினான்.

அக்னிக்கு முதலில் இருந்தே கிஷோரின் மீது எவ்வித கோபமும் வந்தது கிடையாது, தன் நண்பன் எப்போதாவது எல்லை மீறி சென்றால் தடுப்பவன் கிஷோர் தான் என்பதை அவன் அறிந்தே இருந்தான். அதனால் ஒரு சிறு தலை அசைப்புடன் வரவேற்றான், கிஷோருக்கு அது பெரிதாக இருக்க அக்னியை பார்த்து மென்னகை ஒன்றை உதிர்த்தான்.

கிஷோர் அங்கு நின்றுகொண்டிருந்த கதிரிடம் “அப்பறம் மச்சான், உனக்கு அத்த பொண்ணு மாமா பொண்ணுலாம் இல்லையா” என்று வீட்டை சுற்றி பார்த்துக்கொண்டே கேட்க,

கதிர் “டேய் மானங்கெட்டவனே இது என்ன கல்யாண வீடா எல்லாரும் வர, அப்படியேனாலும் எனக்கு அப்படி யாரும் இல்லை” என்றிட,

கிச்சா “ச்ச.. அப்போ நான் எதுக்கு இனி இங்க இருக்கணும் கிளம்புறேன்” என்று திரும்பினான். கதிர் “சரி கிளம்பு” என்றிட, அவனை முறைத்த கிஷோர் “சாப்பிட்டு போன்னு சொல்லுடா” என்று கூற அக்னிக்கு சிரிப்பு வந்துவிட்டது,

கதிர் “தெரியுதுல, அப்பறம் எதுக்கு இந்த வெட்டி சீன்லாம், வா வா போவோம்… அக்னி வா போலாம்” என்று உள்ளே அழைத்து செல்ல, அக்னிக்கு கிஷோர் ஒரு டம்மி பீஸ் தான் என்று விளங்கி விட்டது, அவன் முகத்திலும் எவ்வித பொய் நடிப்பும் இல்லை என்பதையும் அவன் உணர்ந்தே இருந்தான்.

கதிர் வீட்டிற்கு செல்வதற்காக தயராகிக்கொண்டிருந்த இந்துவிற்கு அவள் வேலை செய்துகொண்டிருக்கும் கல்லூரியில் இருந்து ஒரு சிறிய வேலை வந்துவிட்டதால் அவள் கதிரிடம் தானே சிறிது நேரம் கழித்து வருவதாக கூறிவிட்டு தன் கல்லுரிக்கு சென்றாள். அங்கு வேலையெல்லாம் முடிந்து கதிர் வீட்டிற்கு செல்வதற்காக வெளியே வந்த இந்து கண்டது என்னவோ தனது கைபேசியை நொண்டிக்கொண்டு காரின் மேல் சாய்ந்து நின்ற ரேயனை தான்.

ரேயனை கண்டு அதிர்ந்து இந்து “அண்ணா இங்க என்ன பண்ணுறான்” என்று யோசித்துக்கொண்டு அவன் அருகே சென்றாள். இந்து “அண்ணா.. இங்க என்ன பண்ற” என்று கேட்க, அவளை  நிமிர்ந்து பார்த்தவன் “ஹே வந்துட்டியா.. உன்ன பார்க்கத்தான் வந்தேன்” என்றான். இந்து “என்ன பாக்கவா… நான் இங்க இருப்பேன்னு உனக்கு எப்படி தெரியும்” என்று வினவ,

ரேயன் “ப்ரொபஸ்ஸர் வேற எங்க இருப்பாங்களாம்” என்றான் கேலி குரலில்.  இந்து “இல்ல அது இல்ல”என்று திணற, ரேயன் “சித்தப்பாக்கு கால் பண்ணேன்.. நீ கிளம்பிட்டியா இல்லையானு கேட்க, நீ கிளம்பிட்டனு சொன்னாங்க, சரின்னு இங்க வந்து உனக்கு கால் பண்ண போன் எடுத்தேன் நீயே வந்துட்ட” என்று நீளமாக பேசி முடிக்க, இந்து தான் இப்போது எப்படி கதிர் வீட்டிற்கு செல்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தாள்.

இந்துவிற்கு அவர்களுடைய  பிரச்சனைகள் அனைத்தையும் அறிவாள் தான் ஆனால் அக்னி ரேயன் எதனால் முட்டிக்கொள்கிறார்கள் என்று பாவம் அவள் அறியவில்லை, கதிர் அதை கூறயிருக்கவில்லை. அக்னி தவறு  செய்திருக்க வாய்ப்பில்லை என்று அறிந்தவன் அவளிடம் “அவுங்க எதுக்கு அடிச்சிக்கிறாங்கன்னு எங்களுக்கு தெரியாது” என்று கூறியிருந்தான், அவளும் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை, அவளுக்கும் இருவரிடமும் தப்பு இருக்காது என்றே தோன்றியது. ரேயனை பற்றி அவள் அறிவாள், கதிர் கூறியதில் இருந்து அக்னியும் தன் தமயனுக்கு மோசமாக செய்திருக்க வாய்ப்பில்லை என்று நினைத்தாள்.

ரேயன் “ஹே என்ன சிலை மாதிரி நிக்குற” என்று அவளை பிடித்து உலுக்க,

இந்து “ஹான், இல்ல இல்ல ண்ணா ஒன்னும் இல்ல” என்றாள். ரேயன் “சரி நீ என்ன வெளிய வர, கிளாஸ் இல்லையா.. நான் பெர்மிஸ்சன்லாம் வாங்கணும்னு நினச்சேன் உன்ன பார்க்க” என்று சிறு நகை ஒன்றை இதழில் தவழவிட்டபடி கேட்க, அவளுக்கு இந்த ரேயனை பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டதால் தன் குழப்பங்கள் அனைத்தையும் விட்டு விட்டு அவனிடம் “என்ன ண்ணா ரொம்ப உற்சாகமா இருக்க” என்று கேட்டுவிட்டாள்.

ரேயன் “அதெல்லாம் இல்லையே.. ஹே வெயிட் இப்போதான் உன் ட்ரெஸ்ஸிங்க பாக்குறேன்.. பங்க்ஷன் ஏதும் போறியா என்ன?” என்று பட்டென்று கேட்டுவிட, இந்து தான் என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தாள். பின்”அது நான்.. பிரண்ட் வீடு கிரகபிரேவேஷத்துக்கு போறேன்” என்றாள்.

ரேயன் “எங்க இருக்கு” என்று வினவ

இந்து “இங்க இருந்து ஒரு முப்பது நிமிஷம்” என்றாள். ரேயன் தன் கை கடிகாரத்தை பார்த்துவிட்டு “சரி எனக்கும் டைம் இருக்கு வா நான் உன்ன டிராப் பண்றேன்” என்று குண்டை தூக்கி போட, இந்துவிற்கு தான் ஐயோ என்றானது.

இந்து “இல்ல பரவால.. எதுக்கு தேவயில்லாம.. நீ ஆபீஸ் போ ஐ வில் மேனேஜ்” என்று எவ்ளோ எடுத்து கூறியும் அவன் கேட்டான் இல்லை, “வான்னு சொன்னேன்” என்று அதட்ட அதன் பின்னே காரில் ஏறினாள்.

இந்து வண்டியில் ஏறியவுடன் ரேயனின் முகத்தில் அவள் அறியா வண்ணம் விஷம புன்னகை ஒன்று குடிக்கொண்டது. ஆம் அவன் அறிவான் அவள் கதிர் வீட்டிற்கு தான் செல்கிறாள் என்று, அவளுடைய கல்லூரிக்கு வருவதற்கு முன் அவன் எதார்த்தமாக அவளின் தாய் அதாவது வேணியிடம் அழைத்து அவளை பார்க்க போகிறேன் என்று கூற அவர் தான் அவள் ஏதோ தோழியின் திருமணத்திற்கு செல்வதாக கூறியிருந்ததாகவும், அந்த தோழி யார் என்று கூறவில்லை என்றும் கூறினார்.

அதை கேட்ட ரேயனுக்கு அன்று கல்லூரி வாசலில் கதிர் கூறியது ஞாபகத்திற்கு வர, உடனே தன் விளையாட்டை அங்கிருந்து ஆரம்பிக்கலாம் என்று நினைத்து கிளம்பிவிட்டான். ஆனால் அந்த விளையாட்டு அவன் நினைத்ததை விட சுவாரஸ்யம் ஆகப்போவதை அவனே அறிந்திருக்கவில்லை.

இந்து வண்டியில் ஏறிய பின்னும் “அண்ணா நீ எதுக்கு இப்போ தேவையில்லாம அலையுற…நானே போயிக்குறேன்” என்றிட,

ரேயன் இதற்கு மேல் சரி பட்டு வராது என்று நினைத்தவன் முகத்தை கடுமையாக மாற்றிக்கொண்டு “அமைதியா வா” என்று அதட்ட அவ்வளவு தான் அதோடு கப்சிப் என்றாகிவிட்டாள் பெண்ணவள். ஆனால் ரேயனுடன் வருவதை அவள் கதிருக்கு குறுஞ்செய்தி அனுப்ப, வேலை பளுவில் கதிர்  அதை பார்க்கவில்லை. ரேயனின் கார் பல வருடம் கழித்து காலனி செல்ல ஆவலாக பறந்தது.

இந்து ஒரு வித பதட்டத்தில் அமர்ந்திருக்க,   அதை நினைத்து தன்னை நொந்தவன்  “என்கிட்ட எதாவது சொல்லணுமா” என்று கேட்க,

இந்துவோ அதிர்ந்து “இல்லையே..அப்படி ஏதும் இல்லையே” என்று மறுக்க,

ரேயன் “நிஜமாவா” என்றான் துளைத்தெடுக்கும் பார்வையுடன்.

இந்து கையை பிசைந்துகொண்டு அமர்ந்திருக்க, ரேயன் “கதிர எப்போத்துல இருந்து லவ் பண்ற” என்று நேரடியாக கேட்டுவிட, இந்து “எது.. யாரு கதிர்…என்ன ண்ணா” என்று பவ்யமாக கேட்க, ரேயன் “மண்டைலேயே போடுவேன் பிராடு” என்றான். அதில் அசட்டு புன்னகை ஒன்றை உதிர்த்தவள் “நானே இன்னும் அஞ்சு நிமிஷம் விட்ருந்தா சொல்லிருப்பேன்… நீயே கேட்டுட்ட” என்றிட,

ரேயன் “சரி கேட்டதுக்கு பதில் சொல்லு” என்று புருவமுயர்த்த, இந்து அனைத்தையும் கூறி முடித்தாள்.

ரேயன் “அப்போ காலேஜ்ல நீங்க லவ் பண்ணல அப்படிதான” என்று வினவ

இந்து “ஆமா ண்ணா”

ரேயன் “ஹ்ம்ம்… ஹே வெய்ட்.. உனக்கு கதிர் பிரண்ட்ட தெரியாதுன்னா சொன்ன” என்று கேள்வி கேட்க,

இந்து “இல்ல ண்ணா… தெரியாது… உனக்கும் அவுங்களுக்கு பிரச்சனைன்னு தெரியும் ஆனா ஏன்னு தெரியாது..” என்க,

ரேயன் “நினைச்சேன்… நீ இவ்ளோ கேசுவலா இருக்கப்போவே நினச்சேன்” என்றான்.

இந்து “ஏன்  அப்படி சொல்ற…யாரு” என்று யோசனையுடன் அவனை பார்க்க,

ரேயன் சிறு இடைவெளி விட்டு “அக்னி” என்றான். இந்து அந்த பெயர் மறந்திருக்குமா என்ன, “என்ன ண்ணா சொல்ற” என்னும் போதே அவள் முகம்  மாற,

ரேயன் உடனே “வேண்டாம் இந்து… உன்னோட இந்த பார்வைக்கு அவன் ஏதும் செய்யல… என்மேல தான் தப்பு… உன்கிட்ட எல்லாம் சொல்ல தான் நான் வந்தேன்” என்றிட

இந்து “புரியல ண்ணா.. என்ன சொல்ற” என்றாள் குழப்பமாக.

ரேயன் நடந்தவற்றை கூற இந்துவிற்கு அழுகையே வந்துவிட்டது, தன்னால் ஒருவரின் வாழ்க்கை என்னவாகிருக்கும் என்று. “நல்லவேளை அவங்களுக்கு எதுவும் ஆகல, இல்லனா என்ன நானே மன்னிச்சிருக்க மாட்டேன்” என்றாள்.

ரேயன் “ஆனா என்ன என்னால மன்னிக்க முடியலையே இந்து” என்றவன் கண் கலங்க, இந்து “ஐயோ ஏன் ண்ணா அப்படி சொல்ற” என்றாள் பதட்டமாக.

ரேயன் தான் செய்த அனைத்தையும் கூறி முடித்து “எல்லாத்தையும் சரி பண்ணனும்” என்றிட, அவனின் தோளில் கை வைத்த இந்து “கண்டிப்பா சரி பண்ணிடலாம்.. நீ கவலைப்படாத” என்றாள்.

ரேயன் “அதுக்கு உன் ஹெல்ப் வேணும்” என்று கேட்க

இந்து “நானா” என்றாள் அதிர்ச்சியாக.

ரேயன் “ஹ்ம்ம்… நீ அக்னி கிட்ட மட்டும் இல்ல யார் கிட்டயும் எதையும் காட்டிக்காம நார்மல்லா இரு… போதும்… மத்தது நான் பாத்துக்குறேன்” என்க

இந்து “அக்னி இல்ல…. அக்னி அண்ணா இனி” என்று உற்சாகமாக கூற,

ரேயன் “ஹலோ அவன் என்ன இருந்தாலும் என் எதிரி தான் “

இந்து புரியாமல் பார்க்க , ரேயன் “அவன் என் எதிரி தான் அனா நான் அவன் எதிரி இல்ல” என்று கண்ணடித்து சிரிக்க, இந்துவும் அவன் புதிய அத்தியாயத்தில் கலந்துகொண்டாள்

கிஷோர் கதிர் வீட்டில் சில வேலைகளை கவனித்துக்கொண்டிருக்க, அவனுக்கு ஆருவிடமிருந்து அழைப்பு வந்தது. கிஷோர் கதிரை அழைத்து “மச்சா மச்சா.. அவ கால் பண்ணுறா” என்று பரபரக்க,

கதிர் “எடுத்து பேசு டா.. வந்துட்டாலோ” என்று வாசலை ஆவலாக பார்த்தான் முகத்தில் சிறு எதிர்பார்ப்புடன்.

கிஷோர் “டேய் நான் உங்கிட்ட ஒன்னு மறைச்சுட்டேன்” என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கூற,

கதிர் “என்ன டா” என்றான் கேள்வியாக.

கிஷோர் ஆருவிடம் கூறிய அனைத்து பொய்களையும் கூற கதிர் தலையில் கை வைத்துக்கொண்டு அமர்ந்து விட்டான்,

கிஷோர் “ஹிஹி சாரி டா” என்று அசட்டு சிரிப்பை உதிர்க்க,

கதிர் “டேய் கூறுகெட்ட குக்கரு.. என் கிட்டயாச்சு சொல்லியிருக்கலாம்ல.. நான் எதாச்சு பேசி வர வச்சிருப்பேன்..இதலாம் தேவையா” என்று கத்த,

கிஷோர் “இல்ல அது ஏதோ ஒரு வேகத்துல” என்று இழுக்க,

கதிர் “உன் வேகம் நமக்கு சோகம் டா ” என்றான். கிஷோர் “சரி இரு என்ன சொல்றா பாக்கலாம்” என்றுவிட்டு அவள் அழைப்பை ஏற்றான்.

கிஷோர்  “சொல்லு பார்ட்னர்.. வந்துட்டியா” என்று வினவ

ஆரு “என்ன அட்ரஸ் இது” என்றாள் எரிச்சலுடன். கிஷரோ “என் வீடு தான் பார்ட்னர்.. புது வீடு அட்ரஸ்” என்று எடுத்து விட, ஆரு “நான் வரல” என்றாள்.

‘ஐயோ ஆரம்பிக்கிறாளே’ என்று நினைத்தவன் “பார்ட்னர் ஏன்.. வரேன்னு சொன்னல” என்று பாவமான குரலில் கேட்க,

ஆரு “நான் அந்த இடத்துக்கு வரமாட்டேன்” என்றாள் பிடிவாதமாக.

கிச்சா “பார்ட்னர் இது உன் பழைய ஏரியாவா இருக்கலாம் ஆனா நீதான் யாரையும் பாக்க போறது இல்லையே அப்பறம் என்ன.. இப்போ வர்கிங் ஹவர்ஸ் யாரும் இருக்கமாட்டாங்க.. ப்ளீஸ் வா” என்று கெஞ்ச அவளும் மறுக்க முடியாமல் “சரி வரேன்…” என்றுவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டாள்.

அவள் வைத்ததும் குதித்து கொண்டு வந்த கிஷோர் கண்ட கதிர் “என்ன டா என்னாச்சி” என்று யாரும் அறியாவண்ணம் கேட்க,

கிஷோர் “அவள் வருவாளே… அவள் வருவாளே” என்று சூர்யா பாடலை மாற்றி பாட, கதிர் அவனுடன் ஹைபை அடித்துக்கொண்டான்.

அங்கு ஆருவோ இறுகிய மனதுடன் கிளம்பிக்கொண்டிருக்க, ஆரு சிவகுமாரிடம் தான் கிஷோரின் நிச்சயத்திற்கு செல்வதாக கூறினாள். சிவா அவளை வம்பிழுக்கும் விதமாக, “நாங்களும் வரோம்… போர் அடிக்கிது” என்றிட, ஆரு “அட்ரஸ்ஸ பாத்திட்டு பேசுறீங்களா” என்று அவளாகவே உளற,

சிவகுமார் “எங்கே காட்டு” என்று அதை பார்த்துவிட்டு தன் மனைவி நிலாவிடம் “வா நிலா கிளம்பு போலாம்” என்றார்.

ஆரு “நான் உங்களை கூட்டிட்டு போறேன்னு சொல்லவே இல்லையே” என்று முறைக்க,

நிலா “நீ எங்களை கூட்டிட்டு போற அளவுக்கு எங்களுக்கு வயசு ஆகல… நாங்க போறோம் நீ பின்னாடி வா… கிச்சா எங்ககிட்டயும் தான பேசிறுக்கான்.. நாங்க அவனோட நிச்சயத்துக்கு போவோம்” என்று கூற, தன் தாயும் தந்தையுடன் சேர்ந்து இப்படி ஆகிவிட்டாரே என்று தலையில் அடித்துக்கொண்டு “ஒன்னவே போலாம்… வாங்க” என்று அவர்களையும் அழைத்து சென்றாள்.

சற்று நேரத்தில் ஆருவும் கதிரின் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள், வீட்டின் முன் வாசலில் தோரணங்கள் கட்டியிருக்க கிஷோரின் நிச்சயத்தில் இப்போது ஆருவிற்கு இருந்த சந்தேகம் கூட மறைந்தது. சிவகுமார் நிலா அங்கு வந்தவுடன் கண்டுகொண்டனர் இது கிஷோரின் விளையாட்டு என்று, ஆனால் உள்ளே என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளே நுழைந்தனர்.

வீட்டினுள்ளே அடியெடுத்த அடுத்த நொடி ஆருவிற்கு தலை சுற்றியது, அங்கு நின்றிருந்த அனைவரையும் பார்த்து.

ஆனால் சிவகுமார் மற்றும் நிலாவிற்கு தான் மகிழ்ச்சி விண்ணை தொட்டது. ஆரு உடனே வெளியே செல்ல எத்தனிக்க,

கதிர் “ஓடு ஓடு இன்னும் எவ்ளோ நாள் ஓடுறன்னு நானும் பாக்குறேன்” என்று கத்த அவள் அப்படியே நின்றுவிட்டாள்.

கதிர் “அம்மா அப்பா நீங்க உள்ள வாங்க சில பேருக்குலாம் நாங்கதான் யாரோ ஆகிட்டோம்ல” என்று கூற, பக்கத்தில் கிஷோர் “போடு போடு மச்சா.. வேற லெவல் டா” என்று கதிரின் காதில்.

ஆரு திரும்ப அக்னி மேல் மாடியிலிருந்து இறங்கினான் ஸ்மிருதியுடன். ஆருவின் நிலைமை என்னவோ, ஆனால் அக்னியால் தான் அதற்கு மேல் ஒரு அடி எடுத்து வைக்க முடியவில்லை. கால் நடக்கமறுத்தது, நடந்து வந்தவன் அப்படியே நின்றான். கதிரின் தந்தை “என்ன சிவா வாசலையே நிக்குறீங்க.. உள்ள வாங்க… வாங்க அண்ணி” என்று அழைக்க, அவர்கள் உள்ளே சென்றனர்.

சிவகுமார் “வா ஆரு என்னதான் கோவம் இருந்தாலும் இவுங்க உனக்கு எதுவும் செய்யல… சோ உள்ளே வா” என்றுவிட்டு முன்னே சென்றார். ஆரு உள்ளே நுழைந்தவுடன் கல்பனா அவளிடம்  “என்னடி பெரிய மனுஷி, என்ன யாருன்னு தெரியுதா” என்று கேட்க ஆருவிற்கு அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் வந்துவிட்டது “என்ன கல்லு மா இப்படி பேசுறீங்க” என்றவளின் கண்கள் கலங்கிவிட

கல்பனா “வேற எப்படி பேசுவாங்க.. குடும்பத்தோட காணாம போயிட்டீங்களே” என்று நிலா மற்றும் ஆருவை முறைக்க, சிவா மோகனுடன் இணைந்துகொண்டார்.

கல்பனா “சரி சரி எப்படி இருக்க” என்று கேட்க, ஆரு அவரை அணைத்துக்கொண்டு “ம்ம்” என்றாள்.

கல்பனா “ம்ம் ஆஹ்.. சரி இனி யாரட்ட பேசுறியோ இல்லையோ எங்களயெல்லாம் பாக்க வரணும்.. சொல்லிட்டேன்” என்று கட்டளையிட அவளும் சிரித்துக்கொண்டு தலையை ஆட்டியவள் அதன் பிறகு தேன்மொழி வந்து பேசினார். தாய்மார்கள் மூவரும் சென்றுவிட, தன் முன் நின்ற கிஷோரை தீயாய் முறைத்தாள் ஆரு. கிஷோர் கையில் போனை காதில் வைத்துக்கொண்டு “ஹலோ என்னது நேதாஜி சீரியஸா இருக்காரா.. ரத்தம் வேணுமா.. இதோங்க இருங்க வாட்சப்ல அனுப்பி விடுறேன்”என்று ஏதோ பேசிக்கொண்டு அவளை தாண்டி செல்ல, அவன் பின் கதிரும் செல்ல, ஆரு “சாரி” என்றாள் தலை தாழ்த்தி.

கதிர் “சாரியா மேடம் யார்கிட்ட சொன்னிங்க.. என்கிட்டயா..  இல்லல.. நான்தான் யாரோல உங்களுக்கு” என்று நக்கல் குரலில் கூற,

ஆரு “உன்கிட்ட நேஹா கிட்டலாம் பேசாம போனது தப்புதான்…சாரி” என்றாள் தழுதழுத்த குரலில். கதிர் அதற்குமேல் வேண்டாம் என்றெண்ணி “சரி சரி விடு.. நீ பேசலனா என்ன, நீ எப்பயும் எங்களுக்கு எங்க ஆரு தான்.. உள்ளே போ” என்றான்.

ஆரு “நேஹா எங்க” என்று வினவ,

கதிர் “அதோ”என்று பின்னால் கை காட்டியவன் யாரோ அழைக்க அவன் சென்றான்.

அங்கு நேஹா அவளை கண்டும் காணாதது போல் இருந்தாள், என்னதான் நேஹா ஆருவிற்காக நின்று யோசித்தாலும் பேசினாலும் அவளுக்கு ஆரு மேல் கடுங்கோபம் தான். அக்னி ஆருவை கண்டவுடன் மீண்டும் மாடிக்கே சென்றுவிட்டான். மேல் தளத்தில் இருக்கும் ஹாலில் இருந்து கீழே என்ன நடக்கிறது என்று பார்த்துக்கொண்டு இருந்தான்.

ஆரு நேஹாவின் அருகே செல்ல, நேஹாவோ அவளை ஏறெடுத்து பார்க்கவில்லை. ஆரு “நேஹா” என்றழைக்க, அவளோ முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டாள். ஆரு “கிட்டி” என்றழைக்க அப்போதும் பதிலில்லை, ஆரு “சாரி” என்று கமறிய குரலில் மன்னிப்பு வேண்ட,

நேஹா தன்னருகே இருந்த ஸ்மிருதியிடம் “என்கிட்ட யாரும் பேச வேண்டாம்.. எதுவும் வேணான்னு தான போனாங்க.. அப்படியே இருக்கட்டும்… நான் அப்படியே இருந்துக்குறேன்.. எனக்கும் கொஞ்சம் மானம் ரோஷமெல்லாம் இருக்கு.. ப்ளீஸ்” என்று பொரிந்துவிட்டு மாடி படி ஏறினாள். நடந்த அனைத்தையும் மாடியிலிருந்து அக்னி  கவனித்துக்கொண்டு தான் இருந்தான்.  மேலெறி வந்த அவனை கண்டும் காணாதது போல் சோபாவில் அமர்ந்துகொண்டாள்.

மாடி ஏறி சென்ற நேஹாவை பார்த்த ஆரு ‘ரொம்ப தான் பண்ணுறா’ என்றாள் கோபமும் அழுகுகையும் ஒன்று சேர. அக்னி மாடியில் நின்றதை கவனிக்காதவள் அக்னி அங்கு இல்லை என்றெண்ணி தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டாள்.

நேஹாவின் அருகே சென்ற அக்னி “இங்க பாரு” என்று ஏதோ கூற வர, நேஹா “சும்மா ஏதும் என்கிட்ட சொல்ல வேண்டாம், எனக்கு என்ன பண்ணனும்னு தெரியும்” என்றாள் சிலுப்பிக்கொண்டு. அவள் கூறியதும் அக்னி சிரித்துவிட்டு “எனக்கு காபி வேணும்” என்றான், அவன் கூறியதை கேட்டு வெறுப்பாகிய நேஹா “நான் என்ன இவன் பொண்டாட்டியா இல்ல வேலைக்காரியா.. கேக்குறான் பாரு” என்று அவனுக்கு கேட்கும் படியே முணுமுணுக்க, அதை கேட்ட அக்னியோ “நான் கீழ போறேன்” என்றிட, நேஹா “இல்ல ஏன்” என்றாள் எங்கு இவன் சென்றால் ஏதும் சண்டை வந்துவிடுமோ என்றெண்ணி.

அக்னி சிரித்துவிட்டு “உன் பிரண்ட் கிட்ட பேச” என்று வெகு இயல்பாக கூற, நேஹா தான் வாயை பிளந்தாள் அவனை பார்த்து. அக்னி அவளிடம் பேச முயற்சி செய்யலாம், பிரச்சனை முடியவில்லை என்றாலும் இப்படி முகத்தை திருப்பிக்கொண்டு வேறு வேறு இடத்தில் இருக்க வேண்டாம் என்று நினைத்தவன் பேசலாம் என்று மனதை திடப்படுத்திக்கொண்டு கீழே இறங்கினான். நேஹா “ஐயோ இன்னைக்கு என்ன ஆகப்போகுதோ” என்று புலம்பிக்கொண்டு அவளும் அவனுடன் சென்றாள்.

அக்னி இறங்கும் போது சிவா மற்றும் நிலா அங்கு நின்றுகொண்டிருக்க, அவர்களை பார்க்கும் போதே அக்னிக்கு குற்றவுணர்வு தொற்றிக்கொண்டது. அவர்களின் அருகே சென்றவன் “அப்பா” என்று சிவாவை அழைக்க, அதில் திரும்பியவர் “அடடா அக்னி சாருக்கு எங்களயெல்லாம் நியாபகம் இருக்கா” என்று கேட்க, அவனோ தலை குனிந்தான். நிலா “ப்ச்.. என்னங்க நீங்க” என்று அதட்டியவர் “எப்படி இருக்க கண்ணா” என்று தழுதழுத்த குரலில் கேட்க, அவரை தோளோடு அணைத்துக்கொண்டவன் “சாரி மா, யாரோமேல இருந்த கோபத்தை உங்க மேல காட்டிட்டேன்” என்று வருந்த, சிவகுமார் அவன் தோளில் தட்டி கொடுத்தார். “அவகிட்ட பேசிட்டு வரேன்” என்று அக்னி கூற, இருவரும் புன்னகைத்தனர்.

சிவகுமாருக்கு அவன் மீது கோபம் இருக்கவில்லை மாறாக வருத்தமே இருந்தது. எப்போதும் நிதானத்தை கைவிடாதவன் அன்று ஏதோ கோபத்தில் தான் ஆராத்யாவிடம் வார்த்தைகளை விட்டுவிட்டான் என்பது அவருக்கும் புரிந்து தான் இருந்தது அதனால் தான் அவர் அவனிடம் பெரிதாக எதையும் கேட்டுக்கொள்ளவில்லை. இந்த ஆறு வருடங்களில் அவனும் மனதால் நொந்திருப்பான் என்று அவர் அறிய மாட்டாரா.

சிவாவிடம் பேசிவிட்டு

வந்த அக்னியை பார்த்த ஆருவிற்கோ மனம் படபடத்தது. அக்னி அவள் அருகில் செல்ல ஒரு அடி எடுத்து வைக்கவும் வாசலில் இந்துவை பார்த்து கதிர் “ஹே வா வா ஏன் இவ்ளோ நேரம்” என்று கூறவும் சரியாக இருந்தது, கதிர் வரவேற்றதை ஆருவும் அக்னியியும் திரும்பி பார்க்க, இந்து உள்ளே நுழையாமல் வாசலில் கைகளை பிசைந்தபடி நின்றுக்கொண்டிருந்தாள்.

கதிர் “என்னடா வா” என்று மீண்டும் அழைக்க, இந்து திரும்பி வாசலை பார்த்தாள். இந்து வாசலை பார்க்க, கதிரும் ‘என்ன’ என்பதை போல் பார்க்க, அங்கு ரேயன் காரிலிருந்து இறங்கினான். அவனை பார்த்த அடுத்த நிமிடம் அனைவரும் அதிர்ந்தனர்,

கிஷோர் ஒரு படி மேல் சென்று, நெஞ்சில் கைவைத்து “ஆத்திஈஈ…. இவன் எங்க இங்க.. இது நம்ம லீஸ்ட்லயே இல்லையே” என்று அதிர்ந்திருக்க, ஆரு மற்றும் அக்னியோ பேசற்று நின்றனர்.

அங்கு இருந்த சூழ்நிலைக்கு மாறாக இருந்தான் ஆத்ரேயன். வாசலுக்கு வந்தவுடன் அனைவரையும் கண்டுக்கொண்டான். கதிரிடம் மட்டும் தொடங்கலாம் என்று எண்ணிய விளையாட்டு இப்படி அனைவரின் முன்னும் தொடங்க நேரும் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. அவனுக்கும் அது அதிர்ச்சியே, ஆனால் அதை காட்டிக்கொள்ளாமல் சமாளித்துவிட்டு இந்துவின் பக்கத்தில் வந்து நின்றுகொண்டான்.

அவனை பார்த்த கதிருக்கு தான் வாயிலிருந்து வார்த்தை வரவில்லை.

ரேயன் “ஓ இந்து இவருதான் உன் பிரண்ட்டா.. எனக்கும் இவர தெரியுமே… அப்படிதான கதிர்” என்று வசீகர புன்னைகையுடன் கேட்க, கதிர் வாயில் யாரோ பசை ஒட்டியது போல அப்படியே வாயை மூடிக்கொண்டு நின்றான். கதிர் அமைதியாக நின்றதில் கடுப்பான இந்து  “பேசு டா” என்று கதிரிடம் கண் காட்ட, அவனோ முன்னே ரேயன் பின்னே அக்னி என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே நின்றான்.

நேஹா “டேய் குரங்கே, என்ன டா பண்ணி வச்சிருக்க, ரேயனை ஏன் கூப்பிட்ட” என்று அவன்மேல் எரிந்து விழ,

கதிர் “நான் எதுமே பண்ணல டி சத்தியமா” என்றான் அப்பாவியாக.

நேஹா “மவனே எதாச்சு பெருசா ஆச்சு செத்த… நானே உன்ன கொன்னுடுவேன்” என்று அவன் கையை கிள்ளிவிட, அவன் “ஆஆ” என்று அலறினான்.

கதிர் அலறுவதை பார்த்த அவன் தந்தை மோகன் “ஏன் டா வந்தவங்கள வெளியவே நிக்க வச்சிட்டு இங்க கத்திட்டு கிடக்குற… அடடே இந்து வந்துட்டியா… வா மா… இவரு யாரு அண்ணனா?” என்று கேட்டவர் ரேயனை அறிந்திருக்கவில்லை.

இந்து “ஆமா பா… என் அண்ணன் தான்” என்றிட, அவரை பார்த்து சிநேகமாக புன்னகைத்த ரேயன் “வணக்கம் அங்கிள்” என்றான். மோகன் “வா பா… உள்ளே வாங்க” என்று உள்ளே அழைக்க, அக்னிக்கு இந்துவை அடையாளம் தெரியவில்லை அதனால் அவன் கோப பார்வை ரேயனிடம் மட்டுமே இருந்தது.

அக்னியின் பக்கத்தில் சென்ற கதிர் “டேய் சத்தியமா எனக்கு தெரியாது டா அவன நான் கூப்பிடல” என்று முகத்தை பாவமாக வைத்துக்கொள்ள,

அக்னி “அவன் எங்க” என்று கிஷோறை கேட்க. கதிர் அங்கு மூலையில் ஒரு செடியின் பக்கத்தில் இருந்த மேசைக்கு பின் மறைந்திருந்த கிஷோரை சுட்டிக்காட்டி “அந்த லூசே இவனுக்கு பயந்து ஒளிஞ்சிட்டு இருக்கு” என்றான்.

அக்னியின் மூளையில் சட்டென மின்னல் வெட்ட, “அந்த பொண்ணோட அண்ணன்னா அவன்” என்று கதிரை கூர்மையாக பார்த்துக்கொண்டே கேட்க,

கதிர் “ஆமா அக்னி.. ஒரே வயசு தான், 4 மாசம் பெரியவன், சின்னதுல இருந்து அண்ணானு கூப்பிடே பழகிட்டேன்னு சொன்னா… வேற எதுவும் எனக்கு தெரியாது” என்று தலை குனிய, அக்னி ‘அப்போ’ என்று யோசனையுடன் இந்துவை பார்க்க, சில நொடிகளில் அவளின் முகம் அவனுக்கு தெரிந்து விட்டது.

அக்னி “கதிர் இந்த” என்று ஆரம்பிக்கும் முன் அங்கு இந்து கூப்பிட,

கதிர் “மச்சா என்ன மன்னிச்சிரு டா சத்தியமா காலேஜ் டைம் ல நான் லவ் பண்ணலை டா… லவ் பண்ணனும்னு நினைச்சதுகூட இல்லை… சாரி டா” என்று அவசரம் அவசரமாக ஒப்பித்துவிட்டு ஓடிவிட, அக்னி என்ன செய்வது என்று தெரியாமல் அங்கேயே நின்றான். அங்கு வந்த தேன்மொழி “தங்கோ வா முன்னாடி.. ஏன் இங்க நிக்குற” என்றவர் அவன் எவ்வளவு மறுத்தும் அவனை இழுத்து சென்றார்.நேஹாவை அவன் ஒரு பார்வை பார்க்க, அவளும் அவன் பின் சென்று அவன் அருகில் நின்று கொண்டவள் அவனிடம் ஒரு வார்த்தை பேசிவிடவில்லை.

ரேயனை பார்த்த ஆரு அடுத்த நொடி  அங்கிருந்து நகர போக,

ரேயன் “எதுக்கு இவ்ளோ பயம்” என்று உரத்த குரலில் கூற, சட்டென்று ஆரு திரும்பி அவனை பார்க்க அவனோ இந்துவை பார்த்து கூறுவது போல “எதுக்கு இவ்ளோ பயம் இந்து.. ஏன் ஒரு மாதிரி இருக்க” என்று கண்ணடிக்க அதை புரிந்துக்கொண்டவள் “உன் ஆளுக்கு ரூட் விடுறியா” என்று மெல்லிய குரலில் கூறிவிட்டு “அது ஒன்னும் இல்ல ண்ணா… என்னதான் இருந்தாலும் என் பொறந்த வீட்ல இருந்து என் புகுந்த வீட பாக்க வந்திருக்க முதல் ஆள் நீதான்… அதான்” என்று அவளும் கண் சிமிட்ட, அதை கேட்டு கதிர் “ஏதே” என்று நெஞ்சில் கை வைத்துக்கொண்டான்.

கதிரை கவனித்த ரேயன் சிரிப்பை அடக்கி கொண்டு மோகனை பார்த்து “அங்கிள்.. எப்போ வீட்ல வந்து பேச போறீங்க… இந்துவும் கல்யாணம் பண்ணிக்க ஓகே சொல்லிட்டா” என்று பொறுப்பாக பேச,

இந்து “கதிரும் ரெடி… என்ன கதிர் அப்படிதான” என்று அவனை வம்பிழுக்க, கதிர் “சண்டாளி” என்று அவளை மனதில் வறுத்துக்கொண்டிருந்தான்.

நடந்தவற்றை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த கிஷோர் “டேய் என்னடா நடக்குது இங்க… இவனுக்கு வர வழில எதாச்சு தலைல அடிப்பட்டு மெமரி லாஸ் ஆகிருச்சா… என்னலாமோ பேசிட்டு இருக்கானே… அப்படியே என்னையும் தெரியல சொல்லிட்டா நல்லாருக்கும்” என்றவன்  தனக்கு தானே புலம்பிக்கொண்டு இருந்தான்.

ரேயன் மோகனிடம் பேசிக்கொண்டு இருக்க, அங்கு ஆரு அக்னி ஒரு ஒரு மூலையில் பெரியவர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு வீட்டினுள் இருந்தனர். ரேயன் அவர்களை பார்த்துக்கொண்டே “அங்கிள் வீட சுத்தி பாக்கலாமா” என்று கேட்க, மோகன் “பாருங்க தம்பி” என்றவர் கதிரிடம் “கதிரு கூட்டிட்டு போ” என்று சொல்ல, கதிர் “வாங்க” என்று அழைத்து சென்றான்.

சரியாக கிஷோர் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தவுடன், கிஷோர் அங்கிருந்து நழுவ பார்க்க அவன் சட்டையை பின்னால் இருந்து பிடித்த ரேயன் “என்ன சார் எங்க போறீங்க” என்று வினவ,

இந்து “டேய் அண்ணா நீ என்ன பண்ற இங்க..” என்றாள் அதிர்ச்சியாக.

ரேயன் “சார் தான் ஸ்பை தெரியாதா” என்றிட, கிஷோர் இப்போது தான் அவனை பார்ப்பது போல் “ஹலோ மிஸ்டர்.. நல்லாருக்கிங்களா” என்று நலம் விசாரிக்க, ரேயன் “அடிங்கு” என்று அவன் தலையில் தட்டினான்.

தலையை தேய்க்கொண்டே “மச்சா நீயா.. நான் யாரோ ஒரு நல்லவன் வந்துருக்கான் நினைச்சேன்” என்று அசடு வழிய

ரேயன் “அது சரி.. நீ என்ன பண்ற இங்க” என்றான் கேள்வியாக. கிஷோர் “அட தெரியாதா.. தேனு ஆண்ட்டி என் பிரண்டு, அவங்க கூப்பிட்டாங்க சோ வந்தேன்” என்று அடித்துவிட

ரேயன் “திருந்தாத” என்று தலையில் அடித்துக்கொண்டு திரும்பினான்.

அக்னி வெளியே செல்ல நினைக்க அதை கவனித்த ரேயன் இந்துவிற்கு கண் காட்டிவிட்டு அங்கு சற்று தொலைவில் நின்றுகொண்டிருந்த சிவாவிடம் பேச சென்றான். சிவா யாருடனோ பேசிவிட்டு திரும்ப, ரேயன் “அங்கிள் நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான். சிவா “சொல்லுங்க ஆத்ரேயன்” என்க, அவர் கைகளை ஆதரவாக பற்றியவன் “நடந்த எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்ன்னு எனக்கு தெரியும், அது எல்லாமே என்னோட தப்பு தான்.. இதுனால நீங்க தான் அதிகமா பாதிக்கப்பட்டிருக்கீங்கன்னு எனக்கு தெரியும், வெறும் சாரி சொல்லி இதை நான் முடிக்க விரும்பல” என்றவன் தொடர்ந்து “என்னலா நீங்க இழந்த எல்லாத்தையும் திரும்ப கொடுக்க முடியுமான்னு தெரியல ஆனா என்னால முடிஞ்சதை உங்களுக்கு மீட்டு கொடுப்பேன்” என்றான் உறுதியாக.

அவன் கூறியதை கேட்டு மெலிதாக புன்னகைத்தவர் “நீ என்னிக்கோ ஒரு நாள் திரும்ப வருவன்னு எனக்கு தெரியும்.. ஆல் தி பெஸ்ட்” என்று வாழ்த்தியவர் “சீக்கிரம் எல்லாம் சரியாகிடும்” என்று அவன் தோளை தட்டிவிட்டு சென்றார்.

அக்னியின் அருகில் சென்ற இந்து “என்ன ண்ணா… அதுக்குள்ள எங்க போறீங்க வாங்க” என்று அவன் கைபிடித்து கூற, அவனோ ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டிருந்தான்.

‘நம்மள தெரியலயா இவளுக்கு’ என்று அக்னி யோசனையில் நிற்க,

இந்து “அண்ணா வாங்க…. சாப்பிடிங்களா” என்றாள் அவன் சிந்தனையை கலைத்து. அக்னி ‘இல்லை’ என்று தலை ஆட்ட,

இந்து “அப்போ வாங்க சாப்பிடலாம்”என்று இழுத்து செல்ல,

கதிர் “உனக்கு இவன” என்றிழுக்க

இந்து “எல்லாம் தெரியும்” என்று அழுத்தி கூற, அக்னிக்கு தான் ஒன்றும் விளங்கவில்லை.

இந்து அக்னியை அழைத்து செல்ல, அவர்கள் பின் செல்ல எத்தனித்த ரேயனை தடுத்தாள், நேஹா. ரேயன் “அம்மு.. சாரி.. நேஹா.. எப்படி இருக்க” என்று வினவ,

நேஹா “என்ன பண்ண ட்ரை பண்றீங்க” என்றாள் முறைப்புடன்.

ரேயன் “நான் என்ன பண்ணேன்” என்று தோளை உலுக்க, நேஹா “நீங்க இந்துக்கு கண்ணு காட்டுனத நான் பாத்தேன்” என்றாள். அதில் பெருமூச்சு விட்டவன் “கொஞ்சம் திருந்தலாம்னு பாக்குறேன்” என்று குறும்புடன் கூற,

நேஹா “தேவயில்லாம மறுபடியும் பிரச்சனை வரப்போகுது ரேயன்… ரெண்டு பேரும் நாங்க தப்பு பண்ணலனு நிப்பிங்க” என்றாள் சலிப்பாக.

ரேயன் “நான் தான் தப்பு பண்ணிட்டேன்” என்று சிறுகுரலில் கூற,

நேஹா “ஆன் என்ன… என்ன சொன்னிங்க” என்றவளுக்கு தான் தவறாக எதையோ கேட்டுவிட்டோமோ என்ற சந்தேகம் இருக்க

ரேயன் “நான்தான் தப்பு பண்ணிருக்கேன் அம்மு… உன் அக்னி தப்பு பண்ணல” என்றான் அழுத்தமாக. அப்போதும் புரியாமல், நேஹா “என்ன சொல்றிங்க…ஐ மீன் அவன் தப்பு பண்ணலன்னு தெரியும், ஆனா நீங்க சொல்றத பாத்தா உங்களுக்கு ஏதோ தெரிஞ்சிருக்கு.. அப்படி தான” என்று புருவம் சுருக்க,

ரேயன் “நீ எப்பயும் புத்திசாலி அம்மு… உன் பிராண்டும் இருக்காலே” என்று தலையில் அடித்துக்கொள்ள, அதில் மெலிதாக புன்னகைத்தவள் “கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க” என்றாள் விடாப்பிடியாக.

ரேயன் “சொல்றேன்.. ஆனா கொஞ்சம் டைம் குடு.. சொல்றேன்” என்றிட

நேஹா “அப்போ…” என்றாள் இழுவையாக. அக்னி சென்றுவிட்டானா என்று பார்த்தவன் நேஹாவின் கையை பிடித்து “ப்ரோமிஸ்.. சீக்கிரமே எல்லாம் சரி பண்ணிருவேன்.. டிரஸ்ட் மீ” என்றான்.

அதில் விழி விரித்தவள் புன்னகையுடன் தலையாசைத்துவிட்டு விட்டு மேலே செல்ல, ரேயனும் அவள் பின் சென்றான்.

அவர்கள் செல்வதற்கு முன்னே கதிர் ஆருவை கை காலில் விழுந்து சாப்பிட அழைத்து சென்றிருந்தான். ஆரு பக்கத்து இருக்கை காலியாக இருக்க, ரேயன் வேண்டுமென்றே அவள் அருகே அமர்ந்தான். இந்து ரேயனுக்கு அடுத்து  அக்னியை உட்கார வைக்க அவளிடம் மறுக்க முடியாமல் அவனும் அமர்ந்துக்கொண்டான். அக்னியின் அருகில் நேஹாவை உட்கார வைத்த கதிர் அதன் பிறகு  இந்து அமரவைத்துவிட்டு  கிஷோருடன் அவர்கள் அருகில் அமர்ந்தான்.

ஆத்ரேயன் அமர்ந்தவுடன் ஆரு எழ, மேசையில் கீழிருந்த கையை இறுக பற்றியவன் எதுவும் அறியாதவன் போல் அமர்ந்திருந்தான். அவள் கையை உருவ போராட அவனோ அவளை விடுவித்தான் இல்லை.  ஆரு “லீவ் மை ஹண்ட்” என்று அடிக்குரலில் சீற,

ரேயன் “ஹ்ம்ம் ஹ்ம்ம்” என்றவன் தலையசைத்தானே ஒழிய பிடியை தளர்த்தவில்லை. ஆரு “கையை விடல கத்தி அசிங்க படுத்திடுவேன்” என்றாள் கண்களில் அனல் பறக்க, தன் பிடியை சற்றே தளர்த்தியவன் “என்ன வேணா பண்ணு… கவலையே படமாட்டேன்” என்று கண்ணடித்துவிட்டு உண்ண தொடங்கினான்.

அடுத்து அக்னியின் புறம் திரும்பியவன் “கதிரு… இங்க பாரு மாப்ஸ்க்கு தோசை வைக்க சொல்லு” என்றிட,

கதிர் அவனை புரியாமல் பார்த்தான். ரேயன் “அட நம்ம அக்னி மாப்ஸ்க்கு தான் சொல்றேன்” என்று கூற, அவனை தீயாய் முறைத்துக்கொண்டிருந்த அக்னி “டேய் என்ன சீன் போடுறியா” என்று சீற,

ரேயன் “இது சீன்னு நினைச்சா… இனி டெய்லி சீன் தான் போட போறேன் மாப்ஸ்” என்று கூறி கண்ணடிக்க, அக்னியோ எரிச்சலாக முகத்தை திருப்பிக்கொண்டான்.

நேஹா பின்னால் சாய்ந்து ரேயனை பார்த்து கட்ட விரலை உயர்த்தி சிரிக்க,  கண்ணைமூடி திறந்து சிரித்தவன் அவனவளுக்காக தன்னை மொத்தமாக மாற முடிவெடுத்திருந்தான்.

கிஷோர் கதிரிடம் “டேய் என்ன டா இவன்.. கண்டிப்பா ஏதோ மண்டைல அடி பட்டிருக்கு” என்று புலம்ப,

கதிர் “தெரியலயே டா… வீட்ல வேற எப்போ வந்து பேசுறீங்கனு கேக்குறான்” என்று தலையை சொறிய,

கிஷோர் “எல்லாம் மேல இருக்கவன்தான் பாக்கணும்” என்றிட

இந்து “இல்ல இல்ல என் அண்ணன் பாத்துப்பான்” என்றாள்.

கிஷோர் “இதெல்லாம் டயலாக் பேசுற மாதிரி ஆகிருச்சு..” என்றவன் ரேயனிடம் இதை பற்றி பேசவேண்டும் என்று முடிவெடுத்தான்.

ஆரு அங்கிருந்து எழவும் அக்னி எழவும் சரியாக இருந்தது. ரேயன் அக்னியின் அருகில் ஒரு சிறு கம்பி நீட்டிக்கொண்டு இருந்ததை கண்டு ஆருவின் காலை தட்டி விட, அவள் அக்னியின் மீது மோதினாள். இதை எதிர்பாராத அக்னியோ கையை அந்த கம்பியின் மீது வைத்து தன்னை நிலைப்படுத்த, அந்த கம்பியோ அவன் கையை பதம் பார்த்தது.

அக்னி கையை உதற, அதை கண்ட ஆரு “ஐயோ அகி ரத்தம்” என்று கூறிக்கொண்டு அவள் கைக்குட்டையை அவன் கையில் கட்டிவிட்டவள் “டேய் கதிர் பர்ஸ்ட் எயிட் பாக்ஸ் கொண்டு வா” என்று கத்த, கதிர் அதை கொண்டு வந்தான். ஆரு அக்னியின் கைக்கு கட்டு போட, அக்னியோ அவளை அசையாது பார்த்துக்கொண்டு இருந்தான். நேஹா அருகில் செல்ல நினைக்க அவளை தடுத்த ரேயன் போகதே என்று தலையாட்ட அவளும் அமைதியாக நின்றுகொண்டாள்.

அக்னிக்கு கட்டுபோட்டவள் “அகி காயம் கொஞ்சம் ஆழமா தான் இருக்கு.. எதுக்கும் ஒரு டிடி போட்டுடலாம்” என்று தன்னை அறியாமல் கூறிவிட்டு நிமிர, அனைவரும் அவளை தான் பார்த்துக்கொண்டிருந்தனர்.

அப்போது தான் அக்னியை நிமிர்ந்து பார்த்தவள் சட்டென்று திரும்பி, யாரையும் காணாது கீழே சென்று விட, அக்னி அவள் கையில்  கட்டியதை பார்த்துக்கொண்டிருந்தான். அவர்களை  பார்த்து புன்னகைத்துக்கொண்டிருந்த  ரேயனை கவனித்த கதிரும் கிஷோரும்  அவனை பால்கனியின் புறம் இழுத்து சென்றனர்.

கிச்சா “மச்சா என்னடா நடக்குது… என்ன பண்ணிட்டு இருக்க” என்று வினவ

ரேயன் “ஹாஹா.. இனி எல்லாம் அப்படிதான்..” என்று கண்ணடித்தான்.

கதிர் “இல்ல கேக்குறேன்னு தப்பா நினச்சுக்காதிங்க.. நிஜமா இங்க நடக்கிறது எதுவும் எங்களுக்கு புரியல” என்றிட, ரேயன் “ஹே உன் கிளாஸ் மேட் தான நான், வா போன்னே பேசு…” என்றான் சம்மந்தமே இல்லாமல்.

கிஷோர் “அதெல்லாம் இருக்கட்டும்.. நீ பதில சொல்லு.. நீ என்ன பண்ண ட்ரை பண்ற” என்று இடுப்பில் கைவைத்துக்கொண்டு கேட்க,

கதிர் மற்றும் கிஷோரின் தோளின் மீது கை போட்டவன் “அதாவது…..”

தொடரும்

Advertisement